கிட்காட்-3

IMG-20210429-WA0013-97749935

கிட்காட்-3

“தாத்தா உண்மையாவா?” கேட்ட சித்தார்த்தின் குரலில் அத்தனை ஆர்வம்.

“ஆமான்டா பேரா”

“எப்போ?” சித்தார்த்தின் குரலில் ஆர்வம் கூடிக்கொண்டே போவதை உணர்ந்தார்
ராஜகோபாலன்.

“வெள்ளிக்கிழமை நைட்டே”

“சூப்பர் தாத்தா… எத்தனை நாளைக்கு?”

“எத்தனை நாளைக்கா? பேரான்டி இனிமேல் இங்கதான்” தன்னுடைய தாத்தா அளித்த பதிலில் நம்ம பயலுக்கு இறக்கையைக் கட்டி வானத்தில் பறக்கவிட்டது போல ஆனது. தந்தையின் செல்பேசியை வைத்தவன் தன்னுடைய அலைபேசியை எடுத்துக்கொண்டு அவனது படுக்கையறைக்கு வந்திருந்தான். அந்தக் குஷியில் சத்தமாகவே பேசிக்கொண்டிருந்தான்.

“போதும் தாத்தா போதும். இதுக்கு மேல என்னால சந்தோஷத்த தாங்கவே முடியாது” நெஞ்சில் கையை வைத்தபடி வாயெல்லாம் பல்லாகச் சொன்னவன்,

“தாத்தா… யூ மஸ்ட் ஹெல்ப் மீ” என்றவனின் குரலில் கெஞ்சல் பாதி கொஞ்சல் பாதி இருந்தது.

“பாக்கலாம்” அவர் சீனைப் போட,

“தாத்தா… அதை பாட்டிகிட்ட சொல்லிடுவேன்” போலியாக மிரட்டினான் சித்தார்த்.

“உனக்கு இல்லாததா பேரா… வா, வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு
பண்ணிடலாம்” என்று தாத்தா அந்தர்பல்டி அடிக்க அடக்கமாட்டாமல் சிரித்தான்.

“அது. இப்பதான் என் தாத்தா. வார்த்தை மாறுச்சு அப்புறம் உங்க ப்யூட்டி கிட்ட
உங்க வேலையெல்லாம் சொல்லிடுவேன்” கிட்டத்தட்ட மிரட்டினான் சித்தார்த்.

“அதை மட்டும் பண்ணிடாத பேரான்டி… சும்மாவே உன் ப்யூட்டி டார்ச்சர் பண்ணுவா… இது தெரிஞ்சுது அவ்வளவுதான் நான்… சோறே போடமாட்டா இந்த சொர்ணாக்கா” ராஜகோபாலன் பேச சித்தார்த்திற்கோ எப்போதுடா ஊட்டி போவோம் என்றிருந்தது. தாத்தா பாட்டியை காணவேண்டும் என்ற ஆவலும், தான் ஆவலாயிருந்த இன்னொரு விஷயமும் சேர அவனது உடல் புல்லரித்தது.

“என் ப்யூட்டி சொர்ணாக்காவா?”, “இருக்கட்டும் இருக்கட்டும்” என்றவன் அருணின் திருமணத்தைப் பற்றியும் சொன்னான். தன்னுடைய விஷயங்கள்
அனைத்தையும் தாத்தாவிடம் சொல்பவன் அவன்.

“அட இப்பதான் அவனை எல்லாம் உன்கூட பாத்த மாதிரி இருந்துச்சு… அதுக்குள்ள பெரியவன் ஆகிட்டானா… எனக்கு ஒரு ஃபோன் கூடப் பண்ணல பாரேன்… இருக்கட்டும், கச்சேரி இருக்கு அவனுக்கு…”, “சரி பேரான்டி அந்த ரமணா பயலையும் இந்த தடவை கூட்டிட்டுவா. அவன் வந்து ஒரு வருசம் மேல ஆகுது” என்றார்.

அப்போது தான் நண்பனின் நியாபகம் வந்தவனாய் சித்தார்த் திரும்ப, இவனையே பார்த்தபடி நின்றிருந்தான் ரமணா. “சரி தாத்தா… சரி வச்சிடட்டுமா?”
சித்தார்த் கேட்க,

“ஓகே பேரா… குட் நைட்” என்று வைத்துவிட்டார்.

சித்தார்த்தை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே ரமணா நிற்க, “என்ன மச்சி? ஏன்
என்னை சைட் அடிக்கற?” சித்தார்த் கேட்டான்.

5″11 உயரத்தில் எப்போதுமே ட்ரிம் செய்த தாடி மீசையுடன், கூர்மையான ஆளைத்
துளைக்கும் கண்களுடனும், எப்போதுமே குறும்பான புன்னகையை தத்தெடுத்திருக்கும் உதட்டையும், பெரிய இடத்துப் பையனுக்கே உண்டான
தேஜஸுடனும் நிமிர்வுடனும் இருப்பவனை திரும்பிப் பார்க்காதவர் இல்லை.

“உன்னை யாரும் சைட் அடிக்காம இருந்தா தான் அதிசயமே” என்றவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏன் மச்சா அப்படி இருந்த. டோட்டலி யூ வாஸ் டிப்ரன்ட்” ரமணா கேட்டான்.

“அது வந்து மச்சா…” என்றவனுக்கு புன்னகை மட்டும்தான் அரும்பியது. ஆனால், வெட்கம் இல்லை. சிரிப்பும் புன்னகையும் மாறிமாறி காட்சியளித்தது.

“என்னடா பல்லைக் காட்டறே” அவனை ஒரு லுக் விட்ட ரமணா, “யூ ஆர் ஹைடிங்
சம்திங் ஃப்ரம் மீ மச்சா” என்றான்.

“டேய் லூசு அப்படி எல்லாம் இல்ல.  இங்கவா” என்றழைத்தவன் தனது
கப்போர்ட்டைத் திறந்தான். அதில் உள்ளே லாக்கர் போல இருந்த குட்டிப்பெட்டி
போன்று இருந்ததை, சாவிகொண்டு திறந்தான்.

“இவ தான்டா என்னோட ஸ்மைல்கு காரணம்…” என்றவன் உள்ளேயிருந்த
புகைப்படத்தை எடுத்து நீட்டினான்.

“எது இந்தக் குழந்தையா?” கடுப்பாக ரமணா கேட்டான்.

“குழந்தைதான். ஆனா இது இப்ப 25 வயதுக்குழந்தை…” என்றவன் அப்புகைப்படத்தை வாங்கிப் பார்த்தான். அதில் ஆறு மாதக்குழந்தை பிங்க் நிற
ப்ராக்கில் தவழ்ந்து கொண்டிருந்தது. அதலிருந்த மழலையின் சிரிப்பைக்
கண்டவன் அதில் உருகினான் உள்ளுக்குள்.

“ஆர் யூ இன் லவ்?” நண்பனின் புன்னகையைப் பார்த்த ரமணா கேட்க,

“யெஸ் மச்சி”

“ஏன் மச்சா இவ்வளவு நாள் சொல்லவே இல்ல?”

“மறைக்கனும்னு இல்லடா மச்சா. சொல்லவே தோணலை. ஒரு சில டைம்
எதுக்காவது அப்ஸெட் ஆச்சுன்னா, இவ ஃபோட்டோவ எடுத்துப் பாத்தேனா போதும் எனக்கு” சொல்லிய சித்தார்த்தின் விழிகள் அவள் ஃபோட்டோவில் இருந்து அகலவில்லை.

“அப்ப, வர்ஷி கேட்டப்பவும் ஏன்டா சொல்லலை?” ரமணா கேட்க,

“எதுமே கன்பார்ம் ஆகாம சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன். ஆனா, அவளுக்கு என்னைப் பிடிக்கும்”

“மச்சி இப்படி ஒரு லவ்வாடா உனக்குள்ள?”, “மச்சி லவ் ஸ்டோரி சொல்லேன் கேக்கறேன்” ஆவலாகக் கேட்டான் ரமணா.

“ஒரு பதினேழு வருசத்துக்கு முன்னாடி ரீவைன்ட் பண்ணிப் பாத்தா…” சித்தார்த்
விட்டத்தைப் பார்த்தபடி ஆரம்பிக்க,

“மச்சா தெரியாம கேட்டுட்டேன்டா… ரொம்ப இழுத்து சாவடிச்சராதே” என்றான்
ரமணா. இந்த ஒரு மாதமாக அருணின் புலம்பலில் காதைக் கடன் கொடுத்திருந்தவனுக்கு மறுபடியுமா என்றிருந்தது.

“டேய்! நாயே அடி வாங்கி சாகாதே” என்றவன் மீண்டும் ஆரம்பித்தான்.

சித்தார்த் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன்
படித்துக் கொண்டிருந்த பள்ளியில் இரண்டாம் வகுப்புக்கு வந்து சேர்ந்தாள்
சின்மயி. அமைதியாக கள்ளங்கபடம் இல்லாத பால்முகம் கொண்ட அவளை
யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் வகுப்பு ஆசிரியர் சித்தார்த் பக்கத்திலேயே அவளை முதல் நாள் அமர வைக்க, அவளை அவனிற்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதுவும் அன்று மதியம் டிபன் பாக்ஸைத் திறக்க முடியாமல் திணறியவளிடம் சென்றவன், “நான் ஓப்பன் பண்ணித் தரேன் குடு” என்று அந்த அறியாத வயதிலேயே கிடைத்த கேப்பில் ஸ்கோர் போட்டவன் நம் பையன்.

“தாங்க்ஸ்” என்றபடி பாக்ஸை வாங்கியவள், “இந்தா நீயும் எடுத்துக்க” டிபன் பாக்ஸை சின்மயி நீட்ட, அதிலிருந்த சப்பாத்தி ரோலை எடுத்தவன் அவளுடனே உட்கார்ந்து உண்டான்.

“உன் பேர் என்ன?” சின்மயி கேட்க,

“சித்தார்த்”

“ஓஓ… என்னோட பேர் சின்மயி”

“தெரியுமே. ஸார் நீ வந்தப்ப சொன்னாரே”. அதுதான் சித்தார்த். தனக்கா ஒன்றை
பிடித்துவிட்டால் ஊன்றி ஊன்றி கவனிப்பான். பிடிக்காவிட்டால் ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டான். இருவரும் சாப்பிட்டு முடிக்க அன்றைய
வகுப்பும் முடிந்தது.

“பை, சித்தார்த்” வகுப்பு முடிய தன் பையை எடுத்து மாட்டியவள் தன் இரட்டை சிண்டு அழகாக ஆடியபடிச் சொல்ல,

“பை, சின்மயி” என்றவனுக்கு உள்ளே வந்த பெரியமனிதத் தன்மைக்கு அளவே
இல்லை. அந்த வயதில் அவனுக்கு ஏதோ அது பர்ஸ்ட் ரான்க் வாங்கிய உணர்வு.
பொதுவாக ஆண்கள் எல்லோருக்கும் இருக்கும் குணம்போல. சிறிது முதல்
பெரிது வரை இருக்கத்தான் செய்கிறது. தனக்குப் பிடித்த பெண் பேசிவிட்டால்
அப்படி ஒரு செருக்கு உள்ளுக்குள்.

அவள் பின்னோடே சென்றவன் அவள் வேறுபக்கம் செல்ல, “சின்மயி இந்த வே இல்லை. இப்படிப் போகணும்” சரியான வழியை சித்தார்த் காட்ட,

“என்னோட சிஸ்டர் எல்கேஜி. அவ எங்க இருப்பா?” புதுப்பள்ளியில் மருண்டு
போய் அவள் நிற்க,

“எல்கேஜியா?”

“அதோ அங்க வரா பாரு” துள்ளிக் குதித்து கையைக் காட்டியபடி சின்மயி சொல்ல
அவளின் தங்கை வந்து கொண்டிருந்தாள். அந்தக் குட்டிப்பெண்ணோ இவர்களைப் பார்க்காமல் வேறு எங்கோ சென்றது.

“அச்சச்சோ! அம்மு வேற எங்கையோ போறாளே…” சின்மயி கைகளை உதறியபடி சிணுங்கினாள்.

நொடிநேரம் தாமதிக்காமல் அப்பெண்ணிடம் போய் பேசி அழைத்து வந்தான் சித்தார்த். “தாங்க்ஸ் சித்து. பை” சின்மயி தங்கையோடு கிளம்ப அவனும் தன்னுடைய ட்ரைவருடன் கிளம்பினான்.

வீட்டிற்கு வரும்வழி நெடுக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாலும் அவனிற்கு
அவளின் நியாபகம்தான். அதிலும் அவள் தலையை ஆட்டிஆட்டி பேசும்போது அவனிற்கு அவளை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதே குஷியுடன் வீடு வந்து சேர்ந்தவன் பாட்டியைக் கொஞ்சிவிட்டு பாடாய்ப்படுத்திவிட்டு அறைக்குள் புகுந்தான். சும்மா என்று படுத்திருந்தவன் தூங்கியும்விட்டான். ரேணுகாவும் சொர்ணாம்பாளும் கூட சரி தூங்கட்டும் என்று விட்டுவிட்டனர். ஐந்துமணி வாக்கில் எழுந்து வந்தவன் அன்னை யாருடனோ வெளியில் பேசிக் கொண்டிருப்பது கேட்டு அன்னையை நாடி கண்களை கசக்கிக்கொண்டே வந்தான்.

தன் அன்னையின் வயதினர் யாரோ அன்னையிடம் பேச குட்டி சித்தார்த்தோ
வந்து அன்னையின் கால்களின் மேல் சாய்ந்து நின்றான். “சித்தார்த்” சின்மயின்
குரலில் திரும்பியவனுக்கு அதிசயம்தான் அன்று.

தன் அன்னை பேசிக்கொண்டிருந்த பெண்மணியின் அருகில் நின்றிருந்தாள் அவள். “அம்மா நான் சொன்ன சித்தார்த் இவன்தான்” அன்னை தேவியிடம்
சொன்னாள் சின்மயி.

சித்தார்த்தைப் பார்த்து புன்னகைத்தவர், “நீ தான் சித்தார்த்தா குட்டி… வந்ததுல
இருந்து என்னோட நியூ ப்ரண்ட் நியூ ப்ரண்ட்னு ஒரே அலப்பறை” தேவி
எதார்த்தமாகச் சொல்ல சித்தார்த்தின் மனதில் அது நன்கு பதிந்தது.

அன்று இரவு கணவரிடம் அருகிலுள்ள வீட்டிற்கு யாரோ குடி வந்திருப்பதாக
ரேணுகா கூறிக்கொண்டிருக்க, சித்தார்த் அனைத்தையும் கண்களை தூங்குவது
போல மூடியபடி கேட்குக்கொண்டிருந்தான். ஏனோ அந்த சிறிய வயதில் அது என்ன உணர்வு என்றே தெரியாமல் அதில் ஈடுபட்டுப்போயிருந்தான்.

“அப்புறம் என்னாச்சு மச்சான்?” ரமணா.

“க்ளாஸ்லையும் சரி வீடு வந்தாவும் சரி… நானும் அவளும் ஒன்னா தான் இருப்போம். எப்போமே நான் அவ வீட்டுல இருப்பேன். இல்ல அவ என் வீட்டுல
இருப்பா”

“லவ்வை சொன்னியா சித்தார்த்?” ரமணா.

“எங்க நாலாவதுக்கே இங்க வந்துட்டேன்… வரமாட்டான்னு அழுதவனை தரதன்னு
இழுத்திட்டு வராத குறைதான். ஆனா, அதுக்கு முன்னாடியே எங்க பாதி கல்யாணம் ஓவர் மச்சி” பழைய நினைவை ரசித்தபடி சித்தார்த் சொல்ல ரமணா உட்கார்ந்த இடத்தில் ஷாக் அடித்தது போல எழுந்தான்.

“என்னது? கல்யாணமா?”. கொஞ்ச நேரத்திற்கு முன் உள்ளே சென்ற பன்னீர்
பட்டர் மசாலா புறை ஏறி வெளியே வந்துவிடும் போல ஆனது அவனிற்கு.

“ஆமா மச்சான்… ஊட்டியை விட்டு வரதுக்கு முன்னாடி பூ எல்லாம் ஒன்னா சேத்தி, சேத்தி, சேத்தி, கோர்த்து மாத்திக்கிட்டோம்” தனது பெட்டில் அமர்ந்தபடி சித்தார்த் சொல்ல,

“மச்சா எப்டிடா மூணாவதுலையே அப்டி இருந்திருக்க?” அதிசயித்தான் ரமணா.

“நீ வேற சின்மயி தங்கச்சி பாத்துட்டா… அப்புறம் அவளை பிடிச்சு மிரட்டி
அனுப்சேன்” என்றான் சித்தார்த் பழைய நினைவில் மூழ்கியபடி.

“மேல சொல்லு மச்சான்… மறுபடியும் பாத்தியா இல்லியா?” ரமணா கேட்க,
“பாத்தேன் மச்சான். டென்த் லீவ்ல. ஏஞ்சல் மாதிரி இருந்தா” கண்களில் ரசனையுடன் சொன்னான்.

கோவை வந்த பிறகு அம்மா அப்பாவுடன் ஊட்டி சென்றதே சித்தார்த். அதுவும்
விடுமுறை தினத்தில். அச்சமயம் கேசவன்-தேவி பெண்களைக் கூட்டிக்கொண்டு ஊருக்குச் சென்றுவிடுவர். அவன் பார்க்க சமயமே அமையாமல் போனது.

அப்போதுதான், டென்த் லீவில் தனது பைக்கை எடுத்துக்கொண்டு அவனே
ஊட்டிக்குச் சென்றான். தற்செயலாக சின்மயின் வீட்டிற்குப் பக்கம் சென்றவனை தேவி பார்க்க, அவனைப் பிடித்து விசாரித்தார் அவர்.

“நல்லா தான் ஆன்ட்டி எக்ஸாம் எழுதியிருக்கேன்… சின்மயி எப்படி பண்ணியிருக்கா? எங்க ஆளையே காணோம்” என்று கேட்க,

“அவளும் நல்லா பண்ணியிருக்கா சித்தார்த். அவ அம்மு கூட நம்ம மணி
பாட்மிட்டன் க்ளப்புக்கு போயிருக்கா. வர்ற நேரம்தான்” தேவி.

“ஓ, சரி ஆன்ட்டி. நான் கிளம்பறேன். பாட்டி தேடுவாங்க அப்புறம் வர்றேன்” என்று
கிளம்பியவன் நேரே சென்றது சின்மயி வரும்வழி. அது பாட்மிட்டன் முடித்து
அவர்கள் வீடு வரும் ஒற்றை அடி அழகிய பாதை. ஒரு பக்கம் மலைகள்
பனிச்சூழலோடு இருக்க இன்னொரு பக்கம் நீளமான மரங்கள் பனிப்படலத்தோடு இருக்க அந்த மலைகளின் ராணி சிவந்து கொண்டிருந்தாள்.

மலைகளின் ராணியை சித்தார்த் ரசித்துக் கொண்டிருக்க அவனின் ராணியும் வந்தாள். பூசின உடல்வாகுடன் வட்டமான முகத்துடன் பால் நிறத்தில், சகவயது தோழியுடன் பேசியபடி வந்தவளைப் பார்த்து இமைக்க மறந்தான். தன்னை ஒருவன் பார்ப்பதைக் கண்ட சின்மயும் இவனைக் கண்டாள். அவனை அவளும் அடையாளம் கண்டுகொண்டாள். அவள் என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. ஆனால், தலையை குனிந்துகொண்டு புன்னகையுடன் அமைதியாக அவனைக் கடந்து சென்றுவிட்டாள். சித்தார்த்தின் கையில் இறக்கை மட்டும் இருந்திருந்தால் சின்மயிடம் தந்து, “ஹே ஏஞ்சல்! உன்னோட இறக்கையை கீழ விட்டுட்டே” என்று ஐஸ் வைத்து ஸ்கோர் செய்திருப்பான்.

“அப்புறம் என்னாச்சுடா” ரமணாவும் நன்றாக கதையைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அங்க ஒரு ஆங்கிலோ இந்தியன் ஷாப் இருக்கும் மச்சா. அங்க கிட்காட் கஸாட்டான்னு ஒரு ஐஸ்க்ரீம் இருந்துச்சு. வெண்ணிலா, பிஸ்தா, ஸ்டராபெர்ரி
ஐஸ்கிரீம் மூணு ஸ்கூப் வச்சு கிட்காட் க்ரஷ் மேல ஆட் பண்ணி. ஸைட்ல இரண்டு கிட்காட் ஸ்டிக் வச்சுத் தருவாங்க. அதை வாங்கி சின்மயி தங்கச்சிக்கிட்ட குடுத்துவிட்டேன். அப்புறம் அவ வீட்டுக்கு அகெயின் போனப்ப தான் இந்த போட்டோ அவ வீட்டுல இருந்து எடுத்தேன். அப்புறம் நெக்ஸ்ட் லீவுக்கு போனப்பத்தான் தெரிஞ்சுது. அவ தாத்தா வீட்டுக்கு ஸ்டடிஸ்காக ஃபாமிலியா
போயிட்டாங்கனு…” சோகமாக முடித்தான் சித்தார்த்.

“அதுக்கு அப்புறம் நான் அடுத்த லீவ் வந்தப்ப சரியாவே இல்லைனு தாத்தா
கூப்பிட்டு கேட்டாருடா. என்னால அவர்கிட்ட மறைக்க முடியல. அப்போ அவருகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்…” சித்தார்த் சொல்ல,

“என்ன சொன்னாரு அந்த ஜெமினி கணேசன்?” கிண்டலாக ரமணா கேட்க,

“நான் பாத்துக்கறேன். நீ கவலையே படாதனு சொல்லிட்டாருடா…” என்றவன்,
“இப்போ அவங்க இங்கையே வராங்கலாம்… பர்மனென்ட்டா” என்று கதையை முடித்தவனின் முகத்தில் அத்தனை ஒரு மலர்ச்சி.

“அவளை நினைச்சு அப்ஸெட் ஆனாக்கூட, இந்த ஃபோட்டோ தான் ரமணா எனக்கு
ரிலீஃப்”

“மச்சி அந்த ஃபோட்டோ தான் உனக்கு ரொம்ப இம்பாக்ட் போலடா… அந்த
போட்டவைப் பத்தி பேசும்போது அவ்வளவு பல்ப் உன் மூஞ்சில” ரமணா சொல்ல, “அப்படித்தான் நினைக்கறேன் மச்சி… பிக்காஸ் எவ்வளவு டையர்ட் அன்ட்
அப்ஸெட்டா இருந்தா இதைப் பார்த்தா எனக்கு ஓகே ஆயிடும்” என்றவன்
பெருமூச்சை விட்டபடி அதை மீண்டும் கப்போர்ட்டில் அந்தப் பெட்டியில் வைத்துப் பூட்டினான்.

“சின்மயிக்கு இந்நேரம் லவ்வோ க்ரஷ்ஷோ இருக்காதுனு நினைக்கறியா மச்சா. நீ சொல்றதைப் பாத்தாவே தெரியுது பொண்ணு வேற லெவல்ல இருக்கும்னு. அதான் கேக்கறேன்” ரமணா யோசனையோடு கேட்க,

“இல்ல மச்சி. நோ சான்ஸ் ஃபார் தட். அன்னிக்கு அவ கண்ணுல நான் பாத்தேன்… அதுவும் இல்லாம அவ அவ்வளவு சீக்கிரம் யார்கிட்டயும் பேசமாட்டா டா… ஐம் கான்பிடென்ட் அபௌட் இட்” என்றான் சித்தார்த்.

“அப்ப இந்த வாரம் ஜாலி பண்ணப்போற” ரமணா கலாய்க்க ஆரம்பிக்க,

“டெபனட்லி டெபனட்லி… பட் மச்சி இந்த டைம் நீயும் தான் என்கூட வர்ற…”

“வாட் டூ யூ மீன் சித்தார்த்…” சிவாஜி கணேசன் ஐயாவைப் போலக் கேட்டவன்,
“இப்பதான்டா அருண்கிட்ட இருந்து தப்பிச்சேன் மறுபடியும் இன்னொன்னா”
மரணத்தின் பிடியில் இருந்து தப்புபவனைப் போலானான் அவன்.

“ஏன் மச்சி… தாத்தாவும் உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னாருடா” சித்தார்த்.

“பின்னே, நீங்க லவ் பண்ணுவீங்க… அதை எல்லாம் என்ன மாதிரி ஒரு சிங்கிள்
பையன் உட்கார்ந்து பாக்கணுமாக்கும்…”, “நோ நோ. அதுக்கெல்லாம் இனி
சிக்கமாட்டான் இந்தக் ரமணாமூர்த்தி” காலரைத் தூக்கிவிட்டு அவன் கெத்தாகச்
சொன்னான். ஆம், அவன் முழுப்பெயர் ரமணாமூர்த்தி.

“மச்சா, உன் பேர் எந்தப் பக்கம் சொல்லிப் பாத்தாலும் மாஸா இல்லடா. ரொம்ப
ட்ரைப் பண்ணாத. விட்ரு” சித்தார்த் கலாய்க்க,

“அப்ப என்னை மொக்கைன்னு சொல்றியாடா நாயே” என்று சித்தார்த்தை
உதைக்கப்போக அவனோ ஜம்ப்பாகி நகர்ந்தான்.

“மச்சி நீ தப்பா நினைச்சுகிட்டே… ஆக்சுவலி நீ சாக்லேட் பாய்டா” நண்பனின் தோளில் கைபோட்டு சித்தார்த் சொல்ல,

“அப்படியா சொல்ற?” என்றவன் அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான்.

“பரவாயில்லை மச்சி… நல்லாதான் மேன்னுபாக்சர் ஆகியிருக்கேன்” என்று
சிரித்தவனிடம்,

“ம்ம் ஓகே மச்சான் வரேன்… ஆனா” ரமணா இழுக்க,

“ஆனா…?” அவனைப் போலவே இழுத்து அழுத்தமாக சித்தார்த் கேட்டான்.

“சின்மயி தங்கச்சியை எனக்கு இன்ட்ரோ பண்ணுடா” பல்லைக் காட்டியபடி
கேட்டான் ரமணா.

“டேய்! அவ மொக்க பிகர் டா” என்றான் சித்தார்த்.

“உனக்கு உன் சின்மயி பக்கத்துல பாத்தா உலக அழகியே மொக்கைன்னு
சொல்லிடுவே… அப்படி ஒரு சிஸ்டம் மோட்டிற்கு நீ போயிட்ட” என்று ரமணா
சொல்ல,

“அஹான்… நீ வந்து அவ தங்கச்சியைப் பாத்துட்டு பேசு” சித்தார்த் சொல்ல
ரமணாவின் வீட்டிலிருந்து அவனது அலைபேசிக்கு அலைப்பு வந்தது.

“டேய் மச்சி அம்மாதான்… அடுத்த காம்பவுண்ட்லையே இருந்துட்டு ஃபோன்
வேற” கடுப்புடனும் சிரிப்புடனும் கூறியவன் அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அன்றிரவு தாத்தாவிற்கு “குட் நைட்” சித்தார்த் அனுப்ப,

“என்னடா பேரா புதுசா குட்நைட் எல்லாம்” அவர் வார்ஸ்ஆப்பில் குரல் பதிவை
அனுப்பி இருந்தார்.

“சும்மா தாத்தா… ஒரு அக்கறை” முத்த எமோஜியுடன் அவன் அனுப்ப,

“அப்படியா பேரான்டி ஊருக்கு வந்தோனே பாக்கத்தானே போறேன், உன் அக்கறை சர்க்கரை எல்லாம் என்மேல எவ்வளவு விழுதுன்னு” மீண்டும் அவர் குரல் பதிவை அனுப்பினார்.

“ஹீஹீஹீ! டாடா தாத்தா… போய் தூங்குங்க” என்றனுப்ப அவரும்
படுக்கைக்குச் சென்றார்.

வாட்ஸ்ஆப்பை மூடியவன் தனது ஐ ஃபோன் வயர்லெஸ் ஏர் பாடை காதில் வைத்து ப்ளேலிஸ்டை ஆன் செய்ய பாடகி சின்மயி பாடிய பாடல் ஒலித்தது. அவனது
கால்கள் தானாக வந்து பால்கனியில் வந்து நின்றது. மக்கள் நடமாட்டம் குறைந்து அந்த இடமே அமைதியாக இருந்தது.

நான் இனி காற்றில் நடக்க போகிறேன்                                      கூடவே உன் கைகள் கோர்த்து கொள்கிறேன்                                      இந்த பிரபஞ்சம் தாண்டியே ஒரு பயணம் போகலாம்                 அதில் மூச்சு கூட தேவை இல்லை முத்தம் ஒன்றில் சேர்ந்து செல்லலாம்…

மிதந்து மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்
அசந்து அசந்து நின்றேன் ஐயோ
அளந்து அளந்து கொன்றாய்
உன் போர்வை இருட்டிலே
நான் தொலைந்து போகிறேன்
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவட்டில் தூசி போல
படிகிறேன் மடிகிறேன்

என்ற வரிகளைச் பாடகி சின்மயி பாட அந்த இரவின் தனிமையில் அதுவும்
கோவையின் நவம்பர் மாதத்தின் மிதமான தென்றலில் அவனது இதயத்திலும் உடலிலும் அப்படி ஒரு சிலிர்ப்பும் ஆனந்தமும்.

மெல்லிய சாரலும்
மஞ்சளாய் வெய்யிலும்
சேர்ந்தது போல்
உந்தன் வெட்கமும்
கோபமும் சேர்ந்ததடி
தெத்துப்பல் கீறலும் கொஞ்சலடி

காதலும் இல்லாத
காமமும் இல்லாத
ஓர் நொடி ஓர் நொடி

யுவன் சங்கர் ராஜா ஆரம்பிக்க அந்தக் குரல் தந்த போதையில் கண்களை மூடியவன் படுக்கையில் வந்தா விழுந்தான்.

ரமணாவிடம் சொல்லாத பல விஷயம் இருக்கிறது. அவன் அறுக்கிறோம் என்று
நினைத்துவிடுவானோ என்று மேலோட்டமாகச் சொன்னவனுக்கு பழைய நியாபகம் ஒன்று எழுந்தது.

சின்மயின் குரல். சின்மயின் வீட்டில் ஒரு நாள் பாட்டி எதையோ தரச் சொல்லி
சென்றிருந்த போதுதான் அவள் ஃபோட்டோவைப் பார்த்தான் ஷோகேசில்.
பிங்க் நிற ப்ராக்கிற்குள் உள்ளே ரோஜா பூ பந்தைப் போல தவழ்ந்து அந்தச் சிப்பி
இதழைத் திறந்து அவள் சிரிக்க அவன் கண்கள் அதன் அழகில் மயங்கியது.

புகைப்படத்தை கையில் எடுக்க அதில் அவள் ஒரு கண்ணை மூடியபடி ஒரு
கண்ணைத் திறந்து கண்ணடிப்பது போல அந்த ஃபோட்டோ விழுந்திருக்க
அதை வைக்க மனமே இல்லை சித்தார்த்திற்கு. யாருமறியாமல் தான் கண்டு மயங்கிய அந்தப் புகைப்படத்தை எடுத்தவன், திரும்பி வீட்டிற்குச் செல்லத்
திரும்ப அவளின் குரல் அவனை நிறுத்தியது.

அதை நினைத்தவனின் கண்கள் தாமாக மூட எப்போது தூக்கத்தைத் தழுவினான்
என்று அவனிற்கே தெரியவில்லை.

விதி வைத்திருக்கும் செக்மேட்டை சித்தார்த் அறியவில்லை.