சூரியநிலவு 25

அத்தியாயம் 25

லண்டன் விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்தே மதுநிலாவிற்கு வியப்புதான்.

எங்கு திரும்பினாலும் ஒரு சிறு துண்டு காகிதத்தை கூட பார்க்க முடியவில்லை. விமான நிலையத்தில் மட்டுமல்ல, சாலை ஓரங்களிலிருந்து பெரிய பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்தும் சுத்தமாக இருந்தது.

அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒரு ஒழுங்கை கடைப்பிடித்தனர். வாகனம் ஓட்டுவதில் ஆகட்டும், குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதில் ஆகட்டும், அனைத்திலும் ஒரு ஒரு நேர்த்தி இருந்தது. குழந்தைகள் கூட சிறு துண்டு காகிதத்தை போடுவதானாலும் குப்பைத் தொட்டியையே பயன்படுத்தினர். 

இது அனைத்தையும் மதுநிலா ரசிப்புடனே கடந்து சென்றாள்.

அவளுடன் அறையை பகிர்ந்து கொள்ள போகும் வட இந்திய பெண் மோனல், அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தாள். அவளும் பீஜி முதலாம் ஆண்டு மாணவி. மோனலின் ஊரை சேர்ந்த சீனியர் மாணவியின் உதவியோடு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து, அங்கு உள்ள அனைத்தையும் பழகியிருந்தாள் மோனல்.

ஆங்கிலம், ஹிந்தி இரண்டும் சரளமாக பேச பழகிய மதுநிலாவிற்கு, மோனலுடன் தொடர்புகொள்வது கடினமாக இல்லை. மோனலின் குணம் சற்று ஆராதனாவை ஒட்டி இருந்தது. கொஞ்சம் அலட்டல் பேர்வழி ஆனால் நல்ல குணம் உடையவள். எப்படிப்பட்ட நல்ல குணமுடைய பெண்ணாக இருந்தாலும் சுற்றம் மாற்றி விடும் அல்லவா?

அவர்கள் தங்க போவது இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடிக்குடியிருப்பு. ஒரு அறை மோனலுக்கும், ஒரு அறை மதுநிலாவிற்கும் என பிரிக்கப்பட்டது. அவரவருக்கு வேண்டிய உணவை அவர்களே தயாரித்துக்கொள்வது அல்லது கடையில் பார்த்துக்கொள்வது எனவும், வீட்டை சுத்தம் செய்வது நாளுக்கு ஒருவர் எனவும் பிரித்துக் கொண்டனர்.

*********

முதல் நாள் கல்லூரிக்கு நிலா புடவை அணிந்து சென்றாள். அந்த அல்ட்ரா மாடர்ன் உலகில் புடவை அணிந்து சென்ற நிலாவை, வேற்று கிரக வாசியைப் பார்ப்பதுபோல் அனைவரும் பார்த்துவைத்தனர்.

சீனியர் மாணவர்கள் இவளையே குறிவைத்து அழைத்து சீண்டிக் கொண்டிருந்தனர். அதிலும் ஜான் என்ற மாணவன் நிலாவின் மீது தன் கழுகு பார்வையை வைத்துவிட்டான்.

அந்த அல்ட்ரா மாடர்ன் மங்கைகளுக்கு மத்தியில், நிலா அவனிற்கு புதுமையாகத் தோன்றினாள். அவளை தன் இச்சைக்கு பலியாக்க தீர்மானித்தான்.

பாவம் அதை அறியாத நிலா, ஒரு கட்டத்தில் அவர்களின் சீண்டலை தாங்க முடியாது, ஒரு மரத்தடியில் அமர்ந்து, தன் முகம் மூடி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.

*********

சில நாட்களுக்கு முன்பே தங்களது மாஸ்டர்ஸ் படிப்பை தொடர அங்கே சேர்ந்திருந்தார்கள் ஆகாஷும் பிரதாப்பும். ஏதோ வேலையாக ஆகாஷை தவிர்த்து பிரதாப் மட்டும் அந்த மரத்தடியை நோக்கி சென்றான். 

யாரோ ஒரு பெண் அந்த மரத்தடியில் அமர்ந்து இருப்பதை, அவளின் பின்புறம் இருந்து பார்த்த பிரதாப், அவளை கடந்து செல்ல முற்பட்டபோது, அவளின் புடவை அவன் மனதை உறுத்தியது. திடீரென மனதில் மின்னல் வெட்ட, தானாக அவன் கால்கள் அந்த பெண்ணிடம் திரும்பியது.

 மதுநிலா இன்று உடுத்தி இருப்பது, அன்று கல்லூரி விழாவின்போது அணிந்திருந்த அதே பிங்க் நிற புடவை. அந்த பெண்ணை நெருங்கும்போதே, அது அவனின் பிங்க் ரோஜா தான் என்பதை உணர்ந்த பிரதாப்பின் மனம் துள்ளியது.

கால்களும் அதே துள்ளலுடன் அவளை அடைந்தது. 

“ஹேய் பேப் எப்படி இருக்க? என்னை ஞாபகம் இருக்கா? நீ மதுநிலா தானே.”

திக்குத் தெரியாத காட்டில் திசைமாறிப் போன பறவையைப் போல் பயந்து போயிருந்த பெண். திடீரென ஒரு ஆணின் குரலைக் கேட்கவும் பயந்து எழுந்தாள். அங்கே பிரதாப்பை காணவும் தான் இருக்கும் இடம் மறந்து தனக்கு அறிமுகமான ஒரு ஜீவன் என்ற உணர்வில் அவனை அணைத்துக் கொண்டாள்.

பிரதாபால் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. ஒரு நிமிடம் குழம்பிப் போனான். பிறகே அவளின் கண்ணீர் முகம் அவன் மனதை தாக்க,”ஹேய் நிலா! என்னாச்சு? ஏன் மா அழுகுற? யார் என்ன சொன்னாங்க?” என பதறினான்.

பிறகுதான் தான் செய்யும் காரியம் உணர்ந்து அவனிடமிருந்து விலகி தயக்கத்துடன்,”சாரி தெரியாமல் பண்ணிட்டேன். நீங்க உங்கள் பேர்…” அவனை அணைத்தற்கு மன்னிப்பு கோரி, தன் நினைவடுக்கில் அவனது பெயரை தேடிக்கொண்டிருந்தாள்.

அவன் பாடிய ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ பாடல் அவள் மனதின் ஆழம் வரை பதிந்திருந்தது. ஆனால் பெயரை மறந்திருந்தாள்.

“ஹேய் கூல் பேப். நான் சூரியபிரதாப் எஸ்.பி.ன்னு காலேஜ்ல கூப்பிடுவாங்க.”

“யா எஸ்.பி, ஞாபகம் இருக்கு. உங்க பாட்டு மனசுல பதிஞ்ச அளவுக்குப் பெயர் பதிவாகல.”

“இட்ஸ் ஓகே பேபி. நீ எப்படி இங்க? ஏன் அழுதுட்டு இருந்த?”

“நான் இங்கே பீ.ஜி பேஷன் டிசைனிங் சேர்ந்து இருக்கேன். இன்னைக்குதான் ஃபர்ஸ்ட் கிளாஸ். சீனியர்ஸ் எல்லாம் நான் புடவை கட்டி இருப்பதை பார்த்து கிண்டல் பண்றாங்க” என முகம் சுண்டி விட்டது.

“இதுல என்ன இருக்கு நாளைக்கு மார்டன் டிரஸ் போட்டுட்டு வந்தா போகுது. இதுக்கு எதுக்கு அழுகனும்?”

“எனக்கு மாடர்ன் டிரஸ் போட்டு பழக்கம் இல்ல புடவை, சுடிதார் மட்டும்தான் போடுவேன்.” 

அவனது பார்வையை பார்த்து,”நீங்க நினைக்கிறது புரியுது என்னடா ஃபேஷன் டிசைனிங் படிக்க வந்த பெண் மாடர்ன் டிரஸ் போட்டாதான்னு யோசிக்கிறீங்க? டிசைன் பண்ண புடிச்ச எனக்கு, அதை போடுவதற்கு தெரியல. எனக்கு சூட்டாகுமான்னு ஒரு பயம். என்கிட்ட அந்த மாதிரி டிரஸ்ஸஸ் இல்ல.” 

“அவ்வளவுதானே நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். ஈவினிங் வெளியே கூட்டிட்டு போறேன். உனக்கு வேண்டியதெல்லாம் வாங்கலாம் ஓகே.”

“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்” என தயங்கிய பெண்ணை பேசி சமாளித்து அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி பெற்றிருந்தான்.

**********

மாலையில் ஆகாஷையும் உடன் அழைத்துச் சென்று அவளிற்கு அறிமுகப்படுத்தினான்.

“கல்லூரி ஆண்டு விழாவில் சந்தித்த பெண்” என்று மட்டுமே ஆகாஷுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

அதனால் வெற்றியை பற்றி ஆகாஷுக்கு தெரியாமல் போனது. ‘பெற்றோர் விபத்தை ஞாபகப்படுத்தும் நாள்’ என்பதால் அதற்குமேல் அதைப்பற்றி தோண்டித் துருவி சிந்திக்கவில்லை.

அன்று முதல் அவர்களின் நட்பு தொடங்கி பின் இறுகியது. 

நிலாவை அருகிலிருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கூட்டி சென்றவர்கள், எந்த உடை அவளின் உடல்வாகிற்கு பொருத்தமாக இருக்கும், என பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்தனர். 

மறுநாள் இதுவரை அணிந்து பழக்கமே இல்லாத உடையில், நெளிந்துகொண்டே அப்பார்ட்மெண்டிலிருந்து வெளி வந்தாள் பெண்.

அவளின் தயக்கத்தை உணர்ந்தோ என்னவோ பிரதாப்பும் ஆகாஷும், அவளுக்காக தங்கள் காரில் அவளின் அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தனர்.

அவர்களை பார்த்த அவளுக்கு மகிழ்ச்சி பெருகியது. தனக்காகவும் சிந்திக்க இரு ஜீவன் இருப்பது அவளுக்கு சந்தோஷத்தை அளித்தது. கண்கள் கலங்க அவர்கள் வாகனத்தில் ஏறினாள்.

“நிலா இந்த டிரஸ் உனக்கு அருமையா இருக்கு. ஏன் தயங்கிக் கொண்டே வந்த?” என்று ஆகாஷின் கேள்விக்கு,”மொத தடவை இந்த மாதிரி டிரஸ் போட்டு இருக்கேன் அதுதான் கொஞ்சம் அன்கம்போர்டபில் பீல்.”

“இங்க பார் நிலா. நீ உனக்காக மட்டும் தான் வாழப்போற. மத்தவங்கள பத்தி ரொம்ப கேர் பண்ணிக்காத. நீ நீயா இரு. உனக்கு பிடிச்சதை மட்டும் செய். உனக்கு நாங்க எப்பவும் சப்போட்டா இருப்போம்.” என ஆகாஷ், நிலாவிற்கு நம்பிக்கை அழித்தான்.

அந்த நம்பிக்கையை இன்றுவரை இருவரும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்திலும் நிலாவிற்கு உறுதுணையாக நின்று அவளை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

********

அன்றும் ஜானின் விழி வட்டத்தில் நிலா விழுந்தாள். மாடர்ன் உடையில், அதேசமயம் ஆபாசம் இல்லாத அழகோடு இருந்த நிலா அவனுக்கு போதையை ஏற்றினாள்.”எந்த டிரஸ் போட்டாலும் செமையா இருக்கா. அவளை ஒரு தடவையாவது ருசி பார்த்திடனும்.” என அவன் நண்பர்களிடம், ஆங்கிலத்தில் ஆபாசமாக ஜொல்லினான்.

அன்று முதல் அவன் பார்வை நிலாவை தொடர்ந்தது. அவனால் அவளை நெருங்கவே முடியாத அளவு, பிரதாப்பும் ஆகாஷும் அவளுக்கு அரணாக இருந்தனர்.

அவளை வீட்டிலிருந்து அழைத்து வந்து, திரும்பி வீட்டில் விடுவது வரை அனைத்திற்கும், அவர்கள் இருவரில் யாரோ ஒருவர் உடன் இருந்தனர். 

ஜானால் நிலாவை துளி கூட நெருங்க முடியவில்லை. அவன் அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தான். நிலாவின் அப்பார்ட்மெண்ட் தோழியை தன் வலையில் வீழ்த்தினான். 

வட இந்திய பெண் மோனலை நெருங்குவது  அவ்வளவு கடினமாக இல்லை ஜானிற்கு. காதல் என்ற ஆயுதத்தை எடுத்து அவளை வலையில் வீழ்த்தினான். 

மோனாலும் ஜானின் காதலில் சிக்கி, அவனின் இழுப்பிற்கு எல்லாம் வளைந்து கொடுத்தாள். நாட்கள் செல்ல செல்ல அவனுடன் இணைந்து டேட்டிங், பப் என சுற்றத் தொடங்கினாள். கடைசியாக அவனை தன் அறையில் தங்க வைப்பதில் முடிந்தது.

அந்த நாட்டின் கலாச்சாரத்தில் ஊறிய ஜானுக்கு, பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது தவறாக இல்லை. ஆனால் நம் கலாச்சாரத்தில் ஊறிய மதுநிலாவுக்கு அவனின் வருகையும், அவனின் பார்வையும் ஒரு அருவருப்பை அளித்தது. மோனலின் தனிப்பட்ட அவளது வாழ்க்கையில் தலையிட முடியாமல், வேற வழியின்றி பல்லைக் கடித்து அனைத்தையும் சகித்துக் கொண்டாள்.

அவன் வரும் நாட்களில், தன் அறையே தஞ்சமென அவளது நடமாட்டத்தை சுருக்கி கொள்வாள். ஜானின் வருகையை பிரதாப் ஆகாஷிடம் கூறாமல் பெரிய தவறை செய்தால் மதுநிலா.  

********

இப்படியே அவர்களின் கல்லூரி வாழ்க்கை இரண்டு வருடத்தை நெருங்கியிருந்தது. 

மதுநிலா, பிரதாப், ஆகாஷ் அவர்களின் நட்பு நன்கு வளர்ந்தது. மதுநிலா அவர்களுக்கு நிலாவானால். பிரதாப் அவளுக்கு மட்டும் சூரியா ஆனான். ஆகாஷ் அவளின் செல்ல அஷ் ஆனான். 

நிலாவின் கைப்பேசியில், மேகாவுடன் நிலா இருக்கும் புகைப்படத்தை ஆகாஷ் கண்டான்.

(பிரதாப்பின் நிலாவுடன் ஆன கல்லூரி சந்திப்பு, மேகா உடனான ஆகாஷின் சந்திப்பு, என அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்த ஆகாஷுக்கு  புரிந்தது, அன்று மேகாவும் நிலாவும் ஒன்றாக தான் கல்லூரி விழாவிற்கு வந்திருந்தனர் என்று. அவுட் ஆஃப் போகஸில் இருந்த மேகாவின் தோழி முகத்தை நினைவுகூர முயன்று தோற்றான் ஆகாஷ்.)

அன்று முதல் யாருக்கும் சந்தேகம் வராதபடி, மேகவர்ஷினியை பற்றிய தகவல்களை நிலாவிடமிருந்து சேகரித்துக் கொண்டான். 

கொஞ்சம் கொஞ்சமாக மேகவர்ஷினியுடன் தொலைப்பேசியில் பேசி, அவளுடனான நட்பையும் வளர்த்துக் கொண்டான். 

மோனல் தன் பிறந்தநாளை ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாட நிலாவிற்கு அழைப்புவிடுத்தாள். பாவம் நிலா அறியவில்லை அந்த விருந்தை ஏற்பாடு பண்ணி இருப்பதே ஜான் என்று. அது நிலாவிற்கு விரித்த வலை என்று தெரியாமலே, அங்கு செல்ல முடிவெடுத்தாள் மதுநிலா.

 பிரதாப் ஆகாஷிடம் தான் செல்லும் இடத்தை தெரிவித்த பிறகே மோனலுடன் சென்றாள். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, அது ஆண்களும் கலந்து கொள்ளும் மது வகைகள் கொண்ட விருந்து என. முதலில் நிலா தயங்கினாலும், அந்த நாட்டின் கலாச்சாரப்படி அது ஒன்றுமே இல்லையென, சற்று ஒதுக்குப்புறமான இடம் தேடி அமர்ந்தாள். 

மதுக்கோப்பையுடன் அவள் அருகே சென்ற ஒரு ஆண், அவளை குடிக்குமாறு வற்புறுத்த,”எனக்கு பழக்கம் இல்லை” என புன்னகையுடன் மறுத்தாள்.

மோனல் அவளது தோழர்களுடன் நடனத்தில் ஐக்கியமாகி விட மதுநிலாவை மறந்தாள். ஒதுங்கியிருந்த மதுநிலாவை போதை நிரம்பிய கண்களுடன் ரசித்திருந்தான் ஜான். 

அங்கு சென்ற ஒரு சர்வரை அழைத்து, பழச்சாறில் போதை மருந்து கலந்த கோப்பையை கொடுத்து,  நிலாவை காட்டி அவளிடம் கொடுக்கும்படி கட்டளையிட்டான். பயந்து தயங்கிய சர்வருக்கு அதிக பணத்தை தூக்கி வீசினான்.

பணத்திற்க்கு மயங்கிய அவனும்  உதவ முன்வந்தான். பழரசத்தில் போதை மருந்து கலந்து இருப்பது தெரியாமலேயே மதுநிலா அதை பருகி முடித்திருந்தாள்.

போதை தலைக்கு ஏற நிலா மயங்கி சரிந்தாள். ஜான் அங்கே தனக்கென ஏற்பாடு செய்திருந்த அறைக்கு மயங்கிய நிலையிலிருந்த பெண்ணை தூக்கிச் சென்றான்.

போதையில் அரை மயக்கத்திலிருந்த பெண்ணால் நடப்பதை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் எதிர்வினையாற்ற முடியவில்லை. 

பார்ட்டிக்கு நிலாவை அனுப்ப விருப்பம் இல்லாத பிரதாப், ஹோட்டலின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாதவன் பார்ட்டி நடக்கும் அறையை அடைந்திருந்தான்.

அங்கு தன் நிலாவை தேடி தோற்றவன், அவளின் கைப்பேசி எண்ணிற்கு அழைக்க, அது கேட்பாரற்று ஒரு மூலையில் அவளின் கைப்பைக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

பலமுறை அவளின் எண்ணிற்கு முயன்று கொண்டே அந்த அறையை சுற்றிக்கொண்டிருந்த பிரதாப்பின் செவிகளில் அவள் அலைப்பேசியின் ரிங்டோன் கேட்க விரைந்து அங்கே சென்றான். கைப்பையோ பரிதாபமாக யாரும் இல்லாமல் தனியாகக் கிடந்தது. 

உயிர் பதறிய பிரதாப், அவளுக்கு என்ன ஆனது என பயந்து அவன் பார்வையை அந்த அறையின் முழுவதும் ஓடினான். பயந்த பார்வையுடன் இருந்த சர்வர் கண்களில் பட, அவனை அடித்து உண்மையை வாங்கி ஜான் முன்பதிவு செய்த அறைக்கு சென்று தன் நிலாவை எந்த சேதாரமும் இல்லாமல் மீட்டெடுத்தான்.

ஜானை அடித்து உதைத்து, காவல்துறையிடம் செல்லப்போக, விடுதி நிருவகத்தின் வேண்டுகோளுக்கிணங்க காவல்துறை கம்ப்ளைன்ட் கொடுக்காமல் நிலாவை தூக்கிச் சென்றான்.

நிலாவை காணவில்லை என்ற உடனேயே ஆகாஷுக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இருந்தான். அடித்துப்பிடித்து டாக்ஸி பிடித்து ஓடிவந்த ஆகாஷ், பார்த்தது நிலாவை கைகளில் ஏந்தி இறுகிப்போன முகத்துடன் வெளிவந்த பிரதாப்பை.

ஆகாஷுக்கும் நிலாவை பார்த்த பின்பே உயிர் மீண்டது. எதையும் கேட்கவும் முடியாது, சொல்லவும் முடியாத நிலையிலிருந்த இருவரையும் பார்த்து, எதுவும் பேசாமல் சென்று தங்கள் வாகனத்தை கிளப்பி இருந்தான் ஆகாஷ்.

நிலாவை தன் கரத்தில் ஏந்தி பின்னிருக்கையில் ஏறியிருந்த பிரதாப், அவளை நொடி கூட விலக்காமல் மார்போடு சேர்த்து வைத்திருந்தான். ஆகாஷ் பிரதாப்பின் மன நிலையை புரிந்து கொண்டான்.

போதையிலிருந்த நிலா தன்னையறியாமலேயே தன்னுடைய சிறுவயதில் நடந்த அனைத்தையும் உளறி இருந்தாள். சூரியதேவ்வின் மிரட்டலை மட்டும் மறந்திருந்தாள். 

மறுநாள் காலையில் இறுகிப் போயிருந்த பிரதாப்பை சமாதானப்படுத்தி, அவளின் அப்பார்ட்மெண்டை அடைந்தாள். மோனலிடம் நடந்த எதையும் தெரிவிக்காமல் மறைத்து மீண்டும் தவறு செய்தாள். 

*********

பிராஜக்ட், கிளாஸ் என பிஸியாக அவர்கள் நாட்கள் சென்றது. இறுதியாண்டு பரீட்சைக்கு முன்பு வரை எந்த பிரச்சனையுமில்லாமல் நாட்கள் கடந்தது.

பரிட்சை ஆரம்பிப்பதற்கு முன்பு, ஒருநாள் மோனல் குரூப் ஸ்டடி என அவளது கிளாஸ்மேட் உடன் தங்க வேண்டிய சூழ்நிலை. அதை ஜானிடமும் தெரிவித்திருந்தாள். அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் ஜான்.

மதுநிலா மட்டும் தனித்திருக்கும் நேரம், ஜான் அந்த அப்பார்ட்மெண்டில் நுழைந்து இருந்தான், அவனிடம் இருந்த மோனலின் சாவியைக் கொண்டு.