சரணாலயம் – 14

சரணாலயம் – 14

மாலைநேர வெயில் முகத்தை சுளீரென்று தாக்க, பத்துவருட வித்தியாசங்களை மனதில் எடை போட்டுக் கொண்டே, சசிசேகரனின் குடும்பம் ராயப்பன்பட்டியை வந்தடைந்தது. அரைமணிநேர பயணமும் சீக்கிரமே முடிந்ததாக தோன்றியது அவர்களுக்கு.

கிராமத்தில் பெருமளவில் அனைத்தும் மாறியிருந்தன. முக்கியமாக எங்கும் பரவி நிற்கும் பசுமை வாசம் மறைந்து பாதிக்கும் பாதியாய் நிலப்பரப்புகள் வறண்டு போய் கிடந்தன.

பிறந்து வளர்ந்து ஓடியாடிய மண்ணில் காலெடுத்து வைக்கும்போது இனம்காணாத சிலிர்ப்பும் உற்சாகமும் சரண்யாவை மட்டுமல்ல சசிசேகரனையும் சேர்த்தே  ஆட்கொண்டது.

பிறந்த வீட்டைத் தாண்டி வாகனம் நின்றிருக்க, தங்களின் வீட்டினைப் பார்வையால் அளந்த வண்ணம் இறங்கினாள் சரண்யா. சிவபூஷணம் அமர்ந்து பாடம் எடுக்கும் திண்ணை வெறிச்சோடிப் போய், தரையில் தூசியும் குப்பையுமாய் அலங்கோலமாக இருந்தது.

காலையில் திறந்தால், இரவு பதினோருமணி வரையிலும் திறந்திருக்கும் வாசல் கதவு, இந்த மாலை நேரத்தில் சாத்தப்பட்டு மிக அமைதியாக காட்சியளித்தது.  சரண்யாவின் பார்வையை புரிந்து கொண்டே,

“வீடு எப்பவும் இப்படிதான் இருக்கும் சரணி! அந்த கதை எல்லாம் அப்புறம் சொல்றேன், நீ உள்ளே வா!” லட்சுமி அழைக்க, கோதாவரி ஆலம் சுற்றி சரண்யாவின் குடும்பத்தை உள்ளே விட்டார்.

“உன் வீட்டுக்காரர் எங்கே லச்சுக்கா? அவரை கோவில்லயும் பார்க்க முடியல…” உள்ளே வந்தபடியே சரண்யா கேட்க,

“அவருக்கு வேலை மாறிடுச்சு சரணி! மாசத்துல இருபதுநாள் மார்கெட்டிங் பண்றேன்னு ஊர்ஊரா சுத்திட்டு இருக்கார்”

“வாரே வா! உங்களுக்கு பிடிச்ச வேலையத்தான் ப்ரதர் செய்றாரா?” சசிசேகரன் கேலியில் இறங்க,

“அங்கே மட்டும் என்ன வாழுதாம்? பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு கப்பல்ல உலகத்த சுத்த, துரை மாசக்கணக்கா கிளம்பிடுவார்…” என கணவனுக்கு சரண்யா கொட்டு வைக்க,

“ஆமாமா… நீயும் சிரிச்ச முகமா அனுப்பி வைச்சுட்டுதான் மறுவேலை பார்க்கிற! நான் கிளம்புறேன்னா இவளோட அலம்பல் தாங்கமுடியாது லச்சுக்கா!” மனைவிக்கு குறையாமல் சசிசேகரனும் குறைசொன்னான்.

“பின்ன… என்னை விட்டு ஊர் சுத்துனா, சந்தோசமா அனுப்புவாங்களா? அப்படி போயும் அங்கேயிருந்து ஓராயிரம் பத்திரம் சொல்லியே வெறுப்பேத்துற துயரத்தை எங்கே போயி சொல்ல?” என இருவரின் நொடிப்பில் லட்சுமி இடைபுகுந்தாள்.

“உங்க மாமாக்கு ஊர் சுத்துறது சுத்தமா பிடிக்காது சேகர். வீட்டுல இருக்குறதுதான் அவர் விரும்புவாரு. அதனாலயே அவர் ஃப்ரீயா இருக்குற நேரமெல்லாம், அது சரியில்ல இது நல்லாயில்ல, நம்மவீடு போல வராதுன்னு ஃபோன்ல குறை சொல்லியே எங்களை கடுப்படிப்பார்” அங்கலாய்ப்பில் லச்சு இறங்க,

“மாசத்துல பாதிநாள் அம்மா வீட்டுல டேரா போட்டுட்டு அலட்டிக்காதேக்கா… இப்போதானே புரியுது! நீ எதுக்கு ஏர்லி மார்னிங் மட்டுமே ஃபோன் பண்ணறேன்னு…” சரண்யா கிண்டலை தொடர்ந்த நேரத்தில், வீட்டுத் தொலைபேசி அடித்தது.

“மாமாதான் கூப்பிடுறார்னு நினைக்கிறேன்… ஆயுசு நூறுன்னு நான் சொன்னதா சொல்லிடு!” சிரிப்புடன் அவள் விலகிச் சென்று விட, தொலைபேசியில் பேசியது சிவபூஷணம்.

“ஹலோ!” என்ற லச்சுவின் குரலுக்கு,

“அப்பா இருந்தா கூப்பிடும்மா…” ஒற்றை வார்த்தையுடன் சிவபூஷணம் அமைதியாகி விட்டார்.

லட்சுமி தன் தந்தையை அழைத்து சொன்னதில், சரண்யாவும் ஒருநிமிடம் அங்கே நின்று விட்டாள். அப்பா பேசுகிறார் என்றதும் ஏதோ ஒரு உந்துதல் அவளை உள்ளே செல்லவிடாமல் அங்கேயே கட்டிப் போட்டது.

வேலாயுதமும் தொலைபேசி அழைப்பினை ஏற்று பேசத் தொடங்க, சிவபூஷணம் அந்தபக்கம் சொன்ன செய்தியில்,

“இத்தனை வயசுக்கு அப்புறமும் என்ன பிடிவாதம் சிவா? இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்டிக்கிற…” நண்பனது பேச்சிற்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

யாருடைய வார்த்தையும் அவரிடம் எடுபடாது என்று தெரிந்தேதான் வேலாயுதம் தன் மறுப்பை தெரிவிக்க, அதற்கும் மதிப்பில்லாமல்தான் போனது.

சிவபூஷணம் அடுத்து பேச ஆரம்பிக்கும் முன்பே,

“சரணி ஊர்ல இருந்து வந்திருக்கா சிவா! அவகூட பேசுறியா?” வேலாயுதம் சொன்னதும், ஒருநிமிடம் அமைதியாகவே தொலைபேசியில் நேரம் கடந்தது.

“சிவா லயன்ல இருக்கியா? உன் பொண்ணு வந்திருக்காடா…” வேலாயுதம் மீண்டும் அழுத்திச் சொன்னதும், நிகழ்விற்கு வந்தவரைப் போல “ஹூம்” என்ற ஹூங்காரம் எதிர்புறம் இருந்து எதிரொலித்து, பின் தொடர்ந்தது.

“ஹாங்! என்ன சொன்ன வேலு?” நண்பன் சொன்னதை, தான் சரியாக கவனிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் மீண்டும் கேட்க,

“உன் பொண்ணு, மாப்பிள்ளை, பேரக்குழந்தை எல்லாரும் வந்திருக்காங்கடா… வந்து பார்த்துட்டு போ!” நிதானமாக அதே சமயத்தில் உறவு முறையினை அழுத்திச் சொல்லியவாறே, தொலைபேசியில் இருந்த லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்தார் வேலாயுதம்.

அங்கே நின்றிருந்த சரண்யாவிடம் பேச்சினைகேள் என்றும் சைகையில் சொல்லிவிட, அவளும் அருகே வந்து நின்று விட்டாள். அவள் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவரும் இவர்களின் பேச்சினை கேட்க ஆர்வமுடன் நின்றனர்.

மகள் வந்திருக்கிறாள் என்று சொன்னதும் சிவபூஷணத்தின் பக்கம் இருந்து பதிலொன்றும் வரவில்லை.

“இப்ப கிளம்பி இங்கே வா சிவா! உன் பொண்ணு கூட பேசு… நாளைக்கு நீ செய்ய நினைச்ச காரியத்த தள்ளிப்போடு! அவகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு எதுவா இருந்தாலும் செய்யலாம். அவசரப்படாதே!” பொறுமையாக நண்பனை அழைத்தார் வேலாயுதம்.

நண்பனின் பேச்சில் சற்றே நிதானித்த சிவபூஷணம் நொடியில் தன்னை சமன்படுத்திக் கொண்டவராய் குரலை கணைத்துக் கொண்டு,

“யார் வந்தாலும் நான் முடிவு பண்ணினது நடந்தே தீரும் வேலு! இப்போதைக்கு நான் அங்கே வர்ற சூழ்நிலையில இல்லை. அவளை பார்த்து பேச வேண்டிய கட்டாயம் வரும்போது, பார்த்து பேசுறேன்.

எனக்கு சொந்தமில்லாத இடத்துல, இன்னொருத்தருக்கு சுமையா இருக்கேன். இந்த நெலமையில அவளை குடும்பத்தோட கூட்டிட்டு வந்து என்னோட தங்க வைக்க முடியாது வேலு! அவ அங்கேயே இருக்கட்டும்!” நிராசையுடன் கூறியவர்,

“அவ உன் வீட்டுல தானே இருக்கா?” உள்வாங்கிய குரலில் கேட்டவரின் உள்ளம், மகள் தங்களின் வீட்டிற்கு சென்று மீண்டும் மதிப்பிழக்க நேரிட்டதோ என பதட்டமடைய ஆரம்பிக்க, அவரின் வருத்தம் சரண்யாவை மொத்தமாய் அதிர வைத்தது.

அவள் அறிந்த தந்தையிடனத்தில் எந்தநேரமும் கம்பீரத்தோடும் ஆளுமையோடும் கூடிய கண்டிப்பான பேச்சுக்களை மட்டுமே கேட்டிருக்கிறாள்.

அப்படி இருக்கையில் இன்றைய இவரின் வெறுமையான பேச்சு மகளை பதற வைத்தது. வெளியில் நிமிர்வாக கடினமாக நடந்து கொண்டாலும் மூன்றாம் மனிதரின் இன்னல்களுக்கே இளகும் பெண்ணின் மனம், பெற்ற தந்தையின் வருத்தத்திற்கு உருகிப் போவதில் அதிசயம் ஒன்றுமில்லை.

“நம்ம வீட்டுலதான் இருக்கா… இப்படியெல்லாம் வெறுத்துப் போயி பேசாதே சிவா! உன் பிடிவாதத்தை விட்டுத் தள்ளு! இங்கே வந்து பொண்ணையும் பேரனையும் பாரு… உனக்கே மனசு லேசாகும். உன் பொண்ண பார்க்க வர்றதுக்கு யார் என்ன சொல்லப் போறா?” வேலாயுதம் மீண்டும் வலியுறுத்த, அவரோ அதை காதில் வாங்கிக் கொள்வதாய் இல்லை.

“எதுவா இருந்தாலும் நாளைக்கு பிறகு பேசிக்கலாம் வேலு! நாளைக்கு காலையில பத்திரம் ஆபீசுக்கு வந்திடு! எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு வைச்சுட்டேன். சாட்சி கையெழுத்து போடுறதுக்கு மட்டும் ஆள் வேணும். நீ ஒரு சாட்சி, இன்னும் மூணு பேர் சாட்சியும் இருந்தா எல்லாமே கரெக்டா முடிஞ்சுடும்.

இப்போதைக்கு ஊருல கூப்பிட்டா யாரும் வரமாட்டாங்க… அங்கே போயிதான் ஆட்களை பிடிக்கணும்” தன் கருமமே கண்ணாக சிவபூஷணம் பேசிக்கொண்டே போக, வேலாயுதத்திற்கு அடங்காத கோபம் வந்தது.

என்ன மனிதன் இவன்? அவ்வளவு தொலைவில் இருந்து, இருக்கின்ற கோபதாபங்களை எல்லாம் விட்டோழித்து வந்த மகளை, பார்க்கவும் விருப்பப்படாமல் தன் காரியமே முக்கியமென்று இருக்கிறானே?

இத்தனை கோபத்தையும் வீம்பையும் இந்த வயதிற்கு மேல் தூக்கிச் சுமக்கதான் வேண்டுமா? என்றெல்லாம் ஆத்திரத்துடன் மனதிற்குள் சராமாரியாக நண்பனை திட்ட ஆரம்பித்தார்.

“என்ன வேலு? அமைதியா இருக்க… நாளைக்கு நீ வருவ தானே?” சிவபூஷணம் கேட்க,

“வர்றேன்டா! என் சிநேகிதனுக்கு நான் கையெழுத்து போடாம, வேற யாருக்கு போடப் போறேன்? ஆனா, சிவா உன் பொண்ண நீ பார்க்க வேண்டாமா? உண்மைக்குமே அவ மேல கொஞ்சங்கூட பாசம் இல்லையா? ஏண்டா இப்படி இருக்க?” மனம் தாளமுடியாமல் கேட்டே விட்டார்.

நண்பனை விட்டுக் கொடுக்காமல் இருக்க நினைக்கும் நட்பு, அவரை தட்டிக் கேட்கவும் தயங்கவில்லை. இத்தனை வருடங்கள் நண்பனின் குடும்பத்திற்குள் அதிகமாய் மூக்கை நுழைப்பது, பல அபத்தங்களை விளைவித்து நட்புக்கே பாதகம் வருமென்றேதான், நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் வேலாயுதம்.

எப்போது நண்பன் சொந்த வீட்டை விட்டே வெளியேறினானோ அப்பொழுதே அவருக்கு நிழலாக இருப்பது என்ற முடிவிற்கு வந்துவிட்டார். அந்த உரிமையுடன்தான் இப்பொழுதும் மகளை பார்க்க வர மாட்டாயா என ஆற்றாமையுடன் கேட்டு விட்டார்.  

“இருக்கு, இல்லைங்கிற பேச்சுக்கெல்லாம் இடமில்லை வேலு! எதுவும் புதுசா ஆரம்பிக்க வேண்டாம். இத்தனை நாள் எப்படி இருந்ததோ அப்டியே இருக்கட்டும்” வெட்டிவிட்டதைப் போல் பேசிய சிவபூஷணத்தின் வார்த்தைகளை கேட்ட சரண்யாவிற்கு கண்கள், அவளையுமறியாமல் உடைப்பெடுக்க ஆரம்பித்தது.

இந்த பேச்சை கேட்ட பிறகும் அப்பாவை பார்த்து பேச ஆசைப்படத்தான் வேண்டுமா என்ற வெறுமை மனதை வலிக்கச் செய்தது. அந்த நேரத்தில் யார் அழைத்து தான் இங்கு வந்தோம் என்கிற விஷயத்தையே மறந்து போனாள்.

அப்பா பேசட்டும்… இன்னும் அவர் வாயால் என்னென்ன கேட்க வேண்டி இருக்கிறதோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இன்றைக்கே ஊருக்கு திரும்பி விடலாமென சட்டென்று எடுத்த முடிவுடன் அசையாமல் நண்பர்களின் பேச்சினை கேட்க ஆரம்பித்தாள்.

“இப்படியெல்லாம் பேசாதே சிவா! மேலமேல பிரச்சனைய பெரிசு பண்ணிட்டே போறியோன்னு தோணுது எனக்கு… சரணி பக்கத்துலதான் இருக்கா… ரெண்டு வார்த்தை பேசு! உனக்கு மனசில்லாம இருக்கலாம்… ஆனா, உன் பொண்ணுக்கு ஆசையிருக்கும் இல்லையா? ரெண்டு வார்த்தை பேசு சிவா!” பொறுமையுடன் நண்பனை கயிறு கட்டி இழுத்தவர்,

“சரணி! அப்பா கூட பேசு…” என்று அவளுக்கும் கட்டளையிட்டு இருவருக்கும் பாலமாக நின்றார். லவுட் ஸ்பீக்கரில் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தொலைபேசியின் அருகில் வந்து நின்றவள்,

“எப்படி பேசுறது மாமா? அவருக்கு தான் இஷ்டம் இல்லைனு சொல்றாரே…” சோர்வுடன் அவளும் சொல்ல,

“நீங்க என்ன சின்ன புள்ளைங்களா? ரெண்டும் பேரும் பழம்விட்டு பேசுங்கன்னு சொல்ல… உங்கப்பனை பார்க்க வந்துட்டு, அவன் சௌக்கியமா இருக்கானான்னு கூட அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க மாட்டியா?” வேலாயுதம் அவளை கடிந்து கொள்ள, அதன் பிறகு மகளின் உரிமைகள்  வார்த்தைகளாக சலசலத்து தடையின்றி வெளிவந்தன.

“அப்பா… எப்படி இருக்கீங்க? உங்கள பார்க்கத்தான் வந்திருக்கேன்… பிடிக்குதோ இல்லையோ ஒருதடவை நாம பார்த்து பேசுவோம்பா! நீங்க எங்கே இருக்கீங்க? நான் வந்து பாக்குறேன்!” கேள்விகளை அடுக்கிக்கொண்டே விசாரிக்க, மகளின் பேச்சில் என்ன உணர்ந்தாரோ,

“நல்லா இருக்கேன் சரணீ! ஒருநாள் பார்த்து பேசுவோம்… நீ நல்லா இருக்கியா?” என மகளின் பெயரை அவர் இழுத்துச் சொல்லி நலம் விசாரித்ததில் அவளுக்கும் மெல்லிய முறுவல் பூத்தது.

மூச்சு விடாமல் கேள்விகளாக கேட்டுத் தள்ளியதில் எங்கே கோபம் கொண்டு விடுவாரோ என்று பயந்தேதான் பேச்சை முடித்திருந்தாள்.

ஆனால் என்றைக்கும் இல்லாத திருநாளாக மிக அமைதியாக அதிலும் அவர் மட்டுமே நீட்டி அழைக்கும் அழைப்பில் பதில் பேசியதும் மகளுக்கு கால்கள் தரையில் பாவவில்லை.

தந்தைக்கும் மகளிடம் பேச வார்த்தைகள் முந்திக்கொண்டு நின்றதில், கேள்விக்கான பதில்களும் அவரிடமிருந்து சரளமாக வர ஆரம்பித்தன.

“நாளைக்கு வேலையெல்லாம் முடிச்சிட்டு அங்கே வர்றேன் சரணீ! இல்லன்னா நாளைக்கு ரிஜீஸ்டர் ஆபீசுக்கு நீயும் வாயேன்! கமலி சார்பா ஒரு சாட்சி கையெழுத்து நீயும் போடலாம். என்ன வர்றியா?” என அமைதியாக மகளிடம் கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனாலும், அப்பாவின் அழைப்பை தட்டிக் கழிக்க மனம் வரவில்லை. கணவனிடம் அனுமதி கேட்கும் விதமாய் அவனைப் பார்க்க உன்னிஷ்டம் என்று சசிசேகரனும் வாயசைத்ததில் வேறெந்த யோசனையும் செய்யாமல்,

“வர்றேன்ப்பா!” என உடனே சம்மதித்து விட்டாள்,

“அப்பிடின்னா வேலுமாமா கூட வா! வரும்போது உன்னோட ஐடிகார்ட் கொண்டு வரணும். சரியா?” தெளிவாக, பதட்டம் இல்லாமல் மகளுக்கு உத்தரவிட,

“சரிப்பா… நான் மாமா கூட வர்றேன்!” அவளும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவளாய் அவர் சொல்லிய அனைத்திற்கும் சரியென்றாள்.

அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பதையே நம்ப முடியாமல் இருந்தவள், அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாக தலையசைத்திட, அவரும் ‘நாளைக்கு பார்ப்போம்’ என்ற பேச்சுடன் தொலைபேசியினை வைத்திருந்தார்.

கிட்டத்தட்ட பனிரெண்டு வருட பேசாநோன்பு ஒரு முடிவுக்கு வந்தது. தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருந்த விரிசல் பேசி சரி செய்யப்பட்டதா, இருவரும் அவரவர் தவறை உணர்ந்து கொண்டனரா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லாமல் இருவருமே தங்கள் இயல்பில் பேசியிருந்தனர்.

எந்த நிலையிலும் தான் ஒரு பண்பட்ட ஆசிரியன் என்பதை மகளுடன் பேசிய ஒரு நொடியில் நிரூபித்திருந்தார் சிவபூஷணம். மகளின் போக்கில் சென்றே அவளைத் தன் பேச்சிற்கு கட்டுப்பட வைத்திருந்தார்.

சரியாகச் சொல்லப்போனால் மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல், முதன்முறையாக அவளுக்கு பிடித்தமான பதிலை சொல்லி இருந்தார்.

இதன் மூலம் தன் உறவுச் சங்கிலியின் சிக்கலான முடிச்சுக்களை களைவதற்கான முயற்சியை தன்னையுமறியாமல் தொடங்கி வைத்து விட்டார்.

ஆனால் இதை அவளின் சிறுவயதில் கடைபிடித்தாரா என்பதை அவரே சிந்தித்தால்தான், தனது தவறு என்னவென்பதை அவரே உணரக்கூடும். அதை காலம் உணர்த்தி இருக்குமா என்பது அவருக்கே வெளிச்சம்.

இப்பக்கம் சரண்யாவும் என்னவென்று விளங்காத, மோன நிலையில்தான் நின்றிருந்தாள். பிறந்த வீட்டினர் தன்னை ஒதுக்கி வைத்த ஏக்கங்களும், தந்தையே தன்னை நம்பாமல் தள்ளி நிறுத்திய துயரங்களிலும் புதர்மண்டி கிடந்த மனது, இன்று ஏதோ ஆசுவாசம் பெற்றதைப் போல் உணர்ந்தாள்.

எதை பதிவு செய்யப் போகிறார்? எதற்காக திடீரென்று தன்னை சாட்சியாக வரச்சொல்லி கையெழுத்தை கேட்கிறார்? கமலி சார்பாக என்றால், என்ன விஷயமாக இருக்கும் என்கிற சிந்தனை எல்லாம் சரண்யாவின் உள்ளுக்குள் பந்தயக் குதிரையாக தறிகெட்டு ஓடத்தான் செய்தது.

ஆனாலும் அதனை தந்தையிடம் நேரடியாக கேட்க முடியாமல், எப்பொழுதும் அவரிடத்தில் தோன்றும் இயல்பான பயம் அவள் மனதினை ஆக்கிரமித்து விட, தனக்குள் கேள்விகளை எல்லாம் புதைத்துக் கொண்டாள்.

குறும்புத்தனத்தோடும் பிடிவாத குணத்தோடும் மட்டுமே தந்தையிடம் தன்னை அடையாளப்படுத்தி கொண்ட மகள், முதன்முறையாக தனது பொறுமையில், பக்குவத்துடன் அவரை அணுகத் தொடங்கி விட்டாள். 

எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், எந்த சூழ்நிலை விலக்கி வைத்தாலும் அப்பா மகள் உறவு அத்தனை எளிதில் முறிந்து விடக் கூடியதா என்ன? எத்தனை வயதானாலும் அப்பா அப்பாதான்… மகள் மகள்தான்! 

மனஸ்தாபத்துடன் தாய்வீடு வர இயலாத மகள், அங்கே செல்வதற்கென அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பது என்பது முற்றும் துறந்தவன் தவத்தை விட வலிமையானது. அதற்கு பலன் கிடைக்காமல் போனால், நம்பிக்கை என்னும் கடவுளுக்கும் மதிப்பில்லாமல் போய்விடும்.

தன் குழந்தைக்காக செய்யும், பெண்ணின் ஒவ்வோர் புது செயலிலும் ‘என் தந்தை, எனக்கு இதைத்தான் அன்று இப்படிச் செய் என சொல்லித் தந்தாரோ?’ என்ற சிலாகிப்புடன் கூடிய கேள்விகள்தான் தொற்றிக் கொண்டு நிற்கும்.

அந்த நினைவிலேயேதான் வெற்றியின் வெகுமதி புள்ளிகளை தன் மகனின் கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருப்பாள், எங்கோ தூரத்தில் இருக்கும் மகள். அதை என்றென்றும் நினைத்துப் பார்ப்பதில்தான் ஒவ்வொரு தந்தையின் வளர்ப்பும் வெற்றி பெறுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!