சக்கரவியூகம் 3

3

உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக. செயலாற்றாமல் இருப்பதை விட இது சிறந்ததாகும். செயலின்றி இருப்பவனால் தனது உடலை கூடப் பாதுகாக்க முடியாது என்று கர்மயோக விளக்கத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறுகிறார்.

அதாவது பெருங்குடியில் பிறந்ததாகச் சொல்லிக் கொண்டு போலி தியானத்தில் காலம் கழிப்பவர்களும், ஆன்மீக முன்னேற்றத்திற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டதாக பொய் வேடம் போடும் பிழைப்பாளர்களும் பலருண்டு. அர்ஜுனன் ஒரு போலியாவதை பகவான் கிருஷ்ணர் விரும்பவில்லை. சத்திரியர்களுக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை அர்ஜுனன் செய்ய வேண்டுமென்று பகவான் விரும்புகிறார். அர்ஜுனன் போர்த் தலைவனாகவும் இல்லறத்தனாகவும் திகழ்ந்ததால் தன்னுடைய நிலையிலேயே இருந்து, ஒரு கிரஹஸ்த சத்திரியனுக்குரிய தர்மங்களை நிறைவேற்றுவதே அவனுக்கு மிகச் சிறந்ததாகும் என்பது அவரது கருத்து.

ஒரு வழியாக உடமைகளை பேக் செய்திருந்தாள். தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தேவையற்ற பொருட்களை ஹாஸ்டல் ஆயாவிடம் முதலிலேயே கொடுத்திருந்ததால் இப்போது ஹாஸ்டலை காலி செய்வது சுலபமாக இருந்தது.

வாஸந்திக்கு எப்போதுமே அவளது காலேஜ் ஹாஸ்டலில் தான் வாசம்… தமிழ் வேலை செய்வதனால் வெளியில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தாள்.

தாய் கூறியது அனைத்துமே மனதுக்குள் சுணக்கத்தை தோற்றுவித்தது.

இதுவரைக்குமே தன்னிடம் கைப்பேசியில் ஒருமுறை கூடப் பேசவில்லை என்பது அப்போது அவளுக்கு மிகப்பெரிய விஷயமாகத் தோன்றியது. பூதாகரமாகத் தோன்றிய விஷயத்தை ஒன்றுமில்லையென்று சமாதானம் செய்துகொள்ள அவளொன்றும் சிறு குழந்தை இல்லையே.

ஆயிற்று! எதற்கும் தானே முயன்று பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது. இதில் தவறென்ன இருக்கிறது? அவருக்குத் தயக்கமாகக் கூட இருக்கலாம்… ஒரு சிலர் அந்தத் தயக்கத்திலேயே வாழக்கையை தொலைத்து விடுவதில்லையா?

தானும் அதனால் பாதிக்கப்பட வேண்டுமா?

நோ… கூடாது!

ஆனால் தானே எப்படி அழைப்பது?

அன்னைக்குத் தெரிந்தால் என்னவாகக்கூடும்?

எப்படியும் திருமணத்திற்கு பின் கணவன் தானே? இப்போது அழைப்பது மட்டும் தவறாகிவிடவா போகிறது?

டாக்ஸிக்காகப் பார்த்திபனும் வாஸந்தியும் வெளியில் காத்திருக்க, ஹாஸ்டல் அறையில் பேக் செய்து கொண்டிருந்தவளுக்கு எண்ணங்கள் தறிக்கெட்டு ஓடின.

இத்தனையும் யோசித்தப்பின் ஒரு விஷயம் தோன்றியது. அழைக்க வேண்டும் என்றால் அவர்களது கைப்பேசி எண் தேவையல்லவா? அதுவே இல்லாமல் தான் எப்படி அழைப்பது?    வீட்டோடு நிச்சயம் முடித்து விட்டார்களே தவிர, அனைத்துச் சடங்குகளையும் பார்த்துப் பார்த்து முடித்திருந்தார்களே தவிர, மாப்பிள்ளையின் கைப்பேசி எண் இதுதான் என்று அவர்கள் தரவுமில்லை. அவளது வீட்டில் யாரும் கேட்டு வாங்கவில்லை.

வாஸந்தி அடாவடியாகக் காரணம் கேட்டபோது கூட.

“சின்னக் குட்டி… அந்தக் குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம்டா… அவங்க வீட்ல அக்காவுக்கு மாப்பிள்ளை பேசியிருக்கறதே எவ்வளவு பெரிய கௌரவம் தெரியுமா? அவ்வளவு பெரிய ஆளுங்க கொஞ்சம் இப்படி இருக்கறது தான்டா… அக்கா அங்கன போய்ட்டா அது அவ வீடு ஆகிடுமில்ல… அப்புறம் என்ன கவலை?”

ஒரே வார்த்தையாகச் சுந்தரம் முடித்து விட, வாஸந்திக்கு தான் ஏமாற்றமாகப் போய்விட்டது அப்போது.

பழைய நினைவிலேயே உழன்று கொண்டிருந்தவளுக்கு செல்போன் அலாரம் அலறி மணி ஆகிக்கொண்டிருப்பதை தெரிவித்தது.

கைப்பேசியை எடுத்து அலாரத்தை ஆப் செய்தவள் அவளையும் அறியாமல் காலரியை திறந்தாள்.

அன்று மிகவும் எளிமையாக வீட்டிலேயே நிச்சயத்தை முடித்தபோது எடுத்த புகைப்படங்கள்!

மிகவும் பாந்தமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர்!

முகத்தில் அவ்வளவு மென்மை!

பார்க்கும் போதே சொல்லிவிடக்கூடும். அவன் மிகவும் மென்மையானவன் என்று!

பளீரென்ற நிறம்… எடுப்பான நாசி!

பெண்ணாகப் பிறந்திருந்தால் பேரழகி!

இவ்வளவு அழகானவன். தங்களை விட அந்தஸ்த்தில் மிகவும் உயரத்தில் இருப்பவன்! எதற்காகத் தன்னை தேடி வர வேண்டும்?

எதுவாக இருந்தாலும் இன்னும் பதிமூன்றே நாளில் அவன் உன்னுடைய கணவன். அதனால் அவனை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்ள பழகு என்று எச்சரித்தது மனது!

ஆமென்று தலையாட்டியவளின் காதில் கார் ஹாரன் சப்தம் அபஸ்வரமாக விழுந்தது!

அவசரமாகக் கதவைப் பூட்டிவிட்டு, பொறுப்பாளரிடம் சாவியை கொடுத்து விட்டு வெளியே விரைந்தாள்.

மனதுக்குள் படபடப்பு… எப்போதும் இதுபோலத் தனியாக டாக்சியில் சென்றதில்லை. எத்தனையோ விஷயங்களைக் கேள்விப்படுகிறாளே! கடவுளே அது போலவெல்லாம் ஏதும் நேராமல் நீதான் காக்க வேண்டும் முருகா என்று அவசரமாக முருகனுக்கு ஒரு அப்ளிகேஷனை போட்டாள்.

“அக்கா… என்னக்கா… இப்படி ஆடி அசைஞ்சு வர்ற? லேட் ஆகுதுக்கா…” அவசரமாக அவளிடமிருந்து பையை வாங்கினாள் வாஸந்தி… அவளுக்குப் பின் வந்த பார்த்திபன் இன்னொரு பையை வாங்கி டேக்சியின் பின்னே இரண்டு லக்கேஜுகளையும் வைத்தான்.

நேரம் இரவு மணி எட்டை தொட்டிருந்தது. வாஸந்திக்கு சற்று உறுத்தலாக இருந்தது. இந்த இரவு நேரத்தில் எப்படி காரை ஒட்டிக்கொண்டு போக முடியும் என்று!

“அக்கா… நைட் தூங்காதேக்கா… வீட்டில் போய்த் தூங்கிக்கலாம்… டிரைவர் அண்ணா கிட்ட பேச்சு கொடுத்துட்டே போ… அப்பப்ப காரை நிறுத்தி டீ காப்பின்னு ஏதாவது வாங்கிக் குடிக்க சொல்லு… பார்த்து ஜாக்கிரதை…”

பெரிய மனுஷியாக வாஸந்தி அறிவுரை மழை பொழிய… அருகில் லக்கேஜை அடுக்கிக் கொண்டிருந்த பார்த்திபன் அடக்க முடியாமல் சிரித்தான். அவனது சிரிப்பு தமிழையும் புன்னகைக்க வைக்க, வாஸந்தி எரிச்சலாக முறைத்தாள். தமிழ் ஹாஸ்டல் வார்டனிடம் சொல்லிக்கொண்டு வர உள்ளே போனாள்.

“ஹலோ… என்ன சிரிப்பு வேண்டி இருக்கு? எங்க அக்காவுக்கு நான் அட்வைஸ் பண்ணினா உங்களுக்கு என்ன போச்சு?” சிலிர்த்துக் கொண்டு அவள் கேட்டாள்.

“நீயெல்லாம் அறிவுரை பண்ற அளவுக்கா இருக்கு சில்லுவண்டு? முதல்ல கொஞ்சம் வளரு… அப்புறமா அட்வைசெல்லாம் பண்ணலாம்…”

அவளது தலையில் தட்டிய பார்த்திபன் சிரித்துக் கொண்டே கூற, அதைக் கேட்ட வாஸந்தி வெகுண்டாள். ஆனால் பார்த்திபன் கிண்டல் செய்வதிலும் ஒரு அர்த்தம் உண்டு… ஏனென்றால் வாஸந்தி ஐந்தடியை இன்னமும் தாண்டவில்லை. அதோடு குழந்தைத்தனமும் மீதமிருக்கும் முகம்… பார்த்தால் பத்தாவதை தாண்டாத பெண்ணைப் போலவே இருப்பாள்… அவளைக் கண்டாலே ஏதோ குட்டித் தங்கையைக் கண்டது போன்ற பிரியம் பார்த்திபனுக்கு!

அவள் எஞ்சினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு என்று கூறினால் யாருமே நம்ப முடியாது. அதைக் கொண்டே எப்போதும் பார்த்திபன் வம்பிழுப்பது!

“வேண்டாம்… ரொம்ப வம்பு பண்றீங்க…” ஒற்றை விரலை நீட்டிப் பார்த்திபனை எச்சரித்துக் கொண்டிருந்தவளை கைப்பேசியில் பேசியவாறே இறங்கிய ஸ்ரீதரன் புன்னகையோடு பார்த்தான்!

“பாப்பா ஏது ஸ்கூல்டா?” மலையாள தமிழில் அலட்டாமல் கேட்டவனை பார்த்த வாஸந்தி,

“என்னது ஸ்கூல்லா?” அதிர்ந்தவள், “நான் காலேஜ் செகன்ட் இயர்…” கோபமாகக் கூறினாள்.

“ஓ சாரி… இவன் சில்லுவண்டுன்னு சொன்னானா… நிங்கள் ஒரு கொச்சு குட்டியான்னு ஞான்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அருகில் வந்தாள் தமிழ்நதி.

பளீரென்ற அந்த விளக்கு வெளிச்சத்தில் லாங் ஸ்கர்ட்டில் வந்த தமிழ், தேவதையைப் போல இருக்க, மிகவும் இயல்பாக நோக்கிய ஸ்ரீதரனை கவனித்த வாஸந்தியின் கண்களில் பாராட்டுக்கள் தெரிந்தது!

ஸ்ரீதரன் மிக இயல்பானவன்! யாரையும் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டேன் என்று கூறுவதும் கிடையாது அதே சமயத்தில் அழகாகப் பெண்கள் போனால் ரசிக்காமல் இருப்பதும் கிடையாது. ஆனால் பெரியதாக அலட்டிக் கொள்ள மாட்டான். அவனுக்கு அவனது வேலை முக்கியம்… அதன் நடுவில் உலக அழகி வந்தாலும் கூட அவளையும் சொந்தமில்லாத பார்வை மட்டுமே பார்ப்பது வழக்கம்.

இதுதானே இப்போதைய தேவையும் கூட!

பார்த்திபன் அவனது இந்தக் குணத்தை பற்றி அறிந்ததனால் தானே தமிழ்நதியின் பொறுப்பை இப்போது அவனிடம் விட்டது!

பார்த்திபனின் அருகில் வந்த தமிழ்நதி,

“தேங்க்ஸ் பார்த்திபா…” என்று அவனுக்கு நன்றி கூறி கொண்டிருந்தாள்.

“இட்ஸ் ஓகே தமிழ்… வீட்டுக்குப் போனதும் ஒரு போன் பண்ணிடு… சரியா?” அக்கறையாக அவன் கூறினான்.

“சியூர்… இன்னொரு ஹெல்ப் பார்த்திபா… இந்த வாலு இந்நேரத்துக்கு மேல ஊர் சுத்திட்டு இருக்க போறா… தயவுசெய்து அவளை அவளோட ஹாஸ்டல்ல டிராப் பண்ணிடுங்க…” சிரிக்காமல் வாஸந்தியை பார்த்திபனிடம் மீண்டும் மாட்டி விட, அவளது முகமோ ஜிவுஜிவு என்று சிவந்தது. பார்த்திபனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“க்கா… போயும் போயும் இவர் கிட்ட என்னை வாலுன்னு சொல்றியே… உனக்கே இது நல்லா இருக்கா?”

அழாத குறையாக அவள் குறைபட்டாள் வாஸந்தி.

“வாசு… பார்த்தி உன்னை எப்படித்தான் வம்பிழுத்தாலும் அவரைத் தவிர வேற யாரையும் நம்பி உன்னை அனுப்ப முடியுமா சொல்லு… அவர் கிட்ட வம்பு வளர்க்காம ஒழுங்கா ஹாஸ்டல் போய்ச் சேர் ஆத்தா…” பொறுப்பான தமக்கையாகக் கூற, பார்த்திபனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி!

“ஒய் சில்லுவண்டு… ஒழுங்கா பார்த்திபன் அண்ணா என்னைக் கொண்டு போய் விடுங்கன்னு சொல்லு… அப்பத் தான் விடுவேன்…” அவன் பங்குக்கு முறுக்கிக் கொள்ள, அவனைப் பார்த்து மேல் பார்வையாக முறைத்தவாறே,

“அண்ணா… அண்ணன் ஒரு கோவில்… அண்ணன் ஒரு பங்களா… அண்ணன் ஒரு ஏடிஎம்… ஓகே வா… இப்ப கொண்டு போய் விடறீங்களா…?” வாஸந்தி அவனைக் கிண்டலடிக்க, தமிழ்நதி வாய்விட்டுச் சிரித்தாள்!

அவளது அந்தச் சிரிப்பை வாஸந்தியோடு ஸ்ரீதரனும் திரும்பிப் பார்க்க, அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

தமிழின் பார்த்திபன் பற்றிய கணிப்பு முழுக்கவே உண்மைதான். அவன் சற்று கிண்டலாகப் பேசுவானே தவிர… மிக மிகக் கண்ணியமானவன். அதைக் காட்டிலும் அவர்களுடைய தூரத்து சொந்தம் வேறு!

அந்த உரிமையில் தான் வாஸந்தியை அவன் கிண்டல் செய்வதும் கூட… ஆனால் அதைத் தாண்டி ஒரு சிறு தவறான பார்வையோ பேச்சோ அவனிடமிருந்து வந்ததில்லை.

அதை முற்றிலும் உணர்ந்த தமிழ் பெரும்பாலும் அவனை நம்பி உதவிகளைக் கேட்பதுண்டு… அவள் கேட்காத போதும் அவன் தானாகவே உதவிகளும் செய்வதுண்டு… இப்போது ஊருக்குச் செல்லக் காரை ஏற்பாடு செய்ததை போல!

“தமிழ்… இந்த வாலை நான் டிராப் பண்ணிடறேன். டோன்ட் ஒர்ரி… நீங்கப் பார்த்துப் போங்கப்பா… அப்புறம் கல்யாணப்பொண்ணு… போற வழியெல்லாம் கனவு கண்டுட்டே போகாம… கொஞ்சம் இவன் கிட்ட பேச்சு கொடுத்துட்டு போங்க… அப்பத்தான் டிரைவ் பண்றவங்களுக்கு தூக்கம் வராது…” கிண்டலடிப்பதைப் போலவே கூற வேண்டியவற்றை அவனும் கூற, தமிழ் புன்னகையோடு ஸ்ரீதரனை பார்த்தாள்!

ட்ரிம் செய்யப்பட்ட தாடி, தூக்கி வாரப்பட்ட சிகை, கண்ணியமான தோற்றம்… அழுத்தமான பார்வை… கம்பீரமான உயரம்! முதல் பார்வையில் வேறு ஒன்றும் அவளுக்குத் தோன்றவில்லை!

“டிரைவர் சர்… போலாமா?”

“ம்ம்ம் சியூர் மேடம்…” மலையாள வாசனையோடு கூறியவனின் தொனி அவளுக்குள் லேசான புன்னகையை வரவைத்தது.

எதுவும் பேசாமல் காரில் அமர்ந்தவளின் மனதில் டன் டன்னாகக் குழப்பங்கள்!

ஏனோ மீண்டும் ஒருமுறை அவளது கைப்பேசியை பார்த்தாள். அவளையும் அறியாமல்… எதிர்பார்த்த அழைப்பு வரவே இல்லையே!

***

“ஹே அஜ்னபி… து ஹி கபி… ஆவாஸ் தி கஹின் சே…”

ஏஆர் ரஹ்மானின் தில் சே படப் பாடல் இதமாக வழிந்து கொண்டிருந்தது. அவளுக்கு ஏ ஆர் ரஹ்மான் மிகவும் பிடித்த இசையமைப்பாளர் தான். ஆனால் பாடல் தனது தாய்மொழியில் இருக்க வேண்டும்.

அது எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும் தமிழை தவிர வேறு எந்த மொழி பாடலையும் தமிழ்நதி ரசித்ததில்லை.!

தெரிந்து கொள்ளளவும் ரசிக்கவும் விருப்பப்பட்டதில்லை.

ஆனால் காரில் ஏறியது முதல் அரைமணிநேரமாக ஹிந்தி பாடல்களில் மூழ்கியிருந்தான் ஸ்ரீதரன். மூழ்கியதோடு தாளமிட்டு கொண்டே வர… அவளுக்குத் தான் ரசிக்கவே முடியவில்லை.

அந்தப் பாடல் முடிந்து,

“தேரே சங் யாரா… குஷ் ரங் பஹாரா…” என்று ருஸ்டம் படப் பாடல் ஆரம்பிக்க, அவளால் சற்றும் அதை ரசிக்கவே முடியவில்லை.

“வேற தமிழ் பாட்டு போடறீங்களா?”

தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் தமிழ் கேட்டாள். சட்டென்று அவனுக்குப் புரியவில்லை. அந்த அளவு டிரைவிங்கிலும் பாடலிலும் மூழ்கியிருந்தான்.

எதுவும் பேசாமல் கியரை மாற்றி விட்டுக் கண்ணாடி வழியாகத் தமிழை பார்க்க, அவளது முகத்தில் இருந்த எரிச்சலைப் பார்த்து அவனுக்குள் மெல்லிய புன்னகை!

“வேற பாட்டு… தமிழ்ப் பாட்டு எதுவும் இல்லையா?”

“எந்தா பிரஷ்ணம்? நல்லதானு இருக்கு?” அழுத்தமான குரலில் கூறினான். அதிசயம் தான் வாய் திறந்து விட்டான் என்று அவளுக்கு வையத் தோன்றியது!

“கஸ்டமர்ஸ் க்கு பிடிக்காத பாட்டைத் தான் போடுவீங்களா?” அவளது குரலில் சற்று கோபம் தென்பட்டதோ?

அதற்கும் மேல் எதையும் கூறாமல், அவனிடமிருந்த தமிழ்ப் பாடலை ஒலிக்க விட்டான்.

“மலையோரம் வீசும் காற்று… மனதோடு பாடும் பாட்டு…” என்று பாடல் இதமாகத் தழுவ… இளையராஜா அவளைத் தாலாட்டினார்.

கார் மிதமான வேகத்தில் வழுக்கிக் கொண்டிருந்தது.

வேகமாகப் பின்னுக்கு சென்று மறைந்த காட்சிகள் மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளுள் ஆர்வத்தை விதைத்திருக்கக்கூடும். இப்போது உணர்வுகளற்று கடக்கவே தோன்றியது.

தனக்குத் தானே சுய அலசலில் இறங்கினாள் தமிழ்.

“தமிழ்… இது உனது இயல்பே இல்லையே? நீ போய்க் கவலைப்படுவதா? சான்சே இல்லையே! எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அதை உனக்குச் சாதகமாக உபயோகப்படுத்தத் தெரியாதா என்ன? இது போன்ற சூழ்நிலை வேண்டுமானால் உனக்குப் புதியதாக இருக்கலாமே தவிர… உன்னால் சமாளிக்க முடியாதது இல்லையே…”

“திருமணம்… எல்லோர் வாழ்விலும் வருவதுதானே? உனக்கு மட்டுமென்ன புதியதா என்ன? ஆள் தான் எப்படி என்று தெரியவில்லை. அதுவும் நல்லது தானே? ரகசியங்களே சுவாரசியங்களை விதைக்கின்றன… அது இல்லாவிட்டால் வாழ்க்கை என்பதற்கான சுவை ஏது?”

மனம் இந்த நிலைக்கு வந்தபின்னர்… அந்தச் சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்தது, அவளுக்கு!

மெதுவாகச் சுற்றிலும் ஆராய்ந்தாள். கைப்பேசியை ஆன் செய்து நேரத்தைப் பார்த்தாள்.

மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. கார் வண்டலூரை தாண்டிக் கொண்டிருந்தது.

“நீங்க டிபன் சாப்டாச்சா?”

தமிழிடமிருந்து வந்த கேள்வியில் ஒரு முறை உடல் விறைத்தவன்,

“நிங்கள் கழிச்சோ?” பதிலுக்கு அவளைச் சாப்பிட்டாகி விட்டதா என்று கேட்டான்.

“இன்னும் இல்ல… போற வழில ஏதாவது நல்ல ஹோட்டலா இருந்தா நிறுத்தி எனக்கு மூணு இட்லி பார்சல் வாங்கிடுங்க… நீங்களும் வாங்கிக்கங்க…” என்று ஐநூறு ரூபாய் தாளை அவனை நோக்கி நீட்ட… அவனது முகமெங்கும் சுவாரசியம்.

பதில் பேசாமல் வாங்கிக் கொண்டவனின் கைப்பேசி அழைத்தது.

“எந்தா ராஜீவ்…?” கேட்டுக்கொண்டே அந்த ஹோட்டலின் உள்ளே நுழைந்தவன். காரை நிறுத்தி இறங்க… மறுபுறத்தில் அந்த ராஜீவின் பதட்டமான குரல்.

“சர்…! திண்டிவனத்தினப்புறம் அல்பம் பஹலமுன்ட்டு. சில பார்ட்டிகார்க்கு ப்ரஷ்ணமுன்ட்டுன்னு தோனினு. ( திண்டிவனம் தாண்டிக் கொஞ்சம் கலவரமா இருக்கு… ஏதோ கட்சிகாரங்க பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க போல…)”

“எந்தா பிரஷ்ணம்? ஞான் வளர சுரக்ஷிதனான்னு ராஜீவ்… நோக்கிக் கொள்ளாம்…”

“சர்…! ரண்டு காருகள் கட்டிச்சு போலே. திண்டிவனமானு பிரஷ்ணம் சர். விழுப்புரம் ரூட்டு வந்தவாசி செஞ்சி கொள்ளாம். தயவு செய்து ஈ வழி உபயோகிக்கிறது. (ரெண்டு காரை எரிச்சுட்டாங்க போல… திண்டிவனம் தான் பிரச்சனை சர்…! வந்தவாசி, செஞ்சி வழியா விழுப்புரம் ரூட் நல்லா இருக்கும் சர்…! தயவுசெய்து இந்த ரூட் வேண்டாம்…)” ராஜீவ் பிடிவாதமாகக் கூறினான்.

“ஓகே ராஜீவ்… டன்…” என்றவன். அமைதியாகத் திரும்பித் தமிழைப் பார்த்தான்.

அவள் அமைதியாக அமர்ந்து சுற்றுப்புறத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்!