கிய்யா – 1

kiyya-1

கிய்யா – 1

கிய்யா – 1

“எஞ்சாய் எஞ்சாமி… வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

அம்மா ஏ அம்பாரி… இந்தா இந்தா மும்மாரி…”

சென்னையில் ஆதம்பாக்கம் முழுவதுமே கேட்கும் அளவுக்கு அலைபேசியின் அலாரம் அலறியது. அந்த சத்தத்தில் தன் உடலை பெரிதாக அலட்டி கொள்ளாமல் மெல்லமாக  திரும்பிப்படுத்தாள் அந்த இளம்பெண்.

       அழகாய் திருத்தப்பட்ட புருவம். கண்கள் மூடி இருந்தாலும், அவள் விழிவடிவை எடுத்துக்காட்டிய இமைகள். வெல்லத்தின் நிறத்தில் மேனி. நானும் தித்திப்பு தான் என்ற செவ்விதழ்கள். என் மனமும் இனிமை தான் என்று கூறும் வகையாக அவள் முகத்தில் புன்னகை.

“குக்கூ குக்கூ… பச்சையை பூசும் பாசிக்கு…

குக்கூ குக்கூ… குச்சிய அடுக்குன கூட்டுக்கு…”  மீண்டும் அலராத்தின் ஒலி.

    “ஏய்… துர்கா… குக்கூ… குக்கூ…  ன்னு அது கத்திகிட்டே இருக்கு. ஒண்ணு எழுந்துக்கோ. இல்லைனா அதை ஆஃப் பண்ணிட்டு தூங்கு.” என்ற தாயின் குரலில், படக் என்று எழுந்து அமர்ந்தாள் துர்கா.

“அந்த குக்கூ… குக்கூ பாட்டைவிட, என் அம்மா குரல் தான் ஸோ ஸ்வீட்.” தன் தாயின் கன்னத்தை அவள் செல்லமாய் இழுக்க, “அடியேய்… வருஷப்பிறப்பும் அதுவுமா, குளிக்காம என்னை தொடாத. நீ கேட்டேன்னு வாசல் தெளித்து  பெருக்கி ரெடியா வச்சிருக்கேன். சீக்கிரம் கோலம் போடு.” என்று கலைச்செல்வி விலகி சென்றார்.

“சூப்பர் அம்மா. இதோ பிரஷ் பண்ணிட்டு நைட் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வாசலுக்கு கிளம்புறேன் ” என்று கூறிக்கொண்டே அவள் படுத்திருந்த இடத்தை சரி செய்துவிட்டு போர்வையை மடித்து வைத்தாள்.

“பாடுபட்ட மக்கா…வரப்பு மேட்டுக்காரா…

வேர்வத்தண்ணி சொக்கா… மினுக்கும் நாட்டுக்காரா…” 

பாடிக்கொண்டே தன் தோள்களை குலுக்கி, ஒரு பக்கமாக சரிந்து நடனம் ஆடிக்கொண்டே, பல்துலக்க தயாரானாள்.

” ஆக்காட்டி கருப்பட்டி… ஊதங்கொழு மண்ணுச்சட்டி…

ஆத்தோரம் கூடுகட்டி…ஆரம்பிச்ச நாகரீகம்…”

பாடியபடியே, தன் இடையை அசைத்து ஆடியபடியே,  தன் மேனியின் அழகை எடுப்பாய் காட்டிய சாடின் இரவு உடையிலிருந்து, தொளதொள பண்ட், அவளை நாகரீகமாகவும், அதே நேரத்தில் விகல்பம் இல்லாமலும் காட்டும் சட்டைக்கு மாறினாள்.

வேகவேகமாக பல வண்ண கோலப்பொடியோடு வாசலுக்கு சென்றவள், விளக்கின் வடிவில் தோகையை விரித்து நிற்பது போல் மயிலை வரைந்தாள்.

அதன் கழுத்து பக்கம் திரும்பி அனைவரையும் பார்ப்பது போலவே இருந்தது. மயிலின் உடம்பிற்கும், அதன் தோகைக்கும் என அதற்கு ஏற்றார் போல் நிறத்தை கொடுத்து, அவள் நிமிர்ந்து அந்த கோலத்தை ரசனையோடு பார்த்தாள்.

“அம்மணி, என்ர வீட்டில் எத்தனை கலர் கொடுத்தாலும், உன்ர வீட்டு கோலம் மாதிரி அழகா வர்றதில்லை. நீ வந்து விரசலா அழகா வரஞ்சுபோட்டு போய்டுற கண்ணு.” என்று பக்கத்துக்கு வீட்டு நடுத்தர வயது பெண்மணி, துர்காவை புகழ்ந்தார்.

“ஆண்ட்டி, நானும் தான் நீங்க சென்னைக்கு வந்ததிலிருந்து நீங்க அழகா பேசுற கொங்கு தமிழை கத்துக்கலாமுன்னு பார்க்குறேன். எனக்கு வரவே மாட்டேங்குதே” துர்கா சிரித்த முகமாக பதில் கூற, அந்த நடுத்தரவயது பெண்மணி புன்னகைத்து கொண்டார்.

“இந்த ஆதம்பாக்கத்திலே நம்ம துர்கா தான் அழகா கோலம் போடுறா. அம்மணி நல்லா படிச்சிருக்கா, பெரிய கம்பெனியில் வேலை பார்க்குறா. ஆனால், கொஞ்சம் கூட பெருமையே கிடையாது.” என்று பக்கத்துக்கு வீட்டு பெண்மணி துர்காவை புகழ, “வெளிய எல்லாம் நல்லா தான் இருப்பா. ஆனால், வீட்டில் அவ செய்யுற சேட்டை எனக்கு தான் தெரியும்” என்று துர்காவின் தயார் பெருமிதத்தோடு அங்கலாய்த்து கொண்டார்.

“கோலம் நல்லாருக்கு துர்கா” அவள் தந்தை பாராட்ட, “அது, அம்மா வாசல் தெளித்து வைத்ததால் தான் அப்பா…” என்று துர்கா கண்ணடிக்க, “என்ன காலையிலேயே இவ்வளவு ஐஸ் வைக்குற?” என்று கலைச்செல்வி கரண்டியோடு அவள் முன்னே வந்து நின்றார்.

“ஹீ…. ஹீ…” என்று துர்கா அசடு வழிய, “விஷயத்தை சொல்லு…” கறாராக நின்றார்  கலைச்செல்வி.

“அம்மா… இன்னைக்கு லீவு தான். ஆனால், ஃபிரெண்ட்ஸ் கூட வெளிய போறேன்…” அவள் இழுக்க, “நினைச்சேன்…” தாயாய் அவர் குரல் கண்டிப்பை காட்டியது.

“அம்மா, ப்ளீஸ்…” துர்கா குழைய, “சரி… சரி… சீக்கிரம் போயிட்டு வந்துரு” அவர் அனுமதி அளித்தார்.

துர்கா கூறிய “நன்றி…” காற்றோடு பறக்க, அவள் வேகமாக குளிக்க சென்றாள்.

நடுத்தர வர்க்கம் வாழும் இரண்டு படுக்கறை கொண்ட  வீட்டில் துர்கா இளவரசி. அவள் அறிவு பாராட்டப்படும், அவள் குறும்பு ரசிக்கப்படும், அவள் ஆசை நிறைவேற்றப்படும். அவள் தவறுகளும் கண்டிக்கப்படும்.

துர்கா, தன் குளியலை முடித்து கொண்டு, பிங்க் நிற சில்க்  காட்டன்  சுடிதாரில் கிளம்பினாள். அவள் சிகை அலையலையாய் விரிக்கப்பட்டு, ஒரு சின்ன கிளிப்பில் அடைக்கப்பட்டிருந்தது. அவள் ஜிமிக்கி, துர்காவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதபடி அங்குமிங்கும் அசைந்தது.

“காந்தக் கண்ணழகி

லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

முத்து பல் அழகி…” அவள் அலைபேசி ஒலிக்க, பறந்து சென்று அதை கைப்பற்றினாள். அவளுக்கு தெரியும் அது யாரின் அழைப்பு என்று!

“ஹல்லோ…” அவள் குரலில் ஒரு ராகம்.

“காந்தக்கனழகி…” அவனும் ராகம் பாட, “என்ன பாட்டு பலமா இருக்கு?” அவளும் இழுத்தாள்.

“பொய்யா சொல்றேன் துர்கா. நேரா கண்ணாடி முன்னாடி போ. உன் கண்ணையே பாரு. அதில் நீயே மயங்கிருவ. நான் மயங்காமல் இருப்பேனா?” அவன் உல்லாசகமாக கூற, “பூபதி…” அவள் அவனை கிறக்கமாக அழைத்தாள்.

“நாம இன்னைக்கு  எப்ப மீட் பண்றோம்? தமிழ் வருடப்பிறப்பிற்கு எனக்கு எந்த பரிசும் கிடையாதா?” அவன்  உல்லாசமாக கேட்க, “நான் கிளம்பிட்டே இருக்கேன். ஒரு மணி நேரத்தில் நாம எப்பவும் சந்திக்கும் மாலில்  இருப்பேன்.” அவள் அவனின் இரண்டாம் கேள்வியை தவிர்த்து பதில் கூறினாள்.

“நான் உன்கிட்ட பரிசு கேட்டேன்.” அவன் பிடியாய் நிற்க, “உன்னளவுக்கு பரிசு கொடுக்க, என்கிட்டே வசதி இல்லை” துர்கா குரலில் மென்மை ஒட்டிக்கொண்டது.

“நான் கேட்குற பரிசுக்கு பணம் தேவை இல்லை துர்கா… மனசு தான் வேணும்” அவன் கேட்க, “…” அவளிடம் மௌனம்.

“உன் கன்னக்குழி சிவந்திருக்கா?” அவன் சீட்டியடித்தபடி கேட்க, “பூபதி…” அவள் குரல் நாணத்தை ஏந்தி கொண்டு ஒலிக்க, “கேட்டகேள்விக்கு பதில்” பூபதி சிரிப்பினோடே கேட்டான்.

“அதெல்லாம் இல்லை…” அவள் நிமிர்வாக கூற, “அப்ப, சிவக்க வைச்சிர வேண்டியது தான்” அவன் கேலியில் இறங்கினான்.

“பூபதி, நான் நேரில் வரணுமா வேண்டாமா?” அவள் அவன் கேலியை தவிர்க்க அவனை தீவிரமான குரலில் மிரட்ட எத்தனிக்க, “அது சரி, எல்லாம் நேரில் வச்சிக்கலாம்” அவனும் தீவிரமாக பதில் கூறி அவளை இன்னும் சிவக்க வைத்தான்.

அவன் செயலில் மயங்கி, “லவ் யு பூபதி….” அவள் ஆழமான குரலில் கூற, “இதை சொல்ல என் டார்லிங்க்கு இவ்வளவு நேரமா?” அவன் முறுக்கி கொள்ள, “நீ இன்னும் சொல்லவே இல்லை பூபதி.” அவள் குரல் கொஞ்சியது.

“நேரில், பரிசோடு சொல்லுவான் இந்த பூபதி.” அவன் பேச்சை முடித்து கொள்ள, “ஸீ யு சூன்…” அலைபேசி வழியாக காற்றின் கதிர்வீச்சுகள், அவர்கள் இதழ் மொழி காதல் வீச்சுகளையும் பரிமாறிக்கொண்டது.

பூபதி!  விஜயபூபதி! மேல்தட்டு வர்க ரங்கநாதபூபதி, நிர்மலாதேவியின் ஒரே வாரிசு.

அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான். அவன் கழுத்தில் வைரக்கல் மின்னிய மெல்லிய பிளாட்டினம் சங்கிலி. நல்ல உயரம். கட்டுக்கோப்பான உடல் அமைப்பு. கம்பீரமான நடையோடு தன் அறையை விட்டு வெளியே வந்தான்.  அவன் அறையே, துர்கா வீட்டின் அளவில் இருந்தது.

      நிர்மலா தேவி கோபமாக அமர்ந்திருந்தார். “என்ன அம்மா கோபமா இருக்கீங்க?” விஜயபூபதி வினவ, “வேற என்ன இந்த வீட்டில் ஒரே பிரச்சனை, உங்க அப்பா தான்” நிர்மலா தேவி கழுத்தை நொடித்தார்.

“ஹா… ஹா…” பெருங்குரலில் சிரித்தான் விஜயபூபதி.

“சிரிக்காத டா. இந்த வருஷ பிறப்பிற்கு நம்ம வீட்டை சுத்தி நம்ம தயவில் இருக்கிற எல்லாருக்கும், தங்க காசும், வீட்டில் எல்லாருக்கும் பட்டுத்துணியும் , ஸ்வீட்டும், பழங்களும் கொடுத்தாச்சு. உங்க பாட்டிக்கும் மட்டும் இன்னும் கொடுக்கலை. அது தான் வேலை ஆளுங்க கிட்ட கொடுக்க சொல்லலாமுன்னு பார்த்தா, உங்க அப்பா அப்படி எல்லாம் கொடுக்க கூடாது. நான் போய் நேரில் கொடுக்கணும்னு சொல்லறாங்க.” என்று நிர்மலாதேவி கடுப்பாக கூறினார்.

“அவங்க என் அம்மா, அந்த மரியாதையை கொடுக்க வேண்டாமா? அவங்களை இப்படி பின்பக்கம் கெஸ்ட் ஹவுசில் தங்கவச்சிருக்கதே தப்பு” என்று சீறினார் ரங்கநாதபூபதி.

“நானா தங்கவச்சேன்? உங்க அம்மா, வீம்புக்குனு நம்மளை அசிங்கப்படுத்த, உங்க தங்கை பொண்ணு பேச்சை கேட்டுட்டு அங்க போய் தங்கிருக்காங்க.” நிர்மலாதேவி சண்டைக்கு தயாராக, “அம்மா, எதுக்கு பிரச்சனை? வேலைஆளுங்களும் போக கூடாது. நீங்களும் போக மாட்டீங்க. அவ்வுளவு தானே? நான் போய் கொடுத்துட்டு வெளிய கிளம்புறேன்.” புன்னகையோடு கூறினான் விஜயபூபதி.

“ம்… சரி… ஆனால், அவளோட பேச்சு வச்சிக்காத” என்று விஜயபூபதியின் தாயார் எச்சரிக்க, “அவளோட மனுஷன் பேசுவானா?” என்று விஜயபூபதி தன் தாயின் காதில் கிசுகிசுத்துவிட்டு கிளம்பினான்.

அவர்கள் வீட்டில் தோட்டத்திற்கு சென்றான் விஜயபூபதி.

அங்கு மரங்கள் சூழ்ந்து இருந்தன. அந்த மரத்தை ஒட்டியதாக வீடு. அவன் உள்ளே நுழையவும், அந்த வீடு சற்று சின்னதாக காட்சி அளித்தது. மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு இருந்தது.

“பாட்டி…” அவன் அழைக்க, “வாடா…” என்ற பாட்டியின் குரலில், அவன் அவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

பாட்டி கம்பீரமாக இருந்தார். ஓய்வாக அமர்ந்திருந்தார். தன் கண்களை சுழலவிட்டான்.

“ஏன் பாட்டி இங்க வந்து இருக்கீங்க? உங்களை தனியா விட்டுட்டு அந்த மகாராணி எங்க போனா?” என்று அவன் கேட்க, “அத்தான், பாட்டி தனியா இல்லை. நான் இருக்கேன்.” என்றபடி வந்தான் பதின்பருவ இளைஞன்.

“ஸ்ரீராம், நீ இருக்கியா. அது சரி…” என்றான் புன்னகையோடு.

“அம்மா இதை கொடுத்துட்டு வர சொன்னாங்க.” அவன் கையிலிருந்த தங்க பெட்டியை நீட்ட, ஸ்ரீராம்,  பூபதியை யோசனையாக பார்த்தான்.

“வாங்கிக்கோடா” என்று பூபதி கூற, “வேணாம் அத்தான் அக்கா திட்டுவா” மறுப்பாய் கூறினான்.

அப்பொழுது, “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்பிக்கொண்டு அவர்கள் இருந்த அறைக்குள் நுழைய, தன் முகத்தை சுழித்தான் விஜயபூபதி.

“குருவி ஏன் வீட்டுக்குள் நுழையுது?” அவன் அதிகாரமாக கேட்க, “பெயர் விஜய்யபூபதியா இருந்தா, நீங்க அரசராகிற முடியாது. உங்க கட்டளைக்கு, உங்க கிட்ட கை நீட்டி காசு வாங்குறவங்க  பணிந்து நடக்கலாம். தன்மானம் கொண்ட எந்த சுதந்திர பறவைகளும் கட்டுப்படாது.” பவ்யமாக சிரித்த முகமாக கூறி கொண்டே உள்ளே நுழைந்தாள் அவள்.

பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள். கழுத்தில்  மெல்லிய சங்கிலி. கூர்மையான கண்கள். அதில் மெல்லிய கர்வம் இருப்பதாக அவனுக்கு தோன்றியது.

தலை குளித்ததன் அடையாளமாக முடியை  சற்று தளர்வாக பிண்ணி இருந்தாள்.

கருமேக கூந்தல் அவள் இடையை சூழ பொன்னிற மேனியை விட மின்னியது அவள் முகத்திலிருந்த புன்னகை.

“பாட்டி, அம்மா கொடுத்திட்டு வரசொன்னாங்க, நீங்க வாங்கிக்க சொல்லுங்க” அவன் சமரசம் பேசவே முயற்சித்தான்.

“ஸ்வீட், பழத்தை மட்டும் வாங்கிக்கோ ஸ்ரீராம். மத்ததெல்லாம் நமக்கு வேண்டாம்.” அழுத்தமாக அவள் கூற, அவன் அவளை முறைத்து பார்த்தான்.

“இலக்கியா…” பாட்டியின் குரலில் கெஞ்சுதல் இருக்க, “பாட்டி, நாம உறவை முறிக்கலை. அது தான் வருஷப்பிறப்பிற்கு அவங்க கொடுத்த ஸ்வீட்டையும், பழத்தையும் வாங்கிக்குறேன். ஆனால், அவங்க ஆடம்பரத்தை காட்ட, அவங்க கொடுக்குற பட்டும், நகையும் நமக்கு வேணாம் பாட்டி” தலை அசைத்து, கைகளை மார்பில் குறுக்கே கட்டிக்கொண்டு தன்மையாக கூறினாள் இலக்கியா.

அவன் முகத்தில் கேலி புன்னகை இழையோடியது.

“ஓ…” அவன் மேலும் கூறிய சொற்களில், ஸ்ரீராமின் முகம் வாட, பாட்டி தன் கண்களை இறுக மூடி சோர்வாக அமர்ந்தார்.

‘வெளி வரவா, வேண்டாமா?’ என்று துடித்த கண்ணீரை உள்ளிழுத்து அவனை கோபமாக முறைத்தாள் இலக்கியா.

சிறகுகள் விரியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!