சூரியநிலவு 13

அத்தியாயம் 13

சூர்யாஸ்!  தீபாவளி முடிந்திருந்தாலும்  கூட்டம் நிரம்பி வழிந்தது.  அன்று அந்த கடை முழுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கலகல பேச்சுக்களால் காதை அடைத்தது.

“இந்த டிசைன்ல,  வேற கலர் காமிங்க”

“இந்த கலர்ல வேற டிசைன் காமிங்க” என பெண்கள் ஒருபக்கம், புடவை பிரிவை புரட்டிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகளின் தாய்மார்கள், “இந்த டிசைன்ல கொஞ்சம் பெரிய சைஸ் காமிங்க.”

“மேடம் இந்த சைஸ்,  இந்த குழந்தைக்கு சரியா இருக்கும்.” என விற்பனையாளரின் பதிலில்.

“வளர்ற பிள்ளை, ஆறு மாசத்துல பத்தாம போய்டும். பெரிய சைஸே குடுங்க”  என ஒரு பக்கம் தாய்மார்கள் மறுத்துக்கொண்டிருந்தனர்.

ஒருபுறம் ஆண்கள், அரைமணி நேரத்தில்  தங்கள் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு, பெண்கள் எப்போது வருவார்கள் என பொறுமையற்று காத்திருந்தனர்.

இது எதுவும் மனதில் பதியாமல், சூர்யா தனது மடிக்கணினியை வெறித்துக்கொண்டிருந்தான்.

சென்னையில் நிலாவை, சந்தித்துவிட்டு கோவை திரும்பி மூன்று மாதம் கடந்திருந்தது. அவர்கள் துபாய் சென்றது வரை மட்டுமே அறியமுடிந்தது. அவர்கள் எங்கு சென்றார்கள், என்பதை பற்றி எந்த தகவலுமில்லை.

அவன் தொடர்பு கொண்ட துப்பறிவு நிறுவனத்திலிருந்து, ஆண்கள் மட்டும் மாறிமாறி வந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் வந்தாலும் குறுகிய காலத்தில் திரும்பச் சென்றுவிடுகின்றனர்.  இவன் தகவல் கிடைத்து, அங்கு செல்லும் முன், அவர்கள் திரும்பிப் பறந்திருப்பர்.

லண்டனிற்குச் செல்ல, நேரடி விமானம் இல்லாததால், இணைப்பு விமானத்தில் துபாய், மஸ்கட், குவைத் என மாறி மாறி செல்வதால், அவர்களை டிரேஸ் செய்ய முடியவில்லை.

எங்கு சென்றாலும் முட்டிக்கொண்டு நின்றது. எப்படி நிலாவை கண்டுபிடிக்கப் போகிறேன்? எப்படி அவர்களை பழிவாங்கப் போகிறேன்? என காதலுடன் வன்மமும் தலைவிரித்தாடியது.

மேகவர்ஷினியை தொடர்பு கொண்டான்.

மேகா அவன் நம்பரை பார்க்கவும்,’இந்தா வந்திருச்சுல. இவனை என்ன தான் செய்யுறது?’ என சலித்துக்கொண்டே 

“ஹலோ சீனியர் எப்படி இருக்கீங்க?” என அனைத்து பற்களையும் காட்டினாள்.

“ம் இருக்கேன்.  நிலா எங்க இருக்கா? அதை கேட்டா சொல்ல மாட்ட. எப்போ வருவா அதை சொல்லு?”

‘அவளுக்கு இருக்க பிரச்சனை போதாதென்று,  இவன் வேற இம்சையை கொடுக்கறானே. எத்தனை தடவைதான் சொல்லுறது. ஹய்யோ ஆண்டவா’ மனதில் சலித்துக்கொண்டே,

“இல்ல சீனியர்! அவ எங்க இருக்கா? எப்ப வருவா? எதுவும் எனக்கு தெரியாது. மெயில் மட்டும் அனுப்புவா.  ஆகாஷ், பிரதாப் மட்டும்தான் வந்துட்டு போவாங்க.”

அவனுக்கு கிடைத்த தகவல் தான், புதிதாக ஒன்றும் இல்லை.

‘ச்ச’ என மனம் சலித்து ஆத்திரம்கொண்டான். ”உனக்கு தெரிஞ்சாலும் சொல்லமாட்ட.  உன்னைய பத்தி தெரிஞ்சும் கேட்டேன் பாரு, என்னைய” என நிறுத்த,

“சீனியர் உங்க காலுல தான் இருக்கு” என சொல்லி தொடர்பை துண்டித்துவிட்டாள். இல்லை  என்றால் அவனிடம் வாங்கி கட்டிக்கொள்ள நேரிடுமே.

அவள் சொன்னதை, புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்தது அவனிற்கு . புரிந்ததும் திட்ட வாய் திறக்க, அந்தோ பரிதாபம் தொலைப்பேசி இணைப்பு எப்போதோ துண்டிக்க பட்டிருந்தது.’நீ என் கைல மாட்டாமயா போக போற. அப்ப உன்னை கவனிச்சுக்கிறேன்.’ என மனதில் கருவினான். ஆனாலும் முகத்தில் ஒரு புன்னகை வந்தமர்ந்து கொண்டது.

அவனுக்கு தெரியாதா, மேகா நிலாவின் மீது கொண்ட பாசத்தை பற்றி. நிலாவிற்காக ‘அவன் கொடுத்த சலுகையை. உறவை தூக்கி வீசினாலே மேகா’ அதை மறக்கமுடியுமா?  அந்த நாள் கண் முன் வந்தது. 

அவன் தன் கரங்களை தலைக்கு பின் கொடுத்து, சுழல் நாற்காலியில் சாய்ந்தமர்ந்து,  நினைவுகளை பின் நோக்கி, கடந்த காலத்திற்குள் செலுத்தினான்.

அதே நேரம் மேகவர்ஷினியும் கடந்த காலத்திற்குள், அவனுடன் பயணித்தாள். 

பெற்றோர்கள் இல்லாமல், ஆசிரமத்தில் வளர்ந்த பெண் மேகவர்ஷினி. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாள்.  ஒரு தொண்டு நிறுவனம் அவளது கல்லூரி கனவை நினைவாக்கியது.

அவள் கல்லூரி படிப்பை, விடுதியில் சேர்ந்து படிக்க சென்னையை அடைந்தாள்.  அவளது அறை தோழியாக அறிமுகமானவள் தான் மதுநிலா.

வசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும்,  அலட்டல் இல்லாமல் இயல்பாக இருந்த மதுவை பார்க்கவும், மிகவும் பிடித்து போக நட்பு கரம் நீட்டினாள்.

“ஹாய் நான் மேகவர்ஷினி. பேஷன் டிசைனிங் சேர்ந்திருக்கேன்.”  என தன் கரத்தை நீட்டினாள்.

கல்மிஷமில்லா புன்னகையுடன் பேசிய பெண்ணவளை, மதுவிற்கும் பிடித்துவிட்டது.

புன்னகை முகத்துடன்,”நான் மதுநிலா.  நானும் அதே கோர்ஸ் தான் சேர்ந்திருக்கேன்.”

இயற்கையிலே கொஞ்சம் சூட்டிகையான மேகா,”வாவ்! இப்ப தான் நிம்மதியா இருக்கு. எப்படிடா தனியா காலேஜ் போகப்போறேன்னு பயந்திட்டிருந்தேன்.”

“பயமா! எதுக்கு பயம்?” என மதுவின் கேள்விக்கு,

“நம்ம ஃபர்ஸ்ட் இயர் போறோம்ல ராகிங் இருக்கும்.  இரண்டு பேரா போகும்போது ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கலாம்ல.” என அசடு வழிந்தாள்.

அதில் சிரிப்பு வர மது சிரித்து  விட்டாள். 

“உனக்கு என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா.” என இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

அந்த சிரிப்பை  மாற்றிக்கொள்ளவே இல்லை. முதல் முறை மனம் விட்டு சிரித்தாள் மதுநிலா. அதை அறியாத மேகா அவளின் சிரிப்பை ரசித்திருந்தாள். அன்று முதல் அவர்களின் நட்பு இறுகி கொண்டே இருக்கிறது.

மறுநாள் காலை, அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர் தோழிகள்,  முதல் நாள் வகுப்பிற்கு.  

*************

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்,  தாங்கள் சீனியர் ஆகிவிட்ட கெத்துடன், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க தயாராகி கொண்டிருந்தனர். 

சூர்யாவின் நண்பர்கள்,”மச்சி இப்ப நம்ம  சீனியர் ஆகிடோம்.”

“போன வருஷம் நம்மள எப்படிலாம் வச்சு செஞ்சாங்க.  இந்த வருஷம் நம்ம புகுந்து விளையாடலாம்.” 

“ஆமாண்டா நம்ம பண்ணுற ராகிங்குல, காலே‌‌ஜ சும்மா அதிர விடுறோம்.” என ஆளாளுக்கு வருங்கால திட்டம் தீட்டினர். முதல் நாளே ஒரு பெண்ணிடம் பல்பு வாங்க போவது தெரியாமல்.

அப்போது சூர்யாவின் விழிகள், வாயிலை நோக்கி திரும்பியது.  இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து, மேகாவுடன் பேசி சிரித்தவாறு, தேவதையாக நுழைந்துகொண்டிருந்த பெண் அவனது விழிகளுக்கு விருந்தானது.  ஆணவன் மயங்கித்தான் போனான், பெண்ணவளிடம். 

தங்களின் பேச்சில் கலந்துகொள்ளாமல், எங்கோ பார்த்திருந்த சூர்யாவின் பார்வையை தொடர்ந்தது நண்பர்களின் பார்வையும்.  பெண்களை கண்டுவிட்ட அவர்கள்,

“ஏய் பொண்ணுங்களா.  இங்க வாங்க” என அழைத்திருந்தனர்.

‘வந்தவுடனே மாட்டிக்கிட்டோமே’ என பயந்த பெண்கள், அவர்களை நோக்கி சென்றனர். அவர்களருகில் வரவும்,”சீனியர பார்த்தா விஷ் பண்ணுறதில்ல”

துடுக்கான மேகா! அங்குமிங்கும் பார்ப்பதுபோல பாசாங்கு செய்ய,  கடுப்பான நண்பர்கள்,” எங்களைத்தான் சொன்னோம்.”

“அப்படியா சீனியர்,  நீங்க கூப்பிட்டு கேட்கவும்,  யாரையும் வர வழியில விஷ் பண்ணாம, மிஸ் பண்ணிட்டோமோன்னு நினச்சேன்.” துடுக்காக பதிலளித்தாள் மேகா.

அவளின் பதிலில் மது பயந்துவிட்டாள். அரண்ட பார்வையை மேகாவை நோக்கி வீசினாள். அதையும் ரசித்திருந்தான் சூர்யா. 

“காமெடி! அந்த பக்கம் போய் சிரிச்சுகலாமா?” சூர்யாவின் நண்பன் ஒருவன். 

“நாளைக்கு ரூம் போட்டு சிரிச்சாலும் பிரச்சனையில்லை. எனக்கு டபுள் ஓகே” என்றாள் சிரிக்காமல். 

அவள் பதிலில் சிரிப்பு வந்துவிட்டது சூர்யாவிற்கு. சிரிப்பை மறைத்துக்கொண்டு,

“சீனியர்ன்னு கொஞ்சம் கூட  பயமில்லை?” இப்போது தான் வாயைத் திறந்தான் சூர்யா. பார்வை மதுவை விட்டு இம்மிகூட விலகவில்லை.

அவன் பார்வையை உணர்ந்துகொண்ட, மேகாவின் மனதில் அபாயமணி அடித்தது. ‘இங்கயிருந்து சீக்கரம் கிளம்பனும்’ என முடிவெடுத்து, தணிந்து பேசினாள்.

“அப்படியில்ல சீனியர், தெரியாம பேசிட்டேன்.” என்றாள் இறங்கிய குரலில்.

இவ்வளவு நேரம் துடுக்காக பேசிக்கொண்டிருந்த, அவளின் இறங்கிய குரல், சூர்யாவை இளக்கியது. 

கொஞ்சம் தணிந்த சூர்யா,”சரி உங்க பெயரை சொல்லிட்டு போகலாம்” என்றான்.

விட்டால் போதும் என இருவரும் தங்கள் பெயரை கூறிவிட்டு செல்ல முற்பட,  அதை தடுத்த சூர்யா,”மேகா நீ நல்லா பேசுற, திருப்பி சரியான பதிலடி குடுக்கிற. ஆனால் இங்க கொஞ்சம் வாய் அடக்கம் தேவை.”

‘ம் வாய் அடக்கமான பொண்ணு சுடுகாட்டில கிடைக்கும்.’ என மனதில் கவுண்டர் கொடுத்து, வெளியே பவ்யமாய்,”சரி சீனியர்”  என பெரிய கும்பிடு போட்டு செல்ல முற்பட்டாள்.

“எங்க ஓடுற இன்னும் இருக்கு”

‘என்னது! இன்னமும் முடியலையா’ மனம் அதிர்ந்தாள் மேகா.  மது திருதிருன்னு முழித்து நின்றாள். சூர்யாவின் பார்வையை எப்படி மாற்றுவது என தெரியாமல்.

“நம்ம காலேஜ்ல ராகிங்க்கு அனுமதியில்லை.இருந்தாலும் சின்ன சின்னதா ஏதாவது செய்ய சொல்லுவாங்க. என் பெயரை சொல்லு விட்டுடுவாங்க”

“உங்க பெயர் என்ன?”  அவள் கேட்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவன்,

“சூர்யா! சூர்யதேவ்!” என்றான் கர்வமாக. மேகாவிடம் “உன்னோட துருதுரு பேச்சு எனக்கு பிடிச்சு இருக்கு. என்னை அண்ணான்னு கூப்பிடு” என மதுவை பார்த்துக்கொண்டே “உன் பிரண்டோட, அமைதியும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.” ரொம்ப என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறினான்.

உறவென்று, சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் இருந்த மேகா, அவனின் அண்ணாவில் பாசமாக அவனை பார்த்தாள். அவனின் அடுத்த வரியில் வெகுண்டு,”எனக்கு அண்ணாவே வேண்டாம்” என சொல்லிவிட்டு, மதுவின் கரத்தை பிடித்திழுத்து சென்றாள்.

தன்னை தவிர்த்து செல்லும் இருவரையும், அவனின் பார்வை ரசனையோடு தொடர்ந்தது.  பிறகு நண்பர்களின், கேலியில் மாட்டிக்கொண்டது வேறு கதை.

மனதளவில் ஒருவளை காதலியாகவும், இன்னொருவளை தங்கையாகவும் ஏற்று கொண்டான் சூர்யா. 

அதை அறியாத பெண்கள் சூர்யாவை திட்டிக்கொண்டே  வகுப்பை அடைந்தனர்.

இவர்கள் சேர்ந்த அதே பிரிவில், ஆராதனாவும் சேர்ந்திருந்தாள்.  அலங்காரத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அவள், வேறு பிரிவில் சேர்ந்தால் தான் ஆச்சரியம்.

இவர்கள் மூவருக்கும் பெரிய ஓட்டுதல் இல்லை,  எப்போதும் போல் முட்டிக்கொண்டிருந்தது.

வெற்றியும் அதே சென்னையிலிருந்தாலும் பெரிதாகப் பேசிக்கொண்டதில்லை.

நாட்கள் அதன் போக்கில்  சென்றது.

****************

மது! முதலாம் ஆண்டு முடிவிலிருக்கும்போது,  ஒருநாள் ஓவியாவின் நச்சரிப்பினால், சுமி குடும்பத்துடன் மதுவை பார்க்கக் கல்லூரிக்கு வந்திருந்தார்.

கல்லூரிக்குள் கைப்பேசி அனுமதி இல்லை, எனவே “மதுவை பார்க்க வேண்டும். யாரை தொடர்புகொள்ள வேண்டும்” என அங்கே சென்ற, மாணவனை அழைத்து விவரம் கேட்டார்.

சுமியை பார்த்த அந்த மாணவன் உறைந்து நின்றான்.  அவன் யாரை பார்க்கவே கூடாது என நினைத்தானோ, அந்த உருவம் கண்முன்னே.

“தம்பி மதுநிலா. ஃபர்ஸ்ட் இயர் பேஷன் டிசைனிங். அவளை பார்க்கணும். யாரை தொடர்புகொள்ள வேண்டும்?” என மீண்டும் கேட்டார்.

அவரின் கேள்வி, அவன் மூளையை விழிக்க வைத்தது.  மதுவிற்கு இவருக்கும் என்ன சம்மந்தம். அவன் பார்வை கேள்வியாக அவர்மீது பதிய,”மது என்னோட பொண்ணு தான்”

 அவர் பதிலில் மனம் சுக்குநூறானது. தான் காதலிக்கும் பெண், தான் வெறுக்கும் ஒருவரின் மகள். இதை தாங்கி கொள்ளவே முடியவில்லை அவனால்.

அவளை அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டுச் சென்ற அவன், மது வரும் வரை மறைவாக நின்று, இவர்களை கவனித்திருந்தான். அப்போது ஒரு இளைஞன் அவர்களுடன் இணைந்து கொண்டான். மதுவும் மேகாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.

மது! மேகாவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தாள்.  மது குடும்பத்திலுள்ளவர்களை மேகாவிற்கு அறிமுகப்படுத்தும்போது மீதியுள்ளவர்களைத் தெரிந்து கொண்டான்.

வெற்றியை அறிமுகப்படுத்தும்போது,”இது வெற்றிச்செல்வன். அத்தைபையன். இங்க சென்னையில் தான் பி.ஈ. கடைசி வருஷம் படிக்கறாங்க” என கூறினாள்.

 உடனே கற்பகம்,”என்ன குட்டிமா, அத்தைபையன்னு சொல்லுற.  நான் கட்டிக்கப்போற பையன்னு சொல்லு” என்றார்.

அதை கேட்டுக்கொண்டிருந்த சூர்யாவிற்கு பூமி சுற்றுவது நின்றுவிட்டது.

ஆம்! இவர்களை கவனித்திருக்கும் மாணவன், யாரோவல்ல சூர்யா என்கிற சூர்யதேவ்.

அவன் கோபம், சுமித்ராவின் மேல் எதற்கு என்பதை பின் வரும் பதிவுகளில் தெரிந்துகொள்ளாம்.

மதுவின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ள, காதை கூர்தீட்டிக் காத்திருந்தான். மதுவின் பதில் மௌனம் மட்டுமே. ‘ஆம்’ என்றும் சொல்லவில்லை ‘இல்லை’ என்றும் சொல்லவில்லை.

வெற்றியின் முகத்தை ஆராய்ந்தான்.  அதில் காதலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. நிம்மதி மூச்சை விட்டுக்கொண்டு, ‘அடுத்து என செய்ய வேண்டும்’ என்ற திட்டத்தை வகுக்கத் தொடங்கிவிட்டான்.

அது தெரியாத மது, தன் கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு, மேகாவையும் அழைத்துக்கொண்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டாள்.

ஆசிரமத்தில், பலதர மக்களைச் சந்தித்த அனுபவம்,  மேகாவால் ஒரே பார்வையில், மதுவின் குடும்ப நிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மதுவின் பெற்றோருக்கு அவள்மீது பாசமுண்டு,  ஆனால் ஒரு ஒட்டுதலில்லை.

அவளின் அத்தை, மாமாவிற்கு மதுவை மிகவும் பிடிக்கும்,  காலம் முழுவதும் தங்களுடனே வைத்துக்கொள்ளும் அளவு.

வெற்றியின் கண்களில், தன்னவள் என்ற ஆர்வமான காதல் பார்வை துளிகூட இல்லை. மேகா தான் சூர்யாவின் காதல் பார்வையை கண்டிருக்கிறாளே.

மது சொல்லாத விஷயம் தான் கேட்கக் கூடாது என அவள் கேட்கவில்லை. மேகாவின் இந்தக் குணம் மதுவை அதிகம் கவர்ந்தது.  அதனால் அவளுடன் கொஞ்சம் மனம் விட்டுப் பேசினாள்.