சொந்தம் – நிறைவு

69609281_417368495570095_7277583613602824192_o

அத்தியாயம் – 33

கௌதம் சிந்தனையோடு அமர்ந்திருக்க, “இதெல்லாம் கேட்டபிறகு வீடு வந்து சேர்ந்தபோது தான் உன் அப்பா, அம்மா வந்து மதுவை பெண் கேட்டாங்க. அதனால் தான் நான் மதியைக் கைகாட்டினேன். மது இறந்த விஷயம் கேட்டவுடன் அவளோட கடமையைச் செய்யாமல் அவளை விதி கொண்டு போக வாய்ப்பே இல்லன்னு முடிவுக்கு வந்தேன்” என்றவர் அதற்கு மேல் சொல்வதற்கு முன்னே, “தமயந்தி” என்ற அலறல் சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

தமயந்தி மயக்கத்தில் கீழே சரிந்து விழுகவே அவளை தாங்கி பிடித்தபடி தரையில் அமர்ந்த தாமோதரன், “தமயந்தி கண்ணைத் திறந்து பாருடா” என்று அவளின் கன்னத்தில் தட்டினார்.

அதற்குள் ஓடிச்சென்று அவளை தன் மடியில் போட்டு, “அத்தை.. அத்தை” என்றவன் அழைக்க அவரோ விழி திறக்காமல் இருக்கவே மது ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளின் முகத்தில் தெளித்தபிறகு அவளிடம் லேசான அசைவு தெரிந்தது.

“தமயந்தி” என்ற கணவனின் குரல்கேட்டு மெல்ல கண்விழித்தவர் ராஜலட்சுமியிடம், “எங்ககிட்ட ஏன் அத்தை இந்த விஷயத்தை சொல்லல” என்று அதிர்ச்சியுடன் கேட்கும்போதே யுகேந்திரனும், தனலட்சுமியும் அங்கே வந்தனர்.

தமயந்தி கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்ததும், “ஐயோ அவளுக்கு என்னாச்சு” என்ற கேள்வியுடன் அருகே ஓடிவந்த தனம் தன் தோழியின் முகத்தில் இருந்த கண்ணீரை கண்டவுடன், “ஏன் நீ இப்போ அழுகிற என்ன விஷயம்?” என்று கேட்வே, தமயந்தி ஜெனியின் இறப்பு பற்றி சொல்ல யுகேந்திரனும், தனமும் அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றனர்.

யுகேந்திரன், தனம், தமயந்தி அனைவருக்குமே ஜெனியின் இழப்பு பெரிதாக தெரியவே, “ஏன் எங்ககிட்ட நீங்க இதுபற்றி ஒரு வார்த்தைக் கூட சொல்லல அம்மா?” என்று கோபத்துடன் கேட்டார் தாமோதரன்.

தன் மகனை கோபத்தில் முறைத்தவர், “உன்னால என்ன செய்ய முடியும்? உன் மகள் கற்பழிக்கப்பட்டு இறந்த விஷயம் தெரியாமல் எத்தனைநாள் கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டதா நினைச்சிட்டு இருந்த? மாப்பிள்ளை உண்மையை வெளி கொண்டு வராமல் இருந்திருந்தா இறந்தது மதுன்னு தானே நினைச்சிட்டு இருந்திருப்ப” என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லாமல் போகவே அமைதியாக தலைக்குனிந்தார்.

“உன் பணத்தை வெச்சு உன்னால எதுவும் சாதிக்க முடியாது தாமு. அன்னைக்கு நான் உண்மை சொல்லியிருந்த என் பேத்தியை உயிரோட மீட்டு கொண்டு வரும் சக்தி உன்னிடம் இருக்கா?” என்று எரிச்சலோடு கேட்டவரின் முகம் செந்தணலாக மாறியிருந்தது.

“நான் உண்மையைச் சொல்லியிருந்தா மீறி என்ன பண்ணிருப்ப? ஒரு இரண்டுநாள் அழுவியா? இல்ல ஒரு வாரம்.. அதுக்குப் பிறகு நீ அடுத்த வேலையைப் பார்க்க போயிருவ இல்ல. அப்புறம் எதுக்கு உனக்கு நான் உண்மையைச் சொல்லணும்? உன் பணம் எதுக்குமே ஆகாது தாமு. ஆனால்  நான் சொன்ன வார்த்தையால் இன்னைக்கு ஜெனி ஆத்மாவா நம்ம கூடவே இருக்கிற? மறு அவதாரம் எடுத்து வந்து என்னோடு இருக்கிற” என்றவர் வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று மறையவே வலியோடு ஒருவரையொருவர் பார்த்துகொண்டு அமைதியாக நின்றிருந்தனர்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய அசோக் – காயத்ரியின் திருமணம் விமர்சியாக நடந்து முடிந்தது. 

அன்று மாலை களைப்புடன் வீடு வந்து சேர்ந்த மதுவின் கண்கள் இருட்டிக்கொண்டு வருவதைப்போல தோன்றவே, “கௌதம்” என்றபடி அழைப்புடன் மயங்கிச் சரிந்தாள்.

அவளின் குரல்கேட்டு ஓடிவந்த கௌதம் அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி, “என்னடா திடீரென்று மயக்கம்போட்டு விழுந்துட்ட. உனக்கு என்ன பிரச்சனை வா முதலில் ஹாஸ்பிட்டல் போலாம்” என்றான்  பதட்டமாக.

அவள் மறுப்பாக தலையசைக்கவே, “நீ என்ன குழந்தையா மது? நீ உடனே கிளம்பு ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணலாம்” என்றவன் அவளிடம் கெஞ்சினான்.

“வாழ்த்துக்கள் ஏ.சி.பி.” என்று குறும்புடன் கண்சிமிட்டிய மது வெக்கத்துடன் அவன் மார்பில் புதைந்தாள்.

திடீரென்று மயக்கம்போட்டு விழுந்தவள் கண்விழித்ததும் தனக்கு ஏன் தேவையில்லாமல் வாழ்த்து சொல்கிறாள் என்ற காரணம் புரியாமல் திருதிருவென்று விழித்தவனுக்கு அவளின் சிவந்த முகம் வேறொரு கதை சொல்லவே தன்னிடமிருந்து அவளை விலக்கி, “மது நிஜமாவா?” என்றான்.

அவள் சிரிப்புடன் தலையசைத்துவிட்டு மீண்டும் அவனின் மார்பில் முகம் புதைக்க, “ஐயோ என் செல்லக்கிளி இப்படி ஒரு செய்தி சொல்வேன்னு எதிர்பார்க்கலடி” என்றவன் அவளை வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து விலக்கி அவளின் பளிங்கு முகத்தை கையிலேந்தி முகம் முழுக்க முத்தமிட்டான்.

அவன் இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லவே இரண்டு குடும்பமும் சேர்ந்து அவர்களை வாழ்த்தியது.

இந்த தகவலைக்கேட்ட காயத்ரி தன் கணவனோடு மறுநாளே வீட்டிற்கு வந்தாள். எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது, “ஜெனியும், மதியும் இருந்திருந்தால் நல்ல இருந்திருக்கும் இல்ல” என்றார் யுகேந்திரன் தன் மனைவியிடம்.

அவர்கள் ஒப்புதலாக தலையசைக்க இதுதான் சரியான நேரமென்று நினைத்த கௌதம், “ஏன் மது உன்னிடம் ஒன்னு கேட்கட்டுமா?” என்று கேட்டான்.

“ம்ம்” என்றதும், “ஒவ்வொருத்தருக்கு பிரச்சனை வரும்போதும் உன் மூலமாக அவங்களை காப்பாற்ற நினைத்த ஜெனி ஏன் உன் அக்காவை காப்பாற்ற வரவில்லை” என்றான்.

சட்டென்று நிமிர்ந்து கணவனைப் பார்த்த ராஜலட்சுமி, “ஜெனிமா நீ இங்கேதானே இருக்கிற? கௌதம் கேட்கிற கேள்விக்கு வந்து பதில் சொல்லு” என்றவுடன் காற்று கொஞ்சம் வேகமாக வீசியது.

எல்லோரும் சிந்தனையோடு பாட்டியைப் பார்க்க மது வாயைத் திறக்காமல் மெளனமாக நின்றிருக்க, “கௌதம் யார் அந்த ஜெனி” என்ற கேள்வியோடு நின்றிருந்தனர் அசோக் மற்றும் காயத்ரி.

“ம்ம் இப்போ வருவா பாரு” என்றவுடன் வீட்டிற்குள் ஜாதிமல்லியின் வாசனை அதிகரித்தது.

எல்லோரும் அமைதியாக இருக்கும்போது ஒரு புகைமூட்டம் வந்து வாசலில் நிற்பதை கண்டு எல்லோரும் அதன்மீது பார்வையைச் செலுத்தினர். சிறிதுநேரத்தில் பூகைமூட்டம் மெல்ல உருவம் மாறி ஜெனிதா பட்டுப்பாவாடை சட்டையின் வீட்டிற்குள் நுழைவதை கண்டு கௌதம், மது மற்றும் ராஜலட்சுமி பாட்டியைத் தவிர வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் சிலையே உறைந்தனர்.

அந்த உருவத்தை பார்த்த பயத்துடன், “என்னடா லைவ்வாக பேயைக் கூட்டிட்டு வரீங்க” என்ற அசோக்கின் தலையில் நறுக்கென்று கொட்டினாள் காயத்ரி.

அவன் கோபத்துடன் அவளை முறைக்க, “சும்மா இருங்க. பேய் போகின்ற போக்கில் ஒரு காட்டு காட்டிட்ட போகுது” என்று பயத்துடன் கூறிய காயத்ரி அவனின் கரங்களை இறுக்கமாக பிடித்து நின்றாள்.

வீட்டிலிருந்த பெரியவர்கள் நால்வரும் ஜெனியின் ஆத்மாவை கண்டு கண்ணீர் வடிக்கவே, “கௌதம் உனக்கு என்ன சந்தேகமோ அதை என்னிடம் கேளு” என்றாள் ஜெனிதா.

ஜெனியின் முன்னே மண்டியிட்ட கௌதம், “நீ எல்லோரையும் காப்பாற்ற எத்தனை உதவி செய்திருக்கிற? அப்புறம் ஏன் மதியைக் காப்பாற்ற நீ வரல?” என்று அவளிடமே நேரடியாகக் கேட்டான்.

“கௌதம் அதுக்கு முன்னாடி நீ அன்னைக்கு நான் இறந்தது பற்றி கேட்ட இல்ல அதுக்குபிறகு என்ன நடந்ததுன்னு சொன்னாதான் இப்போ உன் கேள்விக்கு தெளிவான பதில் கிடைக்கும்” என்ற ஜெனிதா அங்கிருந்த அனைவரையும் பார்த்தாள்.

“என் உயிர் போன அன்று நான் சாமிகிட்ட போய் கேட்டேன்..” என்ற ஜெனிதா அன்று நடந்ததை சொல்ல தொடங்கினாள்..

***

இருள் சூழ்ந்திருந்த வானத்தைக் கண்டு மிரளாமல் நின்ற ஜெனிதா தான் தினமும் வணக்கும் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து தேவனின் முன்பு மண்டியிட்டு கண்ணீர் அழுதாள்.

“நான் என்ன தப்பு பண்ணினேன்? என்னோட உயிரை ஏன் பறிச்சீங்க?” என்று கேட்டதும் அந்த ஒளி பரவிய இடத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. திடீரென்று அவளின் முன்னே ஒரு ஒளிபரவியது.

“உன் விதி இப்படிதான் என்று படைக்கும் முன்னரே எழுதபட்டுவிட்டது. அதற்கு காரணம் பூலோகத்தில் நடக்கும் பல தவறுகளில் பெண்களின் மீதான தவறுகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அதை தடுக்கவே இப்போது உன் உயிர் பறிக்கப்பட்டது” என்றவுடன் ஜெனியின் முகத்தில் தெளிவு பிறந்தது.

“என் கடமையை நான் எப்படி செய்வது? உடலற்ற நிலையில் நான் எப்படி என் கடமையை சரிவர செய்ய இயலும்?” தன் முன்னிருந்த பிரகாசமான ஒளியிடம் கேட்டாள் ஜெனிதா.

“நீ ஓர் உறவை இழந்த இடத்திலேயே மற்றொரு உறவையும் இழப்பாய். இரண்டு இழந்த இடத்தில் உன் கடமைக்கு உதவி செய்யபோகும் பூலோகப்பெண்ணையும் சந்திப்பாய். அங்கிருந்து உன் பயணம் இனிதே தொடங்கும்” என்றது ஒளி.

அவள் அந்த ஒளியை வணங்கிட, “இந்த நிகழ்வு நடக்கும் முன்னர் இரண்டு முறை பாதிப்படைய போகும் பெண்களை காப்பாற்றுவாய். ஆனால் மூன்றாம் முறை நீ எத்தனை முறை முயன்றாலும் அந்த இழப்பை உன்னால் தடுக்க இயலாது. நீ விரும்பிய பொருளாக மட்டுமே உன்னால் தொட இயலும். அதுவரை நீ உருவம் இல்லாமல் வெறும் வாசனையாகவும், புகைமண்டலமாகவும் தான் மற்றவர்கள் கண்ணுக்குத் தெரிவாய். தவிர்க்க முடியாத சூழலில் நீ உருவமாக மற்றவர்களின் கண்களுக்கு தெரிவாய் அதுவும் சில மணித்துளிகள் மட்டுமே” என்ற ஒளி மறைந்து இருள் சூழ்ந்தது.

***

அவள் சொன்னதைக்கேட்டு அனைவரின் கண்களும் கலங்கியது. அதுவரை பேய் என்ற பயத்தில் நின்றிருந்த அசோக் மற்றும் காயத்ரி விழிகள் கூட கலங்கியது.

கௌதம் கண்களில் கண்ணீர் பெருகுவதை கண்டு, “நீ மதுவை சந்திக்கும்போது இரண்டு முறை மதுவை பணயமாக வைத்து அந்த பெண்களைக் காப்பாற்றினேன். அதையெல்லாம் நினைத்து மது பயந்தபோது நீ அவளை தியான வகுப்பில் சேர்த்துவிட்டாய். அவள் முதல்நாள் பியானோவை நினைத்தபோது குட்டி பியானோவாக மாறி அவளின் கையில் சிலநொடிகள் இருந்தேன்” என்றபோது கௌதம் அதை கையில் வாங்கியபோது கீழே விழுந்து உடைந்தது மதுவிற்கு ஞாபகம் வந்தது.

“அடுத்து ஒருநாள் ஆபத்து வரபோகிறது என்று அவளிடம் எச்சரித்தது நான்தான். அன்னைக்கு அவள் பயந்தபோது தோட்டத்தில் பூக்களோடு விளையாடுவது போல அவளுக்கு விளையாட்டு காட்டினேன்” என்றவுடன் மது விழிவிரிய ஜெனிதாவைப் பார்த்தாள்.

அதே நேரத்தில் அங்கே குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது. அடுத்து மதியின் இறப்பன்று நடந்ததை கூறினாள்…

மதிக்கு விபத்து நடக்கும் முன்னரே மதுவை எவ்வளவோ திசை திருப்ப முயன்றேன்.  ஆனால் அது முடியல. மது அங்கே வெற்றிபெற்று காரை நிறுத்தும்போது இங்கே மதியின் கார் மரத்தில் மோதி நின்றது. அவளை நான் அழைத்து வரும் முன்னரே வருண் மதியைக் கெடுத்தான். என் எஸ்தர் அக்கா இறந்த அதே இடத்தில் மதிக்கும் அப்படி நடந்தது. நான் எவ்வளவு முயன்றும் என்னால அதை தடுக்க முடியல. அப்போ நான் சாமிக்கிட்ட அழுதேன்.

 மீண்டும் இருபது வருடங்களுக்குப் பிறகு அந்த ஒளியை பார்த்து வணங்கி நின்றாள் ஜெனிதா.

“நீயே தடுக்க நினைத்தாலும் அந்த நிகழ்வை தடுக்க இயலாது என்று சொன்னது நடந்து முடிந்ததை நினைத்து அழுகிறாயா?” என்று கேட்டதற்கு அவள் கண்ணீரோடு தலையசைத்தாள். அவள் அந்த ஒளியை கூர்ந்து பார்க்கும்போது அவளின் பூர்வ ஜென்மம் அனைத்தும் அவளுக்கு நினைவு வந்தது.

“இப்போது இறந்த பெண்ணோடு பிறந்தவள் உன் கடமையை நீ செய்ய உதவுவாள்” என்று சொல்லிவிட்டு ஒளி மறைந்ததோடு நிறுத்திய ஜெனி மதுவைப் பார்த்தாள். அங்கிருந்த அனைவரின் கவனமும் அவளின் மீது திரும்பியது.

அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “மதி இறந்தபோது அதே கேள்வியோடு நடுக்காட்டில் நின்று கதறியபோது காதோடு மீண்டும் அந்த குரல்கேட்டு பயந்தேன்” என்ற மதுவின் நிகழ்வுகள் அன்றைய நாளை நோக்கி பயணித்தது.

நடுக்காட்டில் திடீரென்று குரல்கேட்டு பயந்து மரத்தில் சாய்ந்த மதுவின் முன்னே அந்த புகைமூட்டம் வந்து நின்றது. அவள் பயத்தோடு பார்க்கும்போது சிறு குழந்தையாக வடிவெடுத்து நின்றது.

பட்டுப்பாவாடை சட்டையுடன் இரட்டை ஜடையில் நின்ற பெண்ணைக் கண்டு அவளின் பயம் தெளியவே, “நீதான் அன்னைக்கு என்னோடு பேசியதா?” என்று ஆச்சரியமாக கேட்டபடி ஜெனியைத் தொட்டு பார்க்க கைநீட்டினாள்.

ஆனால் அவளால் தொட முடியாமல் போகவே, “நீ இறந்து போயிட்டியா பாப்பா” என்ற மதுவின் கேள்விக்கு ஜெனிதா ஒப்புதலாக தலையசைத்தாள்.

“ஆமா இப்போ எதுக்கு வந்திருக்கிற?” சிந்தனையோடு கேட்ட மதுவின் அருகே வந்த ஜெனிதா தலையைச் சரித்து அவளைப் பார்த்தாள்.

மது புரியாமல் விழிக்கவே, “நீ என்னைக் கண்டு பயப்படாமல் இருப்பியா?” ஜெனி கேட்டதும் அவள் ஒப்புதலாக தலையசைத்தாள்.

“நான் ஜெனிதா. எனக்கு பூலோகத்தில் நடக்கும் தவறுகளை தடுக்கின்ற பணியை செய்யும்படி கட்டளை கொடுத்து இருக்காங்க. எனக்கு உன்னால் உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டதற்கு மது சிந்தனையோடு அவளைப் பார்த்தாள்.

“நீ பயப்பட தேவையில்ல. உன் உயிருக்கு என்னால் எந்த ஆபத்தும் வராது. என்னால் உனக்கு எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கறேன்” என்று ஜெனி விளக்கம் கொடுக்கவே அவளும் சரியென்று தலையசைக்க ஜெனிதாவின் முகம் பூவாக மலர்வதைக் கண்டு மதுவின் முகமும் மலர்ந்தது.   

அதன்பிறகு ஜெனியின் உதவியோடு பல பெண்களை காப்பாற்ற தொடங்கியதை மது சொல்லி முடித்துவிட்டு, “நான் ஜெனியோடு சேர்ந்துதான் எல்லோரையும் காப்பாற்றுகிறேன் என்ற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டதற்கு கடைசியாக ஜெனி தன்னை வந்து பார்த்து சென்றதைக் கூறினான்.

அனைத்து உண்மையையும் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சியோடு நின்றிருந்தனர். அவர்களால் ஜெனியின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை. மதியின் இழப்பை ஏற்க முடியாமல் நின்றிருந்தனர்.

வீட்டிலிருந்த அனைவரும் அமைதியாக இருக்க, “ஜெனிதா இப்போ மது கருவுற்று இருக்கிறாள். நீயே எங்களுக்கு மகளாக வந்து பிறக்கிறாயா?” என்று ஏக்கத்துடன் கேட்டதற்கு மறுப்பாக தலையசைத்தாள்.

“ஏன்?” என்று கேட்டதற்கு, “எனக்கு பூலோகத்தில் பிறந்தால் என் கடமையைச் செய்ய முடியாது கௌதம். அப்படியே நான் பிறந்து வளர்ந்தாலும் ஒருநாள் மரணம் நிகழும். அந்த குறுகிய காலகட்டத்தில் என்னால் யாருக்கும் உதவ முடியாது. என் கடமை ஆபத்தில் இருக்கும் பெண்களை மதுவின் உதவியோடு காப்பாற்றுவது மட்டும்தான்” என்றாள்.

அவளின் முடிவை தெளிவாக சொன்னதை கேட்டு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அதிகமாக, “என் வயிற்றில் இருந்த பிள்ளைகளை காப்பாற்றிய உன்னை இப்படியொரு நிலையில் பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லடா” என்று அழுதாள் தமயந்தி.

பிறகு மதுவின் பக்கம் திரும்பி, “நீ அவளுக்கு உதவியதை நினைக்கிறபோ எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு மது. இது இன்று நேற்று உருவான சொந்தமில்ல. கருவில் உருவான சொந்தம். அவ இல்லன்னா நீ இப்போ பிறந்திருக்கவே முடியாது” என்ற தமயந்தி தன் அருகே நின்றிருந்த கணவனின் தோளில் சாய்ந்தாள்.

அங்கிருந்த அனைவரின் கண்களும் கலங்கியிருக்க, “கௌதம் உன்னிடம் ஒரு உதவிகேட்டு வந்திருக்கிறேன். மறுப்பு சொல்லாமல் செய்வியா?” என்றாள் ஜெனி.

அதுவரை வாயடைத்து நின்ற யுகேந்திரன், “கௌதம்” என்ற தந்தையை சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.

“அவ உனக்கு அக்கா. அவ என்ன உதவி கேட்டாலும் நீ செய்யணும். அதனால் உன் வேலையே போனாலும் சரி” என்றவர் தாமோதரனின் பக்கம் திரும்பி, “என் மகனுக்கு உன் கம்பெனியில் ஒரு வேலைபோட்டு தரமாட்டியா?” என்று கேட்டார்.

“என் மாப்பிள்ளைக்கு இல்லாத வேலையா யுகேந்திரா. கம்பெனியையே அவரின் பெயரில் எழுதி வைக்கிறேன் போதுமா” என்ற தாமோதரன் கௌதமின் பக்கம் திரும்பினார்.

“மாப்பிள்ளை ஜெனி கேட்கும் உதவியை செய்ங்க” என்றார் உறுதியுடன்.

அவன் புன்னகையோடு தலையசைத்தபடி ஜெனியின்  பக்கம் திரும்பி, “இப்போ சொல்லு நான் செய்யறேன்” என்றான் கௌதம் புன்னகையோடு.

“மது கருவுற்று இருப்பதால் அவளால் இனிமேல் எனக்கு உதவ முடியாது. அதனால் உன்னால் எனக்கு உதவ முடியும் கௌதம். எங்கே தவறு நடந்தாலும் அது நடக்கும் முன்னர் நான் வந்து உன்னிடம் சொல்வேன். நீ அந்த தவறை நடக்கவிடாமல் தடுக்கணும். மது பெண் என்பதால் அவளால் அதிகநாள் எனக்கு உதவ முடியாது என்ற காரணத்தை நான்  கடவுளிடம் சொன்னபோது  எனக்கு அவர் கொடுத்த கட்டளையின் படி  உன்னிடம் உதவி கேட்க சொன்னார். நீ எனக்கு உதவி செய்கிறாயா கௌதம்” என்றவுடன் அவளின் முகம் பளிச்சென்று மலர்ந்திட சரியென்று தலையசைத்தான்.

அதில் சந்தோசம் அடைந்த ஜெனிதா, “நான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் எப்போதும் பாதுக்காப்பாக இருப்பேன் கௌதம். நாளைக்கு உனக்கு பிறக்க போகின்ற குழந்தைகளோடு கூட நான் விளையாடுவேன். நான் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன்” என்றபோது அவன் சரியென்று தலையசைத்தான்.

அதுவரை பதட்டத்தோடு நின்றிருந்த அசோக் முன்னே வந்து, “பாப்பா நானும் உனக்கு உதவி செய்யட்டும்மா” என்று கேட்டான்.

அவள் சிரிப்புடன் தலைசைத்து, “நீ கௌதமின் நெருங்கிய நண்பன் என்பதால் உனக்கு அடிக்கடி வேலை கொடுப்பேன். அதை நீ சரியா செய்யணும்” என்று மிரட்டுவது போல சொன்ன சின்னக்குழந்தையை பார்த்து சிரித்தனர்.

அந்த இடத்தில் சந்தோசம் பெருகிட அனைவரின் மனதிலிருந்த பாரமும் கொஞ்சம் குறைந்தது. காயத்ரி கூட பயத்தை மறந்து சிரித்துவிடவே ஜெனியின் ஆத்மா புன்னகையோடு அவர்களோடு பேசிட அவர்களும் அதற்கு சரிக்கு சரி பதில் கொடுத்தனர்.

ஒரு ஆத்மாவால் தன் குடும்பமே சந்தோஷமாக இருப்பதை பார்த்தபடி அமர்ந்திருந்த ராஜலட்சுமியின் மனம் நிம்மதியடைந்தது.

***

கிட்டதட்ட நான்கு  மாதங்களுக்கு பிறகு..

மது மேடிட்ட வயிற்றை வைத்துகொண்டு சமையலறைக்குள் சுழன்று வேலை பார்த்து கொண்டிருந்தாள். காலையில் வழக்கம்போல ஆபீஸ் கிளம்பிய கௌதம் அவளை தேடி சமையலறைக்குள் நுழைந்தான்.

“மது இதையெல்லாம் நானே செய்யறேன்னு சொன்னால் கேட்கிறீயா?” என்று கடிந்து கொண்டவன் அவளுக்கு உதவி செய்ய, “நீங்க நகருங்க யூனிபார்மில் ஏதாவது கறையாகிவிடும்” என்று அவனை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக இருந்தாள்.

“நான் கேஸ் விசாரிக்க வெளியே போறேன் அதனால் யூனிபார்ம் போடல” என்று சொன்னபடி உணவை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து மதுவையும் அமர வைத்து ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு எழுந்தான்.

“சரி மது நான் கிளம்பறேன்” என்று அவன் சொல்லவே, “ம்ம் சரிங்க” என்றாள் மது சிரித்தபடி.

கௌதம் வாசல் வரை செல்லவே அவனின் பின்னோடு சென்றவள் அவன் கதவை அடைத்து தாழ்போடுவதை பார்த்து, “என்ன பண்றீங்க” என்று கேட்டவளை கதவின் மீது சாய்த்து நிறுத்தி அவளின் இதழில் இதழ் பதித்து நிமிர்ந்தான்.

“ஏங்க வேலைக்குப் போகும்போது என்ன காரியம் பண்றீங்க?” என்று அவள் செல்லமாக சிணுங்கினாள்.

அவளின் முகத்தை மறைத்த கூந்தலை காதோரம் ஒதுக்கிய கௌதம், “என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்தேன்’ என்று அவன் வெக்கமே இல்லாமல் பதில் சொல்ல அவளின் முகம் அந்திவானமாக சிவந்தது.

“ஜெனி உங்களிடம் காலையில் என்ன சொன்னான்னு மறந்துட்டு துரை நின்று ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க. அவள் வந்தாதான் நீங்க சரிப்பாட்டு வருவீங்க” என்று அவள் சொல்ல அவனோ அதை காதில் வாங்காமல் மீண்டும் அவளின் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டான்.

அவன் மீண்டும் இதழை நெருங்கும்போது, “கௌதம்” என்ற ஜெனியின் குரல்கேட்டு, “அக்கா வராதீங்க. அப்புறம் நீங்கதான் கண்ணை மூடிக்கணும்” என்று சிரித்தவன் தன் வேலையை முடித்துக்கொண்டு கதவைத் திறக்க வாசலில் நின்றாள் ஜெனி.

“அவளை தொந்தரவு பண்ணாதேன்னு உன்னிடம் சொன்னேன் இல்ல” என்று அவள் மிரட்ட, “ஆமா ஜெனி” என்று பயத்துடன் பதில் கொடுத்த கணவனை நினைத்து வாய்விட்டு சிரித்தாள் மது.

“நீங்க மட்டும் நினைச்ச நேரத்தில் மதுவை கூட்டிட்டு வெளியே போகலாம் அதெல்லாம் தவறில்ல. நான் ஒரு முத்தம் கேட்டா தொந்தரவு பண்ணாதேன்னு மிரட்டுவது இது எந்தவூர் நியாயம்” என்று கௌதம் ஜெனியிடம் நியாயம் கேட்கவே அவனை முறைத்துவிட்டு காற்றில் மறைந்தாள் ஜெனி.

“மது பிளீஸ் இன்னும் ஒன்னே ஒன்னு” என்று குழந்தை போல கேட்ட கணவனுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் என்ன செய்வதென்ற சிந்தனையில் நின்றாள் மது.

திடீரென்று அவனின் செல்போன் சிணுங்கிட, “இவனுங்க வேற” என்று போனை எடுத்த கௌதமை வாணலி இல்லாமல் வறுத்தேடுத்தான் அசோக்.

“டேய் இன்னும் வீட்டில் பொண்டாட்டிகிட்ட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கியா?” என்று கடுப்புடன் கேட்டான்.

“ஆமாண்டா” என்று கௌதம் வேகமாக சொல்லவே நல்ல வார்த்தைகள் சொல்லி அவனை திட்டிய அசோக், “நான் இங்கே ரொமான்ஸ் பண்ணாமல் இருக்கேன். உனக்கு என்னடா அவசரம். நீ இப்போ ஒழுங்கா கிளம்பி ஸ்பாட்டுக்கு வர இல்ல. ஜெனிகிட்ட உன்னை கோர்த்து விட்டுவிடுவேன்” என்று திட்டிவிட்டு போனை வைத்தான்.

“பயபுள்ளைக்கு இன்னைக்கு கோட்டாவில் ஒன்னும் கிடைக்கல போல” என்ற கௌதம் பைக்கில் ஏறியபிறகு, “ஐயோ சாவி எடுக்க மறந்துட்டேன்” என்று நினைக்கும்போது பைக் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

அதை பார்த்து சிரித்த மதுவிடம், “ஏன் சிரிக்கிற” என்று கடுப்புடன் கேட்டான் கௌதம்.

“பின்னாடி பாருங்க” என்று மது சொல்ல கௌதம் திரும்பி பார்க்க பைக்கின் பின்னோடு அமர்ந்திருந்தாள் ஜெனி.

“கௌதம் பைக் எடுக்கிறீயா?” என்றாள் குறும்புடன்.

“ஜெனிமா நீ இப்படியெல்லாம் பண்ணினால் சின்ன பையன் நான் பயப்பட மாட்டேனா? எனக்கு என் பைக் சாவிதான் வேணும்” என்று அடம்பிடித்தான்.

மது சிரித்துக்கொண்டே நின்றிருக்க, “மது பிளீஸ் போய் எடுத்துட்டு வா” என்று சொல்ல அவளோ அசையாமல் அதே இடத்தில் நின்றாள்.

“கௌதம் சாவி அந்தரத்தில் வருது பாரு கை நீட்டி வாங்கிக்கோ” என்று சொல்ல கௌதம் திரும்பிப் பார்க்கும்போது ஜெனி சொன்னபடி காற்றில் மிதந்து வருவதை பார்த்து தனக்குள் சிரித்தபடி சாவியை கையில் வாங்கி பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

கடமை தவறாத கண்ணியம் மிக்க தன் காதல் கணவனை நினைத்து மனதிற்குள் சிரித்தபடி மது வீட்டிற்குள் நுழையும்போது டிவியில் பாடல் ஒலித்தது..

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே

நிழல் போல நானும் நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாற கூடும்

நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காக தானே

நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்                    (பூவே செம்பூவே)

உனைப்போல நானும்  ஒரு பிள்ளை தானே

மலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளை தானே

உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை

விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும்

நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்

இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்        (பூவே செம்பூவே)

கௌதம் – மதுவையும் இணைக்கும் புள்ளியாக இருந்த ஜெனி இன்று தன் கடமையை செய்ய காவல் அதிகாரியை அழைத்துச் சென்றாள்.

அதை கண்டு சந்தோஷத்தில் முகம் மலர்ந்த மதுவின் கரங்கள் அவளின் வயிற்றில் வருடியபடி அந்த பாடலைக் கேட்டு ரசித்தாள். தன்னையும், தன் குழந்தையையும் பாதுகாக்க இருவர் இருக்கும் நிம்மதியோடும் நிறைவான புன்னகையோடு மற்ற வேலைகளை கவனித்தாள்.

ஜெனியின் பயணம் இனிதே துவங்குகிறது.. இனி அனைத்து தவறும் நடக்கும் முன்னர் அதை தடுக்கும் வேலையை பணியை அவள் செய்வாள் என்று முழு மனதோடு நம்புவோம்.

கௌதம் கடமையில் தவறாமல் காவலதிகாரியாகவும், தன் குடும்பத்தை நேசிக்கும் நல்ல காதலனாகவும் இருப்பான் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!