சரணாலயம் – 7

சரணாலயம் – 7

சரணாலயம் – 7

நிதானமாக, சின்னச் சின்ன வார்த்தைகளால், பக்குவமான பேச்சுகளால் முடிந்திருக்க வேண்டிய விசயம், அன்றைய நாளில் நினைத்து பார்க்காத அளவில் தடம் மாறியது.

துளசி, தன் அம்மா காமாட்சியை பார்த்தவுடன், சரண்யாவை பிடித்திருந்த கையை விட்டுவிட்டு அழுதுகொண்டே ஓடிபோய் தன் தாயைக் கட்டிக் கொள்ள, தந்தை ராமசாமியும் திகைத்து நின்று விட்டார்.

துளசியின் கண்ணீர், சரண்யாவின் சங்கடமான முகம், வெற்றிவேலின் பதட்டமான தோற்றம், சசிசேகரனின் முகத்தில் தாண்டவமாடிய மிதமிஞ்சிய கோபம் என அனைத்து உணர்வுகளையும் ஒரே சமயத்தில் கண்டவர்களுக்கு என்ன நடந்ததென்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

“என்ன நடந்தது சேகர்? தங்கச்சி ஏன் அழுதிட்டு நிக்கிறா?” மன பதைப்புடன் காமாட்சி முதலில் குரலை உயர்த்த, அவனும் எப்படி விளக்குவது என்ற குழப்பத்தில் இருந்தான்.

தங்கள் வீட்டுப் பெண்பிள்ளை விவகாரம்… நட்புறவோடு தங்களுக்கு படியளக்கும் முதலாளியின் குடும்பம்… எல்லாவற்றிக்கும் மேல் நடந்ததை மறைக்காமல் சொன்னால் பெரியவர்களுக்கு இடையிலும் கூட பெரும் பூசல்கள் உருவாகி, தீராத பகையை உண்டாக்கி விடும் அபாயம் உள்ளது.

இதையெல்லாம் சசிசேகரன் யோசித்துக் கொண்டிருந்த இடைப்பட்ட நேரத்தில், தன்னை சமன்செய்து கொண்ட வெற்றிவேலோ சூழ்நிலையை தன் பக்கம் சாதகமாக்கிக் கொண்டான்.

குடும்பம், நட்பு, பெண்பிள்ளைகளின் பாதகம் என்பதையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு, தன்னை பற்றி மட்டுமே யோசிக்க, வெற்றிவேலின் மூளை வெகுவேகமாக செயல்படத் தொடங்கியிருந்தது.

இந்த இடத்திலிருந்து, இன்றைய அசம்பாவிதத்தில் இருந்து எப்படியாவது தப்பித்து விடவேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக மாறிப்போக, சற்றும் யோசிக்காமல் பொய் கதையை அவிழ்க்க ஆரம்பித்தான்.

“சரணிய, சேகர் கையை பிடிச்சு இழுத்துட்டு இருந்தான். ஏண்டா இப்படி நடந்துக்கறன்னு தடுக்க வந்த என்னையும் போட்டு அடிக்கிறான். எதிர்த்து கேட்க வந்த துளசியையும் சத்தம் போட்டு வையுறான். அதான் அந்த புள்ளையும் கண்ணை கசக்கிட்டு நிக்குது…” அனைவரின் முன்னும் அபாண்டமான பழியை சசிசேகரன் மீது ஏற்றிவிட, சிறியவர்கள் மூவரின் முகமும் வெகுவாய் கசங்கிப் போனது.

பொங்கிய கோபத்தை மனதிற்குள் அடக்கியபடி, வெறுப்போடு தன் அண்ணன் சொன்னதை மறுப்பதற்காக சரண்யா பேச ஆரம்பிக்கும் வேளையில், யாருக்கும் பாதகம் வராமல் பொருந்தும்படியான பதிலை கூற ஆரம்பித்தான் சசிசேகரன்.

“உங்க வீட்டுப் பொண்ணு எந்த நேரம்னு இல்லாம தோட்டத்து வழியா, போறதும் வர்றதுமா இருக்கா… அப்படி போகும்போது காம்பவுண்ட் கேட்டை(gate) சாத்தாம போயிடுறா… இதனால அம்மாவும் தங்கச்சியும் மட்டுமே இருக்குற நேரத்துல பாதுகாப்பு இல்லாம போயிடுது. யார் வர்றாங்க போறாங்கனு தெரிய மாட்டேங்குது. அது அவ்வளவு நல்லதில்லன்னு எத்தனையோ தடவ சொல்லிப் பார்த்துட்டேன். சரண்யா கேக்குற மாதிரி இல்ல…

இதை சொல்லி புரிய வைக்கத்தான், இவளை தடுத்து நிறுத்த, கையை பிடிச்சு நிக்க வைக்க வேண்டியதா போயிடுச்சு… வேற எந்த தப்பான எண்ணமும் இல்ல… நான் செஞ்சது தப்புன்னா மன்னிச்சுடுங்க!” மூச்சு விடாமல் விளக்கம் கூறியவன், சிவபூஷணத்தை பார்த்து தலைதாழ்ந்து விட, பெரியவர்களின் வெறுப்பான கோபப் பார்வைகள் அவனை ஒரே நேரத்தில் சுட்டெரித்தது.

தன்னை மட்டுமே கடிந்து கொள்வார்கள் என நினைத்து சசிசேகரன் சொன்ன பொய், அவனின் மீதிருந்த நல்லெண்ணத்தை முற்றிலும் தலைகீழாய் மாற்றி வைத்தது.

மகளின் பொறுப்பற்ற செயல்களை முன்னிட்டே, ஒருவன் அவள் கையை பிடித்து இழுத்திருக்கிறான் என்ற நினைவே சிவபூஷணத்திற்கு வெறுப்போடு எரிச்சலையும் வரவைத்தது. சௌந்திரவல்லியும் யார் மேல் கோபம் கொள்வதென்றே தெரியாமல் சிறியவர்களை முறைத்துக் கொண்டு நின்றார்.

சசிசேகரனின் பெற்றோர்களுக்கு இவன் இப்படி செய்பவன் அல்லவே என்ற சந்தேகம் தோன்றினாலும், குற்றத்தை அவனே ஒத்துக் கொள்ளும் பொழுது, அதை மறுத்துப் பேச முடியவில்லை.

‘அண்ணா!’ என்று அழுகையோடு பேச வந்த துளசியையும் தன் கைகளால் அழுத்தி அடக்கி விட்டான் சசிசேகரன். சரண்யாவிடம் கூட தனது அழுத்தப் பார்வையால் எதுவும் சொல்லாதே என்று ஆணையிட்டு விட, அவளும் வாய்பூட்டு போட்டுக் கொண்டாள். சசிசேகரனின் எண்ணம் அந்த நேரத்திலும் அவளுக்கு தெளிவாக புரிந்து போனது.

அதே நேரத்தில் சேகரனின் பதிலை கேட்ட வெற்றிவேலிற்கும் அவனது எண்ணம் புரிபட்டுவிட, தப்பித்து விட்டோமென பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

எந்த போராட்டமும் இல்லாமல், தன் குற்றம் மறைக்கப்பட்டதில் திமிரும் எகத்தாளமும் கூடிவிட, அலுங்காமல் அடுத்த பழியை சசிசேகரனின் மேல் போட தயாரானான்.

எப்படியாவது இவர்களின் குடும்பம் இங்கேயிருந்து வெளியேற வேண்டும். எந்த நேரமும் சேகரனை ஒப்பிட்டே, தங்களை இறக்கி பேசும் தந்தையின் மனதில், அவனைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கி, அவமானத்தில் தலைகுனிய வேண்டுமென, அடங்கியிருந்த பொல்லாத எண்ணங்கள் அப்பொழுது வீறுகொண்டு எழ, சற்றும் யோசிக்காமல் தனது அடுத்த கட்ட தாக்குதலை தொடங்கி விட்டான்.

“இவன் சொல்றது பொய்…” என சேகரனின் பேச்சை ஆணித்தரமாக மறுத்த வெற்றி,

“சேகரு, ஆரம்பத்துல இருந்தே சரண்யாவ, அவன் பக்கம் இழுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கான். அவ வேணாம்னு விலகி போனாலும், இவன் விடாம தொல்லை பண்ணிட்டு இருக்கான். இப்பவும் அதுதான் நடந்தது.

மேற்படிப்பு எல்லாம் படிக்க வேணாம்… சீக்கிரமே கல்யாணம் பண்ணிப்போம்னு, கைய புடிச்சி வம்பு பண்ணிட்டு இருந்தப்போ தான், நான் வந்து இவன அதட்டி நியாயம் கேட்டேன். அதுக்குதான் சேகர் என்னை அடிக்க வந்தான்” சற்றும் தடுமாறாமல் வேகமாக பேசியதில், இதென்ன புதுக்கதை என்றே அதிர்ச்சியுடன், அனைவரும் சசிசேகரனை முறைத்துப் பார்த்தனர்.

வெற்றிவேல் எனும் ஒருவனின் வாலிப விளையாட்டில், நியாயம் கேட்க வந்தவனே குற்றவாளியாகிப் போன அவலம், வெகு அழகாய் நடந்தேறியது.

பெண்பிள்ளையின் பெயர் வெளியே வராமல் இருப்பதற்காக ஒருவன் இல்லாத பழியை சுமக்க, மற்றொருவன் பொறுப்பு துறந்தவனாய், பச்சோந்தியாய் மாறியிருந்தான்.

இவனது பழிசொல்லை கேட்ட சசிசேகரன், பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றும் பாராமல், வெற்றியின் சட்டையை கொத்தாக பிடித்து,

“அசிங்கமா பேசாதே வெற்றி! என்னை பழிவாங்க உன் தங்கச்சிய பலியாக்குவியா? அறிவிருக்காடா உனக்கு…” கோபத்துடன் வார்த்தைகளை கடித்து துப்ப,

“இப்படி முரட்டுத்தனமா நடந்துகிட்டா, நீ நல்லவனாகிடுவியா? வசதியுள்ள குடும்பம், பெரிய குடும்பத்து பொண்ணு… வளைச்சு போடலாம்னு நீ நினைக்கிறது எனக்கு தெரியாதா? இல்ல, நாந்தான் உன் தங்கச்சிய கை பிடிச்சு இழுத்தேன்னு கதைய மாத்திவிட பாக்குறியா?” எள்ளலுடன் வெற்றி பேசிய பாவனையே, அப்படி சொல்லித்தான் பாரேன் என்ற தெனாவெட்டுடன் தெறித்தது.

ஏற்கனவே நடந்ததற்கு குற்றத்தை ஒப்புக் கொண்டாகி விட்டது. இப்பொழுது மீண்டும் உண்மையை விளக்குகிறேன் என்று, முதலில் கூறியதை மறுத்து பேசினால், அதை உண்மையென்று ஏற்றுக் கொள்வார்களா என்பதும் சந்தேகமே! என்ன செய்வதென்றே புரிபடாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துப் போனான் சசிசேகரன்.

சிறியவர்களை ஏறிட்ட சிவபூஷணத்தின் பார்வை இறுதியாக சசிசேகரனிடம் நிலைகொண்டு விட, அடக்கப்பட்ட கோபத்துடன் அவனை பார்வையால் சுட்டெரித்தார். அவன் பிறந்த நேரம் முதல் அவனது நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு, நல்வழிபடுத்தியவரின் நம்பிக்கை அந்த நேரத்தில் ஆட்டம் கண்டு விட்டது.

‘கடைசியில் நீயும் இவ்வளவு தானா? பண்புள்ளவன், பொறுப்பானவன் என உன்னையா தலையில் தூக்கி வைத்து கொண்டாடினேன்’ என்ற இகழ்ச்சி பார்வையை படரவிட, அந்த கணம் முதல் சசிசேகரனும் மனதளவில் சுக்குநூறாய் உடைந்து போனான்.  

கோபபெருமூச்சுடன், “இனி ஒரு அடி என் பையன் மேல விழுந்தா, மரியாதை கேட்டுடும் ராமசாமி! உன் மகன்கிட்ட சொல்லிவை!” நேருக்கு நேராக அவனுடன் பேசவும் விரும்பாமல் சிவபூஷணம் கர்ஜிக்க, சசிசேகரன் சற்றே நிதானத்திற்கு வந்தான்.

“அய்யா… அப்படி எந்த எண்ணமும் இல்ல… வேணும்னா சரண்யாவ கேட்டு பாருங்க!” சேகர், தன்னை விளக்க முற்பட,

“ஆமாங்கயா… என் மவன் அப்படியெல்லாம் பொல்லாப்பு செய்றவன் கிடையாது. உங்க நிழலுல வளர்ந்த புள்ள மேல நீங்களே நம்பிக்கை இல்லாம பேசலாமா?” ராமசாமி கெஞ்சவும், பெண்கள் அனைவருக்கும் தர்மசங்கடமாகிப் போனது.  

இப்பொழுது அனைவரின் பார்வையும் சரண்யாவின் மேல் திரும்ப, அவளோ என்ன சொல்வதென்ற குழப்பத்தில் இருந்தாள். தெரிந்தே குற்றமற்றவன் மீது வீண்பழி போட, தான் காரணகர்த்தாவாகி நிற்கிறோமே என்ற பரிதவிப்பில் கலங்கிப் போனாள்.  

நடப்பது நடக்கட்டும்… உண்மையை சொல்லி விடுவோம் என்ற வேகத்துடன்,

“பெரியவன் சொல்ற மாதிரி, சசி எங்கிட்ட வம்பெல்லாம் பண்ணல… இங்கே நடந்ததே வேற…” என சரண்யா மேற்கொண்டு விளக்கும் நேரத்தில், வேகமாய் இடையிட்ட வெற்றிவேல்,

“சர்தான்! இவளுக்கும், அவன் மேல அப்படியொரு எண்ணம் இருக்கு போல… அதான் விட்டுக்குடுக்காம பேசி, இவன தப்பிக்க வைக்க பார்க்குறா…” நா கூசாமல் வார்த்தைகளை கொட்டிய அடுத்த நொடியே, சௌந்திரவல்லியின் கை, வெற்றிவேலின் கன்னத்தை பதம் பார்த்தது.

தனது குற்றம் வெளியே வந்து விடக் கூடாதென நினைத்த சுயநலக்காரனின் மனம், தங்கையென்றும் பாராமல் அவளின் நிலையை இறக்கிப் பேசிவிட, பெற்றவளின் கையாலேயே அவனுக்கு தண்டனை கிடைத்து விட்டது.

“உன் தங்கச்சிய பத்தி நாலு பேர் மத்தியில, தப்பா பேசுற அளவுக்கா தரம் தாழ்ந்து போயிட்ட? நம்ம வீட்டு பொண்ணுடா… கூடப்பொறந்த பாசம் இல்லன்னனா கூட, வயசுப் பொண்ணுங்கிற கரிசனம் வேணாமா? என்ன ஜென்மம் நீயெல்லாம்?” கோபத்துடன் மகனை காறி உமிழ்ந்து விட்டு, பிரச்சனையை, தன்கைகளில் எடுத்துக் கொண்டார்.

“இனி ஒருதடவ, என் பொண்ணு பேர இழுத்து வச்சு, யார் என்ன பேசினாலும், கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்!” அனைவருக்கும் எச்சரித்து, சசிசேகரனுக்கும் சேர்த்தே கொட்டு வைத்தார்.

“ராமசாமி அண்ணே! உங்கள மாதிரியே எனக்கும் சேகர் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா அவனே ஒத்துகிட்ட பிறகு இன்னும் என்ன விசாரிக்கணும்? கேள்வி கேக்க ஆரம்பிச்சா ரெண்டு பேர் குடும்பத்துக்கும் மனஸ்தாபம் தான் மிஞ்சிப் போகும். இதோட விட்டுடுவோம்.

ஆனா இனி ஒருதடவ உங்க பையன், என் பொண்ணு கூட வம்பு வளர்த்தா… ரெண்டு குடும்பத்துக்கும் இடையில இருக்குற சகலத்தையும் முறிச்சுக்க வேண்டி வரும்” காட்டமாக உரைத்து விட்டு கணவரின் முகத்தை பார்த்தார்.

இதற்கும் மேல் எதையும் பேசி, உறவுகளை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கையும் அந்த பார்வையில் தென்பட, பெருமூச்செறிந்த சிவபூஷணம், சசிசேகரனை பார்த்து,

“எதுவா இருந்தாலும் பேச்சோடு நிறுத்திக்கணும் சேகரா… ஏற்கனவே உனக்கு சொல்லிக் கொடுத்ததுதான். பொம்பளபுள்ளய கைய பிடிச்சு இழுக்குற தராதரத்துக்கு வேற பேருதான் வந்து சேரும். இதுதான் நீ ஹாஸ்டலுக்கு போய் படிச்சிட்டு வந்த லட்சணமா? எங்க வீட்டு புள்ளைங்க மேல கைவைக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தா? படிக்காத காட்டான் கூட இந்த காரியத்த செய்ய மாட்டான். ஆனா நீ…” என்றவாறே அருவெறுப்பாய் முகத்தை திருப்பிக் கொண்டார்.

சிறுவயதில் அன்பாக கூறிய அறிவுரையை மனதில் பதிய வைத்துக் கொள்ளாமல், இன்னமும் இவன் போக்கில்தான் இருக்கின்றானா என்ற ஆதங்கம் அவரின் பேச்சில் குற்றச்சாட்டாய் வெளிப்பட்டது.

இந்த சங்கடமெல்லாம் மகளின், தான்தோன்றித்தனமான குணத்தினால் தானே என சரண்யாவையும் அதே வெறுப்போடு பார்த்து விட்டு, எதையும் ஆராயாமல் தன் வீட்டிற்குள் சென்று விட்டார்.

சிவபூஷணத்தின் வெறுப்பு பார்வை இருவரின் மனதையும் ரணப்படுத்திவிட, வெளியே சொல்லி ஆறுதல் பெறவும் வழியில்லாமல் இருவரும் தவித்து போயினர். தந்தையின் கோபத்தை எளிதாக கடக்க முடிந்த சரண்யாவால் அவரின் வெறுப்பை ஜீரணிக்க முடியவில்லை.

கனத்த அமைதியுடன் எல்லோரும் கலைந்து போனாலும், அத்தனை எளிதாக தனது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க, அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை. ஏதோ ஒரு அந்நியத்தன்மை அவள் மனம் முழுதும் வியாபித்திருந்தது. துடிப்பான அவளின் இளவயதும், பிடிவாத முகமுடியை பூசிக் கொள்ள, வீம்புடன் தோட்டத்தில் அமர்ந்து விட்டாள்.

அவளின் மனம் முழுவதும் பல எண்ணங்கள் அலைகழிக்க, இனி அந்த வீட்டில் ஒருநிமிடம் கூட இருக்க முடியாது என்ற தீர்மானத்தை எடுத்திருந்தது அவளது பக்குவமற்ற மனம். பின்னே எங்கே போய் தங்குவது? எப்படி உயிர் வாழ்வது? என பல கேள்விகள் மனதில் அணிவகுத்திட, அவளுக்கு அந்த நேரத்தில் கை கொடுக்கும் தெய்வமாக தோன்றியவள் கமலாலயா மட்டுமே!

அக்காவின் வீட்டில் தங்கி இருந்தே, ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு படித்து முன்னேறிக் காட்ட வேண்டும். தன் தந்தையின் மனதில் தன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டுமென்ற வேகம் உறுதிபட, அதே தீர்மானத்துடன் கமலாலயா வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

இடைப்பட்ட நேரத்தில், நடந்ததை அறிந்து கொண்ட  லச்சுவும், தோட்டத்திற்கு வந்து ஆறுதல்படுத்தி தன்னுடன் அழைக்க, வீம்புடன் மறுத்து விட்டாள்.

விதை, உரம் வாங்குவது சம்மந்தமாக அருகிலுள்ள டவுனிற்கு, நடவு செய்யும் பெண்களின் துணையுடன் சென்றிருந்தாள் லயா. அவள் வருவதற்கு மாலை ஆகி விடுமென்று தெரிந்தே, அதுவரையில் தோட்டத்தில் காத்திருக்க ஆரம்பித்தாள்.

இருள் கவிழ ஆரம்பித்த வேளையில்தான் மகள் இன்னும் வீட்டிற்கே வரவில்லை என்கிற நிதர்சனம் உரைக்க, சௌந்திரவல்லி, மகளைத் தேடி தோட்டத்திற்கு விரைந்தார். மதியம் முதல், மகனை திட்டி முடித்து, கணவரின் கோபப்பர்வைகளுக்கு பதில் சொல்லியபடியிருக்க, மகளை தற்காலிகமாக மறந்து போயிருந்தார். 

இந்த நேரம் இவளும் வீட்டிற்குள் இருந்தால் தந்தையின் அதிக வசைமொழிகளையும், அண்ணன்களின் முறைப்பையும் வாங்கிக் கொள்ள நேரிடுமென்று, அவளை விரைந்து அழைக்கவும் இல்லை.

“இன்னும் எவ்வளவு நேரம்தான் இங்கே உட்கார்ந்திருக்க போற? சாப்பிட்டு உன் கோபத்தை தூக்கி வச்சுக்கோ!” என்றவாறே மரத்தடியில் தனிமையில் அமர்ந்திருந்த மகளின் கையை பிடிக்கப் போக, வேகமாக விலகிக் கொண்டாள் சரண்யா.

“நீ வளர்ந்திட்டடி பட்டு! இனிமே சூதானமாதான் எங்கேயும் போகணும், வரணும்… இல்லைன்னா இதுமாதிரி தேவையில்லாத பிரச்சனையெல்லாம் வந்து நம்மள சங்கடப்படுத்தும். இனிமேட்டு நல்ல பொண்ணா இருந்துப்பியாம்! வாடி தங்கம்…” அன்னை கொஞ்சிப் பேசினாலும் மகள் அசைந்தாளில்லை.

“அப்பாவுக்கு தெரிஞ்சா, இன்னும் கூட சேர்த்து வைவாக… சீக்கிரம் எந்திரிச்சு வா!”

“அப்போ நான் முக்கியமில்லை, அப்பாவோட கோபம்தான் முக்கியமா?”

“நீயும் கோபப்படு… யார் வேண்டாம்னு சொன்னா? ஆனா எது செஞ்சாலும் வீட்டுக்குள்ள இருந்து செய்டி பட்டு!”

“அவன் இருக்குற வீட்டுல நான் இருக்க மாட்டேன்…”

“யாரை சொல்ற நீ?”

“உன் பெரிய பையனைதான் சொல்றேன்…”

“வெளங்காதவன், ஏதோ கெட்ட நேரத்துல வாய வுட்டுட்டான்… அவனை நாலு கேள்வி கேட்டு, நல்லா திட்டியும் முடிச்சாச்சு… மனசுல வச்சுக்காதே கண்ணு!”

“இனிமே அந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன்”

“வாயில ரெண்டு போட்டேன்னா தெரியும்… என்ன பேச்சு இது?” சௌந்திரம் குரலை உயர்த்தும் போதே, லயா அங்கே வந்து சேர்ந்தாள்.

“என்ன விஷயம்கா? ஏன் வெளியே நின்னு சத்தம் போடுற?” அவளும் கேள்வி கேட்க, சௌந்திரவல்லியும் தனக்கு தெரிந்ததை விளக்கி, மகளின் கோபத்தையும் கூறி முடித்தார்.

“கடைசியில யார் என்ன பண்ணாங்கனு தெரியலடி கமலி? ரெண்டு பசங்க சண்டை போட்டுருக்காங்க… அது மட்டுமே புரியுது…” அங்கலாய்ப்பில் முடிக்க, கேட்டவளுக்கும் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

பெண்ணின் துடுக்குத்தனத்தை, சசிசேகரன் கண்டித்திருப்பான் என அனுமானித்த அவளால், வெற்றி சொன்ன வீண்பழியை மனம் அசைபோடவும் விரும்பவில்லை.

“எடுபட்ட பய… வாயிருக்குன்னு என்னானாலும் பேசிடுவானா? அவன இன்னுமா வீட்டுக்குள்ள வச்சுருக்க… இவனையெல்லாம் வெட்டி பொலி போட்டுட்டுதான் மறுவேல பாக்கணும்” தனக்கு தெரிந்த முறையில் லயாவும் வெற்றிவேலை திட்டி தீர்க்க, சௌந்திரவல்லியின் தலை தானாய் தாழ்ந்து போனது.

“உன் மனசு கஷ்டபடுது தெரியுதுதான்… ஆனா மனசு கேக்க மாட்டேங்குது வள்ளிக்கா… எப்படியோ புள்ளைங்க வளர்ந்தா போதும்னு நீயும் பசங்கள கண்டுக்குறதில்ல… உங்க அய்யாவும் ஊருக்கு படிப்பு சொல்லிக் கொடுக்குறத தவிர, வேற எதையும் கவனிக்க மாட்டேங்குறாரு. என்னத்த சொல்ல…” என நொடித்துக் கொண்டவள், சரண்யாவை அணைத்துக் கொண்டே,

“அரைநாள் வீட்டுல இல்ல… எம் புள்ளைய வெசனத்தோட வெளியே உக்கார வைச்சுட்டீங்களே!” கரகரத்த குரலில் வருத்தத்தை வெளிப்படுத்தினாள்.

“என்னை, நீயே தத்தெடுத்துக்கோ லயாக்கா… இனிமே நான் அந்த வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டேன். யார்கூடவும் பேச மாட்டேன்” கோபத்துடன் கூறிய சரண்யா,

“சீக்கிரம் வாக்கா! எனக்கு பசிக்குது… உன்கிட்ட நெறைய பேசணும்!” என லயாவை அழைக்க, அழுதே விட்டார் சௌந்திரவல்லி.

“ஏண்டி, எல்லாரும் சேர்ந்து என்னை பாடாபடுத்துறீங்க? அந்தவீடு, அந்த வீடுன்னே சொல்றியே… அவ்வளவுக்கு அந்நியமா போயிடுச்சா நீ பொறந்த இடம்? அவன் மட்டுமா இருக்கான்! நானும் தானேடி குத்துக்கல்லாட்டம் இருக்கேன். என்னை நெனைச்சு பார்க்க மாட்டியா? நீ எங்கேனு அப்பா கேட்டா, என்ன பதில் சொல்வேன் பட்டு?” சௌந்திரவல்லி பெரும் கேவலுடன் தனது வேதனையை வெளிப்படுத்த,

“அந்த அளவுக்கு என்மேல எல்லாம் அவருக்கு அக்கறை கிடையாது. அப்படி கேட்டா, நான் அக்கா வீட்டுக்கு போயிட்டேன்னு சொல்லு!” தனது முடிவில் சற்றும் தளராது அடமாய் நின்று பேசினாள் சரண்யா.

“இந்த இருபத்தியஞ்சு வருசமா குடும்பம், கொழந்தைங்க தான் உலகம்ன்னு வாழ்ந்துட்டு இருக்கேன். அப்படி என்ன பாதகத்தை செஞ்சுட்டேன்னு இப்படி பிடிவாதமா வெளியே நிக்கிற… வயசுப் பொண்ணு பேசுற பேச்சாடி இது?” அழுகையுடன் மகளை கண்டித்தவர், லயாவை பார்த்து,

“அவளை தாங்கிக்க, நீ இருக்குற தைரியத்துல பேசிட்டு இருக்கா… புத்தி கெட்டவ!” என்றவருக்கு இப்பொழுது கோபமும் சேர்ந்து கொள்ள, மகளை அடிக்கவும் கையை ஓங்கி விட்டார்.

“அய்யோ அக்கா… இப்ப நீ கைய நீட்டுனா, அதுக்கும் சேர்த்தே முறைச்சுட்டு நிப்பா… இன்னைக்கு ஒருநாள் என்கூட இருக்கட்டும். நீயும் அமைதியா போய் தூங்கு! நாளைக்கு இவளாவே வீட்டுக்கு வருவா…” லயா சௌந்திரவல்லியை ஆறுதல்படுத்த,

“நீயும் என்னை புரிஞ்சுக்க மாட்டேல்ல… போ… போ! நான் உன் வீட்டுக்கு வரல…” சரண்யா மேலும் முறுக்கிக் கொண்டாள்.

“உங்கம்மா திட்டினதுல தப்பே இல்லடி… பசியில புத்தி கெட்டு போய் பினாத்திட்டு கெடக்க… எழுந்திரு! உன்னையெல்லாம் சிறுசுல இருந்தே கட்டி வைச்சு நாலு போடு போட்டிருந்தா, இன்னைக்கு இப்படி அடம் பிடிச்சுட்டு நிக்க மாட்ட, கழுத…” என அவளை தன்னுடன் இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல, அன்றைய களேபரங்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

மகள் தன்னை விட்டு செல்வதையே பார்த்துக் கொண்டு நின்ற சௌந்திரவல்லியின், மனம் அனுபவித்த வலி சொல்லி மாளாது. ஒரு தாயாக தான் தோற்றுப் போய் விட்டேனோ என மனம் பெரிதாய் கலக்கம் கொண்டது.

தறிகெட்டு போன மகன்கள்; தனது வீம்பையே செயலாக்கிக் கொள்ளும் மகள்; இவற்றையெல்லாம் கண்டும் காணாததுபோல் இருக்கும் கணவன்… இவர்களை நெறிபடுத்த தவறிய தனது முட்டாள்தனம்…

எங்கே தவறு நடந்தது? எவ்வாறு சரிசெய்வது என்ற ஆராய்ச்சியை கூட செய்ய விடாமல் தன்னிரக்கத்தில் உள்ளம் கரைய, அன்று முதல் அதீத மன உளைச்சல்கள் அவரை அழுத்த ஆரம்பித்தன.

சரண்யாவின் பக்குவமற்ற செயல்களும், வெற்றிவேலின் சுயநலமும், அகம்பாவமும் ஒருதாயின் மனதை ரணகளமாக்கி வேடிக்கை பார்த்தது.

இங்கே நடப்பதை எல்லாம் வீட்டில் இருந்தே கேட்டுக் கொண்டிருந்த சசிசேகரன் குடும்பத்தினர்க்கு இடையில் சென்று சமாதனப்படுத்த தோன்றினாலும், அவ்விடம் செல்வதற்கு மனம் பல தடைகளை விதித்தது.

இதுவரை கிடைத்த நற்பெயர் போதும், இனியும் புதிய பிரச்சனை வளர்த்துக் கொள்ள வேண்டாமென, ஒட்டு மொத்த குடும்பமுமே அமைதியாக வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டனர்.

சரண்யாவின் வீம்பை கண்ட சசிசேகரனின் மனமோ, ‘இந்த பிடிவாதம் பிடிச்ச வேதாளம், எந்த மகாராஜா தோளுல தொங்கி உசுர வாங்கப் போகுதோ?’ அந்த ரணகளத்திலும், செல்லமாக திட்டிக்கொண்டு கேலி பேசியது.

ஆகமொத்தம் நடந்தது என்னவென்று யாரும் கேட்கவும் இல்லை, ஆராயவும் இல்லை… அவரவர் சுயநலம் ஒன்றே பெரிதாய்போக, பிறருக்கு ஏற்படும் பாதிப்புகளை யோசிக்கவும் தவறியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!