சில்லென்ற தீப்பொறி – 24

சில்லென்ற தீப்பொறி – 24

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே

வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே

பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய

கற்றலிற் காழினியது இல்.

விளக்கம்

பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப் போல இனிதான செயல் வேறு ஒன்றும் இல்லை.

இனியவை நாற்பது முற்றிற்று.

 

சில்லென்ற தீப்பொறி – 24

நெருப்புத் துண்டங்களாய் அபசகுன வார்த்தைகளை மீண்டும் கொட்டத் தொடங்கிய கணவனை கடித்துக் குதறி விடும் ஆத்திரம் மேலோங்கி விட, பாரபட்சமின்றி அவனைத் தாக்கத் தொடங்கினாள் லக்கீஸ்வரி.

வார்த்தைகளில் கொட்டித் தீர்க்க முடியாத கோபத்தை எல்லாம் அவளின் கைவண்ணம் தீர்த்து சமன் செய்து கொண்டிருந்தது.

“இப்படி நெருப்பா கக்குற வாயை இழுத்து வச்சு தைச்சுருவேன்டா படுபாவி… பேச்சா பேசுற நீ? எப்பவுமே உன்னை பத்தி மட்டுமே நினைக்க வைக்கிறது, உன்னை மட்டுமே தேட வைக்கிறதயே பொழப்பா பண்ணிட்டு இருக்க… இந்த அழகுல இவர் தனியா இருக்காராம்.

இப்ப என் குழந்தைங்க தான் தனியா இருக்காங்க… நீயும் நானும் ஹாயா ஹனிமூன் கபிள்ஸ் மாதிரி இங்கே உக்காந்து சண்டை போட்டுட்டு இருக்கோம்.” வெடித்துச் சிதறி அழுகையில் முடித்தாள் லக்கி.

வீட்டை விட்டு கிளம்பிய நொடியில் தொடங்கிய பிள்ளைத் தவிப்பு, அடங்க மறுத்து தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள்ளாய் இவளைத் துடிக்க வைக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையென ஹரிணியை அழைத்து குழந்தைகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொள்கிறாள்தான். ஆனாலும் பெற்ற மனதின் தவிப்பினை உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் போது உயிரையே உருக்குலைத்து விடுகிறது.

பற்றாக்குறைக்கு கணவனின் சுடுசொல்லும் அவனது பின்னடைவும் கண்ணாமூச்சி ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்க, எதையென்று ஜீரணித்து ஆசுவாசம் கொள்வாள்?

வெளிப் பார்வைக்கு துணிந்து, நிமிர்வுடன் நடமாடினாலும் உள்ளத்தின் பாரத்தை இறக்கி வைக்க சுமைதாங்கி கிடைக்கும் போது அணைகட்டிய மனம் உடைப்பெடுத்து விடுகின்றது.

அவனைத் தாங்கிக் கொள்ள வந்தவள், அவனது தேக ஆரோக்கியத்தைப் பற்றி விசாரிக்காமல், தனது ஆற்றாமையை இறக்கி வைக்க ஆரம்பித்தாள் லக்கி.

மனைவியின் பேச்சில் முதலில் வெகுண்டாலும் அவளது உள்ளுணர்வின் அவஸ்தையை முழுதாகத் தன்னில் இறக்கி வைக்கும் போது, கணவனும் உள்ளம் பதைத்து அமைதியாக அவளது பேச்சிற்கு செவி சாய்த்தான்.

அரைமணி நேர ஆற்றாமையிலும் கோபத்திலும் பொங்கிப் பிரவாகித்து ஆழ மூச்செடுத்தவளை, அருகிலுள்ள தண்ணீர் கொடுத்து அருந்த வைத்தே ஆசுவாசப்படுத்தினான் அமிர்.

“குழந்தைகளை யாரு பார்த்துக்கிறாங்க மின்னி?” அமைதியாக கேட்க, முகத்தை திருப்பினாள் லக்கி.

“பதில் சொல்லுடி!” கெஞ்சலுடன் கேட்டாலும், அவள் அசைந்து கொடுக்கவில்லை..

“அதபத்தி உங்களுக்கென்ன கவலை? இப்ப உங்களை பார்த்துக்க நான் வந்துட்டேன். அதை மட்டுமே மனசுல நிறுத்துங்க!” சட்டமாகப் பேசி முடிக்க, இவனுக்கு தலைவேதனையாகிப் போனது.

“கோபத்துல ஏதோதோ பேசாதே! குட்டீஸுக்கு ஃபீட் பண்ணிட்டு இருந்தியே… எப்படி விட்டுட்டு வந்த?” கோபத்தை அடக்கிகொண்டு கேட்க, அதற்கும் அலட்சியப்படுத்தினாள் லக்கி.

“டாக்டர் அட்வைஸ் என்ன? எப்ப டிஸ்ஜார்ஜ் சொல்லி இருக்காங்க?” மேற்கொண்டு அவனைப் பற்றியே விசாரித்து கணவனைப் பழிவாங்கினாள்.

“இப்ப இதுதான் ரொம்ப முக்கியமா? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி!” குரலில் எகிறி நிற்க முயன்றான், ஆனால் முடியவில்லை. குரலும் சோர்வில் தளர்ந்து போக தலையில் அடித்துக் கொண்டான் அமிர்.

“ராட்சசி… கல்நெஞ்சக்காரி! குழந்தைகளோட அருமை உனக்குத் தெரியல… ஒரே நேரத்துல மூணு பிள்ளைங்க வந்து பொறக்கவும் அவங்களை ஈசியா நினைச்சுட்ட நீ! உன்கிட்ட எனக்கேன்ன பேச்சு?” என்றவன் மருத்துவமனை இன்டர்கம்மில் தனது அலைபேசி வேண்டுமெனக் கூறி, கொண்டு வந்து கொடுக்கச் சொன்னான்.

“அவங்களுக்கு நான் அம்மா… அப்படி பொறுப்பில்லாம விட்டுட்டு வந்துடுவேனா? என் மேல நம்பிக்கை இல்லையா சாச்சு?” திடமான பேச்சில் லக்கி கேட்க, முறைக்க முயன்று தோற்றான் அமிர்.

“நீ என்ன ஏற்பாடு பண்ணி இருந்தாலும் உன்னை நினைச்சு அழுவாங்களே மின்னி… அந்த நேரம் இங்கே இருந்து ஓடிப்போயி அவங்க முன்னாடி உன்னால நிக்க முடியுமாடி? அறிவுகெட்டவளே! என்ன ஏற்பாட்டை பண்ணிட்டு வந்தேன்னு சொல்லித் தொலை!” பல்லிடுக்கில் கோபத்தை கடித்துத் துப்பியவனை ஊடுருவிப் பார்த்தாள் லக்கி.

“சொல்ல முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” மீண்டும் முறுக்கிக் கொண்டு நிற்க,

“அறஞ்சு பல்லக் கழட்டிடுவேன் ராஸ்கல்! என்ன திமிர்த்தனம் இது?” கடிந்து கொண்டவனின் உள்ளமெல்லாம் பற்றிக் கொண்டு வந்தது.

‘பசியைக் கூட வாய் விட்டுச் சொல்லத் தெரியாத பிஞ்சுகளை தவிக்க வைத்து விட்டு, இங்கே வந்து நாட்டாமை செய்கிறாளே! யார் இவளை அழைத்தது?’ அவளின் வருகையை அப்பொழுதும் விரும்பாமல் முகத்தை சுளித்தான் அமிர்.

உடலும் உள்ளமும் கொதிக்க தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையை எண்ணித் தன்னைத்தானே வெறுத்துக் கொண்டான். மனமெல்லாம் அத்தனை பதட்டம். ஒன்றுக்கு மூன்று பிள்ளைகள் அல்லவா?

மனைவி சரியான முறையில் பொறுப்பாக அனைத்தையும் செய்திருப்பாள் என்கிற எண்ணம், உள்ளுக்குள் இருந்தாலும் அதை தெரிந்து கொள்ள முடியாமல் அவனது தலை வெடித்துப் போனது. அவனது தவிப்பை கிரகித்துக் கொண்ட லக்கி, கண்களை சுருக்கி பார்வையால் குற்றம் சாட்டினாள்.

“என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க முடியாம மனசு தவிச்சுப் போகுதா? விவரம் சொல்லாம இழுத்தடிக்கிற என்னை பார்த்து கோபம் பொத்துகிட்டு வருதா? இந்த பதட்டம் தானே எனக்கும் இருந்தது. தெளிவான ஒரு பதிலை நீங்க சொன்னீங்களா? என்கிட்டே சொல்ல கௌரவம் பாக்குற உங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்? உலகத்துல உங்களுக்கு தான் தீர்க்க முடியாத வியாதி வந்த மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிணீங்களே!” இவள் பேசி கொண்டே செல்ல,

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, பேச்சை திருப்புற நீ!” இடைமறித்தான் அமிர்.

“நான் பேசி முடிச்சதும் நீங்க கத்துங்க… நான் இடையில வரமாட்டேன்.” என்றவள் பேச்சினைத் தொடர்ந்தாள்.

“உங்களால முடியலன்னா, அடுத்தவங்களை விட்டு உங்களப் பத்தின விவரத்தை சொல்ல வைச்சிருந்தா, நானும் கொஞ்சம் அமைதியா இருந்திருப்பேன். இந்தளவுக்கு மனசு பதறிப் போயி இங்கே வந்திருக்க மாட்டேனே சாச்சு! சொன்னீங்களா நீங்க… எப்பவும் உங்க மனசு, உங்க நோவு, உங்க அழுத்தம் மட்டுமே உங்களுக்கு முக்கியமாப் படுது. ஏன் இப்படி?

உங்களை நம்பித்தானே நானும் மூனு பிள்ளைகளும் இருக்கோம். அதை மறந்து தனியா இருக்கேன்னு நீங்க எப்படிச் சொல்லலாம்? உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருங்கன்னு உங்க போக்குல உங்களை விட்டது தான் தப்பாப் போச்சா?

அடமா நின்னு உங்களை என் பக்கம் இழுத்து பிடிக்காம விட்டதுக்கு இன்னும் எத்தனை தடவை தான் என்னை குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பீங்க? நாளைக்கு இதே பேச்சு நம்ம பிள்ளைகள் கிட்டயும் திரும்பாதுங்கிறது என்ன நிச்சயம்? மாறணும்… நீங்க மாறித்தான் ஆகணும்.” பெருமூச்சினை இழுத்து விட்டு அமைதியானாள் லக்கி.

கணவனிடம் இத்தனை கடினமாகப் பேச வேண்டி உள்ளதே என்ற அதிருப்தியும், தவிப்பும் ஒன்றுசேர, தலைகுனிந்து தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

லக்கியின் கோபம் தணிந்ததோ, பாரம் அகன்றதோ மொத்தத்தில் அவள் உள்ளத்தில் புதைந்திருந்த காற்றழுத்தம், அமிரின் கர்வத்தை எட்டி உதைத்து சேதாரப்படுத்தியே கரையைக் கடந்தது.

நேரம் கடந்து விட்டது வெளியே சென்று விட வேண்டுமென செவிலிப்பெண் வந்து நினைவுபடுத்த, அழுத்தமாய் கணவனைப் பார்த்துக் கொண்டே வெளியே சென்றாள் லக்கி.

அவள் சென்ற பிறகு, முதன்முதலாக உள்ளும் புறமும் முழுதாக சிதறிப் போன நிலையில் ஸ்தம்பித்து போய் நின்றான் அமிர்தசாகர். இவனது மின்னியின் இந்த அதிரடி முற்றிலும் புதியது மட்டுமல்ல விவேகமானது, கம்பீரமானது.

‘தயக்கங்கள் உடைபட்ட மனதில் சஞ்சலத்திற்கு இடமில்லை. உனது நிலையை நீயே அறிந்து தெளிந்து கொள்ளவில்லை.’ என கன்னத்தில் அறைந்ததைப் போல உணர்த்திச் சென்ற மனைவியின் விலகல் முள்ளாய் குத்தியெடுக்க, அவளின் அடுத்த வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தான் அமிர்.

அவளிடம் கேட்டு அறிந்து கொள்ளும் ஆவல் இன்னுமின்னும் கூடிக் கொண்டே போக, மருத்துவரிடம் பேசி தன்னை சாதாரண அறைக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டான்.

அடுத்தவரின் தொற்று தன்னை தாக்காமல் இருக்கத்தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இவன் தங்கியது. ஆனால் அதில் உடனிருப்பவரை தங்க வைத்துக் கொள்ள முடியாதென்று அறிந்தே, தனது பிடிவாதத்தில் இரண்டு மணி நேரத்தில் தனியறைக்கு மாறிக் கொண்டான் அமிர்.

அந்த இரண்டுமணி நேரங்களும் ‘இவள் எங்கு தங்கி இருக்கிறாளோ, என்ன செய்கிறாளே?’ என்றெல்லாம் அவஸ்தையில் மேலும் தத்தளிக்க ஆரம்பித்தான்.

அறையில் வந்து அமர்ந்த மறுநொடியே அலைபேசியில் மனைவியை அழைத்து தனதறைக்கு வரவழைத்தான் அமிர். லக்கி அறைக்குள் வரும்போது வென்ஃபிளானில் ஊசி மருந்தினை ஏற்றிக் கொண்டிருக்க, வலியால் முகம் சுருக்கினான்.

வலியும் கை வீக்கமும் குறைவதற்கென மருந்தினை தடவுமாறு செவிலிப்பெண் லக்கியிடம் மருந்து பாட்டிலை கொடுத்துவிட்டுச் சென்றதும், அதை எடுத்து தடவ ஆரம்பித்தாள் லக்கி. அழுத்தம் குறையாமல் அமைதியாக இருந்தவளின் முகம், கணவனுக்கு சொல்லத் தெரியாத வேதனையைக் கொடுத்தது.

“எனக்கு என்ன ஆச்சுன்னு கேக்க மாட்டியா மின்னி?” இறங்கிய குரலில் அமிர் கேட்க, மாட்டேன் எனத் தலையாட்டினாள்.

“கேக்கிறத விட, கூடவே இருந்து பார்த்துக்கிட்டா உங்க உடம்புக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சு போயிடும். பேசாம ரெஸ்ட் எடுங்க!” ஒட்டாத குரலில் லக்கி பேச, அமிருக்கு மனம் விட்டுப் போனது.

“ம்ப்ச்… ஏன் இப்படி?” தளர்ந்த குரலில் அவன் கேட்க,

“நீங்க சொல்ற பதிலைக் கேட்டு என் உயிரே உலுக்கி போட்டுடுச்சு சாகர். திரும்பவும் அந்த கொடுமையை அனுபவிக்க நான் விரும்பல… அதான் உங்ககிட்ட கேக்கல, இனியும் உங்க ஹெல்த் இஸ்யூவை பத்தி நான் கேக்க மாட்டேன்.” அதிராமல் கூறி தலைகுனிந்தாள்.

“கோபமா மின்னி?” அவன் கேட்க, பதிலே இல்லை அவளிடத்தில்.

பத்துநிமிட அமைதி அவஸ்தையாக கரைய, தானாகவே பேச ஆரம்பித்தான் அமிர்.

“குட்டீஸ் சமத்தா இருக்காங்களாம்… ஒருத்தர் கூட ஒருத்தர் விளையாடிட்டு ஜோரா சிரிக்கிறாங்க… நான் வீடியோகால்ல ஹரிணி கூட பேசினேன். தத்தி தத்தி அழகா நடந்து வர்றாங்க…. சின்னக்குட்டி அவ்வளவு அழகா பேசுறால்ல? அவளைப் பார்த்து பையனும் பேச முயற்சி பண்றான். சோ கியூட்!” தன்போக்கில் பேசிக் கொண்டே போக, அமைதியோ அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் லக்கி.

“சாரி மின்னி! ரொம்ப சாரி டா… நான் அப்படி பிஹேவ் பண்ணியிருக்க கூடாதுன்னு நீ வந்து கொட்டினதுக்கு அப்புறம்தான் உறைக்குது. ஆனா, என் நிலைமைய வெளியே சொல்ல எனக்கே கூசிப் போச்சு. அதுதான் உண்மை.” என்றதும் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள் லக்கி.

“கொஞ்சநாளாவே ட்ரிங்க்ஸ் அதிகமா எடுத்துக்க ஆரம்பிச்சுட்டேன்.” என மென்று முழுங்கியவனை பார்வையால் எரித்தாள்.

“எப்படியோ பழக்கமாயிடுச்சு… ஃபிரண்ட்ஸோட செட்டா சேர்ந்து குடிக்கிறப்போ அளவும் தெரியுறது இல்ல.” காரணத்தைக் கூற தலையிலடித்துக் கொண்டாள் லக்கி.

“குட்டீஸ் பர்த்டே அன்னைக்கு நைட் நானும் இங்கே ஃபிரண்ட்ஸுக்கு பார்ட்டி வைச்சேன். அன்னைக்கு லிக்கர் கொஞ்சம் அதிகமாயிடுச்சு. அதோட ஃபுட் பாய்சனும் சேர்ந்திடுச்சு. ஏற்கனவே அல்சர் இருந்து அதையும் கவனிக்காம விட்டதுல எல்லாமே சேர்ந்து வாமிட்ல ஸ்டார்ட் ஆகி அன்கான்சியஸ்ல தள்ளிடுச்சு.” எனச் சொல்லியதும் பதறிப்போனாள் லக்கி.

“ஏன் இப்படி? இவ்வளவு கஷ்டப்படணுமா? நீங்க சரியில்லன்னு உங்களுக்கு தோணும் போதே டாக்டர்கிட்ட போயிருக்கலாமே?”

“மிட்நைட்ல எதுக்கு சிரமம்னு நினைச்சு அப்படியே இருந்துட்டேன். அது சிவியரா போச்சு!”

“அடுத்து என்ன பண்ணீங்க? யார் ஹெல்ப் பண்ணாங்க?” நெஞ்சம் பதறக் கேட்டாள்.

“மறுநாள் காலையில நான் ஆபீஸ் கால்ஸ் அட்டெண்ட் பண்ணாம இருக்கவும் தான், என் ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு வந்து பூட்டை உடைச்சு, என்னை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்திருக்காங்க.

நான் நினைவு தெளிஞ்சு கண்ணு முழிச்சு பாக்கிறப்போ ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். உடம்பு மொத்தமும் நடுங்கிப் போயிடுச்சு. ஒரே ஒரு நிமிஷம் நான் இப்படியே இருந்தா என் குடும்பத்துக்கு யாரு இருக்கான்னு நினைச்சே மனசு முழுக்க பயம் வந்து அப்பிடுச்சு.

பக்கத்துல யாரும் இல்லாம போகவும் ரொம்பவே தடுமாறிப் போயிட்டேன் மின்னி! எங்கம்மா மடியில படுத்து அழணும், அவங்ககிட்ட சொல்லி ஆறுதல் தேடிக்கணும்னு மனசு தவிச்சு போயிடுச்சு. ஆனா, அதுக்கு வாய்ப்பில்லன்னு தெரிஞ்சதும் எல்லார் மேலயும் வெறுப்பு வந்து யாரையும் நான் திரும்பிப் பார்க்கல…

நீ, என் ஃபிரண்ட் மூலமா என்கிட்டே பேசும் போதும் அதே மனநிலையிலதான் இருந்தேன். அதான் அப்படி வாய் தவறி கடுமையா பேசிட்டேன். ப்ளீஸ்… அதை மறந்திடு மின்னி!” கண்களால் கெஞ்ச முகம் சுருங்கினாள் லக்கி.

“பொண்டாட்டிகிட்ட சொன்னா ஆறுதல் கிடைக்காதுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா சாகர்?” வெறுமையாக கேட்க,

“நீ பயந்து போயிடுவியோன்னு நினைச்சேன். என் பிள்ளைகளை விட கொஞ்சம் பெரிய பொண்ணா தான் உன்னை நான் பாக்குறேன்!” அமிர் சொன்னதும், கண்களை உருட்டி மிரட்டினாள்.

“இப்படியெல்லாம் ரீல் விட்டா க்ரீன் க்ரீனா கேட்டுருவேன், படவா! மனசுல இருக்கிறதை பொண்டாட்டிகிட்ட கொட்டத் தெரியலை… நீயெல்லாம் என்ன புருசன்?” கொதித்துக் கேட்க, கைகளை மேலே உயர்த்தி சரணடைந்தான்.  

“நீ பட்ட கஷ்டம் எனக்குப் புரியுதுடி! இனிமே இப்படி இருக்க மாட்டேன். இந்த மாதிரி பேசவும் மாட்டேன். என் அம்மா பிராமிஸ்! முகத்தை திருப்பிக்காதே டா… நீ பேசாம இருந்த இந்தக் கொஞ்ச நேரத்தையே என்னால டேலரெட் பண்ண முடியல. ப்ளீஸ் மின்னி சோதிக்காதே! உன் சாச்சு பாவமில்லையா?” அமிர் தனது மனபாரத்தை இறக்கி வைத்து கெஞ்சிக் கொண்டிருக்க, அவனை உறுத்துப் பார்த்தாள் லக்கி.

“இனிமே குடி, சிகரெட் எல்லாத்தையும் விட்டுத் தொலைக்கிறேன்னு என் அத்தம்மா மேல சத்தியம் பண்ணுங்க… நீங்க உருகிப் பேசினா இதையெல்லாம் மறந்திடுவேன்னு நினைச்சீங்களா? இனிமே உங்களை விட்டுப் பிடிக்கிற ஐடியா எல்லாம் எனக்கில்ல…” சட்டமாய் பேச,

“உடனே முடியாதுடி! அது கஷ்டம்…” என்றவாறே பின்னடைந்தான் அமிர்.

“இந்தப் பத்து நாளா ஹாஸ்பிடல்ல இருக்கும் போது இந்த கருமத்தை எல்லாம் தொடல தானே? அப்படி நினைச்சு பல்லைக் கடிச்சிட்டு இருங்க. அதுக்கு என்ன மெடிசனோ அதையும் சேர்த்து எடுத்துக்கோங்க!” உத்தரவாகக் கூற கணவனின் தலை தன்னால் அசைந்தது.

“கமலாம்மா சொன்னதும் சரியாத்தான் இருக்கு. மொதல்ல உன் பெரிய பிள்ளைய ஒழுங்கா பார்த்து கவனி! மத்த மூணு பிள்ளைகளையும் நான் கவனமா பார்த்துக்கறேன்னு என்னை அனுப்பிவிட்டது ரொம்ப நல்லதாப் போச்சு. இல்லன்னா இன்னும் நீங்க மனசுக்குள்ள எல்லாத்தையும் உருபோட்டு  சோர்ந்து போயி, எல்லாரையும் வெறுத்து இருப்பீங்க தானே?” அவனைப் பார்த்து கூர்மையுடன் கேட்க,

“தெரியலடி!” என்றவன், பின் அவளது முறைப்பில் “அப்பிடிதான் போல…” என சம்மதம் கூறி, அவனுக்குள்ளும் ஓட்டிப் பார்க்க, ‘இவள் சொல்வதும் நிஜம்தான் போல’ என்ற நினைவில் ஆமென்று அவனது தலை பலமாக ஆடியது.

“ஆக மொத்தம் நீ, என் குழந்தை… நான், உன் புள்ளையாடி?” கலகலத்துப் பேசியே நிலைமையை சஜமாக்கினான்.

அடுத்த நாளே அவளை கிளம்பச் சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தான் அமிர். அவள் அசைவேனா என்றிருக்க, பழையபடி கடிந்து கொள்ளத் தொடங்கினான்.

“கொஞ்சமும் பாசமில்ல… நீயெல்லாம் அம்மாவா? பச்சை புள்ளைகளை தவிக்க விட்டுட்டு இங்க உனக்கென்ன வேலை?” கடினக் குரலில் கேட்க,

“இப்ப அவங்களுக்கு நான் தேவை இல்ல சாச்சு! பர்த்டே முடிஞ்ச மறுநாளே பழக்கத்தை மறக்கடிக்க வைச்சாச்சு!” லக்கி சமாதானமாகக் கூற, புரியாமல் பார்த்தான் அமிர்.

“ஹரிணியும் கமலம்மாவும் பொறுப்பை எடுத்துகிட்டு ரெண்டுநாள் இடத்தை மாத்தி, விளையாட்டு காட்டினாங்க… அதோட பெரியவங்களும் சேர்ந்து பார்த்துக்கிட்டாங்க… அப்படியே குட்டீஸுக்கும் மறந்து போயிடுச்சு!” லக்கி இலகுவாகச் சொல்ல,

“ரொம்ப ஈசியா என் பிள்ளைகளை ஏமாத்திட்ட… என்ன அவசரம் உனக்கு?” அதற்கும் கொட்டு வைத்தான் அமிர்.

“அதெல்லாம் அப்படிதான்…. இப்படி செய்யப் போயிதான் இப்ப உங்களை பார்க்க தைரியமா வர முடிஞ்சது. இல்லன்னா இன்னமும் நான் அங்கே உக்காந்து அழுதிட்டு இருந்திருப்பேன்.” விளக்கினாலும் அவளைக் கிளப்புவதிலேயே குறியாக இருந்தான் அமிர்.

“ஐ அம் ஆல்ரைட் மின்னி! டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் வந்துட்டேன். டூ டேய்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு டூயுட்டில ஜாயிண்ட் பண்ணிடுவேன். கிளம்பு நீ!”

“உங்களை தனியா விட்டுட்டு நான் மட்டும் போற ஐடியா எனக்கில்ல” அமைதியாக கூறி அதிர வைத்தாள் லக்கி.

“அப்போ குட்டீஸை இங்கே கூட்டுட்டு வர ஏற்பாடு பண்ணட்டுமா?” மனைவியின் பேச்சு அவனுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்க சட்டென்று கேட்டான்.

“வேண்டாம் சாச்சு! அவங்களுக்கு அங்கே கிடைக்கிற கேரிங் இங்கே கிடைக்காது. என்னால தனியா இருந்து பிள்ளைகளை மேனேஜ் பண்ணவும் முடியாது.” லக்கியின் பேச்சில், கோபத்தில் கனன்றான் அமிர்.

“பிள்ளைகளை விட்டுட்டு இங்கே இருக்கணும்னு நினைச்சா… வெட்டிப் பொலி போட்டுருவேன்… ஒழுங்கா கிளம்பு!” என கண்டிப்பான குரலில் கூறினாலும் லக்கி கேட்டுக் கொள்ளவில்லை.

“இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு அல்லது இந்தியா பிரான்ச்ல போஸ்டிங் மாத்திட்டு வாங்க. ரெண்டு பெரும் சேர்ந்தே கிளம்பலாம். இங்கே வேணாம் ப்ளீஸ்!” அவள் கெஞ்சலாகக் கூற, இவன் பிடி கொடுக்கவில்லை.

அவனது வீம்பில் அவனிருக்க, இவளும் அதே பிடிவாதத்தை கையில் எடுத்தாள். 

‘நீயும் வந்தே ஆகவேண்டும்.’ என்று அவள் அடம்பிடிக்க, ‘என்மீது நம்பிக்கை இல்லையா?’ என இவனும் முகம் திருப்ப, நாளொரு சண்டையும் பொழுதொரு தர்க்கமும் என நாட்கள் கடந்து கொண்டிருந்தது.

அவன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி மூன்று நாட்களும் கடந்து விட, கடைக்குட்டி, ‘மீ… மீ!’ என அம்மாவை தேட ஆரம்பிக்க, ஹரிணி காணொளியில் அமிரை அழைத்து விட்டாள்.

“அண்ணிகிட்ட குடுங்க ண்ணா… ஆர்வி குட்டி காலையில இருந்து அம்மாவை தேடுற…” எனக் கூறியதும், லக்கியை அமிர் அழைக்க, அவளோ வரமாட்டேன் என மறுத்து பிடிவாதமாக வெளியில் சென்றுவிட, வேண்டா வெறுப்பாக அழைப்பினைத் துண்டித்தான் அமிர்.

வெளியில் வந்து குரல் அழைப்பில் ஹரிணியை அழைத்த லக்கி, “என்னை பார்த்தா குட்டீஸ் அழ ஆரம்பிச்சுடுவாங்க டா! என்னாலயும் தாங்கிக்க முடியாது, சாரி ஹரிணி! உனக்கு ரொம்ப கஷ்டம் குடுக்கிறேன்னு நல்லாவே புரியுது. ஆனாலும் என்னால ஒன்னும் பண்ண முடியல.” கரகரத்துக் கூற,

“எதுக்கு அண்ணி இதெல்லாம் சொல்றீங்க? ரொம்ப சேட்டை பண்றான்னு அம்மா கொஞ்சம் சத்தம் போட்டதும் உடனே பாப்பா உங்களை தேடிட்டா… மத்தபடி குட்டீஸ் சமத்தா இருக்காங்க. நீங்க அண்ணனுக்கு சரியானதும் வாங்க!”   ஹரிணியும் ஆறுதல் கூறி முடித்தாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அமிருக்கு முன்னைவிட கோபம் கட்டுக் கடங்காமல் வந்தது. பார்வையில் முறைத்து கண்டித்து பேசினாலும் அலட்டிக் கொள்ளாமல் தன் வீராப்பில் நின்றாள் லக்கி.

“குழந்தைங்க பாவம் மின்னி! நீ நினைச்ச நேரத்துக்கு வேலையை மாத்திக்க முடியாது. சொல்றதக் கேளு! நீ கிளம்பு டி!” சூழ்நிலையை எடுத்துக் கூறினாலும் அதற்கும் தீர்வைக் கூறினாள் லக்கி.

“நோட்டீஸ் கொடுக்காம வேலையை விட்டு நிக்கக் கூடாதுன்னு எனக்கும் தெரியும். ஆனா சாலரி வேண்டாம், எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட் மட்டும் போதும்ன்னு சொன்னா அக்செப்ட் பண்ணுவாங்க தானே? அதோட உங்க ஹெல்த் இஸ்யூவும் சொல்லி டிரான்ஸ்ஃபர் இல்லன்னா ரிசைனிங் லெட்டர் குடுங்க.” எனக் கூறிய மனைவியின் யோசனையில்,

“வேலையை ரிசைன் பண்ணிட்டு… உங்கப்பா தொழிலை எடுத்து நடத்தச் சொல்றியா? அதெல்லாம் என்னால முடியாது.” கொதிப்புடன் எகிறிக் குதித்தான் அமிர்.

“ஐயா சாமி! உங்க திறமை மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? என்னை சுயமா யோசிச்சு முன்னேறச் சொல்றவங்க இன்னும் ஏன் மாச சம்பளத்தையே கட்டிட்டு அழுதுட்டு இருக்கீங்க?

எங்கப்பா கன்சர்ன்ல உங்களை வந்து உக்காரச் சொல்லி, ஒருநாளும் நான் கம்பெல் பண்ண மாட்டேன். அதே போல இந்தியாவுல எங்கே போயி வேலை பார்க்கணும்னு தோணினாலும் அதுக்கு நான் தடை சொல்ல மாட்டேன்.

வாரத்துல ஒரு நாளாவது நீங்க குடும்பத்தோட இருக்கணும் அப்படி செட்டில் ஆகுற மாதிரி, உங்க வேலையை மாத்திக்கோங்க… அது சுயதொழிலா இருந்தாலும் சரி, ஊரான் வீட்டு கூர்க்கா வேலையானாலும் சரி!” கறாகக் கூறியவளை, அமிரால் மறுத்துப் பேச முடியவில்லை.

“மாச சம்பளம் கொடுக்கிறவனுக்கு தான் விசுவாசமா இருப்பாராம்… பொண்டாட்டியோட சொந்த தொழிலுக்கு கல்லுகூட எடுத்து வைக்க மாட்டாராம், இது எந்த ஊரு நியாயம்னு தெரியல…

சம்பளம் கொடுக்கிறவன் எனக்கு வாய்த்த நல்ல அடிமைன்னு பட்டம் கொடுத்து, சிலை வைச்சு மரியாதை பண்ணப் போறானா என்ன?” கணவனின் கன்னத்தில் இடிக்காத குறையாக நொடித்துப் பேசியே நோக வைத்தாள் லக்கி.

தொடர்ந்த அடுத்த வாரங்களில் பிள்ளைகளுடன் இவன் மட்டும் பேசும் நேரத்தில், ‘மீ… பா… கம்!’ மழலை மொழியில் மூன்று பேரின் அழைப்பும் தேடலும் மனதையே உருக்கி விட, ஒரு வழியாக தன் நிலையில் இருந்து இறங்கி வந்தான் அமிர்.

ஊரின் சீதோசணமும், உணவு முறையும் தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்ற மருத்துவ அறிக்கையும், சம்பளம் வேண்டாமென்ற ஒப்புதலுடன் அமிர் அலுவலகத்தில் தன் கோரிக்கையை முன்வைத்தான்.

அவனது உடல்நிலை பற்றி சமீபமாக அறிந்து கொண்ட காரணத்தால், நிர்வாகமும் அவனது வேலையை முன்னைப் போல இந்தியாவில் தொடரலாம் எனக்கூறி அவனை விடுவித்தது.

லக்கீஸ்வரியின் ஆசையை மட்டுமே கருத்தில் கொண்டு, முதன்முதலாக தனக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்து முடித்த திருப்தியுடன் நிரந்தரமாக ஜெர்மனியை விட்டுக் கிளம்பினான் அமிர்தசாகர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!