சரணாலயம் – 8

சரணாலயம் – 8

கமலாலயாவின் கொஞ்சலும் அதட்டலும் சரியாக வேலை செய்ய, சரண்யாவும் தனது பிடிவாதத்தை தளர்த்தி, மறுநாளே தங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள். மகள் மேலுள்ள அதிருப்தியில் மனப் பொருமலுடன் இருவரையும் உஷ்ணப் பார்வையால் ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவபூஷணம்.

ஏனோ அவருக்கு மகளிடம் பேசவேண்டும், முன்தினம் நடந்ததை கேட்டறிய வேண்டுமென்ற எண்ணமெல்லாம் தோன்றவில்லை. மகளும் உங்களிடம் எனக்கென்ன பேச்சு என்ற பாவனையில், அசட்டையுடன் காலை உணவை தன் வயிற்றுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் வேலாயதம் அழைக்கப்பட்டிருக்க, அவரின் முன்னிலையில் மகளை பார்த்து,

“இனி இவ இங்கே இருக்க வேணாம். ஏதோ படிக்கணும்னு சொன்னாளே அதுக்கு ஏற்பாடு பண்ணிக்க சொல்லு வேலு! பெத்தவனா எங்கே கையெழுத்து போடணுமோ அத செஞ்சுட்டு போறேன். இனி ஒருமுறை இவளுக்காக எங்கேயும் யார் முன்னாடியும் போய் நிக்க முடியாது” கடுமையான குரலில் கோபமாகவே கட்டளையிட்டு விட்டார்.

அவரைப் பொறுத்தவரை மகளை படிப்பிற்கென வீட்டை விட்டு அனுப்புவதை, ஒரு தண்டனையாகவே செயலாக்க நினைத்தார். அவர் நினைத்தது எல்லாம், விடுதிவாசமாவது மகளை அடக்க ஒடுக்கமாய் இருக்க கற்றுத் தரட்டும் என்பதே.

என்ன நடந்தது, எப்படி என்றெல்லாம் விசாரிக்காமலேயே இது என்ன தண்டனை என்று சரண்யாவிற்கு தோன்றினாலும், மனம் விரும்பிய படிப்பை படிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள்.

சிவபூஷணத்தின் கட்டளைக்கு அவரது வீட்டிலிருந்து வராத ஆட்சேபனை, அவரின் நண்பர் குடும்பத்திலிருந்து வந்தது.

“என்ன அண்ணா? பொம்பளை புள்ள விஷயம் இப்படி எடுத்தோம் கவுத்தோமுன்னு பேசுறீங்க! சின்ன வயசுல இருந்து விளையாடினவங்கதானே! அந்த நினப்புலதான் சேகரனும் கண்டிச்சிருப்பான்”

“நம்ம பொண்ணும் துடுக்குத்தனமா எதையும் செய்றவதானே! தற்செயலா நடந்தத, தப்பா பார்க்காதே சிவா…” என வேலாயுதமும் கோதாவரியும்தான் சரண்யாவின் சார்பாக பேசினார்கள்.

தங்கை என்ற உரிமையோடு நேரிடையாகவே தனது மன ஆதங்கத்தை வெளியிட்டு விட்டார் கோதாவரி. லச்சுவும் லயாவும் கூட இவர்களின் பேச்சுக்கு சரியென்றே தலையசைத்தனர்.

நேற்றில் இருந்து சௌந்திரவல்லியும் இதைத்தானே மந்திரமாக கணவரிடம் உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறார். இரவு முழுதும் மனைவியின் அரற்றலும், பிள்ளைகளை வளர்க்க தவறி விட்டேனா என்ற புலம்பலும் சிவபூஷணத்தை அசைத்து பார்த்ததென்னவோ உண்மைதான்.

சொந்த வீட்டிலேயே மகன்களின் போக்கினை கவனிக்க தவறிய தனது மடமையை, மனைவி சுட்டிக் காட்டியும் அத்தனை எளிதில் அவர் நம்பி விடவில்லை. நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து கொண்டு இஷ்டத்திற்கு பேசவேண்டாமென கோபத்துடன் மனைவியின் வாயை அடைத்து விட்டார்.

அதோடு பிடிவாதமாய் மகள் வீட்டிற்குள் வராததும் சேர்ந்து அவரை கொதிநிலையில் நிறுத்தியது. பெண்பிள்ளை என்ற கரிசனத்திற்கு இடம் கொடுக்காமல், அவளின் போக்கினை மாற்றியே ஆக வேண்டுமென்ற முடிவில், விடுதிக்கு அனுப்ப தீர்மானித்து விட்டார்.

“உனக்கு ஒன்னும் தெரியாது தங்கச்சி… இவளோட பிடிவாதத்துக்கு இவள கட்டுப்பாடோட இருக்கிற இடத்துல தான் தங்க வைக்கணும். என் பேரைக் கெடுக்குறதுக்குன்னே பொறந்திருக்கா…

எதுவா இருந்தாலும் வீட்டுலயே இருந்து கேட்டுருக்கனும்… அதென்ன பழக்கம்? அடுத்த வீட்டுல போய் தங்குறது… அவதான் கோபத்துல வந்தான்னா, நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பாம, கூட தங்க வைச்சுகிறதெல்லாம் நல்லாவா இருக்கு…” லயாவையும் சேர்த்தே கடிந்து கொண்டார். அவரது வார்த்தைகளில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு கோபம் தெறித்து, முகமும் கன்றிச் சிவந்திருந்தது.

“என்னை தூக்கி வளர்த்தவங்க வீட்டுக்குதான் போனேன். எப்பவும் போறதுதானே! ஆரம்பத்துல இருந்தே என்னை ஒதுக்கி வைச்சு பார்த்துட்டு, இப்ப இங்கே போகாதே, அங்கே இருக்காதேன்னு சொன்னா எப்படி? சொந்த வீட்டுலயே அந்நியமா இருக்குற வலியெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்” ஆவேசமாய் பதில் வந்தாலும், அவள் அனுபவித்த வலிகளை முதன்முதலாக வெளிச்சப்படுத்தினாள் சரண்யா.

அந்தப் பொழுதில் மகளின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாதவர், பின்னாளில் அதே வலியை தானும் அனுபவிக்க நேரிடுமென்று தெரிந்திருந்தால், மகளை அந்த நேரத்தில் அரவணைத்திருக்க கூடுமோ? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்!

“இப்படி எதிர்த்து பேசித்தான் வம்ப விலைக்கு வாங்குறா… இதெல்லாம் வீட்டுக்கு அடங்காம, ஊர் சுத்துற கழுதைங்க பண்ற திமிர்தனம்…” என, அப்பொழுதும் தன் மகளின் மீதே தவறிருக்குமென்று சிவபூஷணம் நினைத்துக் கொண்டதுதான், சரண்யாவின் துரதிஷ்டமாகிப் போனது.

குற்றம் புரிந்தவன் ஒருவன், பழியை சுமந்தவன் வேறொருவன்… தண்டனையை சுமப்பதோ சற்றும் சம்மந்தம் இல்லாத மற்றொரு ஜீவன். அப்படியான பாவப்பட்ட ஜீவனாக அவர் முன்பு நின்றிருந்தாலும் வழக்கமான அப்பாவின் கோபத்தை பார்த்து பழக்கப்பட்ட பெண்ணிற்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

தான் கேட்டது, கைக்கு வந்து சேர்ந்தது என்ற மகிழ்ச்சியுடன், ஜன்னலில் சாய்ந்து, சாதாரணமாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் சரண்யா. 

“இனிமேட்டு ஒழுங்கா நடந்துக்குறேன்னு சொல்லேன் சரணி! அப்பா இவ்வளவு கோபப்படுறாரே…” அவளையும் கடிந்து கொண்டார் கோதாவரி.

“நீ இப்படி இருக்குறது எனக்கும் பிடிக்கல பட்டு… கடைசியில நான் வளர்த்ததுதான் சரியில்லாத மாதிரி பேச்சும் வந்து சேருது…” கமலாலயா புலம்ப ஆரம்பித்தாலும் அவள் அமைதியாக இருந்தாள்.

சிவபூஷணம் பேசும் பொழுது யார் நடுவில் பேசினாலும் அவருக்குப் பிடிக்காது. சிறு பிள்ளையாய் இருக்கும் பொழுது விளையாட்டாய் அவருடன் பதிலுக்கு பதில் பேசியவள், பெரியவளானதும் அமைதியாய் தன் எதிர்ப்பை காட்டத் தொடங்கி விட்டாள். அன்றைக்கும் அதேபோல் அமைதியாக அவர் பேச்சிற்கு மறுப்பேதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

தான் ஏதாவது சொல்லப் போக, முதலில் தனது படிப்பு கெடும். அடுத்தது வெற்றிவேலைப் பற்றி, தான் என்ன சொன்னாலும் இன்றைய நிலையில் தந்தை நம்பமாட்டார்.

இல்லையென்றால் துளசியை அழைத்து மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்துவார். ஏற்கனவே பயந்து போயிருக்கும் அப்பாவிப் பெண்ணின் மனதிற்கு இதெல்லாம் பெரும் துயரமாகிப் போகும் என்பதாலேயே சரண்யா அமைதியாக இருந்து விட்டாள்.

தன் தங்கையின் பேர் அடிபடாமல் பார்த்துக் கொண்டதில் சசிசேகரன் செய்த தியாகத்திற்கு, ஏதோ தன்னால் முடிந்த உபகாரம் என்றே அக்கணம் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தாள்.

“அவ சொல்ல மாட்டா தங்கச்சி! ஏதாவது செஞ்சு தனக்கு வேண்டியதை நடத்திக்கற திறமையிருக்கு அவளுக்கு… இவ வயசு பொண்ணுங்க, எவ்வளவு பொறுப்பா இருக்காங்க! ஆனா இவ…” பல்லைக் கடித்த சிவபூஷணத்தின் முற்றுபெறாத வார்த்தைகள், கோபத்தில் கொதித்தன.

தந்தையின் கோபமும், மகளின் அமைதியும் இருவருக்கும் இடையேயான பிணைப்பை மேலும் சிக்கலாக்கியது. அன்றிலிருந்து மகளிடம் பேசுவதை முற்றிலும் கைவிட்டார் சிவபூஷணம். அவளுக்கும் சொந்த வீட்டில், அந்நியமாய் இருக்கும் சூழ்நிலையை மேலும் அதிகப்படுத்தியது.

மகளின் விடுதி வாசத்திற்கு மறுப்பு தெரிவித்து, சௌந்திரவல்லி அழுது ஆர்ப்பாட்டம் செய்ததெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாய் போயிற்று. இரு சகோதரர்களும் வாய்மூடி மௌனியாகிப் போனார்கள்.

அம்மாவின் தவிப்பில் வெற்றிவேல் உண்மையை சொல்வானோ என்ற எதிர்பார்ப்பு சரண்யாவின் மனதின் ஓரத்தில் மினுக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் அவன் எதுவுமே நடவாதது போல வேடிக்கை பார்த்து நின்றதில் இவள்தான் மனம் வெறுத்துப் போனள்.

சுயநலமிகள் வாழ்பவர்கள் மத்தியில் இத்தனை நாட்கள் வளர்ந்ததை நினைத்து வெறுத்தே போனாள் சரண்யா. அம்மாவின் அழுகை அவளுக்குள் தாங்கமுடியாத வேதனையையும் சங்கடத்தையும் உருவாக்கியது.

‘உன்னால்தானே எல்லாம்’ என்ற குற்றம் சுமத்தும் பார்வை ஒன்றை வெற்றிவேலின் மேல் வீசியதைத் தவிர, அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

இன்னொரு அண்ணன் சக்திவேல் எல்லாம் அறிந்தும், எதுவும் தெரியாதவன் போல நின்றான். அப்பாவிற்கு நல்ல மகன்களாக அவர்களே இருக்கட்டும் என்று மீண்டும் வாயை மூடிக் கொண்டாள்.

சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சரண்யா விரும்பிய பிரிவில் படிக்க இடம் கிடைத்து விட்டது. ஊரை விட்டுக் கிளம்பும் நேரத்தில், சௌந்திரவல்லி தனியாக அழைத்து கிடுக்கிப்பிடி போட்டு கேட்டே விட்டார்.

“என்ன நடந்ததுன்னு இப்பவாவது உண்மையை சொல்லித் தொலைடி! நான் அப்பாகிட்ட பேசுறேன்…” கெஞ்சாத குறையாக கண்டிப்பு காட்டினார்.

அப்பொழுதும் தனக்கும், அந்த கேள்விக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதைப் போல சரண்யா மௌனமாக நின்றாள்.

“உன்மேல எந்த தப்பும் இல்லன்னு எனக்குத் தெரியும்டி… சேகர் தம்பிதான் உன்னையும் துளசியையும் கண்ணாலயே கட்டிப் போட்டத நான் கவனிச்சேனே!” மனதிற்குள் புதைத்து வைத்ததை அழுகையுடன் வெளியே கொட்டி விட்டார் சௌந்திரவல்லி.

இதனை சற்றும் எதிர்பார்த்திராதவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. “அம்மா! அது வந்து…” ஒற்றை சொல்லில் தலை குனிய,

“பொம்பள புள்ளைங்க மேல பொல்லாப்பு வந்துறக் கூடாதுன்னு அவன் நினைச்சதுக்கு எதிரா, இங்கே உனக்கு நடக்குதே!” அவரும் தழுதழுத்தார்.

அந்த நொடி திடுக்கிட்டு அம்மாவைப் பார்த்தாள் சரண்யா. அழுகையில் கசந்த அன்னையின் முகம் அளவில்லாத வலியை வெளிப்படுத்தியது.

அதனை காண சகிக்காமல் ‘அம்மா’ என்ற கதறலுடன் இதுநாள் வரை அடக்கி இருந்த வேதனையை வெளிப்படுத்தினாள் சரண்யா.

“அழாதே ராசாத்தி!” மகளின் கண்ணீரை தனது புடவை முந்தானையால் துடைத்தவர்,

“பெரியவனா?” சட்டென்று கேட்டுவிட, திகைப்புடன் தனது அழுத கண்களை விரித்தாள் சரண்யா.

“எனக்கு தெரியும் பட்டு! புள்ள என்னென்ன செய்யும்னு ஒரு அம்மாக்கு தெரியாதா? அப்படி தெரியாதவ பெத்தவளா இருக்க முடியாதுடி. இப்படி ஒரு வீண் பழி உனக்கு தேவையா?” அன்னையின் ஆதங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அளவிற்கு, சரண்யாவின் கண்களில் இருந்து மீண்டும் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

“அப்பாவுக்கு நான் எப்பவும் கெட்ட பொண்ணுதானே! இப்பவும் அப்படியே இருந்துட்டுப் போறேன்… நீ எதுவும் சொல்லாதம்மா!” என தாயை சமாதானப்படுத்தி விட்டு கனத்த மனதுடன் விடுதிக்கு பயணமானாள் சரண்யா.

************************************************

சரண்யா சென்னை கிளம்பிப் போன அடுத்த வாரத்தில், ராமசாமியும் தனது குடித்தனத்தை அங்கிருந்து மாற்றிக் கொண்டார்.

சசிசேகரனை அதட்டி விடாமல் கேட்டதில் நடந்ததையெல்லாம் அவனும் சொல்லியிருக்க, உடனே குடித்தனத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவினை எடுத்து விட்டார்.

அங்கேயே இரண்டு தெரு தள்ளி இருக்கும் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, அதை சிவபூஷணத்திடம் தெரிவித்து விட்டார்.

அவரும் இதையே எதிர் பார்த்திருந்தவர் போல, மறுப்பேதும் சொல்லாமல் சரியென்று சம்மதித்துவிட, ராமசாமியின் மனது வெகுவாய் கலங்கிப் போனது. தனது விசுவாசத்திற்கும் உழைப்பிற்கும் கிடைத்த நற்பலன் இதுதானா என்று மனதோடு நொந்து போனார்.

அந்த நேரத்தில் கூட, உங்கள் மகன் மீதுதான் தவறு என்று தனது முதலாளியிடம் உண்மையை பகிரவில்லை. வீட்டை விட்டு செல்லும் கடைசி நேரத்தில் வீணான மனஸ்தாபத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டாமென அமைதியாக இருந்து விட்டார்.

வீட்டை மாற்றிக் கொண்ட நாளிலிருந்து சசிசேகரனின் குடும்பம் சந்தித்த துன்பங்கள் ஏராளம். செய்யாத தவறுகளை எல்லாம் ராமாசாமி செய்ததாக, வெற்றிவேலும் சக்திவேலும் பொய்களை புனைந்து சொல்லிட, அதுவும் நம்பத் தகுந்ததாகவே அமைந்து சிவபூஷணத்திடம் இருந்து முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

படிக்கும் பிள்ளைகள் கண்ணெதிரே வளர்ந்து நிற்க, அவரின் வருமானம் ஒன்றே அந்த குடும்பத்தின் உயிர்நாடியாக இருந்தது. அதனை தரும் வேலையும் பறிபோனதில் முற்றிலும் உடைந்தே போனார் ராமசாமி.

விவசாயம், நிலங்கள் சம்மந்தமான வேலைகளை மட்டுமே செய்து வந்தவருக்கு அத்தனை எளிதில் யாரிடத்திலும் வேலை கிடைக்காமல் போக, மனதளவில் மிகவும் சோர்ந்து போனார்.

கமலாலயா தனது நிலபுலன்களை கவனித்துக் கொள்ளுமாறு அழைக்க, அங்கே சென்றாலும் அவரால் மனம் ஒன்றி வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. சகோதரர்களின் இளக்காரப் பார்வை அங்கும் அவரை தொடர்ந்து கொண்டே இருக்க, வெறுத்துப் போய் வீட்டிற்குள் முடங்கிக் கொண்டார்.

அதீத மன உளைச்சல், வேலைக்காவென அதிக அலைச்சல் என எல்லாம் சேர்ந்து, கல்லீரல் அலற்சியில் படுத்தே விட்டார். ரத்த வாந்தி எடுத்ததும் அனைத்து பரிசோதனைகளையும் செய்த மருத்துவர், முன்பிருந்தே உடலை கவனித்துக் கொள்ளாததின் விளைவு என்று கையை விரித்துவிட, முப்பது நாள் படுக்கையில் இருந்தவர் ஒரெடியாக இறைவனடி சேர்ந்து விட்டார்.

குடும்பத்தின் ஆணிவேறாய் இருந்தவரின் மறைவு சசிசேகரனை மொத்தமாய் புரட்டி போட்டது. சேமிப்பும் சிறிதளவே கைவசம் இருந்த நிலையில் அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கும் நிலையையும் மறந்திருந்தான்.

மூன்றாம் வருட படிப்பின் இறுதி கட்டத்தில் இருந்தவனுக்கு படிப்பை விட்டு வெளியே வந்தாலும் பிரயோஜனமில்லை. அங்கிருந்து வரவும் முடியாத பயிற்சிக் காலமும் அவனை கட்டிப்போட்டது.

அன்னைக்கும் தங்கைக்கும் ஆயிரம் பத்திரங்கள் கூறி, வேலாயுதம் மற்றும் கமலாலயாவிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கப்பலுக்கு சென்று விட்டான்.

சிவபூஷணமும் அப்படியொன்றும் பாராமுகமாய் இருந்து விடவில்லை. மனைவி மூலம் அந்த குடும்பத்திற்கு தேவையான மாத பொருட்களை வாங்கி கொடுக்க சொன்னவர், சசிசேகரன் படிப்பதற்கு தேவையான பணத்தையும் மாதந்தோறும் வேலாயுதம் மூலம் கொடுத்து உதவினார். சசிசேகரன் மறுத்தும் உனக்கென்ற வருமானம் வரும் வரை ஏற்றுக்கொள் என பிடிவாதமாய் கொடுத்தார்.

அவன் எப்படி இருந்தாலும் தனது கடமை ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதே என்று, தான் கொண்ட கொள்கையில் இருந்து அவர் சற்றும் பின்வாங்கவில்லை.

இந்த நேரத்தில், தான் அந்த குடும்பத்தை பார்க்கா விட்டால் இத்தனை வருடங்கள் ராமசாமியின் உழைப்பை அவமதித்தாய் போய்விடும் என்றே அத்தனையும் சத்தமின்றி செய்தார்.

ஒரு வழியாக சிவபூஷணத்தின் மகன்கள் கையில் வேளாண்மை, வரவு செலவுகள் போன்ற சகலமும் கைமாறிவிட, இவரின் வேலையெல்லாம் கற்பிப்பது, ஊர் காரியங்களை கவனிப்பது என்றாகிப் போனது.

சசிசேகரனின் தாய் காமாட்சியும் வயல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். பழக்கமற்ற வேலைகளை அதிகமாக எடுத்து செய்தால் உடல்நலமும் பெரும் பாதிப்பை அடையும் அபாயம் உள்ளது.

அதிகாலையில் நடவு செய்ய செல்பவர் இடைப்பட்ட நேரங்களில், வீட்டு வேலைகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். என்னதான் முதலாளி வீட்டில் வஞ்சனை இல்லாமல் வந்தாலும் அதை வாங்கிக் கொள்ள உடலும் மனமும் கூசிப் போனது.

வேண்டாமென்று சொல்லி அவர்களின் மனதை சங்கடப்படுத்தாமல், தன் தேவைகளை சுருக்கி கொண்டார். நாற்பததைந்து வயது வரை உழைக்காத உடல் அத்தனை எளிதில் உழைப்பின் பாரத்தை பழகிக் கொள்ளவில்லை. அதன் பலன் உடல் தளர்ந்து போக, ஒரு மழைநாளில் மூச்சுத் திணறலில் இறுதி மூச்சை விட்டிருந்தார்.

தாங்கொணாத் துயரங்கள் அடுத்தடுத்து படையெடுத்ததில் ஒரு குடும்பம் நிலைகுலைந்து போனது. சரண்யா படிக்க சென்று ஆறுமாதங்கள் மட்டுமே முடிந்த நேரமாதலால் எதற்கும் அவளால் வர இயலவில்லை.

பெரியவர்களும் அவளை வரச் சொல்லவில்லை. இறுதியாக துளசியின் பொறுப்பை கமலாலயா ஏற்றுக் கொள்ள, அவளும் பள்ளி இறுதியாண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்தாள்.

சசிசேகரனும் வாரம் ஒருமுறை அலைபேசியில் விசாரித்து கொண்டிருந்தான். பயிற்சிகால வருமானம் அந்த சமயத்தில் கிடைக்க ஆரம்பிக்க, சற்றே ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொண்டான். 

வெற்றி தன்னிடம் நடந்து கொண்ட அன்றைய அத்துமீறலை எக்காரணம் கொண்டும் துளசி, லயாவிடம் சொல்லவில்லை. ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று முடங்கிக் கொண்டாள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தன் அம்மாவிடம் பேசும் சரண்யா, லயா மற்றும் துளசியிடம் மட்டுமே பேசுவாள்.

தன் தந்தை சிவபூஷணத்திடம் பேசவேண்டும் என்றுகூட நினைக்க மாட்டாள். அவரும் மகளிடம் பேசுவதை மறந்தே போயிருந்தார். அவள் செய்த தவறுக்கு தான் கொடுக்கும் தண்டனை இது என, தனது மௌனவிரதத்தை பெற்ற பெண்ணிடம் கடைபிடித்து வந்தார்.

கல்லூரி படிப்பு, தோழிகளுடன் அரட்டைகள் என்று பொழுதுகள் விரைந்தாலும், அம்மா உண்மையை எப்படி கண்டு பிடித்திருப்பாள் என்ற யோசனை பல சமயம் சரண்யாவின் மனதில் எழாமல் இல்லை.

முதல் வருடம் படிப்பு முடிந்து, கல்லூரி விடுமுறை சமயத்தில் லட்சுமியின் திருமணமும் நடக்க, கிராமத்திற்கு வந்தாள் சரண்யா. மண்டபத்தில் லயா மற்றும் துளசியுடன் இவள் அமர்ந்திருக்க அந்த சமயத்தில் அங்கே வந்த சசிசேகரனை ஆர்வமுடன் பார்த்தாள்.

அந்த கருப்பு நாளிற்கு பிறகு இன்றுதான் அவனைப் பார்க்கிறாள். ஒரு வருடத்தில் தோற்றத்தில் கம்பீரமும், பார்வையில் கூர்மையும் அவனிடத்தில் கூடிப் போனதாய் தோன்றியது அவள் கண்களுக்கு…

இவள் பார்ப்பதையே விரும்பாதவன் போல், புருவம் உயர்த்தி, முகத்தை சுளித்துக் கொண்டான் சசிசேகரன். உண்மையில் இத்தனை நாட்கள் கழித்து இவளை காண்பதில் சசிசேகரனுக்கும் மனதின் ஓரத்தில் ஆர்வம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அனுபவித்திருந்த வலிகள், மனதை மறத்துப் போகச் செய்திருந்தன.

நேருக்குநேர் பார்த்து நின்றாலும், சகஜமாய் பேச ஏனோ இருவரும் முன்வரவில்லை. வேண்டா வெறுப்பாக இவளை பார்ப்பதை தவிர்த்த சசிசேகரன், முகத்தை திருப்பி கொண்டுபோக, இவளுக்குதான் மனம் சுணங்கிக் கொண்டது.

“நான் என்ன பண்ணிட்டேன்னு, என்னை முறைச்கிட்டு போறான்?” வெளிப்படையாகவே துளசியிடம் முறையிட்டு விட்டாள் சரண்யா.

“அண்ணே, இப்போ எல்லாம் இப்படிதான் கடுகடுன்னு மூஞ்சிய வைச்சிட்டு இருக்கு சரணி! நீ கண்டுக்காதே…” துளசியும் ஆறுதல்படுத்த,

“எல்லாருமே நம்மை புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்க்க முடியாது பட்டு! உன் வேலை என்னவோ அத மட்டும் மனசுல வை…” லயாவும் தன் பங்கிற்கு சரண்யாவிற்கு அறிவுறுத்தினாள். 

இந்த சமயத்திலும் லயாவிடம் உண்மையை சொல்ல வேண்டுமென்று இரு பெண்களுக்கும் தோன்றவில்லை. தங்கையுடன் பேசவென துளசியை சேகரன் தனியே அழைத்து சென்றது சரண்யாவின் வருத்தத்தை மேலும் அதிகரித்தது.

சற்று நேரத்தில் அங்கே வந்த தோழிகளுடன் அரட்டையில் மூழ்கிவிட, பேச்சுவாக்கில் இவளின் குடும்ப விஷயமும் கசியத் தொடங்கியது.

“உங்க ரெண்டு அண்ணனுங்களும் மைனர் ஆகிட்டாங்கடி சரணி! வெளியூர்ல அவங்க ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு…” கிண்டலடித்து சிரிக்க, இவளுக்கு தர்மசங்கடமாய் போனது.

தோழிகள் சொல்வதும் உண்மைதான் என கமலாலயா பார்வையாலேயே விளக்கினாள். அந்த சமயத்தில் இவர்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த சௌந்திரவல்லியிடம் வந்த ஊர்க்கார பெண்மணி ஒருவர், குடும்ப நலத்தை விசாரித்துவிட்டு, கமலாலயாவை ஜாடையாக பேசத் தொடங்கினார்.

“நாளும் பொழுதும் இவளுக்கு உங்க வீட்டுலதான் கழியுது போல… உன் பொண்ணு இல்லன்னா, உங்க வீட்டு அய்யா… இவங்கள்ல யாரையாவது ஒருத்தர இவ கைக்குள்ள போட்டுக்கிட்டு திரியுறா… இதையெல்லாம் நீ கண்டிக்க மாட்டியா?” என குத்திக் காட்டிப் பேச, அது தெளிவாய் இரு பெண்களின் காதிலும் விழுந்தது. 

தனது புதிய தோட்டத்திற்கு தேவையான ஆலோசனைகளை சிவபூஷணத்திடம் கேட்டுத் கொள்வதை தொடர்ந்து கொண்டிருந்தாள் லயா. அதை வேறொரு கோணத்தில் எடுத்துக் கொண்டவரின் போதனைகள் இவை.

அவரின் பேச்சைக் கேட்ட சௌந்திரம், “எங்க வீட்டு விஷயம் உங்களுக்கு எதுக்கு? எனக்கு அவளையும் தெரியும், அவரையும் தெரியும். ஊருல ஒரு பொண்ணு தனியா இருந்திடக்கூடாது, பேச வந்துடுவீங்க!” உஷ்ணத்துடன் அந்த பெண்மணியின் வாயை அடைக்க,

“பார்த்து, பார்த்து… உன்னோட இடத்துக்கு பங்கம் வந்துடப் போகுது!” பேச்சுவாக்கில் வந்தவரும் கொளுத்திப் போட்டுப் போக, பின்னால் சிறியவர்கள் இருப்பதை அறியாமலயே,

“என் வீட்டுக்காரர்கிட்ட இருந்து எந்த தொல்லையும் அவளுக்கு வராது. அவரு பிள்ளைங்ககிட்ட இருந்து வராமதான் அவளை பத்திரமா பார்த்துக்கணும்!” என்ற முணுமுணுப்புடன் தன் வேதனைகளை கொட்டிவிட்டார்.

அம்மாவின் மனவலிகளை அறிந்துகொண்ட சரண்யா, ஆறுதலாக அவரை தொட்டு அழைக்க, திரும்பி மகளை பார்த்தவுடன் தவித்துப் போய் விட்டார்.

“என்னம்மா சொல்ற?” திகைப்புடன் சரண்யா கேட்க,

“ஒண்ணுமில்ல பட்டு!” என்றே தலைகுனிந்து கொண்டார்.

அம்மாவின் இந்த செய்கைக்கு என்ன அர்த்தம்? அண்ணன்கள் இன்னமும் தங்களது விளையாட்டுகளை நிறுத்தவில்லையா? அக்காவை கூட தப்பாய் பார்த்து தொலைக்கின்றனரா? சரண்யாவின் மனதில் கேள்விகள் ஓடினாலும் யாரிடம் இதை பற்றி கேட்க முடியும்.

சரண்யா வீட்டில் இருக்கும் சமயங்களில் அண்ணன்கள் பெரும்பாலும் வீட்டிற்கு வருவதில்லை. அப்பாவும் முகம் கொடுத்து பேச மாட்டார். இதனை கண்கூடாக கண்டவள் பழையபடி, சில நேரங்களில் லச்சுவின் வீட்டிலும் சில நேரங்களில் லயாவின் வீட்டிலும் என நாட்களை கழித்தாள்.

அப்படி ஒருநாள் மாலையில் லயா வீட்டில் துளசியை பார்ப்பதற்கென சசிசேகரன் வருகை புரிய, அந்த நேரத்தில் துளசி, சரண்யாவுடன் தோட்டத்தில் இருந்தாள். அங்கே வந்தவனுடன் பேசுவதா வேண்டாமா என தயக்கத்துடன் சரண்யா யோசிக்கும் போதே,

“நீ இங்கே இருக்கேன்னு தெரிஞ்சிருந்தா, நான் இந்த பக்கம் வந்திருக்க மாட்டேன்…” கடுகடுப்புடன் அவளிடம் முறைத்தவன்,

“துளசி கோவிலுக்கு வர்றியா? இங்கே பேச வேணாம்” வெட்டிவிட்ட பேச்சில் சரண்யாவை முற்றிலும் தவிர்த்தான்.

தன் பெற்றோர்களின் இறுதிக்கால துயரம், இவள் அண்ணன்கள் செய்த செயலால்தான் என்ற ஆணித்தரமான எண்ணம் மனதில் பதிந்திருக்க, அந்த மனத் தாங்கலை எல்லாம் அவளிடம் இறக்கி வைத்தான்.

“நான் உள்ளே போறேன் சசி! நீங்க பேசுங்க…” சரண்யா விலகிப் போக,

“இவகூட கொஞ்சம் தள்ளியே இரு துளசி! ஒருதடவ பட்டது போதும். தங்கச்சிய பார்க்க வர்ற சாக்குல உன்கிட்ட திரும்பவும் வந்து வம்பு பண்ண போறாங்க, இவ வீட்டு பரதேசிங்க…” வரைமுறை இல்லாமல் பேசிவிட, துளசிதான் அவனது பேச்சை தடுத்து நிறுத்தினாள்.

“போதும்ணா! தப்பு செஞ்சது யாரோ… அதுக்கு இவ என்ன பண்ணுவா? நீயும் இவளை புரிஞ்சுக்காம பேசுவியா?”

“புரிஞ்சு என்ன பண்ண? இன்னைக்கு நாம ரெண்டுபேரும் அனாதையா நிக்கிறோம்னா அதுக்கு காரணம் இவ அண்ணனுங்க… கொஞ்சமும் யோசிக்காம என்மேலயும் குத்தம் இருக்கும்னு முடிவு பண்ணின இவங்க அப்பா… மொத்தத்துல இவங்க குடும்பம்தான் நம்மை நடுத்தெருவுல நிறுத்தியிருக்கு!” என்று வெடித்து விட்டான்.

அன்றைய நாளில் குற்றத்தை செய்தவன் நான்தான் என ஒத்துக் கொண்டதை எளிதாய் மறந்திருந்தான் சசிசேகரன்.

பலநாட்களாக அடைத்து வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் அங்கே தடையின்றி உடைபட, இதற்கெல்லாம் எப்படி பதில் சொல்வது? இவனை எப்படி சமாதானப்படுத்துவது என்றே புரியாமல் சரண்யா ஊமையாகி நின்றாள்.