(என் கனவுகளைத் தகர்த்த அமிலம் உன் கையில்…
உன் இதயம் அன்பை சுமந்திருக்கவில்லை.
உன் இதயத்தில் உள்ள விஷத்திற்கு, காதல் என்று பெயர் சூட்டி
கையில் அமிலத்தால் என்னை எரித்தவன் நீ …
உன் கண்களில் ஒருபோதும் காதல் இல்லை. …
காமத்துடன் நீ பார்க்கும், ஒவ்வொரு பார்வையும் என்னைபது.
இந்த முகத்துடன் நான் சுமக்கும் எனது அடையாளத்தின் ஒரு பகுதியாக,
உன் பெயர் என் இந்தக் காயத்துடன் அடையாளமாய் இருக்கும்.
காலம் என் மீட்புக்கு வராது.
ஒவ்வொரு அறுவை சிகிச்சையும், உன் வக்கிரத்தை தான் காட்டுகிறது.
உனக்குச் செய்தி வரும், நீ எரித்த முகம்
இப்போது நான் விரும்பும் முகம் என்று உனக்குத் தெரிவிக்கப்படும்.
சிறை வாசத்தின் இருளில் நீ, என்னைப் பற்றிக் கேட்பாய்.
நான் உயிருடன் இருக்கிறேன்….
சுதந்திரமாக இருக்கிறேன்…
என் கனவுகளை வளர்கிறேன்…
நீ அறிவாய்.
கருகி போக பெண்கள் மலர் அல்ல,
அணையா நெருப்பு. ) அமில தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்குச் இந்த வரிகள் சமர்ப்பணம்.
காதல்!…
மிகச் சிறிய சொல்,
அண்ட சராசரங்களை
ஆட்டி வைக்கும் விந்தை!
இதயங்கள், கருவறை ஆக்கும் மாயம்!
கண்களின் வழி இதயங்கள்,
இடம் மாறும் அதிசயம்.
மாற்று ஈடாக ஒன்றை காட்ட
முடியாத தேவ ரகசியம்!
அதி உன்னத தேடல்,
முடிவில்லாத மாய சூழல்,
காலம் மாறினாலும்
இன்னும் மாறாத
ஆத்ம பந்தம்.
இப்படி வர்ணித்துக் கொண்டே போகக் கூடிய, ‘காதல் என்னும் நோய்’ தாக்கியதில் ராகேஷ் மற்றவர்களைக், குறிப்பாய் தன் உயிர் நண்பன் கெளதம் பிரபாகரின் உயிரை எடுத்துக் கொண்டு இருந்தான்.
எத்தனை காலத்திற்கு தான் ஹீரோவின் காதலுக்கே நண்பர்கள் துணை நின்று நொந்து நூடுல்ஸ் ஆவார்கள் என்று நினைத்ததோ என்னவோ விதி, இங்கே ஹீரோவைப் படுத்தி எடுத்துக் கொண்டு இருந்தது.
“இங்கே பாரு கெளதம்!…. காயுவை நினைச்சி தோட்டத்தில் நின்னுட்டு இருந்தேன் டா…. அப்போ பொங்குச்சு பாரு ஒரு கவிதை….அதை முதலில் பிரௌனி கிட்டே தான்டா சொன்னேன்….
அது உட்டுச்சு பாரு ஒரு லுக்… அப்போ தாண்டா எனக்கே புரிந்தது, எனக்குள் ஆயிரம் வைரமுத்து, லட்சம் புலமைப்பித்தன் தூங்கிட்டு இருக்காங்க என்று.”என்றான் ராகேஷ்.
பிரான்ஸ்சில் பிசினெஸ் டீல் பேசிக் கொண்டு இருந்த கெளதம், ஏதோ டீடைல் கேக்க என்று ராகேஷ்க்கு கால் செய்திருக்க, அவனை வைத்துச் செய்து கொண்டு இருந்தான் கவி சக்கரவர்த்தி ராகேஷ்.
“பிரௌனி, நேத்துல இருந்து பேய் அடிச்சா மாதிரி இருக்கு… எந்தப் பேய் பிடிச்சு இருக்குன்னு தெரிலை என்று அம்மா காலையில் புலம்பினாங்க. பிரௌனியை பிடிச்ச அந்தப் பேய், கொள்ளி வாய் பிசாசு நீ தானா ராசா…. வாய் இல்லா பிராணி என்ற கருணை கூடவா நைனா உனக்கு இல்லை….”என்றான் கெளதம் தலையில் கை வைத்துக் கொண்டு.
‘நீ என்ன தான் கழுவி ஊத்து…அது எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது’ என்று காதல் கிறுக்கு பிடித்துக் கவிதை எழுதியே கொல்வது என்ற முடிவில் இருந்த ராகேஷ்,
“ச்சே அதை விடு டா… பிரௌனிக்கு என் மேல பொறாமை….இதைக் கவனி.
காயத்திரி
காயத்திரி
………………”என்ற ராகேஷை இடை மறித்த கெளதம்,
“சிஸ்டர் பெயர் எனக்கே தெரியும் டா.இப்போ எதுக்கு அவங்க பெயரை ஏலம் போட்டுட்டு இருக்கே நீ?”என்றான் மிகப் பாவமாக.
“டேய் மச்சான் அது ஏலம் இல்லை டா…என் காயுவை நினைச்சி எனக்கு வந்த கவிதை.”என்றான் ராகேஷ் மிகவும் சீரியஸ்சாக.
நிச்சயம் கெளதம் சீரியஸ் ஆகி, ஹோச்பிடலில் அட்மிட் ஆகும் எல்லா அறிகுறிகளும் அங்குத் தென்பட்டன.
காயத்திரி!
காயத்திரி!
நீ செய்யாதே என்
மனதை இஸ்திரி,
ஒண்ணு ரெண்டுக்கு அப்புறம்
வரும் த்ரீ,
நீ தானே ஏற்றினாய்
என் மனதிற்குள் காதல்
என்னும் திரி.
பசங்க போடுவாங்க
ஷா பூ த்ரி
நீ கொஞ்சம் என்னை
பார்த்துச் சிரி ……”
என்று ராகேஷ் தன் கவிதை அருவியைப் பொழிய, கை முஷ்டியை தன் வாயில் வைத்த கெளதம் அந்தக் கொடுமையைத் தாங்க முடியாதவனாய் எங்கே போய் முட்டிக் கொள்வது என்று புரியாமல் கொலை பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘பிரான்சில் இதுவரை இல்லாத கொடூரம். நண்பனின் கற்பனை வளம் தாங்க முடியாத வாலிபர் நூற்றிமூணாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை’ -என்ற செய்தி வருவதற்குள், ஆபத்பாண்டவியாக உஷா ராகேஷ் அறைக்குள் ஓடி வந்து நிற்க, ராகேஷ் கவனம் சிதறிய அந்த நொடியைத் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி வீடியோ அழைப்பைத் துண்டித்த கெளதம், பிரான்சில் ‘எங்கே வேப்பிலை அடித்து, தாயத்து கட்டுவார்கள்’ என்று மும்முரமாக விசாரிக்க ஆரம்பித்தது தனி கதை.
அவனே இந்த அளவிற்கு நொந்து இருந்தால் பிரௌனி நிலை!
மாடியில் ராகேஷ் அறைக்குள் சென்ற உஷா, “டேய் அண்ணா! கையைக் கொடு. உன் இத்தனை வருட வாழ்வில் இப்போ தாண்டா உருப்படியாய் ஒரு வேலை செய்து இருக்கே. அண்ணி செம அழகு. உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா.” என்றாள்
“டீ! லூசா டீ!…, என்ன உளறிட்டு இருக்கே!” என்று சிடுசிடுத்தான் ராகேஷ், அவன் கனவை உஷா கெடுத்த கோபத்தில்.
“மாங்கா மடையா! அண்ணியும் அவங்க குடும்பமும் கீழே வந்து இருக்காங்க. அப்பா கூப்பிட்டு வர…” என்று காத்தோடு தான் பேசிக் கொண்டிருந்தாள் உஷா.
மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, ட்ரைனுக்கு கரி அள்ளிப் போட்டவன் மாதிரி புசுபுசு என்று மூச்சு விட்டு வந்து நின்ற ராகேஷை பார்த்து அவர்கள் அனைவரின் முகத்தில் புன்முறுவல் ஈட்டி பார்த்தது.
படிகளில் தலை தெறிக்க அவன் ஓடி வரும் போதே அந்த ஹாலில் அவன் கண்கள் காயத்ரியை தேடி கொண்டே இருப்பதை அஞ்சலி கண்டு கொண்டாள்.
“அடேய்! மகனே! ஏண்டா இப்படி? வருங்கால மனைவிகே இந்த அளவிற்கு எல்லாம் மரியாதை தரும் கணவன் கிடைக்க நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும் மருமகளே!” என்றார் ருத்திரமூர்த்தி.
வாய் விட்டு வெள்ளி சலங்கையாய் சிரித்தாள் அஞ்சலி.
ராகேஷ் குழம்பி போனான். யாரை தன் தந்தை, ‘மருமகளே!’ என்கிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லை.
எதிரே அமர்ந்திருக்கும் பெண் தன் காயு இல்லை.
‘ஒருவேளை நாம் தான் இத்தனை மாதத்தில் அவள் முகத்தை மறந்து விட்டோமோ!’ என்று குழம்பி போய்ப் பார்த்தான் ராகேஷ்.
“என்ன ராகேஷ்!… என்னை மறந்துட்டிங்க போலிருக்கே. என் பிறந்த நாளுக்குப் பொக்கே, பூங்கொத்து, வைர நகை வாங்கி கொண்டு உங்க நண்பரோடு தெருவில் தவம் இருந்தீர்களே. மறந்து போச்சா!” என்றாள் அஞ்சலி.
“அடப்பாவி! ‘இந்தப் பூனையும் மில்க் குடிக்குமா?’ என்று இருந்து கொண்டு, பாரு கற்பகம் உன் மகன், என்ன வேலை எல்லாம் செய்து இருக்கான்!
காலேஜ் முன்னால் போய் நின்று என் மானத்தை வாங்கி இருக்கான். ஹ்ம்ம்!… இது தேறாது. வரும் முகூர்தத்தில் திருமணமே முடித்து விட வேண்டியது தான்.” என்றார் மூர்த்தி.
அஞ்சலி பேசியதும் ராகேஷுக்கு கொஞ்சம் இருந்த சந்தேகமும் நீங்கி விட, “சும்மா இருங்கப்பா. ஏய்!… யாருடீ நீ? நீ என் காயு இல்லை. அவ இப்படி எல்லாம் வாயைத் திறந்து பேசக் கூட மாட்டா. யார் நீ?” என்றான் ராகேஷ்.
“ஐயோ! மாமா பாருங்கா மாமா, உங்க மகன் என்னை உருகி உருகி காதலித்து, பழகிட்டு இப்போ திருமணம் என்று வரும்போது என்னை யார் என்று கேட்கிறார் பாருங்க மாமா.” என்று வராத கண்ணீரை துடைத்தாள் அஞ்சலி.
“டேய்! ராக்கி! என்னடா ஆச்சு உனக்கு.” என்றார் கற்பகம், மகனின் இந்த நடவடிக்கை புரியாமல்.
‘ஒருவேளை ஏதாவது இவர்களுக்குள் சண்டையா! இல்லை ஊடலா!’ என்பது தான் ராகேஷ் குடும்பத்தினரின் எண்ணமாய் இருக்க, அவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“ஐயோ! அம்மா!… நீங்க வேற, என்னவோ ட்ராமா நடக்குது. இவ என் காயு இல்லை. ஷி இஸ் நாட் மை காயு.” என்று ஹை பிட்சில் கத்தினான் ராகேஷ்.
“ராகேஷ்!… ரிலாக்ஸ்… கூல் டவுன் வில் யு? அங்கிள்! ஆன்டி, ஐயம் நாட் காயத்ரி. ஐ ம் அஞ்சலி. காயத்திரி என் தங்கை. உள்ளே வந்தவுடன் நீங்க என்னை காயு என்று நினைத்து பேசிட்டே இருந்தீங்க.
மறுத்து பேச விடவேயில்லை. உங்க மகன் முகம் போன போக்கு பார்க்க சான்ஸ் லெஸ். சோ கொஞ்சம் விளையாடினேன்.” என்றாள் அஞ்சலி.
பெருமூச்சை வெளியிட்ட ராகேஷ், பொத்தென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
“ஐயோ!… சாரி மா, ரொம்ப சாரி. ரகு, உன்னை தங்கை என்றதும், ‘ நீ தான் காயத்ரி’ என்று நினைச்சிட்டேன். வாசு வீட்டு திருமணத்தில் பார்த்தது. முகம் நினைவில் இல்லை. சாரிமா.” என்றார் மூர்த்தி வருத்தத்துடன்.
“நிறுத்துங்க பா… நீங்க ஏன் இவ கிட்டே எல்லாம் சாரி கேட்கறீங்க. என்ன பெண் நீ! உன் தங்கைக்கு கணவனாய் ஆகப் போகிறவன் கிட்டே இப்படி தான் பீஹெவ் செய்வியா ?
ரப்பிஷ், டிஸ்கஸ்டிங் ஆட்டிடூட். என்ன, இவ்வளவு பணத்தை கண்டதும் புத்தி புல் மேயப் போச்சா? பணக்காரன் ஒருத்தனை கண்டதும் தங்கை வாழ்க்கை எப்படி போனால் என்ன நம்ம வாழ்க்கை செட்டில் ஆனால் போதும் என்று நினைத்து விட்டாயா பிளடி பிட்ச்….”என்றான் ராகேஷ்.
ரகு தங்கை என்று அறிமுகம் செய்ததையும் குறை சொல்ல முடியாது.
ருத்ரமூர்த்தி அஞ்சலி பதில் சொல்லவே இடம் கொடாமல், அவரே அஞ்சலி தான் மருமகள் என்று முடிவு செய்து பேசிக் கொண்டே போக, அஞ்சலிக்கு மறுப்பு சொல்லும் அவகாசமே இல்லாமல் போக அவளையும் குறை சொல்ல முடியாது.
காணாததை கண்டது போல் ஓடி வந்த ராகேஷ், அங்கே தன் காயத்திரிக்கு பதில் வேறு பெண்ணைப் பார்தததும் அவளைத் தன் தந்தை மருமகள் என்றதை தாங்க முடியாதவனாய் வாயை விட்டான்.
‘யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்று அய்யன் அன்றே சொல்லிவிட்டார் தான்.
அதை ராகேஷ் படிக்கவில்லையா, இல்லை நம்மில் பலரை போல், ‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்று வாழ்க்கையில் நல்லதை கடைபிடிப்பதில்லை என்பது போல் கடைபிடிக்க தவறி விட்டானா என்று சொல்ல முடியாத நிலை.
“ராகேஷ்!”என்று ருத்திர மூர்த்தி, கற்பகம், உஷா, கதிர் அலற, ”
“தம்பி!”என்று ரகுவும், கமலாவும் அலறி விட்டனர்.
சொன்ன வார்த்தையின் வீரியம் அப்படிப்பட்டது.
சாட்டையில் அடி வாங்கினது போல் ஒரு கணம் திகைத்த அஞ்சலி, மறுகணம் காளி தேவியின் மறு அவதாரமாய் எழுந்து நின்றாள்.
“அஞ்சு!… வேண்டாம்மா… கூல் டவுன்.” என்ற யாரின் பேச்சும் அவள் காதில் விழவே இல்லை.
அஞ்சலி பேச ஆரம்பித்த போது அது பெண் சிங்கத்தின் கர்ஜனையாக தான் இருந்தது. உணர்ச்சிகள் அற்ற அந்த முகத்தின் கோப கனலை கண்டு அங்கு இருந்தவர்கள் ஆடி தான் போனார்கள்.
“எது டிஸ்கஸ்ட்டிங் ராகேஷ்…? நான் விளையாட்டாய் சொன்னதா? இல்லை செயலில் நீயும் உன் நண்பனும் செய்ததா? நான் இங்கு விளையாடியதால் உன் குடும்பத்தில் யார் தற்கொலைக்கு முயன்றது சொல்லு?
ஆனால் நீயும் உன் நண்பனும் செய்தீர்களே, மிக உயர்ந்த வேலை அதனால் இன்னேரம் ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் போயிருக்கும். ‘காயு, காயு’ என்று இப்போ இத்தனை உருகுகிறாயே, அந்தக் காயுவே நீ செய்த வேலையால் இன்னேரம் பிணமாய் தான் இருந்திருப்பா. பீஹவியர் பற்றி எனக்குக் கிளாஸ் எடுத்தாயே! அதன், ‘ஏபிசியாவது’ உனக்கும் உன் நண்பனுக்கும் தெரியுமா இல்லையா?
உன் பணம் எனக்கு கால் தூசு. அதே பணம் உனக்கு கொடுத்த தைரியம் தானே, அவளை துரத்த சொன்னது. உன் பீஹவியர் தான் அவளுக்கு ரேட் பிக்ஸ் செய்திருக்கிறது தெரியுமா?
கேவலமான வார்த்தைகள் கேட்டு, வெளியே யாரிடமும் சொல்ல கூட முடியாமல், உள்ளுக்குள் புழுங்கி புழுங்கி, நேற்று நைட் உன்னை விட தூக்கு கயிறு உயர்ந்தது என்று அதை தேர்ந்தெடுத்து விட்டாள், அவ போய் சேர்த்திருப்பாளேடா! திருப்பி கொடுத்திருக்க முடியுமா உன் பணத்தால் அவளை” என்று பொரிந்து தள்ளினாள் அஞ்சலி.
“அஞ்சு!… ரிலாக்ஸ்.” என்றார்கள் ரகு, கதிர், கமலா.
அவள் கையில் தண்ணீர் கொடுத்து அவளை பழைய அஞ்சலியாய் ஆக்கும் வரை அவர்களுக்கு உயிர் போய் உயிர் வந்தது.
“என்னமா நடந்தது?” என்றார் மூர்த்தி திகைப்புடன்.
ரகு அனைத்தையும் சொல்லி முடிக்க அங்கிருந்தவர்கள் ஒருத்தர் முகத்தில் கூட உயிர்ப்பே இல்லை.
“காயத்ரிக்கு ஏதாவது?” என்றார் மூர்த்தி பதட்டத்துடன்.
“இல்லை அங்கிள். எங்க அஞ்சு எதுவும் கெடுதல் நேரும் முன்னே கடவுள் போல் காப்பாத்திட்டா.” என்றான் ரகு.
“நான் காயுவை என் மனைவி என்ற நினைப்போடு தான் ரகு விஷ் செய்ய வந்தேன். என் தப்பு தான். என் பெயரை மட்டும் தான் சொன்னேன். அவளுக்கு இந்த ப்ரோபோசல் தெரிந்திருக்கவில்லை என்பதே எனக்கு தெரியாது. பேசலாம் என்று தான் பின் தொடர்ந்தேன், கடவுளே!” முகத்தை முடியவனின் உடல் அழுகையில் குலுங்கியது.
“எல்லா பெண்களும், ‘ ஜஸ்ட் லைக் தட்’ என்று எல்லோரிடமும் பேசி விடுவது கிடையாது ராகேஷ். முன்னே பின்னே தெரியாதவன் வந்து பேசினா உடனே முப்பத்திரண்டு பல்லையும் காட்டி எந்தப் பெண்ணும் வழிவதில்லை.
எத்தனையோ தடைகளை தாண்டி தான் பெண்கள் வெளியவே வருகிறார்கள். படித்த நீங்களே இப்படி நடந்தால் எப்படி சொல்லுங்க? ஒரு தடவை பின் தொடர்ந்தீங்க ஒகே….
ஒரு வாரம் தொடர்ந்து அதையே செய்தால், பார்ப்பவர் அந்த பெண்ணை எப்படி எல்லாம் பேசுவார்கள் என்று கொஞ்சம் கூடவா யோசிக்க மாடீர்களா? வெளிநாட்டில் போய்ப் படித்து விட்டு வந்தால் கூட இதெல்லாமா மறக்கும்?
இதெல்லாம் காலம் காலமாய் ரத்தத்தில் ஊறி போய் இருக்கும் பெண்களுக்கே உண்டான எச்சரிக்கை உணர்வு, என்பது கூடவா உங்கள் மரமண்டையில் ஏறவில்லை?
உங்கள் காதல் மிக உயர்ந்ததாகவே இருக்கட்டும். உங்களை பார்த்து தான் அவ, பயந்து விலகுகிறாள் என்று தெரிந்தும் ஏன் பின் தொடர்ந்தீர்கள்?” என்றாள் அஞ்சலி.
“அவ என்னை டீஸ் செய்கிறாள் என்று தான் நினைத்தேன். hard to get போல் நடக்க முயல்கிறாளோ…. என்று தான். ச்சே ” என்று தன் முகத்தில் தானே அடித்து கொண்டான் ராகேஷ்.
(2015 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதிலும் இருந்து 24,249 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 61 அமில வன்முறையை வழக்குகள் உத்தரபிரதேசத்திலிருந்துபதிவாகியுள்ளன. இந்தியாவில் 72% அமில தாக்குதல்கள் பெண்களை மேல் நடக்கிறது இந்தியாவில், ஆண்டுக்கு சுமார் 350 வழக்குகள் சட்டப்பூர்வமாகப் பதிவாகின்றன, அதே நேரத்தில் “ஆசிட் சர்வைவர்ஸ் ஃபவுண்டேஷன் இந்தியா” என்ற அமைப்பு நடத்திய தனித்தனி ஆராய்ச்சி, இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 500—1000 வழக்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது, அமில வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கு நம்பகமான தேசிய தரவுத்தளம் இல்லை.)
அஞ்சலியின் கோபம் எல்லை கடந்தது.
“இன்னும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்க அப்படி தானே!… ஒரு பெண் விலகி சென்றால், ‘அது உங்களை கவர்ந்து இழுக்க செய்யும் ட்ராமா’ என்று இன்னும் எத்தனை நாளுக்கு தான் சொல்லிட்டு பெண்களை இப்படி டார்ச்சர் செய்வீங்க?
உங்க வசதிக்கு ஒரு பெண்ணின் மறுப்பை கூட ட்ராமா என்பீர்கள் அப்படி தானே? இது தான் இன்றைய சினிமா, கதைகள், ட்ராமா ஏற்படுத்தும் தாக்கம். உண்மையான பயத்தையும், மறுப்பையும், விலகலையும் கூட புரிந்து கொள்ளாமல், நீங்க ‘டீஸ், உங்களை தூண்டி விடுகிறாள், உங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடி பார்க்கிறாள், playing hard to get, அவ்வளவு சீக்கிரம் மடங்காதது போல் நடிக்கிறாள்’ என்று பெண்களை ஏன் ‘ஸ்டீரியோ டைப்பிங்’ செய்யறீங்க?
அவளை பற்றி என்ன தான் தெரியும் உங்களுக்கு! உங்களுக்கு அவளை பிடித்து இருக்கிறது என்பதை அறிந்து உங்க அப்பா ப்ரோபோசல் அனுப்பி இருக்கார். உங்களுக்கே தெரியும் காயத்திரி அப்பாவுக்கு மேஜர் ஆபரேஷன் நடந்து இருக்கிறது என்று .
அப்படி ரொம்ப அவசரம் என்றால், நீங்க உங்க அப்பாவிடம் தானே பேசி இருக்க வேண்டும்! அப்படி பேசி இருந்தால் இவரே நேர கிளம்பி வந்து சுபமாய் முடிந்திருக்குமே!
அதை விட்டு காயுவை ஸ்டாக் செய்து, அதில் அவ பயந்து, ஊர் உலகம் அவளுக்கு ரேட் பிக்ஸ் செய்ய வைத்து, அவ தற்கொலை வரை கொண்டு போயிட்டிங்க ராகேஷ்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் எல்லா பெண்களும் ‘இன்று ஒருவன் நம்மை தொடர்ந்து வந்து காதல் சொல்வான்’ என்ற எதிர்பார்ப்புடன் வாசற்படியை தாண்டுவதில்லை.
ஆயிரம், லட்சம் தடைகளைத் தாண்டித் தான் படிக்கவோ, குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கோ செல்கிறார்கள். சில வீடுகளில் பெண்கள் தான் குடும்ப தலைவனாய் இருந்து அந்தக் குடும்பத்தையே தாங்கி நிற்கிறார்கள். இவர்கள் வேலைக்கோ, படிக்கவோ செல்லவில்லை என்றால் அந்த வீடு தலை நிமிராது என்ற நிலை பல குடும்பங்களில் நிதர்சனம்.
‘காதல்’ என்று பெயர் செய்து கொண்டு உங்களை மாதிரி சிலர் துரத்துகிறார்கள் என்றால், ஒரு வேளை படுக்கை தேவைக்குக், ‘காதல் என்ற பெயர்’ செய்து ஏமாற்ற துணியும் சிலர், ‘நாங்கள் எல்லாம் மாடர்ன் துச்சாதனன்’ என்று கண்களால் துகில் உரிக்கும் சிலர்.
எப்போ தான் டா பெண்களை நிம்மதியாய் வெளியே வர விடுவீங்க?
காதல் என்றால் சூரியனை பந்தாக்குவேன், கடல் நீரை குடிப்பேன், வானத்தைக் கிழிப்பேன் என்று டயலாக் விடுவது என்று எந்த மாங்கா மடையன் சொன்னான்?
உன் காதல் காயத்திரியை வாழவைத்து இருக்க வேண்டும். அவள் கனவுகளுக்குத் துணை நின்று இருக்க வேண்டும்.
அதை விட்டு அவளையே மொத்தமாய் பலி கொடுப்பது எல்லாம் காதலா?” என்றாள் அஞ்சலி .
அஞ்சலி பலியான பல பெண்களின் ஸ்தானத்தில் நின்று கேள்வி கேட்க, அங்குக் கனத்த மௌனமே நிலவியது.
ஆயிரம் காதலுக்கு மரியாதை, லட்சம் அலைகள் ஓய்வதில்லை, கோடி அலைபாயுதே படமாய், கதையாய் வந்து விடலாம். உருகி உருகி காதலித்தார்கள் என்று வர்ணித்து விடலாம்.
ஆனால் காதல் என்பது திருமணம், வாழ்க்கை என்னும் நிஜத்தை ஜெயிக்க வேண்டிய அக்னி பரீட்சை.
அதில் எல்லா காதல்களும் வெல்ல முடியாமல் கோர்ட் படி ஏறிக் கொண்டு இருப்பது தான் உண்மை.
ஹீரோ பில்ட் அப் செய்யக் குடிகாரனாய், ஸ்திரீ லோலனாய், பெண் பித்தனாய் காட்டுவதெல்லாம் சுலபம்.ஆனால் வாழ்வில் இப்படி ஒருவன் துணையாய் வந்தால் அந்தப் பெண்களின் நிலை வார்த்தைகளால் சொல்ல முடியாத நரகம்.
‘உன் காதல் நீ காதலிக்கும் பெண்ணை வாழவைப்பதற்கு பதில், சாவை நோக்கித் தள்ளி இருக்கிறது…இதெல்லாம் காதலா?’என்ற அஞ்சலியின் கேள்விக்குப் பதில் ராகேஷ் கண்களிலிருந்து கண்ணீராய் வழிந்து கொண்டு இருந்தது.
“சாரி மகளே, இவன் காதலிக்கிறான் என்று தெரியும். ஆனால் அது இந்த அளவிற்கு இவனை கொண்டு போகும் என்று நினைக்கவில்லை.” என்றார் மூர்த்தி வேதனையுடன்.
“அங்கிள்! உங்க மகன் காதலை நான் தவறே சொல்லவில்லை. காதல் இல்லாத மனிதன் என்று யாருமே இல்லை தான்.
‘இவள் ஒருத்தி தான்’ என்று முடிவு செய்து விட்ட பிறகு, ‘கடைசி மூச்சு உள்ளவரை அவள் மட்டும் தான் இதயம் சொன்ன பிறகு’ வீட்டு பெரியவர்களிடம் பேசி அவர்கள் மூலம் இதை அணுகாமல் போனதை தான் சொல்கிறேன்.
இவர் ஒன்றும் உணர்ச்சிகளின் பிடியில், ஹோர்மோன் கொதித்து கொண்டிருக்கும் டீன் ஏஜ் பையன் இல்லை. கையில் ரோஸ் வச்சிட்டு தெரு முனையில் நிற்க.
ஒரு தங்கைக்கு அண்ணன், சொசைட்டியில் தனக்கு என்று ஒரு பெயரோடு இருப்பவர். இந்த விஷயம் காலேஜ் உடன் முடிந்து விட்டது. இதுவே சமூக வலைத்தளங்களில், நியூஸ் சேனல்களில் வந்திருந்தால், காயத்திரி நிலைமையை யோசித்து பாருங்க.
பூனையை, யானை என்று நிரூபித்துக் காட்டும் சமூக வலைத்தளம். யார், எங்கே, என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று படுக்கை அறை வரை, சென்சேஷன் நியூஸ்காக மொபைல் தூக்கி கொண்டு அலைபவர்கள் இங்கு ஏராளம்.
ஒரு நாள் புகழ் கிடைக்கிறது என்றால் எந்த அளவிற்கும் கீழ் இறங்க தயங்காத யாராவது இதை பதிவு ஏற்றி இருந்தால்….நினைக்கவே நெஞ்சு பதறுது. நீங்க எடுத்த ஒரு முடிவு என்னவெல்லாம் அனர்த்தம் கொண்டாட வந்திருக்கிறது.” என்றாள் அஞ்சலி.
“இந்த விஷயம் வீட்டு பெரியவங்களுக்கு?” என்றார் மூர்த்தி யோசனையுடன்.
“தெரியாது அங்கிள், தெரிந்தால் இவளை கொன்னுட்டு செத்துடுவாங்க. நாங்களே அவ செமஸ்டர் லீவு, டூர் போய்ட்டு வரோம் என்று சொல்லி தான் இங்கே வந்திருக்கோம்.” என்றான் ரகு.
“இந்த வாரமே நல்ல நாள் பார்த்து திருமணத்தை நடத்திடலாம்.” என்றார் மூர்த்தி.
“சாரி அங்கிள், நல்லது நீங்க பேசும் போது குறுக்கே அபசகுனமாய் பேசுவதாக நினைக்காதீர்கள். கொஞ்சம் காயு மனம் எந்த நிலையில் இப்போ இருக்குன்னு யோசிங்க. மனதளவில் எந்த அளவிற்கு நொந்து இருந்தால் அவ அந்த முடிவை எடுத்திருப்பாள்.
இப்போ திருமணம் நடந்தால், அது அவளுக்கு ஏற்பட்ட அவ பெயர் நீங்க மட்டுமே என்பது அவள் மனதை விட்டு நீங்கவே நீங்காது. அவ வாயில் இருந்து தூக்கத்தில் கூட, ‘நான் தப்பானவா இல்லை’ என்று தான் வருது.
தனக்கு இப்படி ஒரு நிலை வர ராகேஷ் தானே காரணம் என்று ஏற்கவும் முடியாமல், வெறுக்கவும் முடியாமல் ரொம்ப நிலைகுலைந்து விடுவாள் அங்கிள். இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் அங்கிள்.
மனதிடம் என்பது அவளிடம் சுத்தமாய் இல்லை. இருபத்தி நாலு மணி நேரமும் காவல் இருக்க முடியுமா சொல்லுங்க.
‘ஊர் உலகம் இப்படி பேசி விட்டதே’ என்று காரில் வரும் போது கூட புலம்பிட்டே தான் வந்தாள்.” என்றாள் அஞ்சலி.
“தவறே செய்யவில்லை என்றாலும், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் போது ஒரு பெண்ணின் கேரக்டர் கொச்சைபடுத்த படும் போது, அதனால் பாதிக்க படும் பெண்களின் மனம் எந்த நிலையில் இருக்கும் என்று உணர்ந்து, அவளுக்கு தேவையான மரால் சப்போர்ட் கொடுக்க நீளும் கைகள் மிக சொற்பமே.
ஆதாரம் வைத்து கொண்டு எல்லாம் யாரும் பழி போடுவதில்லை. பழி போடுபவர்களுக்குத் தான் ஆதாரத்துடன் நிரூபிக்கும் கடமை உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் நெருப்புக்குள் இறங்க நேரிடுவது பெண்கள் தான். ” என்றாள் அஞ்சலி.
“இப்போ என்னமா செய்யறது! காயத்திரி இல்லை என்றால் என் மகன் எங்களுக்கு இல்லாமல் போய் விடுவான்.” என்றார் கற்பகம் கண்ணீருடன்.
“ஆன்ட்டி! முதலில் கவுன்செல்லிங் அவளை அழைத்து போறேன். இதுக்கான, ‘நிர்பயா, ஆசாத், அசரா, ராஹின்னு’ நிறைய அமைப்புகள் கவுன்செலிங் தராங்க அங்கிள். மனதளவில் தேறி அவள் வரட்டும்.
பிறகு அவளையே ராகேஷ் இடம் பேச வைப்போம். சாரி டு சே திஸ் ராகேஷ். அவளுக்கு உங்களை மணக்க விருப்பம் இல்லை என்றால் நீங்க விலகி தான் ஆக வேண்டும். இது ஒன்றும் கதைகளில் வரும் கற்பனை வாழ்க்கை இல்லை. பிடிக்காதவர்களுடன் திருமணம் நடந்து சில காலங்களில் மனம் மாறி காதல் பெருக்கெடுப்பதற்கு. முழு நரகம் ராகேஷ் அது.
எதுவாய் இருந்தாலும் உங்களை நீங்களும் தயார் படுத்தி கொள்ள தான் வேண்டும். உங்க காதலை விட எங்க காயுவின் உயிர் எங்களுக்கும் முக்கியம்.” என்றாள் அஞ்சலி.
“எனக்கும் தான் சிஸ்டர். சிறு பிள்ளை போல் பின்னால் சுற்றியது இத்தனை பெரிய பிரச்சனை கொண்டு வரும் என்று நான் கனவிலும் நினைக்கலை. அவளை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்.” என்றான் ராகேஷ்.
“இது தான் நிஜத்திற்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசம். பின்னால் துரத்துவதையும், கிண்டல் செய்வதையும், காதலில் விழுவதையும் தான் சென்சேஷனல்லா காட்டுவாங்க. இதன் கறுப்பு பக்கம் நிறைய உண்டு ராகேஷ்.
ஒரு பெண்ணை ஆண் தொடர்வதற்கு எல்லாமா தற்கொலை செய்து கொள்வார்கள் என்று சுலபமாய் கேட்டு விடலாம். ஆனால் இதற்கும் பெண்கள் உயிர் போய் இருக்கிறது தான். 2016, Shri Deu Baju Bodake மும்பை உயர் நீதி மன்ற வழக்கு போல் நீங்க செய்தது திசை மாறியிருக்கும். இங்கே என்ன நடந்ததோ, அது அந்த பெண்ணிற்கு நடந்து, அந்த பெண் தன் உயிரையே மாய்த்து கொண்டாள்.” என்றாள் அஞ்சலி.
“புரியுது மா, இந்த கோணத்தில் எல்லாம் இவன் யோசித்தது போல் தெரியவில்லை. எது கற்பனை, எது நிஜம் ரியாலிட்டி என்ற தெளிவு குறைத்து போய் இருக்கு.
இப்படி எல்லாம் செய்தால் அந்த பெண் இம்ப்ரெஸ் ஆகி விடுவாள். இப்படி செய்து தான் பார்த்தால் தான் என்ன, என்று நாலு அறைக்குள் நடக்கும் வக்கிரம் அதிகமாகும் போது தெருவில் செல்லும் சாதாரண பெண்களும் பாதிக்கபடுகிறார்கள். அந்த பிரின்சிபால் எதுக்கு தரம் இறங்கி பேசினார் என்று தெரியவில்லையே!.” என்றார் கற்பகம்.
“எனக்கு தெரியுமா, அவன் மகளை ராகேஷுக்கு கொடுக்க ரொம்ப நாளாகவே என்னிடம் சொல்லிட்டு இருந்தார். ராகேஷ் காயு பின்னால் வருவதை அவரால் ஏற்க முடியவில்லை.
எப்படி எல்லாம் செய்தால் அவர் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று பிளான் போட்டிருப்பான் ப்ளடி ப்ளாக்கர்ட்.” என்றார் ருத்திரமூர்த்தி கோபத்துடன்.
அதன் பின் எல்லாம் வெகு வேகமாய் நடந்தது. காயத்திரி பெயர் வெளியே வராமல் அந்த பிரின்சிபால் கைது செய்யப்பட்டார். மோசமாய் டீஸ் செய்த மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்கள் பிள்ளைகள் செய்த மிக உயர்ந்த வேலைகளை வீடியோ, மெஸ்ஸஜ் என்று காட்டி சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அதற்கு அவ்வளவு சுலபத்தில் காயத்திரி சம்மதிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
‘சைக்யாட்ரிஸ்ட், மன நல மருத்துவர்’ என்றாலே பைத்தியம் பிடித்தவர்கள் செல்லும் இடம், கீழ்ப்பாக்கம், குணசீலம் என்று தான் சமூகத்தில் எண்ணம் நிலவுகிறது.
“அஞ்சலி!… எனக்கு பைத்தியம் எல்லாம் இல்லை பா….”என்று சிறு குழந்தை போல அழுத காயத்திரிக்கு, அஞ்சலி அங்கே ஒரு தாயாய் மாறினாள்.
“காயுமா!… ஒரு கேள்வி கேட்கிறேன். வீட்டில் அம்மா பூரி, அப்பளம் ஒரு எண்ணையில் செய்யறாங்க தானே….ஒரு முறை சுடப்பட்ட எண்ணையில் புதிய எண்ணையை சேர்த்து, அந்த எண்ணையை தொடர்ந்து நாற்பது ஐம்பது முறை பயன்படுத்திட்டே இருந்தால்….”என்றாள் அஞ்சலி.
“எண்ணெய் சீக்கு வாடை அடிக்கும். உடலுக்கும் கெடுதி. விஷமாக கூட மாற விடும். அப்படி தொடர்ந்து பயன்படுத்த கூடாது என்று டாக்டர் சொல்ராங்களே.”என்றாள் காயத்திரி.
“சரி இப்போ ஒரு ஏ.சி, வாஷிங் மெஷின், உன் சுகுட்டி வண்டியை அடிக்கடி மெயின்டெய்ன் செய்ய கடையில் கொடுப்போம் இல்லை …அப்படி கொடுக்கவில்லை என்றால் ?”என்றாள் அஞ்சலி.
“மெஷின் பாழாகி விடும் அஞ்சலி.”என்றாள் காயத்திரி.
“அதே மாதிரி தான் மனித மனமும் காயத்திரி. ஒரு மனிதன் என்றுமே அவன் மட்டுமே கிடையாது…. அவன் பார்ப்பது, அவன் கேட்பது, அவன் யாருடன் பழக்கம் வைத்து இருக்கிறானோ அவர்களின் கலவை தான் அவன். சமூகத்தில் நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். எப்படியொரு நல்லது நம்மை ஆளாக்குகிறதோ அதே போல் கெட்டதும் நம்மை நாம் அறியாமலே நம்மைச் சிதைக்கும்.
தினமும் மனதில் ஆயிரம் துக்கம், துயரம், நல்லது, கெட்டது என்று போட்டு அதை ஒரு குப்பையாக தான் வைத்திருக்கிறோம். பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், வீட்டில் ஆயிரம் பிரஷர் இருக்கும்.
அதை பகிர்ந்து கொள்ள உண்மையான, ஆத்மார்த்தமான தோழமைகள் எத்தனை பேருக்கு அமைந்திருக்கும் சொல்லு. அப்படி மனம் நொந்து இருப்பவர்கள் பழகியவர்களிடமே மனம் விட்டு பேசுவது எல்லாம் கிடையாது.
யாரும் இல்லை என்ற எண்ணம் வந்து விட்டால் அங்கே வாழும் எண்ணம் போய் விடும்.”‘என்று அஞ்சலி சிறுக சிறுக பேசி, காயத்திரியை கவுன்செல்லிங் அழைத்து சென்றாள்.
காயத்ரி மனதில் சேர்ந்திருந்த அழுக்கு, கசடு, சகதி போன்றவற்றை அந்த மனநல மருத்துவரும் மெல்ல மெல்ல அகற்றினார்.
“இது இந்த கவுன்செல்லிங் இதை எல்லாம் நம்ம தாத்தா,பாட்டி காலத்தில் யாருமே செய்தது இல்லையே.”என்றாள் காயத்திரி.
“உண்மை தான் காயத்திரி. யோசித்து பார் உங்க ஊரில் எந்த தாத்தா, பாட்டி முகநூல், வாட்ஸாப்ப், ட்விட்டர் என்று இருந்தாங்க அந்த காலத்தில்… வீட்டுக்கு வீடு திண்ணை இருந்தது. கிராமத்திற்கு கிராமம் டீ கடை, ஆலமரம் இருந்தது.வருஷத்தில் முன்னூறு நாளும் ஏதாவது ஒரு உறவு வீடு விசேஷம், கோயில் திருவிழா என்று வண்டி கட்டி போனதெல்லாம் உண்டு.
அவர்களுக்கு குனிந்து நிமிர்த்து உடல் உழைப்பை போட்டு செய்ய வேலையும் இருந்தது.பேச்சு துணைக்கு ஆளும் இருந்தார்கள்.
இன்றோ நாம் குடியிருப்பது ஒன்று டிவி முன்னால் இல்லையென்றால் லேப்டாப், போன் முன்னால்.பக்கத்து வீட்டில் யார் என்ன என்று கூட தெரியாது. இதில் உன் மன அழுத்தத்தையோ, மற்றவர்கள் அழுத்தத்தையோ போக்க யார் துணை நிற்பார்கள் சொல்லு.
குடும்ப தொடர்கள் என்ற பெயரில் குடும்பத்தை எப்படி எல்லாம் சிதைப்பது என்பதை கிளாஸ் எடுக்கும் டிவி தொடர்கள், கலாச்சாரம், பண்பாடு என்பதை எல்லாம் தகர்க்க்கும் சினிமாக்கள், படுக்கை அறைகளை கண்ணுக்கு முன்னே கொண்டு வரும் கதைகள்….இதில் மனம் சிதையாமல் என்ன செய்யும் சொல்லு.
‘உன் நண்பன் யார் என்று சொல்லு, உன்னை பற்றி நான் சொல்கிறேன்’ என்பது அந்த காலம். ‘
‘நீ எந்த கதை படிக்கிறாய், எந்த தொடர், படம் பார்க்கிறாய் எந்த குழுவில் இருக்கிறாய் சொல் உன்னை பற்றி நான் சொல்கிறேன்’ என்பது தான் இந்த காலம்.” என்றார் விசாலாட்சி என்ற மனநல மருத்துவர்.
“கவுன்செல்லிங் செல்பவர்கள் எல்லாம் மனதைரியம் இல்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்ராங்களே.”என்றாள் காயத்திரி.
“ஒரு சின்ன ஓட்டை அடைக்கவிட்டால், எப்படி அது ஒரு பெரிய அணையையே உடைக்கும் வல்லமை கொண்டதோ அதே போல் தான் மன அழுத்தம் கூட. அது தாங்க முடியாமல் தானே பலர் மனநலம் பாதிக்கப்படுகிறார்கள்.உடலை போலத் தான் மனமும். எப்படி நாம் பார்த்துக் கொள்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது..
உங்களுக்குத் தேவை என்பதை ஒப்புக்கொள்வது, உதவி என்று வாய் விட்டுக் கேட்பதே கூடப் பெரும்பாலும் கடக்க கடினமான தடையாகும். அது ஒரு பலவீனம்அல்ல! மாறாக, இது தைரியம் மற்றும் முதல் சான்று.சுய முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கச் சொல்லும் முதல் படி.
ஆலோசனை விரைவான சிகிச்சை அல்ல. இது இன்ஸ்டன்ட் காபி போல் இன்ஸ்டன்ட் சொலுஷன் கொடுப்பது இல்லை. மாறாக, இது தனிநபர் செய்யும் ஒரு செயல், கவலைகளை கூட்டாக ஆராய்வதற்கு தனிநபர் விருப்பங்கள் மற்றும் சிறந்த செயல்படும் பதிலைக் கண்டறிய உதவுவது அவ்வளவு தான்.கவுன்சிலிங்கில் எந்த மாத்திரையும் இல்லை, மந்திரமும் இல்லை.”என்றார் விசாலாட்சி.
“இப்படி பேசுவதை நான் தோழிகளிடமோ, குடும்பத்தினரிடமோ சொல்லி விடுவேனே. அதற்கு எதுக்கு நீங்க தேவை.?”என்றாள் காயத்திரி.
“ராகேஷ் விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று குடும்பம் சொல்ல வில்லையே காயத்திரி. நடந்ததை சொன்னால், ‘உன் குடும்பம் உன்னை ஜுட்ஜ் செய்வார்கள்’ என்ற எண்ணத்தை உன்னால் கடக்க முடியவில்லை தானே. குடும்பத்தினரும் நண்பர்களும் பாரபட்சமின்றி ஒவ்வொன்றையும் பார்க்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு ஆலோசகரான எனக்கு நீ புதியவள். உன் தோழிகளை போலவோ, குடும்பத்தை போலவோ உன்னை மற்றவர்களின் பலங்களும் பலவீனங்களும் எனக்கு உன்னிடம் இல்லை. நீ எது செய்து இருந்தாலும் உன்னை நான் ஜுட்ஜ் செய்யப் போவதில்லை. நாம் பேச போகிறோம்.அவ்வளவு தான். உன் மனதில் உள்ளதை நீ சொல்ல போகிறாய். இதில் பயப்பட வேறு எதுவுமே இல்லை.”என்றார் விசாலாட்சி.
அஞ்சலியின் வழிகாட்டுதலின் பெயரில் காயத்ரி மூன்று மாதம் கவுன்சிலிங் சென்று தன்னை மீட்டு கொண்டாள்.
இதோ ஊர் உலகத்தின் முன் தலை நிமிர்ந்து ராகேஷ் மனைவியாக போகிறாள். இதோ இன்று மாலை நிச்சயம் நடக்க போகிறது. ரெண்டு நாள் கழித்து திருமணம்.
ஆனால் இது எல்லாம் நடக்க காரணமாய் இருந்த அஞ்சலி மிக பெரிய வெடிகுண்டை வெடிக்க வைத்தாள்.
காவ்யா, ராகேஷ் திருமணத்தில் கலந்துக்க கொள்ள போவதில்லை என்று சொன்னதன் மூலம். வீட்டினர் கெஞ்சி, கதறி, மிரட்டி பார்த்தும் அஞ்சலி அசையவில்லை.
“ப்ளீஸ் அஞ்சு!… எனக்காக ப்ளீஸ்.” என்றாள் காயு.
“ஒகே வரேன்… ஆனா உன் திருமணம் முடிந்ததும் அப்படியே கிளம்பிடுவேன். இங்கே வரவே மாட்டேன். ஒகே?”என்றவளை விக்கித்து போய் பார்த்தாள் காயத்திரி.
அஞ்சலியை உலுக்கினாள் காயத்திரி,
“அப்படி என்ன தாண்டீ நடந்தது உன் வாழ்வில்!… பார்க்க பணக்கார வீட்டு பெண் போலிருக்கே… ஆனா எங்களிடம் வேலைக்காரியை இருக்க உனக்கு என்ன தலையெழுத்தா?
என் வயசு தான் உனக்கு….ஆனால் ஆசா பாசம் இல்லாத சன்யாசினி போல் இருக்கே! என்ன தாண்டீ ஆச்சு உனக்கு, சொல்லி தொலை.”என்று அவளை விளாசி தள்ளினாள் காயத்திரி.
அவள் அடிகளை வாங்கி கொண்டு அமைதியாய் புன்னகையுடன் நின்றாள் அஞ்சலி. காயத்ரிக்கு அடித்து கை வலித்தது தான் மிச்சம்.
‘நானா வேலைக்காரி!… நானா சன்யாசினி! பெஸ்ட் ஜோக் ஆப் தி செஞ்சுரி… அந்த அஞ்சலி செத்துட்டா. ஏதோ இந்தளவு வேலைகளை இழுத்து போட்டு செய்வதால் தான் இரவில் உறங்க முடிகிறது.
வீரமாய் கிளம்பி விடுவேன் என்று சொல்லிட்டேன். எங்கே போவது? அப்படியே போனாலும், இதே பாதுக்காப்பு அங்கே கிடைக்கும் என்று என்ன உத்திரவாதம்!
இல்லை ‘அவன் தான் என்னை தேடாமல் கை கட்டி அமைதியாய் இருந்து விட போகிறானா! அவனுக்கு பயந்து, எங்கே அவனை பார்த்தால் உண்மை எல்லாவற்றையும் உளறி விடுவோமே என்று பயந்து தானே பாண்டவர்கள் இருந்தது போல் எனக்கு இந்த அக்நாத வாசம்.
ஒளிந்து, மறைந்து, எங்கே வெளியே சென்றால் எப்படியாவது கண்டு பிடித்து விடுவானோ என்று தலைமறைவாய் வாழ்த்து கொண்டு இருக்கிறேன்! தன்னை சார்ந்தவர்களுக்கு ஒன்று என்றால் எந்த எல்லைக்கும் செல்பவன், தனக்கே ஒன்று என்றால்!…’ என்று அஞ்சலியின் முகம் அவள் உள்ளத்தின் சோகத்தை வெளிக்காட்ட, காயத்திரிக்கே ஒருமாதிரி ஆகி விட்டது.
(ஆசிட் அட்டாக் நடத்தவருக்கு மிக முக்கியமான முதலுதவி நோயாளியின் பாதிக்கப்பட்ட உடல் பகுதியை உடனடியாக புதிய அல்லது உப்பு நீரில் கழுவ வேண்டும். நீர் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.எரிந்த பகுதியை அழுக்கு நீரில் கழுவ கூடாது, ஏனெனில் இது கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும்)
“வேணாம் அஞ்சு…நீ வரவே வேண்டாம். காரணம் இல்லாமல் நீ எதையும் செய்யமாட்டே.நீ இங்கேயே இரு.ஏதோ ஒன்று பெரிதாய் உன் வாழ்வில் நடந்து இருப்பதால் தான் உன்னை மாதிரி பெண் வீட்டை விட்டே வெளியேறும் நிலை வந்திருக்கு.
எங்களையே இப்படி பார்த்து கொள்கிறாய் என்றால் உன் குடும்பத்தை எப்படி எல்லாம் பார்த்து கொண்டிருப்பாய்.அவர்களையே நீங்கி வந்திருக்கிராய் என்றால் காரணம் இருக்கும் அஞ்சு.” என்றாள் காயத்ரி.
பேருக்கு சொல்லி விட்டாளே தவிர காயுவின் மனம் ஆறவில்லை.இப்படி ஒரு தேவதை பெண்ணிற்கு அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்று அதே யோசனையில் இருந்தவள் ஒரு வாரத்திற்கும் மேலாக ராகேஷை கண்டு கொள்ளவில்லை. நிச்சயத்திற்கு மூன்று நாளே இருந்த நிலையில் காயுவின் இந்த மௌனம் ராகேஷிற்கு வயத்தில் புளியை கரைத்தது.
“என்னை மன்னிக்கவே முடியலையா காயு?சாரி.”என்றான் ராகேஷ்.
“ம்ப்ச் …நம்மை பற்றி இல்லை ராகேஷ்.அஞ்சுவை பற்றி யோசிச்சுட்டு இருந்தேன்.” என்று சொல்லி அவன் வயற்றில் பாலை வார்தாள் காயு.
“ஏன் என்ன ஆச்சு அந்த ஹிட்லருக்கு?லவ்சா?”என்றான் ராகேஷ்.
“தப்பா பேசாதே ராகேஷ்.எங்க வீட்டுக்கு வந்த இந்த மூன்று வருடத்தில் அவ சினிமா பாட்டு கூட கேட்டு நான் பார்த்ததில்லை.ஆனா கீர்த்தனைகளை அவ்வளவு அழகாய் படுவாள்.வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கூட வருஷத்திற்கு பத்து துணியாவது எங்க வீட்டில் கொடுப்பாங்க.ஆனா இவ கிட்டே அதிகமாய் பத்து துணி கூட கிடையாது.சாப்பாடு விஷயத்திலும் அப்படி தான்.ஊருக்கே விருந்து வைப்பாள்.ஆனா மோர் சாதம்,ஊறுகாய் மட்டும் தான் அவள் உணவு.ஒரு சன்யாசினி போல் வாழ்ந்துட்டு இருக்கா.” என்றாள் காயத்ரி.
“வந்தா என்றால் அவ உன் ஒன் சிஸ்டர் இல்லையா?”என்றான்ராகேஷ் திகைப்புடன்.
“இல்லை.”என்றவள் அஞ்சலி அவர்கள் வீட்டுக்கு வந்த கதையில் ஆரம்பித்து ஒரு வாரம் முன்பு அவர்கள் திருமணத்திற்க்கு வர முடியாது என்ற அவள் பேச்சு வரை சொல்லி முடிக்க ராகேஷ் திகைத்து போய் அமர்ந்திருந்தான்.
“வாவ் அமேசிங் வுமன்…”என்ற ராகேஷ் மனதில் அஞ்சலி மேல் மரியாதை பல படி உயர்ந்தது.
“அமேசிங் மட்டும் இல்லை,எக்ஸ்ட்ராடினரி வுமன் டா.எங்க ஈஸ்வர் பிறந்த போது அண்ணி டிரீட்மென்ட்டுக்கு பணத்தை அவள் தான் கட்டினாள் என்று ரெண்டு குடும்பத்திற்குமே தெரியாது?வாயை திறந்து சொல்லவும் இல்லை.
பேச்சுவாக்கில் ரெண்டு குடும்பத்திற்கும் தாங்கள் பணத்தை கட்டவேயில்லை என்பதே தெரிய வந்தது.வட்டி போட்டு பணத்தை கொடுத்தால் அதை கூட வாங்கவில்லை.அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்பதை கூட சொல்லாமல் அவளுக்கு சுளுக்கு என்று சொல்லி தான் எங்களை வரவழைத்தாள். உண்மை தெரிந்தால் பெரியவங்க எங்கே பேனிக் ஆகிட போறாங்க என்று ப்ரெசென்ஸ் ஆப் மைண்ட்.”என்றாள் காயத்திரி.
“யப்பா!… இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா அஞ்சலி தேவியரின் சாதனை?’என்றான் ராகேஷ்.
“நீ என்ன வேண்டும் என்றாலும் நக்கல் அடி ராகேஷ்.அஞ்சலி இல்லையென்றால் இன்னைக்கு எங்க குடும்பம் இல்லை.அவள் எடுத்த முடிவுகள் தான் இன்று கதிர்,ரகு அண்ணா இத்தனை உயர்ந்து நிற்பதற்கு காரணம்.
இந்த சிறு வயதில் எப்படி இவ்வளவு சாதனை புரிந்தார்கள் என்று பார்ப்பவர்கள் வியந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களையே கேளு முழு காரணம் அஞ்சலி தான் என்பார்கள்.அது மட்டும் இல்லை இன்று தன்னம்பிக்கையுடன் உங்களை நான் ஏற்க கூட அஞ்சலி தான் காரணம்.அவள் மட்டும் என்னை கவனித்து அன்று தடுத்திருக்கவில்லை என்றால் இன்று என்னை புதைத்த இடத்தில் புல்லே முளைத்திருக்கும்.”என்றாள் காயத்திரி
காயத்திரியை இழுத்து அணைத்த ராகேஷ், “வேண்டாம்டீ சொல்லாதே….அதை தாங்கும் சக்தி கூட எனக்கில்லை.இனி எப்போதும் அதை பற்றி பேசாதே… காதல் என்றால் அது ஒரு பெண்ணை வாழவைத்திருக்க வேண்டும் என்று செருப்பால் அடிக்காத குறையாய் எனக்கு புரிய வைத்தவள் அஞ்சலி தான். ‘stalking is not love’ என்று இப்போ தான் புரியுது.”என்ற ராகேஷ் கண்ணீர் காயத்திரியின் நெற்றியை நிறைத்தது.
மெல்லிய புன்முறுவலுடன் நிமிர்ந்த காயு, ”அயய்யோ! ….நீ அழுமூஞ்சி பையனா?அப்பப்பா டேமை திறந்து விடறே…சீ சீ …lkg பாப்பா மாதிரி அழுறே” என்று கேலி செய்தாள் காயத்திரி.
அவள் முயற்சி புரிந்தவனாய்,”ஏய் யாரை பார்த்துடீ lkg பையன் என்கிறே? இந்த lkg பையன் செய்யும் வேலை பார்க்கிறியா ?”என்று கிட்டே நெருங்க அவன் திட்டம் புரிந்தவளாய்,”அய்யோ கதிர் அண்ணா,ரகு அண்ணா காப்பாத்து” என்று கத்தியபடி அவர்கள் இருந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தாள்.
தங்கை கத்தி கொண்டே ஓடி வரவும் என்னவோ ஏதோ என்று பதறி எழுந்த அண்ணன்மார், அது காதலர்களின் விளையாட்டு என்று புரிந்து போனது.
அவர்கள் பின்னே மறைந்து ராகேஷுக்கு அவள் ஒழுங்கு காட்ட,டன் கணக்கில் அசடு வழிய நின்றவனை கண்டு எழுந்த சிரிப்பை கட்டுப்படுத்த பெரும் பாடுபட்டார்கள்.
ராகேஷ், காயத்ரி சந்திப்பது கதிருக்கு சொந்தமான ஷாப்பிங் மாலில் தான். காயத்திரி ராகேஷை மணக்க சம்மதித்ததும்,இந்த ஏற்பாட்டை செய்தது அஞ்சலி.
இருவரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் என்று. வரவேற்பு அறையில் கதிர்,ரகு கணக்கு வழக்கு பார்ப்பார்கள். ராகேஷ், காயத்திரி உள் அறையில் அமர்ந்து பேசி கொண்டிருப்பார்கள்.நடுநடுவே இந்த துரத்தல் ,அசடு வழிந்தல் எல்லாம் நடக்கும்.
“பாரு கதிர்!…உன் தங்கை என்னை lkg பையன் என்கிறாள்.தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் ராகேஷை என்ன சொல்றாள் பாரு.”என்றான் அவன்.
“பின்ன ஆவூன்னா அழுத்திட்டே இருந்தால் என்ன சொல்வதாம் கதிர் அண்ணா?நம்ம ஈஸ்வர் குட்டி கூட இப்படி அழ மாட்டான்.”என்றாள் காயு.
“நீ அழுமூஞ்சியா இருந்தா உனக்கு இணையாய் இருக்க நானும் அழ தானே வேண்டும்.?” என்றான் ராகேஷ்.
“காயுமா!… அழுதியா என்ன?”என்றார்கள் அண்ணன்கள் இருவரும் கோரஸாய்.
“அது ஒன்றும் இல்லை அஞ்சலி திருமணத்திற்கு வர மாட்டேன் என்று சொன்னாங்க போலிருக்கே.உடனே இந்த மேடம் மூஞ்சியை நாலு அடி தூக்கிட்டு சுத்துது.அது என்ன இத்தனை பேரை இன்சல்ட் செய்வது போல் இப்படி செய்வது?”என்றான் ராகேஷ்.
“அவ வரும் போதே போட்ட கண்டிஷன் தான் ராகேஷ்.”என்றான் கதிர்.
“அவங்க யாரு என்ன என்று ஒரு விவரம் கூடவா தெரியலை?”என்றான் ராகேஷ்.
“அதுவும் அவ கண்டிஷன் தான்.தன்னை பற்றி எதையும் கேக்க கூடாது,ஆராய கூடாது” என்றான் ரகு.
“நீங்க தானே செய்ய கூடாது.நான் செய்கிறேன்.இருக்கவே இருக்கு டிடெக்ட்டிவ் ஏஜென்சி.”என்றான் ராகேஷ்.
“அய்யோ வேண்டாம் ராக்கி…அதை செய்வதாய் இருந்தால் தாத்தா,அப்பா செய்திருக்க மாட்டாங்களா?ஏதோ பிரச்சனை என்று தான் இப்படி மறைத்து இருக்கா.நன்மை செய்வதாய் நினைத்து ஆபத்தை இழுத்து விட்டுட போறீங்க.” என்றாள் காயு பதறியப்படி.
“எல்லாம் ஒகே..ஆனா ஒரு டவுட் காயு.எப்போ இருந்து இப்படி பக்கா செல்பிஷ் ஆனே நீ?’என்றான் ராகேஷ்.
“ராக்கி!…என்ன இப்படி எல்லாம் பேசறீங்க?”என்றாள் காயு திகைப்புடன்.
“நீயே யோசி உனக்கு மேரேஜ் ஆகி நீ என் வீட்டுக்கு வந்துடுவே…கதிருக்கும் மேரேஜ் ஆகும்.நீங்க எல்லோரும் உங்கள் துணையுடன் சந்தோசமாய் வாழ்ந்து இருப்பீங்க.ஆனால் அஞ்சலி மட்டும் உங்க பேர பிள்ளைகளுக்கும் சேர்த்து ஆயா வேலை பார்க்கணும் அதானே?
யார் லைஃபில் பிரச்சனை இல்லை?தீர்க்க முடியாதது என்று எந்த பிரச்சனையையும் கடவுள் கொடுப்பதில்லை.என்ன பிரச்சனை,ஆபத்து என்று முதலில் தெரிந்தால் தானே அதற்கு நாம் உதவ முடியும்? வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து விட்டால் எல்லாம் சரியாகிடுமா என்ன?
அப்படியே அது அவ்வளவு பெரிய ஆபத்து என்றாலும் எதிலிருந்து,யாரிடம் இருந்து அவளை காப்பாற்றுவது என்று தெரியணும் இல்லையா?
வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என்று மிரட்டினால் உங்கள் வீட்டில் அறைகளே இல்லையா? இல்லை பூட்டு தான் இல்லையா? உள்ளே வச்சி பூட்டுங்க. உங்களுக்கு எல்லாம் ஒன்று என்றால் அவளே கண்டிஷனை மீறினாள் தானே.?ஏன் ‘காலேஜ் கோர்ஸ் செய்யறேன்’ என்று பொய் சொல்லி, உன்னை கவுன்சிலிங் அழைத்து போனாள் தானே? ஆனா நீங்க மட்டும் அவ சொன்னதையே பிடிச்சுட்டு தொங்குவீங்களா?’ என்றான் ராகேஷ்.
திகைத்தவர்களாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள் அவர்கள்.
“உங்க வீட்டில் அறை இல்லையென்றால் அதை கட்ட,பூட்டு வாங்க முடியவில்லை என்றால் அதற்கும் நான் வேண்டும் என்றால் பைனான்ஸ் செய்யறேன் பேபி.காட் ப்ராமிஸ்.” என்றவனின் குரலில் பயங்கர நக்கல்.
இதயம் சமர்ப்பிக்கப்படும்.