கிட்காட்-2

IMG-20210429-WA0013-1bc3ad06

கிட்காட்-2

அருணின் வீட்டிற்கு அவனுடன் சென்று அவனை ஒருவழி செய்துவிட்டனர்
எல்லோரும். திருமணத்திற்குச் சம்மதிக்காத அகல்யாவின் பெற்றோருக்கு அருணின் வசதி அச்சத்தைத் தந்தாலும் அருணின் பெற்றோர் நன்முறையில் நடந்துகொண்டதில் சிறுநிம்மதி அடைந்தனர். மாலை ஆகஆக எல்லோரும் அவர்கள் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகினர். அருணை கலாய்த்துவிட்டு
அகல்யாவிடமும் பெரியவர்களிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினர். நவீனும்
நந்திதாவும் கிளம்ப, வர்ஷினியின் வீடு செல்லும் வழி என்பதால் அவளைத் 
தங்களுடன் வரும்படி அழைத்துக்கொண்டனர் சித்தார்த்தும் ரமணாவும்.

ஜுன் போனால் ஜூலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே                                                                            பெண் பார்த்தால் தீ வருமே என்னாச்சு தோணலியே
(செக் இட் அப், செக் இட் அப்…)
ஏதாச்சு தெரியலியே
(ஆ…ஆ…)
நட்பாச்சு லவ் இல்லையே
(யோ…யோ…)
லவ் ஆச்சு நட்பில்லையே
(ஆஹா..ஆ..)

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா!
முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே…

க்ரிஷ் ஹாரிஸ்ஜெயராஜின் இசையில் பாட, அதில் நனைந்து கொண்டே வந்தனர் மூவரும்.

“சி…” சித்தார்த்தின் வாய் முணுமுணுக்க ரமணா அவனைப் பார்த்தான்.

“என்னடா ஏதோ சொல்ற?” ரமணா கேட்க,

“ஒண்ணுமில்லடா” என்றவனது முகத்தில் புன்னகை வந்தமர்ந்தது.

“ஒருவேளை உனக்குத்தான் அடுத்த கல்யாணமோ மச்சி?” ரமணா நக்கலடிக்க,

“டேய்டேய் ஏன்டா…” சித்தார்த்.

“இல்ல லவ் பண்றவன் மாதிரி சிரிக்கறியே அதான் கேட்டேன்” ரமணா வினவ சித்தார்த்தைக் கூர்ந்து கவனித்தாள் வர்ஷினி.

“ஐம், ஜஸ்ட் லவ் வித் திஸ் மொமன்ட்” என்றான் உல்லாசமாக.

“யாரையாவது லவ் பண்றியாடா?” வர்ஷினி பின் சீட்டிலிருந்து முன் வந்து
வினவினாள்.

“உனக்கு ஏன்டி இவ்வளவு ஆர்வம்? என்று ரமணா அவளை கிண்டலாகப் பார்க்க,

“அப்படி நமக்குத் தெரியாம எப்ப எந்தப் பொண்ணைப் புடிச்சான்னு ஆர்வம் தான்” என்றாள் அவளோ.

“ப்பா! என்ன மூளை, என்ன அறிவு வர்ஷி உனக்கு” அவன் போலியாகப் பாராட்ட,

“போடா சட்டித்தலையா” என்றவள் அவன் தலையில் அடித்தாள்.

“வர்ஷி, நானும் நீயும் சண்டைப்போட்டுட்டு இருக்கோம். ஆனா சம்மந்தப்பட்டவனைப் பாரு எப்படி கல்லுளிமங்கனாட்டம் வரான்னு” வர்ஷியைத் தடுத்தபடி அவன் சொல்ல, இருவரும், “ம்ம்…” என்று அவனைப் பார்த்தனர்.

“என்னடா என் மேல நம்பிக்கை இல்லையா?” சித்தார்த் ரோட்டில் கண்ணை வைத்தபடிக் கேட்டான். ஆனால் அவன் கண்ணில் ஏதோ ஒன்று வழிந்தது.

“உன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா உன்னோட கல்ப்ரிட் மைன்ட் மேல
நம்பிக்கை இல்லியே… இப்ப பேசுனத அப்படியே எப்படி தோசை மாதிரி திருப்பிப் போடுவேனு தெரியும்டா எனக்கு” என்றாள் வர்ஷினி சித்தார்த்தின் தலையில் அடித்தபடி.

வர்ஷினியை சாய்பாபா காலனியில் அவள் வீட்டில் இறக்கிவிட, சித்தார்த்தின்
பக்கம் சென்று அவனைப் பார்த்தவள், “ஏதாவது மறைக்கறியா?” என்று
வினவினாள்.

“உன் இல்லாத மூளையை ஏன்டி குழப்பிக்கறே?” ரமணா அந்தப்பக்கம் இருந்து கேட்க,

“நீ வாயை மூடுடா” என்று சிடுசிடுத்தாள்.

வர்ஷினியை புன்னகையுடன் பார்த்த சித்தார்த், “எதுவும் மறைக்கல வர்ஷி”
என்றவனை கண்களை சுருக்கிப் பார்த்தவள், “பை” என்று இருவரிடமும்
விடைபெற்றுவிட்டுக் கிளம்பினாள்.

அவள் செல்வதை ஒரு புன்னகையுடன் பார்த்தவன் காரை எடுத்தான். வர்ஷினி
அப்படித்தான். அவர்கள் கேங்கிலேயே குழந்தைத்தனம் உடையவள் அவள்.
சித்தார்த்திடம் மற்றவர்களிடம் விட நட்பின் நெருக்கம் அவளுக்கு அதிகம்.
அவளுக்கு சித்தார்த்தை எதனால் என்று தெரியாமலேயே அவ்வளவு பிடிக்கும்.
யாரிடமும் விட்டுத் தரமாட்டால் அவனை. அதை மற்றவரும் அறிவர். முதலில் அந்த நட்பை மற்றவர்கள் இருவரை வேறு மாதிரி கலாய்க்க ஆரம்பிக்கும் பொழுது, ஒரு அதட்டல் போட்டு அதை முளையிலேயே கிள்ளி எரிந்தான்
சித்தார்த். ஆனால் வர்ஷினி மனதில் இருந்ததை யாரும் அறியவில்லை.

ஏதேதோ பேசியபடி ரேஸ் கோர்ஸ் வந்து சேர்ந்தனர் இருவரும். கோவையின்
ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படும் இடம். பெயருக்கேற்ப மேல்தட்டு மக்கள்
வசிகக்கூடிய இடம். காஸ்மோபொலிட்டன் க்ளப், இளைஞர்கள் கூடி விளையாடும்
அரங்கம், நிறைய நிறைய ரெஸ்ட்டாரன்ட் என அனைத்தும் இருக்கும் ஒரு இடம்.

தன் வீட்டினுள் காரை நிறுத்திய சித்தார்த், “வாடா போலாம்” என்றழைக்க,

“நான் வரலடா சாமி… ஆன்ட்டி கேட்கிற கேள்விக்கெல்லாம் என்னால பதில்
சொல்ல முடியாது… ஆளைவிடுடா” கையெடுத்துக் கும்பிட்டபடி ரமணா
பயமும் தப்பிக்கும் விதமுமாக சொல்ல சித்தார்த்திற்கு சிரிப்பு வந்தது.

“வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போற?” என்றவன், “டேய்! ரமணா நண்பனுக்காக எதையும் பண்ணலாம் உள்ள வா” என்று வீீீட்டினுள் இழுத்துக்கொண்டு சென்றான் நண்பனை.

உள்ளே நுழையும் போதே சித்தார்த்தின் அன்னை ரேணுகா ஹாலில் அமர்ந்திருந்தார். அவ்வளவு சாதுவான சாந்தமான முகம் தற்போது
ஜிவுஜிவென்று எரிந்து கொண்டிருந்தது. அதற்கு, வேறு யார் காரணமாக இருக்க
முடியும்? சாட்சாத் நம் சித்தார்த்தே தான்.

உள்ளே நுழைந்த இருவரையும், “நில்லுங்கடா இரண்டு பேரும்” சத்தம் போட்டார். சித்தார்த் எதிர்பார்த்தது தான்.

“எங்க போயிட்டு வர்றீங்க இரண்டு பேரும்?” நேராக விஷயத்திற்கு வந்தார் அவர்.

“சும்மா ம்மீ… ஃபன் மால் வரைக்கும் போயிட்டு ஜாலியா சுத்திட்டு வரோம்”
சித்தார்த் குரல் பிசிறடிக்காமல் சமாளிக்க,

“எது மருதமலைல இருக்கிற ஃபன் மாலா?” அவர் செக்மேட் வைக்கச் சித்தார்த்
தன்னுடைய வாய்க்குப் பூட்டைப் போட்டான்.

“டேய், ரமணா உண்மைதானே?” என்று ரமணாவைப் பார்த்துக்கேட்டார் ரேணுகா.
சிறிய வயதிலிருந்தே தங்கள் வீட்டில் வளர்ந்தவன் என்பதால் ரமணாவும்
இன்னொரு மகனைப் போலவே அவருக்கு. அதனால் அவரிடம் ரமணாவிற்கும் எல்லா விதமான சன்மானங்களும் கிடைத்தது. திட்டுக்கள் உட்பட.

“அது வந்து ஆன்ட்டி…” என்றபடி அவன் நண்பனை ஓரக்கண்ணால் பார்க்க,

“தெரிஞ்சே ஏன் ம்மீ கேக்கறீங்க?” சித்தார்த் அசால்டாகக் கேட்டான்.

“திருட்டுக் கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சாடா
உங்களுக்கெல்லாம்?” வசைபாட ஆரம்பித்தார்.

“யாரு சொன்னா?” சித்தார்த் அன்னையிடம் கேட்டான் . அவனிற்குத் தெரியும் யாரென்று.

ரேணுகா அமைதியாக இருக்க, “அந்த எதிர்வீட்டு குண்டாத்தி தானே?” என்று
கேட்டவன்,

“காலைல அவளை கோயில்ல பாத்தப்பவே நினைச்சேன்… இங்க வந்து காலைல நியூஸ் வாசிச்சுட்டு தான் போவான்னு…” என்று திட்டினான் அப்பெண்ணை. காலையில் கோயிலில் அவளைக் பார்த்தான் தான். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. அது என்னவோ சிறிய வயதில் இருந்தே அவனிற்கும் சரி ரமணாவிற்கும் சரி எதிர்வீட்டுப் பெண்ணைப் பிடிக்காது. அதற்குத்
தகுந்தாற் போல அவளும் இவர்களை சிக்க வைத்துக்கொண்டே இருந்து
இருவரிடமும் அவள் வாங்கிக்கொண்டது எல்லாம் ஒரு கதை.

மகனின் பேச்சில் பார்வையிலேயே அவனைக் கண்டித்தவர், “உங்கப்பா வர
நேரம்தான்… இரண்டு பேருக்கும் இன்னிக்கு ஒரு முடிவு கட்டறேன் இருங்க” என்று மிரட்டியபடி ரேணுகா அமர, அவரின் எதிரிலேயே உட்கார்ந்தனர் இருவரும்.

அன்னையை வம்பிழுக்க சித்தார்த் நினைக்க, அதற்குச் சான்ஸ் பல்லைக்
காட்டிக்கொண்டு வந்தது. கே டி.வியில் அலைபாயுதே ஓடிக்கொண்டிருக்க
“மாங்கல்யம் தந்துனானேனா…. ” என்று பாடல் ஒலிக்க மாதவன் ஷாலினியின்
கழுத்தில் தாலி கட்டும் காட்சி ஓடியது.

ரேணுகா அதில் ஆழ்ந்திருக்க, “படத்துல வந்தா மட்டும் நல்லா ரசிச்சு ரசிச்சுப் 
பாருங்க… இதையேதான் நான் பண்ணி வச்சிட்டு வந்திருக்கேன்… பாராட்ட
முடியலைன்னாலும் அட்லீஸ்ட் திட்டாம இருக்கலாம்ல” சித்தார்த் அன்னையிடம்
கேட்க அவரோ,

“அப்ப நாளைக்கே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கலாம்…” என்றார்.

“சூப்பர் ம்மீ… செம ஐடியா” என்று அன்னையை பார்வையாலேயே மெச்சியவன், “ம்மீ… இன்னிக்கு ரொம்ப அலைச்சல்… நல்லா சில்லுன்னு எனக்கும் இவனுக்கும் ஒரு ஜூஸ் தாங்களேன்” என்று சொல்ல ரேணுகாவின் பொறுமை காற்றில் பறந்தது. அதாவது கையில் இருந்த ரிமோட்டை மகனின் மேல் பறக்க விட்டிருந்தார்.

“ஔட்” ரிமோட்டைக் கேட்ச் பிடித்தவன் ஃபீல்டரைப் போலக் குதுகாலிக்க,
சித்தார்த்தின் தந்தை ரவிக்குமார் உள்ளே நுழைந்தார்.

உள்ளே வந்தவரிடம், “இவனுக என்னப் பண்ணிட்டு வந்திருக்கானுக தெரியுமா
உங்களுக்கு?” ரேணுகா கோபமாக ஆரம்பிக்க,

“என்னப்பா நியூஸ்ல எதாவது வந்தீங்களா?” சிரித்தபடி சித்தார்த் ரமணாவிற்கு அருகிலிருந்த ஷோபாவில் அமர்ந்தார்.

“இவனுக அதுல வர்றது ஒன்னுதான் பாக்கி” நொடித்துக்கொண்டார் ரேணுகா.

“அடடே! மகனே வர்றது தான் வர்றீங்க… நல்ல பிபிசி நியூஸ் இந்த மாதிரி வாங்க.
அதான் நம்ம குடும்பத்துக்கு கௌரவம்” ரவிக்குமார் நன்றாக சாயந்துகொண்டு
பேச அவரின் மனைவிக்கு பீபி எகிறியது.

“உங்க செல்லத்துனால தான் அவன் இப்படியே சுத்தீட்டு இருக்காங்க இருபத்தைந்து ஆகியும்” குறைபட்டார் ரேணுகா.

“அப்படி என்ன ரேணுகா பண்ணிட்டாங்க… லவ் பண்ண இரண்டு பேரை சேத்தி வச்சிருக்காங்க… இதுக்க ஏன் இவ்வளவு கவலைபடற… இது நல்ல விசயம்தான்” என்றார் பொறுமையாக.

“அப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கு?” மனைவி கேட்க, ‘அய்யோ மாட்டிக்கிட்டோமே’ என்று விழித்தவர் வாயிற்கு ஜிப்பை போட முடிவு செய்தார்.

“அப்போ இவங்க இரண்டு பேரும் காலைல போனப்பவே உங்களுக்குத் தெரியும் இல்லையா?” ரேணுகா விசாரிக்க,

“அது… த… பா… பா” என்று ரஜினியைப் போலத் தந்தி அடித்தார் ரவிக்குமார்.

“ம்மீ விடுங்க. ரொம்ப மிரட்டாதீங்க உங்க ஹஸ்பன்டை… பாவம் இப்படி மிரட்டி
மிரட்டி தான் அப்பா இளச்சிட்டாரு போல” சித்தார்த் கிண்டலடிக்க அவனின் காதைப் பிடித்துவிட்டார் ரேணுகா.

“இருக்கும்டா இருக்கும்… அப்பனுக்கும் மகனுக்கும் என்னைப் பாத்தா எப்படித்
தெரியுது… ஏதோ நானா இருக்கனால உங்ககூட இருக்கேன்… இந்த வீட்டுக்கு
வர்றவ கிட்டேயும் இப்படி இருந்து பாரு… அடிச்சு பென்ட்ட நிமித்திருவா”
சித்தார்த்தின் காதைப் பிடித்து ஆட்ட,

“ம்மீ! வலிக்குது ம்மீ…” என்றவன் அவரின் கையில் இருந்தபடியே, “அப்படி வந்து
என்னை ஒருத்தி மாத்திடுவாளா?” சவாலாகக் கேட்டான்.

“இப்படி சொல்றவன் தான் ஆளே மாறிப்போவான்” அவன் காதை விட்டபடி
ரேணுகா சொல்ல,

“அப்பா மாறின மாதிரியா ம்மீ?” சித்தார்த் அப்பாவி போலக் கேட்டு அன்னையின்
காலை வாரிவிட,

“சபாஷ்டா மகனே” ரவிக்குமார் கையைத் தட்ட, ரேணுகா முறைத்த முறைப்பில், ‘கப்சிப்’ என்று அடங்கிவிட்டார் அவர்.

“ச்ச! தலையெழுத்து” என்று தலையில் அடித்துக்கொண்டவர் சமையல் அறைக்குள் புகுந்துகொண்டார். அன்னையை புன்னகைத்தபடியே பார்த்த
சித்தார்த் தந்தையிடம் காலையில் இருந்து நடந்தது அனைத்தையும்
தெரிவித்தான்.

“அப்புறம் என்னப்பா எந்தப் பிரச்சினையும் இல்லை… அவ்வளவுதான்” ரவிக்குமார் கூலாக சொல்ல தந்தையும் மகனும், ‘ஹைபை’ அடித்துக்கொண்டனர்.

ரவிக்குமார் எப்போதுமே டாடி கூல் தான். ரவிக்குமார்-ரேணுகா தம்பதியருக்கு ஒரே மகன் சித்தார்த். ரவிக்குமார்-ரேணுகாவின் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது என்றாலும், அவர்களின் அழகான காதல் வாழ்க்கைக்கு இன்னும் அழகு சேர்க்கும் வகையில் அவர்களுக்குப் பிறந்தவன் தான் சித்தார்த். ரவிக்குமாரின் அன்னை தந்தை ராஜகோபாலனும் சொர்ணாம்பாளும்.

சிறிய வயதிலிருந்தே தந்தையின் கண்டிப்பில் வளர்ந்த ரவிக்குமார், 22 வயதிலேயே தந்தையுடன் தொழிலில் இணைந்து அதை இன்றும் தூக்கிநிறுத்தி
வருகிறார். அதனாலேயே அவர் சிறிய வயதிலிருந்து சித்தார்த்திற்கு அதிக
அழுத்தம் கொடுக்கவில்லை. எப்படியும் குடும்ப இரத்தம். உள்ளே நுழைந்தால்
மகன் திறம்பட செய்துவிடுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு. ஆனால், ரேணுகாவிற்கு தான் மகனின் கவலையே வாட்டுகிறது. மகனை ரவிக்குமார் செல்லம் கொஞ்ச ஒருத்தரிடமாவது கண்டிப்பு வேண்டும் என்றுதான் அவர் இப்படி இருப்பது. மகனின் முகத்தைப் பார்த்தாலே அதில் தெரியும் குறும்பையும் புன்னகையையும் கண்டு திட்ட முடியாதவர், முயன்றுதான் ஒவ்வொரு முறையும் அவனைக் கண்டிப்பது. ஆனால், உள்ளிருக்கும் பாசத்திற்கு என்றுமே குறைவில்லை. மகனின் எதிர்காலத்திற்காக எப்போதுமே
வேண்டிக்கொண்டு தான் இருக்கிறார்.

“டேய், டிபன் ஆகிடுச்சு வாங்கடா” டைனிங் டேபிளில் ஹாட்பேக்கை வைத்தபடி
ரேணுகா குரல் கொடுக்க,

“அப்பா உங்களைத்தான்” சித்தார்த் கிண்டல் செய்தான்.

“உன் அம்மா இந்த மாதிரி டைம்ல தான் சான்ஸ்னு… உங்களோட சேர்த்தி
என்னையும் ‘வாங்கடா’னு சொல்லிடுவா” மனைவியை கிண்டல் செய்தபடியே எழ, மூவரும் டைனிங் ஹால்பக்கம் சென்றனர்.

“என்ன சிரிப்பு?” கணவரின் சிரிப்பைக் கண்ட ரேணுகா கேட்க,

“உங்களுக்கு கொழுப்பு அதிகம் ஆகிடுச்சுன்னு அங்கிள் சொல்றாரு ஆன்ட்டி” ரமணா ரவிக்குமாரை மாட்டி வைத்தான்.

“என்னது?” என்று ரேணுகா கணவரை பார்வையால் எரிக்க,

“இல்ல… இல்லமா… உன் கையில இருக்க பன்னீர் பட்டர் மசாலால கொழுப்பு
அதிகம் இருக்கும்னு சொன்னேன். அதை இந்த தடிமாடு அப்படி சொல்றான்”
மனைவி எங்கே மலை எறிவிடுவாரோ என்று பயந்து சமாளித்தவரைப் பார்க்க
இளவட்டங்கள் இருவருக்கம் சிரிப்பு பீறிட்டது.

“அதானே பார்த்தேன்” என்றவர் அனைவருக்கும் வைத்துவிட்டு தானும் உட்கார்ந்து உண்ண ஆரம்பித்தார்.

அனைவரும் உணவை முடித்துக்கொண்டு, ‘அப்பாடா’ என்று உட்கார ரவிக்குமாரின் செல்ஃபோன் அழைத்தது. அலைபேசியை எடுத்தவர், “தாத்தா தான்” சித்தார்த்தைப் பார்த்தபடி சொல்லிவிட்டு ஃபோனை அட்டென்ட் செய்தார்.

“அப்பா!” உரிமையாக அழைத்தாலும் தந்தையின் மேல் மரியாதையும், மனதில்
அவரின் மேல் இருக்கும் அந்தஸ்த்தும் குறைந்ததில்லை ரவிக்குமாருக்கு.

“டேய்! என் பேரன்கிட்ட ஃபோனைக் குடுடா” அதிகாரமும் விளையாட்டுமாய்
ஒலித்தது ராஜகோபாலனின் குரல்.

“இந்தா சித்தார்த் உன் தாத்தா” ஃபோனைக் குடுத்த ரவிக்குமாரின் முகத்திலும் அப்படி ஒரு பெருமை. இருக்காதா பின்னே? தன்னை மிரட்டி உருட்டி வைத்திருந்த தந்தை தற்போது சித்தார்த்தின் பக்கம் இப்போது முழுதாகக் கிடப்பது.

ராஜகோபாலன் ‘தொழில்’, ‘தொழில்’ ஒரு காலத்தில் கால்களில் சர்க்கரத்தைக்
கட்டிக்கொண்டு ஓடியவர். ரவிக்குமார்-ரேணுகா திருமணம் முடிந்து சித்தார்த்
பிறந்த பிறகுமே அவரின் ஓட்டம் குறையவில்லை. கணவர் வயதான காலத்தில் கூட தன்னிடம் பேச நேரமில்லாமல் ஓடுவதை நினைத்து சொர்ணாம்பாள் வருந்தி தனிமையில் ஒருநாள் அழ, ஐந்து வயது சித்தார்த் பார்த்துவிட்டான்.

“ஏன் பாட்டி அழறீங்க?” சித்தார்த் தன் பிஞ்சுக் கைகளால் அவர் கன்னங்களைப்
பற்றிக் கேட்க,

“உன் தாத்தா என் கூட பேசவே நேரமில்லாமல் ஓடறாரே சித்துக் கண்ணா” புலம்பிய சொர்ணாம்பாள், “சரிசரி நீ போய் விளையாடு கண்ணா” என்று அவனை அனுப்பிவிட்டார்.

அந்த அறையிலிருந்து வெளியே வந்த சித்தார்த், “அம்மா ஏன் பாட்டி அழறாங்க…
நீங்க அழ வேண்டாம்னு சொல்லலாம்ல” கேட்க,

“அது உன் தாத்தா கையில்தான் இருக்கு… அவரு உன் பாட்டிக் கூடவே இருந்தா
பாட்டி அழமாட்டாங்க” மாமியாரின் மனம் புரிந்தவராய் ரேணுகா சொன்னார்.

அவரே மாமியார் சொல்லிக் கேட்டிருக்கிறாரே, “உன் மாமா கல்யாணம்
ஆகி உன் வீட்டுக்காரன் ஒரு வயசு இருக்கும்போது ஓட ஆரம்பிச்சாரு ரேணுகா… இன்னும் அப்படியேதான் ஓடிக்கிட்டு இருக்காரு… என்ன பணமிருந்து என்ன… எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருசுமா என் கூடப் பேசி சிரிச்சவரைத் தேடித்தான் மனசு ஏங்குது… முதல்ல எல்லாம் கூடத் தெரியல… ஆனா, வயசு ஆகஆக அவரோட பக்கம் தேடுது” என்று வேதனையாகப் பேசியவரை நினைத்து ரேணுகாவிற்குமே வருத்தமாக இருந்தது. அதனால் அவரை தனிமையில் விடாமல் ஆண்கள் காலை சென்ற பிறகு பேசுவார்.

அன்னை சொன்னது மனதில் பதிய மாலை வந்து ஷோபாவில் உட்கார்ந்த
ராஜகோபாலின் வயிற்றில் சென்று குத்தினான் குட்டி சித்தார்த். குத்திவிட்டு
முறைத்தவனை, “என்னடா பேரா?” சிரித்தபடி கேட்டார் அவர்.

“தாத்தா நீ இனிமேல் கடைக்கு போகக்கூடாது” ஒற்றை விரலைத் தூக்கி மிரட்டினான். ரவிக்குமாருக்கு பகிறென்று இருந்தது. தந்தையிடம் யாரும் எதிர்த்து
மூச்சைக்கூட விடமுடியாது. அப்படி இருக்க மகன் மிரட்டுவதை தந்தை எப்படி
எடுத்துக்கொள்வார் என்று நினைத்தார்.

ஆனால் அவரோ, “ஏன்டாப்பா?” கேள்வி கேட்டார் சிறியவனிடம்.

“நீ பாட்டிய லவ் பண்ணித் தானே தாத்தா கல்யாணம் பண்ணிக்கிட்ட… அப்புதம் ஏன் கடைக்கு போகிட்டே இருக்க? பாவம் பாட்டி… இனிமே போதக்கூடாது…
இங்கையே பாட்டி கூடப் பேசுங்க” மழலையில் சித்தார்த் கட்டளையிட,

“போனா தானே பேரா கடையை தாத்தா பாத்துக்க முடியும்?”, “அதுவும் இல்லாம
இங்க இருந்து இந்தக் கிழவி கூட டூயட் பாட முடியுமா சொல்லு?” என்று
சிரித்தபடியே கேள்வி கேட்க அனைவருக்கும் ஆச்சரியம் தான். ரேணுகாவிற்கு மாமனாருக்கு இப்படிக் கூடப்பேசத் தெரியுமா என்று ஆச்சிரயமாக இருந்தது. சொர்ணாம்பாள் ரவிக்குமாருக்கு சொல்லவே தேவையில்லை. தலை சுற்றியது.

“அதான், நானும் அப்பாவும் இருக்கோமே தாத்தா கடைக்கு… பாட்டி அழுதாங்க தெரியுமா” என்று அவரின் மேல் ஏறி உட்கார்ந்தவன் சொல்ல அவரோ மனைவியை ஆழ்ந்து பார்த்தார். அடுத்த தினத்திலிருந்து காலையில் கடைக்குச் செல்பவர் மதியமே திரும்பி வர ஆரம்பித்தார். மனைவியுடன் அதிக நேரம் செலவிட்டார். அனைத்தும் மனைவியின் மனதிற்காகவும் பேரனிற்காகவும் சொற்களுக்காகவும். முதலில் கஷ்டப்பட்ட காலத்தில் முதுகெலும்பாய் துணை நின்ற மனைவியை கண் போலப் பார்த்தார். அவரும் ஒன்றும் கல் நெஞ்சுக்காரர்
இல்லை. ‘வேலை’, ‘வேலை’ என்று ஓடிஓடி அவருக்கு அதன் யோசனையே
அதிகமாகி இருந்தது. தன் வம்சம் தான் பட்டக்கஷ்டம் படக்கூடாது என்று அவர் அயராது ஓடியது அதற்காகவே. அதில், ‘மனைவியை மறந்தோமே’ என்று பேரன்
மிரட்டிய பிறகு எண்ணியவர், மகனிடம் முழுதாக அனைத்தையும் ஒப்படைத்தார்.

நாட்கள் செல்ல ஊட்டியிலிருந்து கோவை வந்து வந்து செல்ல முடியாததால்
ரவிக்குமார் கோவைக்கே மாறிவிடலாம் என்று முடிவுசெய்தார். அதைத் தந்தையிடம் சொல்ல, “நீங்க போங்க ரவி… நானும் உன் அம்மாவும் இங்கையே
இருக்கோம்… இந்த ஊரை விட்டுட்டு என்னால வரமுடியாது” என்று மறுத்துவிட்டார் ராஜகோபாலன்.

சித்தார்த்திற்கு ஒன்பது வயதுவரை எல்லோரும் ஒன்றாக சொந்த ஊரான ஊட்டியில் தான் வசித்து வந்தனர். ஊட்டியிலேயே தான் மூன்றாவது வரை
சித்தார்த் படித்ததும். சித்தார்த் எவ்வளவு கெஞ்சியும் அவனை ஊட்டியில் இருக்க
விடவில்லை ரேணுகா. மகனைப் பிரிந்து இருக்க முடியாது என்பது ஒரு காரணம்
என்றால் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தால் செல்லம் அதிகமாகி மகன்
கெட்டுப்போகவும் வாய்ப்பு இருக்கிறது என்பது மற்றொரு காரணம். சித்தார்த்
தான் ஒரு விடுமுறை தவறாமல் சென்று வருவான். பண்டிகை காலங்களில்
ரவிக்குமார் ரேணுகாவும் சென்று வருவதும் உண்டு. மகனை உருட்டி மிரட்டி
தொழிலில் தள்ளிய பெரியவரால் பேரனை அப்படிச் செய்ய முடியவில்லை.
அவர் கண்ணிற்கு அவன் இன்னும் ஐந்து வயது சித்தார்த் போல வலம்
வருவதுதான் காரணமோ என்னமோ.

தந்தையிடமிருந்து அலைபேசியை வாங்கிய சித்தார்த் “தாத்தா!” என்று அழைக்க,

“பேரான்டி… போன வாரம் தாத்தாவைப் பார்க்க வரவே இல்லை நீ” ராஜகோபாலன் குறைபட,

“ஸாரி தாத்தா! ஆக்சுவலி போன வாரம் ஒரு ப்ளானிங்ல பிசி ஆகிட்டேன் உங்க
பேரன்… அதான் வரவே முடியல” அருண் திருமணத் திட்டத்தில் இருந்ததை
நினைவுபடுத்தி அவரை சமாதானம் செய்தான்.

“சரி பேரா. சீக்கிரம் வா இங்க. இந்தக் கிழவி என்னை நச்சி நச்சி டென்ஷன்
பண்றா. என்னை வந்துக் காப்பாத்து. ரொமான்ஸ் கூடப் பண்ண மாட்டிறா பேரா”
ராஜகோபாலன் பேசப்பேச அவர் ஃபோனைப் பிடுங்கிய சொர்ணாம்பாள்,

“ச்ச! சின்னப்பையன் கிட்ட வரவர என்னத்த பேசறதுனு விவஸ்தை இல்லாம
போச்சு உங்களுக்கு” கணவரிடம் சிடுசிடுத்தவர்,” சித்து கண்ணா! எப்ப வர்றீங்க?” சொர்ணம் கேட்டார்.

“திஸ் வீக் என்ட் பாட்டி” உறுதியாகச் சொன்னான் சித்தார்த்.

“வரும்போது அம்மா அப்பாவையும் வரச்சொல்லு கண்ணா…” சொர்ணாம்பாள்.

“ஏன் என்ன விஷேசம்?”

“நம்ம குலதெய்வம் போய் ரொம்ப நாள் ஆச்சுக் கண்ணா… ஒரு எட்டு போயிட்டு
வந்திடுவோம்… அப்புறம் நம்ம பக்கத்து வீட்டுல இருந்த கேசவன் குடும்பம்
வர்றாங்க… உனக்கு நியாபகம் இருக்கா?” சொர்ணாம்பாள் கேட்டது தான் மிச்சம்,
சித்தார்த்தின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய, தலை பின்னால் ஒளிவட்டம்
‘னனனன்’ பிஐஎம்முடன் வந்தது.

“சித்துக் கண்ணா! இருக்கியா?” என்ற பாட்டியின் குரலில் சுயநினைவிற்கு
வந்தவன்,

“ம்ம்” என்றவனது குரலில் தேங்கியிருந்த புன்னகையை ரமணா கவனித்தான்.

“அம்மா கிட்ட சொல்லிடறேன் பாட்டி… அம்மாக்கும் அப்பாக்கும் உங்க ஃபோன்ல
இருந்து கூப்பிட்டு பேசிக்கங்க… தாத்தா கிட்ட இப்ப ஃபோனைக் குடுங்க” என்றான். எங்கேயாவது முகம் காட்டி விடுமோ என்று சிரமப்பட்டு மறைத்தான்.

சொர்ணாம்பாள் ஃபோனைக் கட் செய்துவிட்டு மருமகளுக்கு அழைக்க
ஹாலிலிருந்த மனைவியின் ஃபோனை எடுத்துக்கொண்டு மனைவியிடம்
சென்றார் ரவிக்குமார். தந்தையின் ஃபோனைக் கட் செய்த சித்தார்த் தன்னுடைய ஃபோனில் இருந்து தாத்தாவிற்குக் கூப்பிட்டான்.

ஃபோனை எடுத்தவுடன், “தாத்தாதாதா!” சித்தார்த் குஷியில் அழுத்தமானக் குரலில் அவரை அழைக்க,

“பேரான்டி…” என்றழைத்தவரின் குரலிலும் அத்தனை ஒரு குஷி.