கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே,
தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே,
முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.
சில்லென்ற தீப்பொறி
தீப்பொறி – 1
ஆதவனின் ஒளிக் கிரணங்கள் பூமியை அலங்கரித்த அழகான காலைவேளை. ‘ரெங்க பவனம்’ என்ற அழகிய பெயரைத் தாங்கிய பெரிய மாளிகையின் சுப்ரபாதநேரம்.
அதன் நுழைவாயிலைத் தாண்டி உள்ளே வந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலர்தோட்டம் பல வண்ணங்களில் அணிவகுத்து, அந்த பெரிய பங்களாவை குளிர்வித்து அழகுபடுத்திக் கொண்டிருந்தது.
மாளிகையின் பிரம்மாண்டமான வரவேற்பறையின் உள்வாசலை அலங்கரிக்கும் விதமாக பிள்ளையாரும் குபேரரும் இணைந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தனர்.
காலைநேர நடைப்பயிற்சியை முடித்து வந்த ரெங்கேஸ்வரன் பெருமூச்சுக்களை விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அவருக்கான சத்துமாவு கஞ்சியை கொண்டுவந்து வைத்தார் கமலாம்மா.
அந்த வீட்டின் சமையல் முதல் சகலத்திலும் பங்கு கொள்ளும் பொறுப்பாளி இவர். மொத்தத்தில் வீட்டு நிர்வாகத்தில் உறுதுணையாக நிற்கும் விசுவாசமான பணியாள்.
“பாப்பா இன்னும் எந்திரிக்கலயா கமலம்?” மகள் வந்து கொடுக்கும் நேரத்தில் வழமைக்கு மாறாக இவர் வந்து நிற்க, பெண்ணை விசாரித்தார் பெரியவர்.
“பாப்பா ரூமுல இருக்குங்க ய்யா! அவ கீழே வர்றதுக்கு கொஞ்ச நேரமாகும்” சன்னப் சிரிப்புடன் கூற,
“ஏன், நைட் லேட்டா தூங்கினாளா? இல்ல உடம்புக்கு ஏதும் முடியலயா?” தன்னால் தொற்றிக் கொண்ட பரபரப்புடன் கேள்விகளை அடுக்கினார் ரெங்கேஸ்வரன்.
“அடடா எதுக்கு இத்தன பதட்டம்? மாப்பிள்ள தம்பி ஊருல இருந்து வந்திருக்காரு!” காரணத்தை போட்டுடைக்க,
“ஒஹ், அப்ப சரி…” மனம் சமாதானமானவராய் மகளின் அறையை கண்களால் நோக்கிவிட்டு, அன்றாடங்களை கவனிக்க தனதறைக்குச் சென்றுவிட்டார்.
சரியாக நாற்பத்தைந்து நிமிடங்கள் கழித்து, அவர் உணவு மேஜைக்கு வர அப்பொழுதும் மகள் கீழே வந்திருக்கவில்லை. இன்டர்கம்மில் மகளை அழைக்க, அதுவும் எடுக்கப்படவில்லை.
‘வந்ததும் ஆரம்பிச்சுட்டானா! இதெல்லாம் எப்போ சரியாகப் போகுதோ?’ விரக்தி பெருமூச்சுடன் காலை உணவை எடுத்துக் கொண்டவர்,
“பாப்பாகிட்ட நாலு நாளைக்கு ஆபீசுக்கு வர வேணாம்னு நான் சொன்னதா சொல்லிடு கமலம். மெதுவா அவ எழுந்து வரட்டும். நீயும் போயி டிஸ்டர்ப் பண்ணாதே!” அறிவுறுத்தி விட்டு தனது அலுவலகத்திற்கு கிளம்பி விட்டார் ரெங்கேஸ்வரன்.
இனி மகளுடன் சாவகாசமாய் பேச நான்கு நாட்கள் ஆகுமோ, ஐந்து நாட்கள் ஆகுமோ? இம்மியளவும் தன்னை விட்டு விலகாமல் மனைவியை தனதருகிலேயே வைத்துக் கொள்வதில் கைதேர்ந்தவன் இவரின் மருமகன். மனைவியினிடத்தில் அத்தனை ஆளுமையை காண்பிப்பான்.
மனமெல்லாம் மகள் மருமகனைப் பற்றிய நினைவுகளே ஆக்கிரமித்துக் கொள்ள, சலிப்புடன் சாலையில் கவனத்தை பதித்தார். புயலுக்கு முன்வரும் அமைதி போல மருமகனின் வருகையும், வீட்டின் அமைதியும் பெரியவரின் நிம்மதியை கூறுபோடத் தொடங்கியது.
எல்லாம் வினைபயன்! அனுபவிக்க வேண்டுமென்று விதி இருந்தால் அதை மாற்றவா முடியும்? வாழ்க்கையின் தத்துவார்த்தங்களை அசைபோட்டுக் கொண்டே ரெங்கேஸ்வரன் நிகழ்விற்கு வர, அவரின் மகளோ தலைவேதனையுடன் அந்த விடியலை வரவேற்றிருந்தாள்.
தினசரி வேலைகள் சூடுபிடித்துக் கொண்ட பரபரப்பான காலை நேரத்தில் உடும்பனின் முரட்டுப் பிடியில் வகையாக மாட்டிக் கொண்டு நெளிந்தாள் லக்கீஸ்வரி. இன்டர்கம்மில் தந்தை அழைத்த பிறகு, அமைதியாக உறங்கிக் கிடந்தவனின் காதல் கிரகம் முழித்துக் கொண்டதோ!
ஒருபக்கம் மனைவியை அணுவணுவாய் ரசித்து முத்தமிட்டு கொஞ்சியவனின் பேச்சுகள் எல்லாம் மாமனாரை தாக்கியே வெளிவந்தன. தன்னிடமே தந்தையைப் பற்றி நிந்திக்கும் வேளையில், இவனது காதலின் சுகத்தை முற்றும் முழுதாய் அனுபவிக்கவும் முடியாமல் முள்ளாய் குத்திவிடுகிறது பெண்மனம்.
திருமணமான முதல் வாரத்தில் ஆரம்பித்த பழக்கம் இது. இதோ எட்டு மாதங்கள் முடிந்த பிறகும் கணவன் இதையே தொடர்ந்து கொண்டிருக்க, லக்கிக்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது.
இரவின் அவஸ்தையே தீராத வேளையில் மீண்டும் அழைத்த கணவனை வெட்டவா குத்தவாவென பார்த்தாள் மனைவி.
“மாசத்துல அஞ்சுநாள் உன்கூட இருக்கனும்ன்னு வர்றேன்! அதுக்கு கூட மொகத்தை திருப்புவியா நீ?” என்றவனின் செயல்கள் எல்லாம் வன்மையான ஆக்கிரமிப்பாகவே இருந்தன.
“உங்ககூட இருக்க கசக்குதுன்னு யாரு சொன்னா? அப்பாவ பத்தி பேசுறதைதான் என்னால பொறுத்துக்க முடியல!” முகம் சுளித்தவாறே கணவனின் கைகளுக்கு தடைவிதிக்கப் பார்த்தாள். முடிந்தால்தானே?
“காலங்காத்தால அந்த ஆளைப் பத்தி பேசி என்னை மூட்அவுட் பண்ணாதே மின்னி!” தாபத்துடன் முன்னேறியவன் தனது தேவையை முடித்துக் கொண்டே மனைவியை விடுவிக்க, அவளின் உடலோ ஓய்விற்கு கெஞ்சியது.
“இட்’ஸ் டூ பேட்! வரவர ரொம்ப மோசமா பிஹேவ் பண்றீங்க சாகர்!” தன்னை சீர்படுத்திக் கொண்டே கடுகடுத்தாள் லக்கீஸ்வரி.
“சோ வாட்? மேரேஜ் லைஃபை என்ஜாய் பண்ற அளவுக்கு எனக்கு நேரமும் இல்ல நீயும் அந்தளவுக்கு என்கூட க்ளோசாவும் இல்ல. ஆனாலும் ஒரு புருசனோட கடமைய செய்ய இங்கே ஓடி வர்றதால என்னை அலையுறவன்னு நினைக்கிறியா மின்னி? நான், எனக்கான உரிமையை உன்கிட்ட எடுத்துக்கறேன். இது தப்புன்னா, நமக்குள்ள இருக்கற எல்லாமே தப்புதான்!” ஆணவத்துடன் மனைவியை உரசியவனின் வார்த்தைகள் எல்லாம் ராஜதிராவகத்தை தோய்த்துக்கொண்டே வெளிவந்தன.
ரெங்கேஸ்வரனைப் பற்றி பேசினாலே இவனுக்கு எங்கிருந்து தான் அத்தனை உக்கிரம் கிளம்புமோ தெரியவில்லை. நடுஇரவில் வந்த பொழுதிலிருந்து அவள் மீது காட்டிய ஆசை, மோகம் எல்லாம் காற்றோடு கரைந்து போனவனாய் தேளாய் கொட்ட ஆரம்பித்தான்.
இவன் மோகித்திருக்கும் வேளையில் மட்டுமே கொஞ்சல், குலாவல்கள் எல்லாம். மற்ற நேரங்களில் கடுவன்பூனைக்கு காட்டான் வேடம் போட்ட கொம்பனாகத் திரிவான். கொம்பன்… பிடிவாதக் கொம்பன் இந்த அமிர்தசாகர்.
பெயரில் அமிர்தத்தை வைத்துக்கொண்டு இவன் கொட்டுவதெல்லாம் குதர்க்கம், கறார், கண்டிப்பு, அகங்கார பேச்சுக்கள் மட்டுமே! இதில் மனைவிக்கும் பாவபுண்ணியமோ, பாரபட்சமோ பார்ப்பதில்லை.
வாயை திறக்காமலேயே இருந்திருக்கலாமோ என தன்னைத்தானே நொந்து கொண்டாள் லக்கி. ‘இன்னும் எத்தனைநாள் இந்த போராட்டம்? நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு இவன் மாறுவதும் எந்நாளோ?’ உடலும் மனமும் அயர்ச்சியுடன் தவித்து அடங்கியது.
“தெரியாம வாய விட்டுட்டேன்!” முணுமுணுப்புடன் எழுந்து சென்றவள் கெய்சரில் குளித்துவிட்டு வர,
“மின்னி, டீ கொண்டுவா! சீக்கிரம் குளிச்சுட்டு வெளியே போகணும்” கட்டளையாக கூறிவிட்டு, தினசரியை கையில் எடுத்துக் கொண்டு பால்கனிக்கு விரைந்தான் அமிர்தசாகர்.
இண்டர்கம்மில் டீ சொல்லி வரவழைத்தவள் தன்னை அலங்கரித்துக் கொண்டு கணவன் முன் நிற்க, கண்களால் ஆராதித்தான் அமிர்தசாகர்.
லாவண்டர்நிற பூக்களில் அஜந்தா காட்டன் புடவை இவளது தளிர்நிறத்தை இன்னும் மெருகூட்டிக் காட்டியது. கயல் விழிகளும் கூரான நாசியும் வயதின் செழுமைக்கு அழகு சேர்க்க, ரோஜாநிற உதடுகள் ‘என்னில் இருந்து மீண்டு விடுவாயா’ என கணவனின் பார்வைக்கு சவால்விட்டன.
“வாவ் மை க்யூட் பியூட்டி! இவ்வளவு நேரமா கவனிச்சும் இந்த சேன்சஸ் என் கண்ணுக்கு தெரியலையே?” என்றவனின் விரல்கள் மனைவியின் கன்னத்து பருவினை வட்டமிட்டன.
“நிதானமா பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும். இங்கே தான் எல்லாமே…” மேற்கொண்டு பேச முயன்றவளின் இடையில் கணவனின் விரல்கள் அழுத்தமாய் கோலம் போட, வார்த்தைகள் தானாக உள்ளே சென்றது.
முரட்டுத்தனமாய் அவள் முகம் முழுக்க தன் முத்திரைகளைப் பதிக்க, “சாச்சு! இப்போதான் குளிச்சிட்டு வந்தேன். ப்ளீஸ் இப்ப விடுங்களேன்! அப்புறம் உங்களுக்கு லேட் ஆகுதுன்னு என்னை கடிக்க கூடாது” சிணுங்கிக் கொண்டு கேட்க,
“உனக்கு காரியம் ஆகணும்ன்னா மட்டும் சாச்சு வெளியே வர்றான். ம்ம்… பொழைச்சு போ!” என்றவனின் மீசையும் அவளின் கழுத்தில் குறுகுறுத்து அடங்க, கைகளால் தேய்த்துக் கொண்டே ஓடிவிட்டாள் லக்கி.
அடுத்தடுத்த பரபரப்பான பொழுதுகளில் கணவன் ஆழ்ந்து போக, அவனுக்கு கூஜாவாகிப் போனாள் மனைவி. அவனது வெளிவேலைகளில் பிற பணிகளிலும் மனைவியை உடனிணைத்துக் கொள்ள, அவளால் வேறெந்த சிந்தனையும் செய்ய முடியவில்லை.
தந்தைக்கு அழைத்து, அலுவலகத்திற்கு தான்வர இயலாது என்று சொல்லவும் கணவன் விடவில்லை. அவளது அலைபேசியை தனது வேலைக்கு வேண்டுமென்று பிடுங்கி வைத்துக் கொண்டவனிடம் என்னவென்று சொல்லிக் கேட்பது? கெஞ்சுவதெல்லாம் லக்கீஸ்வரியின் அகராதியில் கிடையவே கிடையாது.
இவனது அலம்பல் தெரிந்த ஒன்றுதானே என பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்து கொண்டாள். நாட்கள் அப்படியே நகர்ந்திருந்தால் பொழுதுகளும் இனிதாய் முடிந்திருக்கும்.
அவையெல்லாம் தனது வரலாற்று பக்கத்தில் சாத்தியமில்லை என்பதை நிருபித்தான் அமிர்தசாகர். மூன்றாம்நாள் பிரச்சனையை துவக்கி வைத்து திமிராய் நின்றான்.
இம்முறை இவன் முன்வைத்த யோசனையை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பினை மனைவிக்கு வழங்காமல் பிடிவாதம் பிடிக்க, லக்கீஸ்வரியும் தன் பங்கிற்கு அடமாய் நின்றாள்.
நிலவின் குளுமையும் கதிரவனின் வெம்மையுடனும் நீடிக்கும் இவர்களின் பயணம், குடும்பம் என்ற அணைக்கட்டில் நிதானித்து அடங்குமா? தனித்தே பயணிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே,
நல் சபையில் கைக்கொடுக்கும் சாலவும் முன் இனிதே,
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது. ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
Leave a Reply