சில்லென்ற தீப்பொறி – 6

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே

நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே

மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்

எனைமாண்புந் தான்இனிது நன்கு.

 

சில்லென்ற தீப்பொறி – 6

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு முன்பே முழிப்பு வந்துவிட, எழுந்தவள் கணவனை நோக்கி விளங்கா பார்வையை பதித்தாள் லக்கீஸ்வரி.

இனி வாழ்க்கை பயணம் இவனுடன்தான் என்கிற நிதர்சனம் உரைக்க, அவன் தூக்கம் கலைந்து எழுவதற்குள் குளித்து விட்டு வெளியே சென்று விட்டாள். பழகிய வரையில் பழுதில்லை என்கிற மேலான கண்ணோட்டம் அவன் மேல் வந்திருந்தது.

ஏழு மணியளவில் வலுக்கட்டாயமாக, தந்தையின் அறிவுரையால் கணவனுக்கான காலைநேர காஃபி, ஃபிளாக்ஸுடன் அவளது கையில் திணிக்கப்பட்டது.

“மாப்பிள்ளைக்கு குடை பிடிக்கிற வேலைய ரொம்ப சின்சியரா பண்றீங்க டாடி! நான் உங்க பொண்ணு, அதையும் அப்பப்ப மனசுல வைச்சுக்கோங்க!” தந்தையை வம்பிழுத்து விட்டு,

“அவன் எந்திரிச்சதும், கீழே கூட்டிட்டு வர்றேன். இந்த காஃபி சுமக்கற வேலையெல்லாம் என்னால செய்ய முடியாது.” அலட்டலுடன் தோள் குலுக்கி சொன்னவளை பார்வையாலே கண்டித்தார் ரெங்கேஸ்வரன்.

“உன் விளையாட்டுத் தனத்தை விடவே மாட்டியா லக்கிமா? இன்னும் என்ன அவன், இவன்னு சொல்லிட்டு?” தந்தை மெதுவாய் அதட்டல் போட, மகளின் ஸ்ருதி மொத்தமாய் இறங்கியது.

தந்தையின் மனதிற்கு விரும்பாத செயலை மட்டுமல்ல, பேச்சினைக் கூட பேச விரும்பாதவளுக்கு அவரின் கண்டிப்பு சற்றே சுணக்கத்தை கொடுத்தது.

“சாரி டாடி! இனிமே அவனை, அவர்-ன்னு சொல்லியே பழகுறேன். அதுக்கு மேல என் பிரைவசியில நீங்க மூக்கை நுழைக்க கூடாது.” தந்தையிடம் உடனடி சமாதான உடன்படிக்கையை நடத்தியவள்,

“அவன் எந்திரிச்சானோ இல்லையோ?” என தொடர ஆரம்பித்து, தந்தையின் கண்டனப் பார்வையில், “சரி, சரி! அவர்… அவர் எழுந்தாரோ இல்லையோ?” புலம்பலுடன் மாடிக்கு செல்ல தொடங்கினாள்.  

‘நேத்து நைட்டே ஒரு மார்க்கமா இருந்தான். இன்னைக்கு என்ன பண்ணப் போறானோ? ஒருவேள சினிமா, கதைகள்ல வர்ற மாதிரி ஒரு ரவுண்ட் போவோம்னு இம்சை பண்ணுவானோ?’ தான்படித்து, கேட்டு, அறிந்து வைத்திருந்த விசயங்களை வைத்து பல கணிப்புகளை மனதிற்குள் பட்டியலிடத் தொடங்கினாள் லக்கி.

இந்த கேள்வி தோன்றிய மறுநொடி, மனதிற்குள் ஒளிந்து இருந்த குட்டிச்சாத்தான் வெளியே எட்டிப் பார்த்து, ‘பத்துபடி ஏறி முடிக்கிறதுக்குள்ள பத்தாயிரம் தடவ புருஷனை நெனைச்சு பார்ப்பியா?’ கொட்டு வைத்து அவளின் சுயம் உணர வைக்க,

“ஏய், உன் கேலிய நிறுத்துறியா? ஃபர்ஸ்ட், அவர் இந்த வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட், நாட் மை ஹப்பி. என் வீட்டுல தங்கி இருக்கிறவரை பத்தி நான் நினைக்காம வேற யார் நினைப்பாங்க? விருந்தாளியை சரியா கவனிக்கலைன்னா நம்ம பிரஸ்டீஜ் என்ன ஆகுறது? நீ பேசாம அடங்கி இரு!” மனசாட்சிக்கு இவளும் பதில் கொட்டு வைக்க, அதுவோ சிலிர்த்துக் கொண்டு அவளை சீண்டி விட்டது.

‘அப்ப, கணவனே கண்கண்ட தெய்வம்னு எல்லா பணிவிடையும் பண்ணி சதி சாவித்திரி ஆகப்போறியா லக்ஸ்? அவ்வளவு நல்லவளா நீ?’

“நோ… நெவர்! என் மனசுல அந்த சென்டிமெண்ட் சீனுக்கெல்லாம் இடமே இல்ல. இத கொண்டு போயி அப்படியே அவன், ச்சே… அவர் தலையில கொட்டினா என்ன?’ தீவிரமாக சிந்தித்தவளின் எண்ணத்திற்கு, ஏன் இப்படி என்ற கேள்வியுடன் அவளின் மனசாட்சியே, அவளுக்கு எதிராக களம் இறங்கியது.

“பின்னே, நேத்து என்னை என்னவெல்லாம் பண்ணான்? என்கிட்ட பெர்மிஷன் கூட கேட்காம…’ முந்தைய இரவில் கணவனின் அணைப்பில் அடங்கியதை நினைத்துப் பார்த்தே, தொடரப் போனவளின் வார்த்தைகளும் தடுமாறி நிற்க,

‘உன்கிட்ட கேக்கணுமா? அப்படி ஒன்னும் நீ வெறுத்த மாதிரி தெரியலயே தங்கம்? வெளிச்சமா இருக்குன்னு தானே அக்செப்ட் பண்ணல.’ மனசாட்சி அவளை திருப்பி குத்தியது.

“நீயெல்லாம் என் மனசாட்சியா? காலேஜ்ல ஜூனியர்ஸுக்கு ராக்கிங் நடக்கிறதில்ல… அது மாதிரிதான் இதுவும். நேத்து இவர் செஞ்ச வேலைக்கு பனிஷ்மென்ட் இதுதான்.” என சீற்றத்துடன் நடந்தாள்.

‘ஐயோ, லக்கிமா சூப்பரு, சீக்கிரம் போ! அப்புறம் காஃபி ஆறி, ரிவென்ஜ் சொதப்பி விடப்போகுது.’ மனசாட்சி நக்கலடிக்க, வேக எட்டுக்களை எடுத்து வைத்தாள் கோப ஈஸ்வரியாக மாறிய லக்கீஸ்வரி.  

‘மனசுல அவர்னு சொல்லத் தெரியுது… ஆனா, உன்னோட ஹீரோ அவர்தான்னு நினைக்க தெரியல.’ அவளின் மனசாட்சி நையாண்டி செய்வதை நிறுத்தவே இல்லை.

அறையின் உள்ளே செல்ல கதவின் மீது கை வைக்கும் போது, உள்ளே ஏதும் உருட்டும் சத்தம் கேட்கிறதா என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தாள்.

‘ஏன்டிம்மா, உருட்டுறதுக்கு அவன் என்ன பூனையா? ஒருவேள நீ இந்நேரம் ரூம்ல இருந்திருந்தா, உன்னை வேணா உருட்டி இருப்பான்.’ மனசாட்சி அடங்காமல் கவுண்டர் கொடுத்துக் கொண்டே வர,

“தூரப்போ சாத்தானே!” என ஒன்றரை டன் வெயிட்டில் ஒரே அடி அடித்து மனசாட்சியை ஓட வைத்தாள்.

‘ஆஹா, அமைதியா தான் இருக்கு, அவர் இன்னும் தூங்குறாரு. சாரி டாடி! உங்க மாப்பிள்ளைக்கு சூப்பர் கமகம காஃபியால் அபிசேகம் நடக்கப் போகுது, அதை பார்க்க கொடுத்து வைக்காத அன்லக்கி நீங்க…’ பலநாள் விடுதியில் தோழிகளை சீண்டி விளையாடியதைப் போன்றே கணவனிடமும் விளையாட எண்ணினாள்.

தனது குறும்புதனத்தை, தானே மெச்சிக் கொண்டவளாக வேகமாக கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தவளுக்கு ‘சப்’ என்றாகி விட்டது என சொல்வது குறைவு. அதுக்கும் மேலே என கிண்டலடித்து வெறுப்பேற்ற மீண்டும் தலை காட்டியது அவளின் மனசாட்சி.

அறையில் எங்கு தேடியும் கணவனின் முகம் தென்படாமல் போக, மனைவியின் உள்ளத்தில் கோபம் ஏகத்திற்கும் ஏறிப்போனது.

அவனைக் காணாது இவள் சோர்ந்து போய் கட்டிலில் அமரவும், அறைக்குள் வியர்வையுடன் அமிர்தசாகர் நுழையவும் சரியாக இருந்தது.

அவளுள் பொங்கிக் கொண்டிருந்த கோபத்தை, அவனது காலைநேர பளிச்சென்ற தோற்றமும், புருவத்தை தூக்கி ‘கண்களால் என்ன?’ என்று கேட்ட அழகும் மறக்கடிக்க செய்தது.

கூடவே அந்த தோற்றம் மூளையில் பளிச்சென்று பதிவாகி ‘மை ஸ்மைலிங் சாச்சு’ என உள்மனமும் கொஞ்சி கொண்டதை, முகக்கவசம் போட்டு மறைத்துக் கொண்டாள் லக்கி.

“உங்களுக்கு காஃபி கொண்டு வந்தேன். அதுக்குள்ள எங்க போயிட்டு வர்றீங்க?” தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு கேட்டாலும் குரல் வெளிக்காட்டியது.

“எனக்கு ஜாக் போற பழக்கமுண்டு மின்னி! இங்கே இருந்தே தோட்டத்துக்கு போயிட்டேன்.” கணவனின் விளக்கத்தில்,

‘ஏன், என்கிட்ட சொல்லிட்டு போகணும்னு கூட தோணலையா இவருக்கு?’ மனைவியின் மனம் நினைத்த கேள்வி அவளின் முகத்திலும் பிரதிபலித்தது.

அதை கண்டு கொண்டவனாய், “கீழே வந்து உன்கிட்ட சொல்லிட்டுப் போறதுக்குள்ள லேட் ஆகிடும். அதுவுமில்லாம எனக்கு யாருட்டயும் சொல்லிட்டு போய் பழக்கமில்ல. நாளைக்கு நான் ஜாக் போற வரைக்கும், நீ என் எதிர்லயே இருந்தா, சொல்லிட்டு போறேன்.” சமாதானமாகவும் அதே நேரத்தில் ‘நான் இப்படிதான்’ என்றும் தெளிவு படுத்தியவனின் கண்கள், மனைவியின் வரிவடிவத்தை மெதுவாய் அளக்கத் தொடங்கியது.

காலைநேர பனிப்பூவாய் ரோஜாநிற சல்வாரில், முறுக்கு குறையாத தங்கத்தாலி மின்ன நின்றிருந்தவளை, வஞ்சனையின்றி மேலிருந்து கீழாக சைட் அடித்தான்.   

“ஹவ் எ ப்ளசண்ட் டே டார்லிங்!” என்றவன் தானாகவே ஃபிளாஸ்கில் இருந்த காஃபியை ஊற்றிக் கொள்ள,

“சாரி சாகர்! பேசிட்டே இருந்ததுல இதை மறந்திட்டேன்.” என மன்னிப்பை வேண்ட,

“நோ இஷ்யூஸ்!” அவளின் கன்னம் தட்டி கூறியவன், காஃபியை குடித்துவிட்டு, “நான் போய் குளிச்சிட்டு வர்றேன். என்னோட ட்ரெஸ் எங்கே இருக்கு?” கேட்டபடியே மனைவியின் முகத்தை பார்த்தவனுக்கு ஏமாற்றம் எட்டிப் பார்த்தது.

புதுமணப் பெண்ணிற்கு இருக்கும் நாணம் வேண்டாம், அதற்கு பதிலாக ஒரு மெல்லிய புன்னகைக்கு கூடவா பஞ்சமாகிப் போய்விடும். அனைத்து உணர்ச்சிகளையும் துடைத்து எடுத்து விட்ட மெழுகுச் சிலையாக அசையாமல் நின்றிருந்தாள்.

“இன்னும் என்ன பயம், பதட்டம்? ஃபீல் ஃப்ரீ மை மின்னி!” என்றபடியே குளியலறைக்குள் தஞ்சமடைந்தவனின் மனம், இன்று நடைபயிற்சிக்கு சென்ற போது, தனது மாமனாருடன் நடந்த உரையாடலை அசைபோட்டது.

இன்று எப்படியும் மனைவியை தன்னோடு ஊருக்கு அழைத்துச் செல்வதைப் பற்றி மாமனாரிடம் பேசவேண்டுமென நினைத்துக் கொண்டே நடைப்பயிற்சியை ஆரம்பிததவனின் எதிரிலேயே அவர் வந்து நின்றார்.

“குட்மார்னிங் மாப்பிள்ளை… உங்களுக்கும் ஜாக்கிங் போற பழக்கம் உண்டா?”

“நோ ஃபார்மாலிடீஸ் அங்கிள், கால் மீ அமிர்!” காலைநேர அரட்டையுடன் இருவரும் இணைந்து மெதுவாக தோட்டத்தை சுற்றி வந்தனர்.

“நீ தப்பா எடுத்துக்கலன்னா உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா அமிர்?”

“இத்தனை தயக்கம் எதுக்கு அங்கிள்? நான் எப்பவும் நீங்க சின்ன வயசுல பார்த்த அமிர்தான்.”

“அது வந்து… நேத்து லக்கி உன்கிட்ட ஏதும் தப்பா, மரியாதையில்லாம நடந்துகிட்டாளா? அப்படி எதுவும் பேசியிருந்தா அதையெல்லாம் மனசுல வைச்சுக்காதபா! எனக்காக ப்ளீஸ்….” வேண்டுதலாய் ரெங்கேஸ்வரன் கேட்கும் போதே, அவன் கலகலவென்று சிரித்து விட்டான்.

மகளை வளர்த்த தகப்பனுக்கு மட்டுமே தெரியும், அவளின் சுபாவங்களும் அழிச்சாட்டியங்களும். அந்த தந்தையின் படபடப்பான கேள்வியில் வெடித்து சிரித்த மருமகன், தன்னை அடக்கிக் கொண்டு,

“சாரி மாமா! இப்ப அவ என்னோட மனைவி. பிடிக்குதோ இல்லையோ நான் கமிட் ஆகிட்டேன். இனி நான் பார்த்துக்கறேன். பட்…” என்ற கேள்வியுடன் அமிர் பேச்சினை நிறுத்த, ரெங்கேஸ்வரன் பதறி விட்டார்.  

“என்ன அமிர்? எதுவும் ஹார்ஸா பீஹேவ் பண்ணினாளா?”

“நத்திங் டூ வொரி அங்கிள்! இது அவளுக்கு பிடிக்காத கல்யாணமா, அவ ஏன் இப்படி இருக்கா?” புருவ முடிச்சிட்ட யோசனையுடன் அமிர் கேட்க, மகளின் விருப்பமில்லாமல் நடந்த திருமணம் இது என்ற விஷயத்தை மட்டும் கோடிட்டு காட்டினார் ரெங்கேஸ்வரன்.

அந்த நேரத்திலும், ‘தன்னுடன் இந்த வீட்டில்தான், உங்களது குடும்ப வாழ்க்கை தொடரப் போகின்றது. அப்படியான பேச்சு வார்த்தையில்தான் திருமணம் நடந்தது’ என்பதை கூற மறந்து விட்டார் பெரியவர்.

தன்னைப்போல் மனைவியும் விருப்பமின்றி திருமண பந்தத்தில் நுழைந்திருக்கிறாள் என்னும் உண்மை அமிருக்கு பிடிபட, சிறிது ஏமாற்றமும் சிறிது நம்பிக்கையும் வந்தது.

“நீங்க கவலபடாதீங்க அங்கிள். எல்லாம் சரியாகிடும், அவளை நான் பார்த்துக்கறேன். எனக்காக யாரும் அவள ஃபோர்ஸ் பண்ண வேணாம்.” மருமகன் நம்பிக்கை விதை விதைக்க, மாமனாரின் மனதில் நிம்மதியுடன் கூடிய பெருமை வந்தது.

“ரொம்ப சந்தோசம் அமிர்! என்னோட செலக்சன் எப்பவும் சோடை போகாதுன்னு உங்கப்பாகிட்ட பெருமையா சொல்லி காலரை தூக்கி விட்டுக்கணும் போல இருக்கு. ஆனா, என்ன பண்ண? படுபாவி என்ன அவசரம் வந்ததோ இப்படி பாதியில என்னை விட்டுட்டு போயிட்டான்.” நண்பனின் நினைவில் ரெங்கன் மனம் கசிய, அதை பார்த்து மனம் கசங்கிப் போனான் போனான் அமிர்.

அவருக்கு உயிர் நண்பன் என்றால், இவனுக்கு பெற்று வளர்த்தவர் அல்லவா? அந்த இரத்தபாசம் நொடிநேரத்தில் அவனையும் துக்கம் கொள்ள வைக்க, அமைதியுடன் தனதறைக்கு திரும்பி விட்டான். இன்றே ஊருக்கு புறப்பட வேண்டுமென்று கூற நினைத்தவன், அதை மறந்தே போனான்.

நடைபயிற்சி முடித்து அறைக்குள் வந்ததும் மனைவியின் காலைநேர தரிசனத்தில் தன் இயல்பிற்கு வந்தவன், மனம் விட்டு அவளுடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டே குளியலறைக்குள் தஞ்சமடைந்தான்.

“ரொம்ப பலமான யோசனையா மின்னி? அமைதியா உக்காந்திருக்க…”

குளித்து உடை மாற்றி வந்தவன், தனக்காக மனைவி காத்திருப்பதை உணர்ந்து, பேச்சு கொடுத்தான். கணவனின் கேள்வியில் மனைவி விழி விரிக்க,

“அடடா… அடிக்கடி இப்படி ஃப்ரீஜ் ஆகுறத நிறுத்து. இப்படியே போனா, நாம கேசுவலா பழகுறது எப்போ? எனக்கு ரொம்ப பொறுமை கிடையாது பியூட்டி… என்னை கஷ்டபடுத்த நினைக்காதே!” சகஜமாய் தன்னிடம் வார்த்தையாடுபவனை விளங்காமல் பார்த்தாள்.

அவனது தோற்றம் பார்த்து, நாம் ஏன் கோபத்தை விட்டோம் என்று யோசனையில் மூழ்கி இருந்தவளை கணவனின் கேள்வி நிகழ்விற்கு கொண்டு வந்திருந்தது.

அவன் வெளியே வந்ததைக் கூட கவனிக்காமல் தன்னுள்ளே மூழ்கி இருந்தவளுக்கு, அவன் தன்னை பற்றி என்ன நினைப்பான் என்ற சுணக்கமே மேலிட்டது. அதோடு அவன் கேட்ட கேள்வி வேறு என்னவென்று தெரியாமல் பேந்தப் பேந்த முழித்தாள்.

‘பல்ப் வாங்குறதுன்னு முடிவாகிடுச்சு… என்ன சொன்னார்ன்னு இவர்கிட்டயே கேட்டு இளிச்சு வைப்போம்’ என தனக்குள் முடிவெடுத்தவளாய்,

“சாரி… என்ன சொன்னீங்க சாகர்?” உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க, அவன் ‘உஃப்’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

“இன்னைக்கு ஃபுல்லா சாரி சொல்லியே பொழுத ஓட்டப் போறியா?”

“என்ன கேக்குறீங்க?” மீண்டும் விழி விரித்து விளங்காமல் கேட்க,

“போதும்டி உன் எக்ஸ்பிரசனை கொஞ்சம் கொறைச்சுக்கோ! தயக்கமில்லாம என்னோட பேசி பழகப்பாரு. அதைதான் சொன்னேன்.” அதட்டலுடன் பேசினாலும், மனைவியின் சிறுபிள்ளை பாவனையில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். 

அவளுக்கு அவள் காதுகளையே நம்ப முடியாமல்,

“நிஜமாவா சாச்… சாகர்?” கண்களை விரித்துக் கேட்டவளின் முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டவன்,

“நிஜமாதான் சொல்றேன். லைஃப் லாங் உனக்கு நான்தான், எனக்கு நீதான்னு முடிச்சு போட்டாச்சு. இன்னும் எது தடுக்குது உன்னை?” உரிமையுடன் கணவன் கேட்க, மனைவிக்கு படபடப்பு கூடிப்போனது.

“சாச்… சாக்பீஸ்ன்னு உளறாம உனக்கு எப்படி இஷ்டமோ அப்படியே கூப்பிடு. கொஞ்சம் கிக்கா, சின்ன டச்சிங்கோட கூப்பிட்டா, உன் சாச்சு உன்கிட்ட டோட்டலா சரண்டர் ஆகிடுவான்.” கண்ணடித்துக் கூறிவிட்டு,

“இந்த மாதிரி மோஸ்ட் ரொமாண்டிக் மொமென்ட்ஸ்தான், நம்மோட ஸ்வீட் நத்திங்க்ஸ் ஆல்பம்ல இருக்கணும். என்ன சொல்ற மின்னி?” எதிர்கேள்வி கேட்டு நின்றவனின் வார்த்தை ஜாலத்தில்,

தன்போக்கில் அவளும், “ம்ம்…” என மெச்சுதலாய் தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

“இவ்வளவு ஆசை இருக்ககூடாது சாச்சு! இன்னும் நாம சின்ன வயசுல பழகுனதையே ரிவைண்ட் பண்ணி பார்க்கல… அதுக்குள்ள டச்சிங், கிஸ்ஸிங் சாருக்கு வேண்டி இருக்கா?” துடுக்காய் பேசிக் கொண்டே போனவளை ரசனையுடன் பார்த்தான் அமிர்.

மனைவியின் இலகுவான பேச்சு, அவனுக்குள் உல்லாசத்தை வரவழைக்க, அவளின் இதழை, தன் இதழால் உரசியே, தனது தேவையை உணர்த்தி விட்டான்.  

எதிர்பாரா இதழ் தீண்டலில் தடுமாறிப் போனவளை தன்னில் இறுக்கிக்கொண்டே, “இது உனக்கு பிடிக்கலையா?” எனக் கேட்டு அவளை பதில் சொல்ல விடாமல், தன் இதழ் சுவையை அவளுக்கு உணர்த்திடும் வேகத்தில் இறங்கி விட்டான்.  

சில நொடிகள் சென்று, “மூச்சு முட்டுது…” எனக் கூறி விலகியவளின் முகம் முழுவதும் செம்மையை பூசிக் கொண்டு குனிந்து நின்றது.

அந்த நாணச் சிவப்பே கணவனை முன்னேறச் சொல்ல, “இந்த ஹக் அன்ட் கிஸ் மேஜிக்ல நாம ஆயிரம் வருஷ கதையை பேசலாம் மின்னி.” கிசுகிசுத்து கூறியவனின் உதடுகள் மனைவியின் கன்னம் காதுகளில் ஊர்வலம் சென்று காதல் பயணத்தை இனிதாய் தொடங்கியது.

இருவருக்கும் பிடிக்காத திருமணம் இது என்பதை அந்த சமயத்தில் இருவருமே முற்றிலும் மறந்து போயிருந்தனர். நிமிடங்கள் காதலின் கரைசலாக கழிய, கணவனின் தாபத்தை பார்த்த லக்கியின் மனம் உரிமையாக சிணுங்கிக் கொண்டது.

‘ம்க்கும்… இவருக்கு இதை விட்டா வேற எதுவும் தெரியாதா? நேத்து அசந்த நேரத்துல ஹக் பண்ணினவர், இன்னைக்கு கோல் போடுற மாதிரி லிப்கிஸ் அடிச்சு மொத்தமா சுருட்டிக்க பாக்கிறார்.’ மனதிற்குள் மூண்ட குறுகுறுப்பை வெளியே காட்டவும் முடியாமல், லக்கி நெளிய ஆரம்பிக்க, மீண்டும் தன் அணைப்பில் இறுகிக் கொண்டான் அமிர்.

“மூச்சு முட்டுது சாச்சு! இதெல்லாம் இப்ப வேணாமே?” மனைவியின் கிசுகிசுப்பு, அவனுள் போதையை ஏற்றி வைக்க, அணைப்பை இன்னமும் இறுக்கினான்.

“அப்பப்ப, இதெல்லாம் தப்பில்லடா மின்னி!” மென்குரலில் சொன்னவன், அந்த மென்மை மாறாமல் கன்னத்தில் மீண்டும் தொடங்க, அவசரகோலத்தில் அவனை தள்ளி விட்டாள்.

“இவ்வளவு அவசரம் கூடாது. இன்னும் நாம பேசவே ஆரம்பிக்கல…”

கண்களில் குறும்பு மின்ன கூறியவளை திடுக்கிட்டு பார்த்தவன், அவளது பாவனை புரிய,

“கொஞ்சம் கொஞ்சமா பழகிப்பாரு, என்னைத் தவிர வேற யாரையும் உனக்கு பிடிக்காது, பிடிக்கவும் கூடாது.” மனைவிக்கு தப்பாமல் பாவனை புரிந்தான்.

“அச்சோ… பெரிய ஸ்ட்ரிக்ட் ஆபிசர்தான். ஆனா இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!” கலகலவென்று சிரித்துக் கொண்டே கிண்டலடித்தவளை, கணவனும் கைகளால் பத்திரம் காட்டிவிட, ‘எஸ்கேப்’ என சொல்லிக்கொண்டே வேகமாக கீழிறங்கிச் சென்றாள்.

இருவரும் அவரவர் நிலையில் சந்தோசமாகவே கீழே சென்று அனைவருடனும் சேர்ந்து உணவருந்த தொடங்கினர்.  

“இன்னைக்கு ஈவ்னிங் நாங்க கிளம்புறோம். நீயும் ரெடியாக்கிக்கோ மின்னி!” அறிவிப்பாக அனைவரிடமும் கூறியவன் மனைவியை பார்க்க, அவளோ தந்தையைப் பார்த்தாள்.

அவரும் ‘என்னிடம் சொல்லவில்லையே’ என்ற கேள்விப் பார்வையில் அமிரை நோக்க,

“லீவ் இல்லையா? அவசர வேலை எதுவும் இருக்கா அமிர்?” சித்தப்பா நடேசன் கேட்டார்.

“என்னோட ஆபீஸ் வொர்க் பெண்டிங்ல இருக்கு சித்தப்பா. நான் போக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். அடுத்த வாரம் என்னோட ஷெட்யூல் ஸ்டார்ட் ஆகிடும். சோ, என்கூட இவ இருக்கணும்னு நினைச்சா, இப்ப வரட்டும். இல்லன்னா அவ இஷ்டம்.” தீர்மானமாய் இவன் கூற, அனைவருக்கும் பெரிதும் தர்ம சங்கடமாகிப் போயிற்று.

சற்று முன் தனிமையில் உருகி குழைந்தது எல்லாம் இவன்தானா என்ற ஆராய்ச்சியில், ‘இப்ப பெரியவங்க என்ன சொல்லிட்டாங்கன்னு இப்படி கோபமா பேசுறாரு? இவர் வழி தனி வழி கேட்டகிரியா… என்ன டிசைனோ? லக்ஸ் உன்பாடு திண்டாட்டம் தான்.’ லக்கி மனதோடு புலம்பவே தொடங்கி விட்டாள். 

“மறுவீடு சம்பிரதாயம் எல்லாம் இருக்கு அமிர். அதை முடிக்காம போனா எப்படி?” சித்தி கோமதி கேட்க, அவனுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

“இத்தனை அவசரமா நானா கல்யாணம் வைக்க சொன்னேன்? உங்க இஷ்டத்துக்கு நாள் குறிச்சிட்டு, என் வேலைக்கு பிரேக் போட்டா, நான் மனுசனா இருக்க மாட்டேன்!” என பொரிந்து தள்ளியவன்,

மனைவியைப் பார்த்து, “நீயும் வந்தே ஆகணும்னு அவசியம் இல்ல… பட், நான் இன்னைக்கு கிளம்புறேன்!” இறுதி முடிவினை கூறிவிட, 

‘இவன் நல்லவனா கெட்டவனா? எதற்கு இப்படி பேசுகிறான்?’ திருமணத்திற்கு முன்பு அறிந்து கொள்ள வேண்டியதை மிகத் தாமதமாக தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

அனைவரின் முகத்திலும் திகைப்பை கண்டவளுக்கும் மனதின் ஓர் மூலையில் சிறு வருத்தம் எட்டிப் பார்த்தது. ஆனால் கணப்பொழுதில் அதை சரி செய்து சிரிப்பை உதிர்த்து, நிலைமையை தன்வசமாக்கி,

“நான், இவர்கூட இன்னைக்கே கிம்புறேன் டாடி! நெக்ஸ்ட் வீக் இங்கே வந்து என்னை விட்டுட்டு இவர் டூருக்கு போகட்டும். ஈசிப்பா!” சூழ்நிலையை சகஜமாக்கி தீர்வும் கண்டாள்.

சிறிது நேரம் பேசி முடித்துவிட்டு அமிர், தன் மாமனாரிடம்

“அங்கிள்… அங்கே வீட்டு வேலைக்கு ஆள் இருக்காங்க! இப்ப லக்கிய கூட்டிட்டு போனாதான் அவ டேஸ்டுக்கு வீட்டை செட் பண்ண முடியும். ஜஸ்ட் ஃபோர் டேய்ஸ் தான். நீங்க வொரி பண்ணிக்காதீங்க. அவளோட பொறுப்பு இனி என்னோடது!” அமிர் சொன்னதை கேட்டவருக்கு மனதிற்குள் சட்டென்று சந்தேகம் முளை விட்டது.

இவர்கள் இங்கே வசிக்கப் போவதை இவன் தெரிந்து கொண்டானா இல்லையா என மனதிற்குள் நினைத்தபடியே, நடேசனை பார்வையால் கேட்க, அவரோ பார்வையாலேயே சற்று பொறுக்கச் சொன்னார். 

“எப்படி உங்களை தனியா அனுப்புறது அமிர்? கல்யாணம் முடிச்சு மொத தடவையா நீங்க வீட்டுக்கு போறப்போ பெரியவங்க, உங்க கூட வராம எப்படி?” நடேசன் கேள்விக்கு, அமிர் காரமான பார்வை பார்க்க, லக்கியிடமிருந்து பதில் வந்தது.

“அங்கிள், அவர்தான் தெளிவா சொல்லிட்டாரே! நாலு நாள்தான்னு… வேலைக்கும் ஆட்கள் இருக்காங்க. நான் இருந்துப்பேன்!” பொறுப்பானவளாய் இடை புகுந்தாள்.

திருமணம் முடிந்த மறுநாளே எந்தவித குழப்பத்திற்கும் மனதை ஆட்படுத்திக் கொள்ள வேண்டாமென ரெங்கேஸ்வரனும் அரை மனதாக ஒத்துக் கொண்டார்.

“சரிம்மா, நீங்க ரெண்டு பேருமே ஒரே முடிவுல பேசும்போது எனக்கும் சந்தோசம்தான். ஆனா, வெளியே இருந்து பாக்கிறவங்க பல விதமா பேச ஆரம்பிச்சுடுவாங்க! உனக்கும் தனியா இருந்து பழக்கமில்லையேடா!” தந்தையின் கரிசனத்தில் மகள் உருகிப் போக, மருமகன் கொதித்துப் போனான்.  

‘இதை எல்லாம் யோசிக்காமலா மகளுக்கு திருமணத்தை முடித்தார்?’ மாமனாரின் மேல் கடுகடுப்பு ஏற ஆரம்பித்த முதல்நொடி அது.

“இவர் கூட இருக்கும் போது என்னால கண்டிப்பா சமாளிக்க முடியும்பா!” மகள் உறுதி கூறியும் தந்தையின் மனம் அத்தனை எளிதில் சம்மதித்து விடவில்லை.

“உன்னால முடியலன்னா ஒரு ஃபோன் பண்ணும்மா, நாங்க அங்க வந்துடுறோம்.” ரெங்கேஸ்வரன் கூற, நடேசனும் ஆமோதிப்பாய் தலையசைத்தார்.

‘அப்பப்பா சகிக்க முடியல இவரோட உருகலும் இவளோட சமாளிப்பும்… ஏன் பெத்தவங்க இல்லாம நாங்க எல்லாம் வாழாம, செத்தா போயிட்டோம்?’ மனதிற்குள் கடைந்த எள்ளலை, கோபத்தை சபை ஏற்றாமல் சமாளிக்க பெரும் பாடுபட்டான் அமிர்தசாகர்.

 

அதர்சென்று வாழாமை ஆற்ற  இனிதே

குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே

உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்

பெருமைபோற் பீடுடையது இல்.