சேரன் தலைவி-3 இளவரசன்

 

அடர்ந்த காட்டுப் பாதையில் குழலியின் வெள்ளைப்புரவியும்,வீரனின் கரியநிறப்புரவியும் நார்முடி சேரலின் அரண்மனையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.எல்லையில்
வேல் பிடித்த வீரர்கள் அணிவகுத்து நின்றிருந்தனர்.தாண்ட விட மாட்டார்களோ என்று எண்ணி குழலி தயங்கிய போது மாயாஜாலம் போல குழலியைக் காப்பாற்றிய வீரன் தன் கையிலிருந்த முத்திரை மோதிரத்தை காட்டவும் அனைத்து வீரர்களும் தலைவணங்கி அவர்களுக்கு வழி விட்டு விலகி நின்றனர்.ஆவென கண்களை விரித்தாள் குழலி.சிறிது தூரம் சென்ற மேல் லேசாக,

“வீரரே! தாங்கள் யார்?முத்திரை மோதிரம் இருக்கும் அளவுக்கு தங்கள் உத்தியோகம் பெரிதானதா?”என்று கேள்வியெழுப்பினாள்.

குழலியின் கேள்வியில் எழுந்த நகையை வாயுள்ளையே அடக்கியவன்,

“நான் இளவரசரின் அந்தரங்க காவலன்.என் மேல் இருக்கும் அளவுகடந்த நம்பிக்கையால் அவரின் முத்திரை மோதிரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்.தேவை என்றால் மட்டுமே நான் இதை உபயோகப்படுத்துவது”

“தாங்கள் என்னை சந்தித்து சில நாழிகை நேரம் தான் ஆகிறது…எனக்காக முத்திரை மோதிரத்தை காட்டுக்கிறீர்கள்!….ஒருவேளை நான் வேற்று நாட்டு ஒற்றளாக‌ இருந்தால்?”

அவள் கேள்வியில் லேசாக சிரித்த வீரன்,

“இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ போர்களங்களை கண்டிருக்கிறேன்.சேர நாட்டின் நன்மைக்காகவே வாழ்கிறேன்.அப்படியிருக்கும் போது ஒற்றர் யார் நாட்டுப்பற்றுள்ளவர் யார் என்று என்னால் பகுத்தறிய முடியாதா? உங்கள் கண்களில் நாட்டுப்பற்று அனலாக துலங்குகிறது…உங்களை சந்தேகிப்பவன் நிர்மூடன்”

சில நாழிகைக்குள் தன்னை இவ்வளவு நன்றாக புரிந்து கொண்ட அவ்வீரனின் அறிவுக்கூர்மை குழலியை திகைப்படைய செய்தது.

அவள் திகைப்பை கலைத்தது அடுத்து வீரன் கேட்ட கேள்வி,

“பூழியின் இன்றைய நிலையைப் பற்றி விரிவாக கூறுகிறீர்களா?”

“வீரரே!நீங்கள் பூழிக்கு வந்திருக்கிறீர்களா?”

ம்சின்னஞ்சிறுவனாக இருந்த போது?மங்கலாகத் தான் நினைவிருக்கிறது!”

“குறிஞ்சி,மருதம், நெய்தல் என மூன்று நிலங்களையும் தன்னுள் ஒருங்கே கொண்ட பூழி நாடு சேரர் ஆட்சியில் எத்துன்பமும் இல்லாமல் நலமாகவே இருந்து வந்தது.ஆனால் சில நாட்களாக பாலை நிலத்தோரால் வழிப்பறி,கொலை, பெண்களின் மானபங்கமென நரகமாக மாறி விட்டது.இதுவரை நானே சில அக்கிரமக்காரரை கொன்றிருக்கிறேன்.நேற்று ஒரு பெண்ணை காப்பாற்ற சென்ற என் பாட்டனை அடித்துவிட்டனர்.இதையெல்லாம் சரி செய்யுமாறு தானை தலைவரிடம் முறையிட்டேன்.ஆனால் அவரோ இதெல்லாம் சாதாரண விஷயம்.பெண்ணாகிய நான் பேசாமல் வீட்டிற்குள் அடங்கி இருக்க வேண்டுமென மிக நல்ல அறிவுரையை கூறி அனுப்பி விட்டார்… இப்போது கூறுங்கள்!சேர நாட்டில் நீதி இருக்கிறதா? மக்களுக்கு பாதுகாப்பு உண்டா?”

குழலியின் பேச்சில் வீரனின் முகம் கோபத்தில் செந்தணலானது.நாடி நரம்புகள் புடைக்க கைகள் குதிரை கடிவாளத்தை இறுக்கியது.மிகவும் கடினப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“கவலையை விடுங்கள்… இளவரசர் கண்டிப்பாக இதற்கெல்லாம் முடிவு கட்டுவார்”என்று நம்பிக்கை அளித்தான்.

அரை நாழிகையில் இருவரும் கோட்டை வாயிலில் நின்றிருந்தனர்.எல்லையைப் போலவே இங்கும் வீரனின் மோதிரம் மாயம் செய்தது.தலைவணங்கி வழிவிட்டனர் வீரர்கள்.

கோட்டையின் உள்ளே சிறிதுசிறிதான மாளிகைகள் இருக்க அதன் நடுவே நடுநாயகமாக இருந்தது நார்முடி சேரலின் அரண்மனை.வீரர் இருவர் உடன்வர குழலியும் வீரனும் அரண்மனையின் உள்ளே நுழைந்தனர்.

கலைநயமிக்க உட்புறம் குழலியை வெகுவாக கவர்ந்தது.சுற்றுமுற்றும் அவள் பார்வையை சுழற்றிய போதே மேல்மாடத்திலிருந்து அழகிய பெண்ணொருத்தி இறங்கி இவர்களை நோக்கி விரைந்து வந்தாள்.அவள் ஆடை அணிகலன்கள் அவள் இராஜ குடும்பத்தை சேர்ந்தவள் என்பதை அறிவித்தது.

குழலியின் அருகே சற்றே சரிந்த வீரன் அவள் காதருகே,

“இவர் சேரலின் தமக்கை மங்களாம்பிகா தேவியார்.”என்றான் மெல்லிய குரலில்.

அவர்கள் இருவரையும் ஆச்சரியமாக பார்த்த மங்களாம்பிகை வீரனைப் பார்த்து,

“தம்பி!இது என்ன வேடம்?”என்றாளே பார்க்கலாம்.

தீப்பொறி பறக்கும் கண்களோடு வீரனை அல்ல அல்ல சேர நாட்டின் கண்ணான இளவரசன் நார்முடி சேரலை பார்த்து விழித்தாள் குழலி.

தன் சைகையை கவனிக்காமல் உண்மையைப் போட்டுடைத்த தமக்கையை இப்படி செய்துவிட்டாயே என்று பரிதாபமாகப் பார்த்தான் இளவல்.குழலியின் கோபமும் இளவலின் பரிதாப முகமும் நடந்ததை ஒரளவு ஊகித்து விட்டாள் அக்காள்.

“உன் விளையாட்டை நீ விடவே மாட்டாய் இல்லையா! போகட்டும் இந்த பெண் யார்?”

“இவர் வண்டார்குழலி!பூழி நாட்டிலிருந்து வந்திருக்கிறார்.நன்னன் விஷயத்தில் என் முடிவு திடப்பட்டு விட்டது…. நீங்கள் இவரை அழைத்துச் செல்லுங்கள்.நீண்ட பயணத்தில் சோர்ந்துப் போயிருக்கிறார்.மற்றவை பிறகு பேசலாம்”என்று அவன் அறை இருந்த திசைக்கு செல்லுமுன் குழலியின் கோப முகத்தை கடைசி முறையாக குறும்பு புன்னகையோடு பார்த்தவன் அங்கிருந்து விரைந்து சென்று விட்டான்.

“வண்டார்குழலி!அழகான பெயர்!…குழலி!வா என்னோடு”என்று ஆதரவாக அவள் தோளை அணைத்தவாறு தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

சூடான நீரில் நீராடி மங்களாம்பிகை அளித்த உடையை அணிந்து கொண்டு அவளுடன் கொலு மண்டபத்திற்கு சென்றாள் குழலி.அங்கே நடுநாயகமாக இருந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் சேரல்.

அவர்களை கண்டு வாயிலிலேயே தயங்கி நின்ற குழலியை,

“ஏன் தயக்கம்?உள்ளே வா குழலி!”என்று அன்பாக அழைத்தாள் மங்களாம்பிகை.

தமக்கையின் குரலில் அதுவரை பேச்சில் ஆழ்ந்திருந்த சேரல் சரக்கென்று வாயிலை நோக்கினான்.

புத்துணர்வுடன் அன்று பூத்த மலர் போல நின்றிருந்த ஆரணங்கை விட்டு கண்களை அகற்ற முடியாமல் திணறியது சேரலின் இதயம்.இமயம் முதல் குமரி வரை எந்த பெண்ணும் செய்யாத மாயத்தை சந்தித்து ஒரே நாளில் செய்துவிட்டதை அறியாமல் மங்களாம்பிகையோடு சென்று கீழிருந்த ஆசனமொன்றில் அமர்ந்தாள்.

“மாறா!இவர் வண்டார்குழலி!பூழி நாட்டை சேர்ந்தவர்…பெரும் வீராங்கனை.குழலியாரே!இவன் மணிமாறன் குன்ற நாட்டின் சேனாதிபதி…என் உயிர் நண்பனும் கூட”

குழலியாரே!குன்ற நாடு உங்களை மகிழ்வோடு வரவேற்கிறது”என்று வரவேற்றான் மணிமாறன்.அவன் முகத்தில் நட்பான புன்னகை மிளிர்ந்தது.எந்நிலையிலும் அவனை நம்பலாம் என்பது அவன் கண்களிலேயே தெரிந்தது.சகோதர பாசத்தை அறியாத குழலிக்கு  மணிமாறனை சகோதரனாக நினைக்கத் தோன்றியது.

“குன்ற நாட்டு சேனாதிபதிக்கு என் பணிவான வணக்கங்கள்!”என்று முறையாக கைக்கூப்பினாள் குழலி.

“இங்கே நாம் கூடி இருப்பது பூழியின் மீது நன்னனின் அக்கிரமங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சில நாட்களாகவே அவனோடு போர் தொடுக்க நினைத்திருந்தேன்.இப்போது குழலியாரின் வரவு அதை உறுதி செய்து விட்டது.அக்கா!மாறா! உங்கள் கருத்தை கூறலாம்”என்று அவர்களுக்கு பேச வாய்ப்பளித்தான்.

“இந்த விஷயத்தில் எனக்கு தனியான விருப்பம் எதுவுமில்லை.இளவரசரின் முடிவே என் முடிவு”

“அக்கா! தாங்கள் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? தங்கள் அபிப்பிராயத்தை தயக்கமின்றி கூறுங்கள்”

“இளங்கோ!சேர நாட்டிற்கு யார் தீங்கிழைத்த நினைத்தாலும் அவர் என் பகைவரே.பூழியின் மக்களை துன்பத்தில் ஆழ்த்திய நன்னனின் மீது போர் தொடுக்க நானும் விரும்புகிறேன்…ஆனால் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது…நாம் எதை தீர்மானித்தாலும் இறுதி முடிவு எடுக்க வேண்டியவர் மாமன்னர் இமயவரம்பன்.. போருக்கு அவர் அனுமதி அளித்தால் மட்டுமே அது சாத்தியம்”

“இதை பற்றி நான் கேட்ட போதெல்லாம் அவர் ஏதேனும் கூறி என் வாயை அடைத்து விடுகிறார்.இனியும் என்னால் பொறுக்க முடியாது.போர் தொடங்கியே ஆக வேண்டும்”

“சரி நாம் நாளையே வஞ்சிக்கு செல்வோம்.அங்கே குழலியிடமே எல்லா விவரங்களை அறியும் போது அவர் மறக்க முடியாது இல்லையா?!”

“என்ன நான் மாமன்னரிடம் பேச வேண்டுமா?”

“கண்டிப்பாக!நாளை தாங்கள் எங்களோடு வஞ்சிக்கு வந்து பூழியின் நிலை பற்றி தந்தையிடம் விரிவாக கூற வேண்டும்”என்று கேட்டுக் கொண்டான் சேரல்.

மறக்க இடம்கொடா அந்த குரலால் மேலே எதுவும் வாதிடாமல் சரியென தலையசைத்தாள் குழலி.

“சரி சரி இனி அனைவரும் சென்று உறங்குங்கள்…காலையில் சீக்கிரமாக புறப்பட வேண்டும்”, என்றவாறு எழுந்துக் கொண்டாள் மங்களாம்பிகை.

“குழலி!வா போகலாம்” எனக் கூறி அவள் கைப்பற்றி அழைத்து சென்றாள்.

மண்டபத்திலிருந்து அவள் கண் மறையும் வரை சேரலின் கண்கள் தாமரை மலரின் மேல் மொய்க்கும் வண்டானது.அவள் கண் மறையானதும் அந்த மண்டபமே ஒளியிழந்தது போலானது அவனுக்கு.

பால் பொழியும் வெண்ணிலவின் ஒளிகிரணங்கள் மேல்மாட சாளரம் வழியாக இளவரசனின் முகத்தில் மோதியது.மனம் தந்தையை போருக்கு சம்மதிக்க வைப்பதில் தொடங்கி போர் தந்திரங்களை ஆராய்ந்து கடைசியில் தன் மனதில் புகுந்து சிம்மசனமிட்டு அமர்ந்த பேரெழிலில் வந்து நிலைக் கொண்டது.

தான் இத்தனை நாட்களாக காத்திருந்த தன் இணை குழலி தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் ஐயமில்லை.ஆனால் காதலை கூறி திருமணம் என்ற உறவில் இணைய இது சரியான சந்தர்ப்பம் இல்லை.காதலா?நாடா?என்று வந்தால் மாவீரனான அவன் நாட்டையே முதலில் தேர்ந்தெடுப்பான்.அதனால் போர் முடிந்து நாடு அமைதி அடையும் வரை தன் விருப்பத்தை மனதின் ஆழத்தில் புதைத்து வைக்க முடிவெடுத்தான்.ஆனால் மங்கையின் எழிலும் வீரமும் அவனை பித்தனாக்கும் போது மனதை அடக்குவது கடுமையான பிரயாசையானது என்பது அவனுக்கு தெளிவாக விளங்கியது.

அவன் தன்னிலேயே முழுகியிருந்த போது பின்னிருந்து ஒரு வலிமையான கை அவன் தோளை அழுத்தியது.திடுக்கிட்டவன் அது உயிர் தோழன் மாறனது கையென உடனே அறிந்துக் கொண்டான்.

“இளவரசரின் மனம் ஒரு நிலையில் இல்லை என்று தோன்றுகிறது.நான் கூறுவது சரிதானே?!”

நண்பனின் கேள்வியில் திகைத்தவன் நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டு,

“ஆம் சரிதான் தந்தையை எப்படி போருக்கு சம்மதிக்க செய்வது என்பதைப் பற்றியும் போர் தந்திரங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன்…”

“அவ்வளவுதானா?!வேறு எதைப் பற்றியும் தாங்கள் யோசிக்க வில்லையா?”

“இல்லை…யோசிக்க வேறு என்ன இருக்கிறது?!”

“இளவரசே!சிறு வயதிலிருந்தே நாம் இருவரும் உயிர் நண்பர்கள்… நீங்கள் எண்ணுவது ஏதாயினும் அது உடனே எனக்கு தெரிந்துவிடும்…அப்படியிருக்க குழலியாரின் மேல் தங்கள் மனம் சாய்ந்து விட்டது என்று நான் அறியமாட்டேனா?!”

“உன்னிடம் எதையும் மறைக்க முடியாது என்று தெரிந்தும் நான் முயன்றது தவறுதான்…ஆம் யாராலும் வெல்ல முடியாத என் உள்ளத்தை ஒரு நொடியில் தன் வசமாக்கிக் கொண்டு விட்டாள் அவள்.”

“பின் தயக்கம் ஏன்? அவரிடம் இப்போதே கூறிவிடுங்கள் இளவரசே!”

“இல்லை மாறா!அதற்கு இது சரியான சமயமில்லை.போர் முடியும் வரை நான் காத்திருக்கத் தான் வேண்டும்…போர் முடிந்து பூழி நாடு சரியானது மேல் என் இதயத்தை அவளிடம் திறந்துக் காட்டுவேன்.அந்த பொன்னாளிற்காக நான் காத்திருப்பேன்”