அத்தியாயம் 23
நான்கு வருடங்களுக்குப் பின், மதுரை மண்ணில் கால் பதித்த மதுநிலாவை அழைத்துச்செல்ல சுந்தரேசனுடன் வெற்றிச்செல்வனும் வந்திருந்தான்.
சிறுவயதிலிருந்தே மதுவை தன் மனைவியாக பார்த்திருந்த வெற்றிச்செல்வன், இன்னும் பத்து நாட்களில் தனக்கு முழுவதும் சொந்தமாக போகும் பெண்ணை பார்க்க காத்திருந்தான்.
மதுரை விமானநிலையம் வரை உடன் வந்த ஆகாஷும் பிரதாப்பும் இணைப்பு விமானத்தில் கோவை சென்று, அங்கிருந்து வால்பாறையில் இருக்கும் பிரதாப்பின் தாத்தா, பாட்டியையும் ஆகாஷின் தந்தையும் காண செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. அதனால் அவர்கள் கோவை செல்லும் விமானத்தை நோக்கி சென்றுவிட்டனர். மதுநிலா மட்டும் தனியாக வெளியே வந்தாள். அதனால் வெற்றிசெல்வனுக்கு, மதுநிலாவின் பிரதாப், ஆகாஷ் உடனான நட்பு தெரியாமல் போனது.
லண்டனின் வானிலை மாற்றம், நிலாவின் பிங்க் நிற மேனியில் வண்ணத்தை கூட்டியது. அவளின் நிறத்தை மேலும் எடுத்துக்காட்டுவதுபோல், அவள் அணிந்திருந்த ஜீன்ஸ், டி-ஷர்ட்டும் அவளுக்காகவே வடிவமைக்கப்பட்டதுபோல் அவளது வடிவழகை வெளிப்படுத்தி கட்சிதமாக பொருந்தியது. ஸ்ட்ரெயிட்டனிங் செய்து விரித்து விட்டிருந்த கூந்தலும், கண்ணில் அணிந்திருந்த கூலிங்கிளாஸும் அவளை அக்மார்க் வெளிநாட்டுப் பெண்ணாகக் காட்டியது.
மதுநிலாவின் வசீகரிக்கும் அழகில், மதி மயங்கினான் வெற்றிச்செல்வன். பார்வையை அவளிடமிருந்து பிரிக்க முடியாது திண்டாடினான். எப்போதும் சுடிதார், சேலையில் மட்டும் பார்த்த பெண்ணை, இப்படி அல்ட்ரா மாடர்னாக பார்க்கும்போது மயங்காமலிருந்தால்தான் ஆச்சரியம்!
அவனது கண்ணிமைக்காத பார்வை மதுநிலாவை சங்கடப்படுத்தியது. வெற்றியின் பார்வையை தவிர்க்கும் பொருட்டு, தன் தந்தையுடன் உரையாடியபடி தங்கள் வாகனத்தில் ஏறிவிட்டாள்.
அவள் அழகில் மயங்கிய தன்னை நினைத்து, மனதினுள் சிரித்துக்கொண்டே தலையை கோதிக்கொண்டு, வாகனத்தின் முன்னிருக்கையில் தன் மாமாவுடன் அமர்ந்துகொண்டான் வெற்றிச்செல்வன்.
வாகனம் வீட்டை நோக்கி சென்றது.
************
மதுநிலாவின் வரவிற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
அனைவருடனும் எட்ட நின்றே இன்முகத்துடன் பேசி, எப்போதும்போல் தனதரையில் அடைந்து கொண்டாள். ஒன்பது வருட பிறிவு அவளை முற்றிலும் அவர்களிடமிருந்து விலக்கியிருந்தது.
‘எவ்வளவு ஆசையோட பேச வந்தால், பேசாம முகத்தை திருப்பிக்கிட்டு போய் கெத்தை மெயின்டெய்ன் பண்ணுறாள்’ என ஓவியா மனதில் இகழ்ச்சியோடு நினைத்துச் சென்றுவிட்டாள்.
‘அன்பை அனைவரிடமும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து, வெறுப்பின் பிடியில் சிக்கி, தனிமையை துணையாகக் கொண்ட பெண்ணின் நிலையை,’ உறவினர்களுடன் ராணிபோல பாதுகாப்பாக வளர்ந்த, ஓவியச்செல்வியால் புரிந்துகொள்ள முடியுமா?
லண்டனிலிருந்து இரண்டு நாட்கள் பயணம் செய்து வந்த மதுநிலா, இப்போது ஜெட்லாக்கில் மாட்டிக்கொண்டாள்.
“இன்னும் பத்து நாட்களில் உனக்கு வெற்றியுடன் திருமணம்” என சுந்தரேசன் மதுநிலாவிடம் வெறும் அறிவிப்பாக கூறி சென்றுவிட்டார்.
ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட உடம்பில், இப்போது ஜெட்லாக்கும் சேர்ந்துகொள்ள, மதுநிலாவினால் சிந்திக்க முடியவில்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகுதான் மயக்கத்திலிருந்து வெளிவந்தாள். அப்போதும் அவளை சிந்திக்கவிடாமல் ஷாப்பிங் என இழுத்து சென்றுவிட்டனர்.
கற்பகம் மதுநிலாவிற்கு முகூர்த்த புடவையை பார்த்து, பார்த்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ‘ஏதோ விசேஷத்திற்கு புடவை எடுக்கிறார்கள்’ என நினைத்த பெண், கடனே என்று ‘யாரோ ஏதோ செய்து கொள்ளுங்கள்’ என கைப்பேசியோடு அமர்ந்துவிட்டாள்.
மதுவின் பார்வை தற்செயலாக ஓவியாவின் பக்கம் சென்றது. அங்கு வெற்றியும், சுமியும் ஓவியாவுக்கான புடவையை தேர்ந்தெடுத்தனர்(வெற்றி மாங்கல்யம் அணிவிக்கும்போது ஓவியா அணிந்திருந்த புடவை).
மதுவின் விழிகளில் ஒரேயொரு நொடி ஏக்கம் வந்தது. அடுத்த நொடி அது கனவோ எனும்படி மறைந்தது (அவள்தான் உணர்வுகளை அழகாக மறைக்க கற்றுக்கொண்டவள் ஆகிற்றே!)
மற்ற நகைகளுடன் சேர்ந்து மாங்கல்யத்தையும் பார்த்தபின் சந்தேகம் எழுந்தது. திரும்பி வந்தபொழுது தன் தந்தை பேசிய வார்த்தைகளை நினைவுகூர்ந்த பெண்ணின் மனம் விழித்துக் கொண்டது.
சூர்யாவின் மிரட்டலுக்கு பயந்தும், வெற்றியுடனான திருமணத்தை தவிர்ப்பதற்காகவும் லண்டன் செல்ல முடிவு செய்தபோது,’நீ லண்டனிலிருந்து வரவும் திருமணம். அதற்கு சம்மதம் என்றாள் லண்டன் செல்லலாம்’ என்ற குரல் மனதில் வந்தது. அவளது கண் முன்னே ஒரு உருவம் மின்னி மறைந்தது.
‘என்னது திருமணமா? என்னால் அவனைத் தவிர வேறு யாரையும் கணவனாக ஏற்றுக்கொள்ள முடியுமா?’ என சிந்தித்த பெண், மடமடவென அடுத்து தான் செய்யவேண்டிய வேலையை திட்டமிட தொடங்கிவிட்டாள்.
‘முதலில் பிரதாப்பையும் ஆகாஷையும் வரவைத்து, தன் பெற்றோர்களிடம் பேசி தன் திருமணத்தை நிறுத்த வேண்டும்.’ என முடிவு செய்து அவர்களிடம் தன் திருமண செய்தியை தெரிவித்துவிட்டாள்.
************
மதுநிலாவின் வெற்றியுடனான திருமணச்செய்தி பிரதாப்பை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எப்படியாவது தன் நிலாவை தன்னுடன் அழைத்து வந்துவிட வேண்டும் என நினைத்து கிளம்பிவிட்டான்.
அவர்களுக்கு தகவல் தெரியும்போது கிட்டத்தட்ட திருமணத்திற்கு வெறும் ஐந்தே நாட்கள் இருந்தது. அதே நேரம் லண்டனிலிருந்து நிலாவின் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்டும் மெயிலில் வந்தது. இச்செய்தி பிரதாப்புடன் சேர்த்து ஆகாஷையும் உயிரோடு கொன்று புதைத்தது. ‘எங்கே நிலாவையும் இழந்து விடுவோமா?’ என இருவரும் நடுங்கினர்.
ஒரு முடிவை எடுத்த பிரதாப், தங்கள் பயணத்தை மாற்றியமைத்தான். ஆகாஷை சென்று மதுநிலாவின் வீட்டில் பேசி அவளை அழைத்து வர அனுப்பிவிட்டு, லண்டனிலிருக்கும் மருத்துவமனைக்கு பேசி ‘அடுத்து என்ன செய்ய வேண்டும்?’ என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு பிரதாப் சென்னையை நோக்கி பயணித்தான், தங்களின் பயணத்திற்கான ஏற்பாட்டை கவனிக்க.
அடுத்தடுத்து விழுந்த இடிகளால் துவண்ட அவர்கள், உரிய நேரத்தில் மதுநிலாவின் வீட்டை அடைய முடியவில்லை. திருமண தினத்தன்று அதிகாலை இரண்டு மணியளவில் தான் ஆகாஷால் மண்டபத்தை அடையமுடிந்தது.
மாலையில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், பல்லை கடித்துக்கொண்டு வரவைக்கப்பட்ட புன்னகையுடன் மணமகளாக நின்றாள். நேரம் செல்ல செல்ல அவளது பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஃபோட்டோ சூட் என வந்த புகைப்படக்காரரை,”சோர்வாக இருக்கிறது. காலையில் எடுத்துக் கொள்ளலாம்” எனக் கூறி தடுத்துவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டாள்.
நள்ளிரவு இரண்டு மணியளவில் ஆகாஷிடமிருந்து அழைப்பு வரவும், தனது அலைபேசியுடன் தன்னை யாரும் கவனிக்கிறார்களா? என பார்த்துவிட்டு, மேல்மாடியை நோக்கி சென்றாள்.
அங்கே ஆகாஷை பார்க்கவும் ஓடிச்சென்று, அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு,”என்னை இங்கிருந்து உடனே கூட்டிட்டு போயிடு அஷு. என்னால் அவனைத் தவிர வேற யாருடனும், பெயரளவில் கூட நிற்க முடியாது.” என கண்ணீர் வடித்தாள்.
ஆகாஷினால் ஒன்றும் பேச முடியவில்லை. அவனிற்கு நண்பனின் விருப்பமும் புரிந்தது, அவனது சூழ்நிலையும் தெரியும். மதுநிலாவின் விருப்பமும் புரிகிறது.
யாருக்கு ஆதரவு கொடுப்பது?
அன்னையைப் போல் எண்ணிய பெண்ணவளுக்கா?
குழந்தைப் பருவத்திலிருந்து உடனிருந்த நண்பனுக்கா? எனக் குழம்பித் தவித்தான்.
‘எது எப்படியோ? முதலில் மதுநிலா குணமாகி உயிர் பிழைத்து வர வேண்டும். அது ஒன்றே தற்போது தங்களுக்கு முக்கியம்’ என முடிவு செய்த ஆகாஷ்,”நிலா வா உங்க வீட்டில பேசிட்டு கிளம்பலாம்” என கூறி அவளை கீழே அழைத்து வந்தான்.
அங்கே மதுவின் கண்களில் பட்டது,’ஓவியா திருமண பெயர்ப்பலகையைப் பார்த்து கண்கலங்கி நின்ற காட்சி’. அந்த கண்ணீர் சொன்னது அவள் காதலை. அதை ஆகாஷும் பார்த்து கேள்வியாக நிலாவை பார்த்தான்.
ஒரு முடிவிற்கு வந்த நிலா, வீட்டில் எதுவும் சொல்லாமல் கிளம்பி செல்ல முடிவு செய்துவிட்டாள். (வீட்டில் சொன்னால் கட்டாயம் திருமணத்தை நடத்தி விடுவார்கள்.)
ஆகாஷ் அவள் முகமேந்தி கண்ணீரை துடைத்து,”நாங்கள் இருக்கிறோம் உனக்கு துணையாக” எனக் கூறி, அவளை தேற்றி அவளின் ரிப்போர்ட் பைலை மட்டும் எடுத்துக்கொண்டு வருமாறு சொல்லி வாகன நிறுத்துமிடம் சென்றுவிட்டான்.
தன் அறைக்கு சென்ற பெண், தன் கைப்பேசியிலிருந்து ராஜாவின் எண்ணிற்கு, ‘ஓவியாவுக்கும் வெற்றிக்கும் திருமணம் நடத்தி வைக்குமாறு’ ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு தன் கைப்பேசியை அறையிலேயே வைத்துவிட்டு, அவளது கைப்பையும், ரிப்போர்ட் பைலையும் மட்டும் எடுத்துக்கொண்டு, காத்திருந்த ஆகாஷுடன் சென்னையை நோக்கி பயணித்தாள்.
சென்னையில் நிலாவின் வரவிற்காக காத்திருந்த பிரதாப். எங்கே தனது எட்டு வருட காதலை இழந்து விடுவோமோ? என்ற பயத்திலிருந்தவன், அவளை பார்க்கவும் தன் அன்னைக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்தான்.
தன் அத்தை மகளை மறந்தான்.
உணர்வுகளின் பிடியில் சிக்கி அவளை கட்டி அணைத்திருந்தான்.
இதில் சில விஷயங்களை மறைத்து கூறி முடித்திருந்த மதுநிலாவின் பார்வை ஓவியாவிடம் நின்றது. அந்தப்பார்வை சொன்னது,’உனது காதலை அறிந்து கொண்ட நான், கிட்டத்தட்ட அனாதையாக இங்கிருந்து சென்றேன்.’
அந்தப் பார்வையை ஓவியாவும் மற்றவர்களும் புரிந்து கொண்டார்களா?
*************
மது கூறிய அனைத்தையும் கேட்ட குடும்பத்தினர் குற்றவுணர்வில் திகைத்து நின்றனர்.
அனைவரும் இந்த திருமண விஷயத்தில், தாங்கள் செய்த தவறை புரிந்து கொண்டனர்.
எல்லாரது மனநிலையும் வேறு, வேராக இருந்தது. இன்னமும் யாரும் மதுவின் சிறுவயது ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லை. இப்போது அவர்கள் உணர்ந்துகொண்டது வெற்றியுடன் முடிவு செய்த திருமண நிகழ்ச்சியை மட்டுமே.
‘தான், தன் திருமணத்தில் செய்த துரோகத்திற்கு, நிலாவிற்கு இப்படியொரு தண்டனை கிடைத்திருக்கிறது’ என நினைத்த சுமி, சுந்தரேசனுடன் பேசி மீண்டும் தவறான முடிவை எடுத்தார்.
சிறியவர்களை அவர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டு, சுந்தரேசனும், சுமித்ராவும் எங்கோ சென்று வருவதாக கிளம்பிவிட்டனர். கற்பகமும் ராஜாவும் அவர்கள் இல்லம் நோக்கி சென்று விட்டனர்.
ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்தாலும் சிறியவர்கள் அறுவரும், மாலைவரை ஒன்றாகவே பொழுதை ஓட்டினர். மாலையில் கோவிலுக்கு செல்வதற்காக கிளம்பிய பெண்கள் புடவையிலிருக்க, ஆண்கள் அவர்களின் அழகில் சொக்கித்தான் போயினர்.
அனைவரும் ஜோடியாக நின்று இறைவனை தரிசித்து பிரசாதம் வாங்கிக் கொண்டனர்.
“என்ன ப்ரோ! ஓவியாவுக்கு நீங்க குங்குமம் வச்சுவிடுங்க” என மேகா கூற, வெற்றி இன்முகத்துடனே குங்குமத்தை கைகளில் எடுக்க, ஓவியா முகத்தில் தயக்கத்தின் சாயல்.
அதை புரிந்து கொண்ட மது,”என்ன அம்மு? நாங்க எல்லாம் இருக்கிறோமென்று வெட்கப்படறியா? நாங்க வேணா கண்ணை மூடிக்கறோம்” என அவள் தயக்கத்தை வெட்கமாக மாற்றினாள். இப்போது உண்மையிலேயே வெட்கம் வந்தது ஓவியாவிற்கு.
அவளது வெட்கத்தை ரசித்துக்கொண்டே, வெற்றி ஓவியாவின் நெற்றியில் கீற்றாக குங்குமத்தை தீட்டினான். இருவர் உடலிலும் ஒரு சிலிர்ப்பு.
திருமணமான அன்று ஓவியாவின் நெற்றியில் இட்ட திலகத்திற்கும், இப்போது இட்ட திலகத்திற்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது, அதை வெற்றியும் உணர்ந்துகொண்டான்.
மனநிறைவுடன் கோவிலைவிட்டு வெளியே வந்தவர்கள், உணவுவிடுதியில் இரவு உணவை முடித்துக்கொண்டே தங்கள் வீட்டை நோக்கி பயணித்தனர்.
அவர்கள் வீட்டை அடைந்த சிறிது நேரத்தில் நல்ல மழை பிடித்துக்கொண்டது.
வெற்றியும் ஓவியாவும், ஓவியாவின் அறைக்கு சென்றுவிட்டனர். மீதமிருந்த நால்வரும் மொட்டைமாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த நேரம் மழை துவங்கியது.
**********
“உன்னோட மது வந்துட்டா வெற்றி. இனி நான் உனக்கு தேவையில்லை. நீ கேட்ட விடுதலை” என விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு அவனிடம் நீட்டியிருந்தாள் ஓவியச்செல்வி. அன்று அவன் வாய் வார்த்தையாக சொன்னதை, இன்று செயல் வடிவம் கொடுத்திருந்தாள் பெண்ணவள்.
அன்று காதல் இல்லாமல் உதிர்த்த வார்த்தை, இன்று காதலோடு கேட்கும்போது மனம் வலித்தது. திகைத்துப் போனான் வெற்றிச்செல்வன்.
‘ஐயையோ என்னடா கிணறு வெட்ட பூதம் கெளம்புது’ என பயந்த வெற்றி,”அம்மு என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா நீ” என கோபம் கொண்டான்.
“நான் சரியாதான் சொல்லுறேன். அவ போனதாலதான என்னை கல்யாணம் பண்ணின. அவளுக்காக காத்திருப்பேனென்று சொன்ன. இப்போ மது வந்தாச்சு, எனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கோ.” கலங்கிய குரலில் கூறி முடித்தாள்.
ஓவியாவின் நிலையை உணர்ந்த வெற்றி,”மது வந்து மூணு மாசம் ஆச்சு அம்மு.” என பொறுமையாக கூறினான்.
“நமக்கு இப்பத்தான அவளோட நிலை தெரியும். நீயும் அவளைத்தான்மனசுல நினைச்சுட்டு இருக்க.”
“ஓஓஓ” ராகமாக இழுத்தான்.
“அதனால என்னை விட்டுட்டு அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ.”
“அப்ப நீ என்ன பண்ணபோற? வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?” என நக்கலாக கேட்டான்.
ஓவியா அடிபட்ட பார்வை அவனை நோக்கி வீசினாள்.
“மதுவை நான் பார்த்து மூணு மாசம் ஆச்சு”
புரியாமல் பார்த்த ஓவியாவிடம், “மது இந்தியா வந்து ஒரு வாரத்திற்குள் நான் அவளைப் பார்த்திட்டேன். பிரண்டை பார்க்க போறேன்னு சொல்லிட்டு போனேன்ல, அது மதுவை பார்க்கத்தான்.”
“அப்ப மது, என்னோட காதலை சொல்லித்தான் என்னை நெருங்கினயா வெற்றி?” மனம் உடைந்து போனாள்.
“அப்படி இல்ல அம்மு. மது சொல்லித்தான் என்னோட காதலை நான் உணர்ந்தேன்.” ஓவியாவின் விழிகளில் சந்தேகம்.
ஓவியாவின் கரங்களை பற்றி, தன் அருகில் அமரவைத்த வெற்றி, அவள் கரத்தை பற்றிக்கொண்டே, அன்று மது உடன் நடந்த உரையாடலை அவளிடம் விளக்கிக் கூறினான்.
“அன்னைக்கு கல்யாணத்தப்ப சொல்லாம மண்டபத்தை விட்டுப்போன மதுமேல கொலைவெறியிலிருந்தேன். அவளை எப்ப பார்த்தாலும் காயப்படுத்தற கோபம், ஆனால் அவளைப் பார்த்தபோது ஒரு சுண்டு விரலை கூட என்னால அசைக்க முடியலை. அவ மனசளவுல நம்ம விட்டு ரொம்ப தள்ளி போயிருந்தாள்.” ஒரு பெருமூச்சுடன் மீண்டும் தொடர்ந்தான்
“மதுவை பார்க்க அவங்க வீட்டுக்குப்போன நான் திகைச்சு போயிட்டேன். அப்படி வாடிப்போன மதுவை சத்தியமா எதிர்பார்க்கல. ‘உடல் இளைத்து, முகம் கருத்து, வாடிய மலரை போலிருந்தது மது தானான்னு’ எனக்கு சந்தேகமே வந்துடுச்சு. இப்ப கொஞ்சம் தெளிவா இருக்கா.
அப்ப பார்க்கும்போது எனக்கு உயிரே போயிருச்சு. அவளுக்கு இப்படியொரு நோய் வந்தது கூட சொல்லாமல் போயிருகானா? அவ மனசளவுல எவ்வளவு பாதிப்படஞ்சு இருக்கான்னு புரிஞ்சுகிட்டேன். அதனாலதான் இங்க வர சொல்லி அவளை வற்புறுத்தாமல் வந்துட்டேன்.
சின்ன வயசில், அவளை மனைவியா மனசில் பதிஞ்சுகிட்ட என்னால், அவ போனதை ஏத்துக்க முடியாம தவிச்சேன். ஆனால் மது சொன்னபிறகு தான் தெரிஞ்சது, நான் அவள் போனதால் தவிக்கவில்லை, அன்னைக்கு நடந்த அவமானத்தால் தவிசிருக்கிறேன். நான் அவளை விரும்பலை. நான் விரும்புவது உன்னை மட்டும்தான்.” என முடித்தான்.
வெற்றி கூறிய அனைத்தையும் கேட்டிருந்த ஓவியா திகைப்பின் பிடியில்.
**********
அதே நேரம் சுமித்ராவும் சுந்தரேசனும் ஒருவரிடம், “நாங்கள் உங்களுக்கு செஞ்ச துரோகத்திற்கு, எங்கள் மகளுக்கு தண்டனை கிடைக்கிறது. நாங்கள் செஞ்ச துரோகத்துக்குப் பரிகாரமா, என் பெண் மதுநிலாவை உங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்.” மீண்டும் ஒரு தவறு செய்கிறோம், என புரியாமலேயே பாவமன்னிப்புடன் பிராயச்சித்தமும் தேடிக் கொண்டிருந்தனர்.
அந்த மனிதர் கேள்வியாக தன் மகனைப் பார்க்க, அவன் முகத்திலிருந்த பிரகாசமே கூறியது அவனது விருப்பத்தை.
அந்த மனிதரின் முகத்தில் குழப்பம் இருந்தாலும், அவரது சம்மதத்தை தெரிவித்தார். சுந்தர், சுமியுடனே அந்த மணமகன் தன் பெற்றோருடன் மதுரையை நோக்கிக் கிளம்பினான், பல திருப்பத்தை ஏற்படுத்த.
************
அதேநேரம் இங்கே பிரதாப்பும் தன் காதலை, தன் நிலா பேபியிடம் கூறி காற்றுகூட போகாத அளவு அவளை இறுக்கி அணைத்திருந்தான்.
***********
அடுத்த விடியல் யாருக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ?