சரணாலயம் – 2

சரணாலயம் – 2

காலையில் ஆரம்பித்த இடியும் மின்னலும் இன்னமும் குறையவில்லை. உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்ததில் உடலில் வலி ஏறிக்கொண்டதை நன்றாகவே உணர்ந்தாள் சரண்யா.

படுத்தவுடன் உறங்கிப் பழகிய உடல்தான், இன்று ஏனோ அசௌகரியத்தை உணர்த்தியது. தலையணைக்கு அடியில் இருந்த அலைபேசியில் நேரத்தை பார்த்ததில் இரவு மணி ஒன்றை காட்டியது.

இத்தனை நேரமா உறக்கம் வராமல் தவிக்கிறோம் என அறிவு இடித்துரைத்தாலும் மனம் உறங்க மறுத்தது. மனதில் நெருடிய வலி உடல் வலியை மறக்கடிக்க செய்ய, எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அருகில் கணவனும் மகனும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு உணவு முடிந்த பிறகும் வீட்டை இரண்டாக்கி விட்டுதான் உறங்க முயன்றனர் இருவரும். மகனின் தேடல்களுக்கும் கேள்விகளுக்கும் அசராமல் பதில் சொல்வதில் என்றைக்கும் சசிசேகரன் அலுத்துக் கொண்டதில்லை.  

அன்பும் அறிவுமாய் ஒவ்வொன்றையும் மகனுக்கு, தெளிவுபடுத்தும் தந்தையாக கணவனைக் காண்பதில் எப்பொழுதும் சரண்யாவிற்கு பெருமைதான்.

எவ்வளவு நேரம்தான் படுத்தே கிடப்பது என மனம் சலித்துக் கொண்டது. குளிரை தாங்கிக் கொண்ட கம்பளியை அகற்றி விட்டு, அறையின் ஜன்னல் ஓரத்திற்கு சென்று மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் சரண்யா.

மழைநீர் சிதறலில் தோன்றிய பனியால், ஜன்னல் கண்ணாடியின் உள்பகுதி முழுவதும் புகை மூட்டம் படர்ந்திருந்தது. அந்த மெல்லிய நீர்த்திவலைகளில் மனம் லயித்து கைகளால் கோடு கிழித்தாள். குறுக்கும் நெடுக்குமாக அலைபாய்ந்த விரல்களால் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் ரசிக்கும் மழையைகூட இப்பொழுது  விரும்பாமல், கடந்த காலத்தை எண்ணியே சரண்யாவின் நினைவுகள் பயணப்பட்டு கொண்டிருந்தன.

இன்று மாலையில் வந்த லச்சு அக்காவின் அலைபேசி அழைப்பு, இவளின் இன்றைய தூக்கத்தை புசித்து, ரசனைக்கும் தடை செய்திருந்தது.

லட்சுமி அக்கா உடன்பிறந்த பிறப்பல்ல… சரண்யாவின் ஊரில், இருவரும் பக்கத்து வீட்டு குடித்தனக்காரர்கள். இவர்களின் தந்தைகள் நட்பிலும், உத்தியோகத்திலும் இணைந்திருக்க, இருவரின் குடும்பங்களும் நெருங்கிய நட்புடன் உறவாடியது. மூன்று வருடம் பெரியவளான லட்சுமியிடம் தமக்கை பாசத்தை மிஞ்சிய தோழமை இவளுக்கு உண்டு.

“ஒரு தகவல் சொல்லணும் சரணி!” அலைபேசியில் பூடகமாய் ஆரம்பித்த அக்காவின் பேச்சினை மீண்டும் அசைபோட ஆரம்பித்தாள் சரண்யா.

“நீ டைம் மாத்தி கூப்பிடும் போதே நினைச்சேன்… என்னக்கா சொல்லணும்? நீ சொல்றத கேட்க ரெடியா இருக்கேன்…” உற்சாக குரலில் தங்கை கூற,

சற்று நேரம் அமைதியான லச்சு, “அது வந்து சரணீ!” தயக்கத்துடன் இழுத்தாள்.

“என்னக்கா… புதுசா எதையாவது சொல்லப் போறியா என்ன? அண்ணனுங்க ஏதாவது சொன்னங்காளா?” அடுக்கடுக்காய் தங்கை கேட்டு முடிப்பதற்குள்,

“இல்லடி இது வேற?” எனக் கூறி, சற்று இடைவெளி விட்ட அக்கா,

“உங்க அப்பா…” வெளிவராத குரலில் நிறுத்தினாள்.

அக்காவின் குரல் உள்சென்றதை கண்டு, சரண்யாவின் மனதிற்குள் பயத்துடன் கூடிய பதற்றம் வேர்விட ஆரம்பித்தது. 

அப்பா… இவளின் தந்தை… இன்றளவும் தன்னை ஒதுக்கியும், அவராக ஒதுங்கியும் வெற்றிடமாகிப் போன உறவு. விவரம் தெரிந்த நாள்முதலாய் தன்னிடம் முறைப்பையும் கண்டிப்பையும் மட்டுமே காட்டி, திருமணத்திற்கு பிறகு மொத்தமாக தன்னை முழுதாய் வெறுத்த உறவு.

இவளும் பெரிதாய் அவரின் மீது பற்றும் பாசமும் வைத்ததில்லை. ஆனாலும் பெற்றவரை பற்றிய செய்தி என்கிற பொழுது தன்னையுமறியாமல் உடல் முழுவதும் படபடத்து கொண்டது.

“என்னாச்சு லச்சுக்கா? அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா?” நடுங்கிய குரலில் இவள் கேட்க,

“இல்லடி… கமலாவ, உங்கப்பா தன்னோட தங்க வச்சிருக்காரு…”

“என்ன சொல்ற? புரியல…”

“நம்ம லயா அக்கா இல்ல… அதான்டி, கமலாலயா… அந்த அக்காகூட தனிக்குடித்தனம் நடத்துறார் உங்கப்பா… இனி கடைசி வரைக்கும் இவகூடத்தான் இருப்பேன்னு சட்டமா பேசிட்டு, எல்லாரையும் விட்டு ஒதுங்கிட்டாரு..!” அக்காவின் இறங்கிய குரலில் இவளின் மனம் பெரிதும் குழம்பிப் போனது.

கமலாலயா… லச்சு அக்காவைப் போல் மற்றுமொரு அண்டை வீட்டுக்காரி. லச்சு இடப்பக்கம் என்றால் லயா வலப்பக்கத்து அண்டைவீடு. சரண்யாவை விட பத்து வயது பெரியவள். லச்சுவும் லயாவும் சரண்யாவை வளர்த்தவர்கள் என்றே  சொல்லலாம். மூன்று பெண்களுக்கும் இடையில் அத்தனை நெருக்கம்.

லச்சு அக்கா, தான் வளர்ந்த கிராமத்திலேயே குடும்ப வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்க, அதே ஊரிலேயே யாருடைய தயவுமின்றி பலகாலமாக தனியாக வாழ்ந்து வருபவள்தான் கமலாலயா.

ஆனால் இத்தனை நாட்களாக இல்லாத புதுப்பழக்கமாக இது என்ன புதிய பிரச்சனை? தனது அப்பாவிற்கும் அவளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கூட அத்தனை சகஜமாய் இருக்காது.

இருவருக்கும் பொதுவான வயல், தோட்டம் சம்மந்தப்பட்ட பேச்சுக்களைகூட சரண்யா இருக்கும் வரையில் அவளை அருகில் வைத்துக் கொண்டேதான் பேசுவாள் கமலாலயா.

மனமெல்லாம் பெரியவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, இப்பக்கம் லச்சு, தங்கையை பலமுறை அழைத்து சோர்வடையத் தொடங்கியிருந்தாள்.

“ஹலோ…”

“ஹலோ… சரணி லயன்ல இருக்கியாடி?” அடுத்தடுத்து உலுக்கி எடுக்காத குறையாக சிறியவளை அழைக்க,

“ஹாங்… இருக்கேன், சொல்லுக்கா!” நிகழ்விற்கு வந்தாள் சரண்யா.

தங்கையின் குழப்பத்தை அனுமானித்தவள், “நெசமாத் தாண்டி சொல்றேன்… ஒரு வாரமாச்சு… உங்க வீடு பெரிய கலவர பூமியாட்டம் இருக்கு. உன்னோட ரெண்டு அண்ணனுங்களும் சத்தம் போட்டு, சண்டை போடலைன்னாலும் உள்ளுக்குள்ளேயே கொதிச்சிட்டு கெடக்காங்க…

அண்ணிங்க, முனுமுனுப்பு எப்போ சரவெடியா வெடிக்க போகுதோ தெரியல… அனேகமா உன்னை கூப்பிடுவாங்கன்னு நினைக்கறேன்… இத சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்…” தொடர் குண்டு மழைகளை பொழிந்த வண்ணம், சரண்யாவின் பிறந்த வீட்டு நிலவரத்தை சொல்லி முடித்தாள் லச்சு அக்கா.

“என்னை எதுக்குக்கா கூப்பிட போறாங்க? எப்படி அவ்வளவு சரியா சொல்ற?”

“நேத்து என்கிட்டதான், உன்னோட ஃபோன் நம்பர் கேட்டு வாங்குனாங்க… சொத்து விவகாரத்தை பேசி தீர்க்க, உன்னை கூப்பிடுவாங்கனு தோணுது”

“இத்தன வருஷமா இல்லாம இப்போ என்ன வந்தது?”

“எல்லாம் காரணமாதான்… அப்பாவோட கை தளர்ந்து போச்சு… இப்போ புதுசா வந்து சேர்ந்திருக்கிறவளுக்கு சொத்துல பங்கு போயிடக் கூடாதுல? அதுவுமில்லாம ஊர்க்காரங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு, கதை கட்டிவிட ஆரம்பிச்சுட்டாங்க… கேக்கவே காது கூசுது..!”

லச்சுவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் எந்தவொரு பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் சரண்யா. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அல்லவா அவளுக்கு.

தனக்கு நெருக்கமான இருவரின் உறவுமுறை, ஊராரின் வாயசைவிற்கு அவலாகி இருப்பதை சரண்யாவால் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆணும் பெண்ணும் சேர்ந்து பேசினாலே கதை கட்டும் கிராமத்தாரின் மத்தியில் ஒன்றாக சேர்ந்து வாழ்வதென்பது, பலவித அனுமானங்களை கொடுக்கத்தான் செய்யும் என்பதை அறியாதவள் அல்ல.

உண்மையோ பொய்யோ ஊராரின் விமர்சனத்திற்கு இருவரும் ஆளாகி இருப்பதை நினைக்கும் போது, மகளாகவும் தங்கையாகவும் ஜீரணித்துக் கொள்ள மிகுந்த சிரமப்பட்டு போனாள்.

“சரணி!” மெல்லமாய் தங்கையின் மௌனத்தை கலைத்தாள் லச்சு… 

“ம்ம்… சொல்லுக்கா! கேட்டுட்டுதான் இருக்கேன்” சலனமற்ற குரலில், பதிலளித்தாள் சரண்யா.

“என்னடி அமைதியாகிட்ட…”

“ஒன்னுமில்லக்கா ஏதோதோ யோசனை”

“உங்க வீட்டுல இருந்து கூப்பிட்டா, வந்துட்டு போடி!”

“எப்படிக்கா வர முடியும்?”

“இது என்ன கேள்வி சரணி? நீ பொறந்து வளர்ந்த ஊருக்கு வர இவ்வளவு தயக்கம் எதுக்கு? நீ ஊரை விட்டுப் போயி பத்து வருசமாச்சு…”

“இருந்தாலும் அந்த வீட்டுல எப்படி?” முற்று பெறாத கேள்வியில் கனத்த மௌனம் இருவரிடமும் நிலைகொண்டது.

“சொத்து வேண்டாம், சொந்தம் வேண்டாம்னு சொல்றதையும், எழுத்து பூர்வமா உறுதிபடுத்த, நீ வந்துதான் ஆகணும் சரணி! அதோட இந்த பிரச்சனைய தீர்த்து வைக்கவும் உன்னோட உதவி அவங்களுக்கு வேண்டி இருக்கு… இப்போதைக்கு லயா அக்கா கூட தயக்கமில்லாம பேச, உன் குடும்பத்துல நீ மட்டுந்தான் இருக்க…” ஆழ்ந்து சொன்ன லச்சுவின் குரலும் ஏகத்திற்கும் மெலிந்து வந்தது.

இந்த பெண்ணிடத்தில் என்ன குறையை கண்டுவிட்டார்கள் இவளின் குடும்பத்தார். இன்றளவும் ஒதுக்கி வைத்து, இவளை தனிமரமாக்கி விட்டனரே என ஆற்றாமையுடன் பெருமூச்செறிந்தாள் லட்சுமி.

சரண்யாவும் அவர்களுக்கு சளைக்காமல் பிடிவாதம் பிடித்து வருகின்றவள்தான். தனது எந்த இக்கட்டிலும் பிறந்த வீட்டினரை மட்டுமல்ல தன்னையும் அல்லவா ஒதுக்கி வைத்தாள் என்று லச்சு, இவள் மீது கோபம் கொள்ளாத நாளில்லை. இவளை சமாதானம் செய்து, மீண்டும் சகஜமாக பேசுவதற்குள் பெரியவள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல…

அலைபேசியின் அப்பக்கம் லச்சு ஆதங்கமாய் பெருமூச்சு விட்டபடி இருக்க, இப்பக்கம், ஜன்னலில் வழியாக மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சோட்டுவின் குதூகல குரலில் நிகழ்விற்கு வந்தாள் சரண்யா.

“சரிக்கா… அவங்க ஃபோன் பண்ணட்டும். அப்புறம் யோசிக்கலாம். அப்புறம் அக்கா…” தயக்கத்துடன் நிறுத்த,

“சொல்லு சரண்யா! அப்பாவை பத்திதானே! அவர் நல்லா இருக்காருமா… எப்பவும் போல. ஆனா…”

“ஆனா என்னக்கா?” கேட்டவளின் நெஞ்சில் பதைப்பு மேலும்  கூடிக் கொண்டது.

“இந்த ஒரு வாரமா…” என்று நொடிநேரம் நிறுத்திய லச்சு, தொடர்ந்தாள்.

“ஏதோ யோசனையில இருக்கிற மாதிரி தெரியுதுன்னு எங்க அப்பாவும் சொன்னாரு… மனசுக்குள்ள எல்லாத்தையும் பூட்டி வச்சு அவஸ்தை படுறாரு போல! மகனுங்க கோபம், மருமகளுங்க பாராமுகம், அவங்க குத்தல் பேச்சு எல்லாம் தாங்க முடியலையோ என்னமோன்னு அப்பாதான் கவலைப்பட்டார்.”

“சரிக்கா… அப்பாகூட இருக்க சொல்லி, மாமாகிட்ட(லச்சு அப்பா) சொல்லுக்கா! அப்பா ஒரு காரியம் செஞ்சா அதோட அர்த்தம் மாமாக்கு தெரியும். அதுவுமில்லாம லயா அக்கா பத்தியும் எனக்கு தெரியும். பத்திரமா பார்த்துகோக்கா!” சரண்யா கரகரத்த குரலில் பேச,

“இதை நீ சொல்லனுமாடி! அது எங்க கடமை. நம்மை சேர்ந்தவளை பத்தி நமக்கு நல்லா தெரியும். என்னோட ஆசையெல்லாம் நீ இங்க வரணும். அவங்க ஃபோன் வந்தா மறுக்காம குடும்பத்தோட வா! பேசிக்கலாம். என்ன வருவியா?” 

“பாக்குறேன்கா… அவர்கிட்டயும் கேட்கனும்… அவரை சம்மதிக்க வைக்கிறது அவ்வளவு ஈசியா எனக்கு தோணல…”

“சேகர் தம்பி அவ்வளவு கடுசா நடக்குற ஆள் இல்ல. சொந்த ஊருக்கு வரணும்னு அவருக்கும் ஆசை இருக்கும் தானே? குட்டி சமத்தா இருக்கானா? தம்பி எப்படி இருக்காரு?” என்று சகஜகுரலில் விசாரிக்க ஆரம்பித்தாள் லச்சு.

“ம்ம்… அவங்களுக்கு, நான் ஜால்ரா அடிக்கிற வரைக்கும், ரெண்டுபேரும் ரொம்ப நல்ல பிள்ளைங்கதான்… அப்பாவும் பிள்ளையும் ஜோரா இருக்காங்க… உங்க வீட்டுல மாமா, குழந்தைங்க எல்லாம் எப்படி இருக்காங்கக்கா?” பதில் கேள்வி சரண்யா கேட்க,

“இங்கேயும் இதே கதைதான்… நீ வந்து பார்க்கத்தானே போற… தயங்காம வரப்பாருடி!” பேச்சை முடித்து அலைபேசியை வைத்தாள் லச்சு அக்கா.

இரண்டு ஜோடி மின்னல்களின் ஒளியாட்டத்தை தொடர்ந்த, இடியோசை காதுகளை அதிர வைக்க, அக்காவின் பேச்சில் இருந்து தன்னை முயன்று மீட்டுக் கொண்டாள் சரண்யா.

கணவனும் மகனும் இடி சப்தத்தில் அசைகிறார்களா என்று திரும்பிப் பார்த்தாள். பிள்ளை அயர்ந்து தூங்க, சசிசேகரனின் கைகள் தன்னையும் அறியாமல் உறங்கும் குழந்தையை அணைத்துக் கொண்டது.

என்றும் மாறாத இந்த அரவணைப்பில்தானே, தானும் சிக்குண்டு தவிக்கிறேன் என்ற நினைவே அவளுக்கு இனித்தது. கணவனது செயலில் மெல்லிய புன்னகை பூக்க, விழியகலாது அவர்களின் மேல் கவனத்தை பதித்தாள்.

மனதை புரட்டி போட்ட சேதியை கணவனிடமும் பகிர்ந்து கொள்ளவும் விருப்பப்படாமல் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தாள்.

கட்டிலில் சற்று உறக்கம் கலைந்த நிலையில், சேகரின் கைகளுக்கு, மகனின் அடுத்த இடம் வெற்றிடமாக  தட்டுப்பட, அந்த இருட்டிலும் எழுந்து மனைவியை தேடி கண்களை அலைய விட்டான் சசிசேகரன். 

பனை மரத்தில் பாதி என்று நிச்சயமாய் இவனை சொல்லலாம். ஆறரை அடி உயரம், வட்டமான முகவெட்டு. ஆளை துளைத்தெடுக்கும் கூர்மையான பார்வையும் அமைதியான  முகமும், முதல் பார்வையிலேயே பார்ப்பவர் மனதில் மரியாதையை ஏற்றி வைக்கும். மனதில் கனிவும் பேச்சில் அழுத்தமும் கொண்ட சிவந்த நிறத்தவன்.

இவனின் முன்னால் சரண்யாவின் மாநிறமும் கருப்பாகத்தான் தோன்றும். இனம், அந்தஸ்து மட்டுமல்ல நிறபேதத்தையும் தாண்டி வசியப்பட்ட ஜோடி இவர்கள்.

அறையிருளில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பரபரப்புடன் கட்டிலை விட்டு எழுந்தவனை, மங்கிய வெளிச்சத்தில் பார்த்தவுடன் ஜன்னலருகில் இருந்தவாறே,

“நான் இங்கே இருக்கேன் சசி!” கணவனை, தான் நிற்கும் திசைக்கு திருப்பினாள் சரண்யா.

“இன்னும் தூங்காம என்ன செய்ற சரண்? ஏதாவது வேணுமா? உடம்பு சரியில்லையா?” கொட்டாவியை மென்று கொண்டே கேட்ட அவனது அக்கறை வேகத்தை தடை செய்தவள்,

“தூக்கம் வரலப்பா… வேறேதுவும் இல்ல” வேகவேகமாய் சமாதானம் செய்தாள்.

இரவின் குளுமை, தனிமை, இரண்டும் தூக்கத்தை தூரமாக்கி விட, வழக்கம்போல் மனைவியை தனது அன்பான அணைப்பிற்குள் ஆக்கிரமித்துக் கொண்டான் சசிசேகரன்.

“நாளைக்கு ஸ்கூல் லீவ் விட்டா, நம்ம ராஜாவ எப்படி சமாளிக்கன்னு இப்போ இருந்தே யோசிக்க ஆரம்பிச்சுட்டியா?” கேள்வியோடு தோள்வளைவில் இதழ் பதிக்க,

“நான்தானே அவனோட மல்லு கட்டனும். இல்லன்னா… உங்களோட அவனை கூட்டிட்டு போற ஐடியா இருக்கா?” பதிலோடு அவனது முன்னேற்றத்திற்கு அணைபோட்டாள்.

நாளை துறைமுகம் சென்றால்தான் தொடர் மழையால் என்னென்ன வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். அதன் பிறகு அவற்றை முடித்து வைக்க, இயந்திரத்தனமாய் மூச்சு முட்டிப் போகும் அளவிற்கு பணிகளை முடிக்க தொழிலாளர்களை முடக்கி விடவேண்டும்.

சிலசமயங்களில் நாள் முழுவதும்கூட வேலை இழுத்து வீட்டை மறக்கடிக்க செய்து விடும். அதனை நினைக்கும் போதே சரண்யாவிற்கு கண்ணை கட்டும்.

சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் நொடிநேரமும் ஓய்வெடுக்காமல் முற்றிலும் தளர்ந்துபோய் வருபவன், அவளிடம் தன்னை முழுவதும் ஒப்படைத்து விடுவான்.  

அந்த நாட்களில் எல்லாம், மகனை போலவே தந்தைக்கும் அவளது சீராட்டு, கவனிப்புகள் எல்லாம் தேவையாய் இருக்கும். ஆக மொத்தம் மும்பை மழை, இவளிற்கு ஓய்வில்லாத உளைச்சலை மட்டுமே அதிகமாய் கொடுக்கும்.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு கணவன் கேட்க, அவளும் ஆமோதித்து புன்னகைத்தாள்.

“தெரியுதுதானே! இப்போ தெம்பா தூங்குவியாம். அதுக்கு நான் மருந்து தரவா?” அவனது மூச்சுக்காற்று கன்னத்தில் சுடுவது தெரிந்ததும், அலெர்ட் அய்யாசாமியாக பின்வாங்கினாள் மனைவி.

“ரொம்ப பண்ணாதேடி! பிள்ளைய சாக்கு சொல்லியே எப்பபாரு வேதாளமா தனியாவே தொங்கிட்டு இருக்க…” என்றவன் அவள் கன்னத்தை வெடுக்கென்று கவ்வ,

“ஸ்… பாவிபயலே… உன்னை யார் இங்கே கூப்பிட்டா?” வலியுடன் திரும்பி அவன் மார்பில் அடித்தாள்.

அடித்த கைகளை வளைத்து, தன்னோடு அணைத்துக் கொண்டு “என் செல்ல வேதாளத்த தோள்ல தூக்கி போட்டுக்குவா!” என  கொஞ்சியவன், பிடிவாதமாக இதழ் கவிதையை எழுதி முடித்தே மனைவியை விடுவித்தான்.

“வேண்டாம் சசி… எனக்கு டயர்டா இருக்கு. போய் தூங்குங்க… குட்டி முழிச்சுக்க போறான்!” வீம்பாய் கணவனை விலக்க முயற்சிக்க, அவனோ மனைவியின் இடையில் தன்கரத்தை அழுத்தமாய் பதித்து தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

“மழை கொட்டுது… நைட் டைம்… சிட்சுவேசன் சாங்ஸ் எல்லாம் நிறைய இருக்கு. ரூமுக்கு போயி கேட்போமா?” தன் ஆசைமனதை, மனைவிக்கு உணர்த்தும் முயற்சியில் இறங்க, அவளோ அசராமல் தன் நிலையில் நின்று கொண்டாள்.

“ம்ப்ச்… நானே எதை எதையோ நினைச்சு தவிச்சுட்டு இருக்கேன். அய்யாவுக்கு சிட்சுவேசன் சாங் கேட்குதா?”

“ஏன் சரண்? எனக்கென்ன குறைச்சல்… கொட்டுற மழைக்கு, ஹாட்சாங் டூயட் பாட, பக்கத்துல பத்தினிப் பெண்ணிருக்க, நான் ரசிக்கவும் செய்வேன், அதுக்கு மேலேயும்…”  வார்த்தைகளில் வரம்பு மீறப் பார்த்தவனின் வாயை தன் கைகளால் அடைத்தாள்.

“உங்க வம்புக்கு, நான் கட்டில்ல முழிச்சே தவம் பண்றேன்…” கணவனின் மீசை குறுகுறுப்பில் கன்னம் சிவந்தாலும், மனதின் அயர்ச்சியை மறைக்க முடியாமல் திண்டாடினாள் சரண்யா. மனைவியின் பாவனையில் அவனுக்கு என்ன புரிந்ததோ, தனது அணைப்பில் இருந்து அவளை விடுவித்தான்.

நடுநிசியில் உறக்கம் கெட்ட சற்றே எரிச்சலான மனநிலையும் வந்திருக்க,

“என்ன ஆச்சு? எதுக்கு தூக்கம் வரல?” கடிந்து கொண்டே மனையாளின் முகத்தை ஆழ்ந்து நோக்கினான்.

“ஊர்ல இருந்து ஃபோன் வந்ததா? யார் என்ன சொன்னா?” அவளின் நாடியை அறிந்தவனாய், மனைவி தூக்கம் தொலைத்த காரணத்தை கண்டுபிடித்தான்.

ஊரில் இருந்து அழைப்பு வரும் நாட்களில் எல்லாம் அலைப்புறுதலுடன் கணவனின் தோள் சாய்ந்து விடுவாள். எத்தனையோ உறக்கம் தொலைத்த நீண்ட நெடிய இரவுகள். இவளைப் போலவே அவனுக்கும் சமஅளவு வேதனைதான் மிஞ்சும்.

தன்னையே நம்பி வந்தவளுக்கு இன்னமும் முழுதான நிம்மதியை அளிக்க முடியவில்லையே என்று சசிசேகரனும் தவித்து விடுவான்.

மனதிற்கு பிடித்தவனின் பரிதவிப்பை குறைக்கவே, எளிதில் தன் வலிகளை மறைத்து, மறந்து நொடியில் தன்னை மீட்டு கொண்டு விடுவாள் சரண்யா. இந்த புரிதலே இவர்களின் ஆழமான அன்பிற்கும் அடித்தளமாய் அமைந்திருந்தது.

“என்ன யோசனை சரண்?” மனைவியின் உள்ளத்து உணர்வுகளை மீட்கவென, அவளை பிடித்து உலுக்கினான்.

“ஏதோ நெனைப்பு விடுங்க சசி!”

“லச்சு அக்கா ஃபோன் பண்ணினா இதே அவஸ்தைதான். ஊருக்கும் போகாம வீம்பு பிடிச்சுகிட்டு, அங்கே நடக்குறதையே நினைச்சு ஏன் இப்படி கஷ்டப்படனும்?”

“நீங்க வேணும்னா போயிட்டு வாங்க… நான் தடுக்கல…” சடுதியில் கோபமுகம் காட்டினாள்.  

“நான் உனக்காக மட்டுமே யோசிக்கிறவன்… நீ இல்லாத இடத்துல எனக்கென்ன வேலை?”

“எனக்காக ரொம்ப பார்க்கிறவர் தான்!”

“நான் எப்படின்னு உனக்கு தெரியாதா? இன்னும் எத்தனை வருசத்துக்குதான் கேட்ப நீ? அப்படி என்ன குண்டு போட்டாங்க உங்க அக்கா… நீ சொல்றியா இல்ல ஃபோன் போட்டு கேட்கவா?” அவன் அலைபேசியை கையில் எடுக்க போக,

“அடேய் பிசாசே! மணி என்ன பாரு… எனக்குதான் தூக்கம் வரலன்னா… அவங்களுமா தூங்காம இருப்பாங்க!”

இன்று நேற்றல்ல… கணவன் மனைவி, இருவருக்கும் விவரம் தெரிந்த வயதில் இருந்து பழக்கம். இரண்டு வருட வித்தியாசத்தில் சிறு வயதில் இருந்தே அடித்து கொண்டு விளையாடியவர்கள்.

அந்த நாளில் இருந்தே அவளுக்கு இவன் சசிதான்… இவனுக்கு அவள் சரண் தான்!

கால மாற்றம், நடந்த செயல்கள் வெளிப்பார்வைக்கு உறவு நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும் உள்ளுக்குள் ஓடிய சிறு பிராயத்து நினைவுகள் உரிமைகள் அவ்வப்பொழுது வெளிப்பட்டு விடும். 

“அப்போ என்ன விசயம்னு சொல்லு என் ஜோடிப் பிசாசே! இந்த குளிர்ல இங்கே நிக்க வேணாம்…” என்றவாறே முன்னறைக்கு அழைத்து வந்து, தானும் அவளருகில் ஷோஃபாவில் அமர்ந்தான்.

மங்கிய இரவு வெளிச்சம், அடிக்கடி ஒளிரும் மின்னலின் ஒரு பகுதி, அவன் முகத்தில் பட்டுத் தெறித்தது. மனைவியை இமைக்காமல் பார்த்தவனுக்கு விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆவல் அந்த ஒளி வெள்ளத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

கணவனின் இமைக்கா விழிகளில் தன்னை தொலைத்தவளுக்கு, அவனது அன்பில் நெஞ்சமெல்லாம் விம்மிப் போனது.

பிறந்த இடம், வாழ்க்கை பயணம், யார் யாரை எங்கெங்கோ சென்று அமர்த்தி விடுகிறது. அதற்கு இவர்கள் இருவரும் மட்டும் விதிவிலக்கா என்ன?

யாரின் தூண்டுதலில் எல்லாம் நடந்தது? அனைத்தும் விதியின் செயலா? அப்படியென்றால் மனித உழைப்பும் முயற்சியும் வெல்கிறது என்பது வெறும் கட்டுக்கதைகள் தானா? இரண்டில் எது உண்மை? எது வெற்றி பெறும்? விதியா அல்லது உழைப்பைக் கொடுக்கும் முயற்சியா?