சிறிதளவு காதல்

சிறிதளவு காதல்

 

அன்றைய காலை பொழுதே தீபாவளியாக தான் அந்த வீட்டில் துவங்கி இருந்தது. விடியல் காலை என்றால் என்னவென்றே தெரியாத விக்ரம் வீட்டில் கேட்ட டம டம  சத்தத்தில் அறையில் இருந்து எரிச்சலாக எழுந்து வந்தான். இவன்  அறையில் இருந்து வெளியே வந்து பார்க்க, அந்த வீட்டின் ஆணிவேர்,  ஆசிரியருக்கு அஞ்சிய அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடென்ட் போல அடுப்படியின் வாசலில் நின்று கொண்டு உள்ளிருக்கும் நபரிடம் ஏதோ பேச இவர் அடி எடுத்து வைத்தால் உள்ளிருந்து ஒவ்வொரு பாத்திரமாக வெளியே வந்து விழுந்தது.

 

இவர் அதிலிருந்து தன்னை காப்பாற்றி கொண்டும் ஏதோ சமாதானம் செய்து கொண்டும் இருந்தார், அவர் சங்கரன். விக்ரமின் தாத்தா அவனுக்கு விவரம் தெரிந்ததிலிருந்தே அவன் தாத்தானுக்கும் பாட்டிக்கும் இடையில் இப்படி சிலபல அடி மழைகள் அடை மழையாய் பொழிவது உண்டு. இதுவும் அதே போல் தான் என்று அவன் மீண்டும் கதவை சாற்றி கொண்டு உள்ளே சென்று இழுத்து மூடிக்கொண்டு விட்ட உறக்கத்தை மட்டும் அல்லாமல் கனவில் வந்த அவன் கனவு கன்னியையும் பிடிக்க சென்று விட்டான்.

 

இனி பெருசுகளின் பஞ்சாயத்தை பார்ப்போம். 

 

“மங்கை நான் சொல்றத கேளு கண்ணு” அவரின் மனதை கொய்த மங்கையர்க்கரசியிடம்  மன்றாடி கொண்டிருந்தார் சங்கரன்.

 

மங்கையுடன் மணம்முடித்து அறுவது வருடங்களை கடந்த  பிறகும் கூட மனிதருக்கு பெண்மை எதற்க்கெல்லாம் கோபம் கொள்ளும் கோபத்தில் அவருடன் பேச மறுத்து அவரை கொல்லும் என்று அவரால் புரிந்து கொள்ள முடிந்ததே இல்லை. பெண்ணும் பெண்மையும் எப்பொழுதுமே புரியாத புரியவைக்க முடியாத புதிர்…

 

மங்கையை பெண் பார்க்க சென்ற பொழுது அவருக்கு வயது இருபத்தைந்து மங்கைக்கு பதினைந்தே வயது தான். அப்பொழுதெல்லாம் இது மிகவும் சகஜமான ஒன்று, பெண் பூப்பெய்திய உடனேவே மணமகனுக்கான தேடுதல் வேட்டை ஆரம்பம் ஆகிவிடும். அப்படி மங்கை பூப்பெய்திய மூன்றே மாதத்திலேயே சங்கரனுக்கு மணம் முடித்து வைத்துவிட்டனர் .

 

முதலில் மங்கை மண்ணாலனுடனான  புதிய வாழ்க்கை முறையில் தடுமாறினாலும், போக போக அவரின்றி அணுவும் அசையாது என்ற அளவுக்கு மங்கையை தாங்கு தாங்கு என்று தாங்கி இருந்தார் சங்கரன்.

 

மாதவிடாயின் வலி கூட பழக்கம் இல்லாத மனையாளின் மாதாந்திர வலிகள் எல்லாம் மனிதரின் மனதில் இப்பொழுதும் நெருஞ்சி முள்ளின் குத்தல்கள் தான்.

 

அவர்களுக்கு முதல் மகவு பிறந்த சில நாட்களிலேயே மங்கையை பள்ளிக்கு அனுப்பி அவரின் ஆசைக்கினங்க படிக்க செய்திருந்தார் சங்கரன் இப்பொழுது மங்கை பார்வை இல்லா பிள்ளைகளுக்கு தமிழ் ஆசிரியர். 

 

அத்தனை புகழுக்கும் சங்கரன் மட்டுமே காரணம் சமுதாயம் என்பதைத் தாண்டி இரு வீட்டு பெற்றோர்களின் எதிர்ப்பு தான் அவருக்கு பெரிய சவாலாக இருந்தது. மனைவிக்காக இவ்வளவு செய்த மனிதர்  பெரியளவில் படிப்பறிவு இல்லாதவர். குடும்ப தொழிலான அரிசி ஆலை ஒன்றை தான் நடத்தி வந்தார். 

இப்பொழுது அவர்களின் வாரிசு அதை அடுத்த அளவிற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

 

எத்தனை எடுத்து கூறியும் மனைவி புரிந்து கொள்ளாததால் கடுப்பான சங்கரன் அமைதியாக சென்று அவரின் சாய்வு நாற்காலியில் கண்கள் மூடி அமர்ந்து கொண்டார் . சிறிது நேரத்திற்கெல்லாம் வாசற் கதவு டொம் என்ற சத்தத்துடன் சாற்றும் சத்தம் கேட்டது. மனைவி ஆசிரியர் பணியாட்ற கிளம்பிவிட்டது புரிந்தது. 

 

இவர் எழுந்து சென்று பேரனை எழுப்பி அவனுடன் சேர்ந்து காலை நேர உணவை முடித்து கொண்டவர் மீண்டும் சாய்வு நார்காளியில் சென்று கண்கள் மூடி அமர்ந்து கொண்டார். விக்ரமும் அவர் அருகில் ஒரு சிங்கில் சோஃபாவை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தவன் ஆன்லைனில் வளம் வந்து கொண்டிருந்தான், அவனின் ஐ ஃபோனில். 

 

சிறிது நேரத்திற்கெல்லாம் தாத்தாவின் இதழ்கள் பொன்முறுவல் பூத்தது. 

கடந்த கால காதலை மீண்டும் ஒரு முறை நினைவில் கடந்து வருகிறார் போல, அதையே தான் விக்ரமும் கேட்டான். 

 

“என்ன தாத்ஸ் ஒரே வெக்க சிரிப்பா இருக்கு மார்னிங்கே  மேங்கோ கூட செம்ம லவ்ஸ் போல உங்க இச் இச் சத்தம் நாப்பது இன்ச் தள்ளி இருக்க என் ரூம் வரை கேட்டுச்சே…ஹம் ஹம்” சிறியவன் பெரியவரை வம்புக்கு இழுத்தான்.

 

அவன் கேட்ட தினுசில் கல கலவென சிரித்துவிட்டார் அவர். 

 

“டேய் விக்ரமா நானே எப்புடி உயிர் பொழச்சேனு  தீவிர யோசனைல இருக்கேன்டா.” ஒரு மாதிரியான குரலில் தாத்தா சொல்ல , பேரனுக்கு புரியவில்லை.

 

“என்ன தாத்ஸ் அண்டா குண்டான பார்த்து பயந்துட்டியா?” 

 

“அட போடா விக்ரமா என் அரசியோட அந்த குண்டு கண்ணுக்கு முன்னாடி அண்டான் குண்டான்லாம் எனக்கு ஜுஜுப்பிடா” இப்பொழுதும் வெக்க சிரிப்பு பெரியவரிடம்.

வாசற் கதவு படார் என அடைத்து கொள்ளும் முன்பே மனைவியின்  கோவ பார்வை அவரை அறைந்து விட்டு சென்றதை ஓர கண்ணால் ரசித்திருப்பார் போல.

 

“என்னவோ போ தாத்ஸ். சரி எதுக்கு காலைலேயே மேங்கோ உன் மேல அவ்ளோ கோவமா இருந்துச்சாம்?”

 

“பக்கத்து வீட்டு எழிலரசி பாப்பாவ அரசினு கூப்டேன்னு கோவம்டா”

பெரியவர் சொல்லி முடிக்கவும் சின்னவன் ஒரு கேவலமான லுக்குடன் கிளம்பி சென்று விட்டான். மீண்டும் விட்ட தூக்கத்தையும் கனவு கன்னியையும் தொடர.

 

நேரம் மாலை ஐந்து, மங்கையர்க்கரசி வீடு வரும் போது.

 

மகனும் மருமகளும் கூட இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. வரும் போதே கவனித்திருந்தார் பேரனின்  காளை மாட்டின் உருவம் கொண்ட வாகனத்தை காணவில்லை.

உள்ளே சென்று முகம் கழுவி விட்டு இவர்  கிச்சனில் எட்டி பார்க்க தூக்கி கட்டிய வேட்டியும் தலையில் கட்டிய துண்டுமாய் அடுப்பில் இருந்த கடாயில் எதையோ கிண்டி கொண்டிருந்தார் சங்கரன், “என்ன மில்லுகாரரே உங்க அரசிக்கு ஏதோ ஸ்பெஷலா பண்ற மாதிரி தெரிதே.”

பேச்சில் அத்தனை எரிச்சல் அடுப்பின் மற்றொரு பக்கத்தில் பால் பாத்திரத்தை ஏற்றிய படி மங்கை கூற, அவரின் இடை பற்றி அல்லேக்காக தூக்கி கிட்சன் செல்ஃபில் அமர வைத்தார் சங்கரன்.

 

மங்கை முகத்தில் சங்கடமன ஒரு வெட்க சிரிப்பு, “ஏன்டிமா அஞ்சு வயசு புள்ள கூடலாம்  போட்டி போடுவியா?” சிரித்து கொண்டே கேட்டார் சங்கரன். 

வெட்க சிரிப்பு வேறு ரூபம் கொள்ளும் முன்னே பேச்சை மாற்றி விட்டார் அவர். 

 

“அப்புறம் ஸ்கூல் எல்லாம் எப்பிடு போயிட்டு இருக்கு மங்கை.” சங்கரனின் பேச்சு லாவகத்தில் மங்கையும் கலந்து கொள்ள பால் பாத்திரத்தில் இருந்த பால் பொங்கி  வழியும் முன்னே அதில் டி தூளை சேர்த்தார் சங்கரன். 

 

“டி தூள், இஞ்சி, பிறகு சர்க்கரை.” என  சொல்லிக்கொண்டே கரண்டியில் அள்ளி போட்டவர் பிறகு டீயிலும் பக்கத்தில் அவரின் கை மனத்தில் உண்டான கேசரியிலும் வெறும் கையை எதையோ தூவுவது  போல் செய்து கொண்டே அவர், அவரின் அரசி முகம் காண இருவரின் இழல்களும் முனு முனுத்தது 

 

“சிறிளவு காதல்” என,

மனைவியின் மாதவிடாய் பொழுதுகளில் வீட்டில் இவரின் சமையல் தான்.

 

அப்பொழுதெல்லாம் உணவில் உப்பு, காரம், புளி, சர்க்கரையுடன் சேர்த்து சிறிதளவு காதலையும் கலந்து மங்கையையும் அதில் கரைத்திருந்தார் மனிதர்.

 

அறுவது வருட வாழ்க்கையில் எத்தனை சண்டை வந்தாலும் திகட்டி விடாத சிறிதளவு காதலுடன் அதை கடக்க பழகி இருந்தனர் சங்கரன் மற்றும் மங்கையர்க்கரசி தம்பதியினர்.

 

“எப்படிங்க நீங்க செய்ற கேசரி மட்டும் ரவ ரவயா பிரிஞ்சி இவ்ளோ அழகா வருது  நான் சமைக்க ஸ்டார்ட் பண்ண நாளில் இருந்து கேக்குறேன் சொல்லி குடுக்கவே மாட்டேங்குறீங்கலே…” சலித்து கொண்டார் மங்கை. 

 

“அது உனக்கு தெரிஞ்சிட்ட அப்புறம் எப்புடி அரசிமா நான் உன்ன ஒவ்வொரு முறையும் சமாதானம் செய்ய முடியும்…” இப்பொழுது  சங்கரனின் தோளில் மங்கையர்க்கரசி சாய அவர்களின் இன்றைய சண்டை இனிதே முடிவடைந்தது…

 

***