சரணாலயம் – 13

சரணாலயம்  – 13

சின்னச் சின்னதாக பிய்த்துப் போட்ட சோளாபூரி விள்ளலில் தனது முழு கவனத்தை வைத்திருந்தான் சிவதர்ஷன்@சோட்டு. அந்த விள்ளலை, சிறிய பொட்டு அளவிற்கு சன்னா மசாலாவில் ஒற்றியெடுத்து, அதிலுள்ள வெள்ளை கொண்டை கடலையில் ஒன்றை பூரியில் அதக்கிக் கொண்டான்.

பின், உணவு தட்டின் அருகில் தனித்தனியாக கிண்ணங்களில் இருந்த சீனியிலும் பாலிலும் பூரியை மூழ்க வைத்து, அதனை தனது சிறிய வாயினில் தள்ளினான் சோட்டு.

கம்பம் பேருந்து நிலையத்தை ஒட்டிய உணவும் தங்கும் அறையும் சேர்ந்த நட்சத்திர விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்தார்கள் சசிசேகரனின் குடும்பம்.

மதிய உணவாக அறைக்கு வந்த அரிசி சாதமும், கூட்டும் பொரியலும் சோட்டுவிற்கு அலர்ஜியை கொடுத்துவிட, இல்லாத காரத்தையும் தன் சுவை நரம்பிற்குள் கொண்டு வந்தவன்,

“ஷ்ஷ்… ஊஊ… ஹா… இட்ஸ் வெரி ஹாட் பாபா! ஐ காண்ட் ஈட் திஸ்!” நாக்கை நீட்டியும், வாயை பொத்திக் கொண்டும் மகன் சொன்ன தினுசில் சசிசேகரன் அரண்டு போய் விட்டான்.

“அச்சோ! இவ்வளவு காரம் எடுத்துக்க வேணாம் சோட்டு பேட்டா… நான் சொன்னேனே கேட்டியா சரண்? பாரு, குட்டி முகம் பூரா சிவந்து போச்சு…” பிள்ளைக்கு தண்ணீரை குடிக்க வைத்துக் கொண்டே மனைவியை கடிந்து கொண்டான்.

“வேணாம் சசி! அவன் பண்ற அலம்பலுக்கு எல்லாம் குடை பிடிக்காதீங்க… அப்புறம் உங்களையும் சேர்த்து வைச்சே சாத்திடுவேன்!” கடுப்புடன் கணவனை முறைத்தவள்,

“லுக் தர்ஷூ… ஒன்லி த்ரீ டைம்ஸ் வாங்கிக்கோ! நெக்ஸ்ட் அந்த ஃபுல் பவுல் கர்ட்(தயிர்) உனக்குத்தான்… கமான் சாம்ப்!” விதவிதமாக கொஞ்சியும் ஒரு கவளம் சாம்பார் சாதம்கூட அவன் வாயில் செல்லவில்லை.

ஹோட்டலில் நுழையும் போதே சிவதர்ஷன் ஐஸ்க்ரீம் கேட்டிருக்க, சரண்யா மறுத்திருந்தாள். அந்தக் கோபமே மகனுக்கு ஃபைசல் செய்யப்படாமல் இருக்க, இப்பொழுது அவனுக்கு பிடிக்காத சாதமும் புதுவிதமான கூட்டும் பொரியலும் சிறியவனுக்கு ஒவ்வாமையை வரவைத்தன.

தந்தையிடம் என்ன செய்தால் தனக்கு வேண்டியது கிடைத்து, பிடிக்காததை தள்ளி வைக்கலாமோ அதை மிகச் சரியாக செய்யத் தொடங்கினான்.

அம்மா ஊட்டி விட்ட உணவையும் வேண்டுமென்றே வீம்புடன் சிந்தி பாழ்படுத்திவிட, முதுகில் இரண்டுஅடி சரண்யாவின் பரிசாக சோட்டுவிற்கு கிடைக்கப் பெற, தனக்கே உரிய உச்ச டெஸிபலில் கச்சேரியை ஆரம்பித்து விட்டான்.

மகனின் அழுகையில் உருகிய தந்தை, அவனுக்கு பிடித்த சோளாபூரியும் ஐஸ்க்ரீமும் உடனே வரவழைத்து, இதோ இப்பொழுது அவன் உண்ணும் அழகை ரசித்துக் கொண்டிருக்க, சரண்யாவால் இவர்களது அலட்டலை தாங்க முடியவில்லை.

“வந்து ஒருவேள சாப்பாடு உள்ளே போகல… அதுக்குள்ள என்னா அழிச்சாட்டியம் பண்ற நீ?” கண்களை பெரிதாக்கி மிரட்டலில் இறங்க, மகனுக்கு பரிந்து கொண்டு வந்தான் சசி.

“சாப்பிடும் போது திட்டாதே சரண்!

“மேரா லிட்டில் பம் வாண்ட் தால் புவ்வா ஒன்லி பாபா! மே க்யா கரூங்?” (என்னோட சின்ன தொப்பை பருப்பு சாதம் மட்டுமே கேக்குது. நான் என்ன செய்வேன்?) கண்ணையும் மூக்கையும் சுருக்கிக்கொண்டு பாவமாய் மகன் சொன்னதில் சொக்கிப் போன மனதை அடக்கிக் கொண்டு,

“அதுதான் இருந்ததேடா… அதையும் தானே துப்பி தொலைச்சே குட்டிபிசாசே!” சரண்யா குரலை உயர்த்த,

“ஆல்வேஸ் மாம் டார்சரிங் மீ பாபா! இட்’ஸ் நாட் குட் டூ ஹர்…” பெரிய மனிதனாய் அம்மாவின் மேல் குற்றப் பத்திரிக்கை வாசித்ததில், சசியும் அடக்க முடியாமல் சிரிக்க, இன்னும் அதிகமாய் கோபத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாள்.

“படவா…. ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடி லவ்யூ சொல்லி, முத்தம் கொடுத்திட்டு இப்போ டார்ச்சர் பண்றேனா? உன்னை…” என்றிவள் அடிக்க கை ஒங்க,

“போதும்டி! உன் கோபத்துக்கு எம் புள்ளைதான் கெடைச்சானா? நானும் பாக்குறேன்… ரொம்பத்தான் அவனை மிரட்டிட்டு இருக்க… அவன் சாப்பிட்டு முடியுறவரை பேசாம பால்கனியில போய் உக்காரு! எப்பபாரு புள்ளைய குறை சொல்லிட்டு திரியுறா…” என்றவன் மகனைப் பார்க்க, இப்பொழுது அவன் பூரியை ஐஸ்க்ரீமில் மூழ்கடித்துக் கொண்டு உள்ளே தள்ளினான்.

அதை பார்த்து ஒருபுறம் ஐயோ என்று முகத்தை சுளித்துக் கொண்டாலும், மகனின் வயிறு நிறைய வேண்டுமே என பொறுமையுடன் பல்லைக் கடித்துக் கொண்ட சசி,

“உங்கம்மா திட்டுறதுல தப்பே இல்லடா! நீயும் இல்லாத சேட்டை எல்லாம் பண்ற… சீக்கிரம் சாப்பிட்டு முடி… போய் அம்மாவ சமாதானம் பண்ணுவோம்!” மெதுவான குரலில் கிசுகிசுக்க,

“க்யா, ஹம் ஏக் அவுர் ஐஸ்க்ரீம் ஆர்டர் கரேங்கே பாபா?” (அப்போ இன்னொரு ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணுவோமா பாபா?)” ஆசைமேலிட மகன் கேட்க, தன்னையும் மீறி சிரித்து விட்டான் சசிசேகரன்.

“உன் ஆசைப்படி நடந்தா ரெண்டு பேருக்கும் அடி கன்ஃபார்ம்டா! ஜல்தி சே காவோ சோட்டு…(சீக்கிரம் சாப்பிடு) பாஹர் நிகலெங்கே…”(வெளியே போவோம்) என பல மந்திர வார்த்தைகளை கூறி மகனை உண்ண வைத்தான்.

ஒருவழியாக மகனின் சாப்பாடு அலம்பல் முடிந்து, வெளியே நடந்து வருவோமென சரண்யாவை அழைக்க, அவளோ  தலைவலி எனக்கூறி அவர்களை மட்டும் அனுப்பி விட்டு அறையில் படுத்துக் கொண்டாள்.

இரண்டு மணிநேரம் கழித்து, பேசும் ரோபோட்டையும், ரிமோட் காரினையும் பிடித்துக் கொண்டு அப்பாவும் மகனும் அறைக்கு வர, அப்பொழுதும் பால்கனியில் அமர்ந்திருந்தாள் சரண்யா.

ஏதோ ஒரு யோசனையில் மனதை போட்டு குழப்பிக் கொண்டே இருக்கிறாள் என்பதை மனைவியின் அசையாநிலையே சசிசேகரனுக்கு உணர்த்தியது.

மகன் வந்ததும் தனது புதிய விளையாட்டு பொருட்களின் பெருமை பேசியபடி அவளின் மடியில் அமர, சுவராஸ்சியமின்றி கேட்டுக் கொண்டிருந்தாள் சரண்யா.

“ரூம்ல ஆப்ரேட் பண்ணுவோம் கமான் சோட்டு!” என மகனை அறைக்குள் விளையாட விட்ட சசிசேகரன், மனைவியின் அருகில் வந்து,

“அப்படி என்னதான் யோசனை உனக்கு? ரூமுக்கு வந்ததுல இருந்து ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?” கேட்டவாறே மனைவியின் கைகளை தனது கைக்குள் அடக்கிக் கொள்ள, அந்த கரிசனமே அவளின் மனவோட்டத்தை மாற்றி அமைத்தது.

“கொஞ்சம் பதட்டமா இருக்கு சசி! அப்பா, லயாக்கா இவங்க ரெண்டு பேர்கிட்டயும் எப்படி, என்னனு கேள்வி கேக்குறது? பத்து வருசமா வீம்பா இருந்துட்டு, கேள்வி கேக்க மட்டும் வந்துட்டியான்னு கேட்டா என்ன பதில் சொல்றது? அம்மா இறந்த பிறகு விசாரிக்க கூட அந்த வீட்டு வாசப்படிய மிதிக்கல…

எல்லாத்துக்கும் மேல உங்களையும் தர்ஷூவையும் அவங்க எப்படி ஏத்துக்க போறாங்க? உங்களை அவமதிக்கிற மாதிரி யார் பேசினாலும் என்னால தாங்கிக்க முடியாது சசி!” என்றவள் உணர்ச்சி வசப்பட்டு, கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

பத்து வருடங்களாக கோபம் என்ற முகமுடி போட்டு மனதில் புகைந்து கொண்டிருந்த எண்ணங்கள், இன்று அமைதியாக கொந்தளிக்க தொடங்கியிருக்க, தன்னைத்தானே சமன்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு தவிக்கத் தொடங்கி இருந்தாள் சரண்யா. 

ஊருக்கு செல்லப் போகிறோம் என முடிவானதில் இருந்தே மனதை அரித்துக் கொண்டே இருந்த விஷயங்கள் யாவும் இன்று விஸ்வரூபமெடுத்து கலக்கம் கொள்ள வைக்க, ஒருவழியாக அதை கணவனிடத்திலும் கொட்டி விட்டாள்.

மனைவியின் கலக்கத்தை சரியாக உணர்ந்து கொண்டவனும், அவளை தோளோடு அணைத்துக் கொண்டு,

“எதுக்கு தேவையில்லாததை எல்லாம் கற்பனை பண்ணிட்டு இருக்க? நான் சொல்றத மனசுல பதிய வை சரண்! நாம கேள்வி கேட்க போகல… எல்லாரையும் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வர்றதுக்கு மட்டுமே போறோம்.

வாங்கன்னு கூப்புடுற வீட்டுக்கு போகப்போறோம். இல்லைன்னா வெளியவே நின்னு பேசிட்டு வந்துடலாம். எதுக்கு இத்தனை குழப்பம் வருது உனக்கு?” மென்மையுடன் பொறுமையாக கூறியவனின் வார்த்தைகளே மனைவியின் மனக்கிலேசத்தை போக்க போதுமானதாய் இருந்தது.

என்ன மாதிரியான மனிதன் இவன்? அத்தனை துவேசமாய் நிந்தித்தாலும் தனது இயல்பு மாறாமல், அனைவரையும் ஒன்றுபோல பார்க்கிறானே என எப்போதும் போல் அவனைப் பார்த்து பிரமித்தாள் சரண்யா. 

தோளில் சாய்ந்திருந்தவள் தலையை உயர்த்தி, “அப்படி என்கிட்டே என்ன இருக்கு சசி? யார் என்ன சொன்னாலும் பொறுமையா என்னை தாங்கிட்டு இருக்கீங்க?”

“என்ன இல்லை? நான்தான் வேணும்னு நின்ன உன்னோட பிடிவாதத்துக்கு முன்னாடி, என்னோட பொறுமை எம்மாத்திரம் சரண்?”

“உங்க உறுதிய விடவா சசி? எத்தனை பேச்சு, எவ்வளவு எதிர்ப்பு எல்லாத்தையும் அசால்டா தட்டி விட்டீங்களே!”

“ஆனா உன்னோட பிடிவாதம்தான், பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. இல்லன்னா இன்னும் என்னென்ன கஷ்டங்களை நாம அனுபவிச்சிருக்கனுமோ, தெரியல…”

“போதும்… ரொம்ப பழங்கணக்கு பாக்குறோம். நீங்க வெளியே போன கொஞ்ச நேரத்துல லச்சு அக்கா ஃபோன்ல ஒரே திட்டு! ஏன் நேரா ஊருக்கு வரல? நம்ம வீட்டுல வந்து தங்கமாட்டியான்னு பயங்கர கோபத்துல இருக்கா… நாளைக்கு மொத காரியம் அவளை சமாதனப்படுத்துறது தான்!” என்றவளின் மனமும் தெளிவாகி இருக்க, மகனை கவனிக்க சென்றாள். 

சசிசேகரன் பிள்ளையை கூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்த சமயத்தில் சரண்யா, லச்சுவிற்கு அழைத்து இங்கு வந்து சேர்ந்த விஷயத்தை சொல்லி, அவளின் கோபத்தையும் பரிசாக வாங்கியிருந்தாள். 

ஹோட்டலில் தங்கிக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் ஊருக்கு சென்று வரலாமென்று முடிவெடுத்தை சரண்யா சொல்லவும் லச்சு கோபத்தில் கொந்தளித்து விட்டாள்.

ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி, நாளை காலை புறப்பட்டு வருகிறேன் எனப் பலமுறை வலியுறுத்தியே பேச்சை முடித்திருந்தாள் சரண்யா.

மறுநாள் அதிகாலையிலேயே இவர்களை அழைத்துச் செல்லவென வேலாயுதம் காருடன் நேரடியாகவே வந்துவிட, இவர்கள்தான் அதிர்ந்து பின் சமாளித்தனர்.

லச்சுவைப் போலவே அவரும் கோபத்தில் இவர்களை கடிந்து கொண்டவர், அறையை காலி செய்து விட்டுதான் புறப்பட வேண்டுமென்று வீம்பாய் நின்றுவிட்டார்.

“தேவையில்லாத சிரமம் எதுக்கு மாமா?” சரண்யா தன்மையாக மறுத்து சசிசேகரனும் அதற்கு தலையசைக்க, மனிதர் கடுப்புடன் இருவரையும் கடிக்க ஆரம்பித்து விட்டார்.

“பக்கத்து வீடு, அப்பாவோட சிநேகிதன்ங்கிற பேச்செல்லாம் விடு! எப்போ உன் கல்யாணத்தை எடுத்து நடத்தினேனோ அப்பவே உன்னோட தகப்பன் ஸ்தானத்த, நான் எடுத்துகிட்டேன்! அப்பா வீட்டுக்கு வர்ற பொண்ணா நீ வந்தே ஆகணும்!” வேலாயுதம் கண்டிப்பில் அழைக்க,

“அப்படியில்ல மாமா! ஊர்ல நாலுபேரு பார்த்தா எல்லாருக்கும் தர்மசங்கடமா போகும்” சரண்யாவின் பிறந்த வீட்டை மனதில் வைத்தே சசிசேகரன் பேச,

“வரட்டுமே தம்பி! அப்படியாவது அந்த பயலுகளோட லட்சணம் என்னனு வெளியே தெரியட்டும்! ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் நம்ம வீட்டு மெச்சுலயும்(மாடி) ரூம் எடுத்து கட்டினது. அதனால இடம் பத்தாதுன்னு இன்னொரு சாக்கு சொல்லிட்டு நேரம் கடத்த வேணாம் சரணி!

சீக்கிரம் புறப்படு! நேத்து லச்சு விவரம் சொன்னதுல இருந்து கோதாவரி புலம்பிட்டு இருக்கா…” இருவரையும் துரிதப்படுத்தியவர், சோட்டுவை தன்னிடம் இழுத்துக் கொண்டார்.

அவனோ அத்தனை சீக்கிரத்தில் அவரிடத்தில் போகாமல், “வோ கோன் ஹை? வொய் டிட் ஹீ கம் ஹியர்?” (யார் இவர்? எதுக்கு இங்கே வந்திருக்கார்?) ஆராய்ச்சி பார்வையில் கேள்வி கேட்கத் தொடங்க,

“தமிழ்ல பேசு பேராண்டி! லச்சு பெரியம்மாட்ட மட்டும்ந்தான் அப்படி பேசுவியா?” என அவனுக்கு பரிச்சயமான பெயரைக் கூறியதும் முகம் மலர்ந்து விட்டான் பொடியன்.

“ஹாங் மேரா மொசீ!” (mosee-பெரியம்மா) என்றவாறே அவர் முன் வந்தவனை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டவர்,

“தாத்தா சொல்லு!” என சொல்லிக் கொடுக்க, சிறுவனுக்கோ அத்தனை எளிதில் அந்த வார்த்தை வரவில்லை.

தாதா, தாது என்று பலவிதமாய் தாத்தா வார்த்தை மருவிட, இறுதியில்,

“நாணான்னு கூப்பிடு சோட்டு!” என்று சசி சொன்னதில் உடன்பட்டு, அவரின் பெயரோடு சேர்த்தே ‘வேலு நாணா’ என அழைக்க ஆரம்பித்து விட்டான்.

காரில் ஏறிய நொடியில் இருந்து, வழியில் பார்க்கும் அனைத்திற்கும் விளக்கம் கேட்ட சோட்டுவிற்கு சளைக்காமல் பதில் சொன்னதில் வேலுநாணா, பேரனுக்கு மிக நெருங்கிய நண்பராகி இருந்தார்.

“வேலு நாணா! என்கூட விளையாட உங்க வீட்டுல யாராவது இருக்காங்களா? போர் அடிச்சா நான் அங்கே இருக்க மாட்டேன்!” மிக சிரமப்பட்டே தமிழில் பேச முயன்றான் சோட்டு.

குழந்தையின் முயற்சியை மகிழ்வுடன் பார்த்து சிலாகித்த வேலாயுதமும் தன்னால் முடிந்தவரை அவனுக்கு புரியும் வகையில்,

“ம்ம்… உன்கூட விளையாட தீபாஞ்சலி சிஸ்டர் இருக்கா… பவன் பிரதர் இருக்கான்!” என்று லட்சுமியின் பிள்ளைகளைப் பற்றி விவரித்தார்.

அவர் சொன்ன பெயர்கள் வழக்கம்போல் சிறுவனின் வாயில் ததிங்கினத்தோம் ஆட தித்லி, பவா என பெயர் மாற்றம் செய்து மனதில் பதிய வைத்துக் கொண்டான்.

வேலாயுதத்தின் உத்தரவின்படி முதலில் கோவிலுக்கு சென்று விட்டு அதற்கடுத்த படியாக வீட்டிற்கு செல்லலாமென முடிவு செய்யப்பட்டது.

ஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வத்தின் கோவில் அது. காளியம்மனோடு அய்யனாரும் அங்கே வீற்றிருக்க எந்தவொரு காரியத்திற்கு, ஊருக்குள் வருவதானாலும் போவதானாலும், அந்த கோவிலில் வணங்கிய பிறகே செல்வது அங்குள்ளவர்களின் வழக்கம்.

அதனை முன்னிட்டே வேலாயுதமும் சொல்லிவிட, நேராக கோவில் வாசலில் போய் இறங்கினர். அங்கே கோதாவரியும் லட்சுமியும் முன்னரே வந்து பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, சசியும் சரண்யாவும் அடைந்த ஆனந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

“மொத தடவ குடும்பமா ஊருக்குள்ள வர்ற… குழந்தைய கூட்டிட்டு வரும்போது யார் கண்ணு எப்படி பாக்குமுன்னு தெரியாது. எந்த பேச்சு எப்போ பலிக்குமுன்னு யாரு கண்டா? அதுக்குதான் எல்லையம்மனை வேண்டிட்டு, விபூதி பூசிட்டு போனா, பயமில்லாம இருக்கலாம்” என்ற கோதாவரி,

பேரனை அருகே நிறுத்தி பூசாரியின் கைகளால் விபூதி பூச சொன்னவர், “கீழே விழுந்து கும்பிடு சாமி!” என்றபடியே சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து காண்பிக்க, சோட்டுவும் அவர் சொன்னபடியே செய்து பாட்டியின் மனதில் நல்ல பிள்ளையாக இடம்பிடித்தான்.

“என் தங்கக்கொழுந்தே! எவ்வளவு அமைதி! அறிவுகுட்டி… என்ன சொன்னாலும் உடனே புரிஞ்சுகுறான், என் பேரன். உன் அம்மாவை நாலு சாத்து சாத்தனும் ராசா! உன்னை இத்தன வருசமா கண்ணுல காட்டமா வச்சுகிட்டாளே!” கோதாவரி, சோட்டுவை நெட்டி முறித்து கொஞ்சிக் கொண்டதில் சரண்யாவின் உடலும் மனமும் சிலிர்த்துக் கொண்டது.

“ரொம்ப நன்றி அத்தை… வேற எதுவும் சொல்றதுக்கு எனக்கு வார்த்தை வரல. ஏதோ ஒரு வீறாப்புல தள்ளியே இருந்துட்டோம்! கல்யாணம் முடிச்ச வைச்ச உங்ககிட்ட இருந்தும் ஒதுங்கி இருந்தது தப்புத்தான். அதை மனசுல வைக்காம இப்பவும் எங்களை தாங்குறீங்க!” உள்ளுக்குள் தங்கள் செயலை நினைத்து வெட்கிக் கொண்டே சரண்யா கரகரத்து விட,

“வந்த இடத்துல என்ன சரண் இது?” சசிசேகரன் ஆதரவாக அவளை தாங்கிக் கொண்டான். 

“அடிக்கழுத! உங்கம்மா இருந்திருந்தா இந்நேரம் தடபுடல் பண்ணியிருப்பா… அவளை கையில பிடிச்சிருக்க முடியாது. அதுல பாதிய கூட நான் செய்யல… இனிமேட்டு நன்றின்னு பெரிய வார்த்தை எல்லாம் உன் வாயில வரக்கூடாது பார்த்துக்கோ!” என அதட்டலில் இறங்கியவர்,

“நீ, நம்ம வீட்டு பொண்ணுடா… பத்து வருஷம் தள்ளி இருந்தா, உறவு விட்டு போயிடுமா என்ன?” வாஞ்சையுடன் அவளுக்கும் விபூதி பூசிவிட, சரண்யாவின் நெஞ்சமெல்லாம் பூரித்துப் போனது.

“அப்டி சொல்லும்மா… கேட்டுக்கோடி சரணி! இனிமே எனக்கு யார் இருக்கா? நான் எதுக்கு அங்கே வரணும்ங்கற பேச்செல்லாம் இனி உன் வாயில இருந்து வரக்கூடாது சொல்லிட்டேன்!” லட்சுமியும் தன் பங்கிற்கு வார்த்தைகளால் அன்பைக் கொட்டினாள்.

“உங்க மனக் கஷ்டத்துக்கு, நீங்களாவே ஆறுதல் தேடிக்கட்டும்னு தான் உங்களை இத்தனை வருஷம் தனியா இருக்க விட்டதே! அதுக்குதான் நாங்களும் அமைதியா இருந்தோம். உங்களை வான்னு கூப்பிடல… அதுவுமில்லாம நம்ம வீட்டுலயும் அவ்வளவு முக்கியமா எந்த விஷேசமும் நடந்திடல…” வேலாயுதமும் இத்தனை நாள் அமைதியாக இருந்ததற்கான காரணத்தை விளக்க, சரண்யா மொத்தமாக உருகி விட்டாள்.

பிறந்த வீடாக தன்னை தாங்கிக் கொள்ளும் குடும்பம், தனக்கான உறவுகளை எல்லாம் ஒன்றாய் பார்த்த சந்தோஷத்தை அந்த நேரத்தில் முழுமையாக அனுபவித்தாள்.

இவர்களின் அன்பைக் கூட உணராமல் பத்து வருடங்கள் ஒதுங்கி இருந்ததை நினைக்க நினைக்க சரண்யாவின் மனம் மேலும் தளர்ந்து போனது.

கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜையும் முடிவடைந்து மதியநேரம் தொட்டுவிட, பக்கத்தில் இருந்த ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு அனைவரும் வேலாயுதம் வீட்டிற்கு கிளம்பினார்.

லட்சுமியின் பிள்ளைகள் சோட்டுவுடன் விளையாட்டில் ஒன்றிவிட, மூன்று குழந்தைகளின் உலகமும் வேறாகிப் போனது.

லட்சுமியின் மகள் பத்து வயது தீபாஞ்சலியுடன் சோட்டு ஒட்டிக்கொள்ள, வார்த்தைக்கு வார்த்தை தித்லி என்றே அலுக்காத குறையாக அழைத்து வந்தான்.

“அக்காவ தீதி தானேடி சொல்வாங்க? அது என்ன தித்லின்னு கூப்புடுறான் உன் பையன்?” லச்சு, சரண்யாவிடம் கேட்க,

“தித்லி-ன்னா பட்டாம்பூச்சின்னு அர்த்தம். கார்லயே எல்லாரோட பேரையும் இந்த பெரிய மனுஷன் கேட்டு வச்சு, அவனுக்கு மனசுல பதியுற மாதிரி சுருக்கிட்டான். அவனோட ஸ்கூல் ஃபிரண்ட்ஸ்ல தித்லின்னு ஒரு பொண்ணும் இருக்கா!” மகன் பெயர் வைத்ததின் ரகசியத்தை உடைக்க, அந்த நாளின் சந்தோசங்களும் நீண்டு கொண்டே சென்றன.