சரணாலயம் – 16

சரணாலயம் – 16

கமலாலயா வசதி வாய்ப்புகள் இருந்தும் அனைவராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவள். ராசியில்லாதவள் என தந்தை ஆரம்பித்த வைத்த ஒதுக்கம், பள்ளி, புகுந்தவீடு என நீண்டு ஊராரிடத்தில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மூடநம்பிக்கை, சகுனம் போன்றவற்றை விட்டொழித்த இந்த கால கட்டத்திலும் இது போன்ற அவலங்கள் கிராமங்களில் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

வேலைக்கும் வருமானத்திற்கும் என இவளிடம் கைகட்டி ஏவல் புரிபவர்களும், தங்கள் வீட்டு விஷேசங்களுக்கு இவள் வருகை தருவதை விரும்புவதில்லை. இதன் காரணமே பலர் சம்பிரதாய அழைப்புகளை கூட தங்கள் எஜமானியிடத்தில் தவிர்த்து விடுவர்.

பாட்டியின் அறிவுரைகளோடு வளர்ந்தவளுக்கு சிறுவயதில் இருந்தே இந்த ஒதுக்கம் பழக்கப்பட்டதால், மனதில் என்றும் அதை நிறுத்திக் கொள்வதில்லை. என்கடன் பணி செய்து கிடப்பதே என தன்போக்கில் காரியங்களை செய்து கொண்டே வருபவள்.

பிறந்தது முதல் அவளது பாட்டிக்கு அடுத்தபடியாக கமலாலயாவை அரவணைத்தது சிவபூஷணத்தின் குடும்பம். அவரின் வழிகாட்டுதலோடு சௌந்திரவல்லியின் ஆதரவும் சேர, பல சோதனைகளிலிருந்தும் மீண்டு வந்தாள்.

பாட்டியின் இறப்பையும், புகுந்த வீட்டின் நிராகரிப்பையும் சௌந்தரவல்லி, கோதாவரி இவர்களின் துணையோடு மிக எளிதில் கடந்து வந்தாள்.

விவசாயம் தொடர்பான அனைத்து சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளவும், தனது சொத்துக்களின் பாராமரிப்புகளை நெறிபடுத்தவும் சிவபூஷணத்தின் உதவியை இவள் அதிகமாக நாட, அதுவே ஊராரின் பார்வைக்கு பல கேள்விகளை எழுப்பி முகம் சுளிக்க வைத்தது.

அதையெல்லாம் தூசியாக தட்டிவிட்டு, கடமையை செய் என சௌந்திரவல்லி இவளைத் தாங்கிக் கொண்டது, இவள் வாங்கிவந்த வரம். இல்லையென்றால் இவளின் சொத்துக்களோடு வாழ்க்கையும் என்றோ முடிந்திருக்கும்.

சௌந்திரவல்லியின் ஆதரவு இருந்தவரை இவளது வாழ்க்கையும் எந்தவித தடங்கலுமின்றி தெளிந்த நீரோடையாகதான் போய்க் கொண்டிருந்தது. சரண்யாவின் காதல் திருமணத்திற்கு பிறகு அவளது அன்னைக்கு அடுத்தபடியாக கமலாலயாதான் பெரிதும் பாதிக்கப்பட்டவளாக இருந்தாள்.

ஊராரின் மத்தியில் இவளின் வளர்ப்பு சரியில்லை, இவளின் ஆதரவோடுதான் இருவரின் காதலும் வளர்ந்தது என்று சரண்யாவின் சகோதரர்கள் பலவிதமாக பேச்சை வளர்த்துக் கொண்டு நிற்க, இவளுக்கும் ஓரளவிற்கு மேல் பழிசொற்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வெளியாட்களின் ஜாடை பேச்சினை ஒதுக்கி வைத்தவளால் அருகிலேயே வசித்து வரும் இரண்டு ஆண்பிள்ளைகளின் வசைமொழிகளுக்கு ஒவ்வொரு நாளும் பதில் சொல்ல முடியாமல் அலுத்து போனாள் கமலாலயா.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற கணக்காய் இவர்களின் பேச்சை கேட்க சகிக்காமல், ஊரைவிட்டு  தள்ளியிருந்த தங்களின் நிலத்தை ஒட்டி புதுவீடு கட்டி குடியேறினாள்.

சரண்யாவின் திருமணம் முடிந்த இரண்டு வருடங்களில் கமலாலயாவும் தனியாக சென்றுவிட, சௌந்திரவல்லியின் உடல் மற்றும் மனதின் சோர்வு முன்னைவிட அதிகரித்து போனது. வாரம் ஒருமுறை வீட்டில் யாருமில்லாத சமயங்களில் வந்து பார்ப்பதோடு தன் கவனிப்பை முடித்துக் கொண்டாள் கமலாலயா.

விவசாய வழிமுறைகளை கையாளுவதில் நன்றாக தேறியிருந்த கமலியிடம், பாட்டிகளுக்கு சொந்தமான நிலத்தினையும் முழுவதுமாய் பார்த்துக்கொள் என்று சிவபூஷணம் ஒப்படைத்துவிட, முன்னிலும் அதிக வேலைப்பளு அவளை வந்து சேர்ந்தது.

ஆட்களை நியமித்து, பண்ணையம் பண்ணும் வேலைகள்தான் என்றாலும் அனைத்தும் நேர்த்தியாக முடிவடைவது, எஜமானர்களின் உத்தரவிலும், வழிகாட்டுதலிலும் தான் இருக்கிறது. அதை சிறிதும் பிசகில்லாமல் செய்து வந்தாள்.

சிவபூஷணமும் இவள் இருக்குமிடத்திற்கு சென்றே தேவையான விவரங்களை கூறிவிட்டு கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டார். அதுவே ஊராரின் மத்தியில் அதிகபட்ச சலசலப்பு வார்த்தைகளை வளர்த்தது.

வெற்றிவேல் சக்திவேல் இருவருக்கும் அடுத்தடுத்து திருமணம் முடிந்து, வந்த மருமகள்களும் கணவனின் பேச்சினை கேட்டவர்கள் கமலாலயாவை தவறாகவே புரிந்து கொண்டார்கள்.

தினந்தோறும் கமலியின் வீட்டிற்கு செல்லும் மாமனாரின் படையெடுப்பை குறிப்பிட்டு, இல்லாத உறவை ஸ்திரப்படுத்தி மனதிற்குள் புதைத்துக் கொண்டனர். ஊர் மக்களின் பேச்சும் இவர்களின் எண்ணத்திற்கு நெய்வார்த்தது.

சௌந்திரவல்லியின் முன்னிலையில் அவ்வளவு எளிதாக யாரையும் குறைகூறிட முடியாது. கமலியை பற்றிய பேச்சிற்கே மகன்களை கண்டிப்பவர், கணவர் மற்றும் மகள் மீதான குற்றச்சாட்டுகளை சொல்ல ஆரம்பிக்கும் முன்னமே கோப பார்வையுடன் குரலை உயர்த்தி விடுவார்.

இதனாலேயே மருமகள்களிடம் சௌந்திரவல்லி, மாமியார் தோரணையுடன் மட்டுமே நடந்தும் கொண்டார். அத்துடன் அவருடைய மன அழுத்தமும் சேர்ந்து எந்நேரமும் அவரை சினம் கொண்டவராய் காண்பிக்க, பொல்லாத மாமியார் என்றே பெயர் பெற்றார்.

சௌந்திரவல்லி இருக்கும் வரை சிவபூஷணத்தின் கௌரவம் ஏழடுக்கு பாதுகாப்பில் பத்திரமாக இருந்தது. இறக்கும் வரை இரக்கம் காட்டியவர்கள், ஆயுட்கால பிரதிபலனாய் தங்கள் துணையின் கௌரவத்தையும் நிம்மதியையும் கொண்டு சென்று விடுகின்றனர். சிவபூஷணத்தின் நிலையும் அப்படித்தான்.

இழப்பின் வேதனையை ஈடுசெய்ய முடியாமல், மனபாரத்தை சிலர் அழுது கரைப்பர். சிலர் மனதில் அழுத்தி வைத்து அதிலேயே கரைவர். சிவபூஷணம் இதில் இரண்டாவது ரகம். மனைவியின் இழப்பு அவரை, அத்துவானகாட்டில் தனித்து விடப்பட்டவராய் உணரச் செய்தது.

பதுங்கியிருந்த ஜாடை பேச்சுகள் எல்லாம் சௌந்திரவல்லி மறைவிற்கு பிறகு, ஊராரின் சொல்லம்புகளின் வழியாக நேரடியாக அவரை தாக்க தொடங்கியது. அவை வீட்டு மருமகள்களின் மூலமாக அவருக்கு அசரீரியாக எதிரொலிக்கவும் ஆரம்பித்தன.

அவரது தனிமைக்கும் எண்ணங்களுக்கும் வடிகாலாக வேலாயுதத்தின் நட்பும், விவசாயமும் மட்டுமே என்றாகிப் போனது. மனம் முழுவதும் சஞ்சலமும் துக்கமும் நிறைந்திருக்க, தனது உயிர்நாடியான கற்பித்தலை கூட கைவிட்டு விட்டார்.

சந்தேகங்களும் கெட்ட எண்ணாகளும் நிறைந்திருப்போரின் நடுவில் வாழ வெறுத்துப் போனார். மன உளைச்சல்களை இறக்கி வைக்க மனைவியும் இல்லை, நச்சுப்பாம்பின் கொள்கலனாக வீட்டினரின் உதாசீனப்பேச்சும் தொடர, மனதில் வெறுமைதன்மை சூழ்ந்து கொண்டது.

எதிர்மறை சிந்தனைகள் மிகத் தீவிரமாக எட்டிப் பார்த்த நேரத்தில், ஒருநாள் பொறுமையின் எல்லையை கடக்க வைத்து விட்டனர் அவரின் வாரிசுகள்.

ஊராரின் பேச்சில் கவலைப்படாமல் நாட்களை கடத்திக் கொண்டிருந்தவர், ஒருநாள் சற்று சீக்கிரமே வீட்டிற்கும் செல்ல,

“இந்த வயசுலயும் பெண் சகவாசம் தேடுறவர் இருக்குற வீட்டுல நாங்க எப்படி குடும்பம் நடத்த முடியும்? இவருக்கு பயந்தே, எங்க பொறந்த வீட்டு சொந்தம் யாரும், இங்கே வந்து போறதுக்கும் யோசிக்கிறாங்க!” என்று இரண்டு மருமகள்களும் போர்க்கொடி தூக்கிவிட, அன்றே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

“அன்னைக்கு வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்! என்னை புரிஞ்சுக்காதவங்க இடத்துல நான் இருக்க விரும்பல…” மனமுடைந்து பேசிய சிவபூஷணத்தை தாங்கிக் கொண்டார் வேலாயுதம்.

சொத்து பத்திரப் பதிவினைப் பற்றி விளக்கி முடித்தவர், மூன்றாவது பதிவிற்கான விசயங்களை கூறும் முன்னர், தனது சோதனை காலத்தை மகளிடம் புலம்பல்களாக கூறி தன் அழுத்தங்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

பாரம் இறக்கி வைக்க சொந்தமொன்று கிடைத்து விட்டால் வயது வித்தியாசமின்றி மனமானது தனது இன்னல்களை வெளியே கொட்டிவிடும். தந்தையின் தவிப்பினை கேட்ட மகளின் மனதும் கோபமும் அனுதாபமும் ஒன்றுசேர கொதிக்க தொடங்கியது.

“அது உங்க வீடுப்பா… அவங்க சொல்லிட்டா அது உண்மையாகிடுமா? நீங்க வெளியே வந்தது தப்பு. இப்பவே போவோம் நம்ம வீட்டுக்கு… அவங்களை நான் கேக்குறேன்!” என கோபத்தில் கொந்தளித்த சரண்யா, தன்னை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு போனாள்.

“யாரை பத்தி என்ன, எப்படி பேசுறதுன்னு விவஸ்தை இல்லையா? அறிவுகெட்ட ஜென்மங்க எல்லாம்…” என படபடத்தவளை அமைதிபடுத்த சசிசேகரனும் முயற்சி செய்யவில்லை.

அவனுக்குமே இந்த வார்த்தைகளை கேட்டு கோபம்தான். மகன் மருமகளாக இருந்தாலும் பேசும் வார்த்தைகளுக்கு வரம்பொன்று இருக்க வேண்டுமென அவனுமே நினைத்தான். மனைவியின் பேச்சை ஆதரிப்பவனாக அவளை பார்த்துக் கொண்டிருக்க, சிவபூஷணம்தான் பேச்சினை தொடர்ந்தார்.

“இன்னைக்கு வீட்டுல இருக்குறவங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியும். ஆனா, இவங்க சொல்றத கேட்டு ஊரு முழுசும் பேசிட்டு திரியுறாங்களே, அவங்க எல்லார்கிட்டயும் தனித்தனியா போய் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியுமா சரணீ?” மகளின் கோபத்திற்கு தந்தை பதில் பேச,

“அப்படி பேசுறவங்களை ஒதுக்கி வைக்க வேண்டியதுதானே! எதுக்கு அவங்களை சமாதானப்படுத்த பார்க்கணும்” விவாதிக்க தொடங்கினாள் சரண்யா.

“நல்லதோ கெட்டதோ ஊரோடு ஒத்துவாழ்ன்னு பழமொழி இருக்கு. ஒரெடியா ஊரை பகைச்சுகிறதும் நல்லதில்ல… அதனால எல்லாருக்கும் புரியுற மாதிரி தெளிவான பதிலை சொல்ல முடிவெடுத்தேன். அதுதான் என்னோட விருப்பமும் கூட… அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது” என்றவர் நிறுத்த, அப்படியென்ன முடிவு என்றே அனைவரும் அவரை பார்த்தனர்.

“எந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் அவங்களோட துணைதான் பாதுகாப்பு கவசமா அவங்க வாழ்க்கை முழுவதும் கூட வரும். இத்தனை நாள் உங்கம்மாதான் எனக்கு கவசமா இருந்தா… யார் என்ன சொன்னாலும் அதையெல்லாம் துச்சமா ஒதுக்கிட்டு கடந்து போயிட்டே இருந்தா சௌந்திரம்.

கமலிக்கும், அவளோட அருகாமை தான் பாதுகாப்பா இருந்தது. உங்கம்மா போனபிறகு எல்லாமே தலைகீழாப் போயிடுச்சு! எப்ப வீட்டுல இருக்கிறவங்களே தப்பா பேசுற சூழ்நிலை வந்ததோ, அப்பவே நாமளும் யோசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபடுறோம்.

இன்னைக்கு விளக்கம் கேட்டு தலையாட்டிட்டு பின்னாடி திரும்பவும் பேச ஆரம்பிக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இதை ஒட்டு மொத்தமா நிறுத்த நினைச்சேன். என் முடிவை சொன்னதும் வேலுவும் கமலியும் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, பிரச்சனை பெருசாகிடும்னு தடுத்தாங்க…

இந்த காரியம் முழுக்க முழுக்க என்னோட பிடிவாதத்துல மனப்பூர்வமான விருப்பத்தோட மட்டுமே நடந்தது. இனி என் வாழ்நாள் முழுமைக்கும் அவளுக்கு பாதுகாப்பா இருக்க தீர்மானம் பண்ணிட்டேன்.

அந்த பொண்ணை பத்தி இனி ஒரு வார்த்தை பேசணும்னா கூட என்னைத் தாண்டிதான் அவங்க யோசிக்கணும். அந்த உறுதியான முடிவோடதான் இந்த காரியத்துல இறங்கினேன்!” என சொன்னவர் வெற்றிப் பார்வையுடன் அனைவரையும் நிமிர்ந்து பார்த்து,

“என் விருப்பத்தை, தீர்மானமா இன்னைக்கு எழுத்து மூலமா சாஸ்வதம் பண்ணி இருக்கேன். இனி யாருக்கும் எந்த பதிலும் சொல்லத் தேவையில்லை. எங்களுக்கான உறவை ஆணித்தரமா பதிவு பண்ணினதுதான் இந்த மூணாவது பத்திரபதிவு!” என்றவர் மகளிடம் அதற்கான விவரணங்கள் அடங்கிய கோப்பினை நீட்ட, அவள் கைகளில் வாங்கி கொள்ளும் முன்னரே தந்தை சொன்னதை கிரகித்து விட்டது போல,

“இதை முன்னாடியே நீங்க பண்ணி இருக்கலாம்ப்பா… சொல்லிப் புரியாதவங்களுக்கு, அடிச்சு புரிய வைக்க ரொம்பநாள் எடுத்துக்கிட்டீங்க… எந்த பதிவும், எனக்கும் லயாக்காவுக்கும் இருக்கற உறவை மாத்திடப் போறதில்ல…” என்றவளை பெருமையுடன்தான் பார்த்தார் சிவபூஷணம்.

“இப்படிதான் இருக்கும்னு எப்படி சொல்ற சரணி? வேற மாதிரி மாறி இருக்கலாம். நீ விவரத்தை படிச்சு பார்த்து தெரிஞ்சுக்க…” வேலாயுதம் பூடகமாய் சொல்ல,

“தேவையில்ல மாமா… ஒருத்தருக்கு பாதுகாப்பா, துணையா இருக்க அவங்களோட சரிபாதியா இருக்கணும்னு அவசியமில்லை. அவங்களுக்கு நெருங்கிய உறவா இருந்தா போதும்னு அப்பா நிரூபிச்சிட்டாங்க!

இப்படி பதிவு பண்ணலைன்னா கூட லயாக்கா எப்பவும் எங்கப்பாவுக்கு மூத்த பொண்ணுதான். இத என் முன்னாடியே அம்மா எத்தனையோ முறை சொல்லியிருக்காங்க! இந்த உறவு என்னைக்கும் மாறப் போறதில்ல…

எழுத படிக்க கத்து கொடுத்து, வீட்டு ஆம்பளையா பொறுப்பா கல்யாணமும் பண்ணி வைச்சு, லாப நஷ்டங்களை பார்க்குற அளவுக்கு தொழில் சொல்லிக் கொடுக்குறது ஒரு தகப்பனோட கடமை. அதை லயா அக்காவுக்கு எங்கப்பா பரிபூரணமா பண்ணியிருக்கார். மாதா பிதா குரு தெய்வம்ன்னு தான் முடியுது. அதுக்கு பின்னாடி கணவனோ மனைவியோ வர்றதில்ல…” என்றவளின் தீர்க்கமான பேச்சில் சிவபூஷணத்திற்கும் சிலிர்ப்பு தட்டிவிட, என் பொண்ணுடா என்று மீசையை முறுக்கிக் கொண்டார்.

“ரொம்ப கரெக்டா கெஸ் பண்ணியிருக்க சரண்… உங்கப்பா கமலி அக்காவை தத்தெடுத்தற்கான பத்திரத்தைதான்  மூணாவது பதிவா (தத்தெடுப்பதற்கான பத்திரம் – Adoption Deed) பண்ணியிருக்காங்க…” விவரங்களை படித்து பார்த்த சசிசேகரனும் மனைவியை மெச்சிக் கொள்ள,

“சரியாதான் அப்பாவை கணிச்சு வைச்சிருக்காடா உன் பொண்ணு!” என வேலாயுதமும் தனது பாராட்டினை தெரிவித்தார்.   

“பதினெட்டு வயசுக்கு மேல இருக்குறவங்களை தத்தெடுக்கற நடைமுறைக்கு, தத்து போறவங்க, தத்து எடுக்குறவங்களோட விருப்பம் இருந்தாலே போதும். இந்த தத்தெடுப்பை இன்னும் அதிகாரபூர்வமா தெரியப்படுத்ததான், நான் பெத்த பிள்ளைகளை சாட்சிக் கையெழுத்து போட வைச்சு உறுதி பண்ணேன்!

முன்கூட்டியே ஏற்பாடு பண்ணினது இந்த பதிவுக்குதான். அதுக்கு தோதா நீயும் வந்ததுல சொத்துபதிவும் பண்ணி, எல்லாமே சுமூகமா முடிஞ்சது சரணீ!” என கூறி முடித்த சிவபூசணம் ஆசுவாசமாக சிரித்தார்.

“இப்ப புரியுதா வேலு! பசங்களுக்கு விளக்கம் கொடுத்த மாதிரி பொண்ணுக்கு ஏன் நான் முன்கூட்டியே சொல்லலைன்னு…” மகளைப் புரிந்து கொண்டவராக பேசிய சிவபூஷணம்,

“உங்க பொண்ணு உங்களை மாதிரிதான்னு சௌந்திரம் சொல்றப்ப எல்லாம் நான் பெருசா எடுத்துக்கல… அவ போன பிறகு தனியா எல்லாத்தையும் மனசுல ஒட்டி பார்த்ததுல எல்லாமே எனக்கு புரிஞ்சதுமா! நடந்த எல்லாத்தையும் உங்கம்மா என்கிட்ட சொல்லிட்டா!” என்றவர் அழுத்திச் சொன்னதில் அன்றொரு நாள் வெற்றிவேல் செய்த தவறும் தனக்கு தெரிந்துவிட்டது என்றே மறைமுகமாக தெரிவித்தார்.

“உங்கம்மாவோட இழப்பு என்னை நிறைய மாத்திடுச்சு! என் பசங்க என்னை மாதிரி இல்லையென்னு கவலபட்டேனே ஒழிய, பொண்ணுகிட்ட என்னோட குணத்தை பார்க்க தவறிட்டேன்…” என்றே கரகரத்து விட, தந்தையின் நெகிழ்வு மகளையும் உருக வைத்துவிட்டது.  

தான் குற்றமற்றவள் என புரிந்து கொண்டதில் இத்தனை நாட்கள் மனதில் பதிந்திருந்த ஆற்றாமை எல்லாம் மொத்தமாய் அடங்கிப் போனதொரு ஆர்பரிப்பு அவளின் மனதில். நேசத்தில் மட்டுமல்ல பாசத்திலும் புரிதல் என்பது வலிக்க வைத்துதான் நிரூபிக்கிறது.

அமைதியாக நிமிடங்கள் கடந்து கொண்டிருக்க, நடந்து முடிந்தவைகளை தங்களுக்குள் அசை போட்டபடியே பெரியவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். உள்ளறையில் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த சுட்டிகள் மூவரும் திடீரென ஒருவர் பின் ஒருவராய் ஓடிவர, அனைவரும் நிகழ்விற்கு திரும்பினர்.

“டேய் டூப் மாஸ்டர்ஸ்… இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் என் கையில சிக்கினா கதம் கதம் தான்டா!” கோபத்துடன் கத்திய தீபாஞ்சலி, பவன் மற்றும் சோட்டுவை துரத்த, அவளை தடுத்து நிறுத்தினாள் சரண்யா.

“என்னடா ஆச்சு தித்லி? சோட்டு ரொம்ப சேட்டை பண்ணினா?”

“சித்தி… உங்களுக்கும் நான் தித்லி ஆகிட்டேனா? என் பேர் எனக்கே மறந்து போயிரும் போல…” என சிணுங்கியவள்,

“இந்த ரெண்டு குரங்கும் என் ட்ரெஸ்ல எறும்பு ஓடுதுன்னு சொல்லி, என் டாப்ஸ்ல இருக்குற ஸ்டோன்ஸ் எல்லாம் பிச்சி எடுத்துட்டாங்க! அதுலயும் யார் அதிகமா எடுக்குறதுன்னு இவங்களுக்குள்ள போட்டி வேற…

பவன் ரெண்டு கிரீன் ஸ்டோன், சோட்டுவும் ரெண்டு ஆரஞ்ச் ஸ்டோன் எடுத்துட்டு திரும்பவும் இன்னொன்னு பிச்சு எடுக்கும் போதுதான் எனக்கே தெரியும். எனக்கு பிடிச்ச குர்தி இப்படி வேஸ்ட் பண்ணிட்டாங்க!” என அழுகையில் கரைய ஆரம்பித்து விட்டாள் பத்து வயது தீபாஞ்சலி.

“நீ அழாதடா குட்டிம்மா… நான் அவனை வார்ன் பண்றேன்!” என சிறியவளை தன்னிடத்தில் அழைத்துக் கொண்ட சசிசேகரன்,

“சோட்டு!” என அழைக்க, கொஞ்சமும் தாமதிக்காமல் “எஸ் பாபா!” என முன்னே வந்து விட்டான்.

அதுவரை கோதாவரி பின்னே சிறுவர்கள் இருவரும் ஒளிந்து மறைந்திருக்க, இவர்களின் குறும்பை இமைகொட்டாது ரசித்துக் கொண்டிருந்தனர் பெரியவர்கள்.

“தீதிகிட்ட சாரி சொல்லு, மை பாய்!”

“இட்ஸ்’ய கேம் பாபா… மைனே பவன் கே சாத் கேல்தா ஹூங்… வொய் ஷுட் ஐ சே சாரி?” (நான் பவன் கூட விளையாடிட்டு இருக்கேன். நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்) பெரிய மனித தோரணையில் கேள்விகளை அடுக்கினான் சோட்டு.

“வாட் இஸ் திஸ் தர்ஷூ? டாடி சொல்றத செய்ய மாட்டியா?” நிஜமான கோபத்தோடு சரண்யா கண்டித்ததும்,

“இட்ஸ் ஓகே மாம்! டோண்’ட் ஆங்கிரி வித் மீ!” அலட்டிக் கொள்ளாமல் தன் அம்மாவை சமாதானம் செய்த சோட்டு,

“சாரி தித்லி! எங்க பாபாகிட்ட நியூ லெஹெங்கா வாங்கிக் கொடுக்க சொல்றேன். டீல் ஓகேவா? ஃப்ரெண்ட்ஸ்!” தித்லியிடம் நட்புக்கரம் நீட்டிட,

“அட லூசே! நீ என்ன சொல்றது? நானே சித்தப்பாட்ட கேட்டு வாங்கிப்பேன்…” மிதப்பாக சொன்ன தித்லி கலகலவென சிரித்தாள்.

“அப்ப, எனக்கும் சேர்த்தே வாங்கிக் கொடுக்க சொல்லு தித்லி!” என இவர்களுடன் பவனும் கூட்டுசேர,

“பாபா வென் வீ கோ டு பர்சேஸ்?” உடை வாங்க செல்வதற்கான விவரங்களை கேட்க தொடங்கி விட்டான் சோட்டு.

“அடேய் குட்டீஸ்! நான் எம்டி பாக்ஸ்டா! உங்க சித்திகிட்ட கேளுங்க லட்டூஸ்… என்னோட மொபைல் பாங்க் அவதான்டா! டெபிட் கிரெடிட் எல்லாமே அவள் வசம்தான்…” சசிசேகரன் மெதுவாக பொறுப்பை சரண்யாவிடம் தள்ளிவிட,

“ஆமாமா! உங்க சித்தப்பா கார்டு லிமிட்ஸ் கிராஸ் பண்ணிட்டு, அவரை நடந்தே மும்பை போகச் சொல்லலாம். சரியா தித்லி!” என வேட்டு வைத்தாள் சரண்யா.

நடக்கும் சம்பாஷனைகளை ஒருவித மெச்சுதல் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த சிவபூஷணத்திற்கு, வெகு நாட்கள் கழித்து இனம்தெரியாத உற்சாகம் மனதை ஆட்கொண்டது.

“உன் பேரென்ன சோட்டு?” பேரனை பார்த்து அவர் கேட்க,

“ஐயா’ம் சிவதர்ஷன்!” என்றவன்,

“ஹூ ஆர் யூ?” அவரையே பதில் கேள்வி கேட்க,

“அடேயப்பா… ரொம்ப பெரிய மனுசன்தான்யா நீ! என்னையே கேள்வி கேக்குற!” புருவத்தை உயர்த்தியவர்,

“ஐயா’ம் சிவபூஷணம்… உன்னோட தாத்தாடா!” என தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ஹய்யா… சிவா ஈவன் இன் மை  நேம்!(என் பெயரில் கூட சிவா இருக்கு) ஆப் ஏக் அவுர் நாணா ஹை?” (இன்னொரு தாத்தாவா நீங்க?) விலகாத ஆச்சரிய பாவனையில் கேட்டான் சோட்டு.

“அடேய் சுட்டிப் பையா! எங்ககூட பேசும்போது தமிழ்ல மட்டுமே பேசணும் கண்ணா! உங்க ஒரிஜினல் நாணாவே இவர்தான்டா! நானெல்லாம் டூப்ளிகேட் பீஸ்…” வேலாயுதம் சொன்னவுடன் அந்த இடமே சிரிப்பால் அதிர்ந்தது.    

அதற்கு பிறகான நிமிடங்களை தாத்தாவும் பேரனும் தனதாக்கிக் கொண்டு வார்த்தை பரிவர்த்தனையில் இறங்கி விட, பேரன் மிக எளிதாய் ‘சிவுநாணா’வின் மனதை கொள்ளை கொண்டான்.

“வாய் வலிக்காம கேள்வி கேட்குறது எப்படின்னு இவன பார்த்து கத்துக்கலாம்டா சிவா!” வேலாயுதம் சொல்ல,

“அப்படியென்னடா கேக்க போறான்? உங்களுக்கு பதில் சொல்லத் தெரியாம, இவன் கேள்வி மட்டுமே கேக்குறான்னு ஆளாளுக்கு குறை சொல்லிட்டு இருக்கீங்க…” என பேரனைக் கொண்டாடிக் கொண்ட சிவபூஷணத்தின் வார்த்தைகளில் எல்லோருக்கும் ஆனந்த அதிர்வுதான் உண்டானது.   

“என்கிட்டே கேளு கண்ணா… உன் டவுட்ஸ் எல்லாம் நான் கிளியர் பண்றேன்!” என்று பேரனுக்கு ஜால்ரா அடித்திட,

“இட்ஸ் மை பிளசர் சிவுநாணா! நீங்களும் வேலுநாணாவும் திக் ஃபிரண்ட்ஸா? எனக்கும் டிட்டுன்னு ஒரு க்ளோஸ் ஃப்ரண்ட் இருக்கான்…” என தனது பிரதாபத்தை சோட்டு கூறத் தொடங்க, பேரப் பிள்ளைகளின் வசமாகிப் போயினர் பெரியவார்கள்.

சரண்யாவிற்கு தனது சகோதரர்கள் எவ்வாறு கையெழுத்திட சம்மதித்தார்கள் என்று தெரிய வேண்டி இருந்தது. அவளைப் பொறுத்தவரை அத்தனை எளிதில் பாட்டியின் சொத்தை தனக்கு எழுதித்தர இவர்கள் சம்மதித்திருக்க மாட்டார்கள்.

சொத்து பதிவிற்கும் தந்தையின் தத்தெடுப்பு முடிவிற்கும் சகோதர்கள் ஒத்துக் கொண்டதற்கான காரணத்தை தந்தையிடம், கேட்க வேண்டுமென இவள் நினைக்க, பொழுதுகள் வசப்படவில்லை.

மாலை நேரம் சிவபூஷணம் புறப்பட்டு நிற்க,

“இன்னும் என்ன அங்கே போயிட்டு… சொந்த வீட்டுல இருடா சிவா… அதான் உன் பொண்ணுன்னு புரிய வைக்க தத்தெடுப்பு பதிவும் பண்ணியாச்சே!” என வேலாயுதம் கேட்க,

“அப்படி பொண்ணுன்னு தத்தெடுத்துட்டு என்னை தனியா விட்டுட்டு போவீங்களான்னு கமலி கேக்குறா வேலு! இத்தனை நாளா, யாருமில்லைன்னு தனியா இருந்துட்டேன். இனிமேலாவது எனக்கு துணையா அப்பாவா கடைசிகாலம் வரைக்கும் என்கூட வாங்கன்னு, அவ கேக்கும்போது தட்ட முடியல வேலு!

ஊர் உலகத்துக்கு என்னை நிரூபிக்கணும்னு ஒரு வீம்போட அவ வீட்டுக்கு போனது, அப்படியே இருக்கச் சொல்றா… இத்தனை நாள் அவ பட்ட கஷ்டங்களும் ஒரு முடிவுக்கு வரட்டுமேன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்!” எனக் கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.

“அப்படின்னா, இனிமே நம்ம வீட்டுக்கு போக மாட்டீங்களாப்பா?” என சரண்யா கேட்க

“தெரியலம்மா.. ஆனா ஒருநாள் போகணும்” என்று ஏதோ ஒரு கணக்கினை மனதில் நினைத்துக் கொண்டு பெருமூச்செறிந்தபடி சென்று விட்டார்.

நீ எப்படி இருக்கிறாய், இனி என்னுடன் வந்து தங்கிக் கொள்! என்ற பாச அழைப்புகள் எல்லாம் மகளிடத்தில் சொல்லவில்லை அவர். தந்தை இப்படிதான் என உணர்ந்து கொண்டவளால், அதை குற்றமாகவும் பார்க்கத் தோன்றவில்லை.

ஆனால் கமலாலயா தன்னிடம் பேசாதது, சகோதரர்களின் தற்காலிக ஒத்துழைப்பு இவற்றை எல்லாம் இவள் அறிய வேண்டியிருந்தது. இதையெல்லாம் யாரிடம் எவ்வாறு கேட்பது என்ற சிந்தனையில் மீண்டும் மூழ்கினாள்.