சந்திரஞ்சா – Teaser

IMG-20220403-WA0016-ab5348a7

சந்திரஞ்சா – The beginning

ஆட்டம் – 1

1994!

பொள்ளாச்சி!

சதுரங்க ஆட்டம். சந்திரஞ்சா, அஷ்டபாதா என இருபெயர்களில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டது. இந்தியாவில் உருவான சந்திரஞ்சா காலப்போக்கில் சதுரங்க விளையாட்டாக மருவியது.

பொள்ளாச்சியில் உள்ள அந்த அரண்மனையின் மிக பகட்டான ராஜ அறை அது. அரண்மனையின் மிகப்பெரிய அறையும் கூட. அதன் நடுவே இருந்தது அந்த சதுரங்க பலகை.

வெறும் சதுரங்க பலகை அல்ல அது. வெள்ளையன் வெளியேறும் போது இந்த அரண்மனையை ஆண்ட அரசருக்கு, அவரின் அறிவின் ஆற்றலையும், துணிவையும், வீரத்தையும் கண்டு வியந்து பரிசாகத் தந்துவிட்டுச் சென்ற, உலகிலேயே மிகத் தரமான விலையுயர்ந்த கல்லால் செய்யப்பட்ட பலகை அது.

ஆட்டம் சில மணி நிமிடங்களுக்கு முன்பே தொடங்கியதற்கு அறிகுறியாக இரு பக்கமும் வீரர்களும் படைகளும் கலைந்திருந்தது. இரு ராணிகளும் முன்னேற்றப்பட்டிருந்தனர்.

ஒரு பக்கம் பொன்னால் ஆன சதுரங்க காய்களும், மறுபக்கம் வன்பொன்னும் (Platinum) வெள்ளியும் பிணைந்து ஆன சதுரங்க காய்களும் தங்கள் செழுமையையும், இராஜரீகத்தையும் எடுத்துரைக்க தனது பொன் ராணியை நகர்த்தியது ஒரு கரம்.

கரத்தின் சொந்தக்காரனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை. விழியில் ஒரு துடிப்பு.

தனது ராணியை அவன் மறுபக்கம் நகர்த்தியிருக்க, மறுபக்கம் இருந்தவனும் தனது ராணியை பணயம் வைக்க துணிந்தான். அவன் விழியில் வாகையை தேடும் பளபளப்பு. எப்போதும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கும் ஒரு வெறி.

தனது இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை வருடினான். அது அவனின் பழக்க வழக்கங்களில் ஒன்று. அவனுக்கு தேவையானதை அடையும் போதோ அல்லது முக்கியமான நொடிகளிலோ அவன் இதை செய்வது வழக்கம்.

ஒரு கர்வ புன்னகையுடன், தனது ராணியை தான் இழந்துவிட மாட்டோம் என்ற நம்பிக்கையுடனும், இதழோரத்தில் தோன்றிய புன்னகையுடனும் தனது வன்பொன் ராணியை எதிர்ப்பக்கம் நகர்த்தி வைத்தான் சித்தார்த் அபிமன்யு.

சித்தார்த் அபிமன்யு. ஏழு வயதை அடைந்த இந்த அரண்மனையின் மூத்த வாரிசு. முடிசூடா அடுத்த அரசன். அதற்கே உடைய திமிரையும், நிமிர்வையும் இவ்வயதிலேயே மிக அதிகம் கொண்டவன். தன்னை சுற்றி நிகழும் சிறிய நிகழ்வை கூட காணாமலேயே அறிபவன்.
இவ்வயதிலேயே அளந்து பேசும் குணமும், எதிரில் இருப்பவரை எளிதில் எடை போடும் எண்ணமும், அடுத்தவரை ஆட்டி வைக்கும் திறமும் கொண்டு, எதிர்காலத்தில் தன் கண்ணசைவில் எதிரில் இருப்போரை இருக்கும் இடம் தெரியாது வைக்கப்போகும் இளம் சக்கரவர்த்தி.

அனைத்தும் அவன் பாட்டனாருடைய பயிற்சி.

தனது ராணியை சித்தார்த் அபிமன்யு நகர்த்தியவுடன், எதிரில் இருந்தவனின் விழிகளில் ஒரு கூர்மை.

அவன் விக்ரம் அபிநந்தன்.

அபிமன்யுவின் சகோதரன். அபிமன்யுவின் தந்தையும், விக்ரமின் தந்தையும் உடன் பிறந்த சகோதரர்கள்.
அபிமன்யுவை விட விக்ரம் நான்கு மாதங்கள் சிறியவன்.

அவன் வேகம் என்றால் விக்ரம் விவேகம். சத்ரிய வல்லமை அதிகம் வாய்ந்த தளபதி அவன். நுண்ணறிவு, சிந்தனை, கவனம், முடிவெடுத்தல், மதிப்பீடு, நினைவகம் அனைத்தும் ஒருங்கே அமைந்த சாணக்கியனின் புத்தி அவனுக்கு.

எதிர்காலத்தில் அனைவரையும் தன் முடிவால் கதிகலங்க வைக்கப் போகும் சத்ரியன்.

அடுத்த நகர்வுக்காக அவன் தனது கரத்தை, காயை நகர்த்த முடிவெக்க கையை எடுத்தபோது, அரண்மனையின் கீழ் ஒரே பரபரப்பும், ஓங்கிய சத்தமும்.

அடுத்த நொடியே தேக்கும் சந்தனமுமான நாற்காலியில் இருந்து எழுந்த இருவரும், வேகமாக அறையை விட்டு வெளியேற, செல்லும் அவசரத்தில் தங்கள் ராணிகள் எதிர்ப்பக்கம் இருப்பதை முற்றிலும் மறந்தனர்.

இனி தங்கள் ராணிகள் தங்களிடம் வர, பல வருடங்கள் ஆகும் என்பதை இந்த விளையாட்டு உணர்த்தியதை இருவருமே அறியவில்லை.

To be continued…