கிட்காட்-8

IMG-20210429-WA0013-6b402b1d

கிட்காட்-8

சித்தாரா சவால்விட்டது கண்முன் வர
அவளைப் பார்த்து கேலிப்பார்வையை
வீசியவன், “மச்சி பூனை குறுக்கால
வந்துடுச்சு பாரு… ரொம்ப பேட்
வைப்பரேஷன்டா… வா வீட்டுக்குப்
போயிட்டு தண்ணி குடிச்சிட்டு போலாம்”
என்று சித்தார்த் நண்பனிடம் பேச
சித்தாராவிற்கு அவன் தன்னைத் தான்
சொல்கிறான் என்று புரிந்தது.

“டேய் உதவாக்கரை… நீ பெரிய இவன்…
இப்ப நான் குறுக்கால வந்தனால
உன்னோட கோடி ரூபாய் பிசினஸ்
விழுந்திடாது சரியா?” என்று சித்தாரா
எகிற,

“ஏய்! யாருடி உதவாக்கரை” கோபத்தில்
சித்தார்த் அவளிடம் நெருங்க, “டேய் டேய்!
மச்சா” அவசரமாய்ச் சித்தார்த்தைத்
தடுத்தான் ரமணா.

“விடுடா ரொம்ப தான் ஆடுறா இவ”
சித்தார்த் கத்த,

“எதையும் நான் ஆரம்பிக்கவே இல்லை…
அப்புவம் சரி இப்பவும் சரி” என்றாள்
அவனை முறைத்தபடி.

“பர்ஸ்ட் ஔட் கிருஷ்” என்று உள்ளே
சத்தம் வர, “பை பாஸ்!” என்றுவிட்டு
உள்ளே ஓடினாள்.

“டேய், அவளை எப்போமே நீதான்
வம்புக்கு இழுக்கற… நீயும் அவளை
வம்பிழுக்காம இருக்க மாட்டிங்கறே…
அவளும் திருப்பி பேசாம இருக்க மாட்டிறா…” என்ற ரமணா, “மச்சி என்ன
இருந்தாலும் நாளைக்கு அவ உன்
கொழுந்தியாடா” நமட்டுச் சிரிப்புடன்
அவன் சொல்ல,

“ச்சீ, இவளை எல்லாம் சின்மயி
தங்கச்சியா என்னால அக்ஸப்ட்
பண்ணிக்கவே முடியலடா” என்றான்
சூடாக.

“சரி கூல்டா” என்றவன் பேச்சை வேறு
திசைக்கு மாற்ற இருவரும் கோயிலை
4:10க்கு அடைந்தனர். இருவரும் அந்தக்
கோயிலை அடைய அது செடிகொடி
மரங்களால் அழகாய் சூழப்பட்டிருந்தது.
மரங்களும் உயரமாய் எழுந்திருக்க,
மரங்களின் கிளைகள் எல்லாம் அழகாய்
படர்ந்து விரிந்து மேலே இருந்து வரும்
சூரிய ஒளியையே மறைத்திருந்தது.
ஆங்காங்கே கிடைக்கும் சிறுசிறு
வழிகளில் சூரியன் தன் ஒளிகளை நேர்
கோட்டில் உள்ளே வெளிச்சத்தைத்
தர, அந்தச் சூழலலே ரம்யமாக காட்சியளித்தது. எப்போதுமே அந்தக்
குளிருக்கு பழக்கப்பட்ட சித்தார்த்துக்கே
அந்த மரம் கொடிகள் அடர்ந்த சூழலில்
உடம்பில் குளிர் எடுத்தது. குளிரால்
கொஞ்சம் உடல் நடுங்க மூச்சை இழுத்து
உதட்டைக் குவித்து “உப்ப்ப்ப்ப்” என்று
அவன் ஊத குளிரின் தாக்கத்தில் அவன்
வாயிலிருந்து மிஸ்ட் புகையாய் வந்தது.

சுவெட்டர் அணிந்திருந்த ரமணாவிற்கும்
குளிர் எடுத்தது. இருவரும் உள்ளே
செல்ல அந்த சூழலிற்கு நடுவில் ஒரு
சிறிய பிள்ளையார் கோவில், ஒரு
கருவறை மற்றும் வெளியே மனிதர்கள்
நிற்க நான்கு தூண்கள் என
அமைக்கப்பட்டு அழகே உருவாக
காட்சியளித்தது. ஆங்காங்கே கோயில்
கட்டிடத்தில் பனியின் ஈரம் சொட்ட அதன்
நடுவில் நின்றிருந்தாள் சின்மயி அழகின்
உருவமாய்.

அவள் நிற்பதைக் கண்ட ரமணா, “மச்சி, நீ
போயிட்டு வா. நான் இங்க நிக்கறேன்”
என்று சொல்ல,

“சரிடா” என்று நகர்ந்த சித்தார்த்திடம்,

“ஆல் தி பெஸ்ட் மச்சி” ரமணா சொல்ல
புன்னகைத்தபடியே நகர்ந்தான்.

சித்தார்த்தின் காதலுக்கு ரமணாவிற்கு
படபடப்பாக இருந்தது. இயற்கையை
ரசித்தபடி நின்றிருந்தான்
ரமணா. அவன் அங்கிருந்த மரத்தின்
மேல் வெளிப்பாதையைப் பார்த்தபடி
நிற்க அவனுக்கு ஆர்வம் தாக்கியது.
அதுவும் நேரம் ஆகஆக அது தலை
தூக்கியது. அவன் தனது வாட்சைத் 
திருப்பிப் பார்க்க மணி 4:40ஐ காட்டியது.

“அரைமணி நேரமாவாடா லவ்வை
சொல்லுவீங்க” மனதிற்குள்
நினைத்தவன் திரும்பிப் பார்க்க அங்கு
தெரிந்த காட்சியில் அவன் திகைத்தான்.
சின்மயி சித்தார்த்தின் ஒரு கையைப்
பிடித்து, விட்டால் அழுதுவிடுவது போல
பேசிக்கொண்டிருந்தாள்.

ரமணா அங்கே செல்லலாமா வேண்டாமா
என்று மனதிற்குள் நினைத்து நினைத்து
கடைசியில் அவர்களை நோக்கிச்
சென்றான். அவன் போகும் போதே
அவர்கள் பேசுவது கேட்டது. “சித்து,
உன்னை நம்பித்தான் இருக்கேன்… விட்ற
மாட்டில சித்து” அவள் சித்தார்த்தின்
கைகளைப் பிடித்தபடிக் கேட்க,

“நான் பாத்துக்கறேன் சின்மயி” சித்தார்த்.

“ஆனா சித்து இந்த விஷயம்…” சின்மயி
ஆரம்பிக்க,

“என்னை நம்பு சின்மயி… நான்
இருக்கேன் சரியா… நான் உடனே தாத்தா
கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு
பண்றேன்… நோ வொரிஸ்… நீ பர்ஸ்ட்
அழுகறத நிறுத்து” என்றான்.

“அப்ப எங்க வீட்டுல…” சின்மயி ஆரம்பிக்க,

“எல்லாம் தாத்தாவை வச்சு பேசிக்கலாம்”
என்றான் உறுதியாக.

“மச்சி வாட் இஸ் ஹாப்பனிங்? ஏன்
அழறாங்க?” ரமணா வினவ,

“நான் சொன்னா கேக்க மாட்டிறாடா…
ஆக்சுவலி பொண்ணு அழக்கூடாது… நாங்கதான்
கல்யாணத்தை நினைச்சு அழணும்” பெருமூச்சைவிட்டு சித்தார்த் சொல்ல,

“போ சித்து” என்றவளின் பால் முகம்
சிவந்தது வெட்கத்தில். சில நொடியில்
அவள் முகம் குழப்பத்திற்குப் போக
சித்தார்த்தை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் கண்களில் சித்தார்த்தின் மேல்
அவ்வளவு ஒரு நம்பிக்கை தெரிந்தது.
அந்த நம்பிக்கையும் அவன் அவளுக்குத்
தந்ததுதான்.

“நீ உன் வீட்டுல எது கேட்டாலும் ஆமான்னு
சொல்லு சின்மயி. நான் பாத்துக்கறேன்”
என்று வாக்களித்தான்.

ரமணாவும் சித்தார்த்தும் வீடு திரும்ப
சித்தாரா இன்னும் விளையாடிக்கொண்டு
இருப்பது அவன் வீட்டுக் காம்பவுண்டில்
இருந்து பார்த்தபோதே சித்தார்த்திற்கு
தெரிந்தது. ஏதோ உறுத்தத் திரும்பியவள்
சித்தார்த்தைக் கண்டாள்.

சித்தார்த்திடம் வழக்கம்போல ஒரு
ஏளனப் பார்வையை அவள் வீச, சித்தார்த்
அவளை அளந்து சிரித்த சிரிப்பில் அவள்
குழம்பினாள். அவளின் மேல்
பார்வையைப் பதித்தவன் ஏதோ ஒன்றை
சாதித்தது போல புன்னகைத்தபடியே
அவன் வீடு வரை சென்றான்.

உள்ளே சித்தார்த்தும், ரமணாவும் நுழைய
அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.
“அடடே வாங்க பசங்களா… வந்து டீயை
எடுத்துக்கங்க” என்று பாட்டி அழைக்க
இருவரும் டீயை எடுத்துக்கொண்டு
அமர்ந்தனர்.

“எங்க போனீங்க இரண்டு பேரும்”
ரேணுகா மகனிடம் கேட்க,

“சும்மா ம்மீ. பக்கத்துல வரைக்கும்”
என்றவன் தன் தாத்தாவைப் பாரக்க
அவரோ, ‘ஆரம்பிக்கலாமா’ என்பது
போல் புருவத்தை ஏற்றி இறக்கினார்
யாரும் அறியாமல்.

கண்களை ‘டன்’ என்பது போல மூடித்திறந்தவனிடம் அப்படி ஒரு இருமாப்பு.

மனதிற்குள் பேரன் போய் வந்த விஷயம்
வெற்றிதான் என்பதை மனதிலேயே
கணக்கிட்டவர், “ம்கூம்… சித்தார்த் உன்
கூட கொஞ்சம் பேசணும்பா” என்றார்
கறாராக. அவர் சித்தார்த் என்றதே
அனைவருக்கும் அவர் பேரனை மிரட்டும்
தொணியில் பேசப்போகிறார் என்றது.
ஆனால், அதை முன்னமே அறிந்திருந்த
இளவட்டங்களுக்கு சிரிப்பு வரவா என்று
எட்டிப்பார்க்க சிரமப்பட்டு அடக்கினர்.

“சொல்லுங்க தாத்தா” என்றான்.

“நீ நம்ம கடையை
பொறுப்பேத்துக்கணும்பா” கட்டளையாகச்
சொன்னார் அவர்.

“ஏன் தாத்தா. இவ்வளவு நாள் சொல்லாம
திடீர்னு சொல்றீங்க?” தாத்தாவைப்
பார்த்துக் கேட்டவன்,

“ஏன் ம்மீ… நீங்க ஏதாவது
சொன்னீங்களா?” என்று அன்னையைப்
பார்த்துக் கேட்டான்.

“எனக்கு வேற வேலை இல்லையா
சித்தார்த்” அவர் சமாளிக்க,

“அப்படியா இருந்தா சொல்லிடுங்க ம்மீ…
நான் இனிமேல் பாரமாக
இருக்கமாட்டேன்” என்றான் சித்தார்த்.
மகனின் பதில் தாய் தந்தையருக்கு
சுருக்கென்று இருந்தது. மகனிடம் தாமே
பேசியிருக்க வேண்டுமோ என்று
நினைக்க வைத்துவிட்டான் சித்தார்த் தன்
பேச்சில்.

பேரனை மனதிற்குள் மெச்சினார்
ராஜகோபாலன். பெற்றோரே என்றாலும்
தன்னுடைய தன்மானத்தை சற்று
சீண்டியதிற்கு ஒரு கொட்டு
வைத்துவிட்டானே அவன். அவரே
நினைத்தார் தான், ‘ஏன் சித்துவிடம்
இவர்களே பேசக்கூடாது. எந்த ஒரு
பிரச்சனையாக இருந்தாலும் ஒருவரை
நடுவில் உட்காரவைத்து சுற்றி நான்கு
பேர் அறிவுரை தந்தால் வெறுப்பாக
இருக்காதா’ என்றுத் தோன்றியது
அவருக்கு. ஆனால், பேரனின்
எதிர்காலமும் கண்முன் வந்தது. அவனை
எப்படியாவது நோகடிக்காமல் வழிக்கு
இழுக்கவேண்டும் என்று எண்ணினார்.
சின்மயின் காதல் அவருக்குக் கை
குடுத்தது. அதை வைத்து பேரனிடம்
பேசினால் அவன் வழிக்கு வருவான்
என்பதைவிட புரிந்துகொள்வான் என்று
அவர் நம்பினார். அதனால்தான்
மெதுவாக காய்களை நகர்த்தினார்.
இருந்தாலும் மகன் மருமகளையும்
விட்டுத்தர முடியவில்லை அவரால்.

“சித்தார்த்… நீ நான் கேட்டதுக்கு பதில்
சொல்லுப்பா… நீ பொறுப்பு எப்ப
ஏத்துக்கறே?” என்று கேட்டார்.

“தாத்தா நான் நம்ம கடையில பொறுப்பு
ஏத்துக்கறேன். ஆனா, எனக்கும் சுயமா
நிக்கணும்ன்னு இருக்கு”, என்றவன்
அனைவரையும் கூர்மையான பார்வை
பார்த்தான். அதில் தன்னம்பிக்கை
மிதமிஞ்சி வழிந்தது. “தாத்தா! அப்பா!
எனக்கு சொந்தமா டீ தூள் ப்ராடக்ட்
மார்க்கெட்டுக்கு கொண்டு வரணும்னு
ஆசை. அதுவும் சவுத்இந்தியா ஃபுல்லா”
என்று அனைவரின் முன்னால் தன்
நீண்டநாள் கனவை வெளிப்படுத்தினான்.
பின், அதற்காகத் தானே அவன் ஃபுட் டெக்னாலஜி எடுத்துப் படித்தது.

“அது மாதிரி நிறைய இருக்கே சித்தார்த்.
அதுக்கு நிறைய ப்ராசஸ் இருக்கே?”
ரேணுகா பேச,

“நான் ஒரு வருஷமா சும்மா ஊட்டி வரலை
ம்மீ. நான் இங்க ரொம்ப நாளா
மூடியிருக்க ஒரு பேக்டரியை லீஸுக்கு
எடுக்கப் போறேன்”, “அன்ட் ஐ நோ தி
ப்ராசஸ் டூ. நான் வெறும் நார்மல் டீ பவுடர்
தரப்போறது இல்லை. ஏலக்காய் டீ, இஞ்சி
டீ, க்ரீன் டீ, ஹைபிஸ்கஸ் டீ இது எல்லா
ப்ளேவர்ஸும் டீயிலேயே ஆட் பண்ணி
தரப்போறேன். ஐ நோ தி ப்ராசஸ் அன்ட்
மை ஸ்பெஷல் ஃபார்முலா டூ” என்றான்.
அவன் பேசிய ஒரு இடத்தில் கூட
தயக்கமும் இல்லை. தடுமாற்றமும்
இல்லை.

“ரமணா நீ என்னப் பண்ணப்போற?”
தாத்தா கேட்க,

“நானும் அப்பா பிசினஸ் பாத்துட்டு…
சித்தார்த் கூடத்தான் தாத்தா டீ ப்ராடக்ட்
பண்ணப்போறேன். அதாவது சித்தார்த்
பார்முலா வச்சிருக்கான். நான் பார்ட்னர்
அன்ட் வெளில மார்க்கெட்டுக்கு
போறதைப் பாத்துப்பேன்” என்றான்
அவனும் தெளிவாக. நம்முடன் சேர்ந்து
விளையாட்டு செய்யும் பையன்கள்
இப்போது பேசவில்லை என்று
தோன்றியது அவருக்கு.

“நான் நம்ம தொழிலையும் கத்துக்கறேன்…
டீ ப்ரொடக்ஷனையும் இங்க இருந்து
பாத்துக்கறேன்” என்றான் சித்தார்த்
முடிவாக.

“சரி சித்தார்த். அப்ப எனக்கும் ஒரு
கண்டிஷன்” என்றார் ராஜகோபாலன்.

“சொல்லுங்க தாத்தா”

“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு
நான் நினைக்கிறேன்” என்று அவர்
சொல்ல சித்தார்த் அதிர்ந்த மாதிரி
நடித்தானோ இல்லியோ ரவிக்குமார்,
ரேணுகா, சொர்ணாம்பாள் எல்லோரும்
அதிர்ந்தனர்.

“அப்பா! அவன் சின்னப் பையன்”
என்றார் ரவிக்குமார்.

“சின்னப்பையனை தான் தொழில்
கத்துக்க கூப்பிடறியா?” தாத்தா நக்கலாக
வினவ,

“இல்லப்பா. அவனுக்கு கல்யாண வயசு
இல்லியே?” என்று மீண்டும்
தயங்கியபடியே ரவிக்குமார் சொல்ல,

“ஆமாங்க. சித்து சின்னவயசு தானே?”
மகனிற்கு சப்போர்ட்டிற்கு வந்தார்
சொர்ணாம்பாள். ரேணுகா மட்டும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்.

“அப்ப உனக்கு எனக்கும் கல்யாணம்
ஆகும்போது என்ன வயசுன்னு ஞாபகம்
இருக்கா சொர்ணம்?”, “நீங்க என்ன
நினைக்கறீங்கன்னு புரியுது. இந்தக்
காலத்துப் புள்ளைங்க நம்மைவிட
சாமர்த்தியம் அதிகம். அதுவும் என்
பேரனுக்கு அது ரொம்பவே ஜாஸ்தி”
என்றவர்,

“சித்து ஜாதகம் இங்கதானே இருக்கு.
இந்த நாலு மாசத்துக்குள்ள
கல்யாணத்தை முடிக்கச் சொல்லி
இருக்காரு நம்ம ஜோசியக்காரர்.
இல்லைனா முப்பத்தி இரண்டு
ஆகிடுமாம்” என்று அவர் சொல்ல
திக்கென்றது அனைவருக்கும்.

ரமணாவோ, ‘மனுஷன் என்னமா
யோசிக்கறாரு. தாத்தா நீ எப்படி பாட்டிய
கரெக்ட் பண்ணினன்று தெரிஞ்சிடுச்சு’
மனதிற்குள் நினைக்க, சித்தார்த்தோ
தாத்தா சரியான ரூட்டில் போவதை
நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

“அப்பா, ஆனா அவன் கொஞ்சமாவது
தொழில் கத்துக்கணுமே?” ரவிக்குமார்
சொல்ல,

“டேய் அதெல்லாம் யோசிக்காம
இருப்பனா? வர்ற புதன்கிழமை உறுதி
வார்த்தை வச்சிக்கலாம். அடுத்த வாரம்
நிச்சியம் வச்சுக்கலாம். இரண்டு
மாசத்துக்கு அப்புறம் கல்யாணம்
வச்சிடலாம்” என்று தாத்தா முடிவாகச்
சொல்ல,

“அப்போ தாத்தாவும் பேரணும்
பொண்ணை முதலே பாத்து வச்சாச்சு
போலையே?” சரியாக சமயம் பார்த்து
பேச்சினுள் புகுந்தார் ரேணுகா.

“ஆமா” என்றார் ராஜகோபாலன்
மிடுக்காகவே. ஊட்டி வரும்போது இருந்த
சின்ன சந்தேகம் இப்போது ஊர்ஜிதம்
ஆனது ரேணுகாவிற்கு.

“நம்ம கேசவனோட பொண்ணு சின்மயை
நம்ம சித்தார்த்திற்கு பாக்கலாம்” என்றார்.

ரவிக்குமாரும் ரேணுகாவும்
சித்தார்த்தைப் பார்க்க, “தாத்தா சொல்றது
எனக்கு ஓகே. இந்தக் கல்யாணத்துக்கு
நானும் ரெடி” என்றான்.

“சித்தார்த் உனக்கு சின்மயை
பிடிச்சிருக்கா?” ரவிக்குமார் நேரடியாகக்
கேட்க,

“நான் கல்யாணத்துக்கு ஓகே
சொன்னதுலையே தெரியலையா?”
என்று கேட்டான் சித்தார்த் ஷோபாவில்
நன்றாக சாய்ந்தபடி.

மருமகளின் முகம் யோசனையில்
இருப்பதைக் கண்ட ராஜகோபாலன்,
“இல்ல மாமா…” என்று ரேணுகா இழுக்க,

“ஜாதி, அந்தஸ்து இதெல்லாம்
பாக்காதமா. நமக்கு சித்து
சந்தோஷத்தைத் தவிர வேற எதுவும்
முக்கியமில்ல” என்று பெரியவர் தன்
கருத்தை எடுத்து முன் வைத்தார்.
அவருக்குத் தெரியும் மருமகளைப் பற்றி.
சாதுவான குணம்தான். ஆனால், சிறிய
வயதில் இருந்தே பணச்செழிப்பிலும்
சமூகத்தின் கட்டுப்பாட்டிலும் வளர்ந்தவர்.
அதற்கு என்று ஜாதி வெறி உள்ளவர்
இல்லை ரேணுகா. மகனிற்கு தன்
சொந்தத்தில் பார்க்க வேண்டும் என்று
எண்ணியிருந்தார். அவ்வளவே.
மருமகளின் எண்ணம் புரிந்திருந்த
ராஜகோபாலன் எடுத்துச்சொல்ல அவர்
சரியென்று தலையை ஆட்டினார்.

“சித்தார்த், நீ இங்க இரு. நாங்க போய்
பேசிட்டு வரோம்” என்று ரவிக்குமார்
சொல்ல,

“ம்ம்” என்றவன் வேறெதுவும்
பேசவில்லை. என்றுமில்லாத அதிகபட்சத்
தெளிவை அவனிடம் கண்டனர்
அனைவரும்.

“சின்மயை எங்க வீட்டுக்கு குடுக்கிறதுல
தயக்கம் எதாச்சும் இருக்கா?”
யோசித்தபடி அமர்ந்திருந்த கேசவனிடம்
கேட்டார் ராஜகோபாலன்.

மாலை வீடு திரும்பி கேசவனிடம் தேவி
ஜாதகம் பற்றிப் பேச, இருவரும்
ராஜகோபாலன் அய்யாவிடம் அவளது
ஜாதகத்தைத் தந்துவிடலாம் என்று முடிவு
செய்து அவர்கள் வீட்டிற்குக் கிளம்ப
அவர்களே அங்கு வருகை தந்தனர்.
இன்முகத்துடன் வரவேற்று உட்கார
வைத்து உபசரித்தனர். வந்தவர்களிடம்
ஜாதகத்தைப் பற்றிப் பேசும்போது
ராஜகோபாலன் விஷயத்தை பட்டென்று
உடைத்தார். சித்தார்த்தை கேசவன்
அவ்வளவாகப் பார்த்தது இல்லை.
ஆனால், மனைவி சொல்லிக்
கேட்டிருக்கிறார். இருந்தாலும்
அவர்களின் வசதி அவரை யோசிக்க
வைத்தது.

அதனால் தான், “சின்மயை எங்க
வீட்டுக்கு குடுக்கிறதுல தயக்கம் எதாச்சும்
இருக்கா?” என்று பெரியவர் கேட்டார்.

“அப்படி எதுவும் இல்லிங்க. உங்க
குடும்பத்துல தர சந்தோஷம்தான். ஆனா,
உங்க வசதி அளவுக்கு என்னால
செய்யமுடியாது” என்று
வெளிப்படையாகச் சொன்னார்.

“உங்கனால முடிஞ்சதை சின்மயிக்கு
பண்ணுங்க. நாங்க எதுவும் எதிர்பாக்கல.
நீங்க பொண்ணை எங்களை நம்பி
அனுப்புங்க” என்று ரவிக்குமார் சொல்ல,
மனைவியைத் திரும்பிப் பார்த்தார்
கேசவன். தேவி வந்த நல்ல வரனை விட
மனமில்லாமல் கண்களாலேயே
கணவரிடம் பேச கேசவன், “எங்களுக்கு
சம்மதம்” என்று தெரிவித்தார்.

“அப்ப உறுதி வார்த்தை புதன்கிழமை
வச்சிடலாமா?” ராஜகோபாலன் கேட்க
சின்மயும் சித்தாராவும் உள்ளறையில்
இருந்து வெளிப்பட்டனர்.

சித்தார்த்திற்கு ஃபோன் செய்ய அடுத்த
இரண்டு நிமிடத்தில் அவன் ரமணாவுடன்
அங்கிருந்தான். “எங்க சொந்தம்லாம்
வந்தா ரொம்ப கேள்வி கேப்பாங்க. ஏன்
வேற இடத்துல குடுக்கிறேனு. தேவை
இல்லாமல் பேசுவாங்க. அதுனால,
ரொம்ப நெருங்குனவங்களை கூப்பிட்டு உறுதி வார்த்தையை மட்டும் நம்ம
வீட்டிலேயே வச்சிடலாம்.” கேசவன்
சொல்ல, அதே நிலையில் நான்
இருந்தனர் ரவிக்குமாரும் ரேணுகாவும்.
அதனால், சரி என்று தலையை ஆட்டினர்.

சித்தார்த் சின்மயைப் பார்க்க அவளோ
தன் விழிகளைத் தாழ்த்தினாள்.
நிமிர்ந்தவளின் கண்களில் புன்னகையும்
சிறிது பயமும் இருந்தது. தன் இடது கை
மேல் வலது கையை வைத்து இரு
கைகளையும் ஒன்றாய் சேர்த்தவன்
தைரியமாய் இரு என்பதுபோல சைகை
செய்ய அதில் நிம்மதி சற்று நிம்மதி
அடைந்தவள், அவனைக் கண்டு
தெளிவாய் புன்னகைத்தாள். அவளது
கன்னங்களில் செம்மை பரவி நாணமும்
வந்து சேர்ந்தது அவளது திருமணத்தை நினைத்து.

சித்தார்த்தின் பார்வை சித்தாராவின்
மேல் விழுந்தது. சின்மயி பின்னால்
நின்று அவனை அளந்து
கொண்டிருந்தாள் தன் கூரிய
பார்வையால். அவளது கன்னங்களோ
கோபத்தில் சிவந்திருந்தது. கண்களை
சுருக்கி அவளைப் பார்த்து சித்தார்த்
போலியாய் பாவப்பட, அவளின்
மூக்கிலிருந்தோ ஊட்டி ரயில் வண்டியின்
புகையைவிட இருமடங்கு புகை வந்தது.
கூடவே அவளுக்கு தலையில் இரண்டு
சிவப்புக்கொம்பு வைத்துப்
பார்த்தவனுக்கு சிரிப்பு வர கையை
வைத்து மறைத்தான்.

எல்லாம் சுமுகமாக பேசி முடிக்கபட
வருகிற புதன் உறுதி வார்த்தை பேச
முடிவுசெய்யப்பட்டது. வீட்டிற்கு
அனைவரும் திரும்ப சித்தார்த் தன்
ஃபோனை எடுத்து, “ஹாப்பியா?” என்று
சின்மயிக்கு அனுப்பினான்.

“தேங்க்ஸ்” பதில் வந்தது அவளிடமிருந்து.

“நமக்குள்ள தேங்க்ஸா?” சித்தார்த்
அனுப்ப,

“சரி வேணாம்” சின்மயி அனுப்ப,

“ஆமா, உன்னோட சீக்ஸ் ஏன் ப்ளஷ் ஆச்சு
உங்க வீட்டுல?” சித்தார்த்
வேண்டுமென்றே அனுப்ப,

“தெரியாத மாதிரி கேக்காத சித்து” என்று
நாக்கைத் துருத்திக்கொண்டு இருக்கும்
ஸ்மைலியை அனுப்பியவள், “பை, அம்மா
கூப்பிடறாங்க” என்றனுப்ப, சித்தார்த்
புன்னகையோடு அதைப் பார்த்தவன்
தாத்தாவை நாடிச் சென்றான்.

அம்மா, பாட்டி எல்லாம் சமையலறையில்
இருக்க தாத்தாவைத் தேடி அவர்
அறைக்குச் சென்றான் சித்தார்த்.

ரமணாவும் தாத்தாவும் ஏதோ பேசிக்
கொண்டிருக்க அவர்கள் அருகில்
சென்றான். “என்னப்பா ரமணா ஏதேதோ
சொல்றான். எல்லாம் உண்மையா?”
என்று தாத்தா வினவ, ‘ஆமாம்’ என்றபடி
தலையை மட்டும் ஆட்டினான்.

“தாத்தா, இதை பெருசு பண்ண
வேணாம்னு தோணுது. உங்ககிட்ட
மறச்சது தப்புதான் தாத்தா. ஆனா எதுக்கு
மறச்சேனா…” என்றவன் அடுத்தடுத்து
சொன்னதில் அவர் அதிர்ந்தார்.

“சரியா வருமாப்பா?” அவர் கேட்க,

“கண்டிப்பா வரும் தாத்தா. நீங்க
கவலையே படவேண்டாம். உங்க பேரன்
கல்யாணம் எந்த தடையும் இல்லாம
நடக்கும்” என்றவன் இன்னும் தாத்தா
குழப்பத்திலேயே இருப்பதைக் கண்டு,
“இது ரமணா மேல சத்தியம்” என்று
ரமணாவின் தலையில் அடித்தான்.

“டேய்! டேய்!” என்று ரமணா அலற
தாத்தாவிற்கோ சிரிப்பு வந்தது.
“கவலைப்படாதேடா தடியா. பேரன்
நினைச்சதை முடிப்பான்” என்று அவர்
சொல்ல,

“ம்கூன். என்னைய வச்சே செக்
பண்ணுங்க” என்று அவன்
நொடித்துக்கொள்ள தாத்தாவிற்கும்
பேரனிற்கும் சிரிப்பு வந்தது.

அதற்குள் வர்ஷினியிடம் இருந்து
ஃபோன் வர சித்தார்த்தும் ரமணாவும்
தாத்தாவிடம் சொல்லிக்கொண்டு தங்கள்
அறைக்கு விரைந்தனர். உறுதி
வார்த்தைக்கு தன் நண்பர்களை அழைக்க
விரும்பினான் சித்தார்த். பின் அவர்கள்
இல்லாமல் எப்படி?

ஃபோனை எடுத்தவன் வர்ஷினியிடம்
விஷயத்தைச் சொன்னான்.

தேவி வீட்டில் செய்திருந்த இனிப்பை
சின்ன மகளிடம் கொடுத்தனுப்ப அங்கு
வந்த சித்தாரா ரேணுகாவிடம்
இனிப்பைத் தந்தாள். சிரித்த முகத்துடன்
அவளிடம் இனிப்பை வாங்கியவர்
அவளிடம் இங்கிருந்த குலோப் ஜாமுனை
கொடுத்தார்.

“ஆன்ட்டி ஒரு டவுட்” சித்தாரா கேள்வியில்,

“கேளு சித்தாரா”

“உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா
ஆன்ட்டி” அவள் நேராகக் கேட்க அவர்
தடுமாறினார். அவள் முகத்தில்
வருத்தமோ எதுவுமே இல்லை. சும்மா
தெரிந்துகொள்வதற்காக கேட்டாள்.

“ஏன் இந்தக் கேள்வி சித்தாரா?”

“அக்காகிட்ட நல்லா பேசறீங்க. ஆனா
என்னை பாத்தாலே என் பக்கம்
திரும்பறது இல்லை நீங்க. அதான்
பயமோ என்னமோ என்கிட்டேனு
கேட்டேன்” அடுப்புத்திட்டில் விரல்களால்
தாளமிட்டபடி கேட்க, அவள் கேட்ட
விதத்தில் அவருக்கு சிறிது சிரிப்பு
வந்தது.

“அப்ப இனிமேல் டெய்லியும் இங்க வா…
இரண்டு பேரும் பேசலாம்” என்று
ரேணுகா சொல்ல, குலோப் ஜாமுன்
டப்பாவை கையில் எடுத்தவள், “எனக்கு
வேலை இருக்குபா… நீங்க உங்க
வருங்கால மருமக கூடையே பேசிக்கங்க…
உக்கூகூம்” என்று சிலிர்த்தவள்
சிரித்தபடியே வெளியே வந்தாள்.

வீட்டிற்குச் செல்லத் திரும்பியவளை
சித்தார்த்தின் குரல் கலைத்து. “லவ்
பண்றேனு சொல்றா மச்சி” சித்தார்த்
ரமணாவிடம் சொல்ல,

“இப்ப வந்து சொல்றாளே.
கோயம்பத்தூர்ல இருக்கும் போது
சொன்னா என்ன?” ரமணா சலிக்க,

“இப்ப என்ன சொல்லலாம் வர்ஷி கிட்ட”
சித்தார்த் கேட்க,

“அவளை முதல்ல இங்க கிளம்பி
வரச்சொல்லு. நான் பேசிக்கறேன்”
என்றான் ரமணா.

இதைக் கேட்ட சித்தாராவிற்கு
‘திக்’கென்றது. ‘இருடா உன்னை’ என்று
மனதிற்குள் கருவியவள் வீட்டிற்கு
சென்று முதல் வேலையாய் சின்மயிடம்
அனைத்தையும் சொன்னாள்.

“அக்கா அவனை நம்பாதே… எனக்கு
எல்லாம் தெரியும்” என்றாள்.

“என்ன தெரியும்?” என்று சின்மயி கேட்க
அவளிடம் சித்தாரா கேட்ட கேள்வியில்
அவள் மௌனமானாள்.

“அம்மு, நீ இந்த விஷயத்துல தலையிடாம
இரு” என்றாள் சின்மயி. ஆனால், அவள்
மனதில் சுருக்கென்ற வலி ஏற்பட்டது
தங்கை கேட்ட கேள்வியில்.

புதன்கிழமை வர கேசவன் வீட்டிற்கு
நல்லநேரம் பார்த்துச் சென்றனர்
அனைவரும். சித்தார்த் நண்பர்கள் ஐந்து
பேரைத் தவிர வேறு யாரையும்
அழைக்கவில்லை. கேசவன் வீட்டிலும்
கேசவனது அன்னை தந்தை மட்டுமே.

அனைவரையும் வரவேற்று கேசவன்
குடும்பம் உபசரிக்க, தேவி சின்மயை
அழைக்க உள்ளே செல்ல எல்லோரும்
அமைதியாய் வரவேற்பறையில்
அமர்ந்திருந்தனர்.

உள்ளிருந்து வெளியே வந்த தேவி,
“என்னங்க, சின்மயை காணோம்” என்று
அவர் வரவேற்பறையில் வந்து
பதட்டத்தில் அழ அனைவரும்
அதிர்ச்சியின் உச்சிக்கே செல்ல,
சித்தார்த்தோ வில்லிலிருந்து புறப்பட்ட
அம்பின் வேகத்தின் அதிர்ச்சியில்
எழுந்தான்.