கிட்காட்-6

IMG-20210429-WA0013-50c1c59d

கிட்காட்-6

ரமணாவுடன் வந்த சித்தார்த்தை, “எங்க போயிட்ட சித்தார்த்?” ராஜகோபாலன்
கேட்க, அவனருகில் வந்த ரவிக்குமாரும் அதையேதான் கேட்டார்.

“அப்பா நான் என்ன சின்னக்குழந்தையா?” தந்தையிடம் கேட்டவன், “சும்மா தண்ணி குடி தண்ணி குடின்னு தந்தீங்கள… அதான் கொஞ்சம் அர்ஜன்ட் ஆகிடுச்சுன்னு போனேன்” தந்தையிடம் சமாளித்தவன்,

“அப்புறம் சொல்றேன் தாத்தா” என்றான் தாத்தாவின் காதில். அவனது முகம்
கடுகடுப்பாக இருந்தது.

“பொங்கல் பொங்கப்போகுது வாங்க” சொர்ணாம்பாள் அழைக்க அனைவரும்
அங்கு கூடினர்.

சித்தார்த்தின் முகம் கடுகடுப்பாக கோபத்திலிருக்க சின்மயி அதைக் கவனித்தாள். சித்தார்த் எதேச்சையாக அவளைப் பார்க்க, விரலை அவள் முகத்தை முழுவட்டமிட்டு, ‘என்னாச்சு?’ என்று சைகையில் விசாரித்தாள்.

‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் புன்னகைத்தபடி இடமும் வலமும் தலையை ஆட்டியவன், சின்மயி அருகிலிருந்த சித்தாராவைப் பார்க்க அவளோ இவனை எள்ளலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். சின்மயைப் பார்த்த போது புன்னகையை உதிர்த்த முகம் இப்போது பாறையைப்போல இறுகியது.

சற்றுமுன் நடந்தது அவன் கண்முன் படமாய் விரிந்தது.

சித்தாராவைத் தாண்டி இருவரும் செல்ல எத்தனிக்க அவளின் சொடக்கு சத்தம்
சித்தார்த்தை நிறுத்தியது. சித்தார்த் திரும்பி ஒற்றைப் புருவத்தைத் தூக்கி
முறைத்தான். என்ன தைரியம் இருந்தால் தன்னை சொடக்கிட்டு அழைப்பாள் என்று கோபம் வந்தது அவளுக்கு.

“என்ன சொன்ன என்னை?” சித்தாரா கேட்டாள்.

முதலில் கூட வம்பு எதுவும் வேண்டாம் என்று நினைத்த சித்தார்த் அவள் திமிராகவும், தெனாவட்டாகக் கேட்கவும் அந்த இடத்தில் அவனது ஆண் என்ற
ஈகோ தலை தூக்கியது.

“நீயெல்லாம் ஒரு ஆளான்னு கேட்டேன்… உன்னை மொக்கை பிக்ர்னு சொன்னேன்… ” என்றான் அழுத்தமாக.

“நான் எப்படி இருக்கன்னு எனக்குத் தெரியும்… உன்னோட கமென்ட்ஸ் தேவையில்ல சரியா” என்றாள்.

“நீ எப்படி இருக்கன்னு உனக்கே தெரியுதுல்ல… அப்புறம் என்ன?” வேண்டுமென்றே சித்தார்த் அவளை கேலியாகக் கேட்க,

“டேய்! அவதார் மூஞ்சி நீ சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் குறைஞ்சிடுல”
அசராமல் திருப்பிக் கொடுத்தாள்.

“வாட்?”, “ஏதோ எனக்கு உன்னைப் பத்தி பேசறது மட்டும்தான் வேலைன்னு
நினைச்சியா?” சித்தார்த் கேட்க,

“கரெக்ட். உன்னோட வேலை என்னன்னு எனக்குத்தான் தெரியுமே?” கேலியாக
தூரத்தில் நின்றிருந்த சின்மயைப் பார்த்து சொன்ன சித்தாரா, “அப்புறம் என்
அக்காவைத் தவிர வேற வேலை ஏதாவது இருக்கா என்ன உனக்கு… சாரோட
ஆன்யுவல் இன்கம் என்ன?” கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு கேலியாக
அவள் கேட்க,

“நீ என்ன பண்ற? இந்தியால இருக்க அத்தனை பிசினஸும் மேடம் தான் கட்டி
மேய்க்கறீங்களோ” அவளிற்கு சற்றும் கேலி குறையாமல் சித்தார்த் கேட்டான்.
ரமணாவோ இருவரின் உரையாடல்களை மாறிமாறி என்ன பேசுவது என்று
தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ச்ச, அதுக்கு எல்லாம் உன்ன மாதிரி ஆளைத்தான் தேடிட்டு இருக்காங்க” என்றவள், “நான் ஃபேஷன் டிசைனர். அதாவது கோயம்பத்தூர்ல இருக்க எஸ்.எம்.கே.வியோட ட்ரெஸ் டிசைனர் அடுத்த வாரத்துல இருந்து” என்றாள் அவனை ஊடுருவும் பார்வையோடு.

அவள் சொன்னதைச் சித்தார்த்தாலே நம்பமுடியவில்லை. எஸ்.எம்.கே.வி
அவர்களின் கடை ஆயிற்றே. சொல்லப்போனால் அது கடை அல்ல கடல். அள்ள அள்ளக் குறையாத கடல் அவர்களின் கடை. கோவை, சென்னை, திருநெல்வேலி, மதுரை ஆகிய நகரங்களில் பிரபலமான ஜவுளிக்கடல் அது. அவர்கள் கடையில் எப்போதுமே ஒவ்வொரு விஷயத்திற்கும் தங்கள் கடையில் திறமை வாய்ந்த ஆட்களை வைத்து டிசைன், துணியின் தன்மை என அனைத்தையும் தேர்ந்தெடுப்பர். அதுவும் புதிதாக வேலைக்கு எடுக்கும் ஆட்களை, அவர்களின் திறமையை வைத்துத்தான் எப்போதும் எடுக்கப்படும். அதில் சிறந்தவரையே தேர்ந்தெடுக்கப்படும் என்பது அவன் அறிந்த உண்மையே. “இளைஞர்களை எடுத்தால் தான் இன்னும் துணிகளின் தன்மைக்கும், தரத்திற்கும், டிசைனிற்கும் வரவேற்பு இருக்கும். அவர்களின் புது யோசனைகளும் நமக்கு நன்மையே”
என்று தந்தை ஒருநாள் சொல்லிய நியாபகம் வந்தது அவனிற்கு.

சித்தார்த்தின் முகத்தில் ஈயாடவில்லை. “என்ன பதிலையே காணோம்?” சித்தாரா
கேட்க,

“எங்க கடைக்கு வேலைக்கு வரப்போறவ தானே நீ” சித்தார்த் எள்ளலாகக் கேட்க,

“உன் கடையா?” யோசிப்பதுபோல பாவனை செய்தவள், “அப்படி அந்தக் கடைல உங்க உழைப்பு எவ்வளவு இருக்கன்னு சொல்லுங்க சார் கேக்கலாம்” என்றாள் சித்தாரா. அவன் கொடுக்கும் ஒவ்வொரு அடிக்கும் திருப்பிக் கொடுக்கத் தவறவில்லை அவள்.

“அந்தக் கடைக்கு அடுத்த முதலாளி நான் தான் மறக்கவேண்டாம் மிஸ்.சித்தாரா”
அதிகாரமாக வந்தது சித்தார்த்தின் குரல்.

“இப்ப வரைக்கும் நீ வேலை இல்லாதவன் தான்… ஸாரி ஸாரி… வேலை இல்லாதவர் தான் பாஸ்” என்றாள். கடைசியாக பாஸ் என்ற வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தம் அவனை கொதிக்கச் செய்தது. அவள், ‘பாஸ்’ என்று வேண்டுமென்றே அழைத்து மட்டம் தட்டுகிறாள் என்று புரிந்தது அவனிற்கு.

“இதே என்ன மாதிரி சொத்தோட இருந்திருந்தா நீயும் இப்படித்தான் லைஃப் என்ஜாய் பண்ணியிருப்ப… உனக்கு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமிருக்கு. தட்ஸ் யுவர் ஸ்டாண்டர்ட்” சித்தார்த் மட்டம்தட்ட,

“யெஸ்… பட் தட் வில் பீ ஸ்டில் மை ஸ்டடிஸ்… உன்னை மாதிரி 25 வயசு வரைக்கும் சத்தியிருக்க மாட்டேன்” என்றவள், “இதெல்லாம் பேசி எவ்வளவு நாள் ஓட்டப் போற? அதுவும் சொந்தமா தொழில் ஆரம்பிச்ச உன் தாத்தாவே உன் அளவுக்கு பேசமாட்டாரு போல” என்றாள். அவன் மட்டம் தட்ட இவள் அவள் சொற்களால் அவனைக் கீழேபோட்டு மிதிக்கவும் தயங்கவில்லை.

“குட் லக் சித்தார்த். ஃபார் போத் மேரிட் லைஃப் அன்ட்… அன்ட்… பிசினஸ் லைஃப்”
என்று அங்கிருந்து அகன்றவள் சிறிது தூரம் சென்றபின், “டேய் சித்தார்த் பாஸ்…
என் அக்காவை முடிஞ்சா கல்யாணம் பண்ணிப்பாரேன்” என்று கண்ணை
அடித்தவள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து அகன்றுவிட்டாள். அவள் கடைசியாக சபதம் போல சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தையில் அவன் திகைத்தான்.

“மச்சி இந்தப் பொண்ணு செம க்யூட் டா” அருகிலிருந்த ரமணாவின் குரல் கேட்க,

“செருப்பு பிஞ்சிடும் உனக்கு” கிட்டத்தட்ட கத்தினான் சித்தார்த்.

“இல்லடா உண்மையா அந்தப் பொண்ணு உன்கிட்ட க்யூட்டா ‘டிங்’ன்னு கண்ணடிச்சா” என்றவனின் கழுத்தை சுற்றிக் கையைப்போட்ட சித்தார்த்
அவனது வயிற்றில் குத்தினான்.

“அவளே வில்லி மாதிரி பேசிட்டுப்போறா… உனக்கு க்யூட்டா தெரியுதா” அவனை
நான்கு குத்து குத்திவிட்டு விட்டவன், “இவளை மாதிரி ஆளையெல்லாம்…”
சித்தார்த் பல்லைக் கடிக்க,

“மச்சி! பழி வாங்கறன்னு ரேப்கீது பண்ணிடாதடா” ரமணா பதற,

“ச்சீ த்தூ… நல்ல புத்தியே வராதா உனக்கு… கண்ட கண்ட பழைய படத்தை
பாத்துட்டு வந்து நல்லா உளர்றது” என்றவன், “இவளை எல்லாம் தனியா
கூட்டிட்டுப்போய் நல்லா சாத்தணும்டா… அதை சொல்ல வந்தேன்… நீ உடனே
என்னை ஆன்ட்டிஹீரோ ஆக்கிட்ட” என்றான் சித்தார்த்.

“ஆனா மச்சா உனக்கு கோபம் வந்தாலும்… நீ பேசறது கொஞ்சம் காமெடியா தான்டா இருக்கு” ரமணா கேலி செய்ய,

“மச்சி இந்த ஊட்டில தான் உனக்கு என் கையால மர்கையான்னு என்னோட
ஏழாவது அறிவுல ப்ளின்க் ஆகுது… நீ என்ன சொல்ற?” கை சட்டையை மடக்கிவிட்டபடி சித்தார்த் கேட்க,

“மச்சான் நீ ஒரு டெரர்டா… உன்ன அடிச்சுக்க ஆளே இல்லடா” என்று அந்தர்
பல்டி அடித்த நண்பனைப் பார்த்து சித்தார்த் சிரிக்க, இருவரும் நடந்தபடியே
கோயிலை அடைந்தனர்.

எல்லாம் சித்தார்த்தின் கண்முன் ஒரு நிமிடத்தில் வந்துபோக ஒரு முடிவை
எடுத்தான். அவன் முடிவை எடுத்த நேரம் பொங்கலும் பொங்க கோயில் மணியும்
காற்றில் ஆடி ஓசையை எழுப்பியது.

‘அடடடா… என்ன நல்ல சகுனம்’ மனதிற்குள் நினைத்தவனிற்கு மீண்டும் ஆனந்தம் வந்து மனதில் ஒட்டிக்கொண்டது.

அனைவரும் பொங்கல் வைத்து சாமிக்கு வைத்துக் கும்பிட்டுவிட்டு எல்லோருமாய் உட்கார, எல்லோருக்கும் இலையில் பொங்கலை வைக்கத் தயாரானர் சொர்ணாம்பாள். “கண்ணு இங்க வாடா” சித்தாராவை அழைத்தவர், “நான் ஒவ்வொரு இலையில் வச்சுத்தரேன்… எல்லோருக்கும் தா” என்றார்.

“சரி பாட்டி” புன்னகைத்தபடி சொன்னவள் அவர் ஒவ்வொரு இலையாக பொங்கலை வைத்துத்தர ஒவ்வொருவருக்கும் தந்தாள். கடைசியாக சித்தார்த்திடம் சித்தாரா பொங்கலைத் தர, “யூ வில் கெட் டூ நோ அபௌட் மீ” என்றான் அழுத்தமாக.

அவனை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தவள், “என்ன சபதமா? இந்த வில்லனிஸம்லாம் ட்ரை பண்ணாத சகிக்கல” முகத்தை சுளித்து நக்கலாகக்
கூறியவள் தன் அன்னை அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளை முறைத்தவனிடம், “அந்த பொண்ணு உனக்கே எப்போ பல்ப் தரலாம்னு சுத்துது போல… நீயா போய் பல்ப் எரிய கரண்ட் வேற தர… அதான் செட் ஆகலைல, உனக்கு இந்த மோட்… அப்புறம் ஏன் மச்சி இந்தமாதிரி எல்லாம் ட்ரை பண்ற…” ரமணா பொங்கலை விழுங்கிக் கொண்டே பேச,

“நீங்க மூடலாம்” அவனைக் கடித்தான் சித்தார்த்.

“அதைதான் நானும் சொல்றேன்… நீ கொஞ்சம் பண்ணா அந்த பொண்ணுகிட்ட இருந்து தப்பிப்ப” என்றவனை சித்தார்த் பார்வையாலேயே எரிக்க,

“சித்து கண்ணா ஆ காட்டு” அவன் அருகில் வந்தமர்ந்த சொர்ணாம்பாள் அவனிற்கு தன் இலையில் இருந்த சர்க்கரை பொங்கலை ஊட்டினார்.

பேரன் வாயில் சர்க்கரை பொங்கலை அடைத்தவர், “ஏன்மா தேவி! எப்போ நம்ம
சின்மயிக்கு நல்லவரன் இருக்கு தெரிஞ்ச இடத்துல… நீங்க பார்க்க ஆரம்பிச்சா சொல்லுங்க” என்று அவர் சொல்ல சின்மயின் பார்வை சித்தார்த்தை சந்திக்க சித்தார்த்தின் பார்வையும் அவளை சந்தித்தது.

சரியாக கையைக் கழுவிக்கொண்டு வந்து சித்தார்த்தின் பின்னால் ராஜகோபாலன் உட்கார அவரின் பக்கம் அப்படியே பின்னால் சாய்ந்தவன்,
“தாத்தா! உன் பொண்டாட்டி என் வாழ்க்கைக்குப் பொங்கல் வச்சிடும் போல. ப்யூட்டின்னு கூட பாக்கமாட்டேன். உன்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிடுவேன்” என்று அவன் மிரட்ட,

“என்ன பேரான்டி ஏன் டென்ஷன்… கிழவி என்ன பண்ணா?” பேரனின் ஒரு பக்கத்
தோளில் கையைப் போட்டபடி அவர் கேட்க,

“என் ஆளா வேற யாருக்கோ கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்குது” சித்தார்த்
அவரைப் பார்த்து முறைப்பாகவும் பாவமாகவும் சொல்ல, “அவளை நான் பாத்துக்கறேன்… நீ என்ஜாய் பண்ணு பேரா…” என்றவர்,

“ஆமா அப்புறமா சொல்றேன்னு சொன்னியே பேரா எங்க போனேன்னு” அவர் கேட்டார்.

“அதுவா தாத்தா…” என்று தொடங்கியவன் அனைத்தையும் அவரிடம் கூறினான்.

“சூப்பர் சூப்பர்… இனி உங்க கல்யாணம் என் பொறுப்பு” வாக்களித்தார்
ராஜகோபாலன்.

“குட் கிரான்ட் ஃபாதர்! குட் கிரான்ட் சன்! டோட்டலி குட் பேமிலி” கையை சூப்பர்
என்பது போல ரமணா சைகை காட்ட மூவரும் ஒன்றாக சிரித்தனர்.

“என்ன ரகசியம் ஓடுது?” சொர்ணாம்பாள் உள்ளே வர,

“அது ஒன்னும் இல்ல பியூட்டி… உன்னோட ஹஸ்பன்ட்டோட எக்ஸ் லவ்வர் பத்தி
பேசுனோம்” சித்தார்த் வேண்டுமென்றே சொல்ல,

“என்னது?” அதிர்ந்தவர் கணவரைப் பார்க்க,

“இவனுக சொல்றதை நீதான் நம்பணும்… நாளைக்கே எனக்கு கல்யாணம்னு கூட
சொல்லுவாங்க சொர்ணு… இதெல்லாம் நம்புவியா சொர்ணு” அவர் ‘சொர்ணு’
என்று அழுத்தம் கொடுக்க அவரோ உருகினார். கொஞ்சம் வெட்கமும் வந்தது
அந்த 65 வயது பியூட்டிக்கு.

பாட்டி அந்தப் பக்கம் எழுந்து சென்ற பிறகு, “டேய் பசங்களா இதுல மட்டும்
விளையாடாதீங்க… அப்புறம் கிழவி அழுதான்னா சமாதானம் செய்யக்கூட
எனக்குத் தெம்பில்லை” என்றவரை பார்க்க இருவருக்குமே சிரிப்பு வந்தது.

அடுத்து மதியப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கத்தொடங்க சர்க்கரை பொங்கலை கோயிலுக்கு வரும் ஆட்களுக்கத் தர ஆரம்பித்தார் சொர்ணாம்பாள். அவர் எடுத்துத் தர சின்மயும் சித்தாராவும் அங்கிருப்போருக்குத் தர ஆரம்பித்தனர்.

மதியப் பூஜையின் அபிஷேகம் முடிந்து அம்மனை அலங்கரிக்க திரைச்சீலையை
மூட, அந்த வேளையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை. அம்மனின் கருவறை முன்னால் அனைவரும் அமர்ந்திருக்க அந்த அறை தந்த பரவசமும் கூடவே தீப எண்ணெய், திருநீர், சந்தனம், குங்குமம், பூக்கள், தேங்காய், ஆபிஷேகத்திற்கு வைத்திருந்த பொருட்கள், சுடர்விட்டுக் கொண்டிருந்த விளக்கு என அனைத்தின் நறுமணமும் அங்கு அமர்திருந்த அனைவரின் நாசியையும் தீண்ட, அனைவருரின் மனமும் ஒருவித இதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. 

ரேணுகா மகனிற்காக உருகி உருகி வேண்டிக்கொண்டிருந்தார். ‘அம்மா… நீதான் என் பையனுக்கு நல்ல வழியைக் காட்டணும்… அவனை எப்படியாவது தொழில்ல இறங்கிறதுக்கு ஒத்துக்க வச்சுரும்மா… ஒரே பையன் வாழ்க்கை நல்லா அமஞ்சிருச்சுன்னா கோயில் அடுத்த வருஷம் வர கும்பாபிஷேகத்துக்கு எல்லா செலவும் நாங்களே ஏத்துக்கறோம்’ கண்களை மூடியபடி அவர் வேண்ட,

‘என் பேரனை என் தொழில்ல உட்கார வச்சு… அவனுக்கு புடிச்ச பொண்ணையே
அவனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கணும்… இதுதான் என்னோட ஒரே ஆசை… அதை மட்டும் நிறைவேத்தி குடுத்திடுமா’ ராஜகோபாலன் ஒரு பக்கம் வேண்டினார். ராஜகோபாலன் குடும்பத்தாரின் அனைவரின் வேண்டுதலிலும் சித்தார்த் தான்.

ஆனால், சித்தார்த்தோ அம்மனிடம் வேண்டாமல் தன்னுடைய அடுத்த செயல்களை ஒவ்வொன்றாக அம்மனிடம் பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.
சின்மயும் கண்களை மூடி மனமுருக அம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தாள்.
அவளின் மூடிய கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்க்க சித்தார்த் அதைக்
கவனித்தான். சின்மயின் தோளைத் தொட்டுத் தனது கைகுட்டையை அவளிடம்
சித்தாரா தர, அதை வாங்கியவளோ கண்ணீரை மறைத்து சமாளித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

அக்காவின் முதுகில் ஆதரவாய் தட்டிக்கொடுத்த சித்தாரா அவள் காதில் எதையோ சொல்ல, ‘க்ளுக்’ என வந்த சிரிப்பை அடிக்கினாள் சின்மயி.

எதேச்சையாக சின்மயி சித்தார்த்தைப் பார்க்க அவளோ புன்னகையாய்
பார்த்துவிட்டு திரும்பிவிட்டாள். இதை எல்லாம் இவர்கள் பின்னால்
உட்கார்ந்திருந்ததால் முன்னால் அமர்ந்திருந்த பெரியவர்கள் கவனிக்க
வாய்ப்பில்லை. திரைக்கு பின் இருந்த அம்மனைத் தவிர.

சித்தார்த்தின் பார்வை தற்செயலாக சித்தாராவைப் பார்க்க அவளோ கையில்
இருந்து கற்கண்டை வாயில் ஒவ்வொன்றாக அடைத்துக் கொண்டிருந்தாள். அவன் பார்ப்பதை உணர்ந்தவள் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி நக்கலாக கண்களால்
புன்னகைக்க சித்தார்த் அவளை முறைத்தான்.

‘இவளிற்கு நம்மிடம் என்னதான் பிரச்சனை? எதுக்கு சவால் மாதிரி பேசுனா? மாதிரி என்ன சவாலேதான் அது. நானும் சின்மயும் சேர்றதுல இவளுக்கு என்னதான் பிரச்சினை’ யோசித்துக்கொண்டே இருந்தான். ‘ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சின்மயி நம்மிடம் எதற்கோ தயங்குகிறாள். சீக்கிரமே சொல்லிடனும் நம்ம மனசுல இருக்கிறத’ என்று சித்தார்த் முடிவு செய்ய கோயில் மணி அடித்து திரைச்சீலை விலகியது.

நல்ல சகுனத்தை உணர்ந்து சித்தார்த் புன்னகையுடம் எழ அனைவரும் எழுந்து
அழகே அருளாக சாந்தமாக புன்னகையுடன் இருந்த அம்மனை வழிபட்டனர். அனைவரும் வழிபட்டுக்கொண்டு வெளியே வர வீட்டிலிருந்தே செய்துவந்த வகைச் சாப்பாட்டை எடுத்தனர். அனைவரும் பேசியபடியே உண்ண ஆரம்பிக்க,

“சின்மயி அப்பா ஃபோன் பண்ணாரும்மா… நீங்க கோயில்ல வச்சு சொன்னனால அவருகிட்ட காலைல சாப்பிட்டு முடிச்சிட்டு சொன்னேன்… இன்னிக்கு சாயங்காலமே நம்ம சின்மயி ஜாதகத்தைத் தரேன்” தேவி சொர்ணாம்பாளிடம் சொல்ல உணவை விழுங்கிக் கொண்டிருந்த சின்மயிக்கு பொறை ஏறியது.

அவசரமாக தண்ணீர் பாட்டிலை எடுத்த சித்தார்த் அருகிலிருந்த பாட்டியிடம் தர
அவரோ சின்மயின் தலையை தட்டிவிட்டு, “பாத்துடா… இந்தா தண்ணியைக் குடி”
பாட்டிலின் மூடியை திறந்து தந்தார்.

“சரி தேவிமா, தாங்க… நல்ல நேரம் பாத்து அவங்களுக்குத் தரேன்” பாட்டி சொல்ல
சித்தார்த்தோ தனது தாத்தாவைப் பார்த்து, “தாத்தா…” என்று பல்லைக் கடித்தான்.

“நான் பாத்துக்கறேன்” அவர் கிசுகிசுக்க,

“தாத்தா என் லவ்வுக்கு எதாச்சும் ஆச்சு… உன் லவ்வரை கோயம்பத்தூர் கூட்டிட்டு
போயிடுவேன்” சித்தார்த் மிரட்ட,

“டேய் பாத்துக்கலாம்டா” ரமணா சமாதானம் செய்ய, “ஜாதகம் தானே தர்றாங்க… ஜாதகம் நம்ம ஜோசியர் கிட்டத்தான் போகும்… நான் பாத்துக்கறேன்” என்று நம்பிக்கை அளித்தார் ராஜகோபாலன். அவரும் இன்று ஒரு முடிவை எடுத்தார். மாலை வீட்டில் வைத்து பேரனிடம் தொழில் பற்றி பேசிவிடலாம் என்று முடிவுசெய்தார்.

மதிய உணவை முடித்துக்கொண்டு அனைவரும் காரில் ஏற, “அம்மு, நீ
தாத்தா வர வண்டில வந்திடு… நான் அக்கா ஜாதகமா பாட்டிக்கிட்ட பேசணும்”
என்று சொல்ல,

“ம்மா” என்று சிணுங்கினாள் சித்தாரா. ஒன்பது பேர் என்பதால் இரண்டு காரில்
வந்திருந்தனர். காலையில் வரும்போது தாத்தா, பாட்டி, சித்தார்த், ரமணா எல்லாம் தாத்தா வீட்டில் இருக்கும் காரில் வர… ரவிக்குமார், ரேணுகா, தேவி, சின்மயி, சித்தாரா என அனைவரும் சித்தார்த்தின் காரில் வந்தனர். இப்போது, அதுவும் அவனிடம் சண்டையிட்ட பிறகு அவளுக்கு அவள் அம்மா சொன்னது அதிர்வாக இருந்தது. பயம் இல்லை. சித்தார்த்துடன் வரவேண்டுமா என்று கசப்பாக இருந்தது.

“சொன்னாக் கேளு அம்மு” அன்னை அதட்ட பேசாமல் சென்று வெண்டோவின்
பின்னால் ஏறினாள் சித்தாரா.

முதலிலேயே காரின் உள்ளே அமர்ந்திருந்த ரமணா அதை கவனித்தான் தான். அன்னையும் மகளும் உரையாடியதை. சித்தாரா வந்து பின்சீட்டில் அமர்ந்தவுடன், “தம்பி, அம்மு உங்ககூட வரட்டும்… பத்திரமா கூட்டிட்டு வந்திடுங்க” தேவி ரமணாவிடம் சொல்ல அவனிற்கு சிறிது சிரிப்பு வந்தாலும், “சரி ஆன்ட்டி” என்றான்.

“ம்மா! நான் என்னக் குழந்தையா” என்று சித்தாரா அன்னையிடம் சிடுசிடுக்க,

“பர்ஸ்ட் காலைல எந்திரிக்கும் போது, ‘ம்மா’, ‘ம்மா’ன்னு கூப்பிடாம எந்திரி…
அப்புறம் உன்னை பெரியவன்னு ஒத்துக்கறேன்” மகளின் மூக்கை உடைத்தவர் முன்னால் இருந்த காரில் ஏற அதுவோ பறந்தது.

ரமணா கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குவதைக் கண்ட சித்தாரா, “இப்ப எதுக்கு சிரிப்பு?” என்று கேட்டாள்.

கழுத்தை மட்டும் திருப்பியவன், “நத்திங்” என்றான் கண்களில் சிரிப்போடு.

“எங்க அவன்?” சித்தாரா கேட்க,

“யாரு?” – ரமணா.

“அவன்தான் உன் பிரண்ட்”

“எதுக்கு கேக்கறே?” முன்னால் பாடலை மாற்றிக்கொண்டே கேட்டான் அவன்.

“அந்த உதவாக்கரை வந்துதானே கார் எடுப்பான்” முணுமுணுத்தபடி சித்தாரா
சொல்ல, “எது என் ப்ரண்ட்…” என்று கேட்டபடி ரமணா திரும்ப சித்தார்த் தான்
நின்றிருந்தான். அவளும் ரமணாவிற்கு நேர் பின்னே வலது பக்கம் அமர்ந்து,
வலதுபக்கம் தலையை திருப்பி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததால்
இடதுபக்கம் வந்து நின்ற சித்தார்த்தை கவனிக்கவில்லை.

“ஏய்! நீ ஓவரா போறடி” சித்தார்த் எச்சரிக்க,

“உன்னோட அளவுக்கு இல்ல” பட்டென்று பதில வந்தது அவளிடம்.

“சின்மயி தங்கச்சி… அந்த ஒரு காரணத்திற்காகத் தான் உன்ன சும்மா விடறேன்” சித்தார்த் எச்சரிக்க,

“அப்படியா பாஸ்… அப்படி ஒன்னும் எனக்குத் தேவையில்லை சரியா”.

அவளது பேச்சில் கடுப்பாகிய சித்தார்த், “மச்சி யார்ராரா இவ டார்ச்சர் பண்றா…
இவளை ஏன்டா கார்ல ஏத்துனே” என்று ரமணாவைக் கடிக்க,

“இல்லடா தேவி ஆன்ட்டி தான் உன் பாட்டிக்கிட்ட ஜாதகம் பத்தி பேசணும்னு
அந்த கார்ல ஒன்னா போயிட்டாங்க…” ரமணா கதை சொல்ல, கண்களை மூடி
கோபத்தை கட்டுப்படுத்தியவன், “இருக்கிற பிரச்சினை எல்லாம் என்ன
சுத்திதான் வருது… ச்சை” என்றவன் தலை முடியை அழுந்தக் கோதினான்.

“நான் உன் காரல் வரல…” காரை விட்டு இறங்கிய சித்தாரா நடந்து முன்னே செல்ல, “அய்யோ சாமி… யார்ரா இவ… எப்படித் தான் சின்மயிக்கு தங்கசிச்சியா
பிறந்தாளோ” பேசியபடியே முன்னே சென்றவன் அவளின் முன் சென்று நின்றான்.

“நில்லு… ஒழுங்கா போய் கார்ல ஏறு” என்று கட்டளையிட,

“நீ சொல்றதை எல்லாம் நான் கேக்க முடியாது” அவள் முன்னே நகரப்பார்க்க
அவனோ அவளை இடிக்காமல் அவளின் முன்னே நகர்ந்து நகர்ந்து தடுத்தான்.

“உன்னை உன் இஷ்டத்துக்கு அப்படியே போன்னு என்னாலையும் விடமுடியாது”
சித்தார்த் சொல்ல சித்தாரா அவனை நிமிரிந்து பார்த்து முறைத்தாள்.

“நான் ஒன்னும் பிரச்சினை இல்ல சரியா… என் அம்மா சொன்னதால தான் உன்கூட வந்தேன்” என்று சித்தாரா கோபமாகச் சொல்ல சற்றுமுன் அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தான்.

“இங்கபாரு நான் உன் அக்காவை லவ் பண்றேன்… அவ ஜாதகத்தை வேற எடுக்கறாங்க இப்ப. அந்த டென்ஷன்ல ‘பிரச்சனை’னு சொல்லிட்டேன் போய்
கார்ல ஏறு…” என்றவன், “உன்னை இப்படியே விட்டா உனக்கு இருக்க வாய்க்கு வீட்டுக்கு வந்திடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்… ஆனா, அங்க இருக்கவங்க கிட்ட என்னால பதில் சொல்லமுடியாது சரியா”, “ஸோ போய் கார்ல ஏறு” என்று அவன் சொல்ல சித்தாரா கற்சிலையாய் நின்றாள்.

அருகே வந்த ரமணாவும், “ஏங்க இவன் உங்களை மீன் பண்ணல… வந்து கார்ல
ஏறுங்க… தாத்தா வந்தா ஏன்னு கேப்பாரு” என்றான்.

“நீங்க சொல்றதுக்காக வரேன்… வேற எதுக்காகவும் இல்ல” என்றவள் சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்து, “ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு காரில் சென்று
அமர இரு ஆண்களும் கற்சிலைகளாய் நின்றனர்.

“மச்சாசா… இப்ப எதுக்குடா இந்த பொண்ணு ஆல் தி பெஸ்ட் சொன்னா?” குழப்பமாக ரமணா கேட்க,

“புரியலையா மச்சா… இவ என்கிட்ட போட்ட சபதத்துக்கு சொல்றா” என்றான்
சித்தார்த்.

காரின் பின்இருக்கையில் அமர்ந்திருந்து சித்தார்த்தின் பார்வையும் சித்தாராவின் பார்வையும் சந்தித்தது. சித்தாராவின் பார்வையில் முறைப்பில்லை. ஆங்காரம் இல்லை. பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. ஆனால், அவள் பார்வையில் இருந்ததை சித்தார்த்தால் அறியமுடியவில்லை.

சித்தார்த்-சின்மயி திருமணப் பேச்சு வரும்போது சித்தாராவின் இந்தப் பார்வை எப்படியிருக்கும்? யாரின் குடுமி யாரின் கையில் என்று அறியும்போது யார்யார் என்னாவார்களோ?