கிட்காட்-20(1)

IMG-20210429-WA0013-28862727

கிட்காட்-20(1)

ஒருவாரமாக சித்தார்த்தை என்ன
செய்தும் சித்தாராவால் அவனைப் பேச
வைக்க முடியவில்லை. எதாவது கேட்டால்
கூட, “ம்ம்” என்று மட்டும் சொல்லி 
வைத்தான். மற்றபடி எதுவும் அவன்
பேசவில்லை. இவள் பேசினாலும் பலன்
இல்லாமல் இருந்தது. கேசவன் வேறு
மூத்த மகள் கருவுற்றிருக்க அவளைத்
தங்களுடனே, அன்று சென்றபோது
அழைக்க சின்மயோ கிஷோரைத்
தயக்கமாக ஏறிட்டாள்.

“இன்னிக்கு மட்டும் இங்க இருக்கட்டும்
மாமா. நாளைக்கு சின்மயை கொண்டு
வந்து நானே விடறேன்” என்று
சொன்னவன் அடுத்தநாளே மனைவியை
கொண்டுவந்து விட்டான் மாமனார்
வீட்டில்.

சின்மயி வந்திருக்க எல்லோரும் வீட்டிற்கு
வரப்போகும் முதல் வாரிசை சுமக்கும்
அவளை விழுந்து விழுந்து தாங்கினர்.
அதில் எல்லோரும் சித்தாராவின்
முகத்தை கவனிக்க மறந்தது அந்தோ
பரிதாபம். கிஷோரை சொல்லவே
தேவையில்லை. பல வருடங்களாக
யாரும் இல்லாமல் வாழ்ந்து வந்தவனிற்கு, 
மனைவி தனது உயிரை இன்னோர்
உயிராக்கி சுமக்க அவனிற்கோ
சின்மயைத் தவிர யாரும் கண்களுக்குத்
தெரியவில்லை. அதுவும் அவளது தந்தை
சின்மயை ஏற்றுக்கொள்ள… அவனிற்கு
சின்மயை அவளது தந்தையிடம் இருந்து
பிரித்துவிட்டோமோ என்று ரொம்ப
நாட்களாக இருந்த குற்றஉணர்வும்
நீங்கியது.

ஒரு வாரம் செல்ல மனைவிக்கு சாப்பிட
பழங்கள், பேரீச்சம் பழம், பாதம், முந்திரி
என்று வாங்கி வந்தவனைப் பார்த்து
சின்மயி மயக்கம் போடாத குறைதான்.
“என்ன கிஷோரு… அடுத்த குழந்தைக்கும்
சேர்த்தி வாங்கிட்டு வந்துட்ட
போலிருக்கே” என்று அங்கிருந்த
சொர்ணாம்பாள் பேரனை கேலி செய்ய,
“ஆமா பாட்டி” என்று மனைவியின்
தோளில் கைபோட்டு அவளருகில்
அமர்ந்தவன், “ஆனா, நீங்க தாத்தா
அளவுக்கு எங்கனால ரொமான்ட்டிக் கிங்
அன்ட் குயினா இருக்க முடியாது”
என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“அது அந்த ஆண்டவனால கூட
முடியாதுடா என் மூத்த பேரனே” என்று
பாட்டி சளைக்காமல் பதில் தர
அனைவருக்கும் சிரிப்பு எழுந்தது.

“இந்தா சின்மயி, ஜூஸ்” என்று அன்னை
ஜூஸைக் கையில் தர, அதை வாங்கிய
சின்மயி சுகமாய் கணவனின் தோளில்
சாய்ந்திருந்தபடி அமர்ந்து பழச்சாறைப்
பருக, அதைக் கண்ட சித்தாராவிற்கு
கணவனின் ஞாபகம் வாட்டி வதைத்தது.
எத்தனை நாள் அவனின் மேல் சாய்ந்து…
அவனின் மடியில் தலை வைத்து
கதைகள் பேசியிருப்பாள். எத்தனை நாள்
இருவரும் தலையணையால்
அடித்துக்கொண்டு கொஞ்சி
இருப்பார்கள். அதை எல்லாம்
நினைத்தவளுக்கு உள்ளுக்குள்
வருத்தமாக இருந்தது.

“பாட்டி டிசைனிங் வேலை இருக்கு.
வீட்டிற்குப் போறேன்” என்றவள்
அனைவரிடமும் சிரித்த முகத்துடன்
விடைபெற ராஜகோபாலன் தாத்தா
மட்டும் சிந்தனையிலே இருந்தார்.

வீட்டிற்கு வந்தவள் வரவேற்பறையில்
அமர்ந்து லேப்டாப்பில் ஒரு புது விதமான
டிசைன்களை செய்துகொண்டிருக்க, கார்
வரும் சத்தம் கேட்டது. சித்தார்த்தின் கார்
தான் என்று யூகித்தவள் மணியைப்
பார்த்தாள். அது பதினொன்றை
காட்டியது.

‘இந்த நேரம் வரமாட்டானே’ என்று
நினைத்தவள் வாயிலைப் பார்க்க உள்ளே
வந்தவனோ, அவளை சிறிதும்
கவனிக்காமல் உள்ளே வந்து அறைக்குள்
நுழைந்தான். சித்தாராவிற்கோ கோபம்
வந்தது. அவன் பின்னேயே சென்றாள்.
அவனோ அறைக்குள் நுழைந்து ஏதோ
ஒரு பென்ட்ரைவ்வை எடுத்துக்கொண்டு… 
அவள் நிற்பதைக் கூட கவனிக்காமல்
நகர சித்தாராவோ அவனிற்கு முன்னால்
சென்று வழியை மறித்து நின்றாள்.

“ப்ச்” என்று சலித்தவன் நகர முயல
அவளோ விடவில்லை.

“இன்னும் எவ்வளவு நாள்டா என்கிட்ட
பேசாம இருக்கப்போற” என்று அவனைப்
பார்த்து வினவினாள்.

“வழியைக் கொஞ்சம் விடறியா?” என்று
சித்தார்த் சற்று எரிச்சலாகப் பேச,

“விடமாட்டேன்… உனக்கு இப்ப என்ன
பிரச்சனைனு சொல்லிட்டுப்போ”
என்றாள் பிடிவாதமாக. அவனோ அவளை
அழுத்தமாகப் பார்க்க, “நான் பேசுனது
தப்பு தாண்டா… அதுக்குனு இப்படி
முகத்தைக் கூடப் பாக்காம இருக்காத”
என்று சித்தாரா உடைந்து போனக்
குரலில் கேட்டாள்.

“நான் என்ன நினைக்கறேனு உனக்குப்
புரியாது” என்றான் கடுமையான
முகத்துடன்.

“என்னன்னு சொல்லுடா… சொன்னா
தானே தெரியும்” சித்தாரா கெஞ்சும்
குரலில் கேட்க,

“சொல்லறது விட… உனக்குப் புரிய
வைக்கறேன்” என்றவன், “நீ சொன்னீல…
நான் உன்னை மெஷின் மாதிரி யூஸ்
பண்ணிக்கறேனு. சப்போஸ் நான் அந்த
மாதிரியானவனா இருந்து… அன்னிக்கு
ஆமா நான் உன்னை வெறும் அந்த
மாதிரி தேவைக்கு தான் யூஸ்
பண்றேன்னு சொல்லி இருந்தா… என்ன
பண்ணியிருப்ப?” என்று கேட்டவன்
இருநொடி கழித்து “இப்ப புரியுதா நான்
உன்னோட அந்த வார்த்தையால எந்த
மாதிரி உள்ளுக்குள்ள ஃபீல் பண்றேனு…
இனியாவது இம்சை பண்ணாம
இருப்பியா” சித்தார்த் அவளைப் பார்த்து
நேராகக் கேட்க அவளோ சிலையென
நின்றிருந்தாள். அவள் உறைந்து
நின்றதை உணர்ந்தவன் அவளைத்
தாண்டிச் செல்ல அவளோ அதைக் கூட
உணரமுடியாதவளாய் நின்றிருந்தாள்.

அவன் சென்றபின் வரவேற்பறையில்
வந்து அதே இடத்தில் அமர்ந்தவள்,
“ஸாரிடா… ஐம் ரியலி ஸாரி… உன்னை
எந்த அளவுக்கு ஹர்ட்
பண்ணியிருக்கேன்னு இப்பப் புரியுது”
என்று தனக்குள் முணுமுணுத்தபடி
அமர்ந்தவள் கண்ணீரை உதிர்க்க
ஆரம்பித்தாள். தனது வார்த்தையின்
வீரியத்தை உணர்ந்தவளுக்கு தான்
பேசியது எவ்வளவு பெரிய தவறு என்று
புரிந்தது. முதலில் எல்லாம் அவன்,
“இம்சை” என்று கடிந்தது
இனித்தவளுக்கு… தற்போது அவன்
சொல்லிவிட்டுப் போன தொணியில்
மனம் வெம்பியது. தலைகுனிந்து
அமர்ந்து தலைக்குக் கையைக்
கொடுத்தபடி அழுது கொண்டிருந்தவளை
அன்று வீடு திரும்பிய ரமணாவும்
வர்ஷினியும் கண்டு அதிர்ந்தனர்.
தங்களை சிரித்த முகத்துடன்
தேனிலவிற்கு அனுப்பி வைத்த பெண்
அழுது கொண்டிருக்க இருவருக்குமே,
‘என்ன’, ‘ஏது’ என்று புரியவில்லை.
அப்போதுதான் இந்தோனேஷியாவில்
இருந்த சமயம் சித்தார்த்தடன் ஒருமுறை
பேசும்போது, அவனது குரலின் கடினம்
ரமணாவிற்கு நினைவு வந்தது.
இருவருக்கும் ஊடலாகத் தான் இருக்கும்
என்று முடிவு செய்தவன், “சித்தாரா” என்று
அழைக்க அவளோ ரமணாவின் குரலில்
திடுக்கிட்டு நிமிர்ந்தாள். ‘இவர்கள்
வந்ததைக்கூட உணராமலா
அழுதிருக்கோம்’ என்று தன்னைத் தானே
கடிந்தவள் கண்களை அவசரமாகத்
துடைத்து, “ஹைய் அண்ணா… எப்ப
வந்தீங்க” என்று புன்னகையுடன்
எழுந்தாள்.

தனது தோளில் இருந்த பையைக் கழற்றி
வைத்த ரமணா, “நாங்க இன்னிக்கு
காலைல 2 மணி ப்ளைட்ல
கிளம்பினோம்… ஏன் அழுதுட்டு இருக்க?”
என்று நேராக விஷயத்திற்கு வந்தான்
ரமணா.

“இல்லையேண்ணா” என்று அவள்
சமாளிக்க,

“வர்ஷி… எனக்கு கண்ணு நல்லாதானே
இருக்கு” என்று மனைவியிடம் திரும்பி
ரமணா கேட்க, “என்னைவிட நல்லா
இருக்குடா… ஒருவேளை நம்ம இரண்டு
பேருக்குமே சரியில்லையோ” வர்ஷினி
கண்களைத் தேய்த்து முழித்தாள்.

“சொல்லுடா என்னாச்சு” என்று ரமணா
வினவ, சித்தாராவிற்கோ அழுகைதான்
வந்தது. பதில் சொல்லாமல்
அழுதவளைக் கண்ட வர்ஷினி
சித்தாராவின் அருகில் சென்று அவளின்
தோளில் கை வைக்க சித்தாராவோ
அவளது தோளில் சாய்ந்து கண்களை மூடி கண்ணீரை அடக்கினாள்.

“அழாதே சித்தாரா. நீ அழற அளவுக்கு
என்ன ஆச்சு. அவன் எதாச்சும்
சொன்னானா?” வர்ஷினி வினவ,
‘இல்லை’ என்பது போல தலையை
ஆட்டினாள்.

அவளை உட்கார வைத்து வர்ஷினி
தண்ணீரை எடுத்து வந்து தர அதைப்
பருகினாள் சித்தாரா. “ஏன்டா எங்ககிட்ட
சொல்லக் கூடாதா?”, “அப்படி சொல்ல
முடியாததா இருந்தா வேணாம்” என்றான்
ரமணா.

“அப்படி இல்லைண்ணா…” என்றவள்,
“தப்பு என்மேல தான். நான்தான் அவனை
புரிஞ்சுக்கவே இல்லை” என்று சித்தாரா
அமைதியான குரலில் சொல்ல
இருவருக்கும் அதற்கு மேல் உள்ளே
செல்ல முடியவில்லை. சித்தாராவிற்கும் 
கணவனை யாரிடமும் குறை கூறுவது
பிடிக்கவில்லை.

“அண்ணா… நீங்க அவன்கிட்ட எதும்
கேக்காதீங்க. நான் அழுததையும் சொல்ல
வேணாம்” என்று சித்தாரா
கேட்டுக்கொள்ள ரமணா தலையை
ஆட்டினான்.

“போய் முகத்தைக் கழுவிட்டுவா சித்தாரா”
என்று வர்ஷினி சொல்ல சித்தாராவும்
எழுந்து சென்றாள்.

“சித்தாரா அவ மேலதான் தப்புன்னு
சொல்லிட்டு அழறது பாவமா இருக்குடா”
என்று வர்ஷினி சித்தாரா சென்றபின்
ரமணாவிடம் சொல்ல,

“ம்ம்… அதுக்கு அவன் சும்மா
விட்டிருப்பான்னு நினைக்கறியா…
எதாவது பண்ணியிருப்பான். அதான்
அழறா” என்றான் ரமணா.

“சும்மா சும்மா. சித்தார்த்தைக் குறை
சொல்லாதே” வர்ஷினி நண்பனிற்காக
வக்காளத்து வாங்க,

“உண்மையை தான் சொன்னேன். உடனே
நீ அவனுக்கு கொடி புடிக்காத” இருவரும்
வாக்குவாதம் செய்து கொண்டிருக்க
தாத்தாவும் பாட்டியும் வந்தனர்.

“அடடே… யாரோ வந்திருக்காங்க பாரு
சொர்ணம். யாருன்னே தெரியலையே. நீ
இவனை எங்காவது பாத்திருக்க” என்று
தாத்தா ஆரம்பிக்க, “அட ஆமாங்க யாரு
இவன்” என்று ஜாடிக்கேத்த மூடியாகப்
பேசினார் சொர்ணாம்பாள்.

“தாத்தா! ஓட்டாதீங்க தாத்தா” என்று
ரமணா சற்று ஆணுக்குரிய வெட்கத்தில்
பேச, அவனை அவர் கண்டுகொள்ளவே
இல்லை.

“என்னமா,,, தடியன் ஊரு சுத்திக்
காமிச்சானா?” என்று தாத்தா
எதார்த்தமாகக் கேட்க கணவனை இடித்த
சொர்ணாம்பாளோ தலையில்
அடித்துக்கொண்டார். அதே நேரம், ‘இவன்
எங்க ஊரை சுத்திக் காமிச்சான். அந்த
ரூமைவிட்டு வெளிய வந்தா தானே’
என்று மனதிற்குள் நினைத்து சிரித்த
வர்ஷினி பதில் பேசவில்லை.
சொர்ணாம்பாள் உள்ளே நகர அவர் பின்னாலேயே ஓடிவிட்டாள் அவள்.

“என்னடா புள்ள எதுமே சொல்லாம
போகுது” என்று தாத்தா ரமணாவை
மேலிருந்து கீழ் சந்தேகமாகப் பார்க்க,
“ஆங்! பாட்டி உங்களை இடிச்சதுலையே
தெரியல… நீங்க எப்படி ஊரை சுத்தி
காமிச்சு இருப்பீங்கனு” என்று ரமணா
காலை வாரிவிட்டான்.

“அடிங்ங்ங்க” என்று தாத்தா அவனை
விரட்ட ஷோபாவை சுற்றி ஓடியவன்,
“தாத்தா… நீங்கதான் ஆரம்பிச்சது. நான்
எதுமே பண்ணலை. ஸோ சமாதானமா
போயிடலாம்” என்று அவன் டீல் வைக்க
அவரோ, “போனாப் போகுதுன்னு
விடறேன்” என்று அவனை துரத்துவதை
விட்டவர் ஷோபாவில் அமர, அவருடன்
வந்து அமர்ந்து கொண்டான் ரமணா.

“அப்புறம் சித்தார்த் கிட்ட நடுவுல
பேசுனியாப்பா” என்று தாத்தா ஆரம்பிக்க,

“ஒரு தடவை பேசினேன் தாத்தா. அதுக்கு
அப்புறம் பேசல” என்றான்.

“ஓ…” என்று பதில் அளித்தவர் மேலே
எப்படிக் கேட்பது என்று யோசித்தபடியே
அமர்ந்திருந்தார். அதற்குள் உள்ளே
சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்த சித்தாராவின் சிவந்த கண்கள்
அவர் பார்வையில் விழுந்தது. சிறு
வயதில் அவர் பார்த்தவரை அவள்
அழுததே இல்லை எதற்கும். அவரும்
கவனித்துக்கொண்டு தான் வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக பேரன்
சித்தாராவிடம் பாராமுகம் காட்டுவதை.

“ரமணா”, “வேற எதாவது சொன்னானா
சித்தார்த்?” என்று தாத்தா வினவ,
“இல்லியே தாத்தா… ஏன் கேக்கறீங்க?”
என்று வினவினான்.

“இரண்டு பேருமே ஒரு வாரமா எதோ
மாதிரியே இருக்காங்க ரமணா” என்று
தாத்தா மனதில் இருப்பதை மறைக்காமல்
சொன்னார்.

“ஆமா தாத்தா. கொஞ்சம் சண்டை போல”
என்று ரமணா சிறிய குரலில் சொல்ல,
“என்ன விஷயம்னு தெரியுமா?” என்று
வினவினார்.

“தெரியலை தாத்தா. என் மேல தான்
தப்புன்னு சித்தாரா சொல்லிட்டு அழுகுது”
ரமணா சொல்ல, “என்ன நடந்துச்சுன்னே
தெரியலையே” என்று யோசித்த தாத்தா
சித்தார்த்திற்கு அழைத்தார்.

“சொல்லுங்க தாத்தா” என்று ஃபோனை
எடுத்தவன் பேச,

“மதியம் சாப்பாட்டுக்கு எப்பப்பா வருவ?”

“தாத்தா, எனக்கு வேலை இருக்கு. நான்
மதியம் சாப்பாட்டுக்கு வரமுடியாது.
ட்ரைவர் கிட்ட குடுத்துவிடுங்க” என்றவன்,
“வேற என்ன தாத்தா?” என்று கேட்க
தாத்தா எதுவுமில்லை என்று சொல்ல
அவன் வைத்துவிட்டான்.

“ரமணா, இது அவங்களா தான் சரி ஆகற
விஷயம். நம்ம உள்ள போனா கடைசில
ஒண்ணு சேர்ந்து நம்ம மூக்கை
உடைச்சாலும் உடச்சிருவாங்க இவங்க”
என்றவர், “ஆனா எதாவது ப்ளான்
போடலாம்” என்றார்.

“தாத்தா, உங்க ஆனீவர்ஸரி வருதுல்ல
இந்த வாரம். பேசாம அதை
செலிப்ரேஷன் பண்ணலாம். நாங்க
எல்லாம் ஜோடி ஜோடியா சுத்துனா
அவங்க தன்னால சேந்திடுவாங்க”
என்றான் ரமணா.

“நாங்கனு சொல்லாதே… நாமன்னு
சொல்லு. எனக்கும் ஜோடி இருக்கு” என்று
தாத்தா சட்டைக் காலரைத் தூக்கிவிட,
“ஹம் ஹம்… என்ஜாய் என்ஜாய்” என்றான்.

சித்தார்த்திற்கு ரமணா மதிய உணவைக்
கொண்டு செல்ல, “டேய் மச்சி வாடா”
என்று நண்பனைக் கண்டு உற்சாகமாய்
வரவேற்றான் சித்தார்த்.

“வரேன் வரேன்” ரமணா அவனது
டேபிளில் மதிய உணவை வைத்துவிட்டுத்
திரும்ப,

“அப்புறம் இந்தோனேஷியா எல்லாம்
எப்படி இருந்துச்சு? நல்லா சுத்திப்
பாத்தீங்களா?” சித்தார்த் வினவ,

“அதே கேள்வி… எத்தனை பேரு தாண்டா
இதே கேள்வியைக் கேப்பீங்க” என்று
வெட்கத்துடன் வெளிப்படையாகக் கேட்டு
நண்பனிடம் முணுமுணுத்தான்
ரமணாவோ.

“நல்லா இருந்தா சரி” என்ற சித்தார்த் சிரிப்பை அடக்கியபடி
உணவை எடுத்தான். “பட் நல்ல இடம்
மச்சி அது. நீ வேணா சித்தாராவை ஒரு
டைம் கூட்டி போயிட்டுவா… நீங்களும்
இன்னும் ஹனிமூன் போகலைல” என்று
ரமணா சொல்ல சித்தார்த்திடம் ஒரு
பெருமூச்சே வந்தது.

“மச்சி… தாத்தா பாட்டி வெட்டிங்டே வருது.
செலிப்ரேட் பண்ணலாமா?” ரமணா
வினவ, காலண்டரைப் பார்த்தவன், “ஆமாம் மச்சி. நானும் நினைச்சிருந்தேன்.
டென்ஷன்ல மறந்துட்டேன் பாரு” என்று
உணவை உண்டபடியே சித்தார்த் சொல்ல
ரமணாவிற்கு உள்ளே பளிச்சிட்டது.

“சரி. ஈவ்னிங் சித்தாரா வர்ஷினிகூட
உட்காந்து ப்ளான் பண்ணலாம்” என்று
ரமணா சொல்ல,

“ம்ம்” என்று மட்டும் சொன்னான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த
குப்பிட்டோ விதியை திட்டித் தீர்த்தது.
“உன்னால தான் எல்லாம்” என்று குப்பிட்
குற்றம்சாட்ட,

“நான் என்னடா பண்ணேன்” என்று
ஓரக்கண்ணால் குப்பிட்டைப் பார்த்தபடி
விதி கேட்டது.

“நீ என்னதான பண்ணலை சொல்லு. உன்
வேலையால எவன் உருப்பிட்டிருக்கான்
சொல்லு” என்று குப்பிட் இருகைகளையும்
இடுப்பிற்கு கொடுத்தபடிக் கேட்க,

“ஆமாண்டா… நல்லது நடக்கும் போது
எல்லாம் என்னை விட்ருங்க… ஆனா,
கெட்டது நடந்தா மட்டும் என்னையே
போட்டு நோண்டுங்க” என்று விதி
நொடித்துக்கொண்டது.

“பேச்சைக் குறை… சீக்கிரம் அடுத்த
வேலையைப் பாருடி” என்று குப்பிட்
சொல்ல, “எங்களுக்குத் தெரியும். நீ உன்
வேலையைப் பாருடா” என்றாள் விதி.
குப்பிட் அவளது கோபமான முகத்தைக்
கண்டு சிரித்தது. அவளைப்
பிடித்திருந்தாலும் அவளின் இந்த மாதிரி
விளையாட்டு செய்கையாலேயே அவளை
அவன் தள்ளி வைத்திருந்தான். ஆனால்,
இதற்குமேல் முடியாது என்பதற்கேற்ப
அவளிடம் சித்தார்த்-சித்தாரா சேர்ந்த பின்
காதலைச் சொல்லக் காத்திருந்தான்
குப்பிட். ஆனால், சித்தாரா
செய்யப்போவதை விதியுமே
அறியவில்லை.

மாலை வீடு வர எல்லாத் திட்டங்களையும்
சித்தாரா வர்ஷினியோடு தீட்டியவர்கள்
அதற்கான வேலையை ஆரம்பித்தனர். அவர்களுடன் கிஷோரும் இணைந்து கொண்டான். சின்மயி
கருவுற்றிருப்பது அறிந்த ரமணாவும்
வர்ஷினியும் அவர்களுக்கு
வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கிஷோரிடம் மேலாக சித்தார்த் சித்தாரா
ஊடல்களை சொல்லி வைத்த ரமணா,
“அவங்களை எப்படியாவது ஒண்ணு சேர்த்தி வைக்கணும் ப்ரோ” என்றான்.

“செஞ்சிருவோம்” என்று கிஷோர் சொல்ல
இருவரும் ஹைபை அடித்துக்கொண்டனர்.