சரணாலயம் – 19

சரணாலயம் – 19

சசிசேகரன் கணித்தது போலவே அடுத்தடுத்த நாட்களில், சரண்யாவிற்கு மசக்கை உபாதைகள் வெளிப்பட ஆரம்பித்தில், அனைவருக்கும் சந்தோசமும் உற்சாகமும் தொற்றிக் கொண்டது.

சொத்துக்களை பிரித்து விட்டு ஒய்வு பெற வேண்டுமென்ற முடிவில் இருந்த சிவபூஷணத்திற்கு, மகளின் பிரசவம் என்ற புதிய கடமை சேர்ந்து கொள்ள, முன்னைவிட சுறுசுறுப்பாய் இயங்க ஆரம்பித்தார்.

மகளின் பிரசவத்தை தன்னால் பொறுப்பெடுத்து செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் தானே, மனைவி சௌந்திரவல்லி தன்னிடம் எந்நேரமும் அழுது மாய்ந்தது. அந்த ஆற்றாமையே அவரின் உடல் பின்னடைவிற்கும் முக்கிய காரணமாகிப் போனது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மனைவியின் ஆசை மனதில் அழியாத கல்வெட்டாய் பதிந்திருக்க, மகளின் கர்ப்பகாலத்தின் தேவைகள் யாவையும் தானே செய்திட முன்வந்தார் சிவபூஷணம். மருந்து, உணவு என்றெல்லாம் அவர் பார்த்துச் செய்ய, கமலாலயா அருகில் இருந்து தாங்கிக் கொண்டாள். இருவரும் சேர்ந்து மசக்கைகாரியை அத்தனை எளிதில் மும்பைக்கு அனுப்பி வைக்க அனுமதிக்கவில்லை.

இடையினில் ஒருநாள், மகளை அழைத்துக் கொண்டு தனது வீட்டிக்கு சென்றார் சிவபூஷணம். ஊர் பெரியவர்களை சாட்சியாக வைத்துக் கொண்டு, தனக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் என அனைத்தையும் தன் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க முன்வந்திருந்தார்.

மகன்கள், மருமகள்களையும் அருகில் வைத்துக் கொண்டவர், பஞ்சாயத்தாரின் முன்னிலையில் பாகப்பிரிவினையை ஆரம்பித்தார்.

பரம்பரை நகைகளாக இருந்த சிலவற்றை, இரண்டு மருமகள்களுக்கும் பிரித்துக் கொடுத்தவர், மனைவியின் நகைகள் முழுவதையும் மகளுக்கே கொடுத்து விட்டார். இதில் சரண்யாவின் திருமணத்திற்கென சேர்த்து வைத்திருந்த நகைகளும் சீர்வரிசைகளும் அடங்கும்.

“உங்க விருப்பபடி இந்த வீட்டுப் பொண்ணுக்கு, அவ அப்பாவான என்னோட சொத்து எதையும் நான் கொடுக்கல… அவ எழுதிக் கொடுத்தது அப்படியே இருக்கட்டும்ன்னு சொல்லி என்னோட சொத்துக்களை மறுத்திட்டா… அம்மாவோட நகைகள் பொண்ணுக்கு சேரணும்னு என் மனைவி ஆசைபட்டத மட்டுமே, இப்ப நான் நிறைவேற்றி இருக்கேன்…” என ஊராரின் முன்னிலையில் மகன்களுக்கு விளக்கமளித்தார்.

“இதுவரைக்கும் என் சொத்துக்களுக்கான நிர்வாகம் மட்டுமே என் மகன்களோட வசம் இருந்தது. இனியும் அப்படியேதான் இருக்கும். எதிர்காலத்துல சொத்துக்களை இரண்டாக பிரித்து, அதோட பாத்தியத்தை இவங்க எடுத்துக்கலாம். என் பேரன் அல்லது பேத்திகளோட இருபத்தியைந்து வயது முடியுற வரை, என்னோட சொத்துக்களை விற்கவோ அடமானம் வைக்கவோ இவர்களுக்கு உரிமையில்லை” என நிபந்தனைகளை ஊராரின் முன்பு சொன்னதும் அனைவரும் துணுக்குற்றனர்.

“என்னுடைய அம்மா சொத்து, என் பொண்ணுக்கு வந்து சேர்ந்த மாதிரி, என் சொத்து என் பேரப் பிள்ளைகளுக்கு போய் சேரணும்னு ஆசைப்படுறேன்! இதுல மகள் வயிற்று குழந்தைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது!” என அடுத்தடுத்த தீர்மானங்களை சபையில் எடுத்துக் கூறவும், அவரின் மைந்தர்கள் பொங்கியெழுந்து விட்டனர்.

“நீங்க, எங்களை ஏமாத்திட்டீங்கப்பா… எங்க பேர்ல சொத்தை மாத்தி எழுதிக் கொடுக்கறதா, நீங்க ஒத்துகிட்டதாலதான் அன்னைக்கு சரணி பேர்ல பாட்டி சொத்தை பதியும்போதும், அந்த தத்தெடுப்பு விஷயத்துக்கும் இடையில வராம அமைதியா இருந்தோம். ஆனா இப்ப, அனுபவிக்கலாம் விற்க கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என வெற்றிவேல் வெகுண்டு கேட்க,

“இப்பவும் உங்களுக்கு தானே கொடுக்குறதா சொல்லியிருக்கேன்! உனக்கு முழு உரிமை கொடுத்திட்டா… நீ ஊர்ஊரா போயி சொத்தை வித்துட்டு, சுகம் கண்டுட்டு வருவ… அதையெல்லாம் என்னை வேடிக்கை பார்க்க சொல்றியா?” நா கூசாமல் கேட்டு விட்டார் சிவபூஷணம்.

ஒரு ஆசிரியராக எதையும் நாசூக்காக மட்டுமே பிறருக்கு எடுத்துச் சொல்பவர், இன்று அனைவரின் முன்னிலையும் மகனின் போக்கினை போட்டு உடைத்ததில், வெற்றிவேலுக்கு பெரும் தலைகுனிவாகிப் போனது.

‘இந்த அவமானங்கள் எல்லாம் தேவையா உனக்கு? இத்தனை பேச்சிற்கு பிறகும் உன்னை நம்பி நான் வாழவந்தால் அது எனக்குதான் அசிங்கம்’ என்று அவனது மனைவி முறைத்த பார்வையில் மேலும் ஒடுங்கிப் போனான் வெற்றிவேல்.

“ஆகமொத்தம் உங்க பொண்ணுக்கு எதையும் குறைவில்லாம கொடுத்து கணக்கை நேர் பண்ணிட்டு, எங்களை கைகழுவிட்டீங்க!” சக்திவேலும் தன் பங்கிற்கு பேசவர,

“உங்களுக்காக தனித்தனியா பிரிக்க இருக்குற சொத்துல, அரை பங்குகூட அவளுக்கு வந்து சேர்ந்திருக்காது சக்தி… உன் பொண்டாட்டியும் சொத்து சுகம் அனுபவிக்கிற பொண்ணுதானே? இங்கே யாருக்கு அநியாயம் நடந்திருக்குன்னு உன் மாமனார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ!” என சொல்லிக் காட்டவும் அவனும் அடங்கி விட்டான்.

சகோதரர்களுக்கு பணம் நகையெல்லாம் ஒரு பொருட்டு அல்ல… உடன் பிறந்தவளின் முன், தங்களின் தலைதாழ்ந்து விடக்கூடாது என்பதே அவர்களின் ஆசை. அந்த மட்டிலும் அவர்களின் ஆசை நிறைவேறியதா என்று கேட்டால் இல்லையென்றே சொல்வார்கள்.

தங்கை என்பவள் முடிந்து போன அத்தியாயமென்று இவர்கள் நினைத்திருக்க, அது தொடர்கதையாக மீண்டும் துவங்கியதில் இவர்களுக்குதான் ஆயாசம் மேலிட்டது.

பாட்டியின் சொத்தை தங்கள் வசமாக்கிக் கொள்ள, மீண்டும் தங்கையை அழைத்து, அதையும் எழுதி வாங்கிக் கொள்ளலாமென நினைத்துதான் வெற்றிவேல், சரண்யாவை அழைத்தது!

ஆனால் இவனது ஊர் மேய்ச்சல், அவளின் வரவினை மறக்கடிக்க செய்திருக்க, இவர்களின் எண்ணம் தலைகீழாகி அனைத்தும் கையை விட்டுப் போயிருந்தது. இவர்கள் அசந்த நேரத்தில் வேலாயுதம், சரண்யாவை தன் வீட்டிற்கு அழைத்துவர, இதுதான் தக்க சமயமென்று சிவபூஷணமும் தனது கடைமைகளை முடித்து திருப்திபட்டு விட்டார்.

தனது சொத்து பிரிவினைகளை எல்லாம் தெளிவாக கூறி முடித்த சிவபூஷணம், மீண்டும் புதிதாக மற்றுமொரு பத்திரத்தை கையில் எடுத்தார்.

“இந்த வீட்டுக்கு பின்னாடி இருக்குற ராமசாமி வாழ்ந்த வீடு, அவருக்கே சேரணும்னு எங்கம்மா அகிலாண்டம் எழுதி வைத்த உயில் இது! அவரோட அப்பா காலத்துல இருந்து எங்க வீட்டுக்கு விசுவாசமா இருந்ததுக்கு நாங்க கொடுக்குற சின்ன அன்பளிப்பு…

அந்த வீட்டை தனியா பிரிக்க முடியாததால, அதுக்கு ஈடான நிலத்தை ராமசாமி உயிரோட இல்லாத காரணத்தினால் அவர் பிள்ளைகள் சசிசேகரன், துளசி இவங்க ரெண்டு பேருக்கு மாத்தி எழுதியிருக்கேன்!

எந்த காரணத்தை முன்னிட்டும், என் மகன்களுக்கும் இவங்க குடும்பத்துக்கும் எந்த இடத்துலயும் சண்டை, சச்சரவு வரக்கூடாதுங்கிற உறுதியில எடுத்த முடிவு இது. என் மனைவி சௌந்திரவல்லி இருந்த காலத்திலேயே இந்த பத்திரத்தை மாற்றி எழுதி பதிவு பண்ணி வைச்சாச்சு!” என அந்த பத்திரத்தை சபையின் முன்னர் கொடுக்க,

“எங்க குடும்பத்த தாங்கி, எங்களுக்கு பாதுகாப்பும் படிப்பும் தந்ததே போதும்ங்கய்யா… இந்த சொத்து கொடுத்து என்னை கடனாளி ஆக்கிடாதீங்க…” எனச் சொல்லி, பத்திரத்தை வாங்க மறுத்துவிட்டான் சசிசேகரன்.

“நீ, என் பொண்ணை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தாலும் இந்த சொத்து உன்னை வந்து சேர்ந்திருக்கும் சேகரா… இது எங்கம்மா எழுதி வைத்த உயில்… யார் நினைச்சாலும் மாத்த முடியாது” சிவபூஷணம் வலியுறுத்த, ஊர் பஞ்சாயத்தாரின் அறிவுறுத்தலில் வாங்கிக் கொண்டான்.

நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு சிவபூஷணம் மகளை அழைக்க, அவளும் வேண்டாமென்ற பல்லவியை பாடினாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் வேற எதுவும் பேசத் தெரியாதா? எதையும் கொடுத்தா சந்தோஷமா வாங்கிக்க பழகிக்கோ!” பழைய சிவபூஷணமாக மாறி மகளை கடிந்து கொண்டார்.

“எங்கப்பா சிரிச்ச முகமா இருக்காருன்னு சந்தோசபட்ட என் நினைப்புக்கு ஆயுசு ரொம்ப கம்மி லச்சுக்கா…” நகைகளை வாங்கி கொண்ட பிறகு, சபையில் ஓரமாய் நின்று லட்சுமியிடம் சரண்யா முணுமுணுக்க,

‘அடங்கமாட்டியாடி நீ?’ என்ற எரிக்கும் பார்வையால் லட்சுமியும் கமலாலயா ஒன்று சேர்ந்து அவளை முறைத்திட,

“உன் பொண்டாட்டியை இத்தனை பேரு முறைச்சு பார்த்தே பயமுறுத்துறாங்களே! முன்னாடி வந்து என்ன எதுன்னு கேக்க மாட்டியா சசி?” விடாது வம்பு வளர்த்து கணவனைச் சீண்டினாள் சரண்யா.

“ஹஸ்பண்ட் அண்ட் வொஃய்ப் எல்லாம் மும்பையிலதான்… இங்கே வந்த பிறகு நீ, நீதான்… நான், நான்தான்! அப்படி இருக்க பழகிக்கோ சரண்குட்டி… இங்கே உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினா, என்னையும் உன்கூட அராத்து லிஸ்டுல சேர்த்திடுவாங்கடி… இங்கேயாவது கொஞ்சம் நல்லவனா வேஷம் போடுறேன் தள்ளி நில்லு கொஞ்சம்…” சசிசேகரன் மொத்தமாய் வாரி விட,

“எல்லாரும் ஒண்ணு கூடிட்டாங்கய்யா… அப்போ நான் யாரோ தானா சசி?” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

“ஏன் சேகர், இந்த குட்டி சாத்தான இன்னுமா நீ கட்டிப்போடல? இவ வாய மூடலன்னா, அந்த வேலைய நான் செய்றதா இருக்கேன்… எப்படி வசதி பட்டு?” என கமலாலயா மிரட்டிய பிறகு அங்கே மீண்டும் சத்தம் வருமா என்ன?

பேரனின் பள்ளிப்பருவமும் சசிசேகரனின் பணிநிமித்தமும் பெரும் பாதிப்படையும் என்பதை கருத்தில் கொண்டு, அரைமனதுடன் மகள், மும்பைக்கு செல்ல சம்மதித்தார் சிவபூஷணம்.

இருபது நாட்கள் விடுப்பு முப்பது நாட்களாக நீண்டு, ஒருவழியாக கிராமத்து பயணத்தை முடித்து, மும்பைக்கு வந்தடைந்தது சசிசேகரனின் குடும்பம்.

நாளொன்றுக்கு மூன்றுமுறை வீடியோகாலில் பேச்சு வார்த்தைகள் நடந்திட, சரண்யாவின் கர்ப்பகாலமும் சோட்டுவின் பள்ளிக்காலமும் வெகு இயல்பாக நகரத் தொடங்கியது. இடையில் ஒருமாதம் சிவபூஷணம், மகள் வீட்டிற்கு வந்து தங்கிச் சென்றார்.

வேலாயுதம், லட்சுமி குடும்பம் மற்றும் கமலாலயா என அனைவரும் நான்கு நாட்கள் மும்பைக்கு வந்து தங்கிச் சென்றனர். ஏழாம் மாதம் முடிவில் சரண்யாவை ஊருக்கு அழைத்து வந்து, வளைக்காப்பு நடத்தினார் சிவபூஷணம்.

புதிய பொறுப்புக்கள், புதிய பணிச்சுமைகள் என ஒவ்வொரு நாளும் அவருக்கு கடமைகள் கூடிக் கொண்டே போனது. பள்ளி இறுதியாண்டு முடிவதற்கு முன்பே சரண்யாவின் பிரசவ மாதம் வந்து விட்டிருக்க, மகனை முன் கூட்டியே தேர்வெழுத வைத்து, பிரசவத்திற்கென கிராமத்திற்கு வந்து சேர்ந்தாள் சரண்யா.

லட்சுமியின் தாய் கோதாவரியின் மேற்பார்வையில், கமலாலயாவின் பத்திய சமையலில் சரண்யாவின் பிரசவகாலம் வெகுஜோராக மகிழ்ச்சியுடன் கழிந்தது.

அனைவரின் அன்பிலும் முக்குளித்தவளுக்கு, அனைத்தும் சுமூகமாகவே நடக்க, சரண்யாவின் பெண்மகவு சுபயோக சுபதினத்தில் பிறந்தாள்.

தனது சோட்டு அண்ணனை, பெரியவனாக்கி விட்ட பொறுப்பை தயங்காது செய்தவளுக்கு அந்த அண்ணனே ‘சுபமான்யா’ எனப் பெயரிட, அனைவருக்கும் சுபிக்குட்டி மானுக்குட்டி என்றாகிப் போனாள்.

(இங்கிருந்து நமது கற்பனை திறனை இன்னும் அதிகமாய் விரித்துக் கொள்வோம்…)

சரண்யாவின் பெண் பிள்ளை பிறந்த மூன்று மாதங்கள் கழித்து, இவர்களின் பரந்து விரிந்த தோட்டக் காடுகளின் முன்னால், ஊரையே அழைத்து பெரியவிழா ஒன்று நடந்து கொண்டிருந்தது.

சரணாலயம் ஒருங்கிணைந்த பண்ணைக்காடுகள் என பெயரிடப்பட்ட பெரிய பெயர்ப்பலகை கம்பீரமாய் ஓங்கி நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.

அந்த பெயருக்கு கீழே அகிலாம்பிகை அறக்கட்டளையால் நிறுவப்பட்டது என்ற அடைமொழியும், அது பதிவு செய்யப்பட்ட வருடமும், பதிவு எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இன்றைய தினம், சரணாலயம் பல்நோக்கு தொண்டு நிறுவனம் தனது முதல் அடியை உலகிற்கு எடுத்து வைத்ததை விழாவாக கொண்டாடி, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வைபவம் நடந்தேறி வருகிறது.

பண்ணைக்காடுகளின் உள்ளே நுழையும் முன்னே கிட்டதட்ட இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் சரணாலயம் துவக்கபள்ளியின் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தது.

ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியும், தமிழ்வழிக் கல்வியும் போதிக்க ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. வருடாந்திர பள்ளிக் கட்டணமாக பாட புத்தகத்திற்கும் பள்ளிச் சீருடைக்கும் மட்டுமே வசூலிக்கபட்டு வருகின்றது.

அதனை ஒட்டி அமைந்திருந்த விஸ்தாரமான கட்டிடத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் செய்யபட்டிருந்தன.

கண்நோய், இதயநோய், சர்க்கரைநோய், பெண் மகப்பேறு மருத்துவம் என வாரத்திற்கு ஒன்றாக மருத்துவ முகாம் நடத்த அனுமதி பெறப்பட்டு அதற்குறிய ஆவணங்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தன.

பள்ளி நிர்வாகமும். மருத்துவமுகாம் நிர்வாகமும் சரணாலயம் சேவை அமைப்பினர் தங்கள் சொந்த முயற்சியில் நடத்துவதற்கான உரிமத்தை பெற்றிருந்தனர். நிர்வாகிகளாக சிவபூஷணமும் வேலாயுதமும் நியமிக்கபட்டு, அவர்களின் கீழுள்ள பணி நியமனங்களுக்கு கமலாலயாவும் லட்சுமியும், மற்றும் பல அனுபவஸ்தர்களும் பொறுப்பெடுத்து கொண்டிருந்தார்கள்.

பள்ளி மற்றும் பூங்காவினை கடந்து வந்தால் மழலைகள் விளையாடும் சிறுவர் பூங்கா, ராட்டினம் ஊஞ்சல் என அனைத்து அம்சங்களுடன் ரசனையாக உருவாக்கப் பட்டிருந்தது.

இங்கே நுழைவு கட்டணம் இலவசம். ஆனால் விளையாடுவதற்கென மிகச் சிறிய தொகை நிர்ணயம் செய்யபட்டிருந்தது. இதன் நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கபட்டிருந்தது.

சிறுவர் பூங்காவினை தாண்டியவுடன் அனைத்து வகையான மரக்கன்றுகளின் விற்பனை நிலையமும், அதனை ஒட்டி வளர்ப்பு பிராணிகளின் விற்பனையகமும் செயல்பட ஆரம்பித்திருந்தன.

மீன்குஞ்சுகள், முயல், லவ்பேர்ட்ஸ், நாய், பூனைக் குட்டிகள் என அனைத்து வளர்ப்பு பிராணிகளும் மிக குறைந்த தொகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த பிராணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தொட்டிகள், கூண்டுகள் என பிற பொருட்களும் இங்கே கிடைக்கும் வண்ணம் விற்பனை தொடங்கப்பட்டு இருந்தது. இதன் நிர்வாகமும் பராமரிப்பும் கூட தனியார் வசம் ஒப்படைக்கபட்டு இடத்திற்கு வாடகை மட்டும் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்த தீவிர முயற்சிகளின் பலன், இன்று அனைவரின் கண்களுக்கும் விருந்தாக, கவர்ந்திழுத்துக் கொண்டிருகின்றது.

வேளாண் கல்லூரியின் குத்தகை காலம் நீட்டிக்கபட்டு எப்பொழுதும் போல் நிலங்களில் விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது.

சரணாலயம் ஒருங்கிணைந்த பண்ணைகாடுகளின் மூலமாக வரும் வருமானம், அகிலாம்பிகை அறக்கட்டையில் சேர்ப்பிக்கபட்டு, அந்தத் தொகையின் மூலமே சரணாலயம் பல்நோக்கு தொண்டு நிறுவனம் நடத்தபட வழிவகைகள் செய்யப்பட்டிருந்தன.

(பள்ளி, மருத்துவ முகாம் தவிர்த்து மற்றவைகள் இணைந்த இடத்தை நேரில் சென்று பார்த்ததால், கற்பனை கலந்து எழுதியது)

சரண்யாவின் பெயரிலுள்ள நிலப்பத்திரங்கள் கைக்கு வந்த பொழுதே, சசிசேகரனும் சரண்யாவும் இணைந்து இந்த திட்டங்களை தயாரித்திருக்க, கமலாலயாவும் அவர்களின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தாள்.

எப்படியும் தனது காலத்திற்கு பிறகு சொத்துக்களை பிரித்து ஒரு பகுதியை அறக்கட்டளைக்கென ஒதுக்க நினைத்திருந்தவள், தனது எண்ணத்தை வெளிப்படுத்த, சரண்யாவும், தனக்கு உரிமையான பகுதியையும் அதனுடன் இணைக்க தானாகவே முன்வந்து விட்டாள்.

சசிசேகரன் தனக்கு வந்த சிறிதளவு நிலத்தின் வருமானத்தை தர்மகாரியங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டுமென முடிவெடுத்திருக்க, அவனது பங்கினையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.  சட்ட ஆலோசனைகளை பின்பற்றிய பின்னர், அனைவரின் ஏகோபித்த ஆதரவில் அகிலாம்பிகை அறக்கட்டளை ஆராவாரத்துடன் உருவானது.

வருங்காலத்தில் இந்த அறக்கட்டளையில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படும் முக்கியஸ்தர்களும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிரம்பவே இருக்கின்றன.

ஊரே திரண்டு கலந்து கொண்ட இந்தப் பெருவிழாவில் சசிசேகரனின் தங்கை துளசி, தன் கணவன், மகளுடன் வந்திருந்தாள். மருமகளைப் பார்க்க வெகு வருடத்திற்கு பிறகு கிராமத்திற்கு வந்தவளுக்கு, இங்கு நடப்பதை பார்த்ததில் அடைந்த ஆனந்த அதிர்ச்சிக்கு அளவில்லை. சசிசேகரனின் நண்பன் கௌஷிக் தன் குடும்பத்துடன் வருகை புரிந்திருக்க, குழந்தைகளின் கொண்டாட்டம் வரையறையற்று நீண்டது.

சக்திவேலின் மனைவியும் தனது ஆறுமாத குழந்தையுடன் அந்தவிழாக் கூட்டத்தில் அமர்ந்திருந்தாள். வாரம் ஒருமுறை பேத்தியை தன்னிடம் காட்டிவிட்டு செல்ல வேண்டுமென்று சிவபூஷணம் அன்புக் கட்டளையிட்டிருக்க, அந்த பழக்கத்தில் உறவுமுறை சகஜமாகத் தொடங்கி இருந்தது. மகன்கள், மருமகள்களின் விசாரிப்புகள் சிவபூஷணத்தோடு நின்று விடும்.

அண்ணன் தங்கை உறவு மேம்படுவதற்கான முயற்சிகளை இரண்டு தரப்பும் மேற்கொள்ளவில்லை. வெறுப்புகளும், அதனால் ஏற்பட்ட வலிகளும் வேதனைகளும் அத்தனை எளிதில் மறக்கவோ மன்னிக்கவோ யாராலும் முடிவதில்லை.

இனிவரும் காலங்களில் இவர்களின் உறவு சாத்தியபடுமா என்பதை காலத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடலாம்.

நிறைவானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கர்வமும் பெருமிதமும் முகத்தில் மிளிர, அனைவரையும் தன் கண்பார்வையில் சுழல வைத்துக் கொண்டிருந்தார் சிவபூஷணம்.

என்றும் ஆசிரியரின் சொல்லினை தட்டாத மாணவனாக சசிசேகரன் பொறுப்புகளை கையிலெடுத்து செய்து கொண்டிருந்தான். அவனது மனம் வெளிவேலைகளை கவனித்தாலும், நொடிக்கொருமுறை அவனது பார்வை தனது குட்டி இளவரசியை தழுவிக் கொண்டிருந்தது.

வேப்பமரமும் பன்னீர்மரமும் இணைந்த நிழலில். மகன் தனக்கு குடைபிடித்துக் கொண்டிருக்க, மகளை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள் சரண்யா.

“வெயில் போயிடுச்சு சோட்டு! போதும் குடையை மடக்கு” என தித்லி சொல்ல,

“டோன்ட் கால்மீ சோட்டு… ஐ’யாம் பிகம் எ எல்டர் பிரதர் யூ நோ? கால் மீ சிவு ஆர் தர்ஷூ…” சோட்டு, ஆங்கிலத்தில் மழையாகப் பொழிய,

“அடேய் குட்டிகண்ணா! என்ன சொல்லியிருக்கேன் உனக்கு? இங்கே வந்து இங்கிலீஷ் இல்ல ஹிந்தியில பேசினா, தமிழ்ல திருக்குறள் எழுதனும்னு சொன்னேனா இல்லையா?” கண்களை உருட்டிக் கொண்டு கமலாலயா மிரட்ட,

“ஐ’யாம் சாரி… ச்சே… என்னை மன்னிச்சு லயாம்மா! சுபிகுட்டிய பார்த்துட்டே இருந்ததுல மறந்திட்டேன்…” என தெளிவான உச்சரிப்புடன் தமிழ் பேசினான் சிவதர்ஷன்.

சிவபூஷணம் தனது கற்பித்தலை மீண்டும் ஆரம்பித்திருக்க, தமிழ் பாடங்களை மட்டும் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கியிருந்தார். சோட்டுவை தாத்தாவின் தமிழ் வகுப்பில் அமர வைப்பதற்குள் அனைவருக்கும் ஆட்டம் காட்டி விடுவான் சேட்டைக்காரன்.

இவனை பின்பற்றியே இவனது சகாக்களும் குறும்புகளை தொடர ஆரம்பிக்க, கமலாலயா இவனது பொறுப்பினை எடுத்துக் கொண்டு, தமிழை பயிற்றுவிக்க தொடங்கினாள்.

“உங்கம்மாவ இழுத்து பிடிச்சு உக்கார வைச்ச எனக்கே தண்ணி காட்டுறியாடா! நீயா நானான்னு பார்த்துருவோம்” என மிரட்டல்களையும் கண்டிப்புகளையும் லயா கையில் எடுத்துக் கொள்ள,

சிலநேரம் பெரியம்மாவின் பேச்சினை கேட்பவன் பல நேரம் கொஞ்சியும் மிஞ்சியும் தனது காரியத்தை சாதித்துக் கொள்வான்.

சந்தோஷ அலுப்பும் சலிப்பும் ஒன்று சேர்ந்து கொள்ள, கமலாலயாவின் ஒவ்வொரு விடியலும் மகிழ்வானதாகவும் சுவாரஸ்யமாகவும் தொடர்ந்தன.

தனது சொத்தின் ஒரு பகுதியை அறக்கட்டளைக்கு ஒதுக்கியவள், மீதமுள்ள சொத்துக்களை தனது தம்பி தங்கைகளுக்கென்று பகிரங்கமாக அறிவித்து விட்டாள். இவளுக்கு இத்தனை உறவுகளாக என அனைவரும் கேள்வியுடன் நோக்க,

“எனக்கு புகழிடம் தந்து ஆதரவளித்தவர்களின் வாரிசுகள்தான் என்னுடைய தம்பி தங்கைகள்…” என விளக்கம் கூறியவள், தனது சொத்துக்களை முறையே லட்சுமி, சசிசேகரன், துளசி, சரண்யா, வெற்றிவேல், சக்திவேல் என அனைவருக்கும் சமபங்காக பிரித்துக் கொடுக்கப் போவதாக அறிவித்து விட்டாள்.     

‘உன்னை வெறுத்து ஒதுக்கிய அந்த சகோதர்களுக்கும் சொத்து கொடுக்கப் போகிறாயா?’ என ஊரார் கேட்டால்,

“அது அவர்களின் சுபாவம்… இது எனது சுபாவம்!” என பேச்சினை முடித்துக் கொண்டு தனது கடமையை செய்யச் சென்று விடுவாள் கமலாலயா.

தனக்கு புகழிடம் அளித்தவர்களின் இல்லம் எல்லாம் கமலாலயாவிற்கு சரணாலயமே… நட்புறவில் உறுதிபட்டு, சொந்த உறவாக பாசத்துடன் தன்னை ஏற்றுக் கொண்ட அன்புடையவர்களின் உள்ளமெல்லாம் அவளுக்கு சரணாலயமே…

தன்னை நாடி வருபவர்களுக்கும் அதே ஆதரவை அளித்து, வாழ வைப்பதில் இவளின் வாழ்விடமும் பிறருக்கு சரணாலயம்.

வசதியற்ற, குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் குடும்பத்திற்கும் வாழ்வாதாரம் அளித்து புகழிடமாக விளங்கியது சரணாலயம் பல்நோக்கு தொண்டு நிறுவனம்.

ஆதரவற்றோர், ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேலைகொடுக்கும் புகழிடமானது சரணாலயம்.  

வாயில்லா ஜீவன்களுக்கும், சொந்தக் கூடு இல்லாமல் எங்கெங்கோ தவிக்கும் பறவைகளுக்கும் புகழிடமானது இந்த சரணாலயம்.

சரணாலயம் என்பது ஒரு உயிர்க்கு பாதுகாப்பு அளித்து, வளர்ச்சிக்கு உதவுது மட்டுமல்ல… பேரன்புடன் மனதிற்குள்ளும் புகழிடம் கொடுக்கும் அனைத்து உள்ளங்களும் என்றென்றும் சரணாலயமே!!!

சுபம்