சரணாலயம் – 12
சரணாலயம் – 12
சரணாலயம் – 12
காதல் என்பது அவரவர் மனம் சம்மந்தப்பட்டது. முன்பின் அறியாத ஒருவரிடம் கைமாறில்லாத நம்பிக்கையும் அன்பையும் வைத்து, எதிர்கால பயணத்தை காதல் எளிதாக தொடங்கி வைத்து விடுகிறது.
அப்படியான வாழ்க்கையை, விரும்பியவனுடன் வாழ நினைத்தில் தவறென்ன… ஒருவனை பிடிக்கவில்லை என்றால் அவனைப் பற்றி தரக்குறைவாக எடைபோட்டு அவதூறாய் பேசியே ஆகவேண்டுமா?
சரண்யாவிற்கு நினைக்க நினைக்க மனம் தாளவில்லை. உடன் பிறந்தவர்களின் வரைமுறையற்ற பேச்சும் எள்ளலான பார்வையும் இந்த ஜென்மத்தில் அவளுக்கு மறந்து விடாது.
சொந்த தங்கையென்றும் பாராமல் தன்னையும் வீடுவீடாகச் செல்லும் பிச்சைக்காரியை விட கேவலமாக பேசியதை நினைத்தால் மனம் அத்தனை அகங்காரம் கொண்டது.
இவை அனைத்தையும் கேட்டும், பார்த்துக் கொண்டும், தந்தை அமைதியாக இருந்ததில், அவளும் அந்த வீட்டில் தனக்கிருக்கும் பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவிற்கு வந்து விட்டாள்.
தனது முடிவை அவள் சொல்லியும் ஆயிற்று… அதற்கு அவர்கள் எதிர்ப்பையும் காட்டியாகி விட்டது. இனிமேல் கேட்பதற்கும் சொல்வதற்கும் எதுவும் இல்லை.
இனி என்ன? சசிசேகரனிடம் சொல்லி அடுத்து என்ன செய்வதென்று உடனடியாக யோசித்து, அதை செயல்படுத்தியே ஆக வேண்டுமென்ற முடிவில் சென்னைக்கு கிளம்பி விட்டாள்.
“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல… அந்தஸ்து, சொத்து, இதெல்லாம்தான் என் காதலுக்கு தடையா இருக்குன்னா, அது எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டியது சசியோட என் கல்யாணமும் அதுக்கு உங்க ஆசீர்வாதமும் தான்…” தந்தையிடம் தெளிவாக கூறி, வீட்டை விட்டு வந்துவிட்டாள்.
நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்ததில் மனம் பாறாங்கல்லாய் கனத்துப் போய்விட, மௌனியாகவே பேருந்தில் பயணம் செய்தாள். இவளின் அமைதி துளசிக்கு வருத்தத்தையும் பயத்தையும் ஒரேசேர கொடுத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
கமலாலயா மூலம் சரண்யாவின் வீட்டில் நடந்ததை கேட்டறிந்தவளுக்கு அப்போதுதான், தன் அண்ணனுடனான அவளின் நேசமும் தெரிய வந்தது. தோழியே தனக்கு அண்ணியாக வருவதில் உள்ளம் மகிழ்ந்தாள்.
அதே வேளையில் சரண்யாவின் வீட்டினர், இதையே காரணம் காட்டி என்னவெல்லாம் செய்யப் போகின்றனரோ என்றே அந்த அப்பாவிப் பெண்ணின் மனமும் பெரும் கலக்கம் கொண்டது.
இன்னும் நடந்தவைகளை சசிசேகரனிடம் துளசியும் சரண்யாவும் சொல்லவில்லை. தோழியை ஆறுதல்படுத்தி அவளின் வாய்மொழியை கேட்டறிந்த பிறகே, தன் அண்ணனிடம் பேச வேண்டுமென்ற முடிவில் இருந்தாள் துளசி.
சரண்யாவிடம் சாதாரண பேச்சுக்கும் கூட ஆம் இல்லை என்ற ஒற்றை தலையசைப்பு மட்டுமே தொடர, இனி என்ன செய்வதென துளசிக்கும் விளங்கவில்லை.
நிதர்சனத்தை கூறி முடிந்தவரை, இந்த காதல் சரிவராதென்று சரண்யாவிடம் புரிய வைத்து விடு என, லயாவும் துளசிக்கு உத்தரவிட்டிருக்க, யாரை ஆதரித்து எப்படி பேச்சைத் தொடங்குவதென்று புரிபடாத முடிச்சுகளில் இவளும் அமைதியாக பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
பத்து நாள் விடுமுறையை கழிக்கவென வந்து, மூன்று நாட்களில் திரும்பிக் கொண்டிருந்தனர் இரு பெண்களும்.
“சாரி துளசி! என்னாலதான் உனக்கும் லீவ என்ஜாய் பண்ண முடியல!” சகஜ நிலைக்கு திரும்ப முயன்றவாறே பேருந்தில் சரண்யா பேச முயல,
“என்ன பேச்சு இது சரணி? நீ தர்மசங்கடமா தவிச்சிட்டு நிக்கும்போது, எனக்கு, என் லீவுதான் பெருசா போச்சா? என்ன ஒண்ணு… என்கிட்டயாவது உங்க விஷயத்தை சொல்லி இருக்கலாம்…” துளசி வருத்தத்துடன் குறைபட,
“அது… எப்படி சொல்ல? லவ்வர்ஸ் மூட்ல தொடர்ந்து நாங்க பேசி இருந்தா, உனக்கே சொல்லாம தெரிய வந்திருக்கும். எப்போ ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுகிட்டோமோ, அப்பவே விலகி நிக்க பழகிட்டோம்.
இத ரெண்டு பேரும் சொல்லி வச்சு செய்யல… ஏதோ ஒரு உந்துதல் ஒருவருஷம் அப்படியே இருக்க வைச்சுடுச்சு! பேசிட்டும் பழகிட்டும் இருந்தாதான் காதலிக்கிறதா அர்த்தமா?” அழுத்தங்கள் விலகிய பேச்சில் சரண்யா விளக்க, அவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“ஷப்பா… இந்த மாதிரி லவ்வர்சை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லைடி! சரியான அழுத்தம்தான் ரெண்டு பேரும்… ம்ம்ம்… என் அண்ணனுக்கு இருக்கு… உத்தமபுத்திரன் வேஷம் போட்டு கப்பல்ல சுத்துறவன், கள்ளத்தோணியில டூயட் பாடியிருக்கான் பாரேன்!” பொய்க் கோபத்துடன் சரண்யாவிடமே குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் துளசி.
“கேளு… கேளு… நல்லா கேளு… அப்படியாவது என்கூட ரியல் டூயட் பட ரெடியாகுறானான்னு பார்ப்போம். ஆனா, உண்மைக்கும் சொல்றேன்…இந்த சாமியாரை வச்சுக்கிட்டு என்பாடு திண்டாட்டமாதான் இருக்கப் போகுது. அத நினைச்சுதான் நான் தினமும் கவலைபடுறேன்!” பெருமூச்செறிந்தே இலகுவாக பேசியபடியே இருவரும் விடுதிக்கு வந்திருந்தனர்.
சரண்யா தனக்கென உடனடியாக பகுதிநேர வேலைக்கு விண்ணப்பிக்க, வாடிக்கையாளரின் குறைதீர்க்கும் வாய்ஸ்காலில் ஆங்கிலத்தில் பேசும் வேலை, பகுதிநேரப் பணியாக கிடைத்தது.
மாலை ஆறு மணிக்கு சென்றால், இரவு பனிரெண்டு மணிவரை வேலை நேரம். திரும்பி வருவதற்கு நிறுவனம் வாகன ஏற்பாட்டை செய்திருக்க, வேலைக்கு சென்று வர ஆரம்பித்தாள்.
அதற்கடுத்த நாட்களில் சசிசேகரனிடம் நடந்ததை எல்லாம் விளக்கியதில், அவனும் தன் பங்கிற்கு சரண்யாவிடம் காய்ந்தான்.
“நீ கொஞ்சம் அமைதியா பேசியிருக்கலாம் சரண்! இது எதிர்பார்த்தது தானே? பொறுமையா எடுத்து சொல்லியிருந்தா, எதிர்ப்பு வந்திருந்தாலும் உனக்கு இத்தனை பேச்சு வந்திருக்காது…” என்றிவன் ஆட்சேபணை தெரிவிக்க, இவளுக்குதான் பற்றிக் கொண்டு வந்தது.
“உன்னை பத்தி கேவலமா பேசினாங்க சசி! நம்ம உறவை அசிங்கமா பேசும்போது என்னால சும்மா இருக்க முடியல… எப்படியும் என் முடிவு இதுதான்னு உறுதியோட இருந்ததால, எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்!” அந்த நாளின் கோபத்தோடு அவனிடமும் படபடக்க தொடங்கினாள்.
“நீ என்ன சொன்னாலும், பெத்தவங்ககிட்ட அவ்வளவு பேசி இருக்க கூடாது சரண்!” என்றே அவளிடம் கோபத்தை காட்டினான் சசிசேகரன்.
எந்த ஒரு விசயத்தையும் நிதானமாய் கையாள வேண்டுமென்று காலமும் சூழ்நிலையும் அனுபவப்பாடமாக அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்க, அது அப்படியே சரண்யாவிடமும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தான்.
இவள் தன்னிஷ்டம் போல் வேலைக்கு சென்று வருவதும் அவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதில், எந்தநேரமும் கடுகடுத்துக் கொண்டிருந்தான்.
சசிசேகரனனின் அதிருப்தியில் இருவரும் முட்டிக் கொள்ள, அவர்களுக்குள் உள்நாட்டு பனிப்போர் தங்கு தடையின்றி களைகட்டியது.
“ஏன் வேலைக்கு போறேன்னு கேட்டா, ஈசியா வீட்டை விட்டு வந்துட்டேன்னு சொல்ற… உன் படிப்பு முடிய வேணாமா? இப்பவே கல்யாணம் குடும்பம்னு கமிட் ஆகுறதுல எனக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்ல சரண்…”
“கல்யாணத்த மட்டும்தான் இப்ப பண்ணிக்கலாம்னு சொல்றேன்… நீ சொல்ற கமிட்மெண்டுல எனக்குமே இப்போதைக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல சசி…” பதிலுக்கு வெடித்தாள்.
ஏற்கனவே கோபத்தில் உழன்று கொண்டிருந்தவள், அவனிடமும் சற்று அதிகப்படியாகவே பேசத் தொடங்கினாள்.
“இப்போதைக்கு பார்ட்டைம் ஜாப்ல சேர்ந்திருக்கேன். அதுலயே என் படிப்பை பார்த்துக்கற தைரியம் எனக்கு இருக்கு… ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து வீடு எடுத்து தங்குற ஐடியால, வீடும் பார்த்துட்டு இருக்கேன்.
வெளியாட்களுக்கு நம்ம உறவு கேலிகூத்தா தெரிய கூடாதுன்னு தான் இந்த கல்யாண முடிவையே சொல்றேன்! இதுக்கும் மேல உன் இஷ்டம்… நான் உன்னை கம்பெல் பண்ணல சசி!” இவள் விட்டேற்றியாக பேசியதில், அவனுக்குதான் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.
“லவ்வர்ஸ் மாதிரியா பேசுறீங்க? இப்படியே சண்டை போட்டுட்டு இருந்தா, எப்படிண்ணா லைஃப் ஃபுல்லா சந்தோஷமா இருக்கப் போறீங்க?” இருவரையும் சேர்த்து கடிந்து கொண்டாள் துளசி.
இவர்களின் வாய்தகறாரை முடித்து வைக்க, அவள் ஒருத்திதான் இருவருக்கும் இடையில் பாலமாக இருந்து சமாதானப் புறாவை பறக்க விடுவாள். அவள் இல்லையென்றால் அவரவர்க்கு ஏற்பட்ட கோபத்தில் வடதுருவம் தென்துருவமாகவே சுற்றிக் கொண்டிருந்திருப்பர்.
சரண்யாவின் மனநிலை சசிசேகரனுக்கும் நன்றாகவே புரிந்தது. ஆனாலும் தங்கையின் கடமை அவனுக்கு குறுக்கே நிற்க, அதை உடைத்து வெளிவருவதற்கு வெகுவாக யோசித்தான்.
“உன்னை நம்பி வந்திருக்கேன்னு உனக்கு அழுத்தம் கொடுக்க விரும்பல சசி! ஆனா என்னோட வாழ்க்கை, உன்கூட மட்டுந்தான்ங்கிற முடிவுல இருக்கேன்! அது எப்பவும் மாறாது!” தீர்மானமாக சரண்யாவும் வெளிப்படையாக கூறியதில் சசியின் மனம் இளகிப்போனது.
இவள்தான், தனது எதிர்காலம் என்றான பிறகு தயக்கம் எதற்கென்று இவனும் துணிந்து காரியத்தில் இறங்கி விட்டான்.
முதலில் லட்சுமியின் தந்தை வேலாயுதத்திடம் பேசினான். சரண்யா கூறியதைப் போல் தங்களுக்கு வேண்டியது பெற்றவர்களின் ஆசீர்வாதம் மட்டுமே என்று தெளிவுபடுத்தி விட்டு, திருமண ஏற்பாட்டில் இறங்கி விட்டான்.
வேலாயுதமும், ”பெத்த பிள்ளைகளா இருந்தாலும் ஓரளவுக்கு மேல அவங்க விருப்பத்தை மறுக்க கூடாது சிவா! பின்னாடி அதுவே மனசை ரணபடுத்தி, இருக்குற வரைக்கும் பாரம் சுமக்க வைச்சிடும்! கல்யாணம் பண்ணி வைச்ச பிறகு, உனக்கு எப்படி தோணுதோ அப்படி இருந்துக்கோ!” என தன்மையாக எடுத்துக் கூறியதில், ஏதோ ஒரு சமாதானத்திற்கு வந்திருந்தார் சிவபூஷணம்.
அடுத்த கட்ட வேலைகள் மிகவேகமாக நடந்தன. பெற்றவர் என்ற கடமையில் மகளின் திருமணத்திற்கு தன்பங்கு வேலைகளை செய்ய முன்வந்தார்.
அதை சசிசேகரன் ஒத்துக் கொள்ளவில்லை. மணமக்களின் பிடிவாதத்தில் திருமணம் மிக எளிமையாக முழுக்க முழுக்க சசிசேகரனின் செலவில் மட்டுமே நடந்தது. பெண்ணைப் பெற்றவராய் சபையில் மனைவியுடன் நின்று ஆசீர்வாதம் செய்தார்.
சரண்யாவின் உடன்பிறந்தவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. பெண் கொடுத்து பெண் எடுக்கும் ஒப்பந்தத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெற்றிவேலின் திருமணம் நின்று போனதில், அவனுக்கு தாங்க முடியாத ஆவேசம் மணமக்களின் மீது ஏற்பட்டிருந்தது.
இதனால் மனதை கருவிக்கொண்டே வெளியில் இருந்தே சசிசேகரனைப் பற்றி துவேசப் பேச்சுக்களை வரைமுறையின்றி பேசி வந்தான் வெற்றிவேல். எப்பொழுதும் போல் அவனுக்கு துணையாக சக்திவேலும் உடனிருந்தான்.
தங்களையும் மீறி பெற்றவர்கள் இந்த திருமணத்தை ஆதரித்ததில் அவர்களின் மீதும் கட்டுக்கடங்காத கோபம் கொண்டிருந்தனர் சகோதர்கள்.
“பெத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுன்னு எங்கள சொல்றதுக்கு நீ யாருடா?” ஆவேசத்துடன் மகன்களை கேட்ட மனைவியின் பேச்சை, சிவபூஷணம் அமைதியாக இருந்தே ஆதரித்து விட, சகோதர்களால் வீட்டில் தங்கள் எதிர்ப்பை காட்ட முடியவில்லை.
விமரிசையாக இல்லையென்றாலும், அமைதியான முறையில் திருமணம் நடந்தது. வேலாயுதம் மேற்பார்வையில் அனைத்து ஏற்பாடுகளையும் சசிசேகரன் செய்திருக்க, சரண்யா தந்தையை ஏறிட்டும் பார்க்காமல் இருந்தாள்.
அவளைப் பொறுத்தவரை தங்களை உதாசீனப் படுத்தியவர்களை தானும் தவிர்க்க வேண்டுமென்ற முடிவில் இருந்தாள். அவளின் மனமும் வயதும் தன்னை தாண்டி எதையும் யோசிக்க முடியாத பக்குவமற்று இருந்தது. அதனால் லட்சுமியின் குடும்பத்துடன் பேசியவள், லயா மற்றும் தன் அம்மாவிடம் முயன்ற அளவு விலகிக் கொண்டாள்.
சௌந்திரவல்லிக்கு ஏதோ ஒரு நிம்மதி மகளின் திருமணத்தில் இருந்தாலும் மன நிறைவுடன் நகை சீர்வரிசைகளை முறையாக செய்ய முடியவில்லையென்ற வருத்தம் மனதை அழுத்தத் தொடங்கியிருந்தது.
பெற்றவர்களிடம் இருந்து எந்த ஒரு முறையையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென சசியும் சரண்யாவும் சேர்ந்தே முடிவெடுத்திருக்க, அதனை மாற்ற யாராலும் முடியவில்லை.
கமலாலயாவும் தன் முறையாக கணிசமான சீர்வரிசைகளை அளிக்க முன்வந்து, அதனையும் அவர்கள் மறுத்து விட, பெரியவளுக்கு சரண்யாவின் மேல் கோபம் கட்டுக் கடங்காமல் கூடிப்போனது.
“அப்படியென்ன சொல்லிட்டேன்னு நீ எல்லாரையும் தள்ளி நிறுத்துற? காதல்னு சொன்னவுடனேயே எந்த வீட்டுலயும் உடனே சம்மதம் கிடைக்காது. எல்லாரும் அத பத்தி, நாலு விதமா பேசத்தான் செய்வாங்க…
அதுக்காக அவங்களை எல்லாம் விலக்கி வைப்பியா? அப்படியிருந்தும் நீ ஆசைபட்டதுதானே இப்ப நடந்திருக்கு!” கோபத்துடன் கடிந்து கொண்டவளின் குரலும் கரகரக்க தொடங்கியது.
“தெரிஞ்சே பிரச்சனைய இழுத்து வைக்கிறாளேன்னு உனக்கு எதிரா பேசினது தப்பா? உன் கல்யாணத்துக்கு பெத்தவங்க எத்தனை கனவு கண்டிருப்பாங்க… அதையெல்லாம் ஒரேடியா அழிக்கிறியேன்னு உன்மேல கோபப்படக் கூடாதா?” என நிதர்சனத்தை எடுத்துரைக்க, சசிசேகரன்தான் சமாதானப்படுத்தினான்.
“எங்களை மன்னிச்சிடுங்கக்கா… பெத்தவங்களோடது வேண்டாம்னு சொல்லிட்டு, உங்களோட முறைய ஏத்துகிட்டா, அது அவங்களை ரொம்ப சங்கடப்படுத்தும். இத்தனை நாள் உங்க கண் பார்வையிலயே எங்களை வச்சு பார்த்ததே நாங்க செஞ்ச புண்ணியம்… எங்களுக்கு அது போதும்!” என்று அமைதியாக சசி சொல்லிவிட, அதற்கும் மேல் அவர்களிடம் திணிக்க முடியவில்லை.
திருமணம் முடிந்தாலும் யாருக்கும் சந்தோஷம் என்பது மருந்திற்கும் இல்லை. கடமை முடிந்ததென சிவபூஷணம் புறப்படும் நேரத்தில், வெற்றிவேல் நந்தியாக குறுக்கே வந்து மீண்டும் தர்க்கம் செய்ய தொடங்கினான்.
“இவ்வளவு வீராப்பு பேசுறவ சொத்துல பங்கு வேணாம்னு கையெழுத்து போட்டுட்டு போகட்டும்… இல்லைன்னா முன் வாசல் வழியா போயி, பின்வாசல் வழியா வந்து மாப்பிள்ளை பொண்ணுன்னு வீட்டுல சட்டமா உக்காந்திடுவாங்க!” நாக்கில் நரம்பில்லாமல் பேச, அடுத்த கணமே அவன் கொண்டு வந்த பாத்திரத்தில் கையெழுத்திட்டு அன்றோடு தனது பிறந்த வீட்டுடனான உறவை முடித்து கொண்டாள் சரண்யா.
ஆசீர்வாதம் மட்டுமே வேண்டி நின்றவர்கள் இதை செய்ததில் அதிசயமொன்றுமில்லை என்றே சாதாரணமாக நின்றார் சிவபூஷணம். எல்லாமே கை மீறிப் போய் விட்ட நிலையில் யாரையும் கண்டிக்கவோ அதட்டவோ கூடப் பிடிக்காமல் மனம் வெறுத்த நிலையில் இருந்தார்.
சௌந்திரவல்லியின் அழுகையும் லயாவின் கோபமும் மணமக்களை வருத்தம் கொள்ள வைக்க, யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் சென்னைக்கு கிளம்பினார்.
****************************************************
திருமண வாழ்க்கை சரண்யாவிற்கு பல பாடங்களை வலியுடன்தான் கற்றுத் தந்தது. கணவன் மனைவியுடன் வயதிற்கு வந்த பெண்ணாக துளசியும் உடனிருக்க, தம்பதியராய் சகஜமாய் பேசிடவும் கூச்சப்பட்டு ஒதுங்கினர்.
இரண்டு அறைகள் கொண்ட குடியிருப்பில் வீடு பார்த்து குடியேறினர். சசிசேகரனின் வருமானம் ஓரளவிற்கு கணிசமாக இருந்ததால் மாதச் செலவிற்கும் வாடகைக்கும் அதுவே போதுமென்றானது.
சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டுமென்று சசிசேகரன் வலியுறுத்திவிட, பெண்களின் அரைகுறை நளபாகத்தில் உணவும் பல்லிளிக்க ஆரம்பிக்க, நாட்கள் சுவராசியமின்றி கடந்தன.
திருமணம் முடிந்த ஒருவாரத்தில் வீட்டை அமர்த்தி விட்டு கப்பலுக்கு சென்று விட்டான் சசிசேகரன். இரண்டு பெண்களின் படிப்புச் செலவோடு, சசிசேகரனின் முதுநிலை படிப்பும் சேர்ந்து கொள்ள பற்றாக்குறை பட்ஜெட் அவர்களிடத்தில் எதிரொலித்தது.
எந்தவொரு தேவையிலும் பற்றாக்குறை என்பது என்னவென்று அறியாத சரண்யாவிற்கு இது பெருத்த சங்கடம்தான். தேவைகளை குறைத்து, செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் திண்டாடிப் போனாள். மனதில் நினைத்ததை எளிதில் வாங்கிக்கொள்ள முடியவில்லை.
துளசியின் திருமணத்திற்கென ஒதுக்கிய சேமிப்பில்தான் தங்களின் திருமணம் நடந்ததை சுட்டிக்காட்டி, பணத்தின் தேவையை சரண்யாவிடம் தெளிவாக கூறிவிட்டான் சசிசேகரன்.
எந்த ஒரு காரியத்திலும் பொறுமையை நிதானத்தை கடைபிடிக்குமாறு பாடம் எடுக்காத குறையாக அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தான்.
“உன்கூட ஆசையா பேசலாம்ன்னு ஃபோன கையில எடுத்தா, எங்கப்பாவுக்கு போட்டியா பாடம் எடுக்க ஆரம்பிக்கிற சசி! என்னவோ போடா… எந்த பக்கம் போனாலும் அது இடிக்கும், இங்கே தட்டும்னு சொல்லியே கேட் போட்டு நிறுத்துற…” அலுப்புடன் சொல்பவள் கணவனின் பேச்சை தட்டாது கேட்கத் தொடங்கினாள்.
இல்லையென்றால் மீண்டும் பாடம் எடுக்கத் தொடங்கி விடுவானே? அவளோடு துளசிக்கும் சேர்த்தே மண்டகப்படி நடத்துவான் சசிசேகரன். இதனாலேயே அவனது பேச்சை இம்மியும் பிசகாது பெண்கள் இருவரும் கேட்கத் தொடங்கினர்.
இந்த பணத்தில் மட்டுமே இந்த மாதத்தை ஈடுகட்டியாக வேண்டுமென்ற சசிசேகரனின் கண்டிப்பான உத்தரவுகள், இரவு நேரத்திலும் கண்முன் வந்து அவளுக்கு பயம் காட்டும்.
வாழ்க்கையை தன் வசப்படுத்தியே ஆகவேண்டுமென்ற உத்வேகம் சரண்யாவை மட்டுமல்ல, சசிசேகரன் மற்றும் துளசியையும் தெளிவாக, உயிர்ப்போடு செயல்பட வைத்தது.
சரண்யாவுடன் சேர்ந்து துளசியும் அதே இடத்தில் பகுதிநேர வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் துண்டு விழுந்த பட்ஜெட்டை கொஞ்சம் சரி செய்தனர். தம்பதிகள் பேசிக் கொண்டது போல, நண்பர்களாக மட்டுமே பழகத் தொடங்கினர்.
துளசி ஜாடை மாடையாக கேட்டதற்கும், “படிப்பு பிளஸ் உன்னோட கல்யாணம் வரைக்கும் இப்படியே இருப்போம்னு முடிவு பண்ணி இருக்கோம் துளசி!” சரண்யா சொன்னதில் இவளுக்கு ஐயோ என்றானது.
“பிரச்சனைகள் முடிஞ்ச பிறகு வாழக்கையை ஆரம்பிக்க நினைச்சா அது அத்தனை சீக்கிரத்தில முடியாது சரணி! செக்யூர் லைஃப் லீட் பண்ணலாமே?”
“நீ சொல்ற செக்யூர் உடம்புக்கு மட்டும்தானே துளசி… மனசுக்கு குடுக்க முடியாதே! மனசை அலைபாய விடாத பக்குவம் நமக்குள்ள வரணும். மூணுமாசத்துக்கு ஒருமுறை கப்பலை விட்டு வெளியே வர்றவனையும் கொஞ்சம் நினைச்சு பார்க்கணும்! எங்களுக்கு இன்னும் காலம் இருக்கு. நீ கவலபடாதே!” தெளிவாக சரண்யா கூறியதில் அவளின் மாற்றம் அழகாக வெளிப்பட்டது.
வீட்டு நிலவரம், வேலை, படிப்பு பற்றிய பேச்சுக்கள் மட்டுமே கணவன் மனைவி இருவருக்குமிடையே நடைபெறும். ஆசை வார்த்தைகள் காதல் பேச்சுக்கள் எல்லாம் எந்த தேசத்தில் இருக்குமென்ற நிலமையில்தான் இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர்.
திருமணம் முடிந்த ஒருமாதத்தில் பலமுறை சௌந்திரவல்லி மகளுடன் பேசவென அழைத்து தோல்வியை தழுவியிருந்தார். லட்சுமியின் அழைப்பை கூட சரண்யா தவிர்க்க ஆரம்பித்தாள். கமலாலயா கோபம் குறையாமல் அதே நிலையிலேயே இருந்தாள்.
“எல்லார் கூடவும் பேச ஆரம்பிச்சா, அப்புறம் அங்கே போயிட்டு வரத் தோணும். அடுத்து அவங்க கொடுக்கிறத வாங்கியே தீரணும்னு கட்டாயப்படுத்துவாங்க… அதுக்கடுத்து மெதுமெதுவா பிரச்சனை வளந்திரும்… எனக்கு இப்போதைக்கு யார் உறவும் வேண்டாம்” என்று துளசியின் வாயிலாக, அனைவரிடமும் சொல்ல வைத்தாள்.
*****************************************
இரண்டு வருடத்தில் சரண்யா, தனது ஐந்தாண்டு படிப்பை முடித்திருக்க, துளசியும் தனது நான்கு வருட கணினி இளநிலை படிப்பை முடித்திருந்தாள்.
இருவருக்கும் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னையில் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்க, கடின நாட்கள் இலகுவாய் கழிய ஆரம்பித்தன.
சசிசேகரனின் பயிற்சியும், உயர்படிப்பும் முடிந்து மும்பையில் இடமாறுதலுடன் உதவி பொறியாளராக பணியும் நிரந்தரமாகியது.
கௌஷிக்கின் நட்பு அந்த நேரத்தில்தான் கிடைத்திருந்தது. மும்பைக்கு அவன் வரும்போதே புது மனைவி பூஜாவையும் உடன் அழைத்து வந்திருந்தான்.
சரண்யாவையும் தன்னோடு அழைத்துக் கொள்ளும் ஏற்பாட்டினை சசிசேகரன் செய்ய ஆரம்பிக்க, துளசியின் திருமணம் முடியும் வரை இப்படியே தொடர்வோம் எனச் சொல்லி சசியின் முடிவினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாள் சரண்யா.
அடிக்கடி அவன் மேற்கொள்ளும் கப்பல் பயணத்தை நினைத்தே, மனைவி சொல்வதும் சரியென்றே தோன்றிட, அப்படியே நாட்களை கழிக்க தொடங்கினான்.
இவர்களின் திருமணம் முடிந்த மூன்றாம் ஆண்டின் முடிவில் துளசியுடன் பணிபுரியும் கிருபாகரன், அவளை விரும்பும் விஷயத்தை தெரிவித்திட, அவளோ வீட்டினரின் விருப்பமில்லாமல் எதுவும் சாத்தியமில்லையென்று தெளிவாக கூறிவிட்டாள். அவனும் தன் பெற்றோரின் சம்மதத்தை பெற்ற பிறகே, சசிசேகரனின் வீட்டில் வந்து பேசினான்.
கிருபாகரன், தனது பணியிட மாற்றமாக மஸ்கட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், திருமணத்தை முடித்துக் கொண்டு செல்லும் முடிவில் இருப்பதாக நேரில் வந்தே சொல்லிவிட, இருவீட்டாரின் சம்மதத்துடன் தங்கைக்கு திருமணம் முடித்து வைத்தான் சசிசேகரன்.
துளசியின் திருமணத்திற்கு, அனைவருக்கும் தபால் மூலம் திருமண அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. சரண்யா இன்னமும் யாருடனும் பேசியிருக்கவில்லை. இந்த காரணத்தை முன்னிட்டு உறவை புதுப்பித்துக் கொள்ள அவள் சற்றும் விரும்பவில்லை.
லட்சுமி வீட்டிற்கு சென்று அழைத்து விட்டு மற்ற இடங்களுக்கு செல்லாமல் இருந்தால், அது மிகப்பெரிய மன கஷ்டங்களை ஏற்படுத்தி விடுமென்றே ஊருக்கு போகும் முடிவையே விட்டிருந்தனர். திருமணமும் அவசரமாக நிச்சயிக்கப்பட்டதில் நேரமின்மை காரணமும் சேர்ந்து கொண்டது.
துளசியின் திருமணத்திற்கு வேலாயுதமும் கோதாவரியும் வந்து சென்றனர். ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் சிறப்பாகவே திருமணத்தை நடத்தினான் சசிசேகரன்.
கோதாவரி ஊருக்கு திரும்பி செல்லும்போது, “உங்கம்மாக்கு, நீ இன்னும் அவ பொண்ணாவே இருக்குறத நினைச்சு வெசனப்பட்டுட்டு இருக்கா… வரவர அவ புலம்பல் அதிகமாயிட்டே இருக்கு! ஊருக்கு வந்து பார்க்கலன்னா, அவகூட பேசவும் கூடாதா? அப்படி என்னதான் அவ பாவம் செஞ்சாளோ?” சரண்யாவிடம் பெரும் புலம்பலாய் கொட்டிவிட்டுச் சென்றார்.
தாயின் நிலையை கேட்ட பிறகு இவளுக்கும் பேச வேண்டுமென்று மனம் தவிக்க ஆரம்பிக்க, கணவனிடம் கேட்டே, தன் அம்மாவை அழைத்து பேச ஆரம்பித்தாள் சரண்யா.
மனைவியின் எந்தவொரு விருப்பத்திற்கும் தடை சொல்லாதவனாக சசிசேகரன் இருக்க, கணவனின் மனமறிந்தே செயல்படும் மனைவியாக மாறிப் போனாள் சரண்யா.
துளசியை புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தங்கள் வாழ்க்கையை மும்பைக்கு மாற்றிக் கொண்டான் சசிசேகரன். புதிய இடம், புதிய வாழ்க்கை இருவருக்கிடையேயும் இருந்த மௌனங்களை உடைத்துவிட, இதமான இரவுகளில் தங்களை தொலைத்துக் கொண்டனர். வாழ்வை முழுமையாக்கிய அமுதமாக சிவதர்ஷன் பிறக்க, வாழ்க்கை தெளிந்த நீரோடை போலவே செல்ல ஆரம்பித்தது.
பிரசவத்திற்கு கூட மகள் தாய் வீட்டிற்கு வராமல் போனதில் சௌந்திரவல்லி மிகவும் மனமுடைந்து போயிருந்தார். ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்தவரின் நிலைமை இன்னும் மோசமாகி விட்டதாக, லட்சுமி சொல்லிக் கேட்ட பிறகு, சரண்யாவிற்கும் அம்மாவை பார்க்க வேண்டுமென்ற தவிப்பு தோன்றியது.
ஆனால் எந்த முகத்தை வைத்து போவது? சொத்தும் வேண்டாம் உறவும் வேண்டாமென்று வீராப்புடன் கூறி விட்டு மீண்டும் அங்கே சென்று நிற்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
கணவனின் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொள்ள, தாய்வீடு இருப்பதையே முற்றிலும் மறந்து போனாள் சரண்யா.
சசிசேகரன் சொன்னதுபோல் சற்று பொறுமையுடன் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லியிருந்தால், உறவு முறையை மட்டுமாவது தொடர்ந்திருக்கலாமோ என்று சரண்யா, தன் அம்மாவின் மறைவிற்கு பிறகு அடிக்கடி நினைக்க ஆரம்பித்தாள்.
தன் தாயின் அகால மரணத்திற்கு தனது பிரிவும் பிடிவாதமும் கூட ஒருகாரணம் என்றென்னும் போதெல்லாம், உயிரோடு மரித்து விடுவாள். கணவனிடம் சொன்னால் அவனுமே தன்னுடன் சேர்ந்து வருத்தம் கொள்வான் என்றே அனைத்தையும் புதைத்து கொள்ள பழகிக் கொண்டாள்.
தன் வாழ்க்கைக்காக சொந்த பந்தகங்களை துறந்து, ஊரை வெறுத்து இதோ பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இப்பொழுது மீண்டும் பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம் என எண்ணும்போதே அவளது தேகம் மொத்தமாய் சிலிர்த்து அடங்கிட, அந்த உணர்வில் கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
பழைய ஞாபகங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தவனும், தன்மேல் சாய்ந்து கொண்டவளை அர்த்தப் புன்னகையுடன் பார்த்து நெற்றியில் முத்தமிட, பதிலுக்கு கணவன் மார்பில் தன்னிதழை ஒற்றியெடுத்தவள், அவன் நெஞ்சில் பாந்தமாக அடங்கிப் போனாள்.
கேள்விகளை கேட்டே ஓய்ந்து போன சோட்டுவும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, இவர்களின் வாகனம் கம்பம் நகராட்சியை அடைந்திருந்தது. இனி சோட்டுவின் கேள்விமழையில் இனிதே நனையத் தயாராவோம் நண்பர்களே!!!