சில்லென்ற தீப்பொறி – 13
சில்லென்ற தீப்பொறி – 13
வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது.
விளக்கம்
தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய் தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.
சில்லென்ற தீப்பொறி – 13
ஜெர்மன் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையம். உலகத்தின் பரபரப்புக்களை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டதைப் போல் ஆர்பரித்துக் கொண்டிருந்தது. மிக நீண்ட குளிர்காலத்தையும் செர்ரி பூக்கள் பூக்கும் வசந்த காலத்தையும் கொண்ட அழகிய நாடு ஜெர்மனி. ஆடம்பரமாக கேளிக்கைகளையும் விழாக்களையும் அதீதமாய் கொண்டாடிக் களிக்கும் அற்புதமான நகரம் இது.
இந்த அழகிய நாட்டில் தனது உற்ற துணையுடன் வந்து இறங்கி இருந்தால், அதுவே வாழ்வில் சிலிர்ப்பூட்டும் பொக்கிஷ தருணமாக நினைவில் நின்றிருக்கும். ஆனால் லக்கீஸ்வரியோ மனதில் இமயமலையின் பாரத்தையும், கையில் தனது பயணப் பொதியின் பாரத்தையும் சுமந்து கொண்டு விமான நிலையத்தின் ஹெல்ப் டெஸ்க்கின் முன்பு நின்றிருந்தாள்.
விமானப் பயணம் அவளுக்கு புதிதல்ல என்றாலும், தனியொரு ஆளாய் ஜெர்மன் தொலைதூரப் பயணம் முற்றிலும் புதிது. இனம் காணமுடியா பதட்டத்துடன், வெறுமை சூழ்ந்த மனதுடன் பயணப்பட்டு வந்திருந்தாள்.
கணவனின் சொல்லம்புகளையும் செயல்களையும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்ற இமாலயக் கேள்வியே அவளுக்கு சோர்வோடு பயத்தையும் கொடுத்திருந்தது. லக்கியின் மனதில் துளிர்த்திருந்த பயமோ அல்லது அந்நாட்டின் சீதோஷண நிலையோ, அந்த மண்ணில் கால் வைத்தவுடன் அவளின் உடலெங்கும் நடுக்கத்தை வரவழைத்திருந்தது.
விமான நிலையத்தில் கணவன், தன்னை அழைக்கக வருவானா மாட்டானா என்பதிலும் அவளுக்கு குழப்பம். கணவனிடம் தானாகச் சென்று கேட்பதற்கு அவளின் தன்மானக் கொம்பு தடை விதித்திருந்தது.
நடேசனிடம் கேட்ட பொழுது, உன் வருகையை தெரிவித்து விட்டேன். அதற்கு அமிர் எந்த பதிலும் கூறவில்லை என வருத்தத்துடன் கூறி, அவனது முகவரி மற்றும் இடத்தின் வரைபடத்தை(லொகேஷன்) அவளின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி வைத்தார்.
அப்பேச்சினை அசைபோட்டவாறு தனது இரண்டு பெரிய டிராலிகளின் கைப்பிடியை இறுகப் பற்றியபடி ஹெல்ப் டெஸ்கின் முன் நின்றாள் லக்கி. அங்குள்ள பணிப்பெண்ணிடம் தன்னிடமிருந்த முகவரியைக் காண்பித்து, கணவனின் இருப்பிடத்திற்கு செல்லும் மார்க்கத்தை விசாரித்துக் கொண்டிருந்தாள்.
அப்பெண்ணும் டாக்ஸியில் எளிதாகச் சென்று விடலாம் எனக் கூறி, வாடகை கார்கள் நிற்குமிடத்தையும் விளக்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவளது பின்புறத்தில் இருந்து கனமான ஜெர்கின் ஒன்று தோளில் விழுந்து அவளை மூச்சடைக்க வைத்தது.
திகிலடைந்த பார்வையில் சட்டென்று லக்கி திரும்பிப் பார்க்க, இறுக்கமான புன்னகையுடன் விமானப் பணிப்பெண்ணின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான் அமிர்தசாகர். பேச்சோடு கண்களால் ஜெர்கினை போட்டுக்கொள் என மனைவிக்கு உத்தரவிடவும் அவன் தவறவில்லை.
லக்கியின் பின்னால் அமிர் வந்து ஜெர்கினைப் போடவும், சற்றே அதிர்ச்சியுற்ற பணிப்பெண் என்ன வேண்டும், இந்தப் பெண் உங்களின் உறவா என ஆங்கிலத்தில் கேட்டிருக்க, அதற்கு தகுந்த பதிலை அளித்துவிட்டு, நன்றி கூறி மனைவியை அங்கிருந்து இழுத்து வந்தான்.
இறுகிய முகத்துடன் யாரோ அந்நியனைப் போல அவன் முன்னே செல்ல, டிராலிகளை தள்ளிக் கொண்டு பின்னால் நடந்தவளின் இதயத்திற்குள் ஆயிரம் முட்கள் ஒன்றாய் குத்துவதைப் போன்ற உணர்வு.
கணவனது ஜெர்கின் இவளின் உடம்பில் ஒட்டியதும் நடுக்கம் குறைந்து போனதா அல்லது தன்னவனை கண்டுவிட்டேன் என்று மனதின் வேகம் கூடிப் போனதா? தனது நிலை என்னவென்று தெரியாமலேயே அவனது வேகத்திற்கு இணையாகப் பின்னோடு நடந்தாள்.
ஏற்கனவே அமிர் வந்திறங்கிய டாக்ஸியில் ஏறி அமர்ந்ததும், தனக்கு அருகில் அமர்ந்த கணவனை காணக் காண லக்கியின் வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது.
என்னென்ன பேசி வாட்டி வதைக்கப் போகிறானோ என்ற கலக்கத்தில் இவள் குழம்பிப் போயிருக்க, கணவனது உதடுகளிலிருந்து ஒரு வார்த்தை கூட உதிரவில்லை.
இவள் தொண்டையை செருமிக் கொண்டு, “எப்படி இருக்கீங்க சாச்சு?” தயங்கித் தயங்கி கேட்ட விசாரிப்பிற்கும் குத்தூசியான பார்வை மட்டுமே பரிசாக கிடைத்தது.
இரண்டு மணி நேரப் பயணமாக லாங்கிஞ்-ல் உள்ள அவர்களது வீடு வந்து சேர்ந்தும் அதே நிலையே தொடர்ந்தது. தன்னுடைய இரண்டு பெரிய டிராலிகளை அத்தனை எளிதாக தள்ளிக் கொண்டு லக்கியால் நடக்க முடியவில்லை.
கணவனின் பாராமுகமும், உடல் அசதி, மனக் குழப்பங்களும் ஒன்றாய் சேர்ந்து மனவலியை கொடுக்க, அவளின் இதயம் காலடியில் நசுங்கும் புல்லைப் போல சப்தமேயில்லாமல் நசுங்கிக் கொண்டிருந்தது.
லிப்டில் ஏறி பத்தாவது மாடியில் உள்ள இவர்களின் குடியிருப்பை அடையும் போதே புஷ் புஷ் என்று முச்செடுக்கத் தொடங்கி விட்டாள் லக்கீஸ்வரி. வீட்டினை அடைந்ததும் விரைந்து கதவை சாத்திய அமிர் பார்த்த கூர்மையான பார்வையில் அவள் ஆடிப் போனதென்னவோ உண்மைதான்.
“சா… சாரி, சாச்சு! அப்… அப்பா, அங்கிள் சேர்… இப்… இப்படி ஓர்… ஒரு…” முச்சு முட்டி திக்கித் திணறிக் கொண்டிருக்க, அவளை படுக்கையறைக்குள் தள்ளிச் சென்று, கட்டிலில் வேகமாய் தள்ளிவிட்டதும் வெலவெலத்துப் போனாள் லக்கி.
வன்மையுடன் தன்னை சிதைக்கப் போகின்றானா என்ற பீதியில் முன்னிலும் விட அதிகமாய் அவளின் உடல் வெடவெடக்கத் தொடங்கியது.
மனைவியின் நிலையை உணர்ந்தவனாய் அறையின் மின்வெப்பக் கணைப்பை(ரூம் ஹீட்டர்) போட்டு விட்டவன், அவளது கை கால்களை சூடு பறக்க தேய்த்து விட்டு பெரிய பிளாங்காட்டை போர்த்தி விட, அவளது உடல் நடுக்கம் மொத்தமாய் அடங்கியது. அடுத்த சில நொடிகளில் ஆசுவாசமாய் அவளும் மூச்சினை இழுத்து விட, அமிரின் பார்வை அவளையே ஊடுருவித் துளைத்தது.
“எந்த பிரிகாசன்சும் இல்லாம உன்னை யாருடி ஃப்ளைட் ஏத்தி விட்டது? பெரியவங்களுக்கு விவரம் தெரியலைன்னா, படிச்ச உன் புத்தியும் புல்லு மேய போயிடுச்சா! இல்ல, அப்பா மந்திரம் விடாம சொன்னதுல உன்னை நீயே மறந்துட்டியா?” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியபடியே மனைவியை உருத்துப் பார்த்தான் அமிர்.
இவனது அடாவடிகளை நினைத்து மட்டுமே, புத்தி பேதலித்து தன்னை மறந்து இருந்ததாக உண்மையைக் கூறினால் இவன் ஏற்றுக் கொள்வானா? லக்கியின் மனம் உள்ளுக்குள் மட்டுமே கேள்வி கேட்டு ஊமையாகிப் போனது..
பேசுவதற்கும், முகம் திருப்பிக் கொள்வதற்கும் தற்போது உடம்பில் தெம்பில்லை. தன்னைப் பற்றிய தன்னிரக்கமே அவளை வெகுவாய் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
ஆனாலும் நீ எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டுமென்று கணவன் பிடிவாதமாய் இவளை முறைத்துப் பார்க்க, தன்னை ஓரளவு சுதாரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தாள் லக்கி.
“நீங்க சொல்ற எதுவும் எனக்கு புரியல சாகர்! கரெக்டா டிக்கெட் புக் பண்ணிட்டுதான் வந்தேன். எங்கேயும் ஃபைன் கட்டல, யாரும் எதுவும் கேக்கல.” அப்பாவியாக புரியாமல் பேசியவளை இமைக்க மறந்து பார்த்தான் அமிர்.
இதுவே இணக்கமான தருணமாக இருந்திருந்தால் இந்த பாவனைக்கு மனைவியிடம் காதல் கபடியே விளையாடி இருப்பான். ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி கிடப்பில் போடும்படி அல்லவா அனைத்தும்… அனைத்தும் இவனுக்கு எதிராக நடந்தும் முடிந்தும் விட்டது.
‘இனி இவளிடம் காதலோ, பரிதாபமோ கொள்வதில் அர்த்தமே இல்லை.’ மனதிற்குள் முடிவெடுத்து கொண்டவனை மனசாட்சி கேலி செய்து சிரித்தது.
‘பாவம் பார்க்காமல் தானா அவளுக்கு ஜெர்கின் போட்டு காபாந்து பண்ணியது? இதோ இப்பொழுதும் குளிருக்கு இதமாக ரூம் ஹீட்டரையும் போட்டு, உடலிற்கு சூடு ஏற சேவையாற்றியும் கொண்டிருக்கிறாய்?’ வஞ்சனை இல்லாமல் மனசாட்சி கேலி பேச, ‘அது மனிதாபிமானச் செயல்’ என்றதோடு உள்மனதை தூங்க வைத்தான் அமிர்.
“டிக்கட் புக் பண்ணி வந்தது உலக அதிசயம் பாரு, அறிவுகெட்டவளே! எப்படிப்பட்ட ஊருக்கு போறோம். அங்கே எப்படி இருக்கணும், என்ன தேவைன்னு கூட தெரிஞ்சு ஏற்பாடு பண்ணிட்டு வரமாட்டியா? இங்கே உள்ள கிளைமேட் பத்தி நீ யோசிக்கவே இல்லையா?” எனக் கேட்டதும் தான் கணவனை உற்றுப் பார்த்தாள் லக்கீஸ்வரி.
தனது அலுவலக உடையின் மேல் தடிமனான லாங் ஜெர்கின் கோர்ட் மற்றும் வின்டர் லாங் ஷூ, கையில் கிளவுஸ் சகிதம் முற்றிலும் குளிரில் குளித்தவனாய் சிவந்து மனைவியின் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தெரிந்தான்.
அவனைப் பார்வையால் பருகியவாறே, “சாரிங்க! இதபத்தி சுத்தமா யோசிக்க மறந்துட்டேன். உங்ககிட்ட கேக்கலைன்னா கூட அட்லீஸ்ட் நெட்லயாவது பார்த்திருக்கணும். எனக்கு நிறைய குழப்பம், அதான்…” அவள் தன்னிலையை விளக்கவும் இடங்கொடாது தடுத்து நிறுத்தினான் அமிர்தசாகர்.
“உன் ஹிஸ்டரி, ஜியாக்ரஃபி எல்லாம் கேக்க எனக்கு நேரமும் இல்ல, தேவையும் இல்ல. இங்கே வின்டர் சீசன் லாங் பீரியட் இருக்கும். எப்பவும் ஸ்வெட்டர், ஜெர்கின், லெதர் ஷூ போட்டுத்தான் சுத்த முடியும். ஃபர்ஸ்ட் அதுக்கு ஏற்பாடு பண்ணிக்கோ! ஃபிரிட்ஜ்ல இருக்குறதை அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டு இருந்துக்கோ. பாய்!” தகவலாய் கூறியவன், அவளின் பதிலையும் எதிர்பாராது வீட்டை விட்டுக் கிளம்பி விட்டான்.
கணவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ளும் முன்னரே அவன் கிளம்பிச் சென்றிருக்க, இவளுக்கு மொத்தமாய் உலுக்கிப் போட்டது.
‘இதென்ன அடிமைக்கு சொல்லும் கட்டளை போல கூறிவிட்டு பறந்து விட்டான்.’ ரோசத்துடன் அவன் பின்னே சென்று கேட்கலாம் என கதவைத் திறக்க முயற்சிக்க, அது முன்புறம் பூட்டு போடப்பட்டிருந்தது.
இவளை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு அவன் சென்று விட்டான். இது இன்றைக்கு மட்டுமா அல்லது தொடர்கதை ஆகுமா என மனதோடு கலங்கிக் கொண்டிருந்தவளின் உடல், ‘என்னையும் கொஞ்சம் கவனி!’ என நினைவுப்படுத்த, அதற்கான காரியங்களில் இறங்கினாள்.
சிறிய ஹால், அதனை ஒட்டிய சிறிய படுக்கையறை மற்றும் சமையலறை கொண்ட எளிய வீடுதான். வீட்டின் பின்னால் உள்ள சிறிய பால்கனியில் நின்றால் வீதியை வேடிக்கை பார்க்கலாம். வீட்டினை பார்வையால் அளந்து முடித்தவள் முதற்காரியமாக தந்தைக்கு அழைத்து, தான் வந்து சேர்ந்த விவரத்தை சொல்ல முயற்சித்தாள்.
ஆனால் அவளின் தொலைதொடர்பு சேவை, கோபுரம் இல்லாமல் தொல்லை கொடுத்து அவளை இம்சித்தது. ‘இருக்கின்ற கடுப்பில் இதுவேறா?’ என சோர்வடைந்தவள், வாட்ஸ்-அப்பில், தான் நலமாக வந்து சேர்ந்ததை தந்தைக்கும், ஹரிணிக்கும் செய்தியாக அனுப்பி வைத்தாள்.
அதிகச் சிரமம் இல்லாமல் சுடுநீரில் குளித்து விட்டு வந்தவளின் வயிறு, ‘நானும் இருக்கிறேன்.’ எனக் கூப்பாடு போட்டது. குளிர்சாதனப் பெட்டியை திறந்து ஆராய, அங்கே திடீர் உணவு பாக்கெட்டுகள், பிரெட், முட்டை, ஜாம், கிரீம் போன்ற இன்ஸ்டண்ட் வகையறாக்கள் நிறைந்து இருந்தன.
சமையல் அறை நான்கைந்து தட்டு முட்டு சாமான்களை மட்டுமே கொண்டு வெறிச்சென்று இருந்தது. புதிதாக வாங்கிய இன்டக்சன் அடுப்பும் காஃபிக்கென சில்வர் பாத்திரமும் மட்டுமே தயாராய் இருந்தது.
சுடு நீரில் பால் பவுடரையும், காஃபி பவுடரையும் கலந்து குடித்து, முட்டை பிரெட்டில் காலை உணவை முடித்தாள் லக்கி. பிரயாண களைப்போடு உண்ட களைப்பும் சேர்ந்து கொள்ள கம்மென்று தூக்கம் சுகமாய் அவளை ஆட்கொண்டது.
மூன்று மணிநேரம் கழித்து மீண்டும் பசிக்கு கத்திய வயிற்றுக்கு திடீர் சப்பாத்தியை சூடு செய்து சாஸ்சோடு தானமளித்தாள். அதன் பிறகான பொழுதுகளை எல்லாம் இவளுள் எழுந்த குழப்பக் காடுகளே ஆக்கிரமித்துக் கொள்ள, மீண்டும் தன்னிரக்கத்தில் சோர்வுடன் தவிக்க ஆரம்பித்தாள்.
அலைபேசியின் கோபுரம் வேறு கண்ணாமூச்சி ஆடியே இவளை அலைகழித்ததில் எந்த தகவல் தளங்களையும் இணையத்தின் வழியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
“சாகர் வந்ததும், அவரோட போயி மொதல்ல இந்த ஜெர்கின் கருமத்தை எல்லாம் வாங்கணும்.” லக்கி, தனக்குள் தீர்மானம் எடுத்துக் கொள்ள, ‘உன் பேச்சை அவன் கேட்பானா?’ என மனசாட்சி கேள்வி கேட்டது.
பகைவனுக்கும் அருள் செய்பவனைப் போல அல்லவா இங்கே இவளை தள்ளிவிட்டு, அக்கறையாய் கவனித்து சென்றிருக்கிறான். உனக்கானதை நீயே பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டளை வேறு! இவை எல்லாம் எங்கு போய் முடியப் போகின்றதோ? விடை தெரியாத கேள்வியில் மனம் பெரிதாக முரண்டிக் கொண்டது.
இரவா பகலா என்றே தெரியாத நிலையில் வீட்டினையே வெறித்துக் கொண்டிருந்தாள். பால்கனிக்கு சென்றால் குளிர் விரட்டியடித்து அவளை உள்ளே தள்ளியது. தனியளாய் அமர்ந்திருந்தவளை மீண்டும் உறக்கம் ஆட்கொள்ள முன்னறை சோபாவில் அமர்ந்த நிலையில் உறங்கிப் போனாள் லக்கி.
திடீரென யாரோ உலுக்குவதைப் போல தோன்ற, திடுக்கிட்டு விழித்தவளின் முன் சிவந்த கண்களோடு கோபமாய் அவளை வெறித்துக் கொண்டிருந்தான் அமிர்.
“ரூம்ல ஹீட்டர் போட்டுட்டு இங்கே வந்து ஏன் தூங்கித் தொலையுற? உங்கப்பன் வீட்டு கரண்டா! இஷ்டத்துக்கு லைட்டை எல்லாம் எரிய விட்டுட்டு இருக்க? போ உள்ளே!” வார்த்தைகளால் வதைத்து அவளை உள்ளே அனுப்ப, வழக்கம்போல் மனைவியின் உடல் நடுக்கம் கண்டது.
அவனைப் போல் கையுறை காலுறை என எதுவும் இல்லாமல் கணவனது ஜெர்கின் ஒன்றையே பற்றுதலாக கொண்டு அவள் உள்ளே செல்ல, “ஆன்லைன்ல உனக்கு தேவையானதை ஆர்டர் போட்டு வாங்கிக்கோ! என்னோட எந்த பொருளையும் நீ தொடக்கூடாது.” கறாராய் சட்டம் போட, ‘இவனது அதிரடிகள் ஆரம்பமாகி விட்டதா?’ மனதோடு கேட்டுக் கொண்டு நொந்து போனாள் லக்கி.
பத்து நிமிடங்கள் சென்ற பிறகு, பிளாங்காட்டை இழுத்துப் போர்த்தியும் நடுங்கிக் கொண்டிருந்தவளை தன்முன் சடாரென்று திருப்பி, அவளின் சிவந்த உதட்டில் தனது உஷ்ணத்தை கடத்த ஆரம்பித்தான் அமிர். ஏதோ ஒரு ஒவ்வாத வாசனை மூக்கைத் துளைத்தாலும் அவனது உஷ்ணம் அவளின் உடலுக்கு தேவையாகிப் போக, அமைதியோடு அனுபவித்தாள்.
மனைவியின் அமைதியையே அனுமதியாக மாற்றிக் கொண்டு அவளின் ஒவ்வொரு அணுவிலும் தனது உஷ்ணத்தை கடத்தி விட்டு கணவனும் குளிர்காய்ந்து விலக, அவளிடத்தில் இணக்க நிலையே தொடர்ந்தது.
சோர்வுடன் கை விரல்களை கோர்த்து, மேலே தூக்கி நெட்டி முறித்துவிட்டு, “டெய்லி இந்த ட்ரீட்மெண்ட் மட்டும்தான் என்னால கொடுக்க முடியும். மத்தபடி வேற எந்த ஹெல்ப்பும் என்கிட்டே இருந்து எதிர்பார்க்காதே! அஃப்கோர்ஸ் நீ இப்படி இருக்கத்தானே உங்கப்பா, உன்னை இங்கே அனுப்பி வைச்சிருக்காரு!” கணவனின் கூர் அம்புகளை தாங்கிய வார்த்தைகளில் மொத்தமாய் உடைந்து போனாள் லக்கி.
அவனது ஒவ்வொரு வார்த்தையும் உடலோடு மனதையும் கூச வைக்க அவளின் முகமும் கறுத்துப் போனது. குற்றம் சொல்லத் தெரியாதவனுக்கு, குதர்க்க மகுடம் சூட்டி செங்கோலை கொடுத்ததை போல, பெரியவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் இவனை ஏற்றி வைத்திருக்க, மஞ்சள் தண்ணீர் தெளித்த பலியாடாய் லக்கி நின்றாள்.
“இவ்வளவுக்கு இறங்கிப் பேசித்தான் உங்க கோபத்தை காட்டணுமா?” மனவலியோடு லக்கி கேட்க, வெறுப்பான பார்வையை அவளின் மீது படர விட்டான் அமிர்.
“இது கோபம் இல்ல… என்னோட வருத்தம். எனக்காக எப்பவும் யாரும் இருந்ததில்ல. இனிமேலும் இருக்கப் போறதில்லங்கிற என்னோட வேதனை. அப்பன் நிழல்ல சுகமா குளிர் காயுற உனக்கு இதெல்லாம் சொன்னாப் புரியாது.” சாட்டையடியாக விழுந்த வார்த்தைகளில் கணவனின் ஆதங்கம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
‘உனக்காக நான் இருக்கிறேன்.’ என்று கணவனின் மனதில் தான் நம்பிக்கை விதையை விதைத்திருக்க வேண்டுமோ? இதோ இப்பொழுதும் வெறுத்து ஒதுக்க முடியாமலும் இணைந்து இளக முடியாமலும் தவிப்பவனை நானாக வந்து அரவணைத்திருக்க வேண்டுமோ?’ காலம் கடந்த ஞானம் உள்மனதில் உதித்தது.
அந்த எண்ணம் தோன்றிய மறுநொடியே, ‘அப்படியென்றால் எனக்கும் அப்படிதானே! எனக்காக என் நிம்மதிக்காக எனது ஆசைகளுக்கு யாரும் இதுவரை மதிப்பு கொடுக்கவில்லையே! இனிமேலும் அப்படிதானே! பின்பு நான் மட்டும் ஏன் இவனுக்காக பரிதாபப்பட வேண்டும்.’ உள்மனக் குரங்கு தன் புத்தியை காண்பிக்க, விருட்டென்று கணவனை எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிந்தாள்.
அந்தோ பரிதாபம்! இவளது அந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்றி வைக்காமல் அமிர் அசந்து உறங்கிப் போயிருந்தான். உறக்கத்தில் இருப்பவனிடம் கோபத்தை காண்பிப்பது தனது ஈகோவிற்கு அழகல்ல என்று கடுப்புடன் உறங்கிப் போனாள்.
தனக்குள் எழுந்த சுயபச்சாதாபம் வாழ்க்கையை மீட்கப் போகிறதா? அல்லது இருவருக்குள்ளும் இருக்கும் நிம்மதியைக் குலைக்கப் போகிறதா என்ற விடை தெரியாத குழப்பத்தில் கண்ணயர்ந்தாள் லக்கீஸ்வரி.
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.
விளக்கம்
சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.