சில்லென்ற தீப்பொறி – 21

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே

செவ்வியானாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே

கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று

வவ்வார் விடுதல் இனிது.

விளக்கம்

மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.

 

சில்லென்ற தீப்பொறி – 21

 

அஸ்விகா, ஆத்ரேஷ், ஆர்விகா… மூன்று மழலைச் செல்வங்களின் வருகையில், அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல அவர்களைச் சார்ந்த சுற்றத்தாருக்கும் உற்சாகமும் மகிழ்வும் தொற்றிக் கொண்டது.

ரெங்கேஸ்வரன் தனது மகிழ்வினைக் கொண்டாட, அவரது நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து இனிப்பும் கொடுத்து ஆர்பாட்டம் செய்தார்.

“என் பொண்ணு எப்பவும் அதிர்ஷ்ட தேவதை… என் பேரன் பேத்திகளும் அவளைப் போலவே அதிர்ஷ்டக் குழந்தைங்க… ரொம்ப சந்தோசம் அமிர்!” உணர்ச்சி மிகுதியில் பெருமையுடன் சிலாகித்துக் பேசியவர், அமிர்தசாகரை ஆரத்தழுவிக் கொண்டார்.

ஒரு தந்தையின் உளமார்ந்த பூரிப்பை, உற்சாகத்தை கண்ட அமிருக்கும் அந்தநொடி அவரை முறைத்து தவிர்க்கத் தோன்றவில்லை. மாமனாரின் அன்பில் தன்னைத் தொலைத்தவனாய் சிலிர்த்து அணைத்துக் கொண்டான்.

‘என் குழந்தைகள் மட்டுமல்ல… நானும் அதிர்ஷ்டக்காரன் தான்.’ சத்தம் போட்டுச் சொல்லப் பரபத்த தன் மனதை அடக்கிக் கட்டிவைத்தான்.

நடேசனும் கோமதியும் தங்களின் வசதிக்கு ஏற்றவாறு முதியோர் இல்லங்களில் அன்னதானம் செய்தும், குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வைத்தும், தங்களின் குடும்ப வாரிசுகளுக்கு ஆசிகளையும் வாழ்த்தினையும் பெற்றுத் தந்தனர்.

ஹரிணியும் தன் பங்கிற்கு தோழிகளுக்கு ஹோட்டலில் விருந்து வைத்து ஆட்டம் போட்டாள். இதற்கென தமையனிடம் சலுகையுடன் பேசியே அவனது பணத்தை கணிசமாகக் கறந்து கொண்டாள்.

“நீங்க ஆயிரத்தில் ஒருவன் ண்ணா… டிரிபிலெட்ஸ் பிறக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம், சந்தோசம் தெரியுமா? அண்ணியோட பேரைப் போலவே நீங்க செம லக்கி பெர்சன் அண்ணா…” குதித்து கும்மாளமிட்டே அமிரை பரவசப்படுத்தினாள். உண்மைக்கும் அந்த நேரத்தில் அவனும் வானத்தில் சிறகின்றி பறந்தான் என்றே சொல்ல வேண்டும்.

அமிருக்கு தெரிந்து மனைவியின் கழுத்திற்கு கத்தியாக மட்டுமே இருந்துள்ளதாக அவனே நன்றாக அறிவான். அப்படி இருந்தும் தனது சுபாவத்தை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அவளை நோகச் செய்தவன்தான்.

தனது தவறுகளை மனைவி வெளிப்படையாகச் சொல்லிக் காண்பித்தாலும் எந்த நிலையிலும் அவள், தன்னை வெறுத்ததில்லை என்பதையும் தெளிவாக அறிவான்.

இவற்றை எல்லாம் புரிந்து கொண்டு, இந்த நிலையில் ‘இப்படியொரு பந்தத்தை வாழ்க்கை துணையாக பெற்ற நானும் லக்கி தான்.’ தனக்குள்ளாகவே பெருமை பேசிக்கொண்டு கர்வம் கொண்டான்.

பிரசவம் முடிந்து மயக்கம் தெளிந்த மனைவியை அதே பெருமையில் வீராப்புடன் சென்று பார்த்தான் அமிர். அவளைக் கனிவுடன் பார்த்த பார்வையிலும் கர்வமே மிஞ்சி நின்றது.

“சாதிச்சுட்ட டா மின்னி… கிரேட் அன்ட் தாங்க்ஸ்!” அவளுக்கு சலாம் போட்டு, கௌரவம் செய்தே தனது மகிழ்வை அழகாக வெளிப்படுத்தினான்.

‘நான் அமிர்… யாருக்கும் கட்டுப்படாதவன்.’ நிமிர்வுடன் ஆளுமையாகப் பேசும் கணவன் எங்கோ தொலைந்து போனதொரு மாயத்தோற்றம் லக்கிக்குள் முகிழ்ந்திட, அருகில் வருமாறு சோபையான கண்களால் அழைத்தாள்.

ஆசையுடன் அருகில் வந்தவன் அவளின் நெற்றியில் முத்திரைப் பதித்து வாஞ்சையுடன் முகம் தடவி விட, லக்கியின் கண்களின் ஓரம் ஈரம் துளிர்த்தது.

“என்னால நம்ப முடியல சாச்சு… நமக்கு பேபி பிறந்தது, என்னை நீங்க அன்பா தாங்குறது… இவ்ளோ பீஸ்ஃபுல்லா என்கிட்டே நடந்துக்கிறது எல்லாம் பார்க்கும் போது நானுமே ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்றேன். பட், அதை செலிபிரெட் பண்ண முடியலயேன்னு சோகமா இருக்கேன்.” தனது நிலையை சுட்டிக் காட்டி முகம் சிணுங்கினாள் லக்கி.

“இதெல்லாம் எதுக்குன்னு நினைக்கிற? அடுத்த புராஜெக்டுக்கு நீ சீக்கிரமா ரெடியாகணும் கண்ணு! அதுக்குதான் இந்த கொஞ்சல் குலாவல் எல்லாம்.” அதட்டலாக கூறி கண்ணைச் சிமிட்டினான் அமிர்.

‘உன் பேச்சில் நான் உருகிக் குழைந்து விடமாட்டேன்.’ என்ற மிதப்பான பார்வையில் அவன் சிரிக்க, “அதென்ன அடுத்த புராஜெக்ட்?” விளங்காது கேட்டாள் லக்கி.

“என்னவா? நான் கேட்டது என்ன… நீ கொடுத்தது என்ன?” மிரட்டலுடன் கணவன் கேட்க, அரண்டு போனாள் மனைவி.

“நான் என்ன செஞ்சேன்?” லக்கி சோர்வுடன் விழிக்க,

“நமக்கு நாலு பேபி வேணும்னு சொன்னேனா இல்லையா? இந்த அட்டெம்டுல மூனு தான் வந்திருக்கு… அதிலயும் ஒரு பார்டி மெஜாரிட்டி கம்மி மாதிரி, ஒரு பையன் ரெண்டு பொண்ணு. எப்பவும் சிங்க் ஆகாது மின்னி டார்லிங்! சீக்கிரம் நெக்ஸ்ட் புராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணி இதை டேலி பண்ணணும் சரியா?” சிரிக்காமல் கூற, தனது பலத்தை திரட்டி கோபமாக முறைத்தாள் லக்கி.

“உங்க மொக்கை சகிக்கல…” முகம் திருப்பி பல்லைக் கடிக்க,

“ஹேய்! நிஜமா சொல்றேன், ஐ வான்ட் ஒன் மோர்…” எனச் சொல்லும் போதே,

“படுபாவி! பெத்து பொழைச்சிருக்கேன்னு பாவம் பார்க்காம அடுத்ததுக்கு ரூட்டு போட உன்னால மட்டும்தான்டா முடியும். டென்சன் ஏறி கத்துறதுக்குள்ள ஒழுங்கா இடத்தை காலி பண்ணு!” மூச்சு வாங்கப் பேசினாள் லக்கி.

“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ் மின்னி! ஜஸ்ட் உனக்கு சர்ஜரி பெயின் ஃபீல் மறந்து போகத்தான் கொஞ்சம் மொக்கை ஓட்டினேன். அதர்வைஸ் எனக்கு உன்னோட கேரிங் தான் ரொம்ப முக்கியம்.” ஆறுதலாய் கூறி அன்பாய் அணைத்த அமிர்,

“ஹொவ் டூ யூ ஃபீல் டியர்? கனிவுடன் கேட்க,

“ரொம்ப எக்சைட்டா ஃபீல் பண்றேன். எனக்கு இன்னமும் சந்தேகமாவே இருக்கு. சிஸ்டர்ஸ் ஒரு நிமிஷம் மட்டுமே குழந்தைகளை காமிச்சிட்டு கூட்டிட்டு போயிட்டாங்க. கிட்ஸ் எப்படின்னு இருக்காங்கன்னு பார்க்கணும். என்னை அங்கே கூட்டிட்டு போக முடியுமா?” சிலிர்த்து, சிலாகித்து கெஞ்சலாக லக்கி கேட்க, ‘ஐயோ பாவமே.’ என்றானது கணவனுக்கு.

உயிரை சுகமான சுமையாகத் தாங்கி, பெற்று பிழைத்து வரும் பெண்களுக்கே உண்டான சாபக்கேடு இது. தனக்குள் பொதித்து பத்திரப்படுத்திய சிசுவை, முதன்முதலாக தன் கண்களால் நிறைவாகப் பார்க்க முடியாத அவலம் இந்த பெண்ணினத்தில் மட்டுமே நடக்கின்றது. நிதர்சனம் இதுதான் எனும்போது கவலைப்பட்டு மனம் நோவானேன்?

“டெஃபனட்லி டா! பட், நீயும் ரெகவர் ஆகணும். பேபீஸ்க்கு ஃபீட் பண்ணறப்போ நல்லா பார்த்துக்கலாம். நொவ் யூ நீட் ரெஸ்ட்!” எனக் கூறி அவளின் தலையை வருடிக் கொடுத்தே உறங்க வைத்தான்.

எந்த இடத்திலும் தான் தவறி விடக்கூடாது என்ற நிலைபாட்டில் மனைவி மக்களிடத்தில் மட்டுமே தனது கவனத்தை முழுமையாக பதித்தான் அமிர்.

கர்வம் பொங்க மனைவி குழந்தைகள் என உற்சாகத்துடன் சுற்றிக் கொண்டிருந்தவனின் உள்ளத்தில் வீம்பும்  தலைதூக்கி வேடிக்கை பார்த்தது.

மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவில் பணம் செலுத்துமிடத்திற்கு சென்று லக்கீஸ்வரியின் பெயரில் வரவு வைக்கச் சென்றான் அமிர்தசாகர்.

பணம் பெற்று ரசீது போடும் பணியாளோ அவனது பணத்தை வாங்க மறுத்து திருப்பி அளித்து விட, அமிருக்கு கோபமேறிப் போனது.

“ஆல்ரெடி லக்கீஸ்வரி பில், அட்வான்ஸ் பேமண்ட்லதான் ரன் ஆகிட்டு இருக்கு சார்… நீங்க ஃபைனல் பில் குடுக்கறப்போ செட்டில் பண்ணினா போதும்.” பணியாளர் விளக்கம் கூறியதும் மாமனாரின் மேல்தான் ஆத்திரம் கூடிப் போனது.

‘என் பொண்டாட்டிக்கு எதையும் செய்ய சான்ஸ் கொடுக்காம பிளாக் பண்ணிட்டே இருக்கார். சரியான ஸ்பீடு பிரேக்கர்.’ மனதில் மூண்ட சினத்துடன் திரும்பிச் செல்ல யத்தனித்த நேரத்தில், மீண்டும் அவனை அழைத்து நிறுத்தினார் அந்த பணியாளர்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்… பேபீஸ்-க்கு நேம் செலக்ட் பண்ணிட்டீங்களா? இல்ல பேபி ஆப் லக்கீஸ்வரி1, லக்கீஸ்வரி2, லக்கீஸ்வரி3-ன்னு ரிஜிஸ்டர் பண்ணிக்கவா? பேபீஸுக்கு தனியா பில்லிங் கார்டு போடணும். மதரோட பில், டெலிவரி பேக்கேஜ்ல வந்துடும்.” விளக்கம் கொடுக்க சுறுசுறுப்பானான் அமிர்.

மனதிற்குள் ஏற்கனவே முடிவு செய்த குழந்தைகளின் பெயர்களை வரிசையாகக் கூறி, கணிசமான தொகையை மூவரின் பெயரிலும் முன்பணமாகச் செலுத்தி, ‘நானும் பொறுப்பான தந்தை.’ என உள்ளுக்குள் முறுக்கிக் கொண்டான் அமிர்.

எப்படியோ இந்த விசயம் எல்லோருக்கும் தெரியவர, அனைவரும் ஆட்சேபணைப் பார்வையுடன் அமிரை நோக்கினர்.

‘கணவன் இப்படிதானே?’ என்ற இலகுவான மனநிலையில் லக்கி எளிதாகக் கடந்து விட்டாள். நடேசனும், ‘இவனது பொறுப்பு அறிந்த விஷயம் தானே?’ சகஜமாக எடுத்துக் கொண்டார்.

ஆனால் ரெங்கேஸ்வரனால் அப்படி ஏற்றுக் கொள்ள முடியாவில்லை. உள்ளுக்குள் பெரிதாக மனம் சுணங்கிப் போனார். அமிரை முன்நிறுத்தியே நடேசனிடம் அதை சொல்லிக் குறைபட்டும் கொண்டார்.

“என் பேரப் பிள்ளைகளுக்கு கணக்கு பார்ப்பேனா நடேசா? அதுவுமில்லாம முதல் பிரசவம் நாங்க செய்யுறது தானே முறை… அந்த முறையில பார்த்தாவது இதை அப்படியே விட்டுருக்கலாமே?” வெகுவாக வருந்திப் பேசினார்.

“என்னவோ ப்பா… இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த மாதிரி பட்டும்படமா இருக்கப் போறான்? இப்படியே தொடர்ந்தா என் பொண்ணும், அப்பாவா புருசனான்னு பார்த்துப் பார்த்தே மனசுக்குள்ள நொடிஞ்சு போயிடுவா! இனிமே குழந்தைகளையும் பார்த்துக்குற பொறுப்பு வந்திடுச்சு அவளுக்கு. எதைன்னுதான் அவ தலையில தூக்கிச் சுமப்பா?” ரெங்கேஸ்வரன் பெரிதும் கவலை கொண்டார்.

அவரது வருத்தத்தில் அலட்டிக் கொள்ளாத அமிரின் உள்ளம், மனைவி குழந்தைகளை குறிப்பிட்டுக் கூறியதும் தடுமாறிப் போனது. மாமனார் கூறியதை நிதானமாக யோசிக்க, அவனுக்கும் தனது செயலின் வீரியம் சற்றே புரிந்து போனது. புதிதாக மனைவி குடும்பம் என பார்க்க ஆரம்பித்தவனுக்கு இந்த உணர்வுகள் எல்லாம் புதுமையே!

ஆனாலும் தனது நிமிர்வு குறையாமல், “அவர் பொண்ணுக்கு அவர் செய்யட்டும். என் பிள்ளைகளுக்கு நான் செய்றேன். நான் ஊருக்கு போன பிறகு இவர் வீட்டுலதானே குழந்தைங்க இருக்கப் போறாங்க… அப்போ போதும் போதும்ன்னு சலிச்சுப் போற வரைக்கும் தாங்கிக்கட்டும் சித்தப்பா! இதையே சொல்லி வருத்தபட்டுக்க வேணாம்னு சொல்லுங்க. கட்டின பணத்தை வாங்கிக்கிற ஐடியா எல்லாம் எனக்கில்ல.” தன் போக்கில் பேசி, பெரியவரின் புலம்பலுக்கு முடிவினைக் கொண்டு வந்தான்.

இவனுக்கு இத்தனை வீம்பு ஆகாது என சலித்துக் கொண்டவராக, இவனது கவனத்தை திசைதிருப்பி, அடுத்த கட்டத்துக்கு தூண்டி விட்டார் நடேசன்.

“அடுத்து என்ன பிளான் பண்ணி இருக்க அமிர்?” நடேசன் ஆர்வமுடன் கேட்க, அவனோ சுத்தமாகப் புரியாமல் கேள்விப் பார்வையை வீசினான்.

“குடும்பஸ்தன் ஆகிட்ட அமிர்… பிள்ளைகளோட எதிர்காலத்துக்கு இப்ப இருந்தே யோசிக்க ஆரம்பிக்கணும். நீ பொறுப்பா எல்லாம் செய்யுறவன்னு தெரியும். ஆனாலும் இப்ப உள்ள சூழ்நிலைக்கு எல்லாமே ஜரூரா ஆரம்பிச்சாதான் பின்னாடி டென்சன் இல்லாம இருக்கலாம்.” நிதானமாக அறிவுறுத்த, அவனுமே புரிந்து கொண்டதாய் தலையாட்டிக் வைத்தான்.

“என்ன செய்யணும்னு சொல்றீங்க சித்தாப்பா?”

“நம்மை விட உசந்த வாழ்க்கையை நம்ம வாரிசுகளுக்கு அமைச்சு கொடுக்கணும். உன் மாமனார் அவர் பொண்ணுக்கு செஞ்சதை விட, நீ, உன்னோட ரெண்டு பெண் பிள்ளைகளுக்கும் செய்யணும்.” சட்டென்று வெளிப்படையாக நடேசன் கூறியதில் திடுக்கிட்டான் அமிர்.

“இப்படி ஒன்னு இருக்கோ? என் மாமனார் என்ன செஞ்சார்னு யாரு கண்டா?” அவன் இலகுவாய் பேசியதில், அவனது தோள் தட்டிச் சிரித்தார் நடேசன்.

“என்ன இப்படி சொல்லிட்ட? பெரிய லிஸ்டே இருக்கு அமிர். இனிமேலாவது ஃப்ரீ டைம்ல லக்கி கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ!”

“அது எனக்கு தெரிய வரவேண்டிய அவசியமே இல்ல சித்தப்பா… என் பிள்ளைகளுக்கு என் சக்திக்கும் மீறியே நான் முயற்சி செய்வேன்.” எனக் கூறியவனை பெருமையுடன் பார்த்து மெச்சிக் கொண்டார் நடேசன்.

“பாங்க் பிராபர்டி ஒன்னு ஏலத்துக்கு வருது அமிர். ஒன்-சி(ஒரு கோடி)க்குள்ள நெருக்கி முடிச்சுறலாம். பில்டிங் முழுக்க கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் பண்ணியே ஆகணும். இப்ப வாங்கிப் போட்டுட்டு, நீ அடுத்து இந்தியா வரும் போது லோன் அப்ளை பண்ணி பிளாட் இல்லன்னா காம்ப்ளக்ஸ் எது சரியாப்படுதோ அதுபடி செய்யலாம்.

ஹைவே ரெசிடெண்ட்சியல் ஏரியா, இப்பவே மார்க்கெட் வேல்யூ நல்லா இருக்கு. நேத்து பாங்க் நோட்டீஸ் போர்டுல பார்த்தேன். முடிச்சிடுவோமா? யோசிச்சு சொல்லு.” நடேசன் விவரங்களை எடுத்துக்கூற, அமிருக்கும் அவர் கூறியது அனைத்தும் நல்ல யோசனையாகவே பட்டது.

“கேக்க நல்லா இருக்கு… பட், ஒன் சி அளவுக்கு இப்ப கைவசம் இல்லையே சித்தப்பா?”

“வயநாடு வீடு சேல் பண்ணி வந்த பணமே முக்கால்வாசிக்கு காணுமே அமிர்?”

“அதை அப்படியே டிஜிட்டல் கோல்டா மாத்தி வச்சுருக்கேன் சித்தப்பா… டெய்லி ஷேர்ஸ்ல மாத்தி எடுத்துப் போட்டுட்டு இருக்கேன். இப்ப ஷேர் மார்க்கெட்ல நல்லா போகுது.”

“இந்த ஆன்லைன் கேமிங் எல்லாம் எப்பவும் நம்பிக்கை கொடுக்காது. கார்ப்ரேட்காரன் மனசு வச்சா, மொத்தமா வளைச்சு போட்டு ஆப்பு வைப்பான். எல்லா நேரமும் நமக்கு அதிர்ஷ்டம் அடிக்காது அமிர்!

அந்த பணத்தை எடுத்து நிலத்துல போடு… என்னைக்கும் நமக்கு கை கொடுக்கும். அதோட பிள்ளைங்க பொறந்த ஞாபத்துக்கு இதை வாங்கிப் போட்ட மாதிரியும் இருக்கும்.” தொடர்ந்து நடேசன் வலியுறுத்த, அமிரின் மனமும் ஆராயத் தொடங்கியது.

இரண்டு நாட்கள் இதைப் பற்றியே யோசித்துப் பார்த்தவனின் மனதிற்கும் சரியென்றே தோன்ற காரியத்தில் இறங்கினான். நிலக் கிரையம் சம்மந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் துரிதமாக நடக்க, குழந்தைகள் பிறந்த நான்காவது வாரத்தில் அந்த இடம் அமிரின் சொந்தமானது.

வழக்கம் போல் இந்த விஷயத்தை பற்றி மனைவியிடம் எதுவும் சொல்லாமல் காரியத்தை முடித்திருந்தான். அவளிடம் சொல்லி விட்டுத்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்குத் தோன்றவே இல்லை.

இடத்தை பதிவு செய்த பத்திரத்தை எடுத்துக் கொண்டு மனைவியைப் பார்க்க வந்தான் அமிர்தசாகர். இன்னும் குழந்தைகளின் மருத்துவமனை வாசம் முடியாமல் இருக்கவே, லக்கிக்கு மழலைகளின் கவனிப்பு அறைக்கு அருகிலேயே தனியறை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளுக்கு பசியாற்றும் நேரம் போக, மற்ற நேரங்களில் எல்லாம் அவளது பொழுதுகள் அங்கேயே கழிய ஆரம்பிக்க யாராவது ஒரு பெண் துணையோடு இருந்து வந்தாள் லக்கி.

தினமும் பகல் பொழுதினை வெளியே கழிக்கும் அமிர், இரவில் உற்ற துணையாக மனைவியுடன் அந்த அறையில் தங்கி விடுவான். குழந்தையை பராமரிப்பதிலும் மனைவியை கருத்தோடு கவனிப்பதிலும் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டான்

‘இப்படி, இதை வாங்கப் போகிறேன்.’ என எதுவும் சொல்லாமல் நிலப் பத்திரத்தை மட்டுமே மனைவியின் கைகளில் வைக்க, “இப்ப என்ன சர்பிரைஸ்?” கேட்டபடி பிரித்துப் பார்த்து, விழி உயர்த்தி உண்மையா என்ற பாவனையில் கணவனை நோக்கினாள் லக்கி.

நடேசன் மற்றும் ரெங்கேஸ்வரனின் மூலம் குழந்தைகளின் பெயரில் இவன் சொத்து வாங்கப் போகிறான் என முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தாள். அதனால்தான் அவன் கைகளில் திணிக்கும் போதும் சுவாரசியம் இல்லாமல் அவளால் பிரித்துப் பார்க்க முடிந்தது.

எதிர்பார்த்த விசயமாக இருந்தாலும், பத்திரத்தில் பிள்ளைகளின் பெயருக்கு பதிலாக அவளது பெயருக்கு அந்த சொத்து பதிவு செய்யப்பட்டு இருந்ததைப் பார்த்து, இவளது கண்களும் முகமும் வியப்பில் விரிந்து பார்வையும் கேள்வி கேட்டது. இது முற்றிலும் இவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் விஷயமல்லவா?

“ஏன் சாச்சு? குட்டீஸ் பேர்ல தானே ரிஜிஸ்டர் பண்றதா பிளான் பண்ணீங்க?” வியப்பு குறையாமல் லக்கி கேட்க,

“ஃபர்ஸ்ட் அப்பிடித்தான் நினைச்சேன்… ஆனா, எனக்கு என்னமோ இதுவரைக்கும் உன்னை சரியா கவனிக்காம இருந்துட்டு, இப்ப என் பிள்ளைங்கன்னு வந்த பிறகு அவங்களை மட்டும் தூக்கிச் சுமக்குற கில்டி ஃபீல் வந்துடுச்சு. இந்த குற்ற உணர்ச்சியோட எல்லாம் என்னால உன்முன்னாடி நிம்மதியா சுத்திட்டு இருக்க முடியாது. சின்னச் சின்ன பொருள் உனக்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இதுவரையிலும் நான், உனக்காக ஒன்னும் செய்யலையே?

அதோட ஃபர்ஸ்ட் டைம் நான் மத்தவங்களுக்குன்னு கொடுக்கிற காம்ப்ளிமென்ட்ல, என் பொண்டாட்டிக்காக இருக்கணும்னு நினைச்சேன். இது என்னோட ஸ்மால் பிரீசியஸ் கிஃப்டுன்னு நினைச்சுக்கோ! இதோட உங்கப்பா கொடுக்கிறத கம்பேர் பண்ணிக்காதே… சரியா?” அவளை கூர்மையுடன் பார்த்தே விளக்கம் கூறினான் அமிர்.

தீர்க்கமான குரலில் அதே சமயத்தில் உறுதியாய் தனது நிலையைக் கூறி, மறுத்து விடாதே என்ற ஆணையும் கணவனின் பேச்சில் இருக்க அதிசயமாகப் பார்த்தாள் லக்கி.

‘இவன் கை தேர்ந்த காரியக்காரன். இவனது வாய் ஜாலமும், வாக்குச் சாதுரியமும் தான் இவனை உச்சாணிக் கொம்பில் நிறுத்தி, மகுடம் சூட்டி உயர்த்தி விடுகின்றது. இப்படிதான் பிறரையும் பேச்சிலேயே மயக்கி தலையாட்ட வைக்கிறானோ?’ மனதிற்குள்ளாக கேட்டுச் சிலிர்த்தவளை,

“இன்னும் பத்து பிள்ளை பிறந்த பிறகு, புருஷனை பத்தி ஆராய்ச்சி பண்ணேன்… அப்போவாவது உனக்கு நல்லா விளங்கிப் போகுதான்னு பார்க்கலாம்?’ மண்டையில் பலமாகக் கொட்டி லக்கியை வாரிவிட்டது அவளது மனசாட்சி.

‘இவனைப் பத்தி அதிகமாவே நினைச்சு பூரிச்சு போறோமோ?’ தன்னைத்தானே கேட்டு மீண்டு கொண்டவளை ஊடுருவிப் பார்த்தான் அமிர்.

“என்னடி யோசிச்சுட்டு இருக்க? பிடிக்குதா இல்லையான்னு கேட்டு நிக்கிற என்னைய பார்த்தா, உனக்குத் கேனையனாத் தோணுதா?” சுருக்கென்று அதிருப்தியாகப் பேச, இவளுக்குமே மனம் சுணங்கிப் போனது.

“எனக்கிந்த பேச்சு தேவைதான். உள்ளுக்குள்ளே உங்களை நினைச்சு பூரிச்சு போய் நின்னா… நீங்க வெட்டவா குத்தவான்னு மல்லுக்கு நிக்கிறீங்க! இப்படிதான் எந்தநேரமும் உங்களை மட்டுமே நினைச்சு உங்ககிட்ட எல்லா நேரமும் வாங்கிக் கட்டிட்டு இருக்கேன்.” ஒளிவு மறைவில்லாமல் கூறிவிட்டு உதட்டை பழித்துக் காண்பித்தாள் லக்கி.

“என்னை பத்தி பிஹெச்டி பண்ணுன்னு நான் உன்கிட்ட சொன்னேனா? ஒரு வார்த்தை சொல்லக் கசந்து போயி புது சண்டைக்கு ரூட்டு போடுறா…” முகம் திருப்பிக் கொள்ள, லக்கிக்கும் தனது தவறும் புரிந்து போனது.

“சாரி டான்! உங்களையே நினைச்சு உங்களுக்கு பதில் சொல்லாம இருந்தது தப்புதான். இதுக்கு மேல மலையேறாதீங்க பாஸ்… ஹாண்ட்டில் வித் கேர் ல ரெண்டு பேரும் சமாதானமா போயிடுவோம்.” விடாமல் பேசிக் கொண்டே இருக்க,

“அடியே கேட்டதுக்கு பதில் சொல்லாம, உன்னை…” என பல்லைக் கடித்தவன், விரைந்து உதட்டு முத்தம் கொடுத்து மனைவியின் வாயை அடைத்தான்.

அவளது திமிறலும் இளஞ்சூட்டு தேகமும், பிள்ளைபெற்ற வாசமும் கணவனுக்கு போதை ஏற்றி வைக்க, கோபத்தை குறைத்து தாபத்தில் நெகிழ்ந்தான்.

மூச்சு முட்டிய நொடிப் பொழுதுகள் அமிர்தமாக கரைந்து கொண்டிருக்க, திமிறயவளும் இதழ் பாசையில் ஒன்றிப் போனாள்.

அணைப்பும் தவிப்பும் கலந்த நிமிடங்கள், அவர்களுக்கு கிடைத்த சொற்ப அதிர்ஷ்ட நேரங்கள் என்றெண்ணும் படியாக, அறையின் இண்டர்கம் அழைத்து அவர்களின் மோனநிலையை சிதறடித்தது.

“நல்ல வேளை… இல்லன்னா, என்னை ஸ்வாஹா பண்ணியிருப்பீங்க!” சிரிப்புடன் விலகி நொடித்துக் கொண்டே அழைப்பினை ஏற்றாள் லக்கி.

“ஏன்டி என்னை நல்லவிதமாவே நினைக்க மாட்டியா? எப்ப பாரு வில்லனாவே என்னை பார்த்து வைக்கிற… எனக்கும் கொஞ்சம் பொறுப்பு இருக்குடி! எப்போ எப்படி இருக்கணும்னு எனக்கும் தெரியும்.” கடுகடுத்த அமிர்,

“யார் பேசினா? என்னவாம்” எனக் கேட்டு சிடுசிடுத்தான்.

“வேற யாரு? குட்டீஸ் வார்டுல இருந்து தான் கூப்பிடுறாங்க… அஸ்வி வேக்கப், போகணும்.” கூறியபடி லக்கி நகர முயற்சிக்க,

“ஏய்… பதில் சொல்லாம போற!” விடாமல் கேட்டான் அமிர்.

“எனக்கே எனக்காகன்னு நீங்க யோசிச்சு வாங்கினது எனக்கு பிடிக்காம போகுமா? லவ்டு இட் சாச்சு…” மலர்ந்த புன்னகையுடன் கூறி, அவசரமாய் கணவனது கன்னத்தில் முத்தக் கோலம் வரைந்து விலகினாள்.

“இனிமே இப்படிதானா மின்னி?” அவரச முத்தத்தை அனுபவித்தவனாகவே கேட்க,

“ஏன் இப்படி கேக்குறீங்க?” சன்னச் சிரிப்போடு கேட்டாள் லக்கி.

“எப்ப நாம பேச ஆரம்பிச்சாலும் ஒரு குட்டி மாத்தி இன்னொரு குட்டிக்குன்னு நீ விலகிப் போயிடுற… அஸ்வி வேக்கப்… அர்வி அழறா… ஆத்ரேஷ் சிணுங்குறான்னு என்னை டீல்ல விட்டுட்டுப் போயிட்டே இருக்கே!” சிறு குழந்தையாக குறைபாட்டு பாடினான் அமிர்.

“பின்ன அவங்களை அப்படியே விடமுடியுமா சாச்சு? கொஞ்சம் டிலே பண்ணினாலும், டெசிபல்ல சவுண்டு ஏற விட்டு இந்த ஃபுளோரையே கதி கலங்க வைக்கிறாங்க… நீங்களும் தானே என்கூட வந்து அவங்களை பார்த்துக்கிறீங்க? உங்களுக்கு தெரியாததா?” கணவனை சமாதானப் படுத்தவென லக்கி பேச, அரைகுறையாக தலையாட்டி வைத்தான்.

“என்னமோ நீ சொல்ற… நான் கேக்குறேன். பிரிபிளான் போட்டு கொஞ்சநாள் கழிச்சு பிள்ளை பெத்துருக்கலாம்.” பெருமூச்சுடன் முகம் சுருக்கியவனின் கைகளை தன்னோடு கோர்த்துக் கொண்டே குழந்தைகளின் அறைக்கு சென்றாள் லக்கி.

இப்போதைக்கு கணவன் சமாதனமாவதைப் போல் காணோமே? இந்த நிலையில் விட்டுச் சென்றால், ‘என்னை நீ அந்தரத்தில் தொங்க விட்டுவிட்டாய்.’ என்று அதற்கும் இவன் காய்ந்தால் என்ன செய்வது?

அதோடு இருவரும் சேர்ந்தே குழந்தைகளை சென்று பார்க்கும் பொழுதுகள் எல்லாம் கூடுதல் இனிமையை அளிப்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.

“கொஞ்சநாள் தள்ளிப் போட்டிருந்தா, இன்னும் நாலஞ்சு தடவ கோர்ட் படியேறி இருப்போம் சாச்சு… இதுவே கொஞ்சம் லேட்டுன்னு நான் நினைக்கிறேன்.” இயல்பாகப் பேசியவள்,

“இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். குட்டீஸ் வளர்ந்த பிறகு நீங்க அவங்களை கேர் பண்ணுங்க… நான் உங்களை மட்டுமே பாக்குறேன். அப்போ கணக்கு டாலி ஆகிடும்.” கண்சிமிட்டி சமாதானப்படுத்தினாள் லக்கி.

“நிஜமாவா… நடக்குமா?” ஆசையுடன் கிசுகிசுப்பாக கேட்டபடி, அழும் குழந்தையை தூக்கி அவளிடம் கொடுத்தான் அமிர்.

“நடக்குதா, இல்லையானு பாருங்களேன்!” மெல்லிய குரலில் பதிலளித்து குழந்தைக்கு பசியற்றத் தொடங்கினாள் லக்கி.

தம்பதிகளுக்குள் புரிதலும் தெளிதலும் அதிகரித்து, எப்போது உறவின் நிலை மெருகேறும் என்பதே தெரிவதில்லை. கோப முறைப்புகளும் முகத் திருப்பல்களும் ஏன் வருவதென்றும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இவையிரண்டும் இல்லாமல் நகரும் வாழ்க்கையும் வறண்ட பாலைவனமாகவே தோன்றுகிறது பலருக்கு.

அந்தப் பலரில் இவர்களும் அடக்கம். அமிர்தசாகரின் விடுமுறை முடிந்து ஜெர்மனுக்கு புறப்படும் நாளும் வந்தது. இரண்டரை மாத விடுமுறை இரண்டே நிமிடத்தில் கழிந்த உணர்வில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.

“எல்லாம் இந்தக் குவராண்டைன் கருமத்தை கணக்கு பார்த்தே ஓட வேண்டியதா இருக்கு. முப்பதுநாள் ஜெயில்ல இருந்துட்டு போறதுக்கு லீவு ஒரு கேடு!” படபடத்தவனை லக்கியாலும் முயன்று ஆறுதல் கூற முடியவில்லை.

‘எங்கும் செல்ல வேண்டாம் இங்கேயே இரு என்றால் கேட்டு விடவா போகிறான்?’ என்கிற பெருமூச்சில் அவளும் அமைதியாகவே இருந்தாள்.

குழந்தைகளின் எடை ஓரளவிற்கு தேறி முன்தினம் தான் மருத்துவமனையில் இருந்து பிறந்த வீட்டிற்கு திரும்பியிருந்தாள்.

உறவினர் ஒருவர் மாற்றி ஒருவர் என வந்து போக ஆரம்பிக்கவும் இருவருக்கும் பேசுவதற்கு கூட தனிமைப் பொழுதுகள் கிடைக்காமல் போயிற்று.

அந்தக் கடுப்பில் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு அவனது நிர்வாகம், விடுப்பு நாளின் விதிமுறைகளை நினைவுகூறி இப்பொழுதே புறப்படுமாறு மின்னஞ்சல் அனுப்பி இருந்தது.

தென்றலாய் பேசி, பிள்ளையாய் சிணுங்கி, அன்பால் மனைவி குழந்தைகளை குளிப்பாட்டியவன், கடுவன் பூனைக்கு பட்டினி போட்ட கந்து வட்டிக்காரனாக கடுகடுக்க ஆரம்பித்தான்.

இவனது கோப முறைபாட்டிற்கு எந்தவித எதிர்வினையும் காண்பிக்காமல் அமைதியாக இருந்த மனைவியையும் விட்டு வைத்தானில்லை.  

“ஏதாவது சொல்லேன்? ஊமையா வேடிக்க பார்த்துட்டு நிக்கிற…” மனைவியை அதட்டிக் கனன்றவன், அவளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பினை கூட வழங்கவில்லை.

“அதானே… எப்படி பதில் சொல்வ? உனக்கென்ன ரொம்ப ஜாலியா இருப்ப… உன்னைத் தாங்கிக்க உங்கப்பா இருக்காரு! பத்தாக்குறைக்கு ஒன்னுக்கு மூனு பிள்ளைகளோட ஒத்த ஆளா இருக்குறேன்னு எல்லாரும் உன்னை மெச்சி மெடலும் குடுக்கப் போறாங்க…

ஆனா என்னை பார்த்தியா? அப்பவும் இப்பவும் எப்பவும் தனியா தான் இருக்கணும்னு என் தலையில விதிச்சிருக்கு.” தலையில் அடித்துக் கொண்டு தனது நிலையை நினைத்து பொருமினான்.

“இப்படி புலம்பிட்டு திரியுற என்னைப் பார்த்தா, இப்ப உனக்கு வானத்துல பறக்குறாப்புல சந்தோசமா இருக்கும் தானே? இந்த மாதிரி பித்து பிடிச்சு பேசிட்டு திரியணும்னு தானே எல்லாரும் ஆசபட்டீங்க?” மானாவாரியாக சுடுசொற்களைக் கொட்டி மனைவியை பேசியே வதைத்து காயப்படுத்தினான் அமிர்.

‘பிரிவாற்றமையை எதிர்கொள்ள முடியாமல் தான் இப்படியெல்லாம் பேசுகிறான்.’ என லக்கியால் புரிந்து கொள்ள முடிந்தாலும் அவளின் மனம் வேதனையடைவதை தடுக்க முடியவில்லை.

புதிதாக தனது சுற்றத்தை நேசித்த ஆரம்பித்தவனின் உள்ளம் தனது வருத்தத்தை அன்பினை வெளிபடுத்த தெரியாமல், பிறரை கதிகலங்க வைத்தே, மனதிற்குள் மூண்ட கோபத்தை தணித்துக் கொள்கிறது.  

“கொஞ்சம் அமைதியா இருங்க சாகர்… அங்கே போயி உங்க ரொட்டீன் ஸ்டார்ட் ஆனா எல்லாம் சரியாகிடும்.” லக்கி  ஆறுதலாகக் கூற அதற்கும் குற்றம் கூறினான்.

“எனக்கே தைரியம் சொல்ற அளவுக்கு தேறிட்டியா நீ? அப்போ தனியா இருந்தும் பிள்ளைகளை சமாளிக்கிற அளவுக்கு தயாராகிடுவ தானே? சரியா ஆறுமாசம் கழிச்சு குழந்தைகளை கூட்டிட்டு நீயும் ஜெர்மன் வந்து சேரு! முடியாது அது இதுன்னு காரணம் சொல்லி இங்கேயே இருக்கப் பார்த்தே… பொல்லாதவன் ஆகிடுவேன், பார்த்துக்கோ!” உஷ்ணத்துடன் உத்தரவிட்ட அமிர், அந்தச் சூட்டின் வெப்பம் குறையாமல் விமானம் ஏறினான்.

 

இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே

கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே

தடமென் பணைத்தோள் தளிரிய லாரை

விடமென் றுணர்தல் இனிது.

விளக்கம்

தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.