சில்லென்ற தீப்பொறி – 16

தானாங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே

மானம் படவரின் வாழாமை முன்இனிதே

ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை

கோள்முறையாற் கோடல் இனிது.

விளக்கம்

அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

 

சில்லென்ற தீப்பொறி – 16

லக்கீஸ்வரியின் மனம் முழுவதும் வெறுப்பு, ஆற்றாமை, கோபம், இயலாமை என அனைத்தும் சேர்ந்து கதகளி ஆடிக் கொண்டிருந்தது.

‘இந்த வீட்டில், கணவனது உள்ளத்தில் நான் யாராக இருக்கிறேன்? எந்த நிலையில் என்னை, இவன் தாங்குகிறான்?’ அவள் யோசிக்க யோசிக்க கிடைத்த விடை என்னவோ அத்தனை இனிப்பாய் இல்லை.

திருமணம் முடிந்த நாள் முதல் கணவன் தன்னை தேடுவது அவனது ஆசையை தீர்த்துக் கொள்வதற்கு மட்டுமே என்ற உண்மையை, உச்சந்தையில் சத்தியம் செய்து மனசாட்சி உரைத்த போது, உயிரோடு புதைந்து போனாள்.

‘இந்த வாழ்க்கைக்கு வாழாவெட்டி பட்டத்தை சுமந்து கொண்டு, செத்தும் போய் விடலாமே?’ என்ற கழிவிரக்கம் தோன்ற, முயன்று தன் மனதை திசை திருப்பினாள் லக்கி.

‘பொறு மனமே! இதற்கொரு தீர்வைக் காணவோ, கடந்து போகவோ யோசிக்காமல், எதற்காக உன்னை நீயே நிந்தித்துக் கொள்கிறாய்?’ அவளது மூளை, மனதிற்கு அறிவுரை கூறிட யோசிக்க ஆரம்பித்தாள்.

‘அக்கறை உண்டு; அனுசரணை இல்லை. ஆசை உண்டு; நேசம் உண்டா இல்லையா தெரியவில்லை.’ விடை தெரியாத கேள்விகளில் மீண்டும் குழம்பித் தவிக்க ஆரம்பித்தாள். வாழ்நாள் முழுமைக்கும் இதுபோன்ற குழப்பத்தில் மட்டுமே கடக்க அவள் விரும்பவில்லை.

பல எண்ணங்கள் பல தர்க்கங்கள் மனதிற்குள் ஒன்றாக எழுந்து ஆர்ப்பரிக்க, ஒரு பலமான உறுதியான முடிவினை எடுத்தாள் லக்கி.

வழக்கம் போல அன்றைய இரவும் சிவப்பேறிய கண்களுடன் இவளை அணைக்க வந்தான் அமிர்தசாகர். ‘வேண்டாம்.’ என ஒற்றை பதிலில் மறுத்து முன்னறை சோபாவில் இவள் வந்து அமர,

“மன்ந்த்லி பிராப்ளமா?” பின்னோடு வந்து கேட்டான் அமிர்.

“அதெல்லாம் இல்ல…” அசிரத்தையாக இவள் கூற, அன்றைய ஏழரை உச்சகட்டத்தை அடைந்தது

“அப்புறம் என்ன? உன் வேதாளத்த இன்னும் நீ இறக்கி வைக்கலையா?” சுள்ளென்று எரிந்து விழுந்தபடி அவளது கை பிடித்து இழுக்க, அவளோ அசைந்து கொடுக்கவில்லை.

“உங்களைப் பிடிக்கலன்னு சொல்லிட்டேன். இப்ப வேண்டாம்னும் சொல்றேன். என்னை புரிஞ்சுக்க மாட்டீங்களா? இல்ல புரியலையா?” பாதியில் விட்ட தர்க்கத்தை தொடர ஆரம்பித்தாள் லக்கி.

“ம்ப்ச்… இன்னைக்கு என்னாச்சு உனக்கு?” அலுப்புடன் கேட்க,

“எனக்கு இங்கே இருக்க பிடிக்கல, நான் போகணும்.”

“ஷப்பா ஆரம்பிச்சுட்டா… நிஜமாவே என்னை பிடிக்கலையா?” கோபமாகவே கேட்டான் அமிர்.

“என்னை, எனக்காக பார்க்காத உங்களை எனக்கு பிடிக்கல!” அழுத்தம் திருத்தமாக கூறியவளை ஊடுருவிப் பாத்தான்.

“கோபத்துல உளறாதே மின்னி!”

“இது கோபம் இல்ல… நமக்குள்ள ஆத்மார்த்தமான உறவு இருக்கா இல்லையான்னு நான் அலசிப் பார்த்ததோட விளைவுதான், இந்த முடிவு.” இவள் நிறுத்த, அவனுக்கு பொறுமை போய்க் கொண்டிருந்தது.

“நீங்க எனக்கு உறவை குடுத்து, உன்னோட எல்லை இதுதான்னு ஒரு இடைவெளியில என்னை நிக்க வச்சுட்டீங்க! உங்க கோபத்தை உங்க ஆசையை முக்கியமா பார்த்த நீங்க, எனக்கும் அதே உணர்வுகள் இருக்கும்ங்கிறதை யோசிக்க மறந்துட்டீங்க!” குற்றம் சாட்டும் பாவனையுடன் பேச, கணவனின் முகம் முழுவதும் கடினப்பட்டுப் போனது.

“அப்படி எதை மறந்து தொலைச்சு, உனக்கு நான் அநியாயம் பண்ணேன்னு நினைக்கிற?” வெகுண்டு கேட்டான் அமிர்.

“நிஜத்தை சொல்றேன். பிடிக்காத கல்யாணம், எனக்கு கொஞ்சநாள் டைம் குடுங்கன்னு ஆரம்பத்துல சொன்னேன். காதுல கூட வாங்காம உங்க இஷ்டத்துக்கு என்னை வளைச்சீங்க!” இறங்கிய குரலில் லக்கி கூற,

“அடிங்க ராஸ்கல்! என்னமோ உன்னை கட்டிபோட்டு ரேப். பண்ணின மாதிரில்ல பேசுற?” கடுகடுத்தான் அமிர்

“அது மட்டுமா… தனியா இருக்க பயம்னு சொன்னேன். இருந்தே ஆகணும்னு கட்டாயப்படுத்தி, என் முதல் குழந்தை அனுபவத்தை சுக்குநூறா அழிச்சிட்டீங்க.”

“நீ பயந்து செத்ததுக்கு நானா காரணம்?”

“என் கனவு, ஆசை எல்லாம் எங்கப்பாவுக்கு ஓய்வு குடுத்து, அவர் தொழிலை நான் பார்த்துக்கணும்கிறது தான். அதை நான் செய்யக் கூடாது. அவரோட காத்து கூட என்மேல படக்கூடாதுன்னு பிடிவாதமா நிக்கிறீங்க!

ஏன்னு கேட்டா, உங்க அந்தஸ்து கௌரவம் இன்னும் என்னென்னவோ சொல்லி, என்னை இங்கே கொண்டு வந்து அடைச்சிட்டீங்க!”

சுட்ட சோளமாய் பொரிந்து தள்ளுபவளை, ‘நீ பேசு ராசாத்தி!’ என பேசவிட்டு வேடிக்கை பார்த்தான் அமிர்.

“இப்பவும் என்னை ஹவுஸ் அரெஸ்டாதான் வச்சுருக்கீங்க. என்னோட ஒவ்வொரு விஷயத்திலும் நீங்க தலையிட்டு என்னை தலைகீழா மாத்தி வைக்கிறீங்க. இதெல்லாம் எப்ப ஒழியும்னு என்னால பல்லைக் கடிச்சு பொறுத்துட்டு இருக்க முடியாது.

நேத்து நீங்க பண்ணின காரியம் உங்களுக்கு விளையாட்டா இருக்கலாம். ஆனா, அதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது? நம்மை மீறி போகமாட்டா… இங்கே இவளுக்கு போக்கிடம் இல்லங்கிற உங்க திமிருதானே!

உங்களை எதிர்த்து கேள்வி கேக்க யாருக்கும் தைரியமில்லைங்கிற அகம்பாவம் தானே! நாளைக்கு இதே விளையாட்டை, விசத்தை வைச்சு விளையாடிப் பார்க்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?”

லக்கி அடுக்கடுக்காய் குற்றசாட்டுக்களை அடுக்கிக்கொண்டே போக, கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான் அமிர். கன்னத்தில் நான்கு அறைவிட்டு, அவளை அடக்க வேண்டும் என பரபரத்த கைகளை, மனதை கடினப்பட்டே கட்டிப் போட்டுக் கொண்டான்.

அவனது அகராதியில் பெண்களிடம் கை நீட்டுபவன் மனிதனே அல்ல என்பது பொருள். ஆனால் அதைவிட தேளின் கொடுக்காய் வார்த்தைகளால் மனைவியை கொட்டுவதை ஏனோ இவனது மனம் அறியாமல் போனது.  

“என்னை கொலைகாரன் ரேஞ்சுக்கு நினைச்சு பேசுற நீ!” பல்லைக் கடித்தான் அமிர்

“போதும், மூச்சு முட்டுது சாகர். இப்படியே இருந்தா உங்கமேல இருக்குற கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் அன்பும் காணாம போயிடுமோன்னு பயமா இருக்கு.” உள்ளத்தில் இருப்பதை லக்கி வெளிப்படையாகக் கூற, அதிர்ந்து நின்றான் அமிர்தசாகர்.

“இந்த நெலமையில நாம ஒண்ணா வாழ்ந்தா இன்னும் பிரச்சனைகளும் சண்டையும் அதிகமாகுமோன்னு தோணுது. இந்த நெலம வேணாமே? ஒரு முடிவுக்கு வருவோம்.” லக்கி நிறுத்த என்னவென்று பார்வையால் கேட்டான் அமிர்

“நீங்க வேணும் வேணாம்னு எல்லாம் நான் சொல்ல விரும்பல. என்னைத் தனியா விடுங்க. என்னை சுதந்திரமா நடமாட விடுங்க. எனக்கு நிம்மதிய குடுங்க.” அவளது தேவையையும் முடிவையும் மெதுவாக கூறினாள் லக்கி.

“புரியல நீ சொல்றது?”

“புருசன் பொண்டாட்டி சேர்ந்து வாழுறது மட்டுமா வாழ்க்கை? ஒரு மாற்றத்துக்கு நாம நண்பர்களா தனியா வாழ்ந்து பார்ப்போமே?” நிறுத்தி நிதானித்து கூறிய மனைவியை அற்பமாய் பார்த்தான்.

“எதுவும் பாலசந்தர் படம் பார்த்துட்டு வந்தியா நீ?” விளையாட்டாக அமிர் கேட்க,

“இதுதான் எனக்கு பிடிக்கல! ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க.” வேக மூச்செடுத்து பேசியவளை, தொடரச் சொல்லி கையை உயர்த்தினான் அமிர்.

“உங்க மனசுல இருக்குற கோபமும், என் மனசுல இருக்குற ஆதங்கமும் மறையட்டும். நாம ஒண்ணா சேர்ந்து வாழ ஆரம்பிப்போம். என் விருப்பத்துக்கு என் மனசாட்சிக்கு பிடிச்ச வாழ்க்கைய நான் வாழணும் சாகர். அதுக்கு உங்க பெர்மிசன் வேணும்.” பதமாய் கூறி, தயக்கத்துடன் பேச்சை நிறுத்தினாள் லக்கி.

“என்கூட வாழப் பிடிக்கலன்னு நேரடியா சொல்லாம, இப்படி பூசி மொழுகிறியா? இந்த கருமத்தை நாம செய்யக்கூடாதுன்னு தான், உன்னை இங்கே பேக் பண்ணி அனுப்பித் தொலைச்சிருக்காங்க!” அமிர் சலிப்புடன் கூற,

“இந்த நக்கல் பேச்சு… இந்த குதர்க்கம்தான் என்னை முள்ளா தைக்குது. நான் டிவோர்ஸ் கேக்கல. எனக்கான இடத்தை உங்க மனசு முழுமையா எனக்கு குடுக்குற வரைக்கும் நான் தனியா இருக்கேன்னு சொல்றேன்.

இப்படியே, உங்க கன்ட்ரோல்லயே இருந்தா நான் மனநோயாளி ஆகிடுவேன் போல. சாவை நினைச்சு பாக்கற கோழையா மட்டும் என்னை மாத்திடாதீங்க… என்னை திருப்பி அனுப்பிடுங்க.

உங்களை நான் தொந்தரவு பண்ண மாட்டேன். என்னோட இந்த முடிவுக்கு, உங்களை நிச்சயமா கை காமிக்க மாட்டேன். காலம் எப்பவும் இப்படியே இருக்கப் போறது இல்லையே? மாற்றங்கள் வரத்தானே செய்யும். நமக்கு பிடித்தமான மாற்றம் நமக்குள்ள வரும்போது, நாம சேர்ந்து வாழ்வோமே சாகர்?

இப்ப உண்டாகுற ரணம் எல்லாம், நம்ம எதிர்கால வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையா மாறிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு. உங்ககிட்ட விடுதலை கேக்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க!

நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற இடைவெளியை நிதானம், பக்குவம், புரிதலோட நிறைச்சு சமநிலை வர்றவரை எனக்கு தனிமை வேணும். என்னை எனக்கே விட்டுக் கொடுத்திடுங்களேன், ப்ளீஸ்!” இறைஞ்சுதலாகக் கேட்க அமிரின் மனம் இளகிப் போனதா சறுக்கிப் போனதா? அது அவனுக்கே வெளிச்சம்.

“உன்னால அப்படி எல்லாம் தனியா வாழ முடியாது மின்னி. நீ இன்னும் அந்தளவுக்கு மெச்சூர்ட் ஆகலடா. உன்னை அவ்வளவு ஈசியா என்னால விட்டுக் கொடுக்க முடியாது.” கண்டிப்பும் வாஞ்சையும் ஒருசேர கூறினான் அமிர்.

“இந்த பிடிவாத அன்புதான் எனக்கு மூச்சு முட்ட வைக்குதுன்னு சொல்றேன். எங்கப்பா கிட்டயும் இதையேதான் சொல்லி, என் முடிவுல நிக்கப் போறேன்.

இல்ல… என்னோட நாட்கள் இப்படி உங்ககூட வீட்டுச் சிறையிலதான் நகர்ந்தே ஆகணும்னு நீங்க சொன்னா… என் வாழ்க்கையோட இறுதி நாட்களை நானே எழுத வேண்டியத இருக்கும்.” மாற்றுக் கருத்து கூற முடியாத வார்த்தைகளில் முதன்முறையாக மிரட்டலாக தன் கோரிக்கையை முன்வைத்தாள் லக்கீஸ்வரி.

‘ஏதோ ஆதங்கத்தில் இருக்கிறாள், கோபத்தில் புலம்புகிறாள் என, இவளைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்தற்கு எனக்கிது தண்டனையா?’ என்ற பாவனையில் மனைவியை நோக்கினான் அமிர்.

இவளின் வீட்டுச்சிறை சற்று அதிகப்படிதான் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் அதை தனது கோபத்திற்கு வடிகாலாக மட்டுமே செய்ததால் அதைத் தவறென்றே இவன் கருதவில்லை.

‘இவளையும் ஆடவிட்டு பார்த்தால்தான் என்ன? தோல்வி அடைந்து தன் முன்வந்து நின்றால் மொத்தத்திற்கும் இவளை உடும்பாய் சுற்றிக் கொள்ளலாம் அல்லவா?’ அப்போதும் தனக்கு சாதகமாய் தான் நினைத்தானே ஒழிய,

‘மனைவிக்கும் ஒரு வாய்ப்பு அளிப்போம், இவள் ஜெயிக்கட்டும்.’ என்ற பெரிய மனமெல்லாம் அமிருக்கு இல்லவே இல்லை.

ஆனாலும் இவளின் மீதுள்ள அக்கறை கொஞ்சமும் குறையாமல் முன்னைவிட பலநூறு டெசிபல்களில் ஏறத்தான் செய்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாது தனது தோரணை மாறாமல் பதிலளித்தான் அமிர்தசாகர்.

“உன் பைத்தியகாரத் தனமான முடிவுக்கு என்னையும் சேர்ந்து ஆடச் சொல்ற… இது சரிபட்டு வருமா வராதாங்கிற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் போகல. நீ போகணும்னு நினைச்சா போ! உன்னை உனக்கே விட்டுக் கொடுத்திட்டேன்.

ஆனா, எந்த காலத்திலயும் உன்னை தேடி நான் வரமாட்டேன். என் மனசு மாறிடுச்சுன்னும் உனக்கு, நான் சிக்னல் குடுக்க மாட்டேன். படம் போட்டும் காமிக்க மாட்டேன். என் மாற்றம் உனக்கே தெரிஞ்சா, நீயா வா! இல்லன்னா உன் இஷ்டம்.

உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியலன்னு, நீ தோல்வியோடு வந்து நின்னா கூட, நான் உன்னை ஒன்னும் சொல்லப் போறது இல்லை.

ஆனா, என்னோட கெடுபிடிகள் மாறுமா மாறாதாங்கிறது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.” பெரிய மனிதத் தோரணையில் கூறியவன், அவளது பதிலை எதிர்பார்க்காமல் உறங்கச் சென்று விட்டான்.

இதோ, மனைவியின் பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவளை வழியனுப்பவும் தயாராகி விட்டான். எல்லாம் அவளது விருப்பம் போலவே செயல்பட்டு வந்தான்.

கடைசி நிமிடத்தில் போக விரும்பவில்லை என்று மௌனராகம் மேஜிக் நடந்தாலும் அவனுக்கு நன்மைதானே? இந்த நப்பாசையில் அவளை முன்னைவிட அதிகமாய் கவனித்துக் கொண்டான்.

ஆனால் அவனது ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு சுகமாய் விமானத்தில் வந்து அமர்ந்து விட்டாள் இவனது மின்னி. யாரிவள்? அமிரின் மனைவியல்லவா! முன்னே வைத்த காலை பின்னே எடுத்து வைத்து விடுவாளா?

விமானத்தில் பயண இருக்கையில் அமர்ந்து ஆசுவாசமாய் சாய்ந்த பொழுதில் மனம் சிறகில்லாமல் பறப்பதைப் போல் உணர்ந்தாள் லக்கி. தன் முடிவுக்கு கட்டுபட்டு கணவன் தன்னை அனுப்பி விட்டான் என்பதை அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.

‘ஆர்வக்கோளாறு, அதிகப்பிரசங்கி.’ என கடுகடுத்தவன் அவளது உறுதியில் இறங்கி வந்து விட்டானே! அது மட்டுமா? அன்றொருநாள் இவள் மறுப்பு சொன்னதற்காக கடந்த மூன்று நாட்களாக இவளை இரவில் இம்சிக்கவில்லையே அதை நினைக்கும் போதுதான் மலைப்பாக இருந்தது.

‘மை சாச்சு இஸ் ஆல்வேஸ் ஜென்ட்டில்மேன்!’ பெருமை பீற்றிக் கொண்ட மனைவியின் மனதும் ஒரு ஓரத்தில், ‘இவன் ஏன் என்னை தவிர்த்தான்?’ எனவும் சிணுங்கிக் கொண்டது.

“இந்த ஊர் குளிருக்கு ட்ரிங்க்ஸ் எடுக்குறது சரிதான். ஆனா அதிகமா எடுத்துக்காதீங்க சாச்சு!” கனிவாகக் கூறி கோரிக்கை வைக்க,

“அந்த அக்கறை எல்லாம் உனக்கு எதுக்கு? நீதான் என்னை விட்டுப் போகணும்னு முடிவு பண்ணிட்டியே?” குற்றப்பாட்டை பாடி முகம் திருப்பிக் கொண்டான் அமிர்.

அவனது பதிலோ, பாவனையோ அவளது உள்ளத்தை உருக்க வைக்க, தாளமுடியாமல் தானாகவே முன்வந்து அவன் இதழோடு தன் இதழ் பொருத்தி, முத்த மொழியில் தன் தவிப்பனை கூறியே விலகினாள் லக்கி.

முதன்முதலாக அதுவும் பலநூறு பேர் நடமாடும் விமானநிலையத்தில் காதலின் அவஸ்தையை பிரிவின் ஆற்றாமையை இவள் வெளிபடுத்த, அமிருக்கும் அதே மோனநிலையே!

ஆனாலும் மனைவியின் தவிப்பில் அகமகிழ்ந்தான். எப்படியும் தன்னைத் தேடி வந்து விடுவாள் என்ற அசையா நம்பிக்கை அவனது மனதில் கல்வெட்டுச் சாசனமாய் பதிந்து போனது.  

எது எப்படியோ இந்தப் பொழுதில் இருந்து தன்போக்கில் சிறகை விரித்துப் பறக்கலாம். கணவனின் ஒப்புதலைக் கூறியே தந்தையிடமும் தனது முடிவினைக் கூறி உறுதியுடன் நின்று விடலாம் என மனம் நிறைந்த நிம்மதியுடன் தாய்நாட்டிற்கு, தந்தை வீட்டிற்கு திரும்பினாள் லக்கி.

இந்த மகிழ்வும் நிம்மதியும் இவளின் தனிமை வாழ்க்கையில் தொடர்ந்து வந்து சுகத்தை கொடுக்குமா அல்லது சுமையாக இறங்குமா?

தனிமை ஒன்றே வாழ்க்கையின் நிம்மதிக்கு சாத்தியம் என்றால் தொன்று தொட்டு வரும் பந்தங்களும் சொந்தங்களும் பொய் முகங்களா அல்லது மாயைகளா? வாழ்க்கை இன்னும் இவர்களுக்கு என்னென்ன கற்றுத் தரக் காத்திருக்கிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

 

இது இரு மனம் போகின்ற பயணம்

அதில் ஒரு மனம் வாடிடும் தருணம்

நல்ல ஆறுதல் நீ தரும்போது

எந்தத் திரையும் விலகலாம்

அன்பு பயணம் தொடரலாம். (பாடல்)