சூரியநிலவு 5

அத்தியாயம் 5

தன் குடும்பத்தை விட்டு வந்தது, மதுநிலாவிற்கு,  மிகுந்த மன வேதனையை தந்தது.  தன்னால் இரு குடும்பத்திற்கும்,  ஏற்பட்டிருக்கும் அவமானத்தை, நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அங்கிருந்து, தான் கிளம்பி வந்த பிறகு, என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள,  ஓர் எண்ணிற்கு அழைப்பு விடுத்துக் காத்திருந்தாள்.

(சென்னை வரவும், ஆகாஷின் முதல் வேலை, நிலாவிற்குப் புது அலைப்பேசியும் நம்பரும் வாங்கியதுதான்.)

அந்தப் பக்கம் இருந்த மனிதர், தெரியாத இலக்கத்திலிருந்து அழைப்பு வரவும், அதை ஏற்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அவர் யோசைனையிலேயே நேரம் செல்ல, அழைப்பு ஏற்கப்படாமலேயே நின்று விட்டது.

“ப்ச்” மதுவிற்கு சலிப்பு ஏற்பட்டது.

கொஞ்சம் பொறுத்து, மீண்டும் முயன்றாள்…

மறுபக்கம் இருந்தவர், மீண்டும் அதே எண்ணிலிருந்து,  அழைப்பு வரவும், சந்தேகம் கொண்டு உடனே அழைப்பையேற்றார்.

அவர் சந்தேகம் சரிதான் என்பது போல, அவர் செவிகளில் தித்திப்பாய் விழுந்தது, “மாமா” என்ற மதுவின் குரல். அந்தப் பக்கம் இருந்த ராஜா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

(நிச்சயம் மகிழ்ச்சித் தான்! மண்டபத்தை விட்டுச் சென்ற பெண், நலமாக இருக்கிறாளா? பாதுகாப்பாக இருக்கிறாளா? என்ற ஒரு தந்தையின் தவிப்பு அது; தன் மகளாக இருந்த, ஒரு பெண்ணின் மேல் கொண்ட பாசத்தின் தவிப்பு அது; இன்றைய நிலையில், நாட்டில் நடக்கும் அநியாயங்களை கேட்கும் பெற்றோர்களின் தவிப்பு அது;)

மதுவுடன் பேசிக்கொண்டிருப்பது,  வேறுயாருமில்லை நம்ம வெற்றியின் தந்தை ராஜாராம்.

“மது எப்படி இருக்க? பத்திரமா இருக்கியா?  ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்த?  எதுனாலும் என்கிட்டே சொல்லியிருக்கலாம் குட்டிமா?   உன்னைக் கூட்டிட்டு போன பையன் யார்?” என ராஜா, தொடர்ந்துக் கேள்விகளை அடுக்கினார்.

தான் அவர்கள் குடும்பத்திற்கு, ஏற்படுத்தியிருக்கும் அவமானத்தை மனதில் வைக்காமல். தன் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்,  கொடுத்துப் பேசும் அவரின் அன்பில் மனமுருகினாள், அந்தப் பேதைப் பெண்.

அவரின் அன்பினால், முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் “மாமா கொஞ்சம் பொறுங்க,  எவ்வளவு கேள்விக் கேட்பீங்க?  அங்க என்ன நடந்தது? முதலில் அதைச் சொல்லுங்க. எதுவும் பிரச்சனை வரலையே?”

 பெருமூச்சு விட்ட ராஜா “நீ கிளம்பும் முன் போட்ட மெசேஜை, தாமதமா தான் பார்த்தேன். நீ சொன்ன மாதிரியே வெற்றிக்கும் ஓவியாவிற்கும் திருமணத்தை முடித்து விட்டேன் .  இன்னும் கொஞ்ச நேரத்தில், இங்க கணக்கை முடித்துவிட்டு கிளம்பிடுவோம்.”

(ஆம்! மதுவின் முடிவுதான், வெற்றிச்செல்வன் ஓவியச்செல்வியின் திருமணம். ஏன்?  பின் வரும் பதிவுகளில்,  மதுநிலாவே தெளிவுபடுத்துவாள்.)

 (இரண்டாம் பதிவின் பிளாஷ் பாக்: இதுவரை கைப்பேசியில் பார்வையைப் பதித்து இருந்த ராஜா, ஒரு முடிவெடுத்தவராக “சரி வெற்றி, இனி மது உனக்கு வேண்டாம். அப்ப ஓவியா கழுத்தில தாலி கட்டு” அசால்ட்டாகக் குண்டை தூக்கிப் போட்டார்.) அவர் கைபேசியில் பார்த்தது மதுவின் மெசேஜை.)

அவர் பதிலில், தன் நெஞ்சத்தை அடைத்த பாரம், விலகினதை உணர்ந்தாள் மதுநிலா. “ரொம்ப சந்தோசம் மாமா. நான் இப்போ சென்னையில் இருக்கிறேன். பாதுகாப்பா இருக்கிறேன். நான் உங்ககூடப் பேசினது யாருக்கும் தெரியவேண்டாம். சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். எல்லாரையும் பத்திரமாப் பார்த்துக்கோங்க”

 எவ்வளவு முயற்சி செய்தாலும், வரும் கண்ணீரை தடுக்க முடியவில்லை  “அம்மா, அப்பாவைப் பார்த்துக்கோங்க. உங்களை நம்பிதான் போறேன்” என்றாள் கலங்கிய குரலில்.

 அவள் கண்ணீர்க் குரலைக் கேட்டுப் பதறிய ராஜா “குட்டிமா கவலைப்படாத. அவங்க என் பொறுப்பு. நான் பார்த்துக்கறேன். முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லு. யார் அந்தப் பையன்? ஏன் எங்ககிட்ட நீ விரும்புறதச் சொல்லலை?  நாங்கள் உன் விருப்பத்துக்குச் சம்மதிக்க மாட்டோமா?  நீ எங்களை அவளோ தான் நம்புனயா?” எனக் கோபத்துடன் முடித்தார்.

அவர் உறுதியில் நிம்மதியடைந்த மது, அவரின் அடுத்தடுத்த கேள்விகளில், தான் பேசாமல் பிரச்சனை முடிவிற்கு வராது என்றுணர்ந்து

“என்ன மாமா சொல்லச் சொல்லுறீங்க? நான் லண்டனிலிருந்து வரவும், எனக்குக் கல்யாணத்தைப் பத்தி, தகவல்தான் கொடுத்தீங்க. என் மனதில் என்ன இருக்குனு யாராவது கேட்டீங்களா?  என்னைப் பேச விட்டீங்களா? அதுதான் நான் விரும்பின வாழ்க்கையை தேடி கிளம்பிட்டேன் .”

அவர்கள் மேலுள்ள குற்றத்தை, அடுக்கிவிட்டுத் திடமாகப் பேச்சை முடித்தாள்.

 அவர்கள் செய்த தவறு புரிய, மனதைத் தேற்றிக்கொண்ட ராஜா “சரி குட்டிமா. எங்கள் மேல் தவறாகவே இருக்கட்டும். யார் அந்தப் பையன்? அதைச் சொல்லு”

 “அது நேரம் வரும்போது சொல்லுறேன். உங்களையும் சேர்த்து, எல்லாரையும் பத்திரமாப் பார்த்துக்கோங்க. நான் ஃபோனை, சுவிட்ச் ஆப் பண்ணிடுவேன், உங்களால் ட்ரேஸ் பண்ண முடியாது. பை” எனப் பேச்சைத் துண்டித்தாள்.  அலைபேசியையும் அணைத்துவைத்தாள். 

 ஒரு சலிப்பான தலையசைப்புடன், அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டார் ராஜாராம்.

 சிறிது நேரம் தன் வேதனையில் தவித்த மது. தன்னையறியாமல் உறக்கத்திற்குள் சென்றாள்.

ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்த பிரதாப், அவள் அறைக்குச் சென்று பார்க்க, அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். சத்தம் செய்யாமல், கதவை அடைத்துவிட்டு,  வரவேற்பறைக்கு சென்று காத்திருந்தான்.

அடுத்த அரை மணிநேரத்தில், ஆகாஷ் வீட்டிற்கு வந்தான். பிரதாப் மட்டும் இருக்கவும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “நிலா எங்க ப்ரது?” கேட்டபடி, அவன்  அருகிலமர்ந்தான்.

“நல்லாத் தூங்குறா. எழுப்பிவிட மனசு வரலை. அது தான் வந்துட்டேன். அவசரப் பட்டுட்டமோ, கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருக்கலாமோன்னு தோணுது?”

“என்ன பண்ண. இப்படியெல்லாம் நடக்கணும்னு விதி இருக்கும் போல. சரி நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டுவரேன். நிலா வரவும் சாப்பிடலாம்.” ஆகாஷ் சென்று விட்டான்.

அவன் வருவதற்குள் நிலா வந்துவிட்டாள்.

“பேபி, இப்ப எப்படி இருக்கு?  நான் வந்தப்போ, நல்லா தூங்கிட்டிருந்தயா அதுதான் உன்னை எழுப்பலை” பிரதாப்

“இந்தியா, திரும்பியதிலிருந்தே சரியான தூக்கமில்லை.  அது தான் நல்லா தூங்கிட்டேன் போல”

அவளின் மன உளைச்சலை, தெரிந்த அவன், ‘நான் இருக்கிறேன் உனக்குத் துணை’ என,  தன் வலதுக்கரத்தை நீட்ட, அதைப் பற்றி அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

(நிலாவிற்கு முன், அவளின் துணையாக இருகரங்கள் நீண்டிருக்கிறது. ஒன்று நட்பாக, ஒன்று தன்னுள்ளிருக்கும் காதலை உணர்ந்தும் உணராமலும். அந்தக் கரத்தை பற்றி மீள்வாளா? இல்லை அதை ஏற்க மறுப்பாளா?)

அப்பொழுது, அச்சிடப்பட்ட சில ஆவணங்களில், நிலாவிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டான். நிலாவும், அவன் மேலுள்ள நம்பிக்கையில், எந்தக் கேள்வியும் கேட்காமல், அதைப் படித்தும் பார்க்காமலேயே கையெழுத்திட்டாள்.

பிரதாப் மனதில், ‘தான் செய்யும் காரியம், சரியா? தவறா?’  எனக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது.  ஆனால் சூழ்நிலை கைதியான  அவனுக்கு வேறுவழியில்லை.

“அஷ் எங்க இன்னும் வரலையா”

“இதோ வந்துட்டேன்” என்று வந்து நின்றான் ஆகாஷ்.

“டார்லிங், நல்லா தூங்குனயா?”

அவள் பதில் சொல்லும் முன்னே பிரதாப் “வாங்கப் போய்ச் சாப்பிடலாம்.  ரொம்ப தாமதம் ஆகிடுச்சு”

ஆகாஷ் நிலா, ஒருவரையொருவர் பார்த்துக் கள்ளபுன்னைகை செய்து, அவனைப் பின் தொடர்ந்தனர். அவனை டென்ஷன் பண்ணிப் பார்க்க அலாதி பிரியம் இவர்களுக்கு.

இப்போது நிலாவின் அருகில் ஆகாஷ் அமர்ந்துகொள்ள, எதிரே பிரதாப். இருவரும், அவளுக்குப் பிடித்ததைப் பார்த்துப் பார்த்து பரிமாற, அவளும் அவர்களுக்குப் பரிமாற, என உணவு நேரம் சந்தோஷமாகச் சென்றது.

இவர்களின் ஒற்றுமையைப் பார்த்த கண்ணா, மனமுருகி இறைவனிடம் ‘இவர்கள் மூவரும், எப்பொழுதும் இதே சந்தோசத்துடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும்’ என வேண்டுதல் வைத்தார்.

அவர் வேண்டுதல் நிறைவேறுமா?

அதைக் குலைக்கத்தான் இறைவன்,  இரண்டாவது அடியை எடுத்து வைத்துவிட்டான்.   இப்பொழுது அவர்கள் செல்லப் போகும் இடத்தில்.

(ஆம்! இது இரண்டாவது அடி. முதல் அடியென்ன? பின் வரும் பதிவுகளில்)

அதை முதலிலே தெரிந்திருந்தால், இந்த பயணத்தைத் தவிர்த்திருப்பர்.

பின்னால் நடக்கப் போகும் விபரீதங்களை,

முன்னால் தெரிந்துகொள்ள நாம் என்ன யோகியாரா?

ஒரு சூரியன், இவர்களைச் சுட்டெரிக்கப் போகிறது. அது நன்மையில் முடியுமா?

அவர்கள் மதிய உணவிற்குப் பின், கண்ணாவிடம் சொல்லிக்கொண்டு, அருகிலுள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸிற்குச் சென்றனர். விதியும்! அவர்கள் பயணம் செய்த, காரின் பின்னயே வந்தது, பாவம் அவர்களறியவில்லை.

அவர்கள் வரும் வழியில், அவர்களைத் தாண்டிச்சென்ற காரில் இருந்த ஆடவனின் கண்களில், மதுநிலா பட்டுவிட்டதால்,   அவனின் நான்கு வருடக்  காத்திருப்பு முற்றுப்பெற்றது.

பின் எப்படி முன்னேறிச் செல்வது.

காரின் வேகம் குறைந்தது.

அவர்கள் காரை பின்தொடர்ந்தது.

அவர்களின் கார் சென்ற இடம் மெரினா மால். அங்கயே நமக்குத் தேவைப்படும், அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

இரு கார்களும், அடுத்தடுத்து நுழைந்து வண்டிகள் நிறுத்துமிடத்தில் (parking), அதன் பயணத்தை முடித்துக் கொண்டது.

இரண்டாவது காரிலிருந்த நபர்,  காரின் உள்ளிருந்தே, இவர்களைக் கண்காணித்தார்.

ஆகாஷ், பிரதாப், நிலா மூவரும் காரிலிருந்திறங்கி, மால்லை நோக்கிச் சென்றனர்.  அந்த இரண்டாவது காரில், வந்த நபரும், இவர்களைச் சிறிது இடைவேளைவிட்டு பின்தொடர்ந்தார்.

(பின்தொடர்ந்தார்னுச் சொல்லுறதைவிட,  இங்க பின்தொடர்ந்தான், என்று சொல்லுகிறது தான் சரி)

அவன் அவர்கள் மூவரையும் தொடர்ந்தாலும், அவன் பார்வை முழுவதும் நிலாவை மட்டுமே மையம் கொண்டது.

அவன் பார்வையிலிருந்ததென்ன? காதலா? 

 ‘ஆம் காதல் தான்.’ என்று அவன் விழிகள் சொல்லும்.

ஆகாஷ், பிரதாப் இருவரும் நிலாவிற்கு, அரணாக இருந்தனர்.  அவர்களை மீறி இவன் நிலாவை நெருங்கவேண்டும்.  அதற்கு நிலாவைத் தனியே சந்திக்க வேண்டும்.  அந்த நேரத்திற்காகக் காத்திருந்தான்.

வீட்டை விட்டு வந்த மதுநிலா,  வெறும் கைப்பையை மட்டும் எடுத்து வந்திருந்ததால் அவளுக்குத் தேவைப்படும் அனைத்தும் வாங்க வேண்டியிருந்தது. அதனால் அங்கு அதிக நேரம் செலவழித்தனர்.

அவர்களைத் தொடர்ந்த சூர்யாவிற்கு, மிகவும் கொண்டாட்டமானது. நிலாவை அதிக நேரம் ரசிக்க முடியுமல்லவா. அவனுக்கு கசக்கவாப் போகிறது?  சூர்யாவின் நான்கு வருடக் விரதத்திற்கு நல்ல விருந்து. கண்களால் அவள் அழகை படம்பிடித்து, இதயத்தில் மாட்டிக்கொண்டான்.

பிரதாப், ஆகாஷ் பார்க்கறது எல்லாம் வாங்கி குவிக்க. அதில் கடுப்பான நிலா “நீங்க இரண்டு பேரும் போய், உங்களுக்கு எதுவும் தேவையிருந்தால் வாங்குங்க. இல்ல கம்முனு அங்க உட்காருங்கள். நான் வாங்கிட்டு வரேன்”

ஆகாஷ், பிரதாப் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ‘இவ என்ன சொல்லுறது, நம்ம என்ன கேட்கிறது’ என லுக்கு விட்டுக்கொண்டு, அடுத்த பகுதிக்குள் நுழைந்து விட்டனர். நிலாவிற்கு இவர்களின் பார்வை புரிந்தாலும், ‘திருந்தாத கேஸ்’ எனத் தலையில் அடிக்கமட்டும் தான் முடிந்தது.

சூர்யாவிற்கு எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. அதைத் தவறவிட அவன் என்ன முட்டாளா?  சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு ,  அவளை நெருங்கினான், அவளுக்குப் பிடித்த ஒற்றை சிகப்பு ரோஜாவுடன்.

“ஹாய் நிலா! எப்படி இருக்க? எப்ப லண்டனில் இருந்து வந்த?” எனக் குரல் வந்த திசையைப்  பார்த்த நிலா, சூர்யாவை அடையாளம் கண்டுகொண்டாள்.

நீண்ட நாட்களிற்கு பின், கல்லூரி நண்பனைச் சந்தித்த நிலா.

“ஹாய் சீனியர்! நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? நான் இந்தியா வந்து பத்து நாள் ஆச்சு.”

“நான் நல்லா இருக்கேன். உன்னை சந்திச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்பா கூட சேர்ந்து, கோவையில் பிசினஸ் பண்றேன்.  இன்னமும் என்ன சீனியர் சொல்லுற, சூர்யா சொல்லாமே?”

“சரி சூர்யா இனி அப்படியே கூப்பிடறேன். நானும், என் நண்பர்களுடன் சேர்ந்து, இங்க ஒரு டெக்ஸ்டைல்ஸ் ஆரம்பிக்கப்போறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா, என்னோட பிரென்ட் மேகவர்ஷினி” என அவன் முகம் பார்த்தாள்.

(தவறான கேள்வி, தவறான மனிதனிடம். அவன் தான் மதுநிலா சம்மந்தப்பட்ட எந்த ஒரு சிறு விஷயத்தையும் மறந்ததில்லையே. முக்கியத்தினங்களில், அவள் விரும்பி அணியும் உடையின் நிறம் வரை, இன்னும் நினைவில் உள்ளதே. அதிலும் மேகவர்ஷினி தான் அவனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை )

அதைச் சொல்லவா முடியும். தலையை மேலும் கீழும் ஆட்டி ‘தெரியும்’ என்றான் சைகையில்.

“அவளும் எனக்குத் துணையாகச் சேர்கிறாள்”

சூர்யா தனது நம்பரை, அவளிடம் தந்து “வாழ்த்துக்கள் நிலா. எதுவும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னைத் தொடர்புகொள்”

நிலா ‘சம்மதமாக’ தலை அசைத்தால். அப்போதுதான் தன் கரங்களில் இருக்கும் ரோஜாவின், ஞாபகம் வந்து அவளிடம் நீட்டினான்.

நிலாவின் கரங்கள், அந்த ரோஜாவைத் தயங்காமல் வாங்கிக்கொண்டது.

சரியாக அந்த நேரத்தில், தவறாக வந்து நின்றனர் பிரதாப், ஆகாஷ், கண்களில் கொலைவெறியுடன்.

சூர்யா, சுதாரிக்கும் முன் இருவரும், அவனைப் புரட்டி எடுத்துவிட்டனர். பின்ன, தன் நிலாவிடம், வேறொருவர் பேசுவதா,  அதுவும் அவளுக்கு ரோஜாவைக் கொடுத்தால், சும்மா விடுவார்களா.

இங்கே நடப்பதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது.

நிலா மிகவும் சிரமப்பட்டு, சூர்யாவை அவர்களிடம் பிரித்து “இரண்டு பேரும் என்ன பண்ணுறீங்க? அவர் என்னோட காலேஜ் சீனியர்.”

(சூர்யா மனதிற்குள் “என்ன நிலா, நான் உனக்கு வெறும் காலேஜ் சீனியர் தானா”)

“யாராவேனா இருக்கட்டும். அவன் எப்படி உனக்கு ரோஜா தரலாம்?” பிரதாப்

(சூர்யாவின் மனம் “அவள் யாரோ இல்லை. நான் கட்டிக்க போற பெண். நான் அவளுக்கு பூ கொடுக்காமல், வேற யார் கொடுப்பா?” என உரிமைக் குரல் கொடுத்தது)

“நீ எப்படி அதை வாங்கலாம்”

(“ம் கையாளத் தான்” சூர்யா மனம்)

“அதுதானே” ஆகாஷ் ஒத்துதினான்.

இரண்டு பேரையும் முறைத்த நிலா “இப்போ இரண்டு பேரும் பேசாமல் இருக்கீங்க”  எனவும்.

எரிமலையாகக் கொதித்த இரண்டு ஜீவனும்,

பனிமலையாக அமைதி காத்தனர்.

ஆனால் சூர்யாவை முறைப்பதை மட்டும் விடவில்லை.

இதை வேடிக்கை பார்த்த கூட்டம் கலைந்து சென்றது.

கலைந்து சென்றவர்களை, ஒரு பார்வை பார்த்துவிட்டு. ஆகாஷ், பிரதாப்பை நோக்கி உஸ்ணபர்வையை வீசினாள்.  அவர்கள் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனப் பார்வையைத் திருப்பிக் கொண்டனர்.

‘இவர்களைத் திருத்த முடியாது’ என நினைத்த நிலா ஆகாஷிடம் “நீ போய் வாங்கின திங்ஸ,  எடுத்துட்டு கார்க்கு வா” என அனுப்பிவிட்டு, சூர்யாவின் பக்கம் திரும்பினாள்.

அதுவரை அவர்களிருவரையும், முறைத்து நின்ற சூர்யா, நிலா தன் பக்கம் திரும்பவும், அவளை நோக்கி ஸ்நேக சிரிப்பு ஒன்றை கொடுத்தான்.

“என்னை யாரென்று தெரியாமல்தான, அப்படி பண்ணுனாங்க, பரவாயில்லை விடு நிலா,”

(நிலா மனதில் ‘தெரிஞ்சாமட்டும் உன்னை விட்டு விடுவார்களா’)

சூர்யாவின், நிலா என்ற அழைப்பில்,

இறங்கிய பிரதாப்பின் கோவம்,

ஜெட் வேகத்தில் ஏறியது.

அதை உணர்ந்த நிலா அவசரமாக “சரி சூர்யா, நான் அப்பறம் கால் பண்ணுறேன். கொஞ்சம் வேலை இருக்கு.  மறுபடியும் சந்திக்கலாம்” என தன் கரத்தை நீட்டினாள்.

அவள் கரத்தை பற்றிக் குலுக்கிய சூர்யா, மனமே இல்லாமல் விடுவித்தான்.

“சரி நிலா, மறக்காமல் கூப்பிடு.  உன்னோட காலை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.”  என விடைபெற்று, திரும்பி நடந்தான்.

சூர்யாவின் உரிமை பேச்சில், கொதித்தெழுந்தான் பிரதாப். அவனை நோக்கிச் செல்லப்போக, அவனின் கரத்தை பிடித்திழுத்து, காருக்கு கூட்டிச் சென்றாள்.

“என்ன பேபி நீ, அவன் என்ன பேசினாலும் கேட்டுட்டு இருக்க”

“சூர்யா என்ன தப்பா பேசினார்? அவர் மேல் கோபப்பட”

“அவன் எப்படி உன்ன நிலா சொல்லலாம்?  எப்படி பூ கொடுக்கலாம்? அதைத் தூக்கிப் போடாமல், இன்னமும் வச்சு இருக்க” என்று சொல்லி,  அவள் கரத்திலிருந்த ரோஜாவைப் பறித்தான்.

“வேண்டாம் பிரதாப். அந்த பூவை கொடுத்திடு.” என நிலா கோவம் கொண்டாள்.

“முடியாது” என பிரதாப் மறுக்க

 அவள், அவனிடமிருந்த பூவை பிடுங்க முயற்சிக்க

 அதில் அவர்களறியாமல், மிக நெருங்கிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

இதுவரை அவர்கள் அறியாத நெருக்கம். காலையில் உணர்வு பிடியில் வந்த நெருக்கம். இப்போது அதீத கோபத்தினால் வந்த நெருக்கம். இந்த நெருக்கத்தை அவர்கள் உணர்வார்களா?

இவர்கள் உரையாடல் வாகன நிறுத்துமிடத்தில் நடந்துகொண்டிருந்தது.  காரில் அமர்ந்திருந்த சூர்யா, இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து,  மனதில் வன்மத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறான். 

மதுநிலாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும், அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று அவன் மனதில் பதிந்துவிட்டது. அதில் பிரதாப், ஆகாஷ் யாருக்கும் இடமில்லை, என்பது மட்டுமே அவன் எண்ணம்.

வெற்றியின் கோபம்

சூர்யாவின் வன்மம்,

அவர்களை சுழற்றி அடிக்கப் போகிறது.

அது தெரியாத மூவரும் லண்டன் செல்ல விமானத்தில் ஏறியிருந்தனர்.

சூர்யாவினால் இவர்கள் பிரிவார்களா?

 நிலாவின் துணை யார்?

 சூர்யா? ஆகாஷ்? பிரதாப்?

விரைவில்