சூரியநிலவு 10

அத்தியாயம் 10

ரம்மியமான மாலை பொழுது,  எங்கு திரும்பினாலும் சூரியஒளியில் தக தகவென மின்னும், தங்கத்தைப் போல மினுமினுத்தது அந்த மணல் பரப்பு. சுற்றி ஆரஞ்சு நிறத்தில் ஆங்காங்கே, பச்சை வண்ண மணற் செடிகளுடன் காட்சியளித்தது டெசெர்ட்.

டெசெர்ட் சஃபாரி(Desert safari) வந்திருந்தனர் நண்பர்கள். அவர்கள் பயணிக்கும் ரோட்டை தவிர, காணுமிடமெங்கும் மணற் கூட்டங்கள். 

அவர்களுடன் இன்னமும் சில, சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினார்கள். அவர்கள் வந்த வாகனத்திலிருந்து அனைவரையும் இறக்கி, வேறொரு சஃபாரி செய்ய ஏதுவான லேண்ட் க்ருஸேருக்கு(land cruiser) மாற்றினர்.

அந்த மணல் மேட்டில் அங்கும் இங்குமாய்,  சீறிக் கொண்டிருந்தது சில லேண்ட் க்ருஸேர்கள். செல்லும் பாதையை நிர்ணயிக்காமல், துள்ளி ஓடும் மானைப் போல, ஒவ்வொரு மணல் மேட்டிலும் சீறிக் கொண்டிருந்த, கார்களைக் காண்பதே கண்களுக்கு அவ்வளவு பரவசமாக இருந்தது.

அப்படியொரு பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தனர்.  பிரதாப் முன்னிருக்கையில் ஓட்டுனரருகே அமர்ந்துகொண்டான். ஆகாஷ், நிலா பின்னிருக்கையிலேற, அனைவரும் சீட் பெல்ட்டை அணிந்துகொண்டனர்.

மீதமான வேகத்தில் கார் மணற்க்கூட்டத்தை நோக்கி சென்றது.  திடீரென வேகமெடுத்து, மணற்குன்றிலேறி ‘சர்’ என திரும்பிச் சென்றது. உள்ளிருந்த நம்மவர்கள், “ஓஓஓ” என மகிழ்ச்சி ஆரவாரமெழுப்பினர்.

ஒரு பதினைந்து முதல் முப்பது நிமிடங்கள் வரை,  இப்படியே பயங்காட்டி விட்டு,  டெசெர்டின் நடுவிலிருந்த ஒரு குடிலில் இறக்கினர்.

விருப்பமுள்ளவர்கள் குவாட் பைக் ஓட்டலாம், ஒட்டக சவாரி செய்யலாம். அரேபியரின் பாரம்பரிய உடை (அபயா,  கண்டுரா) அணிந்து புகைப்படம் எடுக்கலாம். கைகளில் மெஹந்தி டிசென் வரைந்துகொள்ளலாம். சூரிய அஸ்தமனதை புகைப்படம் எடுக்கலாம்.

பிறகு பாரம்பரிய நடனமான பெல்லி டான்ஸ்,  தண்டோரா நடைபெறும். இரவு உணவை அங்கயே முடித்த பின், திரும்ப அழைத்துச் செல்வர்.

அஸ்தமனமாகும் சூரியனைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.  நிலாவின் விழிகள் பிரதாப்பையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அவனிடம் ஒரு விலகல் தெரிந்தது.  பலசமயம் தன்னை தவிர்ப்பது போலும், சிலசமயம் மிகவும் நெருங்குவது போலும் தோன்றியது. ஏதோ தவறாக உள்ளது.

காலையில் அவன்மேல் நீரை ஊற்ற சென்ற போது நடந்ததை நினைவுகூர்ந்தாள்.

தான் அவன்மேல் நீரூற்ற முயன்றதிற்கு, எதிர்வினையை எதிர் பார்த்து, தன்னிரு கரத்தால் அவள் முகத்தை மறைத்து, அவன் படுக்கையில் கிடந்தாள். சிறிது நேரம் பொறுத்த அவள், ஒரு அசைவும் அவனிடம் தெரியாததால் , தன் முகம் மறைத்திருந்த கரங்களை விலக்கினாள். அவள் விழிகள் சந்தித்தது, தன்னை ரசித்து பார்க்கும் பிரதாப்பின் விழிகளை.

அவன் விழிகள் அங்குலம் அங்குலமாக, அவள் வதனத்தை ரசித்துக் கொண்டிருந்தது.  இவள் விழிகளை திறக்கவும் சட்டென்று அவன் பார்வையை விலக்கி கொண்டான். அந்த நொடி நேர தடுமாற்றத்தைக் கண்டுகொண்டாள்.

அதை காட்டிக்கொள்ளாமல்,”நீ முழிச்சுட்டுத் தானிருந்தாயா யு சிட்டர்”  என அவன் மார்பிலேயே தன் கரத்தால் குத்தினாள்.

அவளிரு கரத்தை தன்னொரு கரத்தால் அடக்கி,”நீ பேபி மாதிரி விளையாடுனயா?  உன் ஆசையை ஏன் கெடுப்பானேனு கம்முனு இருந்தேன்”

“இப்ப மட்டும் எதுக்கு என்னை பிடிச்ச?”  சிணுங்கினாள்.

பிரதாப்பின் இதய துடிப்பு ஏகத்திற்கும் ஏரியது.  சும்மாவே மயங்கி கிடப்பவன் இவ்வளவு அருகாமையில் இப்படி சிணுங்கினாள். மொத்தமாக அவளிடம் விழுந்தான்.

“அப்பறம்! நீ முழு பாட்டில் தண்ணியையும்,  என் மேல உத்தர வரை நான் பார்த்துகிட்டு இருக்கணுமா ?”  என புருவமுயற்தினான்.

“அப்ப மோதலயே எழுந்திருச்சிருக்க வேண்டியது தானே”  கொஞ்சலாக

“அப்படி எழுந்திருச்சிருந்தால்,  உன்னோட இந்தச சிணுங்கலை எப்படி ரசிக்கிறது?” என ஒரு விரல் கொண்டு அவள் முகவடிவை அளந்தான். 

 “போடா” என அவனைத் தள்ளிவிட்டு எழுந்தமர்ந்தாள்.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தை அனைத்தும், அந்த அணைப்பினுடனே நடந்தது.

அதை இப்பொழுது நினைக்கும்போது,  சூரியனுக்குப் போட்டியாக, அவளின் முகமும் சிவந்தது. அவனது விலகலுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்து கொண்டாள். 

பின் கிளம்பும் வரை மகிழ்ச்சியாகவே சென்றது. 

‘அவர்களின் நெருக்கம்’  இருவரால் உணர்ந்தும் ஆராயப்படவில்லை.

“ஆராய்ந்திருக்க வேண்டுமோ?” அப்படி ஆராய்ந்திருந்தால், பின்னால் நடக்கவிருக்கும் பல விபரீதத்தைத் தடுத்திருக்கலாம்.  விதி வலியது.

வரும்போது அமர்ந்தது போல்  இல்லாமல், இப்போது நிறைய ஆட்களை ஒரே வண்டியில் ஏற்றினர்.

மீண்டும் பிரதாப்  முன்னிருக்கைக்குச் செல்லப்போக, யாரும் அறியாமல் அவன் கரத்தைப் பற்றி அவனைப் பின்னிருக்கையில் ஏற்றி, தானும் ஏறிக்கொண்டு கதவை அடைத்தாள்.

மறுபுறம் ஆகாஷ் ஏறிக்கொள்ள, அவனையடுத்து வேறொருவர் ஏறிக்கொண்டார்.  மூன்று நபர்கள் அமரும் இருக்கையில் நான்கு பேர் ஏறியதால் இடம்பற்றா குறை. கொஞ்சம் நெருக்கி அமரவேண்டிய சூழல்.

என்ன தான் வாகனம் மெதுவாகச் சென்றாலும், மேடு பள்ளம் இருக்க தான் செய்தது.  நிலா கொஞ்சம் முன்னாள் நகர்ந்து அவர்களுக்கு இடமளித்ததால், இப்போது வண்டியின் குலுங்கலில் அவளால் சமநிலையில் இருக்க முடியாமல் தள்ளாடினாள்.

தானாக பிரதாபின் கரம் நீண்டு அவளின் இடையை பிடித்துத்  தன்னோடு இருக்கி கொண்டது. 

அவன் மனம் கதறியது,’உன்னைவிட்டுத் தள்ளி இருக்கனும்னு பார்த்தா,  இப்படி முன்னைவிட நெருங்கி வந்து என்னைப் பாடாய் படுத்துரையே நிலா. என்னோடவே காலம் முழுக்க இருந்திடேன். உன்னைக் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கறேன்.’ என வாய் வார்த்தைகளாகச் சொல்ல முடியாமல் மனத்தோடு மறுகினான்.

இறங்கும் வரை வாகனத்தின் அசைவோடு, அவன் கரங்களும் அவள் இடையோடு உறவாடியது. அவர்கள் ஹோட்டல் அறையை அடையும்வரை அந்த ஸ்பரிச போதை தெளியவில்லை.

காலையிலிருந்து துபாயைச்  சுற்றியுள்ள ம்யூசியம், கோவில்,  அட்லாண்டிஸ் ஹோட்டல், பாம் ஜுமேரா, ஜுமேரா பீச் எனச் சுற்றியலைந்து கடைசியில் வந்து சேர்ந்தது டெசெர்ட் சஃபாரி.

உடலழுத்து எப்போதடா போய் படுக்கையில்  விழுவோமென்று இருந்தது. ஆனாலும் பிரதாப்பிடம் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நிலா.

“குட் நைட்” சொல்லி இருவரும், தங்கள் அறையை நோக்கி திரும்ப,  பிரதாப் கரத்தை பிடித்து,”நான் உன்கிட்ட பேசணும்” என்றாள்.

“சொல்லு” என அவள் முகம் பார்த்தான்.

“தனியா பேசணும்”

“நிலா” என ஆகாஷ் ஏதோ பேச ஆரம்பிக்க, அவனை ஒரே பார்வையால் அடக்கிவிட்டு.  பிரதாப்பை தன் அறைக்கு இழுத்துச் சென்றாள்.

பிரதாப்பும் ’இப்ப என்ன பூகம்பத்தை கிளப்பப்போகிறாளோ தெரியலையே’  புலம்பிக்கொண்டே, பலியாடு போல் அவள்பின் சென்றான்.

ஆகாஷ் இருவரையும் புரியாத பார்வை பார்த்துவிட்டு  தோளைக் குலுக்கிக்கொண்டு அறைக்குச் சென்று விட்டான்.

அறைக்குச் சென்று அவனை விடுவித்த நிலா,  தன் கரங்களைக் கட்டிக்கொண்டு, அவனைக் கூர் பார்வை பார்த்து,”என்ன பிரச்சனை சொல்லு?”

அவள் எதைக் கேட்கிறாளென புரியாதது போல்,”எனக்கு என்ன பிரச்சனை? நான் நல்லா தான் இருக்கேன்.”

“உனக்கு என்ன பிரச்சனை. நீ நல்லா தான் இருப்ப. உன்னால் மத்தவங்களுக்கு தான் பிரச்சனை.”

“ஹே என்னால் யாருக்கு என்ன பிரச்சனை. நான் பாட்டுக்கு நான் உண்டு, என் வேலை உண்டு, மொபைல் உண்டுன்னு இருக்கேன்.”

“இது இதுதான் பிரச்சனை.  ஏன் என்னை அவாய்ட் பண்ணுற? என் கிட்ட கூட வராம விலகிப் போன.”

“லூசு மாதிரி பேசாத. நான் எப்ப உன்னை அவாய்ட் பண்ணினேன்.  யு ஆர் மை சுவீட்டி. என்னால் உன்னைவிட்டு விலகமுடியாமா?” மறைமுகமாகத் தன் மனதைச் சொன்னான்.

“நீ பொய் சொல்லுற. இந்த இரண்டு நாளா உன்னோட விலகலை என்னால் உணரமுடியுது.”

”இல்ல பா.  என்னால் உன்னைவிட்டு விலக முடியாது.”

”இல்ல! நேத்து போட்டோ எடுக்கும்போது அக்ஷ் கிட்டத் தான் நின்ன.  நைட் ஜாலியா பேசலாம்னு வந்தா, என்னமோ நீ தான் உலகத்திலேயே, வேலை பார்க்கற ஒரே ஜீவன் மாதிரி, மொபைல்ல தலையை புதைச்சுகிட்ட. இன்னைக்கு காலையிலிருந்து தள்ளியே இருந்த. சஃபாரிக்கு கார்லா ஏறுனா முன்னாடி போய்ட்ட.”

இவ்வளவு நம்மைக் கவனித்தலா மகிழ்ச்சியானது.

“இல்லடா எதார்த்தமா நடந்தது.”

“நீ என்னைத்  தப்பா நினச்சுட்ட தான?”

“உன்னைய தப்பாவா எதுக்கு?” குழப்பமாக வினவினான்.

“அது அன்னைக்கு நம்ம பைக் ரைடு போனபோது”  வார்த்தையைக் கோர்க்க முடியாமல் தடுமாறினாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள்,  எனப் புரிந்தவன் குறும்பு புன்னகையுடன்,”பைக்ல போன அப்ப” எடுத்துக் கொடுத்தான்

தலையைக் குனிந்து கொண்டே,”அப்ப நான் உன்னை ஹக் பண்ணுனேன்ல. அத நீ தப்பா நினச்சுட்டல்ல. அது வேணுமுன்னு பண்ணலை, பயத்துல தான் அப்படி பண்ணிட்டேன்.” தவறு செய்த  சிறுமியாய் கலங்கி நின்றாள்.

தன்னுடைய விலகல்! அவளை எந்தளவு பாதித்திருக்கிறது, என்பதை புரிந்த அவன் மனதில் பெரும் வலி.  இதை வார்த்தைகளால் சரி செய்ய முடியாது, என்பதை புரிந்து அவளை இழுத்து அணைத்திருந்தான்.

திடீரென இப்படி கட்டிப் பிடிப்பானென நினைக்காத பெண்,  திகைத்து அவன் முகம் பார்த்தாள். அவள் உணர்விலிருக்கும் போதே தன் இரண்டாவது அச்சாரத்தை அவள் நெற்றியில் பதித்தான். திகைப்பிலிருந்து மீளாத அவள் விழிகளை நேற்கொண்டு சந்தித்தது,

“இதோ இப்ப நான் உன்னைக் கட்டிபிடுச்சு, முத்தமும் குடுத்திருக்கேன். நீ என்னைத்  தப்பா நினைப்பயா?” மயக்கும் குரலில்.

திகைப்பிலிருந்த பெண்!  என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், மகுடிக்கு மயங்கும் நாகம் போல்,’இல்லை’ எனத் தலையை ஆட்டினாள்.

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,”அப்பறம் எப்படி நான் மட்டும் உன்னை தப்பா நினைப்பேன்?”  கேள்வியை அவள் பக்கமே திருப்பினான்.

அவள் திருதிருத்திருந்தாள்.

“உங்கிட்ட எப்படி எனக்கு உரிமை இருக்குதோ,  அது மாதிரி என்கிட்ட உனக்கு மட்டும் எல்லா உரிமையும் இருக்கு. யு ஆர் மை ஸ்வீட் ஏஞ்சல்.” என்றான்  அழுத்தத்தோடு.

“இருக்கு தானே?” என கேட்டு, அவளை எல்லா பக்கமும் மண்டையை உருட்ட வச்சு, உறுதிப் படுத்திக்கொண்டான்.

“சரி இன்னைக்கு நிறைய அலைச்சல். இந்த குட்டி மூளை, தேவை இல்லாமல் அதிகம் யோசிச்சு டையர்ட் ஆகியிருக்கும்.  தூங்கு! நாளைக்கு ஈவினிங் வர பிரீ. நீ முக்கியமா பார்க்க வந்த எக்ஸ்போ போகலாம். டிக்கெட் வாங்கியாச்சு.”

“குட் நைட் மை ஏஞ்சல்” என மீண்டும் முத்தமிட்டு விலகினான். 

கள்ள புன்னகையுடன் அவள் அறையிலிருந்து வெளியேறினான்.

நிலா தான் குழம்பி நின்றாள்.”இவன் என்ன சொல்லிட்டு போறான்.  கிஸ் பண்ணுவேன்னு சொல்லுறானா? இல்ல கிஸ் பண்ணினா தப்பா நினைக்காத சொல்லுறானா? ஏற்கனவே நான் குழம்பி இருக்கேன், இதுல இவன் வேற. இவனிடம் இனி இத பத்தி பேசக் கூடாது சாமி.” என அறிவுப்பூர்வமான முடிவை எடுத்தாள்.

அடுத்த ஐந்து நாட்களும் துபாயை மனம்போலச் சுற்றினர். (அவர்கள் பார்த்தது மிராக்கள் கார்டர்ன், துபாய் ஃபிரேம், துபாய் பார்க்ஸ் தீம் லேண்ட், ஸ்கை துபாய், க்ளோவ் கார்டர்ன்)(Miracle gardern, Dubai frame, Dubai parks theme land, skidubai, glow gardern)

துபாயிலிருந்து லண்டன் செல்லும் விமானத்தில் ஏறியிருந்தனர்.  பெற்றோர் நினைவில் நிலாவின் மனம் கடந்த காலத்தில் ஆழ்ந்தது.

*********************

மதுரையில் வெற்றி கருணின் சகோதரியுடன், தன்னை அறிமுகப்படுத்திக்  கொண்டு பேசினான்.

“வணக்கம் சிஸ்டர் நான் வெற்றி.  கருணோட பிரண்ட்.”

“சொல்லுங்க, அண்ணா சொன்னான். நீங்க பேசுவீங்கன்னு. என்ன தெரியணும் எங்கள் பாஸை பத்தி.”  நேரே விஷயத்துக்கு வந்தாள்.

வெற்றி மனதில்,’அவனுங்க  மாதிரியே ஸ்டாப்யையும் ட்ரெயின் பண்ணி வச்சிருக்கானுக. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுது.’ என நினைத்து,  போலி புன்னகையோடு,”உங்க பாஸ் ஆகாஷும் பிரதாப்பும் தான”

“ஆமா மிஸ்டர் வெற்றி. உங்களுக்கு என்ன  தெரியணும்.”

“அவங்களை ஒரு வேலை விஷயமா பார்க்கணும்.  எப்ப வந்தா அவங்களை பார்க்கலாம்?”

“மன்னிக்கணும் சார்!  அவங்க இப்ப இங்க இல்லை.”

“எங்க இருக்காங்க தெரியுமா? நான் போய் பார்த்துக்கறேன்.”

“அதுலாம் எங்களுக்கு தெரியாது.  அவங்க வெளிநாடு போய்ட்டாங்க. வர எப்படியும் ஆறு மாசத்துக்கும் மேல ஆகும்னு பேசிக்கறாங்க.”

“வெளிநாட்டுக்கா எதுக்கு?”

“ம்ம் அவங்களுக்கு கல்யாணம்.”

“என்னமா இப்படி சொல்லுறீங்க?”

“பின்ன என்ன சார்.  நாங்க ஒரு ஸ்டாப் அவங்க பர்சனல் எப்படி எங்களுக்கு தெரியும்?”

தன் தவறை உணர்ந்த வெற்றி,”சாரிமா அவங்க குணம் எப்படினு தெரியுமா?”

“குணம்ன்னா?”

“பெண்கள் விஷயத்தில?” கேட்கும் போதே, உயிர் போய் உயிர் வந்தது. என்னதான் அவனை வேண்டாம் என்று, அவள் போய் இருந்தாலும் பாசம் இருக்கத்தான் செய்தது.

“என்ன சார்! இப்படி கேட்டுடீங்க,  அவங்க நெருப்பு, பெண்கள் கிட்டப் போனாலே கண்ணால எரிச்சுடுவாங்க. ஆமா எதுக்கு இதுலாம் கேட்கறீங்க?” சந்தேகமாக.

‘ஆமா ரொம்ப சீக்கரம் கேட்டுட்டீங்க’ என மனதில் நினைத்து.”எங்களுக்கு அவங்க ஜாதகம் வந்தது” என அடித்துவிட்டான்.

“யாருடைய ஜாதகம் வந்துச்சு?

“ஆகாஷ்” அவன் தானே அவளை அழைத்துச் சென்றது அதை வைத்து.

“ஆகாஷ் சாரா, அப்போ சரி,”

“ஏன் பிரதாப்க்கு என்ன?”

“அவருடைய அத்தை பெண்ணைத் தான்,  கட்டிக்குவாருனு பேச்சு.”

“அப்படியா சரி,  அவங்க வந்தால் சொல்ல முடியுமா?”

“இல்ல சார் அது முடியாது” தயங்கினாள்.

வெற்றியும் அவளை வற்புறுத்தாமல்,”சரி நான் பார்த்துக்கறேன். நன்றி” சொல்லி போனை அணைத்தான்.

‘பெண்கள் விஷயத்தில் நெருப்பு’  என சொன்னதை, வெற்றியால் நம்ப முடியவில்லை. 

இப்ப எதற்கு வெளிநாடு  போனார்கள்? மதுவை என்ன பண்ணுனாங்க?  நம்ம கிட்ட இருந்து மதுவை மறைக்கப் போய்டாங்களா? இப்போ என்ன பண்ண?

ஓவியா வந்து அவன் தோளில் கைவைக்க,  திரும்பி ஓவியாவை அணைத்துக்கொண்ட அவன்,”மதுவை எப்படிக் கண்டுபிடிக்க போறேன் தெரியல அம்மு? பிரதாப், ஆகாஷ் வெளிநாடு போய்டாங்க. மது எங்க தெரியலை? சின்ன வயசிலிருந்து ஒன்றாக வளர்ந்த பெண், பத்திரமா இருக்காலா தெரியலை?” எனப் புலம்பினான்

இவர்கள் நினைவும் கடந்த காலத்திற்குச்  சென்றது.

நாமும் பயணிப்போம்

அடுத்த அத்தியாயத்தில்