சக்கரவியூகம் 5

5

அந்தவந்த இமே தேஹா

நித்யஸ்யோக்தா: ஷரீரிண:

அனாஷினோ (அ)ப்ரமேயஸ்ய

தஸ்மாத் யுத்யஸ்வ பாரத

அழிவற்ற, அளக்கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந்த ஜடவுடல் அழியப்போவது உறுதி. எனவே, பரத குலத் தோன்றலே போரிடுவாயாக.

-பகவத் கீதை

கவனம் சற்று பிசகி ஏதேதோ நினைவில் முன்னே வந்த வாகனத்தைக் கவனிக்காமல் காரைத் திறக்க முயல… காருக்கு முன்னே நின்று கொண்டிருந்த ஸ்ரீதரன் சட்டென்று கவனித்து ஒரே நொடியில் லாவகமாக அவளைத் தன் பக்கம் இழுத்திருந்தான்.

லாரி வெகுநெருக்கமாகக் கடந்து போயிருந்தது. கிட்டத்தட்ட காரை இடிப்பதுப் போல… நடுவில் இன்னொரு கார் லாரியை இடப்பக்கமாக முந்த முயல, சட்டென்று அந்த ஓட்டுனர் சுதாரித்து லாரியை வலப்பக்கம் இழுத்திருந்தான்.

அவர்களைப் போன்றவர்களுக்குச் சாலையில் நிற்பவர்களோ பயணிப்பவர்களோ ஒரு பொருட்டே அல்ல… கண் மூடித்தனமான வேகம் மட்டுமே… அந்த வேகம் என்பது பல நேரத்தில் பலரது உயிரைக் காவு வாங்கி விடுகிறது என்பதையாவது உணர்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

கைப்பேசியில் பேசியவாறே ஓட்டுவது, குடித்து விட்டுத் தறிகெட்டு ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது. இவர்களுக்குச் சற்றேனும் மனிதாபிமானம் இருந்தால் தேவலாம் என்று தோன்றியிருக்கிறது.

தமிழ்நதியின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இறுக்கமாக ஸ்ரீதரனின் தோளைப் பற்றியிருந்தாள் அவள்.

“ஒண்ணுமில்லம்மா… யூ ஆர் சேப்…” என்று முதுகைத் தட்டி கொடுக்க, அவளோ கோழிக்குஞ்சு நடுங்குவதைப் போல அவனது தோளைப் பற்றியபடி நடுங்கினாள்.

ஒரு நொடியில் விபத்தைக் கடந்த நடுக்கம் அவளது தேகமெங்கும் பரவியிருந்தது.

அந்த ஒற்றை நொடிகள் வாழ்க்கையில் விலைமதிப்பில்லாதவை… எப்போதுமே கிடைக்கப்பெறாதவை… அதன் மதிப்புத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் ஆழம் அறிய முடியும். மற்றவர்களுக்கு அந்த ஒற்றை நொடி மற்ற நொடிகளைப் போன்றதேயாம்.

அவளது கையைப் பிடித்துக் காரினுள் அமர வைத்து விட்டு மறுபக்கம் ஏறிக் காரைக் கிளப்பி விட்டாலும் அவள் இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை என்பதை அவளது முகம் கூறியது.

அவளை நார்மலாக்கும் பொருட்டு, “இங்கிலீஷ்… இப்பவும் மலையாளின்னா கொலையாளி தானா?” என்று சிரிக்க, நிமிர்ந்து அவனை அவள் பார்த்த பார்வையின் அர்த்தம் என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.

சற்று நேர யோசனைக்குப் பின்னர், “ப்ச்… சொல்லிக் காட்டாதீங்க… ரியலி இட்வாஸ் நாட் இன்டன்ஷனல்…”

நடுக்கம் குறையாத குறையாத குரலில் அவள் கூறினாள்.

“அடடா… இப்போள் முதல் பஹலமுன்டாக்கில்லே? மதுரை போறவரைக்கும் எனக்குப் போரடிக்கும் தமிழ்…” என்று அதற்கும் சிரித்தான்.

“அப்படியெல்லாம் மட்டும் தப்பு கணக்கு போடாதீங்க… அப்புறம் இப்படி இங்கிலீஷ் ன்னு கேவலமா ட்ரான்ஸ்லேட் பண்ணீங்க… நான் கொலையாளியாகிடுவேன்… ஜாக்கிரதை…” என்று எச்சரிக்க, ஸ்ரீதரன் ரியர்வியு மிரரை பார்த்து வாய்விட்டுச் சிரித்தான்.

“ஓகே ஓகே… மிரட்டல் பலமாவே இருக்கு… ஞான் ஜாக்கிரதையாகவே இருந்துக்கறேன்.”

இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை சுமுகமாக… பேசுவதற்கு இருவருக்குமே எளிதாக இருந்தது.

கார் வாலஜாவை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.

காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. மழைத் தூறல் ஆரம்பிக்க, வைப்பரை ஆன் செய்து விட்டு ஓட்ட ஆரம்பித்தான்.

‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடி பார்த்தேன்.

கடல்மேல் ஒரு துளி வீழ்ந்ததே… அதைத் தேடி தேடிப் பார்த்தேன்…’

ரஹ்மான் இசையாக வழிய… கண்களை மூடிப் பாடலோடு லயித்து ரசித்துக்கொண்டிருந்தாள். ஸ்ரீதரன் தாளமிட்டு கொண்டு காரைச் செலுத்தி கொண்டிருந்தான்.

எதிரில் வந்த வாகனங்களின் வெளிச்சம் பளீரெனப் பரவிக் கண்ணைக் கூச செய்து கொண்டிருந்தது.

“நல்ல சாங்… அல்லே…” கண்களைச் சாலையில் வைத்தபடி ஸ்ரீதரன் கேட்டான். கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தவள்,

“ம்ம்ம்… எஸ்… என்னோட பேவரிட்…” மெல்லிய குரலில் கூறினாள்.

“மியுசிக் இஸ் எட்டர்னல்… அதை மொழிகளுக்குள்ள அடக்க முடியும்ன்னு நினைக்கறீங்களா தமிழ்?” அவள் தமிழ் பாடலைத்தான் கேட்பேன் என்று அடம் பிடித்ததை மனதில் வைத்துக் கொண்டு அவன் ஆங்கிலத்தில் கேட்டான்.

“மியுசிக் எட்டர்னல் தான். ஆனா வரிகள் புரியாம என்னால ரசிக்க முடியாது. பார் எக்சாம்பிள் கர்னாடிக் மியுசிக்ல தமிழ்ப் பாடல்களை ரசிக்க முடிஞ்ச அளவுக்குத் தெலுங்கு கீர்த்தனைகளையோ சம்ஸ்கிருத பாடல்களையோ என்னால ரசிக்க முடிஞ்சதே இல்லை.” தன்னுடைய மனநிலையை ஆங்கிலத்திலேயே விளக்கினாள்.

“இசை வேறு… பாடல் வேறுன்னு நினைக்கும்போது வர்ற குழப்பம் இது. இசையோட ஒரு வடிவம் தான் பாடல்… அது பல வடிவங்களையும் படிமங்களையும் கொண்டது. மொழியே இல்லாம வண்டோட ரீங்காரத்தை நாம ரசிக்க முடியுமே… தண்ணீரோட சலசலக்கிற ஓசை… இப்படி நிறைய!

கண்ணை மூடி உட்கார்ந்து பாருங்க தமிழ்… கேட்கற ஒவ்வொன்னுமே இசையோட ஒரு வடிவம்… அதற்கு எல்லாம் மொழிகள் கிடையாது எல்லைகள் கிடையாது. இதை மட்டும் தான் பேசுவேன்… நினைப்பேன்ன்னு மைன்ட் ப்ளாக் கிடையவே கிடையாது…”

மிகவும் இயல்பாக ஆனால் ஆழமான அவனது கருத்துக்களை உள்வாங்கியவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவனது கருத்துக்களும் உண்மைதான். இத்தனை நாட்களாகத் தனக்குள்ளாக நிறைய எல்லைக்கோடுகளை வகுத்து வைத்துக் கொண்ட பிரம்மை.

“நான் ரொம்ப சாதரணமான ஆள் தான் ஸ்ரீதரன். எனக்கு எக்ஸ்ட்ராடினரி ரசனை எல்லாம் கிடையாது. பாட்டுன்னா கேட்பேன்… அவ்வளவுதான். அதுக்கு மேல இவ்வளவு ஆராய்ச்சி எல்லாம் பண்ண தெரியாது. பிடிக்கும் அவ்வளவுதான்…”

“சரி… நீங்க என்ன வேலை செய்யறீங்க தமிழ்?”

ஏன் இதைக் கேட்கிறான் என்று யோசித்தவள், “ ஃபேஷன் டிசைனிங்… ஒரு டிசைனிங் ஹவுஸ்ல ட்ரைனியா இருக்கேன்…”

“அதுவே பரந்துபட்ட கற்பனைகளை உள்ளடக்கிய ஒரு வேலை தானே? அங்க போய் நான் கண்டம்ப்ரரி டிசைன்ஸ் மட்டும் தான் போடுவேன்… மாடர்ன், வெஸ்டர்ன் எதுவுமே செய்யமாட்டேன். எத்னிக்ல கூடத் தமிழ் எத்னிக் தான் செய்வேன்னு அடம் பண்ணுவீங்களா?”

சிரிக்காமல் அவன் கேட்ட கேள்வியில் பக்கென்று சிரித்தாள் தமிழ்நதி.

“ம்ம்ம் புரியுது. அப்படி எல்லாம் சொல்ல முடியாதே… டிசைனிங்ல அந்த மாதிரி மைன்ட் ப்ளாக் இருந்தா டிசைன் செய்யவே முடியாது. நிறைய எக்ஸ்பெரிமென்ட்ஸ் பண்ணனும்… எத்னிக் அன்ட் வெஸ்டர்ன் பியுஷன் மாதிரி எவ்வளவோ ட்ரை பண்ண நாம ரெடியா இருக்கணும்… ஒரு எல்லைக்குள்ள நின்னுட்டா நம்மோட கற்பனை வளம் அங்கேயே தேங்கிடும்…”

“அதே… அதே மாதிரி நிறைய எக்ஸ்பெரிமென்ட்ஸ மியுசிக்லையும் அக்செப்ட் பண்ண ரெடியா இருங்க தமிழ்… ரசனை எல்லா நேரத்துலையும் ஒன்றுதான். விதவிதமா பெயர் கொடுக்கறோம் அவ்வளவுதான். மைன்ட்ப்ளாக்கை ரிலீவ் பண்ணிட்டு இசைய மட்டும் ரசிக்க ட்ரை பண்ணுங்க… எல்லாமே அழகாத்தான் தெரியும்…”

சற்றும் காயப்படுத்தாமல் அதே சமயத்தில் தனது கருத்துக்களை வெகுநேர்த்தியாக அழகாகக் கூறிய ஸ்ரீதரனை ஆச்சரியமாகத்தான் பார்த்தாள்.

“நல்லா பேசறீங்க…” பாராட்டும்விதமாகக் கூறினாள்.

“அதுதன்னே மலையாளி…” உதட்டோரம் வழிந்த குறுஞ்சிரிப்போடு அவன் கூறினான்.

“அடடா… அப்பத் தமிழ் ஆளுங்க எல்லா மைன்ட் ப்ளாக்கையும் வெச்சுட்டு சுத்திட்டு இருக்கமா? என்னைத் தமிழரோட ஒட்டு மொத்த பிம்பத்துக்கான பிரதிநிதியா பார்க்கறதும் தப்பு… உங்களை மலையாளிகளோட பிரதிநிதியாகப் பார்க்கறதும் தப்பு… கருத்துக்கள் எப்போதுமே ஆளுக்கு ஆள் முரண்படும். ஒரு விஷயத்துல உங்க கூட ஒத்துபோனதுனால எல்லா விஷயத்துலயும் அக்செப்ட் பண்ண முடியாது. காலம்காலமா என்னோட மனசுல படிஞ்ச என்னோட தமிழ் எனக்கு எப்பவுமே உசத்திதான். அது மாறாது…”

வெகுநிதானமாக அவள் கூறியதை கூர்ந்து கேட்டவனுக்குள் இந்தப் பெண் வெளியில் பிடிவாதமாகத் தெரிந்தாலும் தெளிவானவள். அர்த்தபூர்வமான ஆழமான சிந்தனைகளைக் கொண்டவள் என்பதை உணர்ந்து கொண்டான்.

“ம்ம்ம்… மிடுக்கி…” தனக்குள்ளாக புன்னகையோடுக் கூறிக்கொண்டான். இது போன்ற அறிவு பூர்வமான பரிமாற்றங்கள் வெகு அபூர்வம்.

அதிலும் பெண்களிடம் அவன் பேசுவதே அபூர்வம்… அதைக் காட்டிலும் அவர்கள் அறிவார்ந்தவர்களாக இருப்பது வெகு அபூர்வம்.

அந்த நேரத்தை மிகவும் ரசித்தான்.

“ஆனா இனிமே கண்டிப்பா ட்ரை பண்றேன். நீங்கச் சொன்னமாதிரி எனக்குள்ள முன்மாதிரி முடிவுகளைச் செய்துக்காம, எல்லைகளை வகுத்துக்காம ரசிக்க ட்ரை பண்றேன்.” என்று புன்னகையோடு கூற,

ரியர்வியு மிரர் வழியாக அவளைப் பார்த்தவனின் கண்கள் பளிச்சிட்டது.

“பரவால்லையே… தமிழுக்கு அக்செப்ட் பண்ணிக்க கூடத் தெரியுதே…” கிண்டலாகக் கூறினான்.

“அக்செப்ட் செய்ததால் தான் தமிழ் ஆயிரக்கணக்கான வருஷமா வளர்ந்துட்டு இருக்கு… நாம வளரனும்னா நம்ம முன்னாடி வளர்ற ஒன்னை நாம அக்செப்ட் பண்ணிக்கணும்…”

அவன் கேட்டதற்கு தமிழ்நதி சிலேடையில் பதில் கூற, ஸ்ரீதரன் வாய்விட்டுச் சிரித்தான்.

“எண்டே குருவாயூரப்பா… ஞான் எஸ்கேப்…” என்று கூறி சிரிக்க, அவளும் அதில் இணைந்து கொண்டாள்.

சிரித்து கொண்டே சாலையைக் கவனிக்க, அதன் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்க, சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது.

என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் வாகனவரிசையில் அவனும் நிறுத்திவிட்டு என்னவென்று பார்த்தான்.

வெளியே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

“என்னாச்சு?”

“தெரியல… இருங்க என்னன்னு பார்க்கறேன்.” என்று கீழே இறங்கி… என்னவென்று கேட்டான்.

“ஆக்சிடென்ட் சர்…! ரெண்டு கார்…” போகிற போக்கில் ஒருவர் கூறி விட்டுப் போக, இருவருமே அதிர்ந்தனர்.

“இருங்க நானும் வர்றேன்.” என்று அவளும் கீழே இறங்க முயல,

“வேண்டாம்… நீங்கக் கார்ல உட்காருங்க… இந்த இடத்துல லேடீஸ் இறங்கி வர்றது அவ்வளவு சேஃப் கிடையாது…” அவள் இறங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தான்.

“அதெல்லாம் ஒன்னும் கிடையாது. இத்தனை பேர் சுத்தி இருக்கும்போது என்னவாகிடும்?” பிடிவாதமாக அவனோடு இறங்கி நடந்து கொண்டே கேட்டாள். ரிமோட்டை உபயோகித்து காரை லாக் செய்தான்.

கூட்டத்தை விலக்கிப் பார்த்தான்.

இரண்டு கார்களும் மோதி முன்பகுதி முழுவதுமாகச் சேதமடைந்து இருந்தது. காரில் அமர்ந்து இருந்தவர்களை முயன்று மீட்டுக் கொண்டிருக்க, ஸ்ரீதரனும் பரபரப்பாக அவர்களோடு சேர்ந்து கொண்டான். அதற்குள் ஆம்புலன்சும் வந்துவிட, ஒவ்வொருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு உதவி செய்து முடித்து விட்டு நிமிர்வதற்குள் ஏகத்துக்கு வியர்த்துப் போயிருந்தது.

தமிழ்நதி அவளது பங்குக்கு விபத்தில் சிக்கியிருந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்துகொண்டிருந்தாள்.

போலீசும் வந்துவிட, பரபரப்பாக ட்ராபிக்கை வேறு வழியில் மாற்றி விட்டுக் கொண்டிருந்தனர்.

காரணம் அந்தச் சாலை ஏற்கனவே குறுகிய ஒன்று.

அதில் இரண்டு கார்களும் மொத்தமாக வழியை மறைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகி இருக்க, அதே வழியில் மற்ற வாகனங்களை அனுப்ப முடியாத நிலையில், வேறு வழியில் வழிமாற்றி விட்டுக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்ததும் ஸ்ரீதரனுக்குத்தான் மனம் பக்கென்று இருந்தது.

வேறு வழியில் செல்ல வேண்டுமே… பயணம் ஆரம்பித்தது முதல் இரண்டாவது முறையாக வழியை மாற்றியாகி விட்டது.

காரை ஓரமாக நிறுத்தி விட்டு வந்தவன். அடிப்பட்டவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்ப உதவிவிட்டு தமிழ்நதியை நோக்கி வந்தான்.

தமிழ்நதி சாலையின் ஓரமாக நின்று கொண்டு அனைவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு அவனது செயல் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. போகின்ற அத்தனை கார்களுக்கும் நிற்கவில்லை. ஏதோ ஒன்றிரண்டு பேர் தான் நின்றதும்.

இந்த மாதிரி ஆபத்து சமயத்தில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் தான் குறியாக இருப்பார்கள்.

உதவ முடிந்தாலும் கூடப் காவல்துறை விசாரணைக்குத் தாங்களும் ஆட்பட வேண்டியிருக்குமோ என்ற பயத்தில் தப்பித்துச் செல்பவர்களைத்தான் பார்த்து இருக்கிறாள்.

ஏன் அவளுமே சட்டென்று இது போன்ற காரியங்களில் இறங்கிவிட மாட்டாள் தான். ஊர் விட்டு ஊர் வந்து ஏதாவது சிக்கலில் சிக்கி விட்டால் என்னாவது என்ற எண்ணம் ஒரு ஓரமாக இருக்கும்… ஆனால் ஸ்ரீதரன் இறங்கி வேலை செய்யும்போது அவளையும் அறியாமல் அவளும் அடிபட்டவர்களுக்கு உதவினாள்.

மனம் இன்னதென்று அறிய முடியாத திருப்தியில் ஆழ்ந்திருந்தது.

இத்தனை பேருடைய உயிரைக் காப்பாற்ற நாமும் உதவியிருக்கிறோம் என்ற திருப்தியில் மனம் லயித்து இருந்தது.

அதே திருப்தியோடு ஓரமாக நின்று கொண்டு போலீசிடம் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதரனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் தனக்கு தெரிந்தவற்றை விளக்கமாக அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தான். அவர்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே விபத்து நேரிட்டு விட்டபடியால் அவனை அதிக கேள்வியும் கேட்கவில்லை.

அனைத்தையும் முடித்து விட்டு அவளை நோக்கி வந்தவன்,

“வாங்க தமிழ்… கிளம்பலாம்…” என்று அழைத்துக் கொண்டு போக,

“பரவால்லையே… இவ்வளவு ஹெல்ப் பண்றீங்க…” பாராட்டாகக் கூறினாள்.

“மனுஷனுக்கு மனுஷன் இந்த ஹெல்ப் கூடச் செய்யாம எப்படி?” என்று கேட்டவன், காரைத் திறந்தான்.

“ம்ம்ம்ம்… யு ஆர் ரைட்…” என்றவள் காரிலிருந்து தண்ணீர் கேனை எடுத்து அவனது கைக்கு ஊற்றினாள்.கையெங்கும் ரத்தம் அப்பியிருந்தது. சட்டையிலும் ரத்தம் பட்டிருக்க,

“வேற ஷர்ட் இருந்தா மாத்திக்கங்க… ப்ளட் ஸ்டைன் ரொம்ப இருக்கு…” என்று கூற, பின்புறமிருந்த டிக்கியை திறந்தவன், பையிலிருந்து ஒரு டிஷர்ட்டை எடுத்தான்.

சட்டையைக் கழற்றி டிக்கியில் போட்டவன், வாட்சையும் கழற்றி விட்டுத் தண்ணீருக்காகக் கை நீட்ட… அவளையும் அறியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தமிழை பார்த்து,

“தமிழ்… வெள்ளம்… சாரி தண்ணீர் ஊத்துங்க…” என்று கேட்டான். உறக்கத்திலிருந்து விழித்தது போல விழித்தவள். அவனது கைக்கு நீரை ஊற்றினாள்.

ரத்த கறைகளை அழுத்திக் கழுவினான் ஸ்ரீதரன்.

வெறும் பனியனை மட்டுமே அணிந்திருந்த அவனின் புஜம் உருண்டு திரண்டு இருக்க, நிமிர்ந்து அவனைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது அவளுக்கு.

பரந்து விரிந்திருந்த மார்பும் சற்றும் கீழ் இறங்காத வயிறும் அவனை ஆணழகனாகக் காட்ட… நிமிர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறினாள் தமிழ்நதி.

அவளுக்கு அந்த நிமிடம் ஒரு புது விதமான அனுபவம்.

உணர்வுகள் வேறு பாதையில் அவளைக் கொண்டு செல்கின்றன என்பது புரிந்தாலும் அதை அவளால் இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

அவளுடைய ஃபேஷன் உலகத்தில் ஆண்களைப் பார்க்காதவள் இல்லையே.

ஆண்களுக்கான உடை வடிவமைக்கும்போது மாடல்களைக் கையாள்வது எப்போதும் நடக்கும் ஒன்று தானே!

அப்போதெல்லாம் சற்றும் தடுமாறாத மனம் சந்தித்து நான்கு மணிநேரமேயான இவனிடம் ஏன் இப்படித் தடுமாறுகிறது?

அதிலும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இது எத்தகைய தவறு?

முயன்று பார்வையை விலக்கியவள், விலகிச் சென்று காரினுள் அமர, ஸ்ரீதரன் டிஷர்ட்டை அணிந்தபடி உள்ளே வந்தமர்ந்தான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்குல்ல தமிழ்…” பட்டனை அணிந்து கொண்டே அவன் மகிழ்ச்சியாகக் கேட்டான். அவள் அவனைப் புரியாத பார்வை பார்த்தாள்.

“ஹாங்… என்ன?” என்பதைப் போல அவள் பார்த்த பார்வையைக் கண்ணாடியின் வழியே பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“எந்தா தமிழ்?” விபத்தைப் பார்த்ததால் அதிர்ந்து விட்டாளா என்று எண்ணியவன் தனக்கு தானே தலையாலடித்து கொண்டான்.

இந்தப் பெண்ணுக்கு இதிலெல்லாம் அனுபவம் இருக்குமா என்றெல்லாம் நினைத்துப் பார்க்காமல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கி… கடவுளே என்று தன்னை நினைத்தே கோபம் வந்தது அவனுக்குள்!

அதிலும் அவளுக்குத் திருமணம் என்று வேறு பார்த்தி கூறியிருந்தானே!

“ஷாக்காயோ? ஆக்ஸிடென்ட்ட பார்த்து…”

“இ… இல்ல…” அவனது முகத்தைப் பார்க்காமல் வேறு புறம் பார்த்தாள்.

“அப்புறம் ஏன் ஒரு மாதிரியா பேடிச்சு போயி?” புரியாமல் அவன் கேட்டான்.

“ஒன்னும் இல்ல… நத்திங்…” என்று அவள் கூற, அவளைப் புருவம் சுருங்கப் பார்த்தான். அதற்குள் அவள் தன்னை தானே தெளிவாக்கி கொண்டு… இயல்பான புன்னகையை படர விட்டவள்,

“கிளம்பலாமா? டைம் ஆகுது…” என்று கூறினாள்.

“சாரி… உங்களைப் பற்றி நினைக்கவே இல்ல… ஹெல்ப் பண்ற அந்த மூட்ல உங்களுக்கும் டைம் ஆச்சுங்கறதை மறந்துட்டேன் தமிழ்…” என்று மன்னிப்பு கேட்டவனை பின்னால் அமர்ந்திருந்தவள் கூர்ந்து பார்த்தாள்.

நாளை வீட்டுக்குப் போய்விட்டால் இவன் யாரோ நாம் யாரோ! எதோ அருகில் இருப்பதால் தடுமாறுகிறோம். கண் பாராதது கருத்திலும் நிலைக்காது. அதிலும் லேசான தடுமாற்றம்… அவ்வளவே… ச்சே தமிழ்… இதெல்லாம் நமக்குப் பெரிய விஷயமா என்று வாஸந்தி கேட்பது போலத் தோன்றியது.

அவள் மௌனமாகவே அமர்ந்திருக்க, காரைப் காவல்துறை திருப்பி விட்ட பாதையில் திருப்பினான்.

விதியும் அந்தப் பாதையில் திரும்பியது!