சரணாலயம் – 17

சரணாலயம் – 17

லட்சுமி வீட்டின் பின்கட்டில், தோட்டத்து சுவரை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் சரண்யா. லச்சு வீட்டிற்கும் சரண்யா வீட்டிற்கும் இடையே பாலமாக இருந்த சிறியபாதை அடைக்கப்பட்டு, அவர்கள் வீட்டு தோட்டத்தை மறைத்து பெரிய மதில் சுவரொன்று எழுப்பபட்டிருந்தது.

என்னதான் கோபம், சண்டையென்று ஒதுங்கியிருந்தாலும் பெண்ணவளின் மனமெல்லாம் பிறந்த வீட்டை சென்று பார்த்திட வேண்டுமென்ற தீராத ஆசையில் மனம் தவிக்க தொடங்கியிருந்தது.

ஊருக்கு வந்து மூன்று நாட்கள் முடிந்திருந்தன. அன்று பேசிவிட்டு சென்ற சிவபூஷணம், அதற்கடுத்து வந்து மகளை சந்திக்கவோ அலைபேசியில் பேசவோ இல்லை. தான் இருக்கும் இடத்திற்கு வந்து தங்கிக் கொள்ளலாம் என அழைப்பும் விடுக்கவில்லை.

இவளும் அதற்கான முயற்சிகள் எதையும் செய்யவில்லை.  எப்பொழுதும் ஏதாவதொரு வேலையை இழுத்து போட்டு செய்து கொண்டிருப்பவரை தொந்தரவு செய்ய வேண்டாமென்று அமைதியாகவே இருந்து விட்டாள்.

கமலாலயாவை சென்று பார்க்கலாமென்றால் பெரும் தயக்கம் வந்திருந்தது அவளுக்கு. தனது திருமணத்தின் பொருட்டு அக்கா பழிசொல்லை ஏற்றிருக்கிறாள் என தெரிந்த பொழுதிலிருந்து குற்றமுள்ள நெஞ்சாய் சரண்யாவின் மனம் குறுகுறுக்க தொடங்கி விட்டது. பற்றாகுறைக்கு பதிவு அலுவலகத்தில் அவள் முகம் திருப்பிக் கொண்டதும் சேர்த்து, தமக்கையை சென்று பார்க்கும் எண்ணத்தை கைவிடச் செய்தது.

சசிசேகரனும் நண்பர்களை பார்ப்பதற்கென இரண்டுநாள் பயணமாக சென்னை சென்றுவிட, இவளின் பொழுதுகள் எல்லாம் கோவில், வீடு, தோட்டம் என வெறுமையாக கழிந்தன.

தினமும் மாலை நேரத்தில் தோட்டத்தில் வந்து அமர்ந்து விடுவாள் சரண்யா. ஆவலுடன் விளையாட குழந்தைகளும் உடனிருக்க, தனது குறும்புக்கால நினைவுகள் எல்லாம் மனதில் வலம்வர ஆரம்பித்து விடும்.

இந்த மூன்று நாட்களில் சரண்யாவின் பிறந்த வீட்டிலிருந்து சிறு சத்தமோ ஆள் நடமாட்டமோ இருந்ததாய் உணர முடியவில்லை. இவளுக்கும் தன் சகோதரர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஆவல் கூடிகொண்டே போவதை தடுத்திட முடியவில்லை.

அன்றைய தினம் குழந்தைகள் விளையாடியபடி இருக்க, தோட்டத்தில் அமர்ந்திருந்தவள், லட்சுமியிடம் சகோதர்களை  பற்றிய தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி விட்டாள்.  

“அப்படியென்னக்கா வேலை ரெண்டு பேருக்கும்? ஆள் நடமாடுற சத்தம்கூட கேட்க முடியல… ரெண்டு பேரும் இங்கேதானே குடித்தனம் பண்றாங்க?” சரண்யா கேட்க,

“என்னத்த குடித்தனம் நடக்குது அந்த வீட்டுல? பெரியவன் பொண்டாட்டி, அவன்கூட வாழுறதில்ல! இவனும் எங்கே போயி ஊர் மேய்ஞ்சுட்டு திரியுறானோ தெரியல… உன் சின்ன அண்ணி இப்போதான் உண்டாகியிருக்கான்னு அம்மா வீட்டுல இருக்கா… சின்னவனும் எந்நேரமும் பொண்டாட்டிக்கு காவலா குடை பிடிச்சிட்டு அங்கேயே இருப்பான்” சகோதரர்களின் நடப்பை கூறினாள் லட்சுமி.

“ஏன் பெரியவன், பொண்டாட்டி கூட இல்ல? என்னக்கா நடந்தது?”

“உன் கூட பொறந்தவங்களுக்கு தெய்வம் நின்னு கொன்றுச்சு சரணி! உன் கல்யாணம் முடிஞ்ச பிறகு உங்க தூரத்து சொந்தத்துல ஏழையா இருந்தாலும் லட்சணமான பொண்ணைதான் பெரியவனுக்கு கட்டி வைச்சாங்கான்னு உன்கிட்ட நான் சொன்னேனே ஞாபகமிருக்கா?”

“ஆமா… அவளும் அப்படியே அம்மாவோட மறுபதிப்பா நல்ல குணமா இருக்கான்னு சொன்னியே! பின்ன எப்படி புருசனோட வாழாம போனா?”

“அதுக்கு காரணம் உங்க நொண்ணன்தான். தறிகெட்டு போயி ஊரெல்லாம் புழங்கிட்டு வந்தத, இவன் வெளியே சொல்லாட்டாலும் இவன் உடம்பு காட்டிக் கொடுத்திடுச்சு! ஆரம்பத்துல உன் அண்ணிக்குதான் அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிட்டே இருந்தது. இவனும் வாய அண்டார்டிகா வரைக்கும் நீட்டி வைச்சுட்டு பொண்டாட்டி மேலயே குறை சொல்லி, மாமனார் வீட்ட பயமுறுத்திட்டு திரிஞ்சான்.

அதோட நிக்காம உங்கம்மாட்டயும் நல்ல பொண்ணா பார்த்து வைக்கலன்னு சண்டை போடவும் செஞ்சான். இவனுக்கு பயந்தே பொண்ணை, அவ பொறந்த வீட்டுல ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்க…

ஆரம்பத்துல இங்கே வைத்தியம் பார்த்துட்டு இருந்தவங்க, மகளுக்கு அடிக்கடி முடியாம போகவும் மதுரைக்கு  கூட்டிட்டு போயி காமிச்சாங்க! அங்கேதான் உன் அண்ணனோட சுயரூபமே வெளியே வந்தது.

அந்த மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்ல புருஷனோட கோளாறுதான் பொண்டாட்டிக்கு தொற்றா பரவியிருக்கு, கவனிச்சு மருந்து எடுத்துக்கோங்கன்னு புத்தி சொல்லி அனுப்பிட்டாங்க!”

“அடக்கருமமே! வெளியே சொல்லவும் கூசிபோகுது! இதுக்கு அண்ணி வீட்டுல என்ன சொன்னாங்க?”

“என்னத்த சொல்ல… பாவிப்பய இவன் நோயை வாங்கினத்துக்கு அந்த பொண்ணு பலியாடா எல்லாத்தையும் அனுபவிச்சா… பாவம் அந்த பொண்ணு!

ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து எல்லா டெஸ்டும் எடுத்ததுல, எஸ்டிஐன்னு(Sexually transmitted diseases) சொல்வாங்களே அந்த இன்ஃபெக்ஷன் இவனுக்கு இருக்கு… புருஷன்கிட்ட இருந்துதான் பொண்டாட்டிக்கும் வந்திருக்குனு தெளிவா சொல்லிட்டாங்க! இவன் இப்படின்னு தெரிஞ்சதும் உன் அண்ணியும் வீட்டை விட்டு போயிட்டா…”

“அச்சோ… உண்மைக்குமே பாவம்தான்! ஆனா இத க்யூர் பண்ணிக்கலாம்தானே?”

“பொண்டாட்டி விட்டு போனதுக்கப்புறம், சரியான ட்ரீட்மெண்ட் இவனும் எடுத்து, அவளுக்கும் எடுக்க வைச்சு திரும்ப வீட்டுக்கு வாழ வரும்போது கல்யாணமாகி ஆறு வருஷம் முடிஞ்சு போச்சு. உங்கம்மா சாவுக்கு வந்தவ, பெரியவங்க எடுத்துச் சொன்னத கேட்டு திரும்பவும் இவன்கூட வாழ ஆரம்பிச்சா…”

“ஓ.. இதுக்கு அப்புறமாவது ஒழுங்கா இருந்திருக்கலாமே? திரும்பவும் ஏன் புருஷனை விட்டுப் போனா?” 

“இவ ஒழுங்கா இருந்து என்ன பிரயோசனம்? வாழ ஆரம்பிச்சு ரெண்டு வருசமாகியும் குழந்தை இல்லன்னு திரும்பவும் பெரியவன், பொண்டாட்டிய கொட்ட ஆரம்பிச்சான்.

இவளும் சரிக்குசரியா ரெண்டு பேரும் சேர்ந்தே செக்கப்புக்கு போவோம் வான்னு கூப்பிடவும் திரும்ப சண்டை போட்டுட்டு, இவன் வீட்டுல தங்கல…

ஆம்பள சபலபுத்தி அவ்வளவு சீக்கிரம் விட்டுப் போயிடுமா? வீட்டுக்கு தெரியாம சுத்தினத, இவன் உடம்பு இந்த முறை ரொம்ப சீக்கிரமே யோக்கியமா வெளியே காட்டி கொடுத்திருச்சு.

இவனை கேள்வி கேட்கவும் பெரியவங்க முன்வரல… அடிச்சு அடக்கவும் ஆள் இல்ல… ஆனா, உன் அண்ணியும் லேசுபட்டவ இல்லை, என்ன பேச்சு பேசுவா தெரியுமா?

“அப்போ சமீபத்துல தான் அண்ணியும் அம்மா வீட்டுக்கு போயிருக்கா?”

“ஆமா… உங்கப்பா வீட்டை விட்டு போனதுக்கு அடுத்த நாளுன்னு நினைக்கிறேன்! ரொம்ப பெரிய சண்டைதான் இவ போட்டா! இவனையெல்லாம் இந்த ஜென்மத்துல திருத்த முடியாதுன்னு வாய்க்கு வந்தத திட்டி, ஒரெடியா போறேன் இனி வரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா.

இவனை நம்பி பஞ்சாயத்து பேசி சேர்த்து வைக்கவும் யாரும் பொறுப்பெடுக்கல… உங்க அண்ணி வீட்டுல, அவங்க பொண்ணு நோய் நொடியில்லாம உசிரோட இருந்தா போதும்னு குடும்பமே இவனை மொத்தமா கைகழுவிட்டதா பேசிகிட்டாங்க!

இப்ப இவன் ஒத்தையா நிக்கிறான்! எப்போ என்னனு இவனை பத்தியெல்லாம் கணிக்க முடியாது” என வெற்றிவேலின் வாழ்க்கை, தோல்வியில் முடிந்ததை வெற்றிகரமாக சொல்லி முடித்தாள் லட்சுமி.

“ஹூம்… தன்வினை தன்னைச் சுடும்னு சும்மாவா சொன்னாங்க!” பெருமூச்செறிந்த சரண்யா,

“சின்னவன் கதை என்ன? அதையும் சொல்லு… கேட்டுட்டு மொத்தமா வருத்தப்படுறேன்!”

“அவனுக்கென்ன? பெரிய இடத்து பொண்ணு… ராஜா மாதிரி வாழ்க்கை. ரொம்பத் தெளிவுடி அவன். பொண்டாட்டிக்கு கூஜா தூக்கியே, அவளை, தன் பின்னாடி சுத்த வைப்பான்!” லட்சுமி நமட்டுச் சிரிப்புடன் சொல்ல சரண்யாவும் சேர்ந்து  சிரித்தாள்.

“இப்படி சொன்னா எப்படி லச்சுக்கா? எல்லார் வீட்டுலயும் நடக்கிறது தானே!” நகைப்புடன் சரண்யா கூறிட,

“அடியே… இவன் அப்படி இல்ல, அதுக்கும் மேல… பொண்டாட்டி சொன்னான்னு, மாமியார், மாமானார் செருப்பைகூட கழுவுற ஜாதி! நம்ம வீட்டுல எல்லாம் அப்படியா இருக்கு? எதையும் ஒரு கோட்டுல நிறுத்தி வைச்சு சட்டம் பேசத்தானே செய்றாங்க…” என கேட்க,

“அடப்பாவி பொண்டாட்டி மட்டுந்தான் இவன் கண்ணுக்கு தெரிவாளா?” கேட்ட சரண்யா முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டாள்.

“சும்மாவா? ஒத்த பொண்ணு… சொத்து ஏகத்துக்கும் கொட்டி கிடக்கு! இங்கே ஒருநாள் இருந்தா அம்மா வீட்டுல பத்துநாள் தங்கிட்டு வருவா மகராசி! இவனும் பின்னாடியே போயி சேவகம் பண்ணி, அங்கேயே குடித்தனமும் நடத்துவான்.”

“அம்மா, அப்பா இதுக்கெல்லாம் எப்படிக்கா ஒத்துக்கிட்டாங்க?”

“பையன்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதோட உங்கப்பா ஒதுங்கிட்டாரு! உங்கம்மாவும் கண்டும் காணாத மாதிரி இருந்துட்டாங்க… அதோட அடிக்கடி உடம்பு சரியில்லாம போனதுல அவங்களால எதையும் அதட்டி சொல்ல முடியல…

ஆனா ரெண்டு மருமகள்களும் வீட்டுல இருந்தா, சதா சண்டைதான் நடக்கும். ஒண்ணு ஓரகத்திங்க சண்டை போட்டுப்பாங்க… இல்லன்னா பெரியவன், பொண்டாட்டி கூட சண்டை போடுவான். உங்கம்மா இருந்த வரைக்கும் அவங்க கூடவும் ரெண்டு மருமகள்களும் காரசாரமா விவாதம் பண்ணுவாங்க…

சின்ன மருமகளுக்கு அவ்வளவு சீக்கிரத்துல புள்ள தங்கல… இவளுக்கும் மதுரைக்கு போயி எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்தாங்க! இவகிட்டதான் கோளாறு இருக்குனு கண்டுபிடிச்சு, வைத்தியம் பார்த்து இப்பதான் மூணுமாசம்ன்னு அம்மா வீட்டுல இருக்கா…” விலாவாரியாக விளக்கினாள் லட்சுமி.

“கமலியக்கா மேல இருக்குற கோபத்துல, உன் கல்யாணம் முடிஞ்ச உடனேயே ரெண்டு கிறுக்கும் சேர்ந்து பின்கட்டு வழிய அடைச்சு சுவர் எழுப்பிட்டாங்க! எங்க குடும்பத்தோடவும் பேச்சை வார்த்தைய முறிச்சுகிட்டானுங்க…

இவனுங்க மனசெல்லாம் விஷம் ஏத்தி வச்சுக்கிட்டு, அக்காவாலதான் எங்க வீட்டு மானம் போச்சு, மரியாதை போச்சுன்னு குற்றம் சொல்லிட்டு திரிஞ்சது ரெண்டு பக்கியும்…” லச்சு வசைபாடத் தொடங்க சரண்யாதான், காதுகளை பொத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

ஆகமொத்தம் தனது அவசர கல்யாணம் அம்மாவையும் அக்காவையும் ஒன்றுசேர பதம் பார்த்திருக்கிறது என்பதை நினைக்க சரண்யாவின் மனம் மீண்டும் குற்ற உணர்ச்சியில் தவிக்கத் தொடங்கியது.

“என் வாழ்க்கை, என்னோட விருப்பம்னு நான் எடுத்த முடிவுல, இத்தனை பேருக்கு பழி வந்து சேரும்னு நான் நினைக்கவே இல்லக்கா!” உள்ளடங்கிய குரலில் சரண்யா வருத்தப்பட,

“அதபத்தி இப்ப பேசி என்ன பிரயோசனம்?” வெடுக்கென்று கேட்டபடியே வந்தாள் கமலாலயா.

மாலைநேரத்தில் கோவிலுக்கு சென்றுவிட்டு, அப்படியே லச்சு வீட்டிற்கு வந்தவள், பெரியவர்களுக்கு பிரசாதத்தை கொடுத்துவிட்டு, பின்கட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கும், இவர்களுக்கும் கொடுக்க வந்தாள். 

“இப்ப எதுக்கு நடந்ததை எல்லாம் நினைச்சு பார்த்துட்டு இருக்காளாம் இந்த கழுத?” காட்டமாகவே சரண்யாவை சாட, அவளோ எதுவும் பதில் பேசாமல் தலைகுனிந்தாள்.

“என்னமோ இவளுக்கு, அவ வீட்டுக்கு போகணும்ன்னு இருக்கும் போல… அதான் அப்போத புடிச்சு அவங்க வீட்டை பத்தியே பேசிட்டே இருந்து, கடைசியில இந்த முடிவுல வந்து நின்னுட்டா!” லச்சுவும் நடந்ததை சொல்ல,

“ஐ’யாம் சாரி லயாக்கா! இதுக்குதான் நீ என்கூட பேசாம இருக்கியா?” சரண்யா கரகரத்து விட,

“பேசாதடி நீ! பெரிய மனுசியாட்டம் கேக்க வந்துட்டா… மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, என் கோபத்துக்கு காரணத்த கண்டுபிடிச்சு சொல்ல வந்துட்டா…” என பெரியவள் பல்லைக் கடித்தாள்.

“போதும் விடுக்கா! நீ இன்னும் ரெண்டு டோஸ் விட்டா பெரிய கச்சேரியே வச்சுடுவா… அப்புறம் இவ புள்ள கேக்குற கேள்விக்கு உன்னால பதில் சொல்லி முடியாது” லச்சு கேலிபேச,

“இவள வளர்த்தவடி நானு! இவ பையனுக்கு பதில் சொல்ல மாட்டேனா? வரட்டும் அவனையும் ஒரு கை பாக்கிறேன்” பேச்சிற்கு பேச்சு லயா எகிறினாள்.

“அச்சோ! எதுக்குக்கா இப்படி வெடிக்கிற? வயசாகிப் போச்சு உனக்கு. அமைதியா பேச கத்துக்கோ! இப்போ என்ன? நான், உன் வீட்டுக்கு வந்து இறங்கல… அதானே உன்னோட கோபம்?” தமக்கையின் சினத்திற்கான காரணத்தை கணித்தவளாய் சரண்யா கேட்க,

“தெரியுதுதானேடி மக்கு! பின்ன என்ன கேள்வி உனக்கு? வந்தவளுக்கு ஒரு ஃபோன் பண்ணி பேசணும்னு கூடவா தோணல…” கோபத்துடன் சரண்யாவின் கன்னத்தை இடிக்கும் நேரத்தில் பிள்ளைகள் மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

அவர்களின் முன்பே வேண்டுமென்றே சரண்யாவின் கன்னத்திற்கு மேற்கொண்டு சேர்த்தே இடிக்க,

“வாட் ஹாப்பெண்ட் ஆண்ட்டி? வொய் ஆர் யூ பீட்டிங் மை மாம்?” கேள்வி கேட்டபடியே சரண்யாவை ஓடிவந்து அணைத்துக் கொண்டான் சோட்டு.

“படவா! ஆண்ட்டின்னு சொன்னா, உனக்கும் சேர்த்தே குத்து விழும் பார்த்துக்கோ! ஒழுங்கா பெரியம்மான்னு கூப்பிடு!” அவனையும் மிரட்டினாள் கமலாலயா.

“ஒஹ்… அப்படியா மாம்!” சோட்டு, சரண்யாவை பார்த்து கேட்க,

“ஆமா தர்ஷூ! உனக்கு ரெண்டு பெரியம்மா… இவங்கதான் பெரியவங்க…” என கமலாலயாவை அறிமுகப்படுத்தினாள்.

“யாஹ்… ஹூ! தோ மொசீ(ரெண்டு பெரியம்மா), தோ நாணா(ரெண்டு தாத்தா), டூ நியூ ஃபிரண்ட்ஸ்… சப் குச் மேரேலியே பஹூத் படியா ஹைன்!” (எல்லாமே எனக்கு அதிகம்) சந்தோசத்தில் சிறுவன் கைகளை மடக்க,

“ஆமாடா குட்டி! எல்லாமே உனக்கு டபிள் தாமாகாதான்! அத ஒரு பாஷையில சொல்லு ராஜா! நீ இப்டி கலந்து கட்டி அடிச்சா மண்டை குழம்பிடும் எனக்கு” சோட்டுவை மடியில் அமர்த்திக் கொண்டவாறே லயா கனிவும் கேலியும் கலந்த குரலில் சொல்ல,

“அதை ஏன் கேக்குறீங்க பெரியம்மா? இவனை தமிழ்ல பேச வைக்க ரொம்ப கஷ்டபடுறோம்! இவனுக்காகவே நான் யூ டியூப்ல டெய்லி ஹிந்தி கத்துக்கறேன்!” தித்லியும் அங்கலாய்ப்பாய் சொல்லி முடித்தாள்.  

“டோன்ட் வொர்ரி தித்லி! மைன் தும்கோ சிக்காதா ஹூன் (நான் உனக்கு கற்று கொடுக்கிறேன்) இட்ஸ் வெரி ஈஸி!” தன் பாணியில் சோட்டு பதில் சொல்ல,

“இவன் பாஷைய மாத்த சொல்லுடி! எனக்கு கண்ணை கட்டுது…” புலம்பத் தொடங்கி விட்டாள் லயா.  

“என்னமோ இவனுக்கும் சேர்த்தே சூடா கொடுக்கப் போறேன்னு சொன்ன? இப்போவே அலறிட்டு நிக்கிறியே லயாக்கா! எப்படி என் பையன்? சும்மா அதிர வைக்கிறானா!” சரண்யா இல்லாத காலரை தூக்கிக் கொள்ள,

“எனக்கென்ன… இங்கே குடுத்திட்டு, சேகர்கிட்ட நீதான் அடிக்க சொன்னேன்னு சொல்லிடுவேன், அவ்ளோதான்…”

“அடப்பாவி அக்கா… உன் தம்பிக்கிட்ட இடி வாங்கி கொடுக்கதான் நல்லநாள் பார்த்து வந்தியா? கொஞ்சமும் என்மேல பாசமில்ல…”

“யாருக்குடி பாசல்ல? எனக்கா… உனக்கா? சேகர் தம்பிகூட என்னோட பேசிட்டாரு… இந்த மகாராணிதான் உச்சாணி கொம்புல நின்னு தவம் பண்ணிட்டு இருக்கா…”

“நீ அன்னைக்கு பேசல… அதான் கோபம் தணிஞ்சு வரட்டும்னு நானும் சும்மா இருந்துட்டேன்”

“பொது இடத்துல உன்னை கடிச்சு, நான் கெட்டவன்னு பேர் வாங்கிக்கவா? பேச வைக்காதே! சரியான கோபத்துல இருக்கேன் உன்மேல…” பேச்சோடு பேச்சாக கமலாலயாவின்  கோபமும் ஏறிக் கொண்டிருந்தது.

“அச்சோ மை ஸ்வீட் அக்கா! உன் கோபம் போற வரைக்கும், ஆசைதீர, என்னை ரெண்டே ரெண்டு அடி அடிச்சுக்கோ!” அக்காவின் கைகளை எடுத்து, தன் கன்னத்தில் வைத்துக் கொண்ட சரண்யா,

“ஹேய் கிட்ஸ்! எல்லாரும் அந்த பக்கம் போயி விளையாடுங்க! உங்க பெரியம்மா என்னை அடிக்க போறாங்க! அதை யாரும் பாக்ககூடாது” என்றவாறே அவர்களை வீட்டிற்குள் அனுப்பி வைக்க,

“நானும் நைட் டிபன் ரெடி பண்ணிட்டு வர்றேன்! பேசிட்டு இருங்க…” லச்சுவும் அங்கிருந்து விலகிச் சென்றாள்.

நெடுநாட்களுக்கு பிறகு இருவர் மட்டுமே இருந்த தனிமையில் ஏதோதோ எண்ணங்கள் இருவரையும் சுற்றி வந்தன. எதையும் உடைத்து பேச வேண்டுமென்று தோன்றவில்லை. தெளிவாகப் பேசியே தீர்க்க வேண்டிய கட்டாயங்களும் இருவருக்குமே இல்லாமல் போனதில் சகஜமாகத்தான் பேச ஆரம்பித்தனர்.

“எப்படி இருக்க பட்டு?” வாஞ்சையாக சரண்யாவின் தலையை வருடி கமலாலயா கேட்க, சலுகையுடன் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் சரண்யா.

இந்த கனிவும் பிரத்யேக அழைப்பும், அம்மாவிற்கும் அக்காவிற்கும் மட்டுமே சொந்தமானது. பத்து வருடங்களாய் இவற்றையும் தொலைத்து விட்டதாக தவித்த இரவுகள் ஏராளம். இன்று அதையும் மீட்டுக் கொண்ட மகிழ்ச்சியில் சரண்யாவின் உள்ளம் அளவில்லா உற்சாகம் கொள்ள,

“நீயே சொல்லேன்க்கா… என்னை பார்த்த எப்படி தெரியுது?” வம்பிழுக்கவென்றே எதிர் கேள்வி கேட்டாள் சரண்யா.

“வாலு! நீ இன்னும் அப்படியேதான்டி இருக்க… சேகர் தம்பிதான் நீ அப்படி மாறிட்ட… இப்படி மாறிட்டன்னு பெருசா நினைச்சு, ஏமாந்தீட்டு இருக்கார் போல…” தங்கைக்கு குறையாமல் கேலி பேசிய லயா செல்லமாய் காதினை திருக,

“உன் தம்பி டைம்டேபிள் போட்டு, சிஸ்டமாட்டிக்கா பாமிலி ரன் பண்றவர். அவர்கிட்ட இப்டி இருந்தா திரும்பிகூட பார்க்க மாட்டாருக்கா!” பெருங்குறையாக கூறிவிட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் சரண்யா.

“அடிக்கழுத! உன்னை பொறுப்பா இருக்க சொல்றது தப்பா? நல்லதுக்கு காலமில்லடி…” என்று அடுத்தடுத்து பேச்சு வளர்த்துக் கொண்டேபோக, திடீரென்று பெரியவள் கைகளில், முகத்தை புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள் சரண்யா.

“என்னால கண்ட்ரோல் பண்ண முடியலக்கா… என்னால நீ நிறைய கஷ்டப்பட்டிருக்க… உன் சொந்த வீட்டை கூட விட்டுட்டு போற மாதிரி ஆகிடுச்சே! ஐ’யாம் சாரி…” வருத்தத்துடன் மன்னிப்பை வேண்ட,

“இப்ப எதுக்கு இந்த அழுகை பட்டுகுட்டி! உங்க கல்யாணம் பொறுமையா பெரியவங்க சம்மதத்துல நடந்திருந்தாலும் உன் கூடப்பொறந்தவங்க இந்த பேச்சை எல்லாம் பேசத்தான் செஞ்சிருப்பாங்க…

எனக்கு உங்க அவசர கல்யாணம் மட்டும்தான்டி நெருடலா இருந்தது. வாழ்க்கையில அடுத்த அடி எடுத்து வைக்கிறதுக்கு முன்னாடியே பெரிய பொறுப்புகளோட, போராடப் போறாங்களேன்னு உங்களை நினைச்சு கவலப்படாத நாளில்ல…

லச்சுவை பேச வைச்சுதான் உங்க நிலவரத்தை தெரிஞ்சுப்போம். அதையும் நீ கொஞ்சநாள் நிறுத்தி வைச்சே! அதுதான் மனசுக்கு ரொம்ப பாரமா போச்சு!” கடந்த காலத்தின் சுவடுகளை நினைவு கூர்ந்தாள் கமலாலயா.

“எங்க மேல உனக்கு கோபம் இல்லையாக்கா?”

“அது எப்படி சொல்றது? காதலிக்க தைரியம் இருக்கு. தனியா போய் வாழவும் மனசுல தெம்பிருக்கு. ஆனா பெத்தவங்ககிட்ட உங்களை புரிய வைக்கிற பொறுமைய மட்டும் அந்த சமயத்துல ஏன் கை விட்டுட்டீங்கன்னுதான் தெரியல…

ஒரு பொண்ணு வளர்ந்தா, வீட்டுல கல்யாணத்துக்கு பார்க்குறது சாதாரணம்தானே! அதையும் தப்பா பார்த்தா பெத்தவங்க என்னதான்டி பண்றது? நீ யாரையாவது விரும்புறியானு நேரடியா கேக்குற அளவுக்கு இன்னும் நம்ம குடும்ப அமைப்பு மாற்றம் அடையல…

அப்படி மாறிட்டா கொஞ்சநஞ்சம் ஒட்டிட்டு நிக்கிற கலாச்சாரமும் பண்பாடும் திசைமாறிப் போனாலும் போயிடும். ஒன்னும் சொல்றதுக்கில்ல…” என நீளமாய் பேசி தன் மனதை வெளிப்படுத்த, சரண்யா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

தந்தையின் பாசம் கிடைக்கவில்லை, தன்னை ஆதரிப்பவர் எவருமில்லை என புழுங்கித் தவித்தவளின் மனம், முதன்முதலாய் அனைவரிடத்திலும் உன் நிலையை, தெளிவாக நீ எடுத்துரைத்தாயா எனக் கேட்டது.

இதற்கு எப்படி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வது என்று புரியாத பாவனையில் கைகளை பிசைந்துகொண்டு அமர்ந்திருந்தவளின் தோற்றம் தமக்கைக்குமே பாவமாகப்பட்டது.

கடந்த காலங்கள் எல்லாம் ஆறாத ரணமாய் மட்டுமே மனதிற்குள் பதிந்து விடுமோ என கழிவிரக்கத்தில் பரிதவிக்க தொடங்கினாள் சரண்யா. தங்கையின் தவிப்பையும் கண்களின் சிவப்பையும் கண்ட கமலாலயாவிற்கும் ஐயோ என்றானது. 

இவளிடம் தன் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தி இருக்க கூடாதோ என்று உள்ளுக்குள் தன்னைதானே கடிந்து கொண்டவள், சிறியவளின் வருத்தத்தை காணச் சகிக்காது,

“இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி முகத்தை தொங்க போடுற… ஊரே மெச்சுறா மாதிரி நீங்க ரெண்டு பெரும் சந்த்சோமா இருக்கிறீங்கதானே! அதுபோதும்டி எனக்கு… நான் சொன்னதை ஓரமா ஒதுக்கி தள்ளிட்டு என்கூட புறப்படு…” கமலாலயா உத்தரவிட்டாள்.

“எங்கே போகணும்க்கா? அதுவும் இந்த நேரத்துக்கு போனா, திரும்ப லேட் நைட் ஆகிடும்… இன்னைக்கு வேண்டாம்” மாலை நேரம் ஏழை தாண்டியதை சுட்டிக் காட்டியே மறுத்தாள் சரண்யா.

“போயிட்டு திரும்பி வர்ற வேலையெல்லாம் இல்ல… ஊருக்கு போற வரைக்கும், நீ என்கூட தான் தங்குற! புறப்படு நம்ம வீட்டுக்கு…” என்றவளை சரண்யா விளங்காமல் பார்க்க,

“நீ ஊருக்கு வந்ததும் கூப்பிடாமா, இப்ப கூப்பிடுறேன்னு பாக்கறியா? இந்த ரெண்டுநாளா உனக்காக ரூம் அரேஞ்  பண்ண, ஏசி மாட்ட, சாமான் செட் பண்றதுக்கு லேட் ஆகிடுச்சு…. ரூம்ல பாத்ரூம் கட்டி, பிளம்பிங் வேலை முடியவே நாள் போயிடுச்சு… இல்லன்னா, ரெண்டுநாள் முன்னாடியே வந்து கூட்டிட்டு போயிருப்பேன். அங்கே வா! நிலத்தையும் நீ சுத்தி பார்க்கணும்… அங்கே இருக்குற பயிர், பச்சையெல்லாம் பார்த்தாலே மனசு லேசாகிடும்” லயா சொல்லிக் கொண்டே போக,

“சசி வந்ததும், வர்றேன்க்கா!” என இடைவெட்டினாள் சரண்யா.

“அதெல்லாம் தம்பி ஒண்ணும் சொல்ல மாட்டாரு! நான் ஃபோன் போட்டு கேட்கவா?”

“ஒண்ணும் சொல்ல மாட்டாருதான்! அதே போல அவரும் அங்கே வரமாட்டாரு” ஏகத்திற்கும் முகத்தை சுருக்கினாள் சரண்யா.

“இதென்னடி புதுசா இருக்கு? உன்னை போயிட்டு வரச் சொல்றவனுக்கு அங்கே வர்றதுல என்ன குறைபாடு வந்திடப்போகுது?” லயா விளங்காமல் கேட்க,

“அதெல்லாம் ஜெண்ட்ஸ் மெண்டாட்டிலிட்டிக்கா… இதுல எல்லாம் நாம தலை கொடுத்த எங்களைதான் கடிச்சு வைப்பாங்க… ரிஜிஸ்டிரேசன் அன்னைக்கே என்கூட வர்றதுக்கு அவ்வளவு பேசினவர், அங்கே வந்து தங்குறதுக்கு மட்டும் சரின்னு சொல்லிடுவாரா?” என்றவளை குழப்பத்துடன் பார்த்தபடி, சசிசேகரனை தன் அலைபேசியில் அழைத்து விட்டாள் கமலாலயா.

அந்த பக்கம் அவன் அழைப்பினை ஏற்றதும், தங்கள் வீட்டிற்கு வருமாறு லயா அழைக்க, மனைவி மகனை அழைத்து செல்லுமாறும், தான் பிறகு வந்து பார்த்துக் கொள்வதாகவும் கூறி அழைப்பினை முடித்து விட்டான்.

“என்ன? நான் சொன்னது நடந்துச்சா! சில விஷயத்துல இவரை மாத்த முடியாது… என்னைத் தவிர்த்து மத்த எல்லா இடத்துலயும் ஈகோ, முன்கோபம்ன்னு எல்லாத்தையும் புடிச்சிட்டு தொங்குவான்” சலிப்புடன் ஒருமை பன்மையில் முடித்தாள் சரண்யா.

“சரி நீ வரவேண்டியது தானேடி பட்டு!”

“அப்படி நான் வந்துட்டா, இவர் இங்கேயே தங்கிடுவார். அப்புறம் அங்கே வரவைக்க என்னாலயும் முடியாது. இன்னைக்கு வேணாம். சசி வரட்டும்… நானா அங்கே வர்றேன்!” சரண்யாவும் பேச்சினை முடித்துக் கொள்ள, லயாவின் ஆசை எல்லாம் தோல்வியில் முடிந்தது.

இந்த இரண்டு நாட்களாய் மகளின் குடும்பம் வந்து தங்குவதற்கென ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கி, அடுக்கி வைத்த சிவபூஷணத்தை நினைத்து பெருமூச்செறிந்தாள் கமலாலயா. அன்பின் மிகுதியோடு முதன்முறையாக அவர் செய்த செயல் இப்படியா தோல்வியில் முடிய வேண்டும் என ஆற்றாமையுடன் மனம் கவலை கொண்டது.

“பேரன் வந்தா விளையாட கொடுக்கன்னு, நிறையா கார், பொம்மை எல்லாம் வாங்கி வச்சுருக்காருடி நம்ம ஐயா… அத்தனை ஆசையா பொண்ணுக்காக அவர் ஏற்பாடு பண்ணினாரு! அதுக்காவாவது வாடி பட்டு!” கெஞ்சலாய் லயா கேட்க, சரண்யாவிற்கு தர்ம சங்கடமாகிப் போனது.

“புரிஞ்சுக்கோக்கா! அவர்கூட வந்தாதான் என்னாலயும் அங்கே ஃபிரீயா இருக்க முடியும்” என முடித்தவள்,

“அதுசரி இன்னும் என்ன, ஐயான்னு அப்பாவை கூப்பிட்டுட்டு இருக்க… அழகா அப்பான்னு கூப்பிட வேண்டியது தானே?” பேச்சை மாற்றினாள் சரண்யா.

“நான் விவரம் தெரிஞ்சதுல இருந்து அவரை அப்படி கூப்பிட்டே பழகிடுச்சு! என்னை அக்கானு கூப்பிட்டு, அவரை ஐயான்னு கூப்பிடுறது நல்லா இல்லன்னு உங்கம்மா கூட சொல்வாங்க! என்னால மாத்திக்க முடியல… வாத்தியாருக்கு மாரியாதை குடுக்கதான் ஆரம்பத்துல ஐயான்னு கூப்பிட ஆரம்பிச்சு, அப்பிடியே தொடர்ந்தாச்சு…” என விளக்கம் சொன்னபடி கிளம்பி விட்டாள்.  

கோதாவரியிடமும் லச்சுவிடமும் தன் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து, சசிசேகரன் வந்தால் அவனையும் குடும்பத்தோடு அனுப்பி வைக்குமாறும் கூறிவிட்டு கிளம்பி விட்டாள்.

இரவு அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, கணவனை அழைத்த சரண்யா, கமலாலயா அழைத்து சென்ற விவரத்தை கூற,

“நீ போயிட்டு வா சரண்! நான் இன்னும் ரெண்டுநாள் சென்னையில இருந்துட்டு வர்றேன்” என அவன் கூற,

“உன் ஃபிரண்ட்ஸ் பார்க்கத்தான் தமிழ்நாட்டுக்கு வந்தியா சசி?”

“எனக்கு அங்கே என்ன வேலை இருக்கு? நான் வந்து என்ன பண்ணப் போறேன்! நீ அங்கே போயி தங்குறதுல எனக்கு எந்த இஷ்யுவும் இல்லன்னு சொல்லிட்டேன்தானே… பின்ன என்னடி?” கடுப்புடன் முறுக்கிக் கொண்டான் சசிசேகரன்.

“ஆர்கியூமெண்ட் வேணாம் சசி! நீ இல்லாம நான் எங்கேயும் நகர்றதா இல்ல… சோ எல்லாமே உன் கையிலதான் இருக்கு” கோபத்துடன் பேச்சினை முடித்தாள் சரண்யா.

மறுநாள் சிவபூஷணம் வந்து அழைத்தும், அங்கே கணவனுடன் வருவதாக அவரை அனுப்பி விட்டாள்.

“சேகர்கிட்ட நான் சொல்றேன்ம்மா! என் வார்த்தைக்கு மறுப்பு சொல்ல மாட்டான்! நீ கிளம்பு…” மகளுக்கு அவர் எடுத்துச் சொல்ல,

“உங்க ஸ்டூடண்ட் மறுப்பு சொல்ல மாட்டார்தான். ஆனா, அங்கே வரவும் செய்யமாட்டார்! எதையாவது சாக்கு போக்கு சொல்லி மறுக்க பார்ப்பாரு! நான் அவர்கூடவே வர்றேன்ப்பா…” என்று சமாதானமாக சொல்ல, மனமில்லாமல் கிளம்பினார் சிவபூஷணம்.