சரணாலயம் – 18

சரணாலயம் – 18

சரணாலயம் – 18

மகளையும் பேரனையும் தன் அருகில் வைத்து சீராட்ட வேண்டுமென்று ஆசைப்பட்ட சிவபூஷணத்திற்கு, சரண்யாவின் மறுப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

உண்மையில் அவருக்கு, மகன் அழைத்ததின் பேரில் மகள் குடும்பத்துடன் வரும் விஷயமெல்லாம் முன்கூட்டியே தெரியாது.

வீட்டை விட்டு வந்ததில் இருந்து ஒன்று மாற்றி ஒன்றென வேலைகள் ஆக்கிரமித்துக் கொள்ள நண்பனிடம் தனது முடிவினை உறுதியாக கூறிவிட்டு, மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்யப் போய்விட்டார். வேலாயுதம், சரண்யாவின் வருகையை தெரிவிக்கும் பொழுது அவரிடம் பேசி சிவபூஷணத்திற்கு இரண்டு நாட்களாகி இருந்தது.

மகள் ஊருக்கு வந்து இறங்கிய பொழுதே, அவளை எதிர்கொண்டு அழைத்திருக்க வேண்டுமோ, அதை மனதில் வைத்துதான் இருவரும் இப்படி பேசி, தன்னுடன் வந்து தங்குவதை தவிர்க்கின்றனரோ என பல சஞ்சலங்கள் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கின.  

மனதில் பல எண்ணங்களை போட்டு குழப்பிக் கொண்ட சிவபூஷணம், நண்பனிடம் அனைத்தையும் கொட்டிவிட,

“புருஷன் பொண்டாட்டி வாழ்க்கையில இதெல்லாம் சர்வ சாதாரணம்டா! ரெண்டு பேரும் அழகா ஒருத்தரையொருத்தர் புரிஞ்சு நடந்துக்கறாங்கன்னு அர்த்தம். இவ்வளவு ஏன்? நம்ம வீட்டுல கூட அப்படிதான் இருக்காங்க! ஆனா, அது நமக்குதான் தெரியாது.

பொண்ணு கல்யாணம் முடிஞ்சு, அவ புருஷனை பத்தி பேசும்போதுதான் குடும்ப வாழ்க்கையில இப்படியெல்லாம் கூட பாலிடிக்ஸ் இருக்கான்னு நமக்கு தெரிய வரும். ஆனா, அதுல நாம கரை கண்டவங்கன்னு, மாப்பிள்ளை தரப்புல இருந்து பார்க்கும் போது மறந்திடுவோம் சிவா!” வேலாயுதம் நிதர்சனத்தை எடுத்துரைக்க, வாயடைத்து நின்றார் சிவபூஷணம்.

உண்மைதானே… மனைவி தனக்கு பிடித்தமில்லாததை செய்யக்கூடாதென்று இவரும் சட்டம் போட்டவர்தானே! சசிசேகரனாவது மனைவியை போகச்சொல்லி அனுமதி அளித்தான். ஆனால், தான் அவன் இடத்தில் இருந்திருந்தால் நான் போகாத இடத்தில், உனக்கென்ன வேலையென கடிந்து கொண்டே, மனைவியை தடுத்திருப்பார்.

நண்பன் கூறிய உண்மையும், தனது நிலையும் அவருக்கு  சுருக்கென சுட்டதும், தன்னை சசிசேகரனோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் அஞ்சிவிட்டார்.

“இப்ப என்ன செய்றது வேலு? எனக்கு மட்டுமில்ல, சரணிக்கும், என்கூட தோப்பு வீட்டுக்கு வந்து தங்கணும்னு ஆசை இருக்கும் தானே?” யோசனையாக நண்பனிடம் தன் மனத்தாங்கலை கூறிவிட,

“இதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை… உன் மாப்பிள்ளை வந்ததும், ஒரு வார்த்தை வாங்கன்னு கூப்பிடு! அது போதும் சிவா…” வேலாயுதமும் ஆறுதல்படுத்தினார்.

நண்பன் கூறியபடியே சசிசேகரன் வந்ததும் சிவபூஷணம் மருமகனை அழைக்க வந்து விட்டார்.

“எனக்கு மாப்பிள்ளை முறைவச்சு அழைக்கிறது எப்படின்னு தெரியாது சேகரா… உன்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடத் தோணுது. ஆனா நேர்ல கூப்பிட வரமாட்டேங்குது. எதையும் மனசுல வச்சுக்காதேப்பா… இனி எல்லாமே சரியா நடக்கற மாதிரி பார்த்துப்போம். இப்போ கிளம்பி வீட்டுக்கு வா!” தனது நிலையை வெளிப்படையாக சொல்லி அழைத்தார்.

மதிப்பும் மரியாதையுடன் தன் மனதில் பூஜிக்கும் மனிதர், தன்னிடமே இறங்கிப் பேசியதில் சசிசேகரன் ஆடிப்போய் விட்டான்.

“என்ன வார்த்தை சொல்றீங்கய்யா? நீங்க எப்பவும் என்னோட குருதான். மாப்பிள்ளை, மாமனார் உறவை மனசுல உருபோட்டு, என்னை தூரமா நிறுத்திடாதீங்க! உங்ககூட பழையபடி பேச முடியாம, எனக்கும் ஒரு தயக்கம் இருந்தது. அதை மனசுல வச்சுதான் நான் ஒதுங்கி நின்னுட்டேன்!

இனி இந்த அசட்டுத்தனத்தை செய்யமாட்டேன். நீங்க சங்கடப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தாதீங்க!” என சரளமாய் பேசியவன், மனைவியிடம் கண்ஜாடையில் கிளம்புவோமா என கேட்க, அவள் முறைத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டாள்.

“என்ன சரண்? கிளம்பச் சொன்னா உள்ளே வந்துட்ட…” அவளின் பின்னோடு வந்தவாறே சசிசேகரன் கேட்க,

“கடைசியில, நீயும் மாப்பிள்ளை முறுக்கை காமிச்சுட்டதானே? ரொம்ப சந்தோசமா உனக்கு!” கடுப்புடன் முணுமுணுத்தாள் சரண்யா.

“நான் என்னடி பண்ணேன்? உங்கப்பா வந்து பேசினதுக்கு என்கூட சண்டை பிடிப்பியா?”

“அவர் அப்படி வந்து பேச வேண்டாம்ன்னுதானே, நான் உன்னை முன்னாடியே கூப்பிட்டேன், மடையா! இது தெரியல… நீ எல்லாம் என்னத்த கப்பல்ல போய் குப்பை கொட்டுறியோ?”

“எதுக்கும் எதுக்கும் லிங்க் பண்றடி? வரவர நிறைய ரூல்ஸ் பேச ஆரம்பிச்சுட்ட நீ… வேதாளத்தை தோள்ல தூக்கிப் போட்டுக்காம, இஷ்டத்துக்கு வாய் அடிக்குது. கொஞ்சம் கருணை காட்டு சரணிதாயே! ஷிஃப்(கப்பல்) இல்லன்னாலும், போட்ல(படகு) டூயட் பாடுவோம்!” என்றவன் மனைவியை தன்னருகே இழுந்திருந்தான்.

“இப்போதைக்கு போட் ஒட்டுற நினைப்பையெல்லாம் ஒதுக்கி வைங்க கேப்டன்… ஹாண்டில் வித் கேர் டூ மீ! பாசென்ஞ்ஜர் கப்பல்ல பத்திரமா டிராவல் பண்ணுவோம்…” சிரிப்புடன் இவள் விலகி நிற்க,

“எதுக்கு? ஏன்? அதெல்லாம் முடியாது” ஏறிய கோபத்துடன், வேகமாய் மனைவியின் இடை வளைத்து, தன் கைவளைக்குள் நிறுத்திக் கொள்ள,

“ஷப்பா! என்ன ஒரு வேகம்… கோபம்… ஜஸ்ட் எ பிரிகாஷன் சசி! இன்னும் டென் டேய்ஸ் கழிச்சு உனக்கு கன்ஃபார்ம் பண்றேன்!” என்றிவள் கண்களை சிமிட்டிட, இவனுக்கு புரிந்து போனது.

“வாவ்… சரண்குட்டி சொல்லவே இல்லடா! இப்பவே கிட் கொண்டு வர்றேன்… செக் பண்ணுவோம்”

“வேண்டாம் சசி! லாஸ்ட் டைம் இப்படிதான் நிறைய ஹோப் இருந்தது. கடைசியில எல்லாமே பொய்யா போச்சு! அதான் இந்த தடவ பொறுமையா வெயிட் பண்ணிப் பார்ப்போம்”

“இன்னையோட எத்தனை நாள்?” எனக் கேட்க, ஐந்து விரல்களை விரித்து, ஆள்காட்டி விரலால் பூஜ்ஜியம் வரைந்தாள் சரண்யா.

ஆறு மாதத்திற்கு முன், இதே போன்று ஐம்பது நாட்கள் தள்ளிப் போயிருக்க, எதிர்பார்ப்புகளோடு நேரடியாக மருத்துவரிடமே சென்று சோதித்து பார்த்ததில் பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதற்குள் அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததையெல்லாம் சொல்லில் அடக்கவிட முடியாது. 

உடம்பில் சத்து குறைபாடு, சரியான தூக்கம், உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க அறிவுறுத்தி, மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தது மட்டுமே நன்மையாகியது.

அதன் காரணமே, இந்தமுறை பொறுமையுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்களை கடத்த ஆரம்பித்தாள் சரண்யா. கர்ப்பகால உபத்திரவங்கள் எதுவும் இன்னமும் அவள் உணரமால் போக, முன்னைப்போல் சத்து குறைபாடு தானோ என்றே முடிவுக்கே வந்து, தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு இப்போதுதான் கணவனிடம் வெளிப்படுத்தினாள்.

“எல்லாம் நமக்கு ஃபேவராதான் நடக்கும். என் பொண்ணு இந்த வருஷம் என் கையில வந்திடுவா பாரு!” என நம்பிக்கையுடன் மனைவியை அணைத்துக் கொண்டான் சசிசேகரன்.

“எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க?”

“சம் கெஸ்ஸிங்… இது உண்மையா இருக்கபோய் தான் நீ ரெண்டு வாரமா ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தேன்னு நினைக்கிறேன். அண்ட் நம்ம ஃலைப்ல இருந்த பெரிய ஸ்பீட் பிரேக்கா, இங்கே வந்த டென்சன்… இதெல்லாம் சேர்ந்து உனக்கு சிம்டம்ஸ் மறக்க வச்சிருக்கலாம்” மசக்கையை ஆராய்ந்து அறிந்தவனாய், மனைவியிடம் கனிவாய் சொல்ல,

“பொண்டாட்டிக்கு ஆல் இன் ஆல் அழகுராஜாவா இருந்துட்டாராமாம்! டாக்டரேட் பண்ணின மாதிரி என் வீட்டுக்காரருக்கு கெஸ்ஸிங் பாரு!” சந்தோஷ சலிப்பில் அவனோடு ஒட்டிக் கொண்டாள் சரண்யா.

“இது எல்லாத்துக்கும் காரணம், என் பொண்டாட்டியோட கிரேஸ்தான்டா! இந்த அழகுராஜாவோட ஆராய்ச்சிக்கெல்லாம் சலிச்சுக்காம கோ-ஆப்பரேட் பண்ணுவா!” தாபமாய் நெற்றியோடு முட்டிக் கொண்ட நேரத்தில்,

“பாபா, நாணா புலாயா!” (கூப்பிடுறாங்க) சோட்டு வந்து அழைத்ததில் சுதாரித்து கமலாலயாவின் தோப்பு வீட்டிற்கு கிளம்பினர்.

ஊருக்கு ஒதுக்குபுறமாகவே அமைந்திருந்த மிகப்பெரிய காட்டுப்பகுதி போன்ற தோட்டம் பரந்து விரிந்திருக்க, அதற்கு நுழைவு வாயிலில், மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு வெகு அழகாய் ரசனையுடன் கட்டப்பட்டிருந்தது.

அதனை ஒட்டியே இருபது அறைகள் கொண்ட விடுதியும், டீ, ஸ்நாக்ஸ் வகைகள் விற்பனை செய்யும் கேண்டீனும் அமைந்திருந்தன. எல்லாமே சமீபத்தில் கட்டப்பட்டதன் அடையாளத்துடன் தன்னை பறைசாற்றிக் கொண்டு நின்றன.

மொத்தம் நூறு ஏக்கர் கொண்ட விவசாய பூமி… எந்தப்புறம் திரும்பினாலும் இயற்கை அன்னையின் கொடை, கண்ணையும் மனதையும் குளுமையாக்க, மனதை வேறு எங்கும் திசை திருப்ப முடியவில்லை.

சரண்யா குடும்பத்தோடு இங்கே வந்து, இரண்டு நாட்கள் முடிந்து விட்டிருக்க, இன்னும் நிலங்களை சுற்றிப் பார்த்து முடியவில்லை. ஒவ்வொரு ஏக்கருக்கு ஒவ்வொரு வகையான பயிர்கள் தனிதனியாக நெல், சோளம், கடலை என பயிரிடப்பட்டிருக்க, நடுநடுவே பூ, காய்கறி வகைகளின் செடிகொடிகளும் பதியமிடப்பட்டிருந்தன.

மேலும் வயல்வரப்புகளை கடந்து கொண்டே செல்ல, பலவகையான பழவகைகள் சதுர, செவ்வக, ஐங்கோண முறையில் நடவு செய்யபட்டிருந்தன. நீர்நிலைகளுக்கான ஜெட்பம்பும், தண்ணீர் தொட்டிகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு பயிர்களுக்கு தானியங்கி மூலம் நீர் பாய்ச்சல் நடந்து கொண்டிருந்தது.   

இயற்கை உரத்திற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு, சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் மக்கும் கழிவுகள் சேகரித்து, சேமிக்கப்பட்டு வந்தது. மருத்துவ மூலிகைகளுக்கென தனியாக நிலம் ஒதுக்கப்பட்டு பாத்திகளும் கட்டி விடப்பட்டிருந்தன. சுருக்கமாக சொல்லப் போனால் ஒருங்கிணைந்த வேளாண்மை அங்கே தங்கு தடையின்றி நடந்து கொண்டிருந்தது.

“இத்தனை பெரிய இடத்தை ஒருத்தர் மேற்பார்வையில நிர்வாகம் பண்றது ரொம்ப கஷ்டம்தான்… அக்ரீகாலேஜ் குத்தகைக்கு கேட்காம இருந்திருந்தா, இன்னும் நாம மெனக்கெட வேண்டியிருக்கும் இல்லையாக்கா?” கண்களால் இயற்கை அழகை நிறைத்துக் கொண்டே கேட்டாள் சரண்யா.

“இல்லையா பின்ன? எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருந்தாலும், வேலைக்கு ஆள் பிரிச்சு விடவே மூளை குழம்பிடும் எனக்கு.

எல்லா விவரத்தையும் கம்ப்யூட்டர்ல ஏத்தி வைங்கன்னு சொல்ல, அது தெரியாம நான் பட்ட கஷ்டம் கொஞ்சமில்ல… பத்தாங்கிளாஸ் வரைக்கும் தமிழ் மீடியத்துல படிச்சிட்டு, புதுசா கம்யூட்டர் கத்துக்க சிரமப்பட்டுட்டேன்டி! இப்போதான் நிம்மதியா மூச்சு விடுறேன்” என அன்று வேலை செய்ததின் சோர்வினை இன்று எடுத்துரைத்தாள் கமலாலயா.

“முன்னாடியெல்லாம் நாங்க இவ்வளவு பெருசா பண்ணையம் பண்ணல… குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்வோம். விளைச்சலை சந்தைக்கு கொண்டுபோய் வியாபாரம் பண்றது எல்லா நேரமும் ஒண்ணுபோல இருக்காது. அதுக்கு யோசனை பண்ணியே தயங்கிட்டு இருந்தப்பதான் இந்த குத்தகை வசப்பட்டு எல்லாமே சுமூகமா முடிஞ்சது!

“இது தவிர, என் பேருல இருக்குற மத்த நிலங்களையும் குத்தகைக்கு விட்டுட்டேன் பட்டு! இப்போதைக்கு என் வேலை குத்தகை பணம் கணக்கு பார்க்கிறது, அதோட கேண்டீன், ஹாஸ்டல் நிர்வாகம்ன்னு ஈஸியா இருக்கு!”

“சோ ஸ்மார்ட் லயாக்கா! ஒன் வுமன் ஆர்மீதான் நீ!” என சிலாகித்த சரண்யா,

“பட், என்னால இந்த பொறுப்புகளை எல்லாம் கையிலெடுக்க முடியுமான்னு தெரியல? வேண்டாம்னு சொன்னா, அதுக்கும் தனியா பாடம் எடுக்குறார் உங்க ஐயா!” என தந்தையின் மீது குறைபட்டுக் கொள்ள,

“உனக்கு இருக்குற ஏத்தம் வேற யாருக்கும் வராதுடி! பெரியவங்க சொன்ன கேட்டுக்கணும்னு இப்பவாவது புத்தி வருதா பாரு… கழுத, கழுத…” என செல்லக் கொட்டினை பரிசளித்தாள்.

“அந்த புத்தியெல்லாம் எனக்கெதுக்கு… அதான் மஞ்சத்தண்ணி தெளிச்ச பலியாடா, நீ ஒட்டு மொத்தமா அவங்ககிட்ட மாட்டி இருக்கியே… அது போதாதா!” என தமக்கையை மேலும் சீண்டிவிட,

“விளையாட்டு போதும் பட்டு! இப்போ எல்லாம் சரியாகிடுச்சுதானே… இன்னும் என்ன உன் மனசுல இருக்கு, வெளியே கொட்டிடு” ஆதுரத்துடன் லயா கேட்டாள்.

“என் மனசு முழுக்க நன்றி இருக்குக்கா… அதைதான் உன்கிட்ட கொட்ட நெனைக்கிறேன். அதுக்கு வாயை தொறந்தா நீ அடிக்க வருவ… அப்பாவோட விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாம சம்மதிச்சதுக்கு ரொம்ப நன்றி… அவ்வளவு சந்தோஷமா இருக்கு!” உணர்வுகளின் உச்சத்தில் நெகிழ்ந்தாள் சரண்யா.

“அன்னைக்கு ராத்திரி ஐயா, என் வீட்டுக்கு வரும்போது ரொம்ப தயக்கத்தோட தான் உள்ளே வந்தாரு பட்டு! எதுக்கு இவ்வளவு தயங்கி நிக்கிறாருன்னு அவர பார்த்தா, அவ்வளவு துக்கமும் கோபமும் முகத்துல அப்பிக் கிடந்துச்சு…” என்றவளின் கண்களில் அன்றைய நினைவுகள் படமாக விரிந்தன.

“ஊரு உலகத்துல நம்மள பத்தி பேசுறத நீ எப்படி பார்க்குற கமலி?” சிவபூஷணம் கண்களில் சிவப்பேறி, அடக்கபட்ட கோபத்தில் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்

“அவங்க பேசுறது புதுசா? நான் இதையெல்லாம் தூசியா தட்டிவிட ஆரம்பிச்சு வருசக்கணக்கு ஆகிடுச்சுங்கய்யா!”

“ஊரு, சாதி சனத்தை விடு! வீட்டுல இருக்கிறவங்களே பேசினா என்ன செய்வ கமலி?” என்றவரின் கேள்வியில் அதிர்ந்து விழித்தாள் கமலாலயா.

சிவபூஷணம் வீட்டு மருமகள்களின் மத்தியில் அப்படியொரு எண்ணம் உலா வருகின்றது என்பதை அரசல் புரசலாக கேள்விபட்டவள்தான். ஆனால், இப்படி நேரடியாக இவர் மூலம், தனக்கு தெரிய வருமென்று அவள் நினைக்கவில்லை.

“என் கடமையை நான் முடிக்க நினைக்கிறேன் கமலி! எனக்கும் ஓய்வு வேணும். யாருக்கும் இடைஞ்சல் தராத வகையில மீதமுள்ள வாழ்க்கையை கழிக்க போறேன்! இனி தனியா இருக்குறதா முடிவு பண்ணிட்டேன்.

ரெண்டுநாள் இங்கே தங்கிக்க எனக்கு இடம் கொடு! அடுத்து உனக்கும் தொந்தரவு இல்லாம, எல்லாருடைய பேச்சுக்கும் அர்த்தமில்லாம பண்ணிட்டு, நான் தனியா வேற இடத்துக்கு போயிடுறேன்!” ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தீர்மானத்துடன் பேசினார் சிவபூஷணம்.

“எங்கேயோ ஒரு இடத்துக்கு போறவர், இங்கேயே உங்க இடத்துல தங்கிக்கலாமே! எதுக்கு இவ்வளவு கவலபடுறீங்க?” வருத்தத்துடன் கூறிய கமலாலயாவிற்கும் மனம் அத்தனை எளிதில் அடங்கவில்லை.

இல்லாத பழியை தூக்கிச் சுமக்க நேரிடும் போதுதான், எப்பேர்பட்டவரையும் ஆதியோடு அந்தமாய் நொடிந்து போகச் செய்கிறது. மனிதனை அசைத்துப் பார்க்கும் வீண்வதந்திகள் என்றும் மார்கண்டேயனாக பொலிவுடன் வலம் வருவதை எந்த காலத்திலும் தடுக்க முடிவதில்லை. 

“இது எனக்கு சொந்தமில்லாத இடம். எந்த உறவு முறையில நீ இங்கே தங்கியிருக்கேன்னு நாளைக்கு யாரவது என்னை கேள்வி கேட்டா, அது நம்ம ரெண்டு பேருக்கும்தான் தலைகுனிவா போகும். சொந்த வீட்டுல பாரமா இருக்க விரும்பாம வெளியே வந்துட்டு, உனக்கு பாரமாகி, உனக்கும் கெட்டபேர் உண்டாக்க விரும்பல கமலி”

“அப்படி உறவுமுறை சம்மந்தம் இருந்தா மட்டும், ஊர் வாய அடக்கிட முடியுமா? அப்படி முடியும்ன்னா அதுக்கு என்ன செய்யனுமோ அந்த ஏற்பாட்டை பண்ணுங்கய்யா… தயவுசெய்து நீங்க தனியா போகாதீங்க…

எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா எனக்கு அப்பாவா, அண்ணான, தோழனா எல்லாத்துக்கும் வழிகாட்டியா இருந்த உங்களை நான் தனியா விடமாட்டேன்!” என்று அமைதியாக சொன்னவளின் வார்த்தைகள் அழுத்ததின் உச்சத்தை எட்டியிருந்தது.

அந்த அழுத்தம் மறுநாளே அப்பா மகள் என்கிற உறவு நிலைப்பாட்டில் உறுதிபட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கி விட்டார் சிவபூஷணம்.

“ஐயா… எல்லா இடத்துலயும் நிமிர்ந்து நின்னே பழக்கபட்டுட்டார் பட்டு! திடீர்னு அவர் தலைகுனியுற மாதிரியான பேச்சு நேரடியா வந்து தாக்கவும், அவரால அந்த சூழ்நிலைய கடக்க முடியல… அதான் எந்த நேரம்னு பார்க்காம என் வீட்டுக்கு வந்துட்டாரு!

அதுவும் ஒருவகையில நல்லதுதான். கோபப்பட்டு வேற எங்கேயாவது போயிருந்தா தேடி அலையன்னு நாம கஷ்டப்பட்டு, அவரும் உடைஞ்சி போயிருப்பாரு!” என கமலாலயா சொல்லச் சொல்ல, கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தாள் சரண்யா.

“ஆனா ஒரு விஷயம் கவனிச்சியா பட்டு! எனக்காக எல்லாமே பார்த்து பார்த்து செஞ்சவர், தன் மகள் விசயத்துல ரொம்ப பாராமுகமா இருந்துட்டார். இதை நினைச்சு நான் வருத்தபடாத நாளில்லை” ஆதங்கத்துடன் லயா முடிக்க,

“சொந்த பிள்ளைகளையும் ஒரு ஆசிரியரோட கண்ணோட்டத்துல மட்டுமே பார்த்துட்டாருக்கா! நாங்களும் அவரை அப்பாங்கிற உறவோட நிறுத்திட்டோம். அவரோட ஒவ்வொரு எதிர்பார்ப்பும் பொய்யாகி எங்களை தூர நிறுத்தும் போது, நாங்களும் அவரை விட்டு விலகிப் போயிட்டோம்!

அதான் அவர் சொல்றபடி எதையும் எங்களால ஃபாலோ பண்ண முடியல. அதையே நீயும் சசியும் செய்து அவரோட அர்ப்பணிப்புக்கு பெருமை சேர்த்துட்டீங்க!” என சரண்யா விவரித்தாள்.

தந்தையை உணர்ந்து கொண்ட மகள்களாய் அவரை பற்றி விவாதித்தவாறே வீட்டுக்கு வந்து சேரும் நேரத்தில், மண்வெட்டியை கொண்டு சசி மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்க, அந்த மண்ணை ஓரமாய் ஒதுக்கிக் கொண்டிருந்தான் சோட்டு.

“என்ன பண்றீங்க சசி? அப்பாவும் பையனும் ஒரிஜினல் மண்ணின் மைந்தனா மாறிட்டீங்க!” சரண்யா கிண்டலில் இறங்க,

“நம்ம குட்டிக்கு எப்படி பிளாண்ட்ஸ் வளருதுன்னு தெரிஞ்சுக்கனுமாம் சரண்… அதான் தக்காளி, கத்திரி, வெண்டைன்னு சீக்கிரமா வர்ற செடியெல்லாம் போட மண்ணை கொத்தி ரெடி பண்றோம்”

“பாருடா! விவசாயி மகன் கடமையை செய்ய புறப்பட்டுட்டார்!”

“உங்கப்பா பண்ணையக்காரரு எஜமானி! நீ ஜாலியா ஊர் சுத்தலாம். ஆனா, என் பிள்ளை உழவன் மகன் வம்சம்தானே! அவனும் கத்துக்கட்டும்…” என்றவன் குழிகளை அடுத்தடுத்து தோண்டுவதில் தீவிராமாக ஈடுபட, விதைகளை எடுத்துக் கொண்டு சிவபூஷணம் வந்து சேர்ந்தார்.

பேரனின் அருகில் இருந்தே, அவனது கைகளால் விதைகளை மண்ணில் பதியமிடச் சொல்லி, சோட்டுவின் ஆசையை நிறைவேற்றினார்.

“சிவுநாணா… இந்த குட்டி சீட்ல(விதை) இருந்து நெஜமாவே ப்ரின்ஜால், டொமேட்டோ எல்லாம் வருமா?” தயக்கமின்றி கேள்விகளை கேட்டான் சோட்டு.

இங்கு வந்ததில் இருந்து, சிறியவனின் வினாவங்கி, தாத்தாவிடம் மட்டுமே தனது கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கின்றது.

“நிச்சயமா வரும்டா கண்ணா! அதுலயும் இந்த பிஞ்சு கையால போட்டதுக்கு வெஜிடேபிள்ஸ் எல்லாம் ரொம்ப ஹாப்பியாகி, சீக்கிரமாவே வெளியே தலை காட்டிடும்” எனக் கூறியவரின் குரலில் அத்தனை கொஞ்சல் இழையோடியது.

இந்த சிவபூஷணம் முற்றிலும் புதியவர். கண்டிப்பும் தோரணையும் முழுவதும் கைவிட்டு, தனது பேரனுக்கென இறங்கி வேலை செய்யும் பாசக்கார தாத்தாவாக உருமாறி இருந்தார்.

தன் தோட்டத்து மலர்களின் வாசத்தை நுகர்ந்தும் பழக்கில்லாதவர், அதில் கனிந்த கனியின் விகசிப்பில் தன்னை மறந்து மயங்கி நிற்கிறார்.

“டுடே, நான் ஃபார்மர் ஆயிட்டேன் சிவுநாணா! இந்த குட்நியூச என் ஃப்ரிண்ட் டிட்டு, பவன் தித்லி, அண்ட் வேலுநாணா எல்லார்ட்டயும் சொல்லணும். வாங்க வீடியோ கால்ல பேசுவோம்” என அவரை, தனது வழிக்கு இழுத்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!