சில்லென்ற தீப்பொறி – 22

சில்லென்ற தீப்பொறி – 22

சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே

நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே

எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்

சுற்றா உடையான் விருந்து.

விளக்கம்

ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.

சில்லென்ற தீப்பொறி – 22

கால ஓட்டங்களும் வாழ்க்கைப் பயணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பவை. யாரையும் எதையும் எதிர்நோக்காமல், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பினையும் கொடுக்காமல் நம்மை இழுத்துச் சென்று கொண்டே இருக்கும்.

ஓரிடத்தில் அயர்ந்து போய் நின்றுவிட்டால் புரியாத பல குழப்பங்களை உண்டு பண்ணி, நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வேடிக்கை பார்க்கும். இவற்றை மிஞ்சிய சுவாரசியம் இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை.

லக்கீஸ்வரியின் மனதையும் அப்படி குழப்பிவிட்டு காலம் வேடிக்கை பார்க்கின்றதோ? ஆறு மாதக் கெடுவிதித்து சென்ற கணவன், வெளிநாடு சென்று சேர்ந்த பின்னும் மாறாத கடுப்பில் அவளுடன் பேசாமல் இருக்க, வெகுவாக கலங்கிப் போனாள் லக்கி.

‘கடவுளே! இவனை மாற்றும் யுக்தியை கற்றுக் கொடு… அல்லது இவன் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்றவாறு ஆடி, இவனை வழிக்கு கொண்டு வரும் வல்லமையைக் கொடு!’ இன்னதென்று விளங்காத பொருளில் புலம்பி பேதலித்துப் போனாள்.

ஊருக்கு போய் சேர்ந்த பத்து நாட்கள் முடிந்தும் காணொளியில் வராமல், பேசாமல், இதோ அதோ என்று போக்கு காட்டியே நாட்களை கடத்தினான் அமிர். அந்த நேரத்தில் லக்கி புலம்பாத புலம்பல்கள் இல்லை.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட அலைகழிப்புகளும் அதனுடன் சேர்ந்து கொள்ள, மழலைகளின் அழுகையை சமாளிக்க முடியாமல் திண்டாடி விட்டாள்.

குழந்தைகளின் கச்சேரியையும், அவர்களுக்காக இவள் படும் அவஸ்தையும் காணொளியாக பதிவேற்றி, ‘பார், என் நிலைமையை…’ என கணவனுக்கு அனுப்பி வைத்தாள். ‘இப்படியாவது எட்டிப் பார்த்து விடமாட்டனா?’ என்ற நப்பாசையும் ஆதங்கமுமே அப்படிச் செய்ய வைத்தது.  

“உங்க அழுகைய சமாதானப்படுத்தவா… இல்ல உங்களுக்கு வேண்டியதை கவனிக்கவா? ஊரெல்லாம் சுத்திட்டு இருக்கிற வியாதிக்கு பயந்தே உங்க பக்கத்துல வேற யாரையும் சேர்க்க எனக்கு பயமா இருக்கு குட்டீஸ்!

இத்தனையும் செய்யுற என்னை பார்த்துக்க யாரு இருக்கா? எப்பவும் நான் மட்டுமே தனியா இருக்கேன்னு முறுக்கிட்டு போற உங்கப்பாவுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகுது? இதுல இவரை எப்படி சமாளிக்கிறதுன்னு வேற நான் யோசிச்சு குழம்பிட்டு இருக்கேன்.

நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ண கொஞ்சமே கொஞ்சம் சிரிங்க பாப்பாஸ்!” அழும் குழந்தைகள் ஒருவர் மாற்றி ஒருவரை என தோளில், மடியில் போட்டு தட்டிக் கொடுக்கும் காணொளியை கணவனுக்கு அனுப்பி விட்டாள் லக்கி.

எந்த காரணத்திற்கு அனுப்பினாளோ அதை சரியாகச் செய்தது அந்தப் பதிவு. முதல்முறை புன்சிரிப்புடன் பார்த்து ரசித்த அமிருக்கு, மீண்டும் ஒருமுறை பார்க்கும் போது மனமெல்லாம் பாரமேறிப் போனது.

மனைவியின் புலம்பலும் குழந்தைகளின் அழுகையும் அவனை முள்ளின் மேல் நிறுத்தி வைப்பதைப் போல் உணர வைக்க, மனதிற்குள் நொந்து போனான் அமிர்தசாகர்.

‘இந்த அவதிக்குதான் பார்க்காமல் பேசாமல் அமைதியாக இருந்தது. நானாக தவிர்த்தாலும் தானாக வந்து தொலைக்கின்றதே?’ மனதிற்குள் கடுகடுத்து, அதற்கும் மனைவியை தாளித்தான்.

‘கொஞ்சமும் அறிவில்ல இவளுக்கு… இப்படிதான் வீடியோ எடுத்து அனுப்புவாங்களாமா? கண்ணுபட்டுப் போகாதா?’ தந்தையாக அவனது உள்ளம் பரிதவிக்கவும் செய்தது.

ஒருமாதம் குழந்தை வளர்ப்பினில் அநேக விஷயங்களை கிரஹித்துக் கொண்டிருந்தான் அமிர். மனைவியின் செயலே அவன் மலையேறுவதற்கு போதுமானதாக இருக்க, முன்னை விட கரித்துக் கொட்டினான்.

‘இவளுக்கு தேவைதான் நல்லா படட்டும்.’ என கடிந்து கொண்டவனின் மனம் மறுநொடியே, ‘பாவம் ஒன்னுக்கு மூனு குழந்தைகளை வச்சுட்டு சிரமப்படுறா… குழந்தைய பார்த்துக்க கேர் டேக்கர் வரப்போறாங்கன்னு அங்கே இருக்கும் போதே சொன்னாளே… அந்த விசயம் என்ன ஆச்சு?’ ஆவல் மிகுதியும் அக்கறையும் உந்தித் தள்ள, மனைவியை காணொளியில் அழைத்து விட்டான் அமிர்.

அழைப்பினை ஏற்றுக் கொண்ட மறுநிமிடமே, “என்னடி கட்சிக்கு ஆள் சேர்க்க கூவிட்டு இருக்கியா? உன் பின்னாடி கொடி பிடிச்சு நிக்க, ரொம்ப பெரிய ஜாம்பவான்களை கூட்டு சேர்த்திருக்க…” சீண்டலுடன் சிரித்தே வாரிவிட, இவளுக்கு காதில் புகை வராத குறைதான்.

“என் பிள்ளைங்க கட்சிக்கு கொடி பிடிக்கிற ஆளுங்களா? சரிதான் போடா புடலங்கா!” கண்களை உருட்டி முறைத்தாள் லக்கி.

“என் பிள்ளைகளை நான் சொல்லக்கூடாதா? மூனு குழந்தைகளுக்கு தகப்பன்ங்கிற மரியாதையைக் கூட குடுக்க மாட்டியா? பயம் விட்டுப் போச்சு உனக்கு.” கேலிப் பேச்சில் எச்சரிக்க, காதினை குடைந்து தூசியாக தள்ளி விட்டாள் மனைவி.

“டேய் தகப்பான்னு உங்கள கூப்பிட வைக்கிறேன்!” உதட்டைப் பழித்துக் காட்டியவள்,

“குடும்பம் குழந்தை நினைப்பு இருக்கிறவர் தான் இவ்ளோ நாள் முக்காடு போட்டுட்டு சுத்திட்டு இருந்தாரா?” பதிலுக்கு பதில் வாரிவிட்டதில் அகப்பட்ட கள்ளனாய் மாட்டிக் கொண்டான் அமிர்.

“சம் ஸ்ட்ரெஸ்…  அப்படியே தேங்கிட்டேன். இனிமே ஒழுங்கா அட்டென்டஸ் போட்டு, உன்னோட கிளாஸ் அட்டென்ட் பண்றேன். கொஞ்சம் சிரிடி… பொறிஞ்சு தள்ளாதே! அங்கே கருகுற வாடை ஜெர்மன் வரைக்கும் வீசுது.” அலட்டலுடன் சரணடைந்த விதத்தில் லக்கிக்கும் சிரிப்பு தொற்றிக் கொண்டது.

“குட்டீஸை பார்த்துக்க ஆள் வரலையா மின்னி? நீ ஒருத்தியா ஏன் கஷ்டபடுற?” கனிவாகக் கேட்க,

“டே டுயுட்டிக்கு மட்டுமே ஆள் வச்சிருக்கோம். நைட்டுக்கு நானும் கமலாம்மாவும் சேர்ந்து பர்த்துக்குறோம் சாச்சு! இன்னைக்கு அவங்களும் பூஸ்டர் டோஸ் போட்டுகிட்டதால ரெஸ்ட் எடுக்க அனுப்பிட்டேன்.” லக்கி காரணத்தை கூற உச்சுக் கொட்டினான் அமிர்.

“உங்கப்பா என்ன ஆனார்? அவர் எங்கே?”

“அவர் அடிக்கடி வெளியே போயிட்டு வர்றதால, நான்தான் அவர்கிட்ட குழந்தைகளை அதிகமா விடுறதில்ல… இதனாலேயே அப்பா என்மேலே ரொம்ப கோபமா இருக்காரு.” வெகுளித் தாயாக இவள் பேச,

அமிரின் மனமோ, ‘உன் அக்கறை புண்ணாக்குல தீய வச்சுக் கொளுத்த…’ என மனதிற்குள் பொங்கினான்.

“நானா இருந்தா உன்னைய அடிச்சு வெளுத்திருப்பேன்டி… செல்லம் கொடுக்க தெரிஞ்ச அங்கிளுக்கு கண்டிக்க தெரியல. அவரும் உன் பேச்சுக்கு தலையாட்டிட்டு வேடிக்கை பார்க்கிறாரு!” மாமனாரின் சார்பாக பேச, பல்லிளித்துக் கொண்டாள் லக்கி.

அவள் பதில் கொடுக்கும் நேரத்தில் முதல் குழந்தை அஸ்விகா அழ ஆரம்பிக்க, அந்த சிணுங்கலில் மகன் ஆத்ரேஷ் எழுந்து அரற்றி வைக்க, கடைக்குட்டி ஆர்விகா முழித்து கச்சேரியை உச்சஸ்தாதியில் அரங்கேற்றம் செய்தாள்.

“சின்னக்குட்டி அநியாயத்துக்கு அதிர வைக்கிறா!” சிலிர்த்துக் கொண்டு அதிசயித்தவன், இதனை ஆரம்பித்து வைத்த அஸ்வியையும் ஆர்வமுடன் உற்றுக் நோக்கினான்.

தந்தையின் லேசர் பார்வை திரையின் வழியாக மழலைகளை ஊடுருவி உணர வைத்ததோ? பொக்கை வாய் காட்டி, மெய்சிரிப்பில் மழலை மொழி பேசிய செல்வங்கள் தந்தையை மயக்கினர்.

தங்கத் தாமரை மலர்களின் அழகிலும் அவர்களின், ‘ஊங்… ஊங்கா…’ பாஷையிலும் லயித்து மகிழ்ந்த தம்பதிகளின் இல்லறம் வழக்கம் போல் இணையத்தின் வழியாக களை கட்டியது.  

ஆறு மாதங்கள் கழித்து ஜெர்மனுக்கு வரச் சொல்லி மிரட்டியவன் இப்பொழுது அந்த பேச்சை எடுக்கவே யோசித்தான். ஒவ்வொரு விடியலையும் புதுவிதமாக இவனது பிள்ளைகள் மாற்றி வைத்துக் கொண்டே இருக்க, எதை, யாரை கவனத்தில் கொள்வதென்றே எவருக்கும் பிடிபடுவதில்லை.

அனைவரின் மேற்பார்வையிலும் இந்த கதியென்றால் இங்கே தனியே அழைத்து வந்து விட்டால், இவன் திண்டாடுவதும் அல்லாது, பிள்ளைகளின் நலனும் வளர்ப்பும் அல்லவா பாதிப்படையும். அதை அனுசரித்தே அமைதியாக இருந்தாலும் ஆசை கொண்ட மனம் நோட்டம் விட்டுப் பார்த்தது.

ஆர்வத்துடன் ஒருநாள் இவன் அழைத்தும் விட மனைவியின் பதிலில் அசந்தே போனான். “ஒரு கேர் டேக்கரை கூட்டிட்டு இங்கே வந்துடுறியா மின்னி! நானும் உனக்கு ஹெல்ப் பண்ணின மாதிரி இருக்கும். பேபீஸும் நம்ம கூட வளர்ற மொமென்ட்சை ஹாப்பியா சேவ் பண்ணிக்கலாம்.” அமிர் அக்கறையுடன் அழைக்க, முடியாதென்று ஒரே பதிலில் சாதித்தாள் லக்கி.

“உங்க கேரிங்க்ல எல்லாம் குறை சொல்ல மாட்டேன் சாச்சு… ஆனா, இப்ப நமக்கும் நம்ம குட்டீஸுக்கும் தேவையானது பெரியவங்களோட பேரண்டிங் தான். அது அங்கே வந்தா சுத்தமா கிடைக்காது. விளக்கம் பக்குவம் கேக்க முடியுமே தவிர அவங்களோட மேற்பார்வையில, கவனிப்புல பிள்ளைகளை வளர்க்க முடியாது.

நீங்க சொன்ன வார்த்தை தான் சாச்சு! நம்ம ரெண்டு பேருக்குதான் இந்த கொடுப்பினை இல்லாம தனியா வளர்ந்தோம். நம்ம குழந்தைங்க அப்படி வளர வேண்டாமே… ப்ளீஸ், புரிஞ்சுக்கோங்க!” நிதானமாக தயக்கத்துடன் எடுத்துச் சொல்ல, அமிரும் சரியென்று ஆமோதித்தான்.

மனைவியிடம் எதிர்பார்த்திருந்த முடிவுதான் என்றாலும் ஆசையும் ஆர்வமும் கலந்து பொறுப்பும் சேர்ந்து கொள்ள, குடும்பத் தலைவனாக கேட்டு, அதற்கான பதிலையும் புரிந்து கொண்டான். வளர்வது அவனது பிள்ளைகள் அல்லவா? அந்த பாசம், அன்பு என்ற கட்டுத்தளையில் அவனை தடுத்து நிறுத்தியது.

லக்கியின் பெயரில் அமிர் வாங்கிய நிலம் முழுதாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டதும், அடுத்த கட்ட யோசனையை நடேசனும் ரெங்கேஸ்வரனும் முன்வைக்க, அமிரோ அமைதியாக இருந்தான்.

“தினமும் ரெண்டு அப்பாக்களும் சேர்ந்து நிறைய யோசனை சொல்லி குழப்புறாங்க… நீங்கதான் முடிவு சொல்லணும்.” லக்கி, அமிரிடம் கேட்க, சட்டென்று சலித்துக் கொண்டான்.

“உனக்காகன்னு, உன் கையில ஒப்படைச்சுட்டேன். இதுல என் முடிவை எதுக்கு கேக்கற? இன்னும் எத்தனை நாளைக்குதான் அடுத்தவங்க முடிவை கேட்டு, உன் யோசனையை ஒத்திப் போட்டுட்டு இருப்ப… உன் மனசுக்கு செய்யணும்னு தோணினத தைரியமா செய்ய இறங்கிடணும். நிர்வாகம் படிச்ச பொண்ணுக்கு இதெல்லாம் சொல்லித்தான் தெரியணும்னு அவசியமில்ல.” அவனது மனதில் பட்டதை பார்வையில் கணித்துக் கூற, அப்பொழுதும் இவளுக்கு தயக்கமே கூடிப் போனது.

“இல்ல சாச்சு… உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு, அதுபடி செய்யச் சொல்றாங்க. அப்பாவோட ஆபிஸ்ல பில்டிங் எடுக்கவும் இதைச் சொல்லியே ஒத்திப் போட்டாங்க… அது உங்களுக்கு தெரியாது. அதான் கேட்டேன்.” தனது நிலையை விளக்கினாள் லக்கி.

நாட்டையே ஆளும் தகுதி பெற்று வலிமையோடு நிமிர்ந்து நின்றாலும், பெண்ணை ஒரு ஆண்மகனின் பின்னே சார்ந்து வாழ வேண்டுமென்பதையே இந்த உலகம் அறியுவுரையாகச் சொல்கிறது, மக்களும் அதையே பின்பற்றி வருகின்றனர்.

இதில் லக்கீஸ்வரி மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன? மனதிற்குள் பல எண்ணங்கள் அலை மோதினாலும் அதனை வெளிப்படையாகக் கூற அவளால் முடியவில்லை. அதனால் அனைத்திற்கும் சரியான பதிலைத் தேடி கணவனிடம் கேட்டு விட்டாள்.

“மின்னி… இப்படி எல்லாத்துக்கும் கேட்டு தயங்கி நின்னுதான் நீ இன்னும் வெத்துக் காகிதமா இருக்க. நான் சொல்றது புரியுதா? நீ செய்ய நினைக்கிறத அந்த புரோடக்சன்ல அல்லது சர்வீஸ்ல இருக்கிறவங்க கிட்ட தெளிவா கேட்டு முடிவெடு!

வெளியே நின்னு கைகொடுக்க ஆயிரம் பேர் வந்தாலும் உள்ளே நீ ஸ்டடியா நிக்கணும். மொதல்ல மனசை திடப்படுத்திக்கோ… எங்கேயும் தயங்கி நிக்காதே! இதுக்கு மேல என்னை இந்த விசயத்துல இழுக்காதே!” நம்பிக்கை அளித்த அமிர், ஒட்டாமல் பேசி ஒதுங்கி விட, இவளுக்குத் தான் சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

‘நானாக எழுந்து நிற்க வேண்டுமென்று சொல்கிறான். எனக்கான வாய்ப்புகளை அடையாளத்தை, நானாக முயன்று ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறான்.’ என்பது தீவிர யோசனையில் விளங்க மனதில் தன்னால் உறுதி பூண்டது.

‘இத்தனை ஆண்டுகாலம் வளர்த்த தந்தையே, என்னை தனித்து இயங்க அனுமதிக்காத போது, இவன் என்னை செய்துதான் பாரேன் என ஊக்கிவிக்கிறானே! அந்த ஒன்றே போதும் மலையைக் கூட புரட்டிப் போட்டு விடலாம்.’ என்ற உற்சாகமும் ஊக்கமும் வர, மனம் கணவனின் புகழ் பாடி காதல் பேசியது.

தனது சிந்தனையை ஒன்று திரட்டி காரியத்தில் இறங்கினாள் லக்கீஸ்வரி. அமிர் கூறியதைப் போல ஒன்றுக்கு பத்தாக விசாரித்து முடித்து தனக்கான ஒன்றை இவள் தேர்ந்தெடுக்கும் போது குழந்தைகளின் முதல் வருடம் முழுமை அடைந்து இருந்தது.

பிள்ளைகள் பிறந்த பொழுதில் நிலம் வாங்கியவர்கள், அவர்களின் முதல் வருட முடிவில், புதிய தொழிலுக்கான அச்சாரத்தை அங்கேயே பூஜை போட்டு துவக்கி வைத்தனர்.

மனைவிக்கு ஊக்கமளித்த அமிர்தசாகர், மனதளவில் மிகவும் சோர்ந்து போனான் . புதிதாக உண்டான பிள்ளை ஏக்கம், குடும்பப் பற்று அமிரை தடம் புரள வைக்க, தனக்குள் உண்டான அதிருப்தியை எல்லாம் தனது அன்றாடங்களில் காண்பிக்கத் தொடங்கி அதிகமாக சிடுசிடுக்கத் தொடங்கினான்.

சரியாக பிள்ளைகளின் முதல் வருட பிறந்தநாளினை காணொளியில் கண்டுகளித்து மகிழ்ந்தவன், அதன் பிறகு ஒரு வாரம் கழித்தும் பேசாமல், காணொளியில் வராமல் இருக்க, லக்கிக்கு முன்னைப் போல மனம் சுணங்கிப் போனது.

‘எனக்கே தெரியாம, நான் என்ன பண்ணித் தொலைச்சேன்னு ஞாபகத்துக்கு வரலையே? எதுக்காக சாமி ஆன்லைன்ல உலா வராம, முரண்டு புடிச்சு ஆஃப் லைன்லயே நிக்குதுன்னு தெரியலையே?’ உள்ளுக்குள் பலவாறு யோசித்து பலமுறை கணவனை அழைத்தும் ஓய்ந்தாள்.

தவழ்ந்து கொண்டிருந்த குழந்தைகள், எட்டெடுத்து வைத்து நடைபயிலவும் ஆரம்பித்திருந்தனர். கடைக்குட்டி ஆர்விகா மற்ற இருவரையும் ஓரம்கட்டி விட்டு மழலை மொழியில், ‘மீ… பா!’ என அழகாக மிளிற்றவும் ஆரம்பித்திருந்தாள். அந்தக் குதூகலங்களையும் காணொளியில் பதிவேற்றி அனுப்பி வைக்க, அதையும் அமிர் பார்த்திருக்கவில்லை.

‘இப்படி எல்லாம் தங்களை தவிர்ப்பவன் இல்லையே?’ என மனம் அரண்டு கொள்ள, முதன்முறையாக கணவனின் நிலை குறித்து பயந்து போனாள் லக்கி. மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்ட்டா என அனைத்திலும் இவள் வலம் வந்து அவனைத் தேடினாள்.

ஒரு வாரத்திற்கு முன்பு இவளுடன் பேசிய நிமிடங்களே அமிர் இறுதியாக இணையத்தில் இருந்ததாக நேரத்தை காண்பிக்க, மனதில் துளிர்த்த மெல்லிய பயம் பூதாகாரமாய் அவளை மிரட்டிக் கொண்டு நின்றது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!