சில்லென்ற தீப்பொறி – 7

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே

சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே

மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்

திருவுந்தீர் வின்றேல் இனிது.

 

சில்லென்ற தீப்பொறி – 7

வெண்ணிலாவில் விருந்து

அங்கு போவோம் பறந்து…

விண்ணின் மீனை தொடுத்து

சேலையாக உடுத்து…

தேகம் கொஞ்சம் நோகும் என்று

பூக்கள் எல்லாம் பாய் போட…

நம்மை பார்த்து காமன் தேசம்

ஜன்னல் சாத்தி வாயூற…

கன்னிக் கோயில் திறந்து

பூஜை செய்ய வா, ஹோய்…

 

பாடலும் இசையும் காதலின் நறுமணத்தை இரட்டிப்பாய் பரப்பி விட, லக்கீஸ்வரியின் முகம் நாணத்தில் முக்காடிட்டு கொண்டது.

தன்னால் தனியாக சமாளிக்க முடியும் என்ற துணிவில் அனைவரையும் தவிர்த்து விட்டு கணவனுடன் மேற்கொண்ட இந்த பயணம் லக்கீஸ்வரிக்கு முற்றிலும் புதிய அனுபவமே!

மதியத்திற்கு மேல் நேரம் நன்றாக இருக்கவே, வீட்டுப் பெரியவர்கள் மணமக்களை அனுப்பி வைத்திருந்தனர். திருமணம் முடிந்து முதன்முதலாக புகுந்த வீட்டிற்கு இருவர் மட்டுமே செல்லும் முதல் பயணம்.

ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்ப்பதாக முகத்தை திருப்பி, தன் கன்னச் சிவப்பை கணவன் கண்டிடா வண்ணம் மறைக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள். இதை கடைக்கண்ணால் ரசிக்காமல் இருந்தால் அவன் கணவன் அல்லவே!

தன்னவள் உடனிருக்கும் இந்த நிமிடங்களை பொக்கிசமாக மாற்ற நினைத்தே, காதல் மழையில் மனம் கரையும் பாடல்களை ஒலிக்க செய்தான் கள்ளன்

மனைவியின் உள்ளம் பூரித்த நாணச் சிரிப்பை உள்வாங்கியபடி பாடல் முடியும் வரை மிக மெதுவாக வாகனத்தை செலுத்தியவாறு அவளையே பார்த்திருந்தான் அமிர்தசாகர்.

க்ரீம் பச்சை நிற லெஹெங்காவில் சிவப்பு நிற நட்சத்திர பூக்கள் தெறித்திருக்க, பொன் நகைகளோடு கண்ணாடி வளையலும், மருதாணியிட்ட கைகளும் கலகலக்க கணவனின் உரிமையான பார்வையில் பூலோக தேவதையாகவே தெரிந்தாள் லக்கீஸ்வரி.

மல்லிகை வாசம் நிறைந்த பெண்ணின் கூந்தல், மன்னவனை நிலை கொள்ளாமல் சுண்டி இழுக்கவே,

‘ம்ஹூம்… இப்படியே போனா இன்னைக்கு வீடு போய் சேர முடியாது. அழகு ராட்சசி முகத்தை அந்த பக்கம் திருப்பிட்டு இப்படி சோதிக்கிறாளே!’ அமிர் உள்ளுக்குள் புலம்பியபடி இருக்க, அடுத்த பாடல் ஒலித்தது.

சின்னச் சின்ன வண்ணக் குயில்

கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா…

புரியாத ஆனந்தம்

புதிதாக ஆரம்பம்…

புரியாத ஆனந்தம்

புதிதாக ஆரம்பம்…

பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா…

பாடல் மாறியதும் லக்கி, கணவனை நேராய் பார்க்க, அவனும் என்னவென்று பார்வையால் விசாரித்தான்.

‘ஸப்பா… இன்னைக்கு முழுக்க பார்வையில கேள்வி கேட்டே என்னை ஒரு வழி பண்றான் சாச்சு!’ மனதிற்குள் செல்லமாக முணுமுணுத்துக் கொண்டே சன்னச் சிரிப்போடு தலை குனிந்து கொள்ள,

“ஃபீல் ஃப்ரீடா… முகத்தை கொஞ்சம் சாதரணமா வச்சுக்கோ மின்னி! இப்டியே நீ வெக்கப்பட்டு ஓரப்பார்வை பார்த்தா, அப்புறம் என் வண்டி வீடு போய் சேராது. நேரா ஹனிமூனுக்குதான் போகும்.” கணவன் உல்லாசமாய் கிண்டலடிக்க, இவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

மேனிக்குள் காற்று வந்து

மெல்லத்தான் ஆடக் கண்டேன்…

மங்கைக்குள் காதல் வெள்ளம்

கங்கை போல் ஓடக் கண்டேன்…

இன்பத்தின் எல்லையோ

இல்லையே இல்லையே…

அந்தியும் வந்ததால்

தொல்லையே தொல்லையே…

காலம் தோறும் கேட்க வேண்டும்

காலம் தோறும் கேட்க வேண்டும்

பருவமென்னும் கீர்த்தனம்

பாட பாடப்பாட…

காதலின் ஈர்ப்பு விசை பாடலில் எதிரொலிக்க சங்கோஜத்தில் நெளிய ஆரம்பித்தாள் லக்கி.

“கொஞ்சம் படபடப்பாவே இருக்கு. வேற கலெக்சன் மாத்துங்க சாச்சு! எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போயி பேசிக்கலாம்.” கொஞ்சலாய் இவள் கெஞ்சியதும் கணவனின் காதல் ஹார்மோன் ஜிவ்வென்று ஏறிப் போனது.

“அட்ராசக்கை, எதுவா இருந்தாலும்… இதுல மாற்றம் இல்லையே?” கள்ளச் சிரிப்போடு இவன் கேட்க,

லக்கியும், “ம்ம்… ம்ஹூம்…” என ஆம் இல்லையென்று பாதிக்குபாதி முழுங்கியபடி வெட்கத்தோடு தலையசைக்கவும்,

“அப்புறமென்ன, இப்ப பாரு!” என்றவன் காரினை அசுர வேகத்தில் அவள் பயப்பட வேண்டுமென்றே செலுத்த, சாலை வளைவுகளில் அவன் மீதே சரிய ஆரம்பித்தாள். காரில் அமரும் போதே, சீட் பெல்டினை போடாமல் அமர்ந்ததை எண்ணி நொந்தே போய்விட்டாள் லக்கி.

கார் சீட்டினை, டேஷ் போர்டை என எதை எதையோ அவள் வலது கை பிடிக்க முயற்சிக்க, வண்டியை மித வேகத்தில் குறைத்து சரியாக மனைவியின் வலது கையை தனது இடது கையால் சிறைபிடித்தான் அமிர்.

அவள் நிமிர்ந்து அவனை பார்க்கவும், “இப்படி உன் கையை பிடிக்க நான் என்னென்ன டிரிக்ஸ் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. ரொம்ப கேப் விடாம இப்படியே உக்காந்துட்டு வா!” என்றவன் அவளது கையில் தன் இதழை ஒற்றி விட்டு மனைவியை ரசித்தவாறு காரினை லாவகமாக செலுத்தி தங்களின் வீடு வந்து சேர்ந்தான்.

லக்கி அணிந்திருந்த அதே பச்சை நிறத்தில் சட்டையும் பட்டு வேட்டியுமாக, கணவன் மிடுக்காக இறங்கி நின்ற தோரணையை விழியகலாமல் மனைவி பார்த்து வைக்க,

“என்ன புதுப் பொண்ணே? இறங்க மனசு வரலையா… அப்படியே ஹனிமூனுக்கு கிளம்புற ஐடியால இருக்கியா?” கணவன் காதருகில் குனிந்து கிசுகிசுக்கவும் நடப்பிற்கு வந்து இறங்கினாள்.

“நம் வீட்டு டாடாசுமோவில் செல்லுங்கள்.” என்ற மாமனாரின் வற்புறுத்தலை நிராகரித்து விட்டு, தனது ஸ்காடோ ரேபிட்டில் மனைவியை அழைத்து வந்திருந்தான அமிர்.

‘ஓட்டுனரை அமர்த்துகிறேன்’ எனக் கூறியும் தனது வேலை, இன்ன பிற உதவாத காரணங்களை கூறி மாமனாரின் உதவியை தவிர்த்து விட்டான்.

ஏனோ மகளின் மீது அவர் காட்டும் கரிசனத்தை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

‘இப்படி குரலில் வெண்ணெய் குழைத்து பேசியே, அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியிருப்பார் போலும்.’ அமிரின் உள்மனமும் பொருமத் தொடங்கியிருந்தது 

நண்பகலில் கிளம்பியவர்கள் வயநாடு வந்து இறங்கும்போது முன்னிரவை எட்டியிருந்தது. வயநாடு பல அற்புதங்களை அழகாக தாங்கிக் கொண்டிருக்கும் சொர்க்க பூமி.

அதையே பிறப்பிடமாக கொண்ட அமிர்தசாகர், புது மனைவியுடன் தனது வீட்டிற்கு சென்று இறங்கவும் அங்கே எதிர்பாராத விதமாக ஆராவாரமான வரவேற்பு.

(மலையாளத்தை குத்தி குதறி எடுக்காமல் இனிவரும் உரையாடல்களை தமிழில் எழுதி விட்டேன். வாசகர்கள் மலையாளத்தில் சம்சாரிப்பதாக பாவித்துக் கொள்ளவும்.)

கேரளம் வந்து இறங்கியதும், பேச்சிலும் மூச்சிலும் மலையாளத்திற்கு கொடிபிடிக்கும் சுந்தர ஏட்டனாய் மாறி விட்டிருந்தான் அமிர்தசாகர்.

“உண்மையை சொல்லு அமிர், இந்த பொண்ணை கடத்திட்டு தானே வந்திருக்க?”

“என் மேல இவ்வளவு நம்பிக்கையா நீலு?”

பக்கத்து வீட்டுப் பெண் நீலு கிண்டல் பேசியவாறு ஆலம் சுற்ற,  பதிலுக்கு அமிரும் கேலியில் இறங்கினான்.

“சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு, அழகு பொக்கிஷத்தை களவாடிட்டு வந்திருக்க…” மற்றொரு பெண் லில்லியும் சேர்ந்து கொள்ள, லக்கியை வாஞ்சையுடன் கன்னம் தழுவி திருஷ்டி கழித்தவாறே ஆரத்தி எடுத்தனர் இரண்டு பெண்கள்.

“என் கழுத்துல கத்தி வைச்சு, இவளை என் தலையில கட்டிட்டாங்க, லில்லி!” சிரிக்காமல் கூறினான் அமிர்.

“இதுக்கப்புறமும் எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போற?” நீலு கேட்க,

“எனக்கும் நீ பதில் சொல்லியே ஆகணும் ஏட்டா. உனக்கு பாவம் பாக்கறதா இல்ல…” லில்லியும் களத்தில் இறங்க, அசரவில்லை அவன்.

இவர்கள் சம்சாரிப்பதை பார்த்து தலையும் புரியாமல் வாலும் புரியாமல், ‘தேமே’ என நின்று கொண்டிருந்தாள் லக்கி.

ஆலம் சுற்றுபவர் வம்பு பேசி வசூல் செய்வது வழக்கம். ஆனால் இங்கோ மாப்பிள்ளையை பங்கு போட்டுக் கொள்ளும் அளவிற்கு அல்லவா சண்டைக்கு நிற்கிறார்கள்!

கணவனும் இவர்களுக்கு சரிக்கு சரியாக நின்று வாயடித்துக் கொண்டிருக்கிறான். இதற்காகத்தானா  மாமனாரிடம் முகத்தை முழ நீளத்திற்கு முறுக்கிக் கொண்டு வந்தது?

சற்று முன்வரை கண்களால் காதல் மொழி பேசி உருகிக் குழைந்த பெண்ணின் மனதில் குழப்பம் வந்து மேலோங்கிட பொறாமை எட்டிப் பார்த்தது.  

லக்கியின் மனதிற்குள் கலவையான எண்ணங்கள் விரவியபடி இருக்க, பெண்களின் கேலிப்பேச்சும், அமிரின் சாகச பதில்களும் நிற்கவே இல்லை.

“ஒழுங்கா பதிலைச் சொல்லு அமிர். எங்ககிட்ட இருந்து தப்பிக்கலாம்னு மட்டும் நினைக்காதே!” பெண்கள் கோரசாக முற்றுகையிட,

“நான் சொன்னா சொன்னதுதான். இவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி, உங்களை எல்லாம் இப்படி கட்டிக்கிறேன்!” என்றவன் தோளணைத்து கன்னத்தில் முத்தமிட, கூச்சத்துடன் வாங்கிக் கொண்ட நீலுவின் வயது ஐம்பத்தியைந்து. 

“இதெல்லாம் உனக்கு ஓவரா இல்ல அம்மு? உன் ரேஞ்சுக்கு என்னை மாதிரி ஆளுங்களை மட்டும்தான் நீ கட்டிக்கணும்.” போட்டிக்கு வந்து நின்றாள் பத்து வயது சிறுமி.

“போதும்… போதும், ஆள் கையில் சிக்கினா கைமா பண்ணிடுவீங்களே! போங்க, அந்த பக்கம்.” விரட்டி அடித்தார் மாதவன் சேட்டன். பக்கத்து வீட்டு குடும்பத் தலைவர்.

“என்ன அமிர் பொண்டாட்டிய வாசல்லயே நிக்க வச்சு குடும்பம் நடத்தப் போறியா? உள்ளே கூட்டிட்டு போ தம்பி!” உரிமையுடன் அவர் கூற, தம்பதியரோடு அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

சற்றே பெரிதான அமிரின் சொந்த வீடு, மிக நேர்த்தியாக மணமக்களுக்கென்றே வெகு சிரத்தையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது. 

“இவங்க எல்லாம் இங்கே அக்கம் பக்கத்துல குடியிருக்கிறவங்க… என் அம்மா போன பிறகு, இவங்க ஒவ்வொருத்தரோட அன்பும் ஆகாரமும்தான், என்னை வளர்த்தது. ஒரு வேளைக்கு பல வீட்டு சாப்பாடு எனக்கு வரும்.” மலர்ந்த முகத்துடன் மனைவியிடம் அமிர் அறிமுகப்படுத்த அவர்களை நன்றியுடன் பார்த்தாள் லக்கி.

மலையாளம் பேசியோ, கேட்டோ பழக்கமில்லாத காரணத்தால் எப்படி தன்நன்றியை தெரியப்படுத்துவது எனப் புரியாமல் லக்கி கைகளை குவிக்க, விரைந்து வந்து அணைத்து கொண்டனர் பெண்கள்.

“எந்தா மோளே இது? இனி இந்த மாதிரி பண்ணினால் நடக்கிறதே வேறு…” செல்ல மிரட்டல் விடுத்து, அவளையும் தங்களுள் ஒருத்தியாக சேர்த்துக் கொண்டனர்.

லக்கியின் மனதிற்குள் தானாய் ஒரு திடம் வந்து அமர்ந்து கொண்டது. முற்றிலும் வேறு சூழ்நிலை வேற்று மனிதர்கள் என்கிற எண்ணமே தூரம் போய்விட, அவர்களுடன் சகஜமாய் நடந்து கொண்டாள்.

வீட்டின் முன்னால் இருபுறமும் பச்சைப் பசேல் புல்வெளியும் அங்கே ஆடிய மூங்கில் ஊஞ்சலுடன் கூடிய பெரிய மரமும், அதையொட்டிய அடுத்தடுத்த வீடுகளும் என பார்வைக்கு குளுமையும் பசுமையும் சேர்த்தன.

வீட்டிற்குள் நுழைந்ததும் விளக்கேற்றி விட்டு, இருவரும் வீட்டின் பசுமை வெளிக்கு வர, அப்போதைய விருந்தோம்பல் உற்சாக கேளிக்கைகள் ஆரம்பமாயின.

எந்நேரமும் கடுகடுப்பை சுமந்து கொண்டு திரியும் அமிரும் வம்பு வளர்த்து கேலி பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து லக்கியும் ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.

அலைபேசியின் மூலம் மனைவியை அழைத்து வருவதை அமிர் தெரிவித்திருக்க, அவன் மீது அக்கறை கொண்ட நண்பர்களின் குடும்பம் தங்களின் மகிழ்வினை தெரிவிக்கும் பொருட்டே விருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.  

“இங்கே இருக்குற ஒரு வாரமும், தினம் ஒரு வீட்டுக்கு விருந்துக்கு வந்துடுங்க அமிர்!” மாதவன் கூறியதை அனைவரும் வலியுறுத்த, மணமக்களுக்கு சரியென்று தலையாட்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

கேளிக்கை கொண்டாட்டங்கள் நிறைவுற, உற்சாகத்துடன் தங்களை சுத்தபடுத்திக் கொண்டு வந்தவர்களை வரவேற்றது திருமண இரண்டாம் இரவு. 

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களின் அறையில் ஏசி குளிரையும் மீறி பூத்த சன்னமான வியர்வை, லக்கியின் உதட்டின் மீது மெல்லிய மீசை வரைந்துவிட, அதை கைகளால் துடைத்து கொண்டே சிரித்தான் அமிர்.

“போருக்கு வந்துருக்கியா மின்னி?” சீண்டலாய் கேட்டு நெற்றியில் முத்தம் பதிக்க, வெடுக்கென்று திரும்பி நின்று கொண்டாள் மனைவி.  

“இங்கேயும் முத்தம் கொடுடான்னா, கொடுத்துட்டு போறேன்.” அதிரடியாய் அவள் முதுகின் பரப்பளவில் அவன் முகம் பதிக்க, லக்கீஸ்வரிக்கு உள்ளும் புறமும் நடுங்கத் தொடங்கியது.

“ஐ’யாம் அட்மையர் யுவர் பியுட்டி!” கிசுகிசுப்பாய் பிதற்றியவனின் மோவாய், அவள் கன்னத்தை தீண்ட அவளின் தேகத்தில் சுரீரென சிலிர்ப்பு ஓடியது.

திடமிழந்து தடுமாறியவள், பற்றிக் கொள்வதற்கு ஏதேனும் கிடைக்குமா என படபடத்தாள். அவளின் தவிப்பினை உணர்ந்து தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டவன், “சோ வீக்!” மோகத்துடன் கிண்டலடிக்க,

“ம்ஹூம்…” பாவனையுடன் இவள் மறுக்க,

“அப்படியா?” ஆச்சரியபட்டவனின் பார்வை, மனைவியை உச்சி முதல் பாதம் வரை அளந்ததில் வர்ணிக்க கூட நேரமில்லை அவனுக்கு.

காதலும் காமமும் செய்த மாயாஜாலத்தில், நரம்பும் ரத்தமும் சூடேறியதில் அவனது கவனமெல்லாம் வேறு ஏதோ ஆராய்ச்சியில் இறங்கியது.

அணிந்த ஆடைகளும் அலங்கரித்த மலர்களும் ஆணின் வேகத்தால் அவதிப்பட்டு இல்லற உறவினை தெரியவைக்க, கிறக்கத்துடன் மௌனமாய் பாடம் படித்தாள் பெண்.

கனவுலகில் மிதப்பது போல் ஏதோதோ சொல்லிக் கொண்டே அவளோடு மோகத்தில் முக்குளித்தவன், தான் விரும்பியதை அடைந்த நிறைவுடன் அசதியில் புரண்டு படுத்தான்.

உழைத்ததின் களைப்பில் ஆணிற்கும் சுக அயர்வில் பெண்ணிற்கும் மெல்ல இமைதட்ட, நித்திராதேவியின் வலுவான ஆட்சிக்குள் அயர்ந்தனர்.

மறுநாள் அவர்களின் விடியல் மதியம் ஒருமணியை தாண்டி இருந்தாலும், விழிக்கவும் முடியாமல் அத்தனை களைப்பு ஏறிட்டது இருவருக்கும்.

“சாச்சு, பசிக்குதுடா… ஏதாவது சாப்பிட கொண்டு வந்து கொடேன்!” கணவனின் முதுகை தலையணையாக்கி கண்மூடியபடி பேசினாள் லக்கி.

“போய் பிரஷ் பண்ணிட்டு வா, மின்னி… ரெடி பண்றேன்!” அவனும் அவ்வாறே கண்மூடி பதில் கூற,

“அனிமல்ஸ் எல்லாம் பிரஷ் பண்ணுதா மேன்? இன்னைக்கு ஒருநாள் அந்த லிஸ்டுல சேர்ந்துப்போம். ப்ளீஸ்டா… வயிறு கபகபன்னு எரியுது.”

“ரூல்ஸ் இஸ் எ ரூல்ஸ்… பிரஷ் பண்ணிட்டு வா! முட்டைய வாயில உடைச்சு ஊத்துறேன். எரியுற வயித்துக்குள்ள போயி ஆம்லேட் ஆகட்டும்.” என்றவனை கோபம் தீரும் வரை மொத்தி விட்டு,

“உன் ரூல்ஸ் புண்ணாக்குல தீய வைக்க…” வார்த்தையை கடித்து துப்பிக்கொண்டே லக்கி குளியறைக்குள் செல்ல, அதற்கும் தடை விதித்தான் கணவன்.    

“இதென்ன பழக்கம், நீ மட்டும் தனியா குளிக்கிறது?” கேட்டுகொண்டே குளியறை கதவு தட்டப்பட, ‘அடுத்த சேட்டையை ஆரம்பிக்கிறனா, ஐயோ!’ என்றிருந்தது லக்கிக்கு.

இப்போதிருக்கும் அயர்ச்சிக்கே இரண்டு நாட்கள் மரக்கட்டை போல் தூங்க வேண்டும். இதில் அவனை குளியலறைக்குள் விடுவதாவது?

குளித்து முடித்து நைட்டிக்குள் நுழைந்து வெளியே வருவதற்குள் மீண்டும் நான்கைந்து முறை கதவினை தட்டி, தனது சேட்டையை தொடர்ந்தான்.

வெளியே வந்தவளை தன் அணைப்புக்குள் நிறுத்தி சோப்பு வாசனையை நாசிக்குள் இழுத்தவன்,

“நீலு ஆன்ட்டி, லன்ஞ், சூப் எல்லாம் கேரியர்ல வச்சுட்டு போயிருக்காங்க. வெளியே எடுத்து வை… குளிச்சுட்டு வந்துடறேன்.” கண்சிமிட்டு விட்டு செல்ல,

“என்னது, எடுத்து வைக்கணுமா? இதெல்லாம் எனக்கு தெரியாது சாச்சு!” குளியலறையின் வெளியில் இருந்தே கத்தினாள் லக்கி.

“பிளேட், ஸ்பூன் எல்லாமே கிட்சன் ஸ்டாண்ட்ல இருக்கு மின்னி… ஈசியா எடுத்து வைக்கலாம்.” கண்டிப்பாய் கூறி விட, மறுக்க முடியவில்லை.

தேடித்தேடி துழாவும் போதே அமிர் வந்து விட, “இதுக்கு இவ்வளவு நேரமா?” கேட்டவாறே நொடியில் அனைத்தையும் உணவு மேஜையில் கொண்டு போய் வைத்தான்.

“சீக்கிரம் சமைக்க கத்துக்கோ மின்னி!” உண்ணும் போதே உத்தரவுகளை போட ஆரம்பித்தான்.

“எதுக்கு?”

“வீட்டு சமையலுக்கு நாக்கு செத்து போய் கிடக்குடி! சிம்பிளா சீரகசம்பா சாதம், மிளகு ரசம், மீன் வறுவல், கோழி குருமா, மட்டன் சுக்கா வச்சு குடுத்தாலே போதும் எனக்கு.” அமிர் தனது விருப்ப மெனுவினை கூற,

“அதுக்கென்ன அசத்திடுவோம்… கமலாம்மா இருக்காங்களே?” தைரியமாக வாக்கு கொடுத்தாள் லக்கி.

“என் பொண்டாட்டி கைப்பக்குவத்துல மட்டுமே சாப்பிட ஆசைபடுறேன். சாக்கு போக்கு சொல்லாம ஒவ்வொன்னா கத்துக்கிற வழியப் பாரு!” கறாராய் கூறியவன், அன்றைய மாலைநேரமே மசாலா டீயின் செய்முறை கூறி தயாரிக்க வைத்தான்.

சிங்கிள் டீயை வடித்து முடித்தவள், மலையை புரட்டி போட்டவளாய் சோர்ந்து போய் அமர்ந்திருக்க,

“நாளைக்கு கட்லெட் செய்யலாமா மின்னி?” அடுத்த குக்கரி கிளாசிற்கு நேரம் குறித்தான் அமிர்.

அவனது கேள்வியில் அதிர்ந்து விழித்தவள், “உன் மின்னி பாவமில்லையா சாச்சு? கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிறேனே… ப்ளீஸ்!” பாவமாய் கெஞ்சும் போது, அவனால் ஒன்றும் கூற முடியவில்லை.

“நெக்ஸ்ட் மன்ந்த் உன்னோட திறமையை நிரூபிக்கிற, ஓகே?” விடாக்கண்டானாய் கேட்க,

இவளும், “ஓகே!” என்று கட்டை விரலை உயர்த்தினாள். ஆனால் மனமெங்கும் மாய பூதமொன்று கண்ணை உருட்டி பயம் காட்டுவதை போலவே உணர்ந்தாள்.

தொடர்ந்த மூன்று நாட்கள் இரவும், பகலும் என்ற கணக்கின்றி ஊர் சுற்றியும் காதலில் திளைத்தும் பொழுதைக் கழித்தனர். சொந்த வீட்டில் தேனிலவு கொண்டாடினர்.

அமிர் தனது அலுவலக வேலையை கவனிக்கும் நேரத்தில், நீலு லில்லியிடம் மலையாளம் கற்றுக் கொண்டாள் லக்கி. சுற்று வேலைக்கென்று வேலையாளும், அண்டை வீடுகளில் விருந்தோம்பலும் அவர்களின் தினசரியை வளமையாக்கின.

மறந்தும் தந்தையின் நினைவில் மனைவியை வாட விடவில்லை அமிர்தசாகர். தனது அளவில்லா காதலில், அன்பான கண்டிப்பில், அனுசரனையான பேச்சில் மனைவியின் பார்வை தன் மீது மட்டுமே நிலைக்கும்படி பார்த்துக் கொண்டான்.

நான்காம் நாள் வீட்டை விஸ்தரிப்பதற்காக, என்ஜினியரை வரவழைத்து பேச, அப்போது ஆரம்பமானது இவர்களின் பனிப்போர்.

“இப்ப எதுக்காக ஆல்ட்ரேஷன் செய்றீங்க சாச்சு?” புரியாமல் லக்கி கேட்க,

“கொஞ்ச நாளுக்கு மட்டுமே இந்த அரேஞ்ச்மென்ட்ஸ் மின்னி. அடுத்து நாம வேற இடத்துல ஷிஃப்ட் ஆகிடலாம்.” புன்னைகயுடன் கூறினான்.

நான்கு நாட்களாக முகம் சுளிக்காமல் தன்னுடன் இருக்கும் மனைவியை மெச்சுதலாய் பார்த்தான் அமிர். வசதி வாய்ப்புகள் போதவில்லை, சாப்பாடு ருசிக்கவில்லை, இவைதான் வேண்டுமென எவ்வித நிர்பந்தமும் செய்யாமல் தன்னோடு ஒட்டி உறவாடிய மனைவியை அவ்வளவு பிடித்துப் போயிருந்தது ஆசை கணவனுக்கு.

அதற்காகவே அவளை எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று மனம் ஆணையிட, உடனடியாக காரியத்தில் இறங்கி விட்டான் கணவன்.

“எதுக்கு வேற இடம் போகணும்?” புரியாமல் மீண்டும் அதே கேள்வியை லக்கி கேட்க,  

“இந்த வீட்டுல உனக்கு வசதி பத்தாதுடா! எல்லா பெசிலிட்டியும் இருக்கற வீட்டை பார்த்து செட்டில் ஆகுற வரைக்கும் இந்த அரேன்ஞ்மென்ட்ஸ் பண்ணிக்கலாம்.” பொறுமையாக விளக்கினான் அமிர்.

“இதுவும் எனக்கு தேவை இல்ல சாச்சு!” மறுப்பாய் பேசியவளை பெருமையுடன் பார்த்தான் அமிர். இத்தனை அனுசரித்து செல்பவளா தன் மனைவி என்ற பூரிப்பு வந்திருந்தது.

“எனக்காக, நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கும் போது உனக்காக, நான் இதை கூட செய்யக்கூடாதா மின்னி?” கனிவாய் கூறியவனை காதலாய் பார்த்தாள் மனைவி.

“நீங்க எல்லாமே மறந்துட்டீங்களா? இவரை அனுப்பிட்டு வாங்க, நான் சொல்றேன்.” என்றவள் தானாகவே என்ஜினியரிடம் இப்போதைக்கு வேண்டாமென பேசி, நன்றி கூறி அனுப்பி வைத்தாள்.

“இந்த நாலு நாள்தானே… அப்புறம் எப்போ இங்கே வரப் போறோமோ தெரியாது? அதுக்கு ஏன் செலவு பண்ணிட்டு இருக்கணும்?” லக்கி வரிசையாக சொல்லிக்கொண்டே வர, புரியாமல் விழித்தான் அமிர்.

“அப்புறம் எப்போன்னா… புரியலடி நீ சொல்றது?”

“சரியான ஞாபகமறதி கேஸா நீங்க? நாம, நம்ம வீட்டுல அப்பா கூடத்தானே இருக்கப் போறோம். இங்கே வர வேண்டிய வேலையே இல்லையே… பின்ன எதுக்கு இந்த ஏற்பாடெல்லாம்?” அவள் சொல்லச் சொல்ல, அமிரின் கண்களும் மூளையும் கூர்மையடைந்தது.

“உங்க வீட்டுல, நாம வாழப்போறதா யார் சொன்னா?” கேட்டவனின் குரலில் உஷ்ணம் எட்டிப் பார்க்க, சட்டென்று நிதானித்தாள் லக்கி.

“இதுக்கு சம்மதிச்ச பிறகுதானே நம்ம கல்யாணமே நடந்தது, மறந்துட்டீங்களா சாகர்?” மனைவியின் அழைப்பில் அந்நியத்தன்மை வர முழுதாய் வெகுண்டு போனான் அமிர்.

“யார் சொல்லி, யார் சம்மதிச்சு, யார் கல்யாணம் நடந்தது? முழுசா புரியுற மாதிரி சொல்லு… வீணா கோபத்தை கிளறாதே?” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்ப, திக்கித் திணறி இருவரின் தந்தைகள் பேசிக் கொண்டதையும் அதற்கு அவன் ஒப்புக் கொண்டதாக சித்தப்பா நடேசன் கூறியதையும் விளக்கினாள் லக்கீஸ்வரி.

மனைவியின் ஒவ்வொரு வார்த்தையும் கணவனை தணலில் நிறுத்தி வைத்தாலும் அவனின் மனம் இதெல்லாம் பொய்யாக இருக்க வேண்டுமென்ற நப்பாசை கொண்டது.

தன்னை சாந்தப்படுத்திக் கொள்வதற்காகவே, “அப்படி எல்லாம் பேசியிருக்க மாட்டாங்க மின்னி. உன்னை யாரோ நல்லா குழப்பி விட்டுருக்காங்க. நான்.. நான், சித்தப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன்.” ஆறுதலாய் அவளை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு நடேசனுக்கு அழைத்தான்.

அதோ இதோ என்று எதிர்பார்த்த பூதம் வெளியே வந்துவிட, நடேசன் அனைத்தையும் மகனிடம் விளக்கி விட்டார். “நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்புறம்தான், உங்கப்பா இந்த விஷயத்தை எனக்கு தெரியபடுத்தினார் அமிர். உனக்கும் சொல்லி இருப்பார்ன்னு நினைச்சிருந்தேன்.

ஆனா, அவர் எதுவுமே சொல்லாம போயிருக்கார்னு உன்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசும் போதுதான் தெரிஞ்சதுப்பா. ரெங்கன் அண்ணனும் அந்நியம் கிடையாது. சின்ன வயசுல கொஞ்சநாள் நீ, அவங்க வீட்டுல வளர்ந்தவன் தானே? உன் அப்பாவா அவரை நினைச்சு அங்கேயே இருக்கலாம் அமிர். எல்லாம் உன் கையிலதான் இருக்கு.”

அறிவுரையும் தெளிவுரையும் கூறிய சித்தப்பா எதிரில் இருந்திருந்தால் அமிரின் பார்வையில் பஸ்பமாகி இருப்பார். அத்தனை கோபம், ஆவேசம், ஆக்ரோஷம் எல்லாம் கலவையாகி அவனை கொதிநிலையில் நிற்க வைத்தது.

“யார் என்ன பேசியிருந்தாலும் ஏன், எழுத்து மூலமா ஒப்பந்தமே போட்டிருந்தாலும் சரி… என்கிட்டே கல்யாணம்னு மட்டும்தான் பேச்சு. அது நடந்து முடிஞ்சது. இனி என் வாழ்க்கை என்னிஷ்டம். யாருடைய பேச்சும் வாக்கும் என்னை கட்டுப்படுத்தாது.

ஒரு விருந்தாளியா, மாப்பிள்ளையா மட்டுமே மாமனார் வீட்டுல என்னோட பழக்க வழக்கம் இருக்கும். என் மனைவி என்கூட, நான் எங்கே இருக்கேனோ அங்கேதான் இருப்பா. இதுக்கு ரெங்கன் அங்கிள் சரின்னு சொன்னா அடுத்த ரெண்டு நாள் அங்கே வந்து தங்குறோம். இல்லன்னா என் பொண்டாட்டி கூட நான் இங்கேயே இருக்கேன்.” கோபத்தில் வார்த்தைகளால் அமிர் விளாசத் தொடங்க, அதிர்ந்து போனார் நடேசன்.    

“என்ன பேசுற அமிர்? ஒத்த பொண்ணை வச்சுட்டு அவரும் என்னதான் பண்ணுவாரு? யோசிச்சு பேசுப்பா!”

“நான் எங்கே, எப்படி வாழணும்னு முடிவு பண்ண நீங்க யாரு? நான் வேணும், என் உறவு வேணும்னு நினைக்கிறவங்க என் விருப்பத்துக்கு கட்டுப்பட்டுதான் ஆகணும். இதுல மனைவி மாமனார்னு எந்த பாரபட்சமும் கிடையாது.” என்றவன் மனைவியை ஓரப்பார்வை பார்க்க, அவளோ மூச்சை இழுத்துப் பிடித்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அரைமணி நேரப் பேச்சில் தன்னையும் கேளாமல், தனது பிறந்த வீட்டு உறவையே துச்சமென நினைத்து தூர எறிந்தவன், எவ்வாறு வாழ்க்கை முழுதும் கைகோர்த்து வரப் போகிறான் என்கிற பொல்லாத சந்தேகம் லக்கீஸ்வரியின் மனதில் முதன்முதலாய் எட்டிப் பார்த்தது.

 

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே

தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே

ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை

மானிடவர்க் கெல்லாம் இனிது.