சமர்ப்பணம் 1

  lakshmi agarwalக்கான பட முடிவுகள்

திருமதி. லக்ஷ்மி அகர்வால் அவர்களுக்கும், தாயாய்…     சகோதரியாய்… தோழியாய்… தாரமாய்… மகளாய் மிளிரும் உலகின் அனைத்து பெண்களுக்கும்                                                 “சமர்ப்பணம்”

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”

        – மகாகவி பாரதியார்.

                        சமர்ப்பணம் 1

(மருத்துவக் குற்றம் – மருத்துவத் தொழிலுக்குள் செய்யப்படும் பரந்த அளவிலான சட்டவிரோத செயல்கள். கட்டணம் பிரித்தல், கிக்பேக்குகளை எடுத்துக்கொள்வது அல்லது வழங்குதல், விலை நிர்ணயம், மோசடி பில்லிங், கடுமையான தீங்கு விளைவிக்கும் தேவையற்ற மருந்துகள் கொடுப்பது, ஸ்கேன்கள், டெஸ்டுகள் எடுக்கச் சொல்வது, எல்லை மீறி நோயாளிகளிடம் பாலியல் குற்றம் புரிவது, பணம் செலுத்தவில்லை என்றால் டிரீட்மென்ட் கொடுக்க மறுப்பது, மீதி பணம் செலுத்தும் வரை இறந்தவரின் உடலைத் தர மறுப்பது, ஆபரேஷன்களைச் செய்தல் ஆகியவை அடங்கும்.)

அன்று –2013 ஆம் ஆண்டு    

இடம் — GOLDEN CRESCENT – ஐந்து நட்சத்திர ஹோட்டல், நுங்கம்பாக்கம், சென்னை.

தேவ தேவம் பஜே திவ்யப்ரபாவம் |

ராவணாஸுரவைரி ரணபும்கவம் ||

ராஜவரகரம் ரவிகுலஸுதாகரம்

ஆஜானுபாஹு னீலாப்ரகாயம் |

ராஜாரி கோதம்ட ராஜ தீக்ஷாகுரும்

ராஜீவலோசனம் ராமசம்த்ரம் ||

என்ற அன்னமாச்சார்யா கீர்த்தனை வரிகள் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாவின் தெய்வீக குரலில், அந்த ஹோட்டல் லாபியில் ஒலித்துக் கொண்டு இருந்தது. அதைக் கேட்டுக் கொண்டு இருந்த இதயங்கள் தங்களையும் அறியாமல் உருகி கொண்டு இருந்தது.

பல்வேறு வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாவுக்கு வந்திருந்த வெளிநாட்டவர்களுக்கு இந்தப் பாடலின் உட்கருத்தை விளக்கிச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் ஸ்ரீவத்சனும், அவன் தங்கை லலிதாம்பிகையும் அந்த ஹோட்டலின் வெளி வாயிலில் நின்று. அந்த ஹோட்டலின் தற்போதைய உரிமையாளர்கள் இவர்கள் இருவரே.

ஸ்ரீவத்சன் சட்டென்று பார்க்க, கனா படத்தில் வரும் தர்சன் போலவும், அவன் தங்கை லலிதா நடிகை நஸ்ரியா சாயலிலும் இருந்தார்கள்.ஸ்ரீவத்சன், லலிதா இருவருக்கும் வயது இருபத்தி எட்டிலிருந்து முப்பத்திற்குள் இருக்கும். படித்தது ஹோட்டல் மேனேஜ்மென்ட்.

 

அந்தி சூழும் மாலை நேரம் அது. மழைக்காலம்… எப்படியொரு காதலி தன் காதலனை வேறு எந்தப் பெண்ணின் கண்ணிலும் படாமல் மறைத்து வைக்க முயல்வாளோ, அதே போல் வான பெண்ணவள் தன் மேகம் என்னும் திரை கொண்டு சூரிய காதலனை முழுவதாய் மூடி இருக்க, எங்கும் அந்தகாரம் சூழந்து இருந்தது.

மன இருளை அழிக்க இறைவனின் அருள் தேவை என்பது போல் மின்னல், சாட்டையடிகளாய் வானத்தை ரெண்டாய் பிளந்து கொண்டு இருந்தது.

ஈரப்பதத்தை சுமந்த மழைக்காற்று தேகத்தை சிலிர்க்க வைக்க, அங்கு வந்திருந்த வெளிநாட்டவர் தங்கள் புகைப்பட கருவிகளில், இயற்கையின் இந்த நடனத்தைச் செதுக்கி கொண்டார்கள்.

வரவேற்ப்பு தூணாய், அந்த ஹோட்டலின் வாயிலில் பளிங்கினால் செய்யபட்ட இரு யானை சிலைகள் வானை முட்டி நின்றிருக்க, அதில் செதுக்க பட்டு இருந்த மேவார் (mewar), மார்வார்(marwar), காங்கிரா(kangra), ஹாடோடி(hadoti) போன்ற Miniature ஓவியங்கள் இந்தியாவின் கலாச்சாரத்தைப் பறையறிவித்து கொண்டு இருந்தது.

கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான, சிறிய ஓவியங்கள் அந்தப் பளிங்கு யானைகளை அலங்கரித்துக் கொண்டு இருந்தன. அதைப் போட்டோ எடுக்கவும் நிறைய கூட்டம் நின்று இருந்தது.

‘GOLDEN CRESCENT/தங்கபிறை’ -வேர்ல்ட் லக்சுரி ஹோட்டல் அவார்ட்ஸ், இன்டர்நேஷனல் ட்ராவல் அவார்ட்ஸ், ஹோட்டல் ஆப் தி இயர் அவார்ட் என்று பல விருதுகளை வாங்கி குவித்துக் கொண்டு இருந்தது.

“Mr. வாட்சன், மிஸ். லொலிடா நெக்ட்ஸ் டைம் நாங்க இந்தியா வரும் போது உங்க ஹோட்டலில் தான் தங்குவோம். சச் ஹாஸ்பிடலிட்டி, வி ஹாட் அ வொண்டர்புல் ஸ்டே. தேங்க் யு.” என்று கிளாடியா என்ற பெண்மணி அவர்களிடம் பிரியா விடை பெற்று கொண்டிருந்தார்.

கிளாடியா மட்டும் அல்ல அங்குத் தங்க வந்திருந்த அனைவரின் ஏகோபித்த கருத்து அதுவாகத் தான் இருந்தது. இத்தனை விருதினை வாங்கியதன் அர்த்தம் அந்தத் தரம், சுத்தம், சுகாதாரம், ‘அதிதி தேவோ பவ’ என்று விருந்தினர்களைத் தெய்வத்திற்கு சமமாய் பார்த்துக் கொண்ட அந்த அன்பு, இத்தனை பெருமையை அவர்களுக்குப் பெற்று கொடுத்திருந்தது.

இப்படி கிளம்பி செல்லும் ஒவ்வொருவரிடமும் நினைவுப் பரிசு கொடுத்து, அவர்கள் அன்பில் நனைந்து, புன்னகையுடன் நின்று கொண்டிருந்த அவர்களை நெருங்கினான் அவர்கள் ஹோட்டல் மேனஜர். எதையோ ஸ்ரீவத்சன்     காதில் அவன் சொல்ல, புன்னகையை தொலைத்து கோபத்தை தத்து எடுத்தது அவன் முகம்.

ஸ்ரீவத்சன் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்ட லலிதா, என்னவென்று கண்களால் வினவ, அவள் காதில் எதையோ சொல்ல அவள் முகமும் பேய் அறைந்ததை போல் வெளுத்துப் போனது.

எதிரே விடை பெற்று கொண்டு இருப்பவர்கள் இருக்க, அவர்கள் முன் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளைக் காட்டாமல் மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் அவர்கள் இருவரும்.

லலிதாவை நிறுத்திய ஸ்ரீவத்சன், “வேண்டாம் நீ இங்கேயே நில்லு. அவன் கண்ணில் பட்டு வைக்காதே. உள்ளே நான் பார்த்துக் கொள்கிறேன் ஏதாவது பிரச்சனை கிளப்புவான். இவங்க இப்போ தான் நம்மை ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்துட்டு இருக்காங்க. டிரைவருங்க கிட்டே சொல்லி ஏர்போர்ட்டிற்கு இவங்களை கொண்டு செல்லும் வண்டிகளைக் கிளப்ப சொல்லு.

நான் எவ்வளவு முடியுமோ சமாளித்து பின் வாசல் வழியாக, அவனை இவங்க கண்ணில் படாம அனுப்பி வைக்கப் பார்க்கிறேன் எதற்கும் அவன் வரும்போது லாபியிலும் இங்கேயும் யாரும் இல்லாம பார்த்துக்கோ.” என்றவன் மற்றவர்களிடம் எக்ஸ்கியூஸ் கேட்டு மேனஜர் பின் தொடர உள்ளே விரைந்தான்.

யாரையும் கண்டு கொள்ளாமல், எதிர்ப்பட்டவர்களின் ‘ஹாய், ஹலோவிற்கு’ தலையை மட்டும் அசைத்து விட்டு, அந்த ஹோட்டலின் உணவகத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் நடந்து இல்லை ஓடிக் கொண்டு இருந்தான் ஸ்ரீ.

விருந்தினர்களைக் கார், பஸ்களில் ஏற்றவும், அவர்களுக்கான ரூம்களுக்கு அனுப்பவும் லலிதா மின்னல் வேகத்தில் சுழன்று கொண்டு இருந்தாள். முகத்தில் எதையும் அந்த ஹோட்டல் பணியாளர்கள் காட்டவில்லை என்றாலும், அவர்களின் கண் எப்பொழுதும் உள் வாயிலின் மேல் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாதே என்று ஊரில், உலகில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.

ப்ரம்மாண்டமான வரவேற்பு அறையைக் கடந்த பின் உள்ளே கண் முன்னே விரிந்தது அந்த ஹோட்டலின் தரை தளம். பண செழுமையுடன் கலையின் செழுமை அங்கே அதிகமாய் இருந்தது. ஏதோ ஒரு சக்ரவர்த்தியின் கோட்டைக்குத் தான் வந்து விட்டோமோ என்று எண்ண தோன்றும் அளவிற்கு கண்ணை, மனதை குளிர்விக்கும் வண்ணம் இருந்தது அந்தத் தரை தளம்.

அந்த ஹோட்டல் முழுவதையும் சுற்றி பார்க்க ஆரம்பித்தால், அதற்கே ஒரு வாரம் தேவைப்படும் என்று சொல்லும் அளவிற்கு பழங்கால பொருட்கள், சிற்ப வேலைப்பாடுகள், மர செதுக்கல்கள், கை வினை பொருட்கள் என்று பார்ப்பவர்களை மதி மயங்க வைத்துக் கொண்டு இருந்தது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத பிரம்மாண்டம், பிரமிப்பு ஏற்படுத்தும் கட்டிட கலை, கலை பொருட்கள் என்று மனம் நிறையும் அந்த உணர்வினை, நம்ப முடியாத அந்த மாயலோக பிம்பத்தை அங்குச் சென்றால் தான் உணர முடியும்.

ஸ்ரீவத்சன் கண் அசைப்பில் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த கெஸ்ட்களை, ஹோட்டல் பணியாளர்கள், இன்னொரு அறையில் ஏற்பாடு செய்திருந்த இருந்த கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றார்கள்.

கையெழுத்து போன்ற பார்மாலிட்டிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று அந்தத் தரை தளத்தில் யாருமே இல்லாத வண்ணம் ஹோட்டல் பணியாளர்கள் பார்த்துக் கொள்வதை சிறு தலை அசைப்புடன் அங்கீகரித்தவாறு உணவகத்தை நோக்கிச் சென்றான் ஸ்ரீவத்சன்.

சேர்த்தாலா புல்லாங்ழலில் வாசித்த ‘இன்னிசை பாடிவரும்’ என்ற பாடலின் புல்லாங்குழல் இசை, கேட்பவர் மனதை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தது.

உணவகத்தை நெருங்க நெருங்க அந்த அமைதியான சூழ்நிலை கெடுப்பது போன்று கர்ண கொடூரமாய் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது அந்த குரல் .

“டேய் நான் யாருன்னு தெரியுமாடா? இந்த ஹோட்டல் ஓனர்டா…”என்று உச்சஸ்தாயில் கத்தி கொண்டு இருந்தவனை ரெண்டு, மூன்று பேர் சேர்ந்து அப்புறபடுத்த முயன்று கொண்டு இருந்தார்கள் .

ஸ்ரீவத்சன் உள்ளே நுழையவும் ஹோட்டல் பணியாளர் ஒருவர், அவன் கையால் அடி வாங்கி கீழே விழ இருந்தவரை தாங்கி பிடிக்கவும் சரியாய் இருந்தது. சற்று முன் நிரம்பி இருந்த அந்த உணவகம் அவனால் காலியாகி இருப்பதை கண்ட ஸ்ரீ கோபத்தில் கொதிக்க ஆரம்பித்தான்.

அவனை தள்ளாத குறையாய் தள்ளி, காலியாக இருந்த கான்பிரென்ஸ் ஹாலுக்குள் கொண்டு செல்வதற்குள், ஸ்ரீவத்சனுக்கு மட்டும் அல்ல பணியாளர்களுக்கும் தலை சுத்தி போனது .

கோபத்தில் எதிரில் இருந்தவனை அறைந்து விடலாமா என்று தோன்றி விட்டது ஸ்ரீக்கு.இதற்கும் அவன் பொறுமைசாலி. எளிதில் கோபப்படாதவன். அப்படி பட்டவனையே “இவன்” வெறியேற்றி கொண்டு இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும் .

“இங்கே உனக்கு என்ன வேலை? உன் அப்பா தான் இந்த ஹோட்டலை என்னிடம் விற்று விட்டார் இல்லையா? முழு பணமும் செட்டில் செய்து விட்டேன். ஆறு மாதம் முன்பிருந்தே இந்த ஹோட்டல் என் உரிமை ஆகி விட்டது. இனி இப்படி வந்து குடித்து விட்டு ரகளை செய்யாதே. உன்னால் ஹோட்டலுக்கு, குடும்ப பெண்கள் யாரும் வருவதில்லை.” என்றான் கோபத்தோடு எங்கேயோ பார்த்து கொண்டு .

“ஏய்!” குழறலாக வெளி வந்தது அவன் குரல்.

“நான் வருவது தெரிந்தால் எல்லா குஜிலிஸ் லைன் கட்டி வருவாளுங்க பாரு. இந்த மாமன் மேல் குட்டிகளுக்கு அவ்வளவு xxxx.” என்று காதில் கேட்க முடியாத தரம் கெட்ட வார்த்தைகள் வந்து விழ, ஸ்ரீக்கு அவனை தூக்கி போட்டு, நாலு மிதி மிதிக்கவேண்டும் என்ற வெறியே எழுந்தது.

இவனுக்கு என்ன என்று சொல்லி புரியவைப்பது? ஸ்ரீ நடத்துவது 5 ஸ்டார் ஹோட்டல். குடும்பங்கள் வந்து தங்கி போக என்று, ஆனால் இது அவன் வேட்டை தளம் என்று செட் செய்து, மனதிற்குள் தான் மன்மதன் என்று நினைத்து சுத்தி கொண்டு இருப்பவன் இவன். பெண்கள் என்னவோ இவன் மட்டும் தான் ஆண் என்று இவனையே சுத்தி சுத்தி வருவதாக ஒரு எண்ணம்.

பெண்கள் என்றால் அவர்கள் தன் படுக்கை அறைக்கு மட்டுமே என்று வயது வித்தியாசம் பார்க்காமல் தொட நினைக்கும் கேடுகெட்ட பக்கா வுமனைசர். ஆனால் முதல் முறை அவனை பார்க்கும் போது சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் இவன் வக்கிரபுத்தி கொண்ட மிருகம் என்பதை. முகத்தில் அப்படி பால், தேன் வழியும். “நான் பச்சை மண்ணு, அமுல் பேபி” என்று ஸ்டாம்ப் இருக்கும். ஆனால் அவன் பூ நாகம். வெளியே தெரியாமல் இருக்கும் அவன் விஷத்தன்மை.

அரை மணி நேரம் முன்பு தான் வந்து இருந்தான். உள்ளே வரும் போதே ட்ரக்ஸ் எடுத்திருந்தவன், சாப்பிட வந்த உணவை மட்டும் எடுத்து கொண்டால் பிரச்சனை ஏது?

அங்கேயே சரக்கு பாட்டில் திறந்து, குடும்பத்தோடு சாப்பிட்டு கொண்டு இருக்கும் பெண்களை டீஸ் செய்து, அதில் ஒரு பெண் தடுக்கி விழுவது போல் விழுந்து, அவர்கள் சாப்பிடாமலேயே கிளம்பி விட , தகவல் கேட்டு பதறி அடித்து ஓடி வந்தான் ஸ்ரீவத்சன்.

அவனே பாவம் வடிவேலு காதலன் படத்தில் பாடுவது போல் ,

பத்தலை பத்தலை காசு கொஞ்சம் கூட பத்தலை

ஓரண்ணா ரெண்டென்னா உண்டியலை உடைச்சி …

நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி

அண்டா…குண்டா அடகு வச்சோம்…”என்று கடன் வாங்கி அந்த ஹோட்டல் சொந்தக்காரன் ஆகி இருந்தான். .

ஏதோ “காவ்யா” தயவால் இப்போ தான் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அவளுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் உதவி செய்வதையே  நிறுத்தி விடுவாள்.

“இங்கே பாரு… விஷயம் உங்க அப்பா காதிற்கு கொண்டு போனேன்… உன்னை கல்லை கட்டி கடலில் இறக்கிட்டு தான் மறுவேலை பார்ப்பார்.” என்றான் ஸ்ரீ  பொறுமையை இழுத்து பிடித்து .

“என்னடா மிரட்டி பார்க்கிறியா? கொன்னுடுவேன்.” என்றான் அவன் .

‘செய்ய கூடியவன் தான். பார்த்து பேசு ஸ்ரீ. இங்கே ‘ப்ரொதெல்’ நடக்குதுன்னு கூட மொட்டை கடுதாசி எழுதி போட்டுடுவான். யார் முகத்தில் விழிச்சேன்?இந்த சனியன் கிட்டே மாட்டிட்டேனே.கடவுளே காப்பாத்துப்பா.’ என்று கடவுளிடம் சரண் அடைவதை தவிர அவனுக்கு அப்போதைக்கு வேறு வழி தென்படவில்லை.

“நான் ஏன் உன்னை மிரட்ட போறேன்? காவ்யா வரும் டைம். அவளாச்சு… நீயாச்சு. என்னை மாதிரி வார்ன் எல்லாம் செய்து கொண்டு இருக்க மாட்டா நேர வீடியோ கால் போட்டு டாடிக்கு அனுப்பிடுவா. அப்புறம் நீயாச்சு, உன் டாடியாச்சு” என்றான் ஸ்ரீவத்சன் தோளை குலுக்கி, அவன் அங்கே இருப்பதால் தனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லாமல் சொல்லியவாறு நின்றவனின் அடிமனம் மட்டும் அடித்து கொண்டது.

“காவ்யா” இந்த பெயர் தள்ளாடி கொண்டு இருந்தவனிடம் ஏற்படுத்திய பாதிப்பை நேரில் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.

“நேத்து முளைச்ச காளான் அது… என்னை…தி கிரேட் என்னை…ஒரு நாள் இருக்கு அவளுக்கு … என்னைக்கு இருந்தாலும் அவளை…கையில் சிக்காமலா போய்டுவா? வச்சிருக்கேன்…அவளை கதற விட பிளான் வச்சிருக்கேன். அவளை மட்டும் இல்லை…அவ…அவ…ஸ்ரீ” என்று செய்ய நினைப்பதை அவன் முகமே காட்டி கொடுக்க,  அருவெறுத்து போனது ஸ்ரீவத்சனுக்கு.

அவனை ஹோட்டலை விட்டு கிளப்புவதில் குறியாய் இருந்த ஸ்ரீவத்சன், அவன் உளறலை சரியாக கவனிக்கவில்லை. கவனித்து இருக்க வேண்டும். அட்லீஸ்ட் எந்த பெண்ணை டார்கெட் செய்து இருக்கிறானோ அந்த பெண்ணிடம் இதை பற்றிய எச்சரிக்கையாவது கொடுத்திருக்க வேண்டும்.

‘குடிகாரன் பேச்சு’ என்று இவன் நினைத்தது நாளை பலர் தலையில் விடிய போவதை ஸ்ரீவத்சன் அறியவில்லை. ‘ஸ்ரீ’ என்ற பெயர் அவனுக்கு மட்டுமே ஏகபோக உரிமை இல்லை என்றும் அந்த கணம் யோசிக்க தவறினான்.

‘வேணாம் ஸ்ரீ…பொறுமை…பொறுமை…இவன் புத்தி பற்றி தான் தெரியுமே. இவன் இன்னும் இங்கிருந்தால் பிரச்சனை தான் அதிகமாகும். இவனை வெளியே முதலில் அனுப்ப வழி பாரு. காவ்யா கிட்டே எல்லாம் இவன் சங்கதி செல்லாது. அவளுக்காக பார்த்தால் இத்தனை நாள் கட்டி காத்த மானம் எல்லாம் கப்பல் ஏற்றிடுவான்.

இன்னைக்கு என்று பார்த்து நிறைய டூரிஸ்ட் வராங்க. இவனை முதலில் அப்புற படுத்து.’ என்று தன்னையே சமாதானம் செய்து கொண்ட ஸ்ரீவத்சன், கை தாங்கலாய் அழைத்து சென்று அவனை காரில் ஏற்றி, காரை தள்ளி விட்டு வராத குறை .

காரில் கிளம்பியவனை கண்டு,”அப்படியே போய் காரோடு கூவம் ஆற்றில் விழுந்து சாவூ… உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது…” என்று சத்தமாகவே சொன்னான் ஸ்ரீவத்சன்.

இப்படி ஒருவனால் வாழ்த்தபடுகிறான் என்றால், வாழ்த்தை பெற்றவன் எவ்வளவூ நல்லவனாக இருக்க வேண்டும். சட்டென்று இன்னொரு மனிதனை பார்த்து “செத்து தொலை” என்ற வார்த்தை, சுலபமாய் யார் வாயிலும் வந்து விடாது. ஆனால் பலர் வாயில் இதை வரவழைத்த உத்தமன் “இவன்”

பார்கிங் லாட் விட்டு கிளம்பிய கார் ஹோட்டல் வாயிலை கடந்த சமயம் அங்கு வந்து நின்ற CHEVROLET SAIL வெள்ளை நிற காரில் இருந்து இறங்கினாள் காவ்யா உடன் இரு பெண்கள்.

ரம்பை, மேனகா, ஊர்வசி என்ற வான லோக அப்சரஸ்கள் தான், வானத்தை விட்டு கீழ் இறங்கி விட்டதோ என்று வியக்க தோன்றும் அளவிற்கு இருந்தனர் அந்த பெண்கள் மூவரும்.

காவ்யா, சுமித்ரா, தனுஸ்ரீ -பிரம்மனின் அதி ஸ்பெஷல் படைப்பு அந்த பெண்கள் மூவரும் .

கண்ணை கூட சிமிட்டாமல் அவர்களை வெறித்தான் காருக்குள் இருந்தவன். தன் கையை உயர்த்தியவன் தூரத்தில் நடந்து வந்து கொண்டு இருந்த இவர்களின் உச்சி முதல் பாதம் வரை தொடுவது போல் தன் கையை இறக்கி கொண்டு வந்தான்.

அருகில் இருந்த மது பாட்டிலை முழுதாய் வாய்க்குள் சரித்து நிமிர்ந்த அவன் கண்கள் செக்கச்சிவந்து, அந்த மூன்று பெண்களை விழுங்க வரும் அரக்கனின் வெறியோடு ஜொலித்தது.

கண்களால் அந்த மூன்று பெண்களையும் துகில் உறிந்து, கற்பனையில் அவர்களை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அது அனைத்தையும் செய்து கொண்டிருந்த அவனை கலைத்தது அவன் மொபைல் அழைப்பு.

“சார் எட்டாம் நம்பர் பெண்ணிற்கு நார்மல் டெலிவரி ஆகிடும் சார்” என்றது எதிர்முனை .

“அவளுக்கு நார்மல் டெலிவெரி ஆகவா அவ்வளவூ பெரிய ஹாஸ்பிடல் நடத்தி கொண்டு இருக்கிறேன்? நார்மல் டெலிவெரி ஆக கூடாது. ஆபரேஷன் தான் செய்யணும். அப்போ தான் பணம் நிறைய கிடைக்கும். வந்துட்டே இருக்கேன். குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யணுமோ செய்” என்றான் இவன் .

“சார்…சார் இங்கே தான் சார் இருக்கார். ஏற்கனவே தூண்டி, துருவி கேள்வி கேட்டு, கணக்கை எல்லாம் ஆராய ஆரம்பித்து இருக்கார் சார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே பிபி இருக்கு சார். ஏடாகூடமாய் ஏதாவது ஆகி போச்சுன்னா… ஏற்கனவே அட்மிட் ஆன ‘ஸ்வாதி’ பெண்ணை காணவில்லை என்று சார் போலீஸ் கூட்டிட்டு வந்து விசாரணை செய்துட்டு இருக்கார் சார். விஷயம் வெளியே தெரிந்தால் மாட்டிப்போம் சார்.” என்றது எதிர்முனை பயத்துடன் .

“சொன்னதை செய். பத்து நிமிடத்தில் அங்கு இருப்பேன். இதுவரை எவனும் கண்டு பிடிக்கலை. இனி எவனும் என்னை வெல்ல பிறக்க போவதும் இல்லை.” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

பெண்கள் மூவரும் இவன் காரை சிரித்து கொண்டே கடந்து செல்ல, அவன் கண்கள் சிவக்க ஆரம்பித்தது. அந்த மூன்று பெண்களை பார்த்ததும் ஏறி இருந்த போதை தானாக வடிய ஆரம்பித்தது. அவன் கைகள் தானாக அவன் கன்னத்தை தடவி பார்த்தது .

கையை துப்பாக்கி போலெ வைத்தவன் அதில் இருந்த ஒரு பெண்ணை பார்த்து சுடுவது போலே ஆக்ஷன் செய்து “டூமில்,டூமில் “என்றான் .

“விட மாட்டேன்…விடவே மாட்டேன்…உன் வாழ்க்கை என் கையில்…நீ எனக்கு மட்டும் தான்…பார்க்கிறேன் உன்னை யார் என்னிடம் இருந்து காப்பாற்றுவாங்க என்று பார்க்கிறேன்…யூ ஆர் மைன்” என்று காரின் உள் இருந்து வெறி கொண்டவன் போல் கத்தினான் அவன் .

மூன்று பெண்ணில் இவன் வைத்த குறி யாருக்கானது? யார் இவன்? இவன் வைத்த குறியில் சிக்கி, வாழ்க்கை தடம் மாற போவது எந்த பெண்ணிற்கு? இல்லை மூவருக்குமா?

இதில் இருந்து இவர்கள் எப்படி மீள போகிறார்கள்?

மலரில் நாகம்

மறைந்திருக்கும்

மனதுக்குள் மிருகம்

ஒளிந்திருக்கும்.

திரைப்போட்டு நீ

மறைத்தால் என்ன

தெரியாமல் போகுமா?

சிரிப்பது போலே

முகம் இருக்கும்

சிரிப்புக்கு பின்னால்

நெருப்பிருக்கும்

அணைப்பதுபோலே

கரம் இருக்கும்

அங்கே கொடுவாள்

மறைந்திருக்கும்.

அன்று அவன் எடுத்த முடிவு, நிகழ்த்திய கொடூரம் எட்டு பேரின் வாழ்வை அடியோடு சிதைத்தது. அந்த அழிவில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் இவர்கள் எழுவார்களா இல்லை வீழ்வார்களா?

 

இதயம் சமர்ப்பிக்கப்படும்.