சில்லென்ற தீப்பொறி – 19

கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே

பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே

தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்

பத்திமையிற் பாங்கினியது இல்.

விளக்கம்

கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.

சில்லென்ற தீப்பொறி – 19

வாழ்க்கைப் பயணம் பல திருப்பங்கள் நிறைந்தது. நாமாக தேடிச் செல்வதை விட, தானாக அமையும் திருப்பத்தில் பயணிப்பதே நமது கடமையாக மாறி விடுகிறது.

அந்தக் கடமைகளில், கனவுகள் கானல்நீராகிப் போகாமல் தக்க வைத்துக் கொள்வதுதான் நமது சாமர்த்தியம். லக்கீஸ்வரிக்கு அந்த சாதுரியத்தை கற்றுத்தர கடமைகள் அவளைத் தேடி வந்தன.

வாழ்வென்பது இப்படிதான் என்றான பிறகு, அதில் மனம் லயித்து ஒன்றிவிட வேண்டுமென்பதை அவளது கர்ப்பகாலம் அழகாய் கற்றுத் தந்தது.

நான்காம் மாத முடிவில் கருவின் வளர்ச்சியினை தெரிந்து கொள்வதற்காக ஊடுகதிர் படம்(ஸ்கேன்) மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துப் பார்த்திருந்தனர். அதன் முடிவு பல ஆனந்த ஆச்சரியங்களை எல்லோருக்கும் அள்ளித் தந்தது.

அதனை முன்வைத்தே மருத்துவர் கூறிய அறிவுரைகளில் தனது கர்ப்பகால இன்னல்கள் அனைத்திற்கும் விடை கிடைத்தது போல் லக்கியின் மனம் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது.

“கமலாம்மா… உங்க யூகம் ரொம்ப ரொம்பச் சரி!” உணர்ச்சி மிகுதியில் பாசத்தில் அவரை கட்டியணைத்து முத்தாடிக் கொண்டாள். யாருக்கும் அத்தனை எளிதில் கிடைத்து விடுவதில்லையே இந்தப் பெரியபேறு?

வரமாய் வரப்போகும் உறவுகளை நினைத்து மகிழ்ந்தே பூரித்துப் போனாள் லக்கி. அந்தநேரம் மனதில் உள்ள சுணக்கங்கள் அலைகழிப்புகள் எல்லாம் காற்றில் கரைந்து காலாவதியாகிப் போன உணர்வு.

‘எனக்கே எனக்கா?’ நம்ப முடியாமல் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்ட லக்கியின் மனதில், ‘தன்னால் முடியுமா?’ என்ற இனம் தெரியாத பயம் முதலில் உண்டானது.

தனக்குள் எழுந்த கிளர்ச்சியில், தன்னை நாடி வந்த வரத்தை கொண்டாடிக் கழித்த ஆனந்தத்தில் பயம் அகன்று, ‘என்னால் முடியும்.’ என்ற மலையளவு திடமான தன்னம்பிக்கை மனதிற்குள் ஊற்றெடுக்கத் தொடங்கியது.

கணவனது பாராமுகமும் அவனது சுடுசொற்களும் கூட அவளுக்கு சுத்தமாய் மறந்து போயின. உண்மையில் அத்தனை கோபத்தை மனதில் வைத்து உரு போட்டு வைத்திருந்தாள் லக்கி.

அன்றொரு நாளில் அலைபேசியில் நடந்த தர்க்கப் பேச்சிற்கு பிறகு வந்த முதலாம் ஆண்டு திருமண நாளின் நிறைவிற்கும் கூட அவன், தன்னை அழைத்து வாழ்த்துச் சொல்லவில்லை. அவளது வாழ்த்திற்கும் பதில் அளிக்கவில்லை.

அனைத்து விசயங்களையும் தட்டிக் கழித்து சமாதானமடையும் மனது, ஏனோ அவனது அன்றைய பாரமுகத்திற்கு மட்டும் இளகிப் போகவே இல்லை. இனி அவனாக அழைத்தால் மட்டுமே பேசுவது என்ற உறுதியான முடிவினை எடுத்திருந்தாள் லக்கி.

ஆனால் ஸ்கேன் மற்றும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு கணவன் மீதான கோபமும் ஆதங்கமும் தூரமாகிப் போய்விட, கடமையும் ஆசையும் போட்டி போட்டுக் கொண்டு அவனிடம் பேசத் தூண்டியது.

அவர்களுக்கு கிடைக்கப் போகும் வரமான வரவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும், ‘உனக்கு யாருமில்லை என்று ஏங்கித் தவிப்பாயே! இப்பொழுது என்ன சொல்கிறாய்?’ என்று சந்தோஷ திமிருடன் குரல் உயர்த்திப் பேசி, அவனுக்கு ஆச்சரியத்தை அளிக்க வேண்டுமென்ற ஆசையுடன் கணவனை அழைத்தாள் லக்கீஸ்வரி.  

வழக்கம் போல் அவளது அழைப்பை ஏற்காமல் கிடப்பில் போட்டானோ அல்லது வேலையின் நிமித்தம் கவனிக்கவில்லையோ அது அவனுக்கே வெளிச்சம். கணவனது அலைபேசி எடுக்கப்படாமல் இருக்க, தன்னுள் எழுந்த சோர்வினை அடக்கிக்கொண்டு மனதினை சமன்படுத்திக் கொண்டாள்.

‘இது வாடிக்கை தானே?’ என தன்னைத் தேற்றிக் கொண்டு ஆய்வக அறிக்கைகளையும், ஸ்கேன் ரிப்போர்டையும் அவனது அலைபேசிக்கு அனுப்பி வைத்தாள் லக்கி.

‘இனி இப்படித்தானோ… இதைதான் கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே! என்று சொல்கிறார்களோ?’ என சிந்தித்தவளுக்கு மனசாட்சி ஆமென்று பதிலுரைத்தது.

ஏற்கனவே மசக்கையின் அவஸ்தையில் கணவனின் அரவணைப்பை ஏங்கித் தவித்த பெண்ணவளின் அகமும் புறமும், முன்னைவிட அலைபாய்ந்து கணவனை நாடச் சொல்லியது. ‘தனது ஏக்கங்களை எல்லாம் அவன் அறிவானா? யோசித்தாவது பார்ப்பானா?’ என வழக்கம் போல் தன்னிரக்கத்தில் மீண்டும் அமிழ்ந்து போனாள் லக்கி.  

அமிர்தசாகரும் மிகமிக மெதுவாக இரண்டு நாட்கள் கழித்தே, “இவளுக்கு வேறு வேலை இல்லை. மெசேஜ்ல சண்டை போட கன்டென்ட் அனுப்பி இருப்பா!” சலிப்புடன் மனைவி அனுப்பிய செய்திகளைத் திறந்து பார்த்தான்.

குறுஞ்செய்திகளை படித்தும், ஸ்கேன் மற்றும் ஆய்வக முடிவுகளையும் பார்த்தவனுக்கு தெளிவாகப் புரிய சில நிமிடங்கள் ஆனது. புரிந்தவுடன் விரைந்து சென்று, அன்றொரு நாள் முதன்முதலாக கர்ப்பம் எனக்கூறி அனுப்பிய மருத்துவ அறிக்கைகளையும் படித்துப் பார்த்தான்.

அன்றைய அவசரத்தில் மேலோட்டமாக குழந்தை என்று மட்டுமே பார்த்திருந்தவன், கருவின் நிலைகளாக லக்கி டைப் செய்து அனுப்பிய செய்திகளை அமிர் படித்துப் பார்த்திருக்கவில்லை.

தன்னைத்தானே திட்டிவிட்டு, தலையில் அடித்துக் கொண்டவன், மீண்டும் மீண்டும் பழைய செய்தியையும், புதிதாக வந்த செய்தியையும் நிதானமாக படித்து மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டான். முதல்முறை சந்தேகமாக கணித்ததை இம்முறை உறுதிப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் சொல்லின.

‘சண்டைக்காரியுடன் பேசுவதா?’ என வீம்பான கௌரவம் பார்க்காமல் சந்தோஷ ஆர்ப்பரிப்பில் மனைவியை அழைத்து விட்டான் அமிர்தசாகர்.

‘எத்தனை மகிழ்வுடன் வாய் மொழியாக சொல்லக் காத்திருந்தாளோ? பாவம்… அவளுக்கு அந்த வாய்ப்பினை வழங்காமல் விட்டு விட்டோமே?’ குறைபட்ட மனது, ‘அமிர்… நீ எப்பவும் உன்னை பத்தி மட்டுமே யோசிக்கிறடா!’ என முதன்முதலாக அவனைக் குற்றம் சாட்டி விட்டுச் சென்றது.

“அடப்போடா அசடே! என் வேதனையை என் பொண்டாட்டி கிட்ட காமிக்காம… தெருவுல போறவன் வர்றவன் மேலேயா ஏத்தி வைக்க முடியும்?” தெனாவெட்டுடன் மனசாட்சிக்கு பதிலளித்து மனைவியின் காணொளி வரவிற்காக காத்திருந்தான்.

மாலைநேரத்தில் தோட்டத்தை சுற்றிவிட்டு மூச்சுவாங்க வந்து அமர்ந்தவளை கணவனின் காணொளி அழைப்பு அழைக்க, அருகில் இருக்கும் கமலாம்மாவிடம், “உங்க மாப்பிள்ளை தம்பிக்கு, பொண்டாட்டி இருக்காங்கிற நினைப்பு வந்துடுச்சு போல கமலாம்மா?” புண்பட்ட மனதை அவனை நொடித்துப் பேசியே ஆற்றிக் கொண்டாள் லக்கி.

“தம்பி பாவம்மா… அவருக்கு என்ன வேலையோ என்னவோ? அவருகிட்ட கோபப்படாம பேசிடு தங்கம்!” கனிவாகக் கூறியே அகன்று விட்டார் அப்பெண்மணி.

“ஆமாமா… விட்டா நான்தான் அவரை விடாம கொடுமைபடுத்துறேன்னு சொன்னாலும் சொல்வீங்க!” நக்கலடித்தவாறே கணவனின் அழைப்பினை ஏற்றிருக்க, அவனும், ‘கொடுமைபடுத்துறது’ என்ற வார்த்தையை கேட்டு விட்டான்.

“யாருடி அது? யாரு, யாரைக் கொடுமைபடுத்துறா? உன்னையவா…” படபடத்துக் கேட்டவன், நொடியில் சுதாரித்து “சான்ஸ் இல்லையே… நீ எனக்கே தண்ணி காட்டுறவளாச்சே?” யோசனையுடன் வாரிவிட, வழக்கம்போல் செல்லச் சண்டை ஆரம்பமாகியது.

“ஆமா… நான் உங்களுக்கு தண்ணி காட்டினதாலதான், நீங்க எனக்கு தண்ணி ஊத்திக் குடுத்தீங்க!” உதட்டைச் சுளித்து பதில் அளித்தவள், முகம் திருப்பிக் கொண்டாள்.

“இதை சொல்லிக் காமிக்காம உனக்குப் பேசத் தெரியாதா? அப்புறம், கொஞ்சமே கொஞ்சம் குண்டாத் தெரியுற… நல்ல கவனிப்பு போல?” அமிர் சீண்டலில் இறங்க,

“இதச் சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?” கோபமுடன் கேட்டாள் லக்கி.

“ரெண்டு நாளுக்கு முன்னாடி நீ எதுக்காக கூப்பிட்டேன்னு கேக்கத்தான், நான் கூப்பிட்டேன்!” வீராப்பு பேசியவனின் முகம் அப்பட்டமாக சிரித்து, அவனது சால்ஜாப்பை எடுத்துக் காட்டியது.

“அப்போ மெசேஜ் எதுவும் படிக்காம ஸ்ட்ரைட்டா என் கூட பேச வந்துட்டீங்க… அப்படித்தானே?” பொய் முறைப்பில் லக்கி கேட்க,

“ஆமாடா மின்னி! விஷயத்தை படிச்சு தெரிஞ்சிகிட்டு இருந்தா… எதுக்கு உன்னை கூப்பிட்டு பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ணப் போறேன்? கமான் டெல் மீ, மை டியர்!” அதிகாரத்துடன் கேட்க, வெடித்துச் சிரித்தாள் லக்கி.

“ஹாஹா… உங்களுக்கு இந்த ரீல் கெத்து செட் ஆகல சாச்சு! எப்பவும் போல முறைப்போட, என்ன விஷயம் மின்னின்னு நேரடியா கேளுங்க! அப்போதான் எனக்கும் சொல்ல வரும்.” மலர்ந்து சிரித்தவளின் பார்வையில் விரும்பியே விழுந்தான் அமிர்.

‘இவள் என் மனைவி; எனக்காக, என் ஒருவனுக்காக ஒரு குடும்பத்தையே உருவாக்கி வழிநடத்தப் போகிறவள்.’ என்ற சிலிர்ப்பும் சிலாகிப்பும் ஒருங்கே எழ மனைவியை இமைக்காமல் பார்த்தான்.

“இப்ப நீ பக்கத்துல இல்லையேன்னு நான் ரொம்ப ரொம்ப ஃபீல் பண்றேன் டா… உனக்கு எப்படி?” ஆழ்ந்த குரலில் பளிச்செனக் கேட்க,

அவளும் ஆமென்று வேகமாய் தலையாட்டி விட்டு, “எப்பவும் உங்க பக்கத்துல மட்டுமே இருக்கணும்னு தோணுது சாச்சு!” கண்கள் பளபளக்க, புன்னகைத்து கூறியவளின் குரலும் கரகரத்தது.

“ஹேய்… எமோசன் ஆகாதே டி! அது அப்படியே பேபீஸ்க்கு ரிஃப்ளேக்ட் ஆகும்.” அக்கறையுடன் பதபதைத்துக் கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் லக்கி.

‘குழந்தையின் மேல், தாயின் பற்று பத்தியத்தில் இருந்து ஆரம்பிக்கிறதென்றால், தந்தையின் பாசம் உணர்விலேயே உருப்போடத் தொடங்கி விடுகிறதா?’ இன்னதென்று விளங்காத சந்தோஷ மாற்றங்களை கணவனிடத்தில் கண்டவளின் உள்ளம் தித்திப்பில் திளைக்க, சகஜ நிலைக்கு திரும்பியவளாக அவனோடு வார்த்தையாட ஆரம்பித்தாள்.

“உங்க பேபீஸுக்கு பாஸ் ஆகட்டுமே! அப்படியாவது தெரியட்டும்… அம்மாவை எப்படியெல்லாம் இந்த அப்பா தவிக்க விடுறார்னு குழந்தைங்களும் புரிஞ்சுக்கட்டும்.” சப்பை கட்டுக் கட்டி, முன்னைப் போலவே உதட்டினைப் பழித்துக் காட்ட, ரசனையுடன் பார்த்துச் சிரித்தான் அமிர்.

“எந்த எச்ஸ்பிரசனும் முகத்துல காட்டாதடி… என்னால கன்ட்ரோல் பண்ண முடியல.” இயலாமையுடன் கூறி தொடுதிரை வழியாக கன்னம், நெற்றி என முகம் முழுவதும் முத்தமிட்டே அடங்கினான்.

தவித்த மனதின் தாகம் தீர்ந்த கணக்காக தொடுதிரையின் வழியாக வந்த முத்தத்தை முழுதாக வாங்கிக் கொண்டு தனக்குள் சேமித்துக் கொண்டாள் லக்கி.

அடுத்தடுத்து நடந்த அந்தரங்கப் பேச்சுக்களில் அவளின் தேக மாற்றத்தையும், இன்னல்களையும் பொறுமையாக கேட்டு விசாரித்து பெரிதும் வருத்தப்பட்டுக் கொண்டான் அமிர்தசாகர்.

“ரொம்ப கஷ்டமா இருந்தா ஹாஸ்பிடல்ல இருந்துக்கோடா! ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ் நர்ஸ் ஆர் டாக்டர்ஸ் பார்வையில இருந்தா பயமில்லாம நார்மலா இருக்கலாம்.” கனிவுடன் கூறியவனின் குரலில் என்றுமில்லாத தவிப்பு வெளிப்பட்டது.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சாச்சு! டெய்லி கொஞ்ச நேரம் இப்படி ப்ரீயா பேசுங்க… அதுவே போதும் எனக்கு. நான் எப்பவும் நார்மலாதான் இருக்கேன்!” கணவனுக்கே தைரியம் கூறி சமாதானப்படுத்தினாள் லக்கி.

அதற்கடுத்து வந்த நாட்கள் இருவருக்கும் சுமூகமாகவேச் சென்றன. உறக்கமின்றி தவித்த அவனது இரவுகளையும் கர்ப்பகால அவஸ்தையுடன் கழிந்த இவளின் பகல் பொழுதுகளையும் பேசிப்பேசியே கரைத்தனர்.

நடந்து முடிந்தவற்றை மறந்தும் கூட நினைவுபடுத்திக் கொள்ளவில்லை. நாளும் பொழுதும் சீண்டலும் செல்லக் கோபங்களும் தான் அவர்களிடையே களைகட்டியது.

பெரும்பாலான நேரங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பள்ளியில் தொடங்கி கல்லூரியில் சேர்க்கும் தருவாயில் வந்து நின்றது.

“அவங்க சாய்ஸுக்குதான் நான் ஓகே சொல்வேன்! படிப்பானாலும் சரி மேரேஜா இருந்தாலும் சரி!” லக்கி தன்போக்கில் சொல்லப்போக, முறுக்கிக் கொண்டான் அமிர்

“ஏன்டி இப்படிச் சொல்ற? அவங்களுக்கு எது நல்லதுன்னு பார்த்துப் பார்த்து செய்றதுதான் நம்ம வேலையே! அதுதான் நம்ம கடமையும் கூட…” அதட்டலுடன் கூறினான்.

“இந்த கடமை கருவேப்பிலையை சொல்லித்தான் எனக்கு சான்ஸ் கொடுக்காம நம்ம கல்யாணமே நடந்தது. போதும்பா… நான் பட்ட அவஸ்தை என் குழந்தைகளுக்கும் வேண்டாம்.” அதிருப்தியாகக் கூறி, கணவனின் கோபத்திற்கு மணிகட்டினாள் லக்கி.

“இப்ப நான், உனக்கு எதுல குறைன்னு இப்படி சலிச்சுக்குற? என்ன நடந்தாலும் உன்னை மட்டுமே தேடி வர்றேனே அது தப்பாப் படுதா? இல்ல… அதுதான் உனக்கு கௌரவம் கொடுக்கலையா?” மிளகாயாக காட்டத்துடன் இவன் பொரிந்து தள்ள, இவள்தான் மூச்சுமுட்டிப் போனாள்.

“இதுதான் உங்ககிட்ட எனக்கு பிடிக்கல… என்ன நடந்தாலும் என் மேலேயே திருப்பி விட்டுட்டு, நீங்க நல்லவன் வேஷம் போடுறீங்க? இதுல எங்கே இருந்து நாம மேட் ஃபார் ஈஸ் அதர் ஆக முடியும்?” இயல்பாகக் கூறி மனம் சுணங்கிக் கொண்டாள் லக்கி.

“அரைகுறை பேக்கு மாதிரி நீ இப்படியே உளறிட்டு இருந்தா உன் மேல யாருக்கு தான் கோபம் வராது? நமக்கே நமக்கான எதிர்பார்ப்புக்களை நமக்குள்ள இயல்பா பேசி முடிச்சுக்கிறோம். அந்த சமயத்துல கொஞ்சம் வார்த்தை மீறிப் போறதும் சகஜம் தானே? இதுல என்ன குறை கண்டுட்ட…

வெளியே சொல்லாம மூடி மறைச்சு மனசுல அழுத்திக்கிட்டா தான், நமக்குள்ள ஒத்து வரலன்னு அர்த்தம். அந்த அழுத்தம் உனக்கோ எனக்கோ இல்ல. ரெண்டுபேரும் இயல்பா இருக்கோம் மின்னி!” தன்னை முழுமையாகப் புரிந்து கொண்டு காணொளி அழைப்பில் பேசியவனை இமைக்காமல் பார்த்தாள் லக்கி.

“ஒத்துவராத காரணங்கள் எத்தனையோ இருந்தாலும் நாம வாழ்ந்துதான் ஆகணும் மின்னி! என் கையை இறுக்கமா பிடிச்சுக்கோ! எதையாவது சொல்லி என்னை தவிர்க்க நினைக்காதே… என்னைத் தவிக்கவும் விடாதே! நான் உன்னை விடமாட்டேன். அந்த எண்ணமே எனக்கு இல்ல… இனிமேலும் வரப்போறது இல்லை.

சந்தோசமோ சங்கடமோ நம்ம பிள்ளைகளோட சேர்ந்தே கடப்போம். எதையும் மனசுல தேங்கவிடாம வெளிப்படையா சொல்லி, சண்டைபோட்டு மனசுல பாரம் ஏத்திக்காம வாழலாம் மின்னி!” அவளை அவளே உணரும்படியாக மென்மையான குரலில் கனிவாகக் கூறினான் அமிர்.

“நிஜமாவா சாச்சு… நாம பெர்பெக்ட் கப்பிள்ஸ் தானா?” உணர்ச்சியின் மிகுதியில் லக்கியின் கண்களில் கண்ணீர் கோடு கிழித்து கீழிறங்கியது.

“எனக்குமே அந்த சந்தேகம் ரொம்பநாள் இருந்ததுதான் மின்னி! ஆனா இப்ப இல்ல… என்கிட்டே இருந்து விலகி, நீ தேடிட்டு வந்த தனிமை, எனக்கு முழுமையா கிடைச்சும் என்னால நிம்மதியா இருக்க முடியல. யாரைத் தேடுறேன், எது எனக்கு தேவைன்னு புரியாம சுத்திட்டு இருந்தேன்.

நம்ம உறவு பொறுப்பான அடுத்த கட்டத்துக்கு மாறும் போது அந்த தவிப்பெல்லாம் காணாமப் போயிடுச்சு. நிஜம் இதுதான். வெளியே எப்பவும் போல கோபம் ஈகோ எல்லாம் இருக்கத்தான் செய்யுது. ஆனா, நீ இல்லாத இந்தக் கொஞ்சநாள்ல உன்னை, நான் ரொம்பவே தேடிட்டேன் டா!” உருகிப் பேசியவனின் ஒவ்வொரு வார்த்தையும் அமிர்தத்தின் தித்திப்பாக மனைவிக்குள் இறங்கியது.

‘இவன் என் அமிர்தன்… இவனது இந்த குணத்தைக் கண்டுதான் அப்பா இவனை எனக்காக தேர்ந்தெடுத்தாரா? அள்ள அள்ளக் குறையாத நற்பண்புகளை எல்லாம் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் சாகரம் இந்த அமிர்தன்.’ நினைக்க நினைக்க மனைவியின் மனம் பூரித்து மகிழ்ந்தது.

இமை தட்டியப் பார்வையில் பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் லக்கி. கணவனிடம் இந்தப் புரிதலை இளகலை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.

வார்த்தைகளை கோர்க்க முயன்று தொண்டையடைக்க, திக்கித் திணறியே, “லவ் யூ சாச்சு!” உளப்பூர்வமாக அவள் சொல்லி முடிக்க, “மீ டூ!” என அவனும் பதிலுரைக்க, அவர்களின் அன்பின் பிடி மேலும் இறுக்கமாகிப் போனது.

முகமெல்லாம் சிவந்து கண்கள் படபடக்க விரல்களை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தவளை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான் அமிர்.

“இதை நீ நம்பித்தான் ஆகணும் மின்னி! பட், உன்னை பிடிக்கும்ங்கிற ஒரே காரணத்துக்காக, உனக்கு பிடிச்ச மாதிரி என்னால எப்பவும் மாற முடியாது. என்னை நான் மாத்திக்கவும் மாட்டேன்.

நாம முட்டிகிட்டு நிக்கிறதும் இந்த இடத்துல தான்.

நீ, உன்னை மாத்திக்கணும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா ரியாலிட்டி என்னான்னு புரிஞ்சு நடந்துக்க முயற்சி பண்ணு! அது மட்டும் தான் உன்கிட்ட நான் எதிர்பார்க்கிறேன்.” கிளிபிள்ளைக்கு பாடம் எடுப்பதைப் போல மெதுவாக ஆழமாக அழுத்திச் சொல்லிப் புரிய வைக்க, மௌனமாக கேட்டு மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டாள் லக்கி.

சொன்னது சொன்னபடியே தனது நிலையில் இருந்து இறங்கி வராமல் இருந்தான் அமிர். நாளுக்குநாள் ஏற்படும் உடல்நிலை மாற்றங்களை கனிவோடும் அன்போடும் கேட்டு ஆறுதல் அளிப்பவன், மனைவி தன்னை நேரில் காண ஏங்கித் தவிப்பதை அறிந்தும் அமைதியாக இருந்தான்.

“புள்ளதாச்சி பொண்ணு ஆசைப்பட்டது செய்யலன்னா குழந்தை காதுல சீழ் பிடிக்கும் சாச்சு! ப்ளீஸ்… வளைகாப்புக்கு வரப் பாருங்களேன்!” கெஞ்சலுடன் உத்தரவிட்ட மனைவியின் பேச்சை கருத்தில் கொள்ளவே இல்லை.

“ஒருவேளை நான் அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுட்டு, நான்தான் உங்களைத் தேடி வரணும்னு நினைக்கிறீங்களா?” அழுத குரலில் கேட்க, “போடி பைத்தியம்!” என பட்டத்தை சூட்டி அவளின் வாயை அடைத்தான்.

“அப்படின்னா டெலிவரி டைம்ல கூட வர மாட்டீங்களா? குழந்தைகளை மொத மொதல்ல அப்பாவா தூக்கி கொஞ்சனும்னு உங்களுக்கு ஆசை இல்லையா சாச்சு?” அங்கலாய்ப்புடன் கேட்டு வயிற்றுப் பிள்ளைகளிடம் முகாரியே பாடிவிட்டாள் லக்கி.

“உங்கப்பா சரியான பேஜாரான ஆளு டா குட்டீஸ்… உங்களைப் பார்க்க வர மாட்டேன்னு சொல்றவரை நீங்களும் வீடியோல பாக்க கூடாது, பேசவும் கூடாது.” வில்லங்கமான உத்தரவுகளை பிறப்பித்து கணவனை கதி கலங்க வைத்தாள்.

பிரசவ நேரத்தில் கணவன் லக்கியை காண வந்தானா? சிப்பியில் இருந்த முத்துக்கள் அம்மாவின் சொல்பேச்சை கேட்டுக் கொண்டனவா? எத்தனை முத்துக்கள் என்பதை கணித்துக் கொண்டிருங்கள் மக்களே!

ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே

தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே

வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்

தானை தடுத்தல் இனிது.

விளக்கம்

ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.