சரணாலயம் – 6

சரணாலயம் – 6

சரணாலயம் – 6

வெண்ணிற மேகங்கள் திரண்டு வந்து நுரை தள்ளிக் கொண்டிருக்க, முதன்முறையாக வெகு அருகில் விழி விரித்து பார்க்கும் சோட்டுவிற்கு அது உலக அதிசயமாகத் தான் தோன்றியது.

“பாபா… பாபா…” என சசிசேகரனை உலுக்கி அழைத்து, தான் கண்ட அதிசயத்தை கைகாட்டி,

“இந்த க்ளவுட்ஸ் எல்லாம் கையால பிடிக்கலாமா?” வழக்கம்போல் தனது சந்தேகக் கணைகளை தொடுக்க ஆரம்பிக்க, தன் நினைவலைகளில் இருந்து மீண்டாள் சரண்யா.

‘ஷப்பா… இவனோட பத்து நிமிஷ தூக்கத்துல நானும் எங்கெல்லாமோ போயிட்டு வந்துட்டேன்’ மனதிற்குள் நகைத்துக் கொண்டவள்,

“ஒருமணிநேரம் ப்ளைட்ல இருந்து இறங்குறதுக்குள்ள இன்னும் எவ்ளோ கேள்வி கேட்டு முடிக்க போறானோ சசி?” கணவனிடம் முணுமுணுக்க,

“உன் கவலைதான் எனக்கும்… சின்ன வயசுல உன்கிட்ட இருந்து தப்பிச்சு போக முடிஞ்ச என்னால, இப்ப இவன்கிட்ட இருந்து தப்பிக்க முடியல…” அலுப்புடன் மகனை கொஞ்சிக் கொண்டான் சசிசேகரன்.

“ஆன்சர் மீ மாம்… கேன் ஐ டச் தி க்ளவுடஸ்?” கேள்வியை அம்மாவிடம் திருப்பினான் தர்ஷன்.

“நோ வே தர்ஷூ! பக்கத்துல பார்க்க மட்டுமே முடியும்” பதில் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். இல்லையென்றால் எதைப் பற்றி, எப்படி, என்ன மாதிரி கேட்டு திருதிருக்க வைப்பானோ யார் கண்டது?

“நாம மேகத்துக்கு மேலே பறக்கிறோமா பாபா?” சிறியவன் ஆச்சரியத்துடன் தந்தையிடம் மீண்டும் வினவ,

“ஆமாடா குட்டி…”

“பேர்ட்ஸ்(பறவைகள்) எல்லாம் நம்ம பக்கத்துல பறந்து வருமா? அதை பிடிக்க முடியுமா பாபா?” விடாமல் கேள்வியை தொடர,

“உனக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சா கேப் இல்லாம க்வஸ்டின் கேட்ப… ஏதாவது சாப்பிடுறியா சோட்டு?”

“நஹி பாபா… இந்த சீட்பெல்ட் இரிடேட்டிங்கா இருக்கு. யாரோ என்னை அரெஸ்ட் பண்ணி வைச்ச ஃபீல் வருது. எப்போ இந்த ஜர்னி முடியும்?”

“இன்னும் கொஞ்சநேரம்தான் பேட்டா… அப்புறம் உன்னை ரிலீஸ் பண்ணிடுவாங்க!” மகனின் ஒவ்வொரு கேள்விக்கும் சலிக்காமல் பதிலளித்தான் தந்தை.

மகனின் எந்த ஒரு கேள்விக்கும் இதுவரை பதிலளிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டதில்லை சசிசேகரன். அதனாலேயே தனது உற்ற தோழனாக, மனம் விரும்பும் முதல்வனாக தன் தந்தையை முன்னிறுத்துவான் சிறியவன்.

இருவரும் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம், தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு அலைவான் சோட்டு. இருவருக்குமான உலகத்தில் தனது அம்மாவை கூட சேர்த்துக் கொள்ள அத்தனை யோசிப்பான் சிறுவன்.

மகனும் தந்தையும் பேசுவதை கேட்க கேட்க, சரண்யாவிற்கு தனக்கும் தன் தந்தைக்குமான விரிசல்தான் நினைவிற்கு வந்தது.

எல்லா குழந்தைகளுக்கும் அப்பாதான் முதல் ஹீரோ என்று உலகமே சொல்வதுண்டு. அதிலும் பெண்பிள்ளைகளுக்கு கூடுதல் ஒட்டுதல் இருக்கும் தந்தையினிடத்தில்…

ஆனால், தான் எப்படி இருந்தேன் என்று சரண்யா தன்னைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். தந்தையின் கோபப்பார்வையை சகித்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு, அவரின் இயல்பை பற்றிய நிறைய சந்தேகங்கள் அவளுக்கு தோன்றியதுண்டு.

எல்லா அப்பாவைப் போலவும் ஏன் இவர் தன்னை கொஞ்சுவதில்லை? ஏன் எப்பொழுதும் ஹிட்லரைப் போலவே நடந்துகொள்கிறார்? அது மட்டுமா… இவர் எப்போது, என்ன சொல்லி கண்டிப்பார் என்பதே புரியாத புதிராக இருக்கின்றதே என்று லச்சு அக்காவிடம் குழம்பிக் கொள்வாள் சரண்யா.

“உங்கப்பா லட்சத்தில ஒருத்தருடி சரணி… அதான் இப்படி தனியா தெரியுறாரு!” என்றதோடு குழப்பத்தையும் அதிகப்படுத்துவாள் லச்சு. 

இவளின் குழப்பத்திற்கு எல்லாம் அகிலாண்டம் பாட்டி பதில் அளித்தார்.

“உலகத்துல இருக்குற பாதி அப்பாக்கள் இப்படிதான் இருக்காங்க கண்ணு! சினிமாகாரனும் இத படமா புடிச்சு சொல்லிட்டான்…” என்றவர் விசிஆர்-ல் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை போட்டு காண்பிக்க, சிறுமிகளை உட்கார வைத்து விட்டார்.

தீர்க்க சுமங்கலி, தாய்க்கொரு தாலாட்டு என வெவ்வேறு காலகட்டங்களில் வந்த படங்களை பார்க்க வைத்தார். அந்த இரண்டு திரைப்படங்களிலும் வரும் அப்பாக்கள் இவரைப் போலவே கண்டிப்பும் கறாருமாய் இருந்தார்கள். அன்பை வெளிப்படுத்த தெரியாத தந்தையாகவே அவர்கள் சித்தரிக்கப் பட்டிருந்தார்கள்.

சரண்யாவிற்கு அந்த திரைப்படத்தின் சாராம்சம் புரிந்ததோ இல்லையோ அப்பாவின் அன்பு என்பது கோப முகமுடியில் பதுங்கிக் கொண்டுள்ளது என்றே மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

அன்பை வெளிப்படுத்தும் காலமும் நேரமும் சரியாக அமைந்து விட்டால் அனைத்தும் மாறிவிடும் என்று பாட்டியின் பதிலில் இவளும் சமாதானமாகி வருடங்களை கடத்தத் தொடங்கினாள்.

**********************************************

2004-ஆம் ஆண்டு சுனாமி பேரலை, சென்னையை தாக்கியதில் கமலாலயாவின் புகுந்த வீடு, குடும்பம், தொழில் என அனைத்தும் நிலைகுலைந்து போனது. அஷ்டலட்சுமி கோவிலை ஒட்டியே கடையும் வீடும் அமைந்திருந்தன.

பேரலையின் கோரதாண்டவத்தில் அனைத்தும் பலத்தஅடி வாங்கியதில், லயாவின் கணவன் ஆழிப்பேரலையில் அடித்து செல்லபட்டு, உயிரற்ற உடலாய் கண்டெடுக்கப் பட்டதுதான் பெரும் துரதிஷ்டவசமானது.

இவளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பிறகே உயிர் பிழைத்திருந்தாள். சுனாமியால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்க, இவளது புகுந்த வீட்டில் அனைத்திற்கும் இந்த ராசியில்லாதவள் மட்டுமே காரணமென குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். இவள் வந்த பிறகுதான் குடும்பம் தொழில் அனைத்தும் முடங்கிப் போனது என்கிற ரீதியில் லயாவை கரித்து கொட்டிக் கொண்டிருந்தனர்.

பெற்றவன் நிராகரித்த பிள்ளையை மருமகளாக்கிக் கொண்டால், வேறென்ன மிச்சமாகும் என்று எள்ளி நகையாடிய சொந்தங்கள் ஏராளம்.

கல்லடிகளை தாங்கிக் கொண்டு நடமாடிய பெண்ணை, மேலும் சுட்டுச சாம்பலாக்கும் விதமாய், தங்கள் குடும்பத்தை நம்பி வந்த பெண்ணை வீட்டை வீட்டு வெளியேற்றி விட்டது லயாவின் புகுந்தவீடு.

கைம்பெண்ணிற்கு, அவளின் இறுதி மூச்சு வரை யார் காவலாய், ஆதரவாய் நிற்பது என்ற கேள்வியே, அவளை தள்ளி வைக்கும் முடிவை எடுக்க வைத்தது.

ஏற்கனவே பிள்ளை பேறில்லையென்று குத்திக் காட்டிய புகுந்த வீட்டினர், அந்த பேரழிவிற்கு பிறகு அதிர்ஷ்டம் கெட்டவள் என்று இவளை ஒரேடியாக வீட்டை விட்டு துரத்தியிருந்தனர். இத்தனைக்கும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்திருந்த சமயம் அது.

கேள்வி கேட்க யாருமில்லாத பிறந்த வீட்டை கொண்ட பெண்களின் சாபக்கேடு இதுதான். தங்கள் இஷ்டத்திற்கு மருமகளை ஆட்டி வைத்து, எச்சில் இலையாக வீதியில் வீசி விடுவது காலம் காலமாக நடந்து வரும் வெட்கக்கேடான பாதகம் இது. 

ஆண்டவன் அருளால் இவளது பாட்டியின் சொத்துகள் அனைத்தும் இவளின் பெயரில் மாற்றப்பட்டு இருக்க, தனியாளாக மீண்டும் கிராமத்திற்கு வந்தடைந்தாள். இனி வாழ்நாள் முழுமைக்கும் இங்கேதான் என்ற உறுதியுடன் லயாவும் தன்னை திடப்படுத்திக் கொண்டாள்.

சௌந்திரவல்லி(சரண்யா அம்மா), கோதாவரி(லச்சு அம்மா), காமாட்சி(சசிசேகரன் அம்மா) மூவரும், தங்களால் முடிந்த ஆறுதல்களை கூறி, இவளுக்கு துணையாக எப்பொழுதும் இருந்து வந்தனர்.

பெரியவர்கள் எப்பொழுதும் ஒன்றுகூடி வருத்தப்படுவதைப் பார்த்து, லயாவின் தற்போதைய நிலையை தெரிந்து கொண்டாள் சரண்யா. ஆனால் அவளாக சென்று பேசவில்லை.

எப்படி பேசுவது? இத்தனை நாட்களாக பெரியவள் அழைக்கும் போதெல்லாம் முறுக்கிக்கொண்டு விட்டு, இப்பொழுது அய்யோ பாவமென்று போய் பேசினால் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற பெரும் தயக்கம் வந்திருந்தது சிறியவளுக்கு.

“உனக்குன்னு ஒரு துணை வேணாமா, கமலி?” ஆதங்கத்துடன் கோதாவரி கேட்க,

“எந்த ஜாடை பார்வையும் குத்தல் பேச்சும் கேட்காம இப்போதான் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விடுறேன். அது பொறுக்கலையாக்கா உனக்கு?” நொடித்துக் கொண்டே தன் இன்னல்களை வெளிப்படுத்துவாள் லயா.

எந்நேரமும் புகுந்த வீட்டினர் ஏவிய சொல்லம்புகளில், ரணப்பட்ட அவளின் மனம், சொரணையை தொலைத்து சுயத்தையே அழித்து விட்டிருந்தது. இல்லையென்றால் நிர்கதியாக நிற்கும் வெறுத்த நிலையைகூட எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் எப்படி வந்திருக்கும்?

“இந்த பேச்செல்லாம் எத்தனை நாளைக்கு சொல்ல முடியும்? உனக்குன்னு ஒரு பிடிப்பு வேணாமா?” என்ற சௌந்திரவல்லியின் பேச்சிலும் இவளை பற்றிய அக்கறையே நிரம்பியிருந்தது.

“ம்க்கும்… நீ வேறக்கா… பூக்காத மரம்னு தெரிஞ்சே எவன் கட்டிப்பான்? அவன் புள்ளைகளுக்கு ஆயா வேலை பார்க்கத்தான் சம்பளமில்லாத வேலைக்காரியா என்னை கூட்டிகிட்டு போவான்… வேணுமுன்னா உங்க ஐயாவுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வையி… உன்கூட காலத்தை ஒட்டிடுறேன்!” வலி மிகுந்த வார்த்தைகளையும் கிண்டலுடன் முடிப்பாள் கமலாலயா.  

“ஏன்டி… என் வீட்டுக்கு வந்து ஆயா வேலை செய்ய மட்டும் உனக்கு இனிக்குதா?” – சௌந்திரவல்லி.

“இல்லையா பின்னே! இந்தா இவ இருக்காளே சரணி… இவளை எனக்கு தத்து கொடுத்துடு…” என சிறியவளை தன்னுடன் இழுத்துக் கொள்வாள் லயா.

“நான் குடுக்காமதான் நீ வளர்த்தியாக்கும்… இந்த சேட்டைகாரிய தவுட்டுக்கு கொடுத்தாலும் வாங்குறதுக்கு ஆளில்ல…” பேச்சோடு பேச்சாக சௌந்திரம் வாரிவிட,

“இந்தா… பேச்சை நிப்பாட்டுக்கா! ரொம்பவும் அலட்டிக்காதே! நான் வளர்த்த பொண்ணுக்கு நானே கல்யாணமும் பண்ணி வைக்கிறேன். நீ இடையில வராதே சொல்லிட்டேன்… ஏன்டி பட்டு இந்த அக்காவை, அம்மான்னு கூப்பிட மாட்டியா? நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூடாதா?” ஆவலுடன் அவள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியா விட்டாலும்,

“ஓ… செய்யலாமே லயாக்கா!” முணுமுணுப்புடன் தலையை ஆட்டுவாள் சரண்யா.

சகஜமாய் பேசி சிரிக்கும் சூழ்நிலையை இருவரும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஒற்றை வரி கேள்வி பதில் சம்பாஷனைகள் மட்டுமே இருவரின் இடையே நடக்கும்.  

“அப்புறம் என்ன? எனக்கு பொண்ணு கிடைச்சாச்சு! இனி எனக்கு குடும்பம் குட்டி எல்லாம் என் பட்டுதான்…” கண்களில் நீர் துளிர்க்க சரண்யாவை உச்சி முகர்ந்து அணைத்துக் கொள்வாள் லயா.

அன்றைக்கு லயா சொன்ன வார்த்தையை வைத்தே தன் உடன் பிறந்தவர்கள், பின்னாளில் கதைகட்டி வெறுப்பேற்றக் கூடும் என்பதை அறிந்திருந்தால், சரண்யா தலையாட்டி இருக்க மாட்டாளோ?

அதற்கு பிறகும் பல நாட்கள் இப்படியான பேச்சுகளை விளையாட்டாகப் பேச, கேட்டிருக்கிறாள் சரண்யா. நாளைடைவில் அதுவே வாடிக்கையாகவும் ஆகிப் போனது லயாவிற்கு.

ஏதாவது ஒரு பொறுப்பை அவளுக்கென்று கொடுத்தால், இப்படி புலம்பித் தள்ளுவதை குறைத்துக் கொள்வாள் என நினைத்து, கணவரிடம் வேலை வாங்கிக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்தார் சௌந்திரவல்லி.

சிவபூஷணமும் தன்னுடைய சிபாரிசில் பால்வாடியில் மழலைகளை கவனித்துக் கொள்ளும் வேலையை லயாவிற்கு வாங்கித் தந்தார். வேலைக்குப் சென்ற ஒரு வாரத்தில் பிள்ளைகளை வளர்க்க தெரியவில்லையென பெற்றோருடன் சண்டையிட, அவர்களும் நீ என்ன பத்து பிள்ளை பெற்ற கிழவியா என குத்திக் காண்பிக்க, அன்றுடன் வெளிவேலைக்கு மூடுவிழா நடத்தி விட்டாள் லயா.

சொந்த நிலபுலன்களின் வரவு செலவுகளை சரிபார்த்து, வேளாண்மையை பொறுப்பெடுத்து செய்யுமாறு சிவபூஷணம் அறிவுறுத்த, அதுவே லயாவிற்கு ஸ்திரமாகிப் போனது. விளைச்சலில் தனக்கு ஏற்படும் சந்தேகத்தை எல்லாம் அவரிடமே கேட்டு தெளிந்து கொண்டாள்.

அத்தனை எளிதில் அவருடன் நேரடியாக பேசிவிட மாட்டாள் லயா. சௌந்திரவல்லி அல்லது சரண்யாவை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் தனது சந்தேகங்களை கேட்க ஆரம்பிப்பாள். காலமும் நேரமும் விவசாயத்தில் கை கோர்த்து விட, மிகுந்த ஈடுபாட்டுடன் அவளுக்குரிய நிலத்தின் வரவு செலவுகளை கையாளத் தொடங்கினாள் கமலாலயா.  

அந்த சமயத்தில் அனைவரின் வாழ்விலும் அடுத்தடுத்த மாற்றங்கள் ஏற்பட்டன. அகிலாண்டம் பாட்டியும் அந்த வருடத்தில் இறைவனடி சேர்ந்திருந்தார்.

பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள் சரண்யா. லட்சுமி பனிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டு, இளங்கலை வரலாறு இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

சசிசேகரன் மேல்நிலை கல்வி முடித்து, கடல் பொறியியலில் முதலாமாண்டை அடியெடுத்து வைத்திருந்தான். இந்த படிப்பு முழுவதும் கப்பலில்தான் கழியும். அதனால் கிராமத்தில் இவனது வருகை முன்னிலும் விட வெகுவாக குறைந்து போனது.

வெற்றிவேல் மூன்றாண்டு கல்லூரி படிப்பை முடித்து விட்டு, விவசாயம் பற்றிய டிப்ளமோ பயிற்சியில் சேர்ந்திருந்தான். சக்திவேல் கலைக்கல்லூரியில் இரண்டாமாண்டை தொட்டிருந்தான்.

தனது ஆசிரியர் பணியை, மகன்களில் ஒருவனையாவது பின்தொடர வைக்க வேண்டும் என்று சிவபூஷணம் பகீரத முயற்சி செய்து கொண்டிருந்தார். அவையெல்லாம் விழலுக்கு இரைத்த நீரைப் போல வீணாகித்தான் போனது.   

சமூக அக்கறை, ஊருக்கான உழைப்பிற்கெல்லாம் சன்மானத்தை எதிர்பார்த்த இளைய தலைமுறையின் சுயநலத்தைப் பார்த்து வெறுத்த நிலைக்கே வந்திருந்தார் ஆசிரியர்.

கண்டிப்பும் காறாரும் காட்டி வளர்த்த ஆண்பிள்ளைகளே தன் கனவை நனவாக்க முன்வராத பொழுது, பெண்பிள்ளையிடம் எப்படி எதிர்பார்ப்பது என்ற ஆற்றாமை, சிவபூஷணத்தின் மனம் முழுவதும் வேரூன்றி விட்டது. அதுவே மகளின் மீதான நம்பிக்கை குறைவதற்கும் அடித்தளமாகிப் போனது.

அண்ணன்களைப் போல படிப்பில் எழும் சந்தேகத்திற்கு கூட, மகள், தந்தையை நாடுவதில்லை. அதைக் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் சொல்பேச்சு எதையும் கேட்பதில்லை. அதுதான் அவரின் ஆதங்கம். ஏனோ தன் ஒற்றை பெண்பிள்ளையை இறுக்கிப் பிடிக்க தந்தையாக சிவபூஷணத்தின் மனம் இடம் கொடுக்கவில்லை.

இதனால் அவருக்கு பிடித்தமில்லாததை செய்தே சரண்யாவிற்கும் பழக்கமாகிவிட, அவளின் விருப்பங்களும் அவருக்கு எதிராகவே அமைந்தன. இதன் பொருட்டு இவளின் படிப்பை, இவளது விருப்பம் போலவே அமைத்துக் கொண்டாள். 

பனிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் தனது பொறியியல் படிக்கும் ஆசையை முன்வைத்தாள் சரண்யா. அதுவும் பி.ஆர்க் என்ற கட்டிட கட்டமைப்பு கல்வியை படிக்க விரும்புவதாக கூறினாள். கட்டிடக் கலையில் அவளுக்கு இருந்த அதீத ஆர்வம், அவளின் சிறுவயதில் இருந்தே கனவாக கண்டவள் அதனை நனவாக்கும் எண்ணத்தில் மட்டுமே முடிவெடுத்தாள்.

வீட்டில் உள்ளோர் அனைவரும் கொதித்து எழ அந்த காரணமே போதுமானதாக இருந்தது.

“இவ படிக்கிற படிப்புக்கு யார் சீட்டு தருவா? அதோடு முடியுமா? ஹாஸ்டல், காலேஜ் பீசுன்னு அத்துக்கிட்டு ஓடும்.”

“இங்கே ஊரு சுத்துறது பத்தாதுன்னு, பட்டணத்துல போயும் ஊர் சுத்த ஐடியா பண்றா…” என இரண்டு அண்ணன்களும் மாறிமாறி எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.

“ஊர்ல இருக்குற எல்லாரும், கட்டிடத்துக்கு டிசைன் பண்ண இவளைத்தான் வெத்தலை பாக்கு வைச்சு அழைக்க போறாங்களா?” அம்மாவின் கேலிப் பேச்சும் இடையில் சலசலத்தது. 

“ஏன் தங்கச்சி அப்படி சொல்ற? இந்த பொண்ணு ஒருநாளைக்கு நீயே விரும்புற மாதிரி பெரிய ஆளா வரத்தான் போகுது. அத நீயும் பார்க்கத்தானே போற…” எப்பொழுதும் போல் ஆதரவாகப் பேசினார் வேலாயுதம்(லச்சுவின் அப்பா).

“ஆமாமா… நல்லா வருவா! இவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடுறேன்… அப்புறமா இவ எதையாவது கட்டிட்டு அழட்டும். யார் கேக்கப் போறா?” மனப் பொருமலை வெளியில் கொட்டி விட்டார் அப்பா சிவபூஷணம்.

“நான் படிக்க வைக்கிறேன் பட்டு… நீ கவலப்படாதே!” கரிசனத்துடன் சரண்யாவை தாங்கினாள் லயா.

அத்தனை எளிதில் பெண் பிள்ளையை தொலைதூர விடுதியில் தங்கிப் படிக்க வைக்க சிவபூஷணம் சம்மதிக்கவில்லை. பக்கத்து டவுனில் இருக்கும் கலைக் கல்லூரியில் மூன்று வருட படிப்பும், அதற்கு பிறகு ஆசிரியர் பயிற்சியை படிக்க மட்டுமே தன்னால் அனுமதிக்க முடியும் என்று பிடிவாதமாக நிற்க, இவளும் பொறியியல் மட்டுமே படிப்பேன் என்று வீம்பாக வீட்டிலேயே இருந்து கொண்டாள்.

“எதுல வேறுபட்டாலும் அப்பாவும் பொண்ணும் பிடிவாதம் பிடிக்கிறதுல ஒண்ணா இருக்கீங்கடி! காலகலத்துல படிச்சு பட்டம் வாங்குற வழியப் பாரு…” அம்மா கண்டித்தும் கெஞ்சியும் சொன்னாலும் சரண்யா செவி மடுக்கவில்லை.

“நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகே, எனக்கு பிடிச்ச படிப்ப படிக்கிறேன்மா! அப்பாவ அதுக்கான ஏற்பாட்டையாவது பண்ணச் சொல்லு” துக்கிரித்தனமாக பேசி அனைவரையும் வாயடைக்க வைத்தாள்.

“இவ்வளவு பிடிவாதம் வேணாம்டி சரணி! அப்பா பேச்சை ஒருதடவையாவது கேட்கப் பாரு!” என லச்சுவும் தன்பங்கிற்கு சொல்ல,

“பெத்தவங்க மனசை புரிஞ்சுக்க முடியாத ராட்சசின்னு கூட என்னை திட்டிக்கோ! ஆனா, என் முடிவுல மாற்றம் இல்ல… ஒரு கோட்டுக்குள்ள நிக்க வைச்சே, பி.ஏ விட்டு உன்னை தாண்ட விடல… உன்னை மாதிரியே என்னையும் மாத்திக்க சொல்லாதே!” கறாராய் பேசி, லச்சுவிடமும் மனஸ்தாபத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.

பதினெட்டு வயதில் இருக்கும் சிறுபெண்ணிடம் இத்தனை வீராப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் பெற்றவரிடமே தன் எதிர்ப்பை காட்டிக் கொண்டு நின்றதை யாராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சிவபூஷணமும் என் கடமையை செய்து விடுகிறேன் என்று கோபத்துடன் வரன்களை பார்க்க ஆரம்பித்து விட்டார். இவளும் தான் விரும்பிய படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, பயிற்சிக்கான விவரங்களை சேகரிக்க அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறத் தொடங்கினாள். அதையும் பார்த்து சிவபூஷணம் கண்டிக்க, வீட்டினில் இவள் வருவதும் வெளியே போவதும் வீட்டின் பின்கட்டின் வழியாக என்றானது.

அந்த சமயத்தில் தந்தையிடம் மிக நல்லவன் என்று பெயரெடுத்த மூத்த பிள்ளை வெற்றிவேலும் மெதுமெதுவாக தனது வாலிப விளையாட்டை ஆரம்பித்திருந்தான். கல்லூரியில் படிக்கும் பல பெண்களிடம் இவனது திருவிளையாடல்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.  

சசிசேகரனின் தங்கை துளசியும் பனிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள். ஏதோ ஒரு தருணத்தில் தனது பார்வையை, துளசியின் மேல் படரவிட்ட வெற்றிவேல், அந்த காலகட்டத்தில் அவளை தொல்லை செய்ய ஆரம்பித்திருந்தான்.

தங்கள் நிழலில் குடியிருக்கும் பணியாளர் குடும்பம், இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற இளக்கார மனோபாவத்தில் தனது அத்துமீறலை மெதுமெதுவாக சமிக்கைகள், ஜாடைப் பேச்சுக்கள் மூலம் நச்சரிக்க தொடங்கியிருந்தான்.

இவனது தொல்லைகள் நாளுக்குநாள் எல்லை மீறிட, சசிசேகரன் இரண்டு மாத விடுப்பில் வீட்டிற்கு வந்திருந்த சமயத்தில் அந்த களேபரம் நடந்தேறியது.  

வீட்டிற்கு வெளியே கண்களால் நடத்திய நாடகத்தை, வேண்டாத நேரத்தில், அடுத்தகட்ட வம்பை வீட்டிற்குள் நடத்த ஆவல் கொண்டான் வெற்றிவேல். தோட்டத்தில் தனியே படித்துக் கொண்டிருந்த துளசியிடம் தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டே அவளின் கையை பிடித்து, தன்னை நோக்கி இழுத்திருந்தான்.

இவனது அடாவடியில் பயந்த துளசி, நொடியில் சுதாரித்துக் கொண்டு உள்ளே ஓட, சரியாக அந்த நேரத்தில் சசிசேகரன் அவளை தடுத்து நிறுத்தினான். இவளும் நடந்ததை, தன் அண்ணனிடம் சொல்ல, அவனும் வெளியே நின்ற வெற்றிவேலை கோபத்துடன் புரட்டி எடுத்து விட, அடிவாங்கியவன் முகத்தில் வியர்வையும் பயமும் போட்டிபோட நின்றான்.

அந்த நேரத்தில் தந்தையின் கோபப்பார்வையை தவிர்க்க நினைத்து, பின்வாசல் வழியாக வீட்டிற்குள் வந்து கொண்டிருந்த சரண்யாவும் தன் அண்ணன் அடிவாங்குவதை பார்த்து விட்டாள்.

ஓடிபோய் தன் அண்ணனை, சசிசேகரனின் அடியில் இருந்து காப்பாற்றியவள், காரணத்தை கேட்க, துளசியின் கண்ணீரே அவளுக்கு பதில் அளித்தது.

ஏதோ ஒரு பிரச்சனை, அதுவும் தன் உடன் பிறந்தவனால் என்பதை உணர்ந்து கொண்டவள், துளசியின் கையை பிடித்துக் கொண்டு ஆதரவாய் நின்ற நேரத்தில்,

பேச்சே வராமல் ‘சரணி!’ என்று விம்மி வெடித்த துளசியைப் பார்க்கவே அத்தனை சங்கடமாய் இருந்தது.

சரண்யாவை விட ஒருவயது சிறியவள்… எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக சுற்றிக் கொண்டிருக்கும் அவளின் அழுகை முகத்தை பரிதாபமாக பார்த்து நின்றாள் சரண்யா.

வீட்டிற்கு செல்லும் அவசரத்துடன் வேகமாக வந்தவளுக்கு, இவளைப் பார்த்ததும் படபடப்பு கூடியிருக்க வியர்த்திருந்த முகத்தை கையால் துடைத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சரண்யா,

“எனக்காக அண்ணனை மன்னிச்சிடு துளசி…” இறங்கிய குரலில் கெஞ்ச,

“ரொம்ப நாளாவே நடக்குது சரணி! உனக்காகவும், உங்க அப்பா அம்மாவுக்காகவும் பார்த்துதான் நானும் வெளியே சொல்லாம இருந்தேன். இன்னைக்கு எல்லாமே கைமீறிப் போயிடுச்சு!” அழுதபடியே வெற்றிவேலை துளசி பார்க்க, பயரேகையோடு அகப்பட்டுக் கொண்டோமே என்ற குற்ற உணர்வில் நடுங்கிக் கொண்டிருந்தான் வெற்றிவேல்.

துளசியின் அழுகையும், வெற்றிவேலின் முகத்தில் தெரிந்த உணர்வுகளும் சரண்யாவிற்கு நன்றாக புரிந்தது. சசிசேகரனும் மிதமிஞ்சிய கோபத்தில் நிற்க என்ன செய்வது என்று அவளுக்கு புரிபடவில்லை.

உடன் பிறந்தவனின் மீதான பாசம் அவளை உசுப்பி விட, சசிசேகரனைப் பார்த்து,

“அண்ணாகிட்ட சொல்லி வைக்கிறேன், சசி! இனிமே இவளோட வம்பு வளர்க்க மாட்டான். நீங்க இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்” இறைஞ்சிய குரலில் கூறிக் கொண்டே, துளசியின் கையை பிடித்து அவளை அமைதிப்படுத்திய நேரத்தில், தொடர்ந்த பேச்சுச் சத்தம் கேட்டு இரு வீட்டின் பெற்றோர்களும் அங்கே வந்து நின்றனர்.

வெற்றிவேல் மாட்டிக் கொள்வானா? சசிசேகரன் அவனை விட்டு விடுவானா? பெற்றோர்களிடம் நடந்ததை பெண்கள் எவ்வாறு விவரிப்பார்கள்… அடுத்த பதிவில் காண்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!