சூரியநிலவு 19

அத்தியாயம் 19

சூரியனிடம் ஊடல் கொண்டு, நிலவு தன் முகம் காட்ட மறுத்து ஒளிய, சூரியன் நிலவை தேடி அலைந்தது. அவன் வர, இவள் மறைய, அவன் மறைய இவள் வரவென்று வானில் ஒரு கண்ணாமூச்சி. 

பிரதாப் மற்றும் நிலாவின் வாழ்க்கையிலும், இதே கண்ணாமூச்சி ஆட்டம்தான், நடந்து கொண்டிருக்கிறது.

வெற்றி சென்றபிறகு நிலா, பிரதாப்பிடம் ஊடல் கொண்டு பேச மறுத்துவிட்டாள்.  அவனை பார்ப்பதையும் முடிந்தளவு தவிர்த்து கொண்டிருக்கிறாள். இப்போது பிரதாப்பின் நிலைதான் கவலைக்கிடமாக இருக்கிறது. 

அன்றைய கல்லூரி ஆண்டுவிழாவில் அவர்களுக்குள் நடந்த உரையாடல், சிலவற்றை தெரிந்து கொண்டு,”அப்ப அவனிடம் விட்ட சவாலிற்காக தான் நீ என்னிடம் பழகினாயா?”  என பொங்கிவிட்டாள்.

பிரதாப்பும் பேபி, சுவீட்டி, என் டார்லிங், செல்லம்மா, கண்ணம்மா என கெஞ்சி, கொஞ்சி பார்த்துவிட்டான். நிலா எந்த கொஞ்சல்களுக்கும் மசிவதாக இல்லை. 

அதனால் பிரதாப், பார்ப்பவர்கள் அனைவரையும் கடித்து கொண்டிருந்தான். அவனிடம் செல்லவே அனைவரும் அஞ்சி நடுங்கினர்.

இதே நிலை இரண்டு நாட்கள் தொடர, அதற்கு மேலும் பொறுக்க முடியாத பிரதாப், அன்று மாலை நான்கு மணியளவில் வீட்டை அடைந்தான். நிலாவை சமாதானம் செய்ய.

 நிலா சாவகாசமாக சோஃபாவில் அமர்ந்து, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். அதிலே கோபம் கொண்ட பிரதாப், விரைந்து சென்று தொலைக்காட்சியை அணைத்துவிட்டு இவளை முறைதான். 

நிலா! மீண்டும் அதை இயக்க முனைய,”உன்னை டி வி பார்க்க கூடாதுன்னு சொல்லியிருக்குல. அப்பறம் ஏன் அதையே பண்ணுற?” என முறைதான்.

“நான் என்னமோ பண்ணுறேன் உனக்கு என்ன அக்கறை. போடா” என்று தன் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றாள்.  அவளிற்கும் அவனுடன் பேசாதது மன வழியை அளித்தது.

இரண்டு நாட்களிற்குப் பின் பேசியிருக்கிறாள். அதில் கொஞ்சம் மகிழ்ந்துதான் போனான். 

அப்படியே தொடர்ந்து அவளை பேசவைக்க, அவளின் பின்னாலேயே சென்று,”சொல்லுறேன்ல ஏன் கண்டுக்காத மாதிரியே போற?”

“நான் ஏன் நீ சொல்றதை கேட்கணும்? சவாலிற்காக என்கூட பழகினவங்க, சொல்றதை எல்லாம் என்னால் கேட்க முடியாது.”

“நிலா பேபி நீ திரும்ப, திரும்ப இதையே சொல்லாதடா. உன்ன லண்டன்ல பார்த்தபோது இந்த வெற்றி லூசு என் ஞாபகத்தில்கூட இல்ல. நான் மதுநிலாவா மட்டும் தான் உன்னை பார்த்தேன். நீ என்னோட நிலா பேபி மட்டும் தான். பிளீஸ்டா குட்டிமா என்னை புரிஞ்சுக்கோ.” என உருகிக் கொண்டிருந்தான்.

அவனின் உருகலை மனதினுள் ரசித்தாலும், வெளியே கோபம் போல முகம் திருப்பினாள்.

“போ பேபி, உனக்கு என் மேல பாசமே இல்ல. நான் இவ்வளோ கெஞ்சுறேன். நீ கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டிங்கர” என முகம் வாடினான். 

அவன் முக வாடலை பார்த்து, இல்லாத கோபத்தை எங்கிருந்து பிடித்து வைக்க. தன் பொய் கோபத்தை கைவிட்டாள்.

“நான் உன் கூட பேசனும்னா ஒரு கண்டிஷன்” என்றாள் சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டே. 

எதைத் தின்றால், பித்தம் குறையும்  என்ற நிலையில் இருக்கும் பிரதாப், அவளின் ரகசிய சிரிப்பைக் கவனத்தில் கொள்ளவில்லை.

“என்ன பண்ண வேண்டும் பேபி, வானத்தை வில்லாக வலைக்கணுமா? கடல் நீரை குடிநீராக மாற்றனுமா?” என வசனத்தை அடித்துவிட்டான். 

அதில் சிரிப்பை அடக்க முடியாமல், அவனிற்கு முதுகை காட்டி நின்று கொண்டு,”இந்த சினிமா வசனமெல்லாம் பேச வேண்டாம். நான் கேட்கிறதை மட்டும் செய்.” 

முகம் தொங்கிவிட,”ம் என்ன செய்யனும்?”

“அது ஒன்றும் இல்லை, எனக்கு ஒரு பெரிய ஃபேமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கி தா.” என்றாள் ஒன்றும் அறியா பிள்ளைபோல.  

‘அவள் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும்’ என்ற முடிவிலிருந்த பிரதாப்பும்,

“உடனே போய் ஒரு பேக் என்ன, இரண்டு பேக் வாங்கிட்டு…” என சொல்ல ஆரம்பித்தவன், பின்பே அவளின் விளையாட்டு புரிய, பாதியில் தன் பேச்சை நிறுத்தி,

“பேபி உனக்கு வர வர சேட்டை ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு. இப்ப உன்னை என்ன பண்றேன் பாரு.” என அவளை துரத்த தொடங்கிவிட்டான்.

இதுவரை ஒளிந்து நின்று, அவர்கள் பேசுவதை பார்த்திருந்த அகஷும் மேகாவும், இப்போது குஷியாகி ஹைஃபை போட்டுக்கொண்டு, அவர்களுடன் விளையாட்டில் இணைந்து கொண்டனர்.

“உனக்கு ஐஸ்கிரீமே பிடிக்காது இதில் ஃபேமிலி பேக் வேணுமா? அதுவும் பெரிய பேக்.” என மூன்று பேரும், அவளை பிடிப்பது போல போக்கு காட்டி துரத்திக் கொண்டிருந்தனர். 

எங்கு திரும்பினாலும் சிரிப்பொலியும், மகிழ்ச்சியும் மட்டுமே அங்கே நிரம்பி இருந்தது. 

இவர்களின் ஒற்றுமையைப் பார்த்த கண்ணப்பா மற்றும் பார்வதி அம்மா,”முருகா! இவர்கள் எப்போதும் இதே ஒற்றுமையுடனும், சந்தோசத்துடன் இருக்க வேண்டும்.” என வேண்டுதல் வைத்தனர். 

ஆனால் அந்த முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையின் மேல் என்ன கோபத்திலிருந்தாரோ, உடனே அவர்கள் மனுவை நிராகரித்துவிட்டார். 

****************

இவர்கள் விளையாட்டில் மும்முரமாக இருக்கும்போது, ஒரு பெண், அங்கே நுழைந்தாள். அவள் தென்றலா? புயலா?

உதட்டில் புன்னகையுடனும், நெஞ்சத்தில் வஞ்சத்துடனும் மதுவை நோக்கினாள்.

அந்த புயல் யாரோ அல்ல, ஊட்டியில் மதுநிலாவிடம் நட்பு கரம் நீட்டி,”கடைசியில் இந்த பழம் புளிக்கும்” என்று சென்ற பெண். பிறகு சென்னை கல்லூரியிலும் மது, மேகாவுடன் முட்டிக்கொண்டிருந்த அதே ஆரா என்கிற ஆராதனா.

அவளை கண்ட அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. பிரதாப், ஆகாஷ் ஏன் அதிர்ச்சியாக வேண்டும்?

அவள் தான் பிரதாப்பின் அத்தை மகள். கருண்னின் சகோதரி, வெற்றியிடம் கூரிய, ‘பிரதாப் திருமணம் செய்ய இருக்கும் அத்தை பெண்’ என அனைவராலும் அறியப்பட்ட பெண்.

நல்ல சந்தோஷமான நேரத்தில், அபஸ்வரமாக அவளின் வரவு அனைவரின் மனதிலும் புயலை கிளப்பி இருந்தது. இதில் தெளிவாக இருந்தது யார்? என்றால் அது ஆரா மட்டுமே. 

மேகா,’இவ காலேஜ்ல தான் எங்ககூட முட்டிக்கொண்டே இருந்தால், இங்கயுமா’

ஆகாஷ்,’இப்ப தான் ப்ரது கொஞ்சம் சந்தோசமா இருக்கான். இவளை யாரு, அவன் நிம்மதியை கெடுக்க இங்க வர சொன்னது?’

ஆரா,’மது! நீ எப்பவும் என்னோட போட்டிக்கு தான் வருவயா? காலேஜ்ல இருந்து வீடுவரை?’

மது,’இவள் எப்படி இங்க வந்தாள்? இந்த வீட்டிற்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’

பிரதாப் மனதில், இறக்கும் தறுவாயில் மூச்சுவிடச் சிரமப்பட்டு, அன்னை தன்னிடம் வாங்கிய சத்தியம் வந்து போனது. 

அனைவரின் மனதிலும் பல எண்ண ஊர்வலங்கள். 

**************

அன்றைய கல்லூரி ஆண்டுவிழா தினம். பிரதாப், வெற்றியிடம் சவால் விட்ட நாள். 

ஆகாஷின் கைப்பேசிக்கு, புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மேடையை விட்டு சிறிது நகர்ந்து சென்று அழைப்பை ஏற்றான்.

அவர்கள் பெற்றோர்களின் வாகன எண் சொல்லி,”அந்த காரில் வந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டு ….. மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். அருகில் கிடந்த மொபைலில், கால் ஹிஸ்டரியில், கடைசியாக பேசிய எண்ணை வைத்து உங்களை அழைத்திருக்கிறோம்.” என எதிர்முனையில் பேசியவர் தெரிவித்தார். 

அதைக் கேட்டு ஆகாஷின் மூளை தற்காலிகமாய் வேலை நிறுத்தம் செய்தது. ‘பிரதாப்பின் பெற்றோர்களும், அந்த வாகனத்தில் பயணம் செய்தார்கள்’ என்பதையும் மறந்து, அவன் மருத்துவமனைக்கு விரைந்து சென்றான். பிரதாப்பையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை மறந்து.

பிரதாப்! தன் நிலா பெண்ணிடம் பேச ஆரம்பித்து, வெற்றியின் குறுக்கீட்டால் பேச்சை தொடர முடியாமல், ஆகாஷை தேடி கொண்டிருக்கும்போது, வெற்றி திமிராக பேச, அவனிடம் சவால் விட்டான். அடுத்தடுத்து விழுந்த இடியினால், வெற்றி நினைவு படுத்தும் வரை, அந்த சவாலையே பிரதாப் மறந்திருந்தான், என்பதே உண்மை. 

பிரதாப்! ஆகாஷை காணாமல் அவன் எண்ணிற்கு முயற்சிக்க, அது அடித்து கொண்டே இருந்தது.  இதுவரை ஆகாஷ் தன் அழைப்பை எடுக்காமல் இருந்ததில்லை. அதில் பயம் பிடித்துக்கொள்ள வீட்டு எண்ணிற்கு அழைத்தான். இடியாக இறங்கியது அந்த விபத்து செய்தி.

அவனும் மருத்துவமனையை நோக்கி விரைந்தான். அங்கே கூறப்பட்ட செய்தி,’ஆகாஷின் தாயும், பிரதாப்பின் தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆகாஷின் தந்தைக்குக் கால்களை நீக்கி விட்டனர். பிரதாப்பின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.’

“மாம்” என அன்னையைக் காண விரைந்தான்.

அவர் முகம் பிரகாசமாக,”கண்ணா வந்துட்டயா. எங்க உன்னை கடைசியா பார்க்காம போய்டுவேணான்னு, பயந்துட்டு இருந்தேன்.”

அவர் வாய்யை தன் கரம் கொண்டு மூடி,”அப்படி பேசாதீங்க மாம். எனக்கு உங்களை விட்டா யாரும் இல்லை” என கண்ணீர் விட்டான்.

“அழாத கண்ணா, நான் உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன். உனக்கு மகளா பிறப்பேன்.” என்று கஷ்டப்பட்டு பேசினார்.

பிரதாப் அன்னையின் கரம் பற்றி கண்ணீர் வடித்தான். ஆகாஷ் ஆறுதலாக அவன் தோளணைத்து நின்றான்.

“கண்ணா பாட்டி, தாத்தாவை பத்திரமா பார்த்துக்கோ. எனக்கு ஒரு சத்தியம் செஞ்சுக்கொடு. உன்னோட அத்தைப்பொண்ணு தான், நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்கிறது, எங்கள் ஆசை. அதை நீ தான் நிறைவேத்தனும்.” என மூச்சு திணற, திணற சொல்லி முடித்தார்.

அவன் நினைவில், அவனின் மனதை கவர்ந்த பிங்க் ரோஜாவின் முகம் மின்னி மறைந்தது, கூடவே வெற்றியிடம் தான் விட்ட சவாலும். தன் மனதை கல் ஆக்கிக்கொண்டு, அன்னை கேட்ட சத்தியத்தை செய்து கொடுத்தான்.

அந்த சத்தியம் வாங்கவே அவர் உயிரை கையில் பிடித்திருப்பார் போல், அடுத்த சில மணித்துளிகளில் தன் உயிர் நீத்தார்.

அதன் பின் ஆகாஷ், பிரதாப்பின் வாழ்வு இருண்ட பாலைவனமாக இருந்தது. மதுநிலா என்ற தேவதை அவர்கள் வாழ்வில் வரும் வரை.

பிரதாப் அன்னைக்கு செய்த சத்தியம் பொய்க்குமா?

இல்லை அவனின் உண்மை காதல் பொய்க்குமா?

********************

பிறகு இருவரும் கல்லூரி செல்லவில்லை. சிறப்பு அனுமதி பெற்று பரீட்சையை முடித்தனர். அதனால் தான் வெற்றி இவர்களை, அதன் பின் சந்திக்கவில்லை. இவர்களின் பெற்றோர் மரணத்தை பற்றி தெரிந்தாலும், பிரதாப் அவன் அன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை பற்றி தெரியாது.

வெற்றி, ஓவியா திருமணம் முடிந்த அன்றைய தினம்.

மது, ஆகாஷை நம்பி மண்டபத்திலிருந்து சென்றது, வெற்றிக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது. அதனாலேயே,”தனக்கு மது வேண்டாம்.” என உறுதியாக கூறினான். 

ஓவியாவுடன் நடந்த திருமணம், வெற்றிக்கு அதிர்ச்சியே. நேரம் செல்ல, செல்ல தான் ஏதோ தவறு செய்வதுபோல் உணர ஆரம்பித்தான். எங்கோ ஏதோ தவறாக பட்டது. 

மது தனக்கு பிடிக்கவில்லை என்றால் முகத்திற்கு நேரே சொல்ல கூடிய தைரியம் உள்ள பெண். மேடைவரை வந்து சென்றிருக்கிறாள் என்றால், கண்டிப்பாக ஏதோ வலுவான காரணம் இருக்கும் என நம்பினான். 

ஆகாஷின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லாத நிலையில், மதுவின் பாதுகாப்பு முக்கியமாக பட்டது. அது அவன் மனதை போட்டு அலைக்கழித்தது. 

அதனால் தன் கல்லூரி நண்பர்களிடம், அவர்களை பற்றி விசாரித்தான். யாருக்கும் அவர்கள் எங்கே என தெரியவில்லை. அடுத்து என்ன புரியாத நிலை. 

அவர்களின் நெருக்கத்தை பார்த்தால் பல நாள் பழக்கம்போல் தான் இருந்தது, இருந்ததாலும் குழப்பம். எங்கே தன்னிடம் விட்ட சவாலிற்காக, மதுவை ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டார்களா? என்று.

மறுநாள் காலை ஓவியா, ஆகாஷை மதுவுடன் புகைப்படத்தில் பார்த்திருப்பதாக சொல்ல, வெற்றி மனதில் எங்கோ சுறுக்கென்றது. மது யாருடன் பழகுகிறாள் என்பது கூட தெரியாமல் இருந்த தன் முட்டாள்தனத்தை நினைத்து தலையில் அடித்துக்கொண்டான்.

பிரதாப் மனதில் இடம் பிடித்த மதுநிலாவை, நிச்சயம் ஆகாஷ்  விரும்பி இருக்க மாட்டான் என தெரிந்ததால்தான், வெற்றி ஓவியாவிடம்,”ஆகாஷ் உன்னோட மாமாவா இருக்க வாய்ப்பே இல்லை” என உறுதியாக கூறினான்.

இது தங்கள் நால்வரின் பிரச்சினை என்பதால், மதுவை தானே தேடிக்கொள்வதாக பெற்றோர்களிடம் கூறி விட்டான்.

வாய் வார்த்தையாக கூட, நிலாவை பிரதாப்புடன் இணைத்து கூற விரும்பாத வெற்றி, கருணாகரனின் சகோதரி மாலுவிடம் குறிப்பிடும் போதும், ஆகாஷின் பெயரையே பயன்படுத்தினான்.

ஆனால் அவள் கூறிய, பிரதாப்பிற்கு,”அவன் அத்தை பெண்ணுடன் திருமணம்.” என்ற செய்தி வெற்றிக்கு எவ்வளவு மகிழ்ச்சியை குடுத்தது என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம். 

அதே சமயம் அவள் கூறிய,”ஆகாஷ், பிரதாப் இருவரும் பெண்களிடம் நெருப்பு” என்ற வார்த்தைகளை, கல்லூரிகால கோகுல கிருஷ்ணர்களை மனதில் கொண்டு, வெற்றி அதை ஏற்க தயாராக இல்லை.

காலம் எல்லாத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதை புரியாமல் போனான்.

அதே காலம் ஆகாஷ், பிரதாப் வாழ்வில் பெரிய இடியாக, பெற்றோரை பறித்து தன் ஆட்டதை தொடங்கி, அவர்கள் வாழ்வை புரட்டி போட்டது.

*************

பிரதாப், ஆகாஷ் இருவரும் கடந்த காலத்திற்குள் வளம் வந்து முடித்திருந்தனர்.

மது ஆராவை நெருங்கி,”ஹாய் ஆரா எப்படி இருக்க? வா வந்து உட்கார்.” என உபசரிக்க.

“என்ன மது என்னோட வீட்டிற்கு வந்து, என்னையே உபசரிகர” என்றாள் இளக்காரமாக.

மது ஒன்றும் புரியாமல் ஆகாஷ், பிரதாப்பை பார்க்க, அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தனர்.

“அவங்களை ஏன் கேட்கற. நான் சொல்றேன்.” என பிரதாப்பின் அருகில் சென்று, அவன் கரங்களை தன் கரங்களுக்குள் சிறை பிடித்து,”இவன் என்னோட அத்தான். சீக்கிரமே எங்கள் கல்யாணம்.”

அவளின் அறிவிப்பு யாருக்குப் பலத்த அதிர்ச்சி? என்பதை பிரித்து அறிய முடியவில்லை. பிரதாப் மறுப்பு தெரிவிக்காதது, மதுவின் மனதில் பூகம்பத்தை கிளப்பியது.

கலங்கிய கண்களோடு தன் அறையை நோக்கி சென்றுவிட்டாள். அவள் பின்னாலேயே மேகாவும்.

தன் நண்பனின் மனம் அறிந்த ஆகாஷ், செயலற்ற நிலையில்.

சூழ்நிலை கைதியாக பிரதாப், ஒன்றும் பேசாமல் அவள் கரங்களை விளக்கிவிட்டு, தன் பைக்கை எடுத்து வெளியே சென்றுவிட்டான்.

ஆகாஷ் ஆராவிற்கு ஒரு அறையை காட்டிவிட்டு தன் நிலாவை தேடி சென்றுவிட்டான்.

இவர்கள் அனைவரின் எண்ண ஓட்டத்தை, புரிந்து கொண்ட ஆராவின் மனதில் வன்மம் மட்டுமே.

ஏன் அந்த வன்மம்?

**************

ஆகாஷ், பிரதாப், வெற்றி மூவரும் கடந்த காலத்தில், நடந்தவற்றை நினைத்து உறக்கத்தை கெடுத்துக்கொண்டனர்.

சூர்யா, மதுநிலாவின் அலைப்பேசி எண் கிடைத்தும், அவளுடன் பேசமுடியாமல் போன வருத்தத்தில் உறக்கத்தை தொலைத்தான். எப்போது விடியும் என காத்திருந்து, விடியற்காலையில் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

பெண்கள் அனைவரும் நல்ல உறக்கத்தில்.

மதுநிலா காலையில் எழுந்ததும், முதலில் கண்ணில் பட்டது, இரவு தவறவிட்ட அழைப்பிலிருந்த தெரியாத எண்ணில்தான்.