சொல்லாத ரகசியம் நீதானே

 

சொல்லாத ரகசியம் நீதானே

அத்தியாயம்-1

“ஹாய் வினி…ஐயம் சபரி…”

இன்னமும் முந்தினம் அவன் பேசியவிதமும், அவனின் வசீகர குரலும் அவள் மூளையில் வலம் வந்துக் கொண்டிருந்தது!

அவனிடம் பதில் பேச முனையாது போனை சட்டென்று வைத்திருந்தாள்.

‘பெரிய இவன்! ஆள் விலாசம் இல்லாமல் போக வேண்டியது. பின்னே திடீரென்று வந்து ஹாய் பாய்ன்னு ஒரு பேச்சு. நல்லா வந்திடும் எனக்கு’

அதே சிந்தனையில் நடைபயின்றுக் கொண்டிருந்தாள் அந்த நிறுவனத்தில். அவளுக்கு இந்த வாரம் இரவு பணி. வழக்கமான வேலைகள் தான். முக்கால்வாசி பார்த்து முடித்திருந்தாள். தூக்கம் ஆட்கொள்ளாமலிருக்க காபி மெஷினில் ஒரு கப்பை நிரப்பிக் கொண்டு வந்தவளின் முன்பு வந்து தரிசனம் தந்தவனை பார்க்க சற்று திகைத்து தான் போனாள்.

இவனா? அவளுடைய அலுவலகத்திலா? அதுவும் இத்தகைய நிலையில்?

கையில் கட்டும் நெற்றியில் ஒரு பிளாஸ்டருமாய் நின்றிருந்தான். அவனுக்கு என்னவோ என்று பதறிய இதயத்தை வெளிக்காட்டாமல் அவன் முகத்தை காண பிடிக்காததை போல் விறுவிறுவென்று நேர் எதிர்பக்கம் நடக்கலானாள் வினோதினி.

“வினி… நில்லு டி”

சட்டென்று நின்றவள், திரும்பி அவனிடம் வந்தாள்.

“என்னை டி சொல்ல உனக்கு என்ன டா உரிமை இருக்கு?”

அவள் கை அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தது.

இருவரின் கண்களும் சந்தித்துக்

கொண்டது. அவள் கண்களில் எட்டிப்பார்க்க முனைந்த கண்ணீரை வேக மூச்செடுத்து தடுத்திருந்தாள் வினோதினி. இத்தனை நேரமும் தங்கள் பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்த மற்றவர்கள் இப்போது இவள் பக்கம் ஆர்வமாய் தங்கள் பார்வையை செலுத்தினர். சிலர் தங்கள் செல்போனில் படம் எடுக்க அதை தயார் நிலையில் வைத்தும்.

“வினி நாளைக்கு உன் கம்பெனியில் நம்ம வீடியோ டிரெண்டிங் ஆகணுமா?”

மெல்லிய குரலில் சொன்னவன்,

“கையை எடு நீ”

ஒற்றைக் கையால் அவளின் கைபற்றி தன் சட்டையை விடுவித்துக் கொண்டான்.

அவன் தொட்ட இடம் எரிச்சலை தருவது போலிருக்க, இன்னமும் அதே இடத்தில் நின்றுக் கொண்டிருக்கவில்லை அவள். திரும்பி ஓய்வறையை நோக்கி நடந்தவளை பெயர் சொல்லி பல முறை சபரி அழைத்தும் அவள் அந்த திசையை திரும்பியும் பார்க்கவில்லை.

மேஜையில் தலைகவிழ்ந்து படுத்திருந்தவளை இந்நிமிடம் அழைத்தது அவள் தோழி. அழைத்த குரல் கேட்டும் தலை நிமிரவில்லை வினோதினி.

“வினி…டி…வினோதினி” இன்னமும் அவள் தான்.

இவளிடம் பதிலில்லை.

“வினி என்ன ஆச்சு? எந்திரி வினோதினி”

“என்னால் எங்கையும் வர முடியுமான்னு தெரியலை யாமினி. ப்ளீஸ் கால் சம்படி!”

வினோதினி ஒரு நிலையில் இல்லை. யாமினிக்கு தோழியின் தற்போதைய நிலை கவலையளித்தது. 

“என்ன ஆச்சு உனக்கு? காரிடரில் தனியா பேசிகிட்டு இருந்தியாம். நான் அதியெல்லாம் நம்பமாட்டேன்னு சொன்னா வீடியோ காட்டுறாளுங்க. இன்னமும் இப்ப வேற திருதிருன்னு முழிக்கிற? ஆர் யூ ஓகே?”

‘அவனை உணர்தேனே! என்ன சொல்கிறாள் இவள்!’

“தனியாவா நானா?” என்றாள் நம்பமுடியாமல்.

அதற்குள் இவர்களிடம் இன்னுமொருவள் ஓடி வந்தாள்.

“சீக்கிரம் வினோதினி கிளம்பு. சபரிக்கு விபத்தாம். கால் வந்தது. இந்தா உன் போன்”

அவசர நிலை புரிய இருவரும் ஓடினர் அந்த பொதுவழியில்.

மின்தூக்கியில் ஏறி முதல் மாடிக்கு வந்து அங்கும் ஓடியதில் மூச்சிறைத்தது அவளுக்கு. மருத்துவமனை விரைந்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவின் வாசலுக்கு வரவுமே என்ன விதமான உணர்வென்று தெரியாமல் வினோதினியின் இதயம் தடதடக்க ஆரம்பித்திருந்தது, ஓடியதால் மட்டுமல்ல!

“டாக்டர்”

வினோதினி பார்த்தபடி நிற்க உடன் வந்த யாமினி சபரியின் கட்டிடப்படாத இன்னொரு கையை இறுக்கமாய்ப் பிடித்திருந்தாள். அவன் கையில் தொடங்கிய வினியின் பார்வை அவன் முகத்தில் முடிய,

‘ஹாய் வினி’ என்ற அவன் குரல் மறுபடியும் செவியில் அறைந்தது.

அவள் முன், அந்த மருத்துவமனையின் படுக்கையில் அவனே தான். பல நாள் கனவிலும், நினைவிலும் அவளை வசீகரித்தவனின் முகம் இப்போது கோணி, உடலில் பல கட்டுகள் போடப்பட்டிருந்தது. 

“சபரி…சபரி…”

அவனை கண்டு பதறி அழுதாளே ஒழிய வேறு எதையும் செய்ய முனைந்தாளில்லை வினோதினி.

“வினி ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்” யாமினி இடைவிடாது சொல்லவும் நினைவுலகத்திற்கு வந்தாள் வினோதினி.

“எமெர்ஜென்சி வார்டில் கூட்டம் போடாதீங்க”

சொன்னபடி உள்ளே வந்த செவிலியர் படுத்திருந்த அவனுக்கு ஒரு ஊசியை செலுத்தினாள். அங்கிருந்த மற்ற அனைவரும் வெளியேற, வினோதினி பொழுது விடியும் வரை அங்கிருந்து நகரவில்லை.

அவனுக்கு நினைவு திரும்பும் வரையிலும் இவளின் ஹாஸ்பிடல் விஜயம் நிற்கவில்லை.

“வினி இன்னிக்கி சீக்கிரம் ஆபிஸ் வருவியா?” யாமினி அழைத்திருந்தாள்.

“ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டிருக்கேன். எப்போ வருவேன் தெரியலை”

வேதனையாக இருந்தது. எப்படி துள்ளி திரிந்து கொண்டிருந்தவனை இப்படி பார்க்க அவளால் முடியவில்லை. அவனை பெற்றவர்கள் பார்த்தால் தாங்கிக் கொள்வார்களா தெரியவில்லை. அவர்களுக்கு தகவல் சொல்ல யாரும் முனைந்ததாக கூட தோன்றவில்லை.

அவசர அவசரமாய் டிராபிக் கடந்து அங்கு அவன் அறைக்கு வந்து இவள் எட்டிப் பார்க்க கட்டிலில் சாய்ந்திருந்தான். சந்தோஷமாகி போனது வினோதினிக்கு. இவளை கண்டவன் கண்களில் ஏதோ ஒரு எக்ஸ்டரா ஒளி!

“ஹாய் வினி. நீ எப்படி…”

அடிபட்ட வாயின் ஊடே வார்த்தைகளை பாதி மென்று மீதி சொன்னான்.

அவனை நெருங்கி வந்தவள் அவனின் அதே கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

“டிரின்ங் ஆண்ட் டிரைவ், பைக்கில் அதுவும் ஹெல்மெட் இல்லாம. அந்த நாசமா போன குடியில் என்னதான் டா இருக்கு? சாகுற வயசா உனக்கு? கொஞ்சமாவது அறிவிருக்கா? இன்னமும் சின்ன பையன்னு நினைப்பா உனக்கு? பொறுப்பு வேண்டாம்? எத்தனை பெரிய ஆபத்திலிருந்து பிழைச்சி வந்திருக்க தெரியுமா சபரி!”

எதுவும் பதிலில்லை அவனிடம். அறைந்த இடத்தை தடவிக் கொண்டவன். 

சின்ன புன்னைகையுடன்,

“அன்னைக்கு உன்கிட்ட பேசின சந்தோஷத்தில் கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடிச்சு…இப்ப அதைவிடு…”

இடைவெளி விட்டவன்,

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா வினி?”

‘லப் டப் லப் டப்’

ஸ்டெத் இல்லாமல் அவளின் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது! அதை குறைக்கும் வழி தெரியாமல் நின்றிருந்தவளை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சபரி.

இன்று…

அந்த காலை வெயில், திறந்து வைத்திருந்த அவன் வீட்டு  ஜன்னல் வழியே அவன் மீது பட்டு தெரித்தது. வெளிச்சமான அந்த அறையின் ஓரமாய் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவன். அவன் முன்னிருந்த மேசை மீது ஒரு மடிக்கணிணி.

சபரி தன் காதில் மாட்டியிருந்த ‘ஹெட்போன்’ வழியாக கேட்டுக் கொண்டும், வாய் பக்கமிருந்த மைக்கில், கம்பெனி விஷயத்தில் தன் பங்களிப்பை குறித்து எதிர்முனையில் இருந்தவர்களிடம் விவரித்துக் கொண்டும் இருந்தான். ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி அவர்கள் பேசியது எதுவும் புரியவில்லை, அந்த ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிட்டு குருவிகளுக்கு.

மணி பத்திருக்கும். அதற்குள் பல மணி நேரம் வேலை பார்ர்திருந்த அலுப்பு தோன்றியது அவனுக்கு. கால நேரம் எதுவும் பார்க்காமல் தொடர்ந்து வேலை செய்வதால் உண்டான சோர்வு போலும்.

“தம்பி…தம்பி…சபரிஷ், கதவை திறங்க”

இந்த ‘வர்க் ஃபிரம் ஹோம்’ கொடுமையை தாங்க பழகிக் கொண்டிருந்தவனுக்கு இன்று இதற்கு மேலும் பொறுத்திருக்க இயலவில்லை.

முக்கியமான  மீட்டிங் அவனது. அதை மியூட் போடும் முன்னரே பத்து தடவை ‘தம்பி’ போட்டுவிட்டார் பத்மினி அம்மையார். அவர் அவன் குடியிருக்கும் அந்த அபார்ட்மெண்ட்டின் உரிமையாளர்.

வயதில் மூத்தவர் என்றாலும் அடுத்தவர் விஷயம் எல்லாவற்றிலும் அவரின் பங்கும் இருந்தே ஆக வேண்டும் என்ற ‘பறந்த’ மனப்பான்மை உடையவர் பத்மினி அம்மையார். ஆறு வீடுகள் வாடகைக்கு என்று இருந்த அந்த குடியிருப்பில் தரைத்தளம் முழுவதையும் தனி வீடு போல் அமைத்து தனக்கென்று வைத்துக் கொண்டு, மீது மூன்று மாடிகளையும் வாடகைக்கு விட்டிருந்தார்.

பத்மினி அம்மாவுக்கு கணவர் தவறியிருக்க, பிள்ளைகள் வெளிநாட்டில் குடி கொண்டிருக்க இப்போது அங்கே குடியிருப்பவர்களே அவருக்கு எல்லாமுமாய்.

சபரிக்கு தெரிந்து அவன் மாத்திரமே இங்கே கடைசியாக, புதிதாய் வந்த ஆள், மற்ற வீட்டினர் அனைவரும் வருட கணக்கில் இங்கு இருப்பவர்கள்.

“இதோ வரேன் பத்மினி மா”

கதவை திறந்தவன் அடுத்து இருந்த இரும்பு கேட்டை திறக்கும் முன்பே,

“உன் கிட்ட என்னை அம்மான்னு கூப்பிடாதேன்னு செப்பேஸ்தானு காதா? பத்மினி அக்கான்னு சொல்லு மேன். என் பேரனே பத்மினினு அழகா என்னை பேர் சொல்லி கூப்பிடுறான்!”

சபரி மனம் முழுவதற்கும் அவன் ஆபிஸ் விஷயமே ஓடிக்கொண்டிருந்தது.

இவரிடமிருந்து…இல்லை இவர் சொல்லும் விளக்கங்களிடமிருந்து சீக்கிரம் தப்பிக்க வேண்டும், நினைத்துக் கொண்டான் அவன்.

“சரி சாரி, பத்மினி கா. என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்க, பாதி மீட்டிங்கில் இருக்கேன்”

அவர் காதில் விழுந்த அந்த வார்த்தையை பிடித்துக் கொண்டே,

“எப்புடு பாரு மீட்டிங். ஆமா அதி இக்கட லேதா? ஆங் யாமினி ஏமி ஆயிந்தி?”

“ஊருக்கு போயிருக்கா. வந்திருக்கணும் இப்ப. ஆனா லாக்டவுனில் மாட்டிகிட்டா…இந்த ஊரடங்கு முடிஞ்சதும் வந்திடுவா”

“அவ்வுனா? கொரோனா எல்லாம் போன பின்னால மெதுவா வந்தா போதும், சொல்லி வை. இந்தா பால் கவர். கீழே வந்து நீயே எடுக்க மாட்டியா? தினமும் உன்னோட இதே தொந்திரவா போச்சு மேன்”

“சாரி நீங்க விட்டுறுங்க நானே எடுத்துப்பேன் இனிமேல்”

“நீ 12 மணிக்கு எடுக்கிற வரை என் வீட்டு நாய் சும்மா இருக்கும்னு நினைச்சியா? போன வாரம் உன் இரண்டு பாக்கெட் பாலை வீணாக்கிடிச்சு”

பால் பாக்கட்டை தந்தவர் கொஞ்சம் அதை வைத்து அவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை எல்லாம் முடித்துவிட்டு போக சபரியின் மீட்டிங்கும் முடிந்திருந்தது.

பத்மினி அம்மா என்ன தான் வாய் சவடால் காட்டினாலும் காரியத்தில் அவரை யாரும் மிஞ்சிவிட முடியாது. அதில் ஒன்று இந்த வீடு என்றால் மற்றொன்று தோசை மாவு பிசினஸ். அவரிடம் ஏற்கனவே அவன் வாங்கியிருந்த மாவில் தோசை ஊற்றி கொண்டிருந்தவனுக்கு அவரை பற்றிய எண்ணங்களே. இந்த வயதிலும் எத்தனை உழைக்கிறார்? வீட்டு வாடகை சுளையாக வருகிறது, அது போதும் என்று சோம்பியிராமல் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் உபயோகப்படுத்தி வைக்கிறார்.

லுங்கியை மடித்துக் கட்டி தோளில் முகம் குடைக்கும் துண்டை போட்டுக் கொண்டிருந்த சபரியை பார்க்க ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பவன் இவன் தான் என்று சொல்ல முடியாது. மாநிறத்தில் களையாய் இருந்தவனை முதன் முதலில் பார்க்கும் எவருக்கும் பிடிக்கும். ‘லேட்டஸ்ட் டிரெண்ட்’ என்று  முகம் முழுக்க அந்த வீணாய் போன தாடியை வளர்த்துக் கொண்டிராமல் அதற்கு மாறாக பளீச் முகமாய் இருந்தான். 

அடர்த்தியாய் மீசை, மிகவும் அடர்த்தியாய் தலைமுடி. சிறு வயதில் தினமும் தன் அன்னை இவன் தலையில் எண்ணை வைத்துவிட்டதற்காக அவன் திட்டியதெல்லாம் போய், இப்போது அவனுக்கு தான் அவை பலன் கொடுத்து கொண்டிருக்கிறது. 

தனக்கென்று நான்கு தோசைகளையும் அதற்கு ஏற்றார் போல் காரசாரமாய் ஒரு மிளகாய் துவையலையும் செய்து கொண்டவன் ஹாலில் வந்து டிவியில் நியூஸ் சேனலை வைத்தும் கொண்டு அமர்ந்தான். அடுத்த ஒரு மணிநேரம் அவனுக்கு எந்த மீட்டிங்கும் இல்லை என்பதால்.

‘கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களும், அரசாங்கமும் தினம் தினம் சொல்லும் அறிவுரைகளை சிறிதும் மதித்து நடக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என்று மருத்துவ ஊழியர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்’

செய்தி வாசிப்பாளருக்கு கூட இன்று என்ன எரிச்சலோ? கோபத்தில் வாசிப்பது போலிருந்தது சபரிக்கு.

ஆனாலும் யாருக்கும் கோபம் வருவது நியாயம் தானே? தனிமனித ஒழுக்கம், சமூக இடைவெளி என்று கூப்பாடு போட்டு சொல்லியும் கேட்க மாட்டேன் என்றால் என்ன தான் செய்வது? ஒருவரோடு மட்டுமா இந்த பிரச்சனை முடியும்? எத்தனை பேருக்கு இதனால் துன்பம்?

இதோ பல மாதங்களாய் தனியே அவனும்! அவளும் உடன் இல்லாமல்.. எப்போது வருவாள் என்றிருந்தது.

ஒரே வீட்டில் பல நாள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தாலும் இப்போது அவள் உடன் இல்லாதது ஏதோ குறையாய் பட்டது.