சமர்ப்பணம் 16

(பாலியல் வன்முறையின் தாக்கம் எந்தவொரு உடல் காயங்களுக்கும் அப்பாற்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி மனதை சிதைந்து விடக்கூடும், இதனால் பயம், வெட்கம், வேதனை, கனவுகள், ஃப்ளாஷ்பேக்குகள் மற்றும் பிற விரும்பத் தகாத நினைவுகளால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். உலகம் இனி ஒரு பாதுகாப்பான இடமாக இவர்களால் பார்க்க முடியாது. இனி மற்றவர்களை நம்ப நம்ப மாட்டார்கள். உறவுகள் ஆபத்தானவை, நெருக்கம் சாத்தியமற்றது என்று உணர்வார்கள். PTSD/POST TRAMAUTIC STRESS DISORDER, பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதால் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கு உடனே கவுன்சிலிங், சப்போர்ட் குழு உதவியை நாடுவது அவசியம்.  )   

(பாலியல் வன்முறை கொலையை விட மோசமானது. கொலையுடன், ஒரு உயிர் போய் விடும் என்றாலும் பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர் சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் அதிகம் என்றாலும் இவர்கள் யாரும் தனியாய் நின்று நடந்ததை சமாளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும், பாதிக்கப்பட்டவர் பாலியல் பலாத்காரத்தை நினைத்து தன்னை ஆயிரம் கேள்விகளைக் தங்களையே கேட்டு கொள்கிறார்கள். இங்கு பாதிக்கப்படுவது உடல் இல்லை மனம். 

ஜான் கிரிஷாமின்/JOHN GRISHAM, ‘எ டைம் டு கில்’/A TIME TO KILL’, ஜேக் பிரிகான்ஸின் இறுதி அறிக்கையிலிருந்து.

காயத்திரியின் நிச்சயம் சோழிஸ்வரர் ஆலயத்தில் நடக்கவிருப்பதால் வீட்டினர், உற்றம், சுற்றம் எல்லாம் பஸ் வைத்துக் கிளம்பியிருக்க, அஞ்சலி தன் ஆடைகளைப் பையில் அடுக்கி வைத்துப் பையுடன் வெளியே வந்தாள்.

ஏறக்குறைய மூன்று வருடங்களாய் அஞ்சலியின் வீடாய் இருந்த இல்லம்.

பெங்களூருவில் சுமித்ராவின் கணவன் சேகர், அஞ்சலியைவெளியே துரத்தியதற்கு பிறகு அவளுக்கு அடைக்கலமாய் இருந்த இல்லம்.இன்று அதை விட்டுப் பிரிவது நெடுநாள் தோழியைப் பிரிவது போல் உள்ளம் அடித்துக் கொண்டது அஞ்சலிக்கு.

நேராக அஞ்சலி கால்கள் அவளைப் பூஜை அறைக்குள் அழைத்துச் சென்று நிறுத்த, கைகூப்பியவளின் கண்கள் நிறைந்தது.

‘இது தேவை தானா…இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் ஓடிக் கொண்டு இருப்பது.என் ஓட்டத்திற்கு முடிவு தான் என்ன.கெளதம் தனுவை விட்டுக் கொடுக்கமாட்டான்.என்னால் ராம் உயிரோடு விளையாட முடியாது.இவர்கள் சொல்வதால் ராம் தவறானவன் ஆகி விடுவானா என்ன.ஒரு பேப்பர் சொல்லும் அறிக்கையைத் தானே நம்புகிறார்கள்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது மட்டுமே மெய்என்று ஏன் இவர்களுக்கு எல்லாம் புரிய மாட்டேங்கிறது.கேட்பவன் அடி முட்டாள் என்றால் எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுது என்று கூடத் தான் நம்ப வைக்க முடியும்.வழி காட்டு கடவுளே.”என்று வேண்டியவாறு வெளியே வந்தவள் திகைத்தாள்.

பதற்றத்துடன் கதிர் உள்ளே வந்து கொண்டு இருந்தான்.

“ஹேய் கதிர்…என்னப்பா எதையாவது மறந்து வைச்சிட்டியா என்ன?”என்றாள் அஞ்சலி.

“மீண்டும் ராகேஷ் பக்கம் இருந்து பிரச்சனை. காயத்ரி மீம் மேட்டர் அவங்க பக்க ஆட்களுக்குத் தெரிந்து போய் விட்டதாம் அஞ்சலி. நிச்சயமே நடக்குமோ என்ற நிலையில் இருக்கிறது.

யாரிடமும் சொல்லவில்லை. யாருக்கும் இந்த மேட்டர் தெரியாது. ஏற்கனேவ நாலு பேர் பேசியதற்கே தூக்கிடம் சென்றவள், இன்று இருப்பது ஊரே கூடியிருக்கும் இடத்தில் இதைப் பற்றிப் பேச்சு எழுந்தால் தாங்குவாளா?” என்றான் கதிர்.

“என்ன சொல்றீங்க கதிர்.” என்றாள் அஞ்சலி வெண்ணெய் திரண்டு வந்தபிறகு, பானை உடைந்த கதையாய் இது என்ன புது பிரச்சனை?

“நான் கோயிலுக்குச் சென்று சமாளிக்க பார்க்கிறேன். நிலைமை கை மீறிப் போய் விட்டது என்றால் போன் செய்யறேன் அஞ்சலி. பின்னால் என் சைக்கிள் இருக்கு.

நீதான் காயத்ரியை எங்களுக்குக் காப்பாற்றி கொடுக்க வேண்டும் அஞ்சலி. ப்ளீஸ்.” என்றவன் கண்ணீரை துடைத்துக் கொண்டு காரில் ஏறிப் பதட்டத்துடன் செல்ல, அஞ்சலிக்கு உலகம் சுழன்றது.

‘கடவுளே!… வேண்டாம்… வேண்டாம் ஒருத்தியை மீட்பதற்குள் எங்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. மீண்டும் சோதிக்காதே.’ என்று பூஜை அறையில் இருந்த தெய்வங்களிடம் சரண் அடைந்தாள்.

அஞ்சலி எது நடக்க கூடாது என்று நினைத்துப் பயந்தாலோ அது நடந்தே விட்டது.

காயத்திரி திருமணம் நின்று விட்டது. காயத்திரி மேல் களங்கம் கற்பிக்க பட்டு விட்டது.

செய்தி அஞ்சலியை எட்ட விக்கித்து போனாள் அஞ்சலி.

“காயத்ரி எப்படி இருக்கா கதிர்.” என்றாள் அஞ்சலி பயத்துடன்.

“மயக்கம் போட்டு விழுந்துட்டா. எவ்வளவு தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியல. பயமாய் இருக்கு அஞ்சலி.” என்று கதிர் அழாத குறையாய் சொல்ல, இங்கே அஞ்சலிக்குக் கை, கால் நடுங்க ஆரம்பித்தது.

“இங்கே இருக்கீங்க கதிர்… எந்த ஹாஸ்பிடல்?” என்றாள் அஞ்சலி,

“ராகேஷ் வரட்டும். என்று மயக்கத்தில் கூடப் புலம்பிட்டு இருக்கா… இங்கேயே ஒரு டாக்டரை அழைத்து வந்து பார்த்துட்டு இருக்கோம்.

நீ இங்கே சீக்கிரம் வா அஞ்சலி. சைக்கிள்லில் வந்தா லேட் ஆகும். ஒரு பென்ஸ் அங்கே தான் நிக்குது… சீக்கிரம் வா அஞ்சலி. பயமாய் இருக்கு.” என்றான் கதிர்.

“இதோ வந்துட்டே இருக்கேன் கதிர்… காயத்திரிக்கு ஒன்றும் ஆகாது…” என்றவள் மின்னலாய் அந்த வீட்டின் வாயில் படியைத் தாண்டி, காத்திருந்த காரில் ஏறி அமர அவளைச் சுமந்த கார் சோழிஸ்வரர் சிவன் கோயிலை நோக்கிச் சென்றது.

பதினைந்து நிமிடங்களில் மனம் துடிக்க, என்னவோ ஏதோ என்று பதறியடித்து கோயிலுக்குள் நுழைந்தாள் அஞ்சலி.

அவளை வாயிலில் எதிர் கொண்டான் கதிர்.

“கதிர் காயுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்றாள் அஞ்சலி கண்களில் கண்ணீர் வழிய

“இதோ அந்தச் சன்னதியில் தான் இந்த விஷயத்தைக் கேள்விபட்ட உடன் மயங்கி விழுந்தாள். அங்கே தான் ட்ரிப்ஸ் ஏத்திட்டு இருக்காங்க.” என்றவன் முன் ஓட, அவனுக்கு பின்னால் ஓடி வந்த அஞ்சலி, கூட்டத்தை விளக்கி கொண்டு முன்னே செல்ல, அங்கே இறைவன் சன்னிதானத்தில் ராகினி மடியில் மயங்கி இருந்தாள் காயத்ரி.

“காயு!” என்று அஞ்சலி அலறியபடி கீழே முட்டிப் போட்டு, தன் தங்கையாய் பாவித்த அவள் நிலை கண் கொண்டு பார்க்க முடியாதவளாய் கதறி அழுதாள் அஞ்சலி.

“காயு… உனக்கு நான் இருக்கேன்… யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி எல்லாம் நினைக்காதே.

ராகேஷ் உன்னை நிஜமாய் விரும்பறார்… அவரை மட்டும் நினை.” என்று காயு கையைப் பிடித்துக் கொண்டு அஞ்சலி கண்ணீர் வடிக்க, மிக நிதானமாய் எழுந்து அமர்ந்த காயத்ரி, புன்னகையுடன் அஞ்சலி கரத்தைப் பிடித்துக் கொண்டு,

“விஷ் யு ஹாப்பி மேரீட் லைப்” என்றாள் வெகுநிதானமாய்.

அடுத்த நொடி பல திசைகளிலிருந்து மங்கள அட்சதை தன் மீது விழ என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்த அஞ்சலியின் கண்களுக்குப் பட்டு வேஷ்டி சட்டையில், கழுத்தில் மாலையோடு நின்ற கெளதம் கண்ணில் பட, திகைத்து எழுந்து நின்றாள்.

கண்களில் ஆனந்த கண்ணீருடன் சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே  இரு குடும்பத்தினரும், சதாசிவம் அய்யா, சுமித்ரா, சந்தோஷ் கூட உடன் இருந்தார்கள்.

விஷ்ணுவையும், தனுஸ்ரீ யைத்தவிர்த்து.

“ஹாய் பொண்டாட்டி!… லவ் யு டியர்” என்றவன் திகைத்த அவள் நெற்றி உச்சியில், குங்குமத்தை வைத்து, அவள் வெண்பஞ்சு காலை எடுத்து அம்மி மீது வைத்து மெட்டியை அணிவித்தான்.

‘விஸ்வருபம்’ பூஜா மாதிரி விழித்து என்ன நடந்தது என்று ஸ்லொ மோஷனில் தன் மனக்கண்ணில் ஒட்டிப் பார்த்த அஞ்சலி, தன் கழுத்தில் தொங்கி கொண்டு இருக்கும் கெளதம் கட்டிய திருமாங்கல்யத்தை எடுத்துப் பார்த்தவளின் இதயம் ஒருமுறை துடிப்பதையே நிறுத்தித் தான் விட்டது.

கெளதம் அஞ்சலியை மணந்திருந்தான்.

‘எனக்கும் என் கௌதமிற்கும் திருமணம் நடந்து விட்டதா, கடவுளே! நன்றி.’ என்று கருவறை பக்கம் விழி ஒட்டிய அஞ்சலி அடுத்த நொடி மயங்கிச் சரிந்தாள்.

காயத்ரிக்கு என்னவோ, ஏதோ என்ற பதட்டம், அப்படி ஒன்றும் இல்லையென்றதும் நிம்மதி, கௌதமையும் தன் குடும்பத்தையும்  பார்த்த  அதிர்ச்சி, அவன் மனைவி ஆகி விட்டோம் என்ற நிம்மதி, பல நாள் சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாத உடல், மனதால் அந்த உணர்ச்சி பிரவாகத்தை அதற்கு மேல் தாங்க முடியாமல் போய் விட, மயங்கிச் சரிந்தாள் அஞ்சலி

மயங்கியவளை தாங்கிப் பிடித்துக் கொண்ட கெளதம், கண்களில் ஆனந்த  கண்ணீர்.

அவன் உயிர் அவன் கைச்சேர்ந்துவிட்டது.

‘கடவுளே!… என் அஞ்சலி என் மனைவியாகிட்டா, நன்றி.’ என்று இறைவனுக்கு மனதிற்குள் நன்றி சொன்னான் கெளதம்.

                         

 கண் விழித்த அஞ்சலிக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவே சில நிமிடம் ஆனது.

பத்தடிக்கு உள்ளே அமுங்கிய பஞ்சு மெத்தை, அறையில் இருந்த குளிர், அவள்மேல் போடப்பட்டு இருந்த விலையுயர்ந்த போர்வை, எதிரே இருந்த அவள் ஆள் உயர ப்லோ அப், சொல்லாமல் சொன்னது அது கெளதம் அறை என்று.

சென்னையில் கெளதம் வீட்டில் இருப்பதை புரிந்து கொண்டாள் அஞ்சலி.

இங்கு நான் எப்படி வந்தேன் என்று திகைத்தவள், சட்டென்று தன் கழுத்தை தொட்டு பார்க்க, அங்குக் கர்வத்துடன் அவள் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது கெளதம் அணிவித்து இருந்த திருமாங்கல்யம், அஞ்சலி கௌதமிற்கு சொந்தம் என்பதை உலகத்திற்கே பறையறிவித்தபடி.

அந்தத் திருமாங்கலயத்தை தன் ரெண்டு உள்ளங்கையில் ஏந்திய அஞ்சலி அதில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீரும், அதே சமயத்தில் புன்னகையும் ஒருங்கே அஞ்சலியிடமிருந்து வெளிப்பட்டது.

‘கெளதம் பிரபாகர் என் கணவன்… கடைசியில் என் மாமு எனக்கே சொந்தம். என் காதல் முழுமை பெற்று விட்டது. இந்த நாள்…

இந்த நாள் வந்து விடாதா என்று தானே காத்து இருந்தேன்….’ என்று மனதிற்குள் அத்தனை வருடம் இல்லாத நிம்மதி, மன நிறைவு வந்திருக்க, அந்தக் கணமே கௌதமை பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழ, உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் புள்ளி மானெனத் தன் நாயகனைத் தேடி ஓடினாள் அஞ்சலி.

‘என் கெளதம்…கெளதம் …’என்று மனம் அடித்துக் கொள்ள, அந்த மாளிகை முழுவதும் அவனைத் தேடி அஞ்சலியின் கண்களும், மனமும் தேடி தவித்துக் கொண்டு இருந்தது.

‘இனி என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.கெளதம் என் கணவன்…ஆறு வருடம் கழித்து பார்க்கப் போகிறேன்….எங்கேடா இருக்கே ‘என்று மனம் அடித்துக் கொள்ள, கால்கள் தானாக ஹாலில் ஓடிக் கொண்டு இருந்த டிவி முன் நின்றது.

அங்குச் சரோஜா தேவி சிவாஜியை நினைத்து உருகி கொண்டு இருக்க,

காதல் சிறகைக் காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா..

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா..

கண்ணீர் கடலில் குளிக்கவா..

எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா..

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

இரு கைக்கொண்டு வணங்கவா..

இரு கைக்கொண்டு வணங்கவா..

முதல் நாள் காணும் புதுமணபெண்போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா..

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா..

பரம்பரை நாணம் தோன்றுமா..

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி..

பேசமறந்து சிலையாய் இருந்தால்

பேசமறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி.

அதுதான் காதல் சன்னதி.

காதல் சிறகைக் காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா.

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா.

கண்ணீர் கடலில் குளிக்கவா.

பாடலைக் கேட்ட அஞ்சலியின் முகத்தில் புன்னகையும், கண்களில் கண்ணீரும் ஒருங்கே எழுந்தது.

ஹாலில், தோட்டத்தில் யாரும் இல்லை என்றதும் அஞ்சலி கால்கள் நேராக கெளதம் அறைக்கு செல்ல அங்கும் அவனை காணவில்லை.

‘எங்கேடா போனே…’என்று தவித்தவளாய் ஒவ்வொரு அறையாக பார்த்து கொண்டு வந்த அஞ்சலி மேல் தளத்திற்கு சென்றாள்.

நான்கு அடுக்கு மாளிகை அது.

தரை தளம்  வரவேற்பு அறை, அலுவலக அறை, பூஜை அறை, சமையல் அறை, உணவு உண்ணுமிடம்,விருந்தினர் தங்கும் அறைகள் இருக்க, ரெண்டாவது  தளம் முரளி கிருஷ்ணா, ரேணுகா, வைரவேல் அறைகள் இருக்கும்.

ரெண்டாவது தளம் முழுவதும் கௌதமுடையது.

மூன்றாவது தளம்   தனுவிற்கு சொந்தமானது.

நான்காவது தளம் முழுவதும் ரூப் டாப் கார்டன் அமைக்கப்பட்டு இருந்தது.

கெளதம் தளம் கடந்து தனு தளத்திற்கு செல்ல முயன்ற கால்கள் பின்னி கொண்டன.

தனுவின் கோபம் எந்த அளவிற்கு ராம் மேல் இருக்கிறதோ, ராம் இருக்கும் இடத்தை பற்றி சொல்லாத தன் மேலும் தனுவிற்கு இருக்கிறது என்பதை அஞ்சலி நன்கு அறிவாள்.

முதல் முறை திருமண ஏற்பாடுகள் நடந்த போதே தனுவின் கோபத்தை எல்லாம் நேரில் கண்டவள் ஆயிற்றே.

கெளதம் என்ன சொன்னானோ தனு அடங்கி விட்டாள் தான் என்றாலும், பெங்களூருவில் தன்னை கொல்லும் அளவிற்கு சென்ற அவளின் கோபம் இப்பொழுது இந்த திருமணத்தால் இன்னும் அதிகமாகி தான் இருக்க போகிறது என்ற நிதர்சனம் உரைக்க, தயங்கி தயங்கி தான் அஞ்சலி மாடி ஏறினாள்.

அஞ்சலி பயந்தது போலவே அங்கு தான் இரு குடும்பத்தினருக்கும் குழுமி இருந்தனர்.

வேலையாட்கள் என்று ஒருவர் கூட வீட்டில் இல்லை என்பதை அஞ்சலி ஏற்கனவே கவனித்து இருந்தாள்.

வேலையாட்கள் இல்லாததால் தனு அறை கதவை கூட சாற்றாமல்,  அஞ்சலிக்கு முதுகு காட்டியவண்ணம் தான் உள்ளே பேசி கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் அனைவரின் கவனம் முழுவதும் தனு மேல் இருக்க, அஞ்சலி அங்கு நிற்பதை யாரும் கவனிக்கவில்லை.

அஞ்சலியும் இவர்கள் அனைவரையும் பார்த்து, அவர்களால் முக உணர்வை எல்லாம் ஒரே நொடியில் அளவெடுத்து, மறைந்து தான் நின்றாள்.

ஏனென்றால் ஒருவர் முகத்தில் கூட திருமணம் நடந்த சந்தோசம் சுத்தமாய் இல்லை.முள்ளின் மேல் நிற்பது போன்ற தவிப்பு, வேதனை,வலி தான் இருந்தது.

பிரச்சனையை அதற்கு மேல் வளர்க்க விரும்பாதவளாய்,   “கௌதம்!” என்று அஞ்சலி குரல் வெளியே வருவதற்குள்,

“அந்த நாயை கழுத்தை பிடித்து வெளியே தள்ளு அண்ணா, இவ வாழ கூடாது. இவ கதறுவதை பார்த்து அவன் அழணும்.நான் எப்படி துடித்து அழுதேனோ அப்படி அவனும் அழணும்…” என்ற தனுவின் குரல் கேட்டு, முகத்தில் சுடுநீரை கொட்டியது போல் திகைத்து நின்றாள் அஞ்சலி.

‘இவளை, ராம்மை எப்படி மறந்தேன்! அன்று திருமணம் மண்டபத்தில் அல்டிமேட்டம் கொடுத்தான். இன்று தங்கை சொல்வது போல், ‘என்னுடன் வாழ வேண்டும் என்றால் ராம் இருக்கும் இடத்தை சொல்லு, இல்லை வாழா வெட்டியாய் உன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பு என்று சொல்ல போகிறான் அது தானே?’ என்று அஞ்சலி மனம் அடிபட்ட புள்ளி மானாய் கதறி துடித்தது.

“செய்யறேன் தனு… அப்படியே செய்யறேன்.” என்ற கெளதம் குரல் கேட்டு, அஞ்சலிக்கு மீண்டும் கண்ணை இருட்டி கொண்டு வந்தது.

‘வழக்கம் போல் இவர்கள் காதலுக்கு நடுவே, இவர்கள் தங்கள் உடன் பிறப்புகளின் மேல் வைத்து இருக்கும் பாசம் வந்து விட்டது. இது என்றுமே மாற போவதில்லை’, என்ற கசந்த புன்முறுவல் எழ உயிரோடு மரித்தவளாய் அங்கிருந்து செல்ல முயன்றாள் அஞ்சலி.

‘இதற்காடா என் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தாய்! ஒரு கணம் உயிரை கொடுத்து விட்டு, அடுத்த கணமே என்னை கொல்லும் சக்தி உனக்கு தான்டா இருக்கிறது…. இனி என்ன, வழக்கம் போல் ஓட்டம் தானா!

என்ன முன்பு உன் காதலியாய் ஓடினேன். இனி உன் மனைவியாக ஓட போகிறேன்….’ என்று மனம் புலம்ப, இதயம் துடிப்பதை நிறுத்தி விடட்டுமா என்று கேட்க, எங்கே அங்கேயே தன் உயிர் போய் விடாதா என்ற மரணவலியுடன் தள்ளாடியவளாய் அஞ்சலி அங்கிருந்து விலக முயன்றாள்.

அடுத்த நொடி காதில் வந்து விழுந்த வார்த்தைகளை கேட்டு, அறையினுள்  தனு திகைத்தது போலவே வெளியே  அஞ்சலி திகைத்தாள்.

“தனு,  நீ சொல்லும் படியே செய்கிறேன்… அப்படி செய்தால் நீ விஷ்ணுவையும் உன் குழந்தையையும் பிரிந்து விடுகிறாயா சொல்?” என்று கேட்டு இருந்தது கௌதமே தான்.

“என்ன அண்ணா சொல்றே! நான் எதுக்கு என் புருஷனை, குழந்தையை பிரியணும்?” என்றாள் தனு திகைப்புடன்.

“விஷ்ணு தான் உன் புருஷன் என்பதாவது உனக்கு நினைவு இருக்கா தனு? உங்கள் மகளாய் சாதனா இருக்கா.

அப்படி இருக்கும் போது எப்போதோ செத்து தொலைத்து,  தலை முழுகி விட்ட, அந்த ராம் நாயை நீ ஏன் இன்னமும் நினைத்துட்டு இருக்கே!

காதலில் விழுந்தது நீ. உன் காதலை குற்றம் சொல்லவில்லை. ஆனால் காதலிப்பவளுக்கு தன் காதலன் நல்லவன் தானா என்பதை தெரிந்து கொண்டு இருக்க வேண்டும்.

லட்சம் ரூபாய் பைக், ஒரு நாலு காதல் கவிதை, ஹே நீ ரொம்ப அழகாய் இருக்கே என்று வழிவது, ஒரு வாரம் பின்னால் வந்து விட்டால் அது தெய்வீக காதல் என்று லூசுத்தனமாய் உன்னை போன்ற பெண்கள் நினைத்து எடுக்கும் முடிவு எங்கள் தலையில் தான் வந்து விடிகிறது.

சரி அவன் தான் ஆசை வார்த்தை பேசி, கதை,சினிமாவில் வரும் டைலாக் எல்லாம் விட்டான்,நீயும் புத்தி கெட்டு போய் அவனை காதலித்து தொலைத்தாய்.

சரி காதலித்தாய்….அதை வீட்டில் முன்னரே சொல்லும் தைரியம் இருந்திருக்க வேண்டும்.  அதுவும் இல்லை.  சரி பெரிய இவளாட்டம் சொன்னியே நீங்களே உன் திருமணத்தை முடிவு செய்யுங்கள் என்று அதை செய்தோம்.

படிச்சி படிச்சி சொன்னோம் தானே.ராம் நல்லவன் இல்லை, இல்லை என்று… அப்பொழுது எங்களை தானே குதறி எடுத்தே.நீ எடுத்த ஒரு முடிவு ரெண்டு குடும்பத்தையும் எப்படியெல்லாம் நிலைகுலைய வைத்திருக்கிறது என்று தெரியும் தானே.

முட்டாள் தனமாய் அவன் ஆசை வார்த்தைக்கு மயங்கி அவனை காதலித்தது நீ. உன்னை ஏமாற்றி விட்டு சென்றது அவன்.

இதில் அஞ்சலி எங்கிருந்து வந்தாள்? நீயே சொல்லு.

ராம்சந்தர் திருமணம் செய்கிறேன் என்று உன்னை ஏமாற்றி சென்றான். அதை இன்று வரை நம்மால் மன்னிக்க முடிகிறதா? எந்த அளவுக்கு துடித்து இருப்பே நீ.

உன்னால் உனக்காக தான் அன்று அஞ்சலிக்கு மணவறையில் அல்டிமேட்டாம் கொடுத்தேன். ராம் இருக்கும் இடத்தை சொல்லி விடுவாள் என்று நினைத்து, ஆனால் அஞ்சலியை இழந்து நான் தவித்தது தான் மிச்சம்.

நீ விஷ்ணுவுடன் வாழ்க்கை மிக நன்றாக தான் வாழ்ந்தே. ஆனால் நம்மை விட்டு போனவள், ராம் மாதிரியே இருக்கும் எவனிடமாவது சிக்கி இருந்தால் என்ன ஆகி இருப்பாள்.

ராம் உன்னை போலியாய் காதலித்தான்.அவன் தேவை தீர்ந்த பிறகு உன்னை குப்பை போல் தூக்கி போட்டு விட்டு போய் விட்டான். பொய்யான அவன் காதலை நினைத்தே நீ உன்னை அழித்து கொள்ள எத்தனை தடவை முயன்றாய்.

ஆனால் அஞ்சலி மேல் எனக்கிருப்பது உண்மை காதல் தனு.அஞ்சலி தான் என் உயிர். எங்க ரெண்டு பேரின் காதலும் உண்மையானதுடீ…. கடைசி மூச்சு உள்ளவரை எங்களுடன் இருப்பது.   அவளை உனக்காக தான் ஒரு முறை பிரிந்தேன்.

உண்மையாக காதலிக்கும் என் அஞ்சலியை நான் பிரிந்தால் எனக்கும் அந்த பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம் தனு? உனக்கு வந்தால் அது ரத்தம்,அஞ்சலிக்கு வந்தால் அது தக்காளி சட்னியா

இந்த கேள்வி நீ கடவுளாய் நினைக்கும் சிவசாமி அய்யா என்னை பார்த்து கேட்டது.

இதையெல்லாம் நான் இப்போ பேசுவது இல்லை.சிவசாமி அய்யா. அஞ்சலி மணமேடையில் என்னை விட்டு சென்றதும் என்னை சந்தித்து அவர் கேட்டது. இன்னும் பச்சையா கேட்டார். நாக்கு பிடிங்கிட்டு சாகனும் போல் இருந்தது.

அதுவரை அஞ்சலிக்கு அல்டிமேட்டம் கொடுத்தது சரி என்று தான் நினைத்திருந்தேன். அவர் சுட்டி காட்டிய பிறகு தான் எவ்வளவு பெரிய பாவத்தை நான் செய்திருக்கிறேன் என்பதே எனக்கு புரிந்தது.

நீ பட்ட அதே வலி, வேதனை அஞ்சலியும் பட வேண்டுமா? தெருவில் அடிபட்டு கிடக்கும் சொறி நாய்களுக்கு கூட இரக்க பட்ட என் தங்கையா இன்னொரு பெண்ணின் கண்ணீரை பார்க்க வேண்டும் என்று சொல்வது?

என் தனு என்றில் இருந்து இரக்கமே இல்லாத அரக்க ஜென்மமாய் மாறினாய்?

அஞ்சலியை  ராம்மின் தங்கையாக பார்க்க முடிந்த உன்னால்,  உன் நிஜ கணவன் விஷ்ணுவின் தங்கையும் அவள் தான் என்பது உன் நினைவுக்கு வரவில்லையா?

விஷ்ணு, ராம் அண்ணன் தானே அவனை வேண்டாம் என்று ஏன் உன் வாய் சொல்லவில்லை!

இதோ நிக்கிறாங்களே இவங்க தானே ராம்மை பெற்றது. அவங்களை நீ எதுவும் சொல்லலை. உன் சொந்த அப்பா, அம்மாவை பார்த்து கொள்வது போன்று தானே அவங்களையும் இத்தனை வருடமாய் பார்த்து கொண்டாய்.

அவர்களும் அப்படி தானே உன்னை அஞ்சலி மாதிரி அவர்களின் இன்னொரு மகளாய் பார்த்து கொண்டார்கள்.உன்னாலும், என்னாலும் தான் அஞ்சலி வீட்டை விட்டு பிரித்தாள்.அது அவர்களுக்கே மிக நன்றாக தெரியும்.ஒரு குற்றசாட்டு பார்வை நம்மை பார்த்து இருப்பார்களா.

இவர்கள் மூவரையும் ஏற்று கொள்ள முடிந்த உன்னால் அஞ்சலியை மட்டும் ஏன் ஏற்று கொள்ளமுடியவில்லை.உன்னை அஞ்சலி என்னடீ செய்தாள்?” என்றான் கெளதம்.

விக்கித்து நின்றாள் தனு.

சிவசாமி கேட்டு, இன்று கெளதம் கேட்ட கேள்விகள் அனைத்தும் தனுவை சாட்டை கொண்டு விளாசியது.

அவள் மனசாட்சி விழித்து எழுந்தது.

‘அதானே ராம் தங்கை என்ற ஒரே காரணத்திற்காக அஞ்சலியை வெறுப்பது என்றால், நான் விஷ்ணு, அத்தை, மாமா, எங்க குழந்தை சாதனவையும் தானே வெறுக்க வேண்டும்?.

இவர்களை எல்லாம் ஏற்று கொண்ட என்னால் ஏன் அஞ்சலியை ஏற்க முடியவில்லை? ராம் இருக்கும் இடம் தெரிந்தவள் என்பதாலா!

அப்படியே ராம் இருக்கும் இடம் தெரிந்தாலும் விஷ்ணு தான் உன் வாழ்க்கை என்று ஆகி விட்ட பிறகு, ராம் எங்கிருந்தால் எனக்கு    என்ன!

அவனிடம் சென்று வாழ்க்கை கொடு என்று கெஞ்ச போகிறியா என்ன! அவன் உயிரோடு இருந்தால் என்ன, செத்தால் உனக்கு என்ன?’ என்று சாட்டை எடுத்து விளாசியது.

“ஏனென்றால் உன் தங்கை கணவன் நான் இல்லை…” என்றபடி வந்து நின்றான் விஷ்ணு.

ஒரு கையில் பை, இன்னொரு கையில் சாதனா சகிதமாய்.

கீழ் குனிந்து டீ பாய் மேல் ஒரு ஸ்டாம்ப் பத்திரத்தை வைத்தவன், “விவாகரத்து நோட்டீஸ் இது. சைன் செய்துட்டேன்… நான் சாதனவுடன் அமெரிக்கா போகிறேன். உன் தங்கையை ஷைன் போட சொல்.” என்றவன் பெட்டி, குழந்தையுடன் கிளம்ப பல குரல் அவனை தடுத்தது.

“உன்னை பத்து வருடம் முன்பு பார்த்தே இருக்க கூடாதுடீ… பார்த்தேன் அன்றில் இருந்து உன்னால் ஆயிரம் முறை செத்துட்டு இருக்கேன்.

என் தங்கை சொன்னாள் அப்பொழுதே, ‘வா அண்ணா தனுவை பெண் கேட்கலாம்’ என்று.

நான் தான் சிறு பெண் என்று விலகி நின்றேன். அப்பொழுதே உன்னை எல்லாம் திருமணம் செய்து, கையில் குழந்தை கொடுத்து இருக்கணும்னுடீ.

சின்ன பெண் என்று விலகி நின்றேன் பாரு என் புத்தியை செருப்பால் தான் அடிச்சுக்கணும்.ஏன் ஊரில் உலகத்தில் எவனுமே பதினெட்டு வயது ஆகாத பெண்ணை மணக்கவில்லையா என்ன.நான் என்னவோ பெரிய உத்தமன் மாதிரி உனக்காக என் மன உணர்வுகளை எல்லாம் அடக்கி ஒதுங்கி நின்றேன்.

படிக்கும் பிள்ளை.மனம் என்னால் கெட்டு விட கூடாதே என்று பார்க்க கூட வராமல் விலகி நின்றேன்.

மீண்டும் என் தங்கை அஞ்சலி தான் எனக்காக, உன் வீட்டில் பெண் கேட்டது. உன் அண்ணா கூட அவனுக்கு திருமணம் என்று தான் குடும்பத்துடன் கோயிலில் வந்து நின்றான்.ஆனால் என் தங்கை எனக்காக ஒரு பெற்றோரின் ஸ்தானத்தில் இருந்து எனக்காக பெண் கேட்டாள்.

அப்பொழுதும் நீ ராம் மேல் பைத்தியமாய் இருப்பதை கேள்வி பட்டு விலகி நின்றேன். வலி தான் அத்தனை வருடம் உன்னை சுமந்த இந்த இதயத்தில் இருந்து உன்னை தூக்கி எறிந்தது மரண வலி தான்.உனக்காக பொறுத்து கொண்டேன்..எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டு தான் என் குடும்பத்தை, என் தங்கையை விட்டு பிரிந்து வெளிநாட்டு ஓடினேன்.

இதே குடும்பத்தை பிரிய முடியாது என்று வெளிநாட்டு வேலை ஆபார் எல்லாம் வேண்டாம் என்று சொன்ன நானே உனக்காக என் குடும்பத்தை பிரிந்தேன்.

ராம் எங்கேயோ போய் தொலைந்தான். உன்னை விட உனக்காக துடித்தவன் நான் டீ. உன்னை திருமணம் செய்தும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து முழுதாய் ரெண்டு வருடம் விலகி நின்றேன்.

நீயாக என்னை நெருங்கும் வரை நீ இருக்கும் அறைக்குள் கூட உன் அனுமதி இல்லாமல் நான் வந்தது கூட கிடையாதுடீ. எல்லாம் சரியாகி போச்சு. இத்தனை வருட வாழ்வில், ‘நீயும் என்னை காதலிக்கறே’ என்று அப்படி பூரிச்சு போய் நின்றேன்.

பெங்களூருவில் அஞ்சலியை பார்த்துட்டு என்ன பேசினே, ‘என் ராம் எங்கே என்று சொல்லு… அவன் என் ராம் மட்டும் தான். எனக்கு அவன் வேண்டும்.’

அப்போ செத்துட்டேன்டீ… அன்றிலுந்து நடைபிணமாய் தான்டீ வாழ்ந்துட்டு இருக்கேன். அதை கூட உன்னால் உணர முடியாத அளவுக்கு அந்த ராம் மேல் கவனம்.

அப்போ நாம வாழந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன தனு!

திருமணத்திற்கு முன் யார் யாரை வேண்டும் என்றாலும் காதலித்து இருக்கலாம். அது தோல்வியில் முடிந்து இருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பின்பும் இந்த அளவிற்கு அவனையே நினைத்து கொண்டிருந்தால் அதற்கு என்ன தனு அர்த்தம்?. நினைவே வர கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை.

ஒரு பக்கம் நீ ராம் ராம் என்று அவன் நினைவாகவே இருக்கிறாய்.இன்னொரு பக்கம் உன் அண்ணன் கெளதம் உனக்காக என்று என் தங்கைக்கு அல்டிமேட்டம் கொடுக்கிறான்.

உங்கள் இருவரால் என் தங்கை எங்களை விட்டு ஆறு வருடம் பிரிந்து போனாள்.அப்பொழுதே உங்க ரெண்டு பேரையும் பொலி போட்டு இருப்பேன்.அந்த பைத்தியக்காரி எதுவும் செய்யவேண்டாம் என்று என் கையை கட்டி போடு வச்சிட்டா.

சரி நடந்தது நடந்து போச்சு…ஏதோ அறிவு வந்து இப்பொழுதாவது   கெளதம் அஞ்சலி கழுத்தில் தாலி கட்டினானே என்று சந்தோச பட்டால், என் தங்கை திருமணத்தை கூட பார்க்க முடியாமல் செய்து விட்டாயே பாவி….சரி அது கூட விடு….இன்று வாழ வந்து இருக்கிறாள் என் அஞ்சலி….

முதல் நாளே அவளை வாழ வெட்டியாக செய் என்று உன் அண்ணனிடம் சொல்கிறாயே….இதை எல்லாம் என் தங்கை என்னிடம் சொல்ல, உன்னை நான் பிரிந்து உன்னை வாழ வெட்டியாக செய்ய எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு. ஆனால் என் அஞ்சலி சொல்லமாட்டாள்.அவளுக்கு வாழ்க்கை கொடுத்து தான் பழக்கும்.

ஆனால் இன்னொரு பெண், உன் சொந்த அண்ணன் வாழ்க்கை நாசம் ஆனாலும் பரவாயில்லை என்று போகும் அளவிற்கு இன்னும் நீ ராமை தான் நினைத்துட்டு இருக்கிறாய்.

இத்தனை வருடம் கழிந்த பிறகு உன்னால், உனக்காக பிரிந்த இவர்கள் சேர்ந்து விட்டார்களே என்று சந்தோச பட்டேன்டீ.

ஆனால் விஷயம் கேள்வி பட்டத்தில் இருந்து உடம்புக்கு முடியாத நம்ம குழந்தையை கூட கவனிக்காமல் இவங்களை எப்படி பிரிக்கிறது என்று பிளான் போட்டு கொடுத்துட்டு இருக்கே.

இனி உன் கூட வாழ்வதில் அர்த்தமே இல்லை… அப்படி என்ன உனக்கு தெரியணும்…  ராம் எங்கிருக்கிறான் என்று தானே… ராம் அவன்….” என்று விஷ்ணு எதோ சொல்வதற்குள், “விஷ்ணு” என்ற அஞ்சலியின் குரல் பலத்து ஒலித்தது.

அஞ்சலியின் குரல் எச்சரிக்கையாக ஒலிக்க, அதில் இருந்த ஏதோ ஒன்று அங்கிருந்தவர்களின் இதயத்தை அசைத்து பார்த்தது.

இத்தனை வருடத்தில் அஞ்சலியை அவர்கள் யாருமே அப்படி ஒரு முக பாவத்துடன் பார்த்திருக்கவில்லை.

அவள் முகத்தை கண்ட விஷ்ணு தயங்கி நிற்க அவனை கண்களால் எரித்து கொண்டிருந்தாள் அஞ்சலி.

“இனி மறைத்து யூஸ் இல்லை அஞ்சலி. எல்லாம் வேஸ்ட். இவ தானும் வாழ மாட்டா… உன்னையும் வாழ விட மாட்டா… இவ ராமை இன்னும் மறக்கவில்லை அஞ்சலி.

முடியலை… அவ அவளின் ராம் உடனே சென்று வாழட்டும்… இனி இந்த நரகத்தை, ‘அவனுக்கு பிறகு தான் நான்’ என்பதை என்னால் தாங்க முடியாது.

இவ என்றுமே அவன் காதலி தான். என் மனைவி இல்லை. அவள் மனம் போலவே வாழட்டும். இப்பொழுதும் நான் விலகி கொள்கிறேன்.ராம்… அவன்” என்று ஆரம்பித்த விஷ்ணுவின் கன்னத்தை அஞ்சலியின் கை பதம் பார்த்தது.

“அஞ்சலி!” என்று பல குரல் திகைப்பில் ஒலிக்க, அஞ்சலி கண்கள் மட்டும் விஷ்ணு முகத்தை விட்டு விலகவே இல்லை.

அந்த அளவிற்கு ரௌத்திரத்தை அஞ்சலியிடம் என்றுமே அவர்கள் கண்டதில்லை.

“இதுக்காடா இவ்வளவு கஷ்டப்பட்டோம்? இதுக்காடா நான் இத்தனை வருடம் வனவாசம் போனேன்?

ஏன் சொல்வதாய் இருந்தால் இதோ நிக்கிறாரே, என் புருஷன் அன்று மணவறை ஏறும் முன், அல்டிமேட்டம் கொடுத்தாரே அப்பொழுதே சொல்லிட்டு ராணி மாதிரி வாழ்ந்துட்டு இருப்பேனேடா

எனக்கு என்னடா பைத்தியமா, உயிர்க்கு உயிராய் காதலித்தவனை விட்டுட்டு, ஒரு நல்ல வாழ்க்கையை விட்டுட்டு ஓட?

இதோ நிக்கிறாரே,என் புருஷன் அவர் மேல் காதல் இல்லாமலா ஓடினேன்? இவர் மேல் எந்த அளவிற்கு உயிராய் இருந்தேன் என்று அவருக்கே கூட தெரியாது தான்.

அல்டிமேட்டம் கொடுத்தார் தான், ஆனால் நான் வாயை திறந்திருக்கவில்லை என்றால் என்னை அங்கேயே விட்டுட்டு போய் இருப்பார் என்றா நினைக்கிறே? நிச்சயம் என்னை திருமணம் செய்து இருப்பார்.

அப்படி எல்லாம் பேசினால் உடனே இவர் காதலை சந்தேக பட்டு விடுவேன் என்று லூசு மாதிரி பிளான் போட்டு செய்தார் தான்.

ஆனால் என்னை விட்டு போயிருக்க மாட்டார். ஏன் என்றால் நடுவில் விட்டு ஓட அவர் ராம்சந்தரோ, விஷ்ணுவோ இல்லையே.

அவரின் அந்த நிபந்தனை சொல்லி விட்ட பின்னால் அவர் துடிப்பதை உணர்ந்தவள் நான். அந்த அன்பு, அந்த காதலால் எங்கே ஏதாவது ஒரு நொடியில், அனைத்தையும் இவரிடம் சொல்லி விடுவோமே என்று பயந்து, பானிக் ஆகி தானேடா இவர் பிளானை வைத்தே தப்பித்து ஓடினேன்…?” என்ற அஞ்சலியின் பேச்சை கேட்டு திக்ப்ரமை பிடித்து நின்றான் கெளதம் .

அஞ்சலி எதை அவன் பிளான் என்று சொன்னாளோ அது தான் கெளதம் பிளானாக இருந்தது.

முகூர்த்த நேரத்திற்கு முன் அஞ்சலியை பயமுறுத்தி, காதலை பணயம் வைத்து, ‘ராம் இருக்கும் இடத்தை சொல்லாவிட்டால் திருமணம் நடக்காது’ என்று தையத் தக்கா என்று குதித்தான் என்றாலும், அஞ்சலி பதிலே சொல்லியிருக்காவிட்டால் கூட அவளை மணந்து தான் இருப்பான்.

கடைசியில் அவன் பிளானை வைத்தே அவனுக்கு ஆப்பு வைத்திருக்கிறாள் அவன் ராட்சசி.

அவனுக்குள் முழுதும் நிறைந்திருப்பவள் தானே. அவளுக்கா தெரியாது அவன் மனம்?.

அஞ்சலி மேல் காதல் பொங்கி கொண்டிருக்க அவளை அப்படியே அணைத்து கொள்ள அது நேரமோ, இடமோ இல்லை என்று புரிந்து அஞ்சலியின் பேச்சில் மீண்டும் கவனமானான்.

” அன்றைக்கே சொன்னோம் தானே..?.இது மனம் சம்பந்த பட்டது. அத்தனை சுலபத்தில் ஏன், எதற்க்கு என்று விடை தெரியாமல் தனுவின் மனக்காயம் ஆறாது என்று படிச்சி படிச்சி சொன்னோம் தானே.

பெரிய இவனாட்டம் டயலாக் விட்டே, ‘எத்தனை வருஷம் ஆனாலும் தனுவுக்காக எல்லாத்தையும் பொறுத்து கொள்வேன்’ என்று. இப்போ என்ன ஆச்சு உன் காதல்?. அதற்கு ஆயுள் இவ்வளவு தானா?

அது என்ன தாடி வளத்துட்டு, குடிச்சுட்டு, ‘வெள்ளை புறா ஒன்று போனதே கையில் வராமல்’ என்று நீங்க பாடினா அது காதல், அது காவியம். உன்னதம்.

நீங்களா வந்து சுத்தி சுத்தி காதலித்து, மனதை களைத்து விட்டு. உடல், பொருள், ஆவி எல்லாம் நீங்க தான் என்று நம்பி இருக்கும் பெண்ணை விட்டுட்டு போயிடுவீங்க. ஏன் என்று காரணமும் பல நேரங்களில் சொல்ல மாட்டிங்க.

இல்லைன்னா எங்க அப்பாவுக்கு பிடிக்கலை, எங்க அண்ணனுக்கு பிடிக்கலை, எங்க வீட்டு நாய்க்கு பிடிக்கலைனு ஒரு சில்லி ரீசன்.

ஏன் காதல் சொல்லும் போது எல்லாம் உங்களுக்கு அம்மா, அப்பா குடும்பமே இல்லாமலா இருந்தது?. உங்களுக்கு இருக்கும் அதே மனம் தானே பெண்களுக்கு இருக்கும். அதே வலி, வேதனை தானே…

நீங்க தேவதாஸாய் சுத்தலாம். ஆனால் காதல் தோல்வி பெண்களுக்கு வந்தால் மட்டும் ரியாக்ட் ஆகவே கூடாது. எல்லாத்தையும் மறந்துட்டு, ‘என் மேல் தான் தப்பு’ என்று மனதிற்குள் மருகி மருகி தங்கள் சுயத்தை இழக்கணும்.

எத்தனை பெண்ணுங்கடா காதல் தோல்வி என்று கவுன்சிலிங் போய் இருப்பாங்க, விரல் கூட தேவை படாது எண்ண. ஏனென்றால் அதை மறைத்து உள்ளுக்குள் புதைத்து கொள்ள தான் இந்த சமூகம், குடும்பம் கற்று கொடுத்து இருக்கு.

தனு எண்ணத்தில் என்ன தப்பு, சட்டையை பிடித்து, “ஏண்டா அப்படி செய்தே?’ என்று நாலு கேள்வி நாக்கை புடுங்கி கொள்வது போல் கேட்டு, அவனை நாலு அடியாவது அடிக்க வேண்டும் என்ற வெறி, நம்பிக்கை துரோகம் அது கொடுத்த மரண வலிக்கு மருந்தாய் இதை நினைக்கிறாள்.

இது எல்லாம் நடக்கும் என்று சொன்னோம் தானே. பாதியில் விட்டு போவதற்கு,  நீ பெரிய ஹீரோ மாதிரி என்ட்ரி கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நிம்மதியா செத்து இருப்பா இல்லை?

உனக்கும், பெண்களை படுக்கைக்கு மட்டும் தேவை என்று காதல் வலை வீசி காத்திருக்கும் சதை பிண்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவனுங்க தாலி கட்டவில்லை. நீ கட்டிட்டே. நடுவுல விட்டுட்டு போறே அதானே?” என்றாள் அஞ்சலி கோபத்துடன்.

“ஆண்களுக்கு காதல் தோல்வியை வெளியே பிரகடனப்படுத்தும் சுதந்திரம் இருப்பது போல் பெண்களுக்கு செய்ய இங்கே சுதந்திரம் இல்லையே!

ஒன்று தூக்கு கயிறு. இல்லையென்றால் வீட்டில் பார்க்கும் வரனை மணந்து கொண்டு தாலி ஏறியதும் அவன் மனைவியாகி விட வேண்டும்.

ஒரு சிலர் தனுவை போல் மனசிதைவுக்கு ஆளாகி இருப்பார்கள். அவளுக்கு கிடைத்த சப்போர்ட் போல், உடன் இருந்து மனதை அந்த காயத்திலிருந்து வெளி கொண்டு வர எத்தனை குடும்பங்களுக்கு அடிப்படை தெளிவு இருந்து விட போகிறது?

அப்படியே தெரிந்தாலும், ஒன்று ‘தேவ….’ என்ற உயர்ந்த வார்த்தைகள் வந்து விழும்.

ஒதுக்கி வைத்தால் கூட மனக்காயம் ஆறி விடும். கூட இருந்தே பாதுகாப்பு என்ற பெயரில் வார்த்தைகளால் குதறி எடுப்பது, ஒழுக்கத்தை மீண்டும் மீண்டும் சந்தேகப்படுவது, ‘பழசை மறந்துடு. வாழ வெட்டியாய் திரும்ப வராதே’ என்று தானே அறிவுரைகள் கொடுக்கப்படும்?

மிகவும் பத்திரமாய் கையாள பட வேண்டியது நம்பிக்கையும், காதலும், மனமும்.

அந்த மனம், ‘நாம் இது என்று அடையாளம் காட்டும் மனம்’ சில்லு சில்லாய் உடைந்த பிறகு, உயிர் மட்டுமே இருக்கும் சவமாய் தானே பாதி பெண்களின் வாழ்க்கை தொடங்குகிறது.

காதலுக்கே இந்த கதி என்றால், தனுவை போல் முழுதாய் ஏமாற்றப்பட்ட எத்தனை பெண்களுக்கு அவர் மனக்காயங்களுக்கு மருந்து இட படுகிறது என்ற கேள்வி பதில் யாராலும் சொல்ல முடியாது என்பது தான்.” என்றாள் அஞ்சலி கோபத்துடன்.

‘பெண்களுக்கும் மனம் இருக்கும், அதில் உயிர்ப்பு இருக்கும், வலி, வேதனை இருக்கும் அதில் நுட்பான உணர்வுகள் இருக்கும் என்று ஏற்று கொள்ள தவறும் குடும்பங்கள், சமூகத்தின் நிலை..’ அஞ்சலி பேச்சில் உள்ள உண்மை புரிந்தவனாய் மனம் கனக்க நின்றான் கெளதம்.

காதல் என்ற ஒன்று வந்தால், எந்தளவிற்கு பெண்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று மிகத் தெளிவாகச் விளக்கி சொன்னது அஞ்சலி பேச்சு.

உண்மையாகக் காதலித்த பெண்களுக்கு, காதல் தோல்வி என்றால் அதில் இது போன்ற நரகம் மிக அதிகம்.

காதலித்தவனை மறக்கவும் முடியாது.கட்டியவனை ஏற்கவும் முடியாது.இதை வெளியில் சொல்லி ஆறுதலும் தேட முடியாது.

மனதிற்குள் போட்டுப் புழுங்கி புழுங்கி, வாழ்க்கை என்ற ஒன்றுக்கு அர்த்தம் இல்லாமல், உயிர்ப்பு இல்லாமல் தான் பல இல்லறம் முடிந்து விடுகிறது.

காதல் சினிமா எல்லாம் அலைகள் ஓய்வதில்லை படம் போல் அத்துடன் நின்று விடும்.ஹாப்பி எண்டிங்.fairy tale முடிவுகள்…

ஆனால் நிஜ வாழ்க்கை காதலர்களுக்கோ, காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கோ அக்னி பரிட்சையாகத் தான் இருக்கிறது.

பினிக்ஸ் பறவையாய் துணையின் உதவியுடன் மீண்டு வருவதோ, அந்த நெருப்பில் எரிந்து சாம்பலாகி, தானும் வாழாமல், மற்றவரையும் வாழ விடாமல் செய்வதும் நம் கையில் தான்.

நீ வீழ்வதும், உன்னை வீழ்த்துவதும் உன் எண்ணம் தான்.

உன் வாழ்க்கை உன் கையில்.

இதயம் சமர்ப்பிக்கப்படும்