சூரியநிலவு 14

அத்தியாயம் 14

சூர்யா! தன் விடுமுறை நாட்களில், நன்றாக சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.  சுமித்ராவின் மீது, அவனுக்கு அதீத வெறுப்பு இருந்தாலும், மது அவனிற்கு வேண்டும். எக்காரணம் கொண்டும் விரும்பிய பெண்ணை இழக்க அவன் தயாராக இல்லை.

மதுவையும் அடைந்து, சுமித்ராவையும் பழிவாங்க திட்டம் தீட்டி விட்டான். அதற்கு மதுவும் அவனை காதலிக்க வேண்டும்.’நீ இல்லை என்றால் நான் இல்லை’ என்ற அளவிற்கு உயிர் உருக காதலிக்க வேண்டும்.

அதற்கு முதல் படியாக, அவளிடம் தன் காதலை நேரடியாக வெளிப்படுத்த கிளம்பிவிட்டான்.

சூர்யாவின் மூன்றாம் ஆண்டு, கல்லூரியின் முதல் நாள்.

இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கும், மதுநிலாவின் வரவிற்காக காத்திருந்தான்.  அவன் எதிர்பார்த்தபடி, மேகாவும் மதுவும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தார்கள்.

அதிரடியாக, அவர்கள் முன் போய் நின்றான். திடீரென ஒரு உருவம், வழி மறைக்கவும் பயந்த பெண்கள், இரண்டடி பின்னால் வைத்தனர். பயத்தில் நெஞ்சடைத்தது.

அடைத்த நெஞ்சத்தை, தன் கரத்தால் அழுத்தி பிடித்து கொண்ட மேகா, அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவளின் முறைப்பு, அவனிற்கு குழந்தை முறைப்பது போல் இருந்திருக்க வேண்டும்.  அதை தூசிபோல் ஊதிவிட்டு,

“என்ன லுக்கு வேண்டி இருக்கு?” அவளை  சீண்டினான்.

“இப்படித்தான் இரண்டு பொண்ணுங்க, வரும்போது வழிமறித்து  நிக்கறதா?”

“இரண்டு பொண்ணுங்களா? உன்னை ஏன் பொண்ணு லிஸ்ட்ல சேர்க்கர.  நீ ஒரு குட்டிச்சாத்தான்.”

“நான் குட்டிச்சாத்தான்னா! அப்ப என்னோட அண்ணன், நீயும் குட்டிச்சாத்தான் தான்” என முறைத்தாள் மேகா.  அவளை வம்பிழுப்பது அவனுக்கு பிடித்திருந்தது.

அவனின் வசதியை பார்த்தும், அழகை பார்த்தும் பல பெண்கள், அவனைக் கவர முயன்றதுண்டு.  அந்த மாதிரி பெண்களை, தன் சுட்டெரிக்கும் பார்வையால் எட்ட நிறுத்திவிடுவான்.

மதுவின் அமைதியான புன்னகை முகம், அவனை எந்தளவு  கவர்ந்ததோ, அதே அளவு மேகாவின் கலகல பேச்சும் அவனைக் கவர்ந்தது.

உடன்பிறந்தோர் இல்லாமல், தனியாக வளர்ந்த சூர்யாவிற்கு, மேகாவின் உரிமை பேச்சு மிகவும் பிடித்தது.

 “சரி அப்படியே இருந்திட்டு போறேன். நீ கிளாஸ்க்கு கிளம்பு. நான் நிலா கிட்ட தனியா பேசணும்.”

இதுவரை பார்வையால் மட்டும் தொடர்ந்தவன். அவ்வப்போது மேகாவை வம்பிழுப்பதோட நிறுத்தி கொள்வான். எந்த தொந்தரவும் தந்ததில்லை.

திடீரென வந்து,’தன்னிடம் தனியாக பேசவேண்டும்’ என நிற்பவனை ‘என்ன செய்வது?’ என புரியாமல் பார்த்தாள் மதுநிலா. கூடவே அவனின் நிலாவென்ற அழைப்பும் சேர்ந்துகொள்ள, நிலா பெண் திகைத்து நின்றாள்.

அவளின் நிலையையறிந்த மேகா,”மதுட்ட உனக்கு என்ன பேச்சு? அதுவும் தனியா. நான் இருப்பேன் நீங்க சொல்லுங்க”

“நான் தனியா பேச வேண்டுமென்று சொன்னேன். நீ கிளாஸ்க்கு போ.” என விரட்டினான்.

“போக முடியாது என்ன பண்ணுவீங்க?” என மேகா அடமாக நின்றாள்.

சூர்யா அவளை முறைத்துநின்றான். இவர்கள் இப்போதைக்கு நிறுத்தமாட்டார்கள் என மதுநிலா,”மேகா நீ போ. நான் வரேன்” என்றாள்.

சூர்யாவை சந்தேகமாக, ஒரு பார்வை பார்த்துவிட்டு மதுவை பார்க்க. அந்தப் பார்வைக்குண்டான, அர்த்தமுணர்ந்த மது,’தன் விழி மூடி நான் பார்த்துக்கறேன்’ என்றாள்.

சம்மதமாக தலையசைத்த மேகா, செல்ல திரும்பினாள். அவளை தடுத்த சூர்யா, “ஏய் நில்லு, என்ன நீ திடிர்னு மரியாதையா கூப்பிடற, திடிர்னு மரியாதை காணாமப்போய்டுது”

“ம் உன்னை அண்ணனா பார்க்கும்போது மரியாதை காணாம போயிடுது. சீனியரா பார்க்கும்போது மரியாதை வந்திடுது.” என்ற நக்கல் குரலில் சொல்லிமுடித்தவள், திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.

‘நிலாவை சம்பந்தப்படுத்தி பேசும்போது சீனியர்’ ஆகிடறேன் என உணர்ந்த அவனிடம் புன்னகை வந்தது.  மதுநிலாவிடம் திரும்பினான்.

 “நிலா! நான் சுத்திவளைச்சு பேச விரும்பல. நேரடியா சொல்லுறேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்ன கல்யாணம் பண்ணி, காலம் பூராவும் உனக்கு புருஷனா வேலை பார்க்க விரும்புறேன். நீ என்ன சொல்லுற.”

எதிர்பார்த்தது தான், மதுவால் உடனே பதில் சொல்ல முடிந்தது,”இல்ல சீனியர். நான் உங்களை விரும்பல.”

“நீ விரும்புறேன்னுசொல்லல. நான் உன்னை விரும்புறேன். என்னைக் கல்யாணம் பண்ணிட்டு, அப்பறம் நீ என்னை லவ் பண்ணு.”

“இல்ல சீனியர் என்னால் யாரையும் லவ் பண்ண முடியாது”

 “ஏன்”

“என் அத்தை பையனை, எனக்கு மாப்பிள்ளையா ஏற்கனவே எங்கள் வீட்ல முடிவு பண்ணிட்டாங்க.”

“நீ அவனை விரும்புறியா”

‘இல்லை’ என தலையசைத்தாள்

“அப்பறம் ஏன் அவனை கட்டிக்கணும். நான் உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்கறேன்”

“எப்படினாலும் நான் உங்களை விரும்பலை.  என்னை போக விடுங்க”

“என்னோட பழகி பார்க்காமலேயே, என்னை பிடிக்காதுன்னு எப்படி சொல்லுற? இப்ப நாம பிரெண்டா பழகலாம். என்னை பிடிச்சா, அப்பறம் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைனா பிரெண்டாவே இருக்கலாம்.” அவள் மனதை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் நட்பு கரம் நீட்டினான்.

‘அவன் இதுவரை எந்த தொந்தரவும் தந்ததில்லை’ என்ற நம்பிக்கையில், அந்த நட்பு கரத்தை பற்றினாள்.

“நிலா ஒண்ணே ஒன்னு சொல்லிடறேன்.  அப்பறம் இதை பத்தி பேசமாட்டேன்” என அவளிடம் அனுமதி கேட்டான்.

‘சரி’ என்ற அவளின் பார்வையை உணர்ந்து,

“நான் சூர்யன் நீ நிலா. நம்ம பேர் கூட எவ்வளவு பொருத்தமா இருக்கு பாரு” என சொல்லி அங்கிருந்து மாயமாகிவிட்டான்.

அந்த பெயருக்கு பின்னால், இருக்கும் கதையை தெரிந்துகொண்டால், இவன் நிலை என்னவோ?

************

“கட் அன்ட் ரைட்டா, நீயும் வேண்டாம், உன்னோட பிரண்ட்ஷிப்பும் வேண்டாமென்று சொல்ல வேண்டியது தான. அவன் ஏதோ பிளே பண்றான். நீயும் அவன் விரிச்ச வலையில மாட்டிட்டு வந்திருக்க. உனக்கு அறிவில்லையா” என தங்கள்‌ விடுதி அறைக்கு வரவும், மேகா தான், மதுவை வெளுத்து வாங்கிவிட்டாள்.

“நம்ம மனசு ஸ்ட்ராங்கா இருந்தால். அந்த மன்மதனே வந்தாலும் அசைக்க முடியாது” என்ற மது, கடைசிவரை அவள் முடிவில் தெளிவாக இருந்தாள்.

அடுத்த இரண்டு வருடம்,  தினமும் சூர்யா அவளிற்காக, அவளுக்கு பிடித்த சிவப்பு ரோஜாவுடம் காத்திருப்பான். மதுவும் மறுக்காமல் வாங்கிக்கொள்வாள். மறுத்தாலும் வற்புறுத்தி வாங்க வைப்பான் என்பது வேற விஷயம்.

முதலில் சில தினங்கள், மேகாவிற்கும் சேர்த்து கொடுத்தவன், பிறகு எப்போது, எப்படி என்று இவர்களறியாமலே, அது ஒற்றை ரோஜாவாக மாறியது.  சில நேரம் அவள் உடையின் நிறத்திற்கு, பொருத்தமாக பூக்கொடுப்பான். சில நேரம் அவளின் உடைக்குப் பொருத்தமாக, அவனும் உடை அணிவான்.

அவனிற்கு ‘மதுவின் உடை நிறம் எப்படி தெரியும்?’ என்று பெண்கள் குழம்பி நிற்பர். அவர்களுக்கு என்ன தெரியும், இவளை பற்றி தெரிவதற்காகவே  ஒரு பிரெண்டை பிடித்துள்ளானென்று.

முதல் நாள் பேசியபின், நேரடியாக தன் காதலை பற்றி அவளிடம் பேசியதில்லை. ஆனால் தன் காத்திருப்பை அவளிற்கு உணர்த்துவான். நன்றாக படிக்கும் பெண்ணை, எந்தவிதத்திலும்,‘அவள் படிப்பு கெடும் அளவு நடக்க கூடாது.’ என்பதில் தெளிவாக இருந்தான்.

இப்படியே அவர்கள் படிப்பும் முடிந்தது. சூர்யாவின் நான்காம் ஆண்டு இன்ஜினியரிங் முடியும்போது, மதுவின் மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி. ஃபேஷன் டிசைனிங் முடிந்தது.

அவளின் கடைசி பரீட்சை முடியும் வரை, காத்திருந்து அவளை பிடித்தான்.

“நிலா! இரண்டு வருஷமா உன்னோட பதிலுக்காக காத்திருக்கேன். இப்ப படிப்பும் முடிஞ்சிருச்சு” என ஆவலாக, அவள் முகம் பார்த்தான்.

‘இல்லை’ சொல்ல சங்கடப்பட்ட மது, தயக்கமாக அவனை பார்த்தாள். அந்த பார்வையிலிருந்தே பதிலை உணர்ந்து கொண்ட சூர்யா, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்.

“இங்க பாரு நிலா, நீ வேண்டாமென்று சொல்லவும் ‘எங்கிருந்தாலும் வாழ்கனு’ போக, நான் ஒன்னும் முட்டாள் இல்லை.”

“நீங்க ஏன் சீனியர் இப்படி புரிஞ்சுக்காம பேசுறீங்க? எனக்கு கல்யாணம் முடிவாகிடுச்சு. அது ஏற்கனவே உங்களுக்கும் தெரியும்”

“உனக்கு அந்த உன் அத்தை பையன் அவன் பெயர் கூட ஏதோ” என நெற்றியில் தட்டி யோசித்தான்.”ஹான் வெற்றி! எஸ் வெற்றி,  உனக்கு அந்த வெற்றி மேலயோ,  இல்ல அந்த வெற்றிக்கு உன் மேலையோ லவ் இல்லை.  அப்பறம் ஏன் அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுற?” என்றான் எரிச்சலாக.

அவன் சொன்ன உண்மை அவளை சுட்டது.’காதல் இல்லாத கல்யாணம்’ மனம் ரணமாக எரிந்தது. அதை வெளிக்காட்டினால், இவனிடமிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து,

”காதலித்து தான் கல்யாணம் நடக்க வேண்டுமென்றால், உலகத்துல முக்கால்வாசி பேருக்கு கல்யாணமே நடக்காது. எது எப்படினாலும் என்னோட வாழ்க்கை வெற்றி கூடத்தான்” உறுதியாக கூறினாள்.

அதில் கோபம் கொண்ட சூர்யா. அவளின் உறுதியை குலைக்கும் வகையில்,”நீ அவனை விரும்புறேன்னு சொல்லியிருந்தால் கூட உன்னை விட்டிருப்பேனோ? என்னமோ? ஆனால் இப்ப சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ, நான் கட்டுற தாலி மட்டும் தான் உன் கழுத்துல ஏறும். அதையும் மீறிக் கல்யாணம் முடிவாச்சு… ‘திருமண மண்டபத்திலிருந்து மணப்பெண் மாயம்’ என்ற செய்தி மறுநாள் பேப்பர்ல வரும்” என கூறி விடை பெற்றவன்.

அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து, இப்போது மூன்று மாதங்களுக்கு முன்பு தான், பிரதாப், ஆகாஷுடன் நிலாவை மாலில் வைத்து நேரில் சந்தித்தான்.

இடைப்பட்ட நாளில் மேகாவின் மூலம், நிலா லண்டன் சென்றதை தெரிந்து கொண்டான். எப்படியும் அவள் திரும்பும் வரை திருமணமில்லை, என்று நிம்மதியாக அவன் வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.

அவ்வப்போது மேகாவிடம் நிலாவை பற்றி கேட்டு தெரிந்துகொள்வான்.  அவளை எந்த விதத்திலும் தொடர்பு கொண்டு, அவள் நிம்மதியை கெடுக்க நினைக்கவில்லை.

ஒருவேளை அவள் ‘வெற்றியை விரும்புகிறேன்’ என்று சொல்லியிருந்தால் இவன் விலகியிருக்கக்கூடும்.

மதுநிலாவை சுமித்ராவிடமிருந்து பிரித்து, அவருக்கு தண்டனை கொடுக்க நினைத்தானே தவிர, நிலாவைக் கஷ்டப்படுத்த நினைக்கவில்லை.

அவன் காதல் உண்மை.  ஆனால் அது அவன் கைசேருமா? 

நிலாவிடம் பேசினாலே சுழற்றியடிக்கும் பிரதாப்பை,  மீறி சூர்யாவால் நிலாவை அடையமுடியுமா? விடை காலத்தின் கைகளில்.

*********************

ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனால் வெற்றி ஓவியாவின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை.  இது பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியது.

ஒரு பக்கம் இவர்கள் இப்படி ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், மதுவை பற்றி எந்த தகவலும் இல்லை. அவள் நலமாக இருக்கிறாளா? என்பதை கூட அறியமுடியவில்லை.

திருமணம் முடிந்த மூன்றாவது நாளே, வெற்றி தங்கள் நகைக்கடைக்கு சென்றுவிட்டான். ஓவியா அவளது பைனல் ப்ராஜெக்டில் மூழ்கிவிட்டாள்.

அவர்களின் கலகலப்பு, சந்தோசம் என அனைத்தும் தொலைந்திருந்தது. தேவையென்றால் மட்டுமே பேசுவார்கள்.

ஓவியா வெற்றியின் காதலிற்காக ஏங்க ஆரம்பித்தாள். 

வெற்றி ‘ஓவியாவின் வாழ்வை கெடுத்து விட்டேனோ?’ என்ற குற்ற உணர்வில் அவளிடம் நெருங்குவதில்லை.

ஓவியா தன் படிப்பு முடிந்த உடனே தன் தந்தையுடன் இணைந்து, அவர்கள் ஆட்டோமொபைல் ஷோரூம் செல்ல ஆரம்பித்துவிட்டாள்.

வெற்றி ஒரு பக்கம் ஓட, ஓவியா ஒரு பக்கம் ஓட, என அவர்கள் வாழ்க்கை இயந்திரம் போல் சென்றது. இதுவரை மதுவின் வாழ்வில் இருந்த வெறுமை, இப்போது இவர்களிடம் குடியேறியது. ‘வாழ்க்கை என்பது ஒரு பூமராங்’ அது திருப்பியடிக்க ஆரம்பித்திருந்தது.

வெற்றியின் காதலிற்காக ஏங்கும் ஓவியா, ‘இப்போது மது இருந்த நிலையில் இருக்கிறாள்.’ தன் துணையானவன், தன்னைவிட அடுத்தவரை அதிகம் நினைக்கும் போது, மனதின் வலியை உணர தொடங்கியுள்ளாள் இந்த பேதை பெண்.

எப்போதும் கையில் இருக்கும் வைரத்திற்கு மதிப்பு தெரிவதில்லை. அதே நிலை வெற்றிக்கு.

அவன் கைகளில் இருந்த மதுவின், மதிப்பு தெரியாமல் அவளை உதாசீனப்படுத்தி, ஓவியாவின் பின் சுற்றினான். இப்போது அவன் கரங்களில் இருக்கும், அவனின் அழகான வாழ்க்கையை உதாசீனப்படுத்தி, தொலைத்த பொருளை தேடியலைகிறான்.

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கும். தொலைத்த பொருள் திரும்ப கிடைக்குமா??

நிச்சயம் கிடைக்காது. காலம் அவன் தவறை உணர்த்தும்.

பெற்றோர்கள் இவர்களை இப்படியே விட்டால், அவர்கள் வாழ்வில் ஒன்று சேரமாட்டார்கள், என அவர்களை தேனிலவு அனுப்ப முடிவு செய்தனர்.

அதன் படி ஒரு வாரம், கொடைக்கானல் சென்று வர அணைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு, வெற்றியிடம் தெரிவித்தனர்.

வெற்றி! வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். அவனிடம் ஓவியாவை காட்டி சமாதானம் செய்தனர்.

“இங்க பாரு வெற்றி! ஓவியா இந்த அஞ்சு மாசமா வீடு, ஷோரூம் அப்படியே ஓடிக்கிட்டு இருக்கா. நீயும் அப்படியே இருக்க. இப்படியே ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சியை காமிச்சுட்டு இருந்தா. எங்களால் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.” என ராஜா நிலையை உணர்த்தினார்.

ஓவியாவின் சோர்வை கவனித்துக்கொண்டிருந்த வெற்றி, கொடைக்கானல் செல்ல சம்மதித்து, இதோ இப்போது போட்டிங் சென்று கொண்டிருக்கின்றனர்.

“அம்மு என்னை மன்னிச்சுடு. உன்னோட வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு குற்றஉணர்ச்சில, உன்கிட்ட சரியா பேசாம இருந்துட்டேன்”

“நீங்க கவலைபடாதிங்க. உங்க நிலைமை எனக்கு புரியுது. உங்க விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமா, என்னை உங்க வாழ்க்கைல இணைச்சுட்டாங்க. அதை ஏத்துக்க உங்களுக்கு நேரம் எடுக்கும். நான் காத்திருப்பேன்” என மறைமுகமாக தன் காதலையும் புரிதலையும் வெளிப்படுத்தினால்.

அதை புரிந்துகொண்டானா வெற்றி என்பது சந்தேகமே “தேங்க்ஸ் அம்மு.  நீ என் மேல கோவமா இருப்பேன்னு நினைச்சேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு” என அவள் கரம் பற்றி கொண்டான். 

 கொடைக்கானலை சுற்றியலைந்துவிட்டு, இரவு உணவை முடித்துக்கொண்டு, தாங்கள் தங்கியிருக்கும் காட்டேஜ் அறையை சென்றடைந்தனர். ரூமில் ஹீட்டர் வசதி இருந்தாலும் டிசம்பர் மாத குளிர் நடுங்க வைத்தது.

நடுஇரவில் இரண்டு கம்பளத்தையும், மீறி குளிர் எலும்பை தாக்கியது. ஓவியா நடுங்கி கொண்டிருந்தாள். அந்த நடுக்கத்தோடு கணவனை நெருங்கி படுத்தாள்.

அவளின் நெருக்கத்தில் வெற்றி முழித்துவிட்டான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில், குளிரினால் நடுங்குகிறாள் என்பதை புரிந்துகொண்டு, அவளை நெருங்கி இறுக அணைத்து கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் அந்த யூஸ் லெஸ்.

காலையில் கண்முழித்த ஓவியா, தான் எங்கோ அடைபட்டிருக்கிறோம் என பதறி எழுந்தாள். வெற்றியின் அணைப்பில் இருந்ததை உணர்ந்து, அவளின் முகம் வெட்கத்தால் சிவந்துவிட்டது. அவள் அசைவில் முழித்த வெற்றி, அவளின் முகசிவப்பை பார்த்து மீண்டும் தவறாக புரிந்துகொண்டு,”அம்மு ரொம்ப குளிருதா? ஃபேஸ் எல்லாம் சிவந்துபோச்சு.”

” அதுலாம் ஒண்ணுமில்லை” என, அவன் முகம் பார்க்க முடியாமல் குளியலறை ஓடிவிட்டாள். வெற்றியின் பார்வை அவளை வினோதமாக தொடர்ந்தது.

அங்கு இருந்த நாட்கள் மட்டுமில்லாமல், வீட்டிலும் ஓவியாவின் தூக்கம் வெற்றியின் அணைப்பிலே என்றானது.

கொடைக்கானலிலிருந்து திரும்பியிருந்த, அவர்களின் முகத்தில் இருந்த சந்தோஷமும், இலகு தன்மையும் பெற்றோர்களை நிம்மதி கொள்ளவைத்தது.

அதன்பிறகு வேற எந்த முன்னேற்றமும் அவர்கள் வாழ்வில் வரவில்லை.

*******************

இவர்கள் அனைவரின் வாழ்க்கை பாதையை மாற்ற, மதுநிலா பிரதாப்பின் கரம் கோர்த்து, சென்னையில் காலடி வைத்தாள் .

நிலாவிற்காக, விமான நிலையத்தில் காத்திருந்தான் ஆகாஷ், மேகவர்ஷினியுடன்.

சில மாதங்களுக்கு பின் சந்திக்கும், தோழியை அணைத்திருந்தாள் மேகவர்ஷினி.

நிலா வந்த செய்தி மதுரையையும் கோவையையும் சென்றடைந்தது.

மீண்டும் சந்திப்போம் நட்புக்களே