சொல்லாத ரகசியம் நீ தானே

 

அத்தியாயம் 2

 

தரணிதரன் சபரியின் தந்தை. ஒரு பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். தந்தைக்கும் மகனுக்கும் அவனின் பதின் வயதில் ஆரம்பித்த ஏழாம் பொருத்தம் இன்னமும் தொடர்கிறது என்பதில் சபரியின் தாய் விமலாவிற்கு ஏக வருத்தம். இப்போது அவன் அழைத்த அந்த போன் பேச்சிலும் அதே பிரச்சனை தான் இருவருக்கும்.

“இதான் உங்க கிட்ட நான் பேச்சே வச்சிகிறதில்லை. ஒண்ணு அட்வைஸ் பண்றீங்க இல்லைன்ன திட்டுவீங்க. இதை தவிர ஏதாவது என் கிட்ட பேச தெரியுமா பா உங்களுக்கு? இத்தோட நிறுத்திட்டு தயவுசெஞ்சு போனை மாமா கிட்ட கொடுங்க. வேண்டாம்…இனியும் ஏதும் பேசி என்னை கோப படுத்தாதீங்க. உங்களுக்கு கொரோனா எல்லாம் வராம இருக்கணும்ன முதலில் நான் சொன்னதை செய்ங்க”

தரணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததை கண்கூடாக கண்டார் விமலா. 

மகன் இப்படியெல்லாம் பேசிவிட்ட  எரிச்சலில் தரணியும்,

“டேய் மாதவா அவன் உன் கூட தான் பேசணுமாம்” என்றபடி சபரியின் தாய் மாமனிடம் போனை கொடுத்திருந்தார்.

நடக்கும் கூத்தை எல்லாம் பல தடவை பார்த்திருந்தபடியால் இதெல்லாம் வழமை தான் என்பது போல் போனை வாங்கிக் கொண்ட மாதவன்,

“சொல்லு சபரி பையா நல்லா இருக்கியா?”

இந்த கரிசனத்திற்காக தான் சபரி காத்திருந்ததே.

“மாமா ஒரு சின்ன பிரச்சனை. அவ அங்க வந்திட்டா. நான் இப்ப…வந்து கொஞ்ச நாளாவே, இங்க சென்னையில் தனியா தான் இருக்கேன் மாமா”

“ஹலோ…ஹலோ…சபரி, நீ சொல்றது எதுவுமே கேட்கலை. சிக்னல் சரியா இல்லை போலிருக்கு. நான் மாடிக்கு வந்து மறுபடியும் கூப்பிடுறேன்”

தன் மகனுடன் பேச தனியே போகிற மச்சினனை தொடர்ந்தது தரணியின் பார்வை. இவருக்கு தெரியாமல் இவர்களுக்குள் என்ன ரகசியமோ என்றிருந்தது.

‘அவனை கெடுத்து வச்சியிருக்குறதே இந்த பய தான்’

மொட்டை மாடியில் தனிமையை ஏற்படுத்திக் கொண்டு அக்காள் மகனை மறுபடி அழைத்தார் மாதவன்.

“சபரி இப்ப சொல்லு பா, மாமா தான் பேசுறேன்…”

“மாமா நான் அப்போ சொன்னது கேட்டதா? அவ தனியா…”

“எல்லாம் எனக்கு தெரியும் சபரி. அம்மணி வந்த இரண்டாவது நாளே அவ அப்பா என்கிட்ட விஷயத்தை சொல்லிட்டாரு.”

சற்று நேர மெளனம் இருவருக்குமிடையே.

“உங்களுக்கு தெரியுமா? அப்ப ஏன் என்கிட்ட எதுவுமே கேட்கலை? அப்பாவுக்கு இதை பத்தி சொல்லலை தானே?”

“ம்ம் இதையெல்லாம் எதுக்கு அவர்கிட்ட சொல்லிகிட்டு? ரொம்ப பெரிய விஷயமா இருந்தா தான் நீயே என் கிட்ட சொல்லியிருப்பியே? சரி இது ஏதோ சின்ன விஷயம் போலன்னு விட்டுட்டேன் பா”

மாதவன் மாமா…என்றைக்கும் அவர் இவனிடம் இப்படித்தான். குறை என்று சுட்டிக்காட்ட அவரிடம் ஒரு விஷயம் கூட இருந்ததில்லை.  சபரிக்கு மட்டும் இப்படி அவரை பற்றி தோன்றுவதில்லை, ஏனையோரின் எண்ணமும் அதுவே.

சபரி அன்னை விமலாவுக்கு மாதவனுடன் சேர்த்து மூன்று தம்பிகள். மற்ற இருவரும் வட இந்தியாவிலும், வெளிநாட்டிலும் குடியிருக்க, மாதவன் மாமா மட்டும் தன் அக்காவிடமே அடைக்கலம் ஆகிவிட்டார். திருமணம் செய்ய சொல்லி பல தடவை உடன் பிறந்தவர்கள் எல்லாம் சொல்லியும் அதை மறுத்துவிட்டிருந்தார். 

அவ்வூரில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அக்காள் வீட்டின் பின்பக்கமே தனியாக அவருக்கென்று கட்டிய இரண்டு அறைகள் கொண்ட வீடே அவரின் இல்லம். சபரிக்கு இன்றளவும் எல்லாமும் அவரே. தந்தை, தோழன், ஆசிரியர்… 

“என்னவோ எங்க இரண்டு பேருக்கும் நடுவில் சரியா வர மாட்டேங்குது மாமா. யாமினி விஷயத்தில் அவசர பட்டுடேன்னு தோணுது. ஏற்கனவே குழம்பி போயிருந்த நேரத்தில் இந்த கல்யாணம். தப்பு பண்ணிட்டேனோ மாமா”

“சபரி நீ யோசிக்கிற அளவுக்கு விஷயம் பெரிசில்ல பா. அவ அப்பா ஒரு இடத்தை விற்க ஏற்பாடு செஞ்சியிருந்தார். இடம் யாமினி பெயரில் இருந்ததால வர சொல்லியிருக்கார். வந்த இடத்தில் பொண்ணு திரும்ப வழியில்லாம மாட்டிகிட்ட மாதிரி ஆகிடிச்சு”

“அது கூட அம்மா சொல்லி தான் எனக்கு தெரியும் மாமா. என்கிட்ட சொல்லிட்டு கூட ஊருக்கு போகலை. என்ன நடக்குது?”

“சபரி, நீ எப்படிபட்ட மனநிலையில் இருக்கேன்னு எனக்கு நல்லா புரியுது. ஆனா இந்த மாதிரி கருத்து வேறுபாடு அதுவும் புருஷன் பொண்டாட்டிகுள்ள சகஜம் தானே டா. இதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே. கூடிய சீக்கிரம் எல்லாம் சரியா வரும். நீ யாமினி கிட்ட அடிக்கடி பேசி வச்சி இரு”

எளிமையான காரியம் போல் சொல்லிவிட்டார் மாதவன் மாமா. இதுவரையிலும் இதை செய்யாத சபரி இனி செய்வானா?

‘கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்ட காரணத்தால் மாவட்டம் தோறும் உள்ள பேருந்துகளை ரத்து செய்திருக்கிறது மாநில அரசு. ‘ஈ பாஸ்’ கட்டாயம் என்பதும் அமலுக்கு வந்திருக்கிறது. திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று எல்லா மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’

யாமினி டிவியில் ஓடிய செய்தி சுருளை வெறித்தபடி இருந்தாள். கோதுமை நிறத்தில் இருந்தவளின் முக அமைப்பு, கன்னத்தில் இருந்த கன்னக்குழியுடன் மிக அழகாய் இருந்தது. பள்ளி காலம் முடியும் வரைக்கும் வைத்திருந்த தன் நீண்ட முடியை, தோள் தொடும் அளவு குறைத்திருந்தாள். அந்த முகத்தில் இன்னும் ஒன்று இருதிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது புன்னகை.

அதற்கு தற்போது வாய்ப்பில்லை போலும். அவளும் ஊருக்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. வீட்டிலிருந்தபடி தன் ஆபிஸ் பணியை செய்து கொண்டிருந்தாள். அடிக்கடி மனம் சபரியிடம் சென்று தஞ்சமடைந்தாலும் அதை வெகு பாடுபட்டு இழுத்துக் கொண்டு வரும் சோதனையெல்லாம் அவளுக்கு பல முறை நடக்கும். அவள் இங்கே வரும் வாய்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை சபரியை மனதளவில் நெருங்கியிருக்க முடியுமோ?

கொரோனா என்ற நோய் சீனாவின் வூஹானில் பரவ ஆரம்பித்த காலகட்டம் அது. இந்தியாவின் வெப்ப நிலைக்கு இங்கே அந்த நோயெல்லாம் எட்டியே பார்க்காது என்ற ஜம்பத்தில் சுற்றி கொண்டிருந்தோமே அதே காலகட்டத்தில் தான் சென்னையில் இருந்த தன் மகளுக்கு போன் செய்தார் யாமினியின் தந்தை ஆனந்த்.

“யாமினி நீ கொஞ்சம் ஊருக்கு வந்திட்டு போறியா, உன்னால முடியுமா? ஒரு வாரம் இங்க இருந்தா கூட போதும்.”

“என்ன பா திடீர்னு?அங்கே எல்லாரும் நல்லா இருக்கீங்களா பா?”

குடும்பத்தில் யாருக்கும் உடல் சுகவீனமோ என்ற பதற்றத்தில் அவள்.

“எல்லாரும் சுகம் தான் மா. அது வந்து, உன் கல்யாணத்துக்குன்னு வாங்கின லோன் வட்டி கட்டி முடியலை. அதை மொத்தமா அடைக்கலாம்னு பார்த்திட்டிருந்தேன், பிசினஸ் வேற இப்ப கொஞ்சம் சரியில்லை. அதான் உன் பேரில் வாங்கின டிவிஎஸ் நகர் பிளாட்டை கொடுத்திடலாம்னு அட்வான்ஸ் வாங்கிட்டேன். வாங்குறவங்க உடனே முடிக்கணும்னு சொல்றாங்க. நீ இங்க வந்தாகணும் மா”

“அவ்வளவுதானே பா…சரி வரேன்.”

“மாப்பிள்ளை கிட்ட இந்த விஷயத்தை நானே சொல்லிடவா மா?”

“அதெல்லாம் பரவாயில்லை பா. நான் சொல்லிக்கிறேன். நைட் பஸ் ஏறிட்டு கூப்பிடுறேன்.”

‘நீ இல்லாம என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது…போகாதே’ என்று தடுத்து விடுவாராமா இவரின் மாப்பிள்ளை!? அந்த நினைப்பில் விரக்தியாய் சிரித்துக் கொண்டவள், அன்றிரவே கிளம்பியிருந்தாள் தன் சொந்த ஊரான மதுரைக்கு.

இதோ அந்த ஒரு வாரம் பல வாரங்களாய் நீண்டு கொண்டிருக்கிறது. இது எப்போது முடியும் என்பதை எவரும் அறியவில்லை. இந்த ஊரடங்கு  ஆரம்பிக்கும் முன்னரே அவள் வந்திருந்த படியால் தந்தை அந்த நிலத்தை விற்க முடிந்தது, அது வரையிலும் அவளுக்கு திருப்தி.

அவள் கைப்பேசியில் அழைப்பு வந்தது. விமலா அத்தையிடமிருந்து.

“சொல்லுங்க அத்த”

“யாமினி நல்லா இருக்கியா? நேத்து உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன். ஆனா ஒரே முட்டி வலி. அப்படியே வீட்டில் இருந்துட்டேன். வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்க தானே?”

“இங்க எல்லாரும் சுகம் அத்த. நீங்க சொல்லியிருந்த நான் வந்து ஏதாவது உதவி செஞ்சியிருப்பேன். தனியா செய்ய கஷ்டமா இருந்திருக்கும் உங்களுக்கு, இல்லையா?”

“ஆமாம் மா. பக்கத்திலேயே மருமவ இருந்தும் இங்க கூப்பிட முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. வெளிய எங்கையும் போறதில்லை, சபரி கிட்ட பேச பிடிக்கலைன்னு மனசில் பாரம் ஏகத்துக்கும் ஏறிகிட்டே போகுது யாமினி”

பதில் சொல்லவில்லை அவள். 

“நீ இங்க ஊரில் இருக்குற விஷயம் மாமாவுக்கு தெரியாது. என்னைக்கு அது தெரியவருதோ அப்போ அடுத்த மண்டகப்படி அவனுக்கு இருக்கு. ஏதாவது வழி யோசிக்கணும் மா. ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது பாரு.”

“ம்ம்…நான் வேணா நாளைக்கு அங்க வந்திடவா அத்த? சென்னையில் இருந்து வர மாதிரி காட்டிக்கிறேன்”

“அதெல்லாம் சீக்கிரத்தில் நம்ப மாட்டாரு. இப்ப இருக்குற நடைமுறை சிக்கல் எல்லாம் அவருக்கும் தெரியும். வந்தா இரண்டு பேரும் சேர்ந்து வாங்க. அவன் சமாளிச்சுப்பான் அவரை. அவன் கூட பேசி சீக்கிரம் ஒரு முடிவெடு மா. ரொம்ப நாள் என்னை காக்க வைக்காத என்ன? வச்சிடுறேன் மா”

போன் பேச்சு முடியும் முன்னரே யாமினியின் அன்னை லதா மகளுக்கு அருகில் வந்தமர்ந்தார்.

“யாரு டி போன்ல, உங்க அத்தையா? என்ன சொன்னாங்க?”

அவள் விஷயத்தை சொல்ல.

“நீ இங்க வந்த நாளில் இருந்து சொல்லிகிட்டிருக்கேன். இதெல்லாம் நல்லா இல்லைன்னு. உன் மாமனாருக்கு மட்டும் விஷயம் தெரிய வந்தது உன் கூட சேர்ந்து அப்பாவுக்கும் தலைகுனிவு. சீக்கிரம் அங்க உன் மாமியார் வீட்டுக்கு போகிற வழியை பாரு. உள்ளூரில் இருந்துகிட்டு ஒருத்தர் கண்ணில் ஒருத்தர் படாம இருக்குறது எல்லாம் கஷ்டம். அம்மா சொல்றேன் கேட்டுக்கோ”

அடுக்களைக்கு திரும்பியவர் அங்கேயும் எதையோ சொல்லி புலம்பி கொண்டிருந்தது அவளுக்கு மட்டுமில்லை பக்கத்து வீட்டுக்கே கேட்டிருக்கும்.

மொபைல் போன், வீட்டில் இருக்கும் லேன் லைன், வாட்ஸ் ஆப் கால் இன்னும் என்னென்னவோ இருந்தும் தம்பதிகள் நடுவில் பேச்சு தொடர்பு என்பது அறவே இல்லை. அவளுக்கு போன் என்று இதுவரை அவனிடமிருந்து வந்ததில்லை. நினைக்க கொஞ்சம், இல்லை நிறையவே வருத்தமாக இருந்தது. அவள் மாத்திரம் என்ன சன்னியாசியா? பல கனவுகளுடன் அவனை திருமணம் செய்தவள். இந்த சின்ன எதிர்பார்ப்பு கூட இல்லையென்றால் எப்படி? எதிர்பார்த்து ஏமாந்தது போதும் என்றிருந்தது யாமினிக்கு.

இரவு பத்தி மணி வரைக்கும் அவன் அலுவலக வேலைகள் தொடர்ந்தது.

‘ஆபிஸ் போனா கூட ஏழு மணிக்கெல்லாம் முடிச்சிடுறோம், இப்ப வீட்டிலிருந்து செய்றது நேரம் காலம் தெரியாமல் போய்கிட்டே இருக்கு’

சலிப்படையாமல் வேலை செய்யும் சபரிக்கே இப்படி சலிப்பு தட்டியது.

இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி தன் சோம்பலை முறித்தவன், எதையாவது வயிற்றுக்கு கொடுக்கலாம் என்று அடுக்களைக்குள் நுழைந்தான். இன்று அதிகபட்சமாய் அவனால் செய்ய முடிந்தது ‘மேகி’. நெட்ஃபிலிக்ஸில் தன் ஆஸ்தான சீரிஸை பார்க்க ஆரம்பித்தவன் அதில் அப்படியே மூழ்கியிருக்கக் கூடும், அவன் மனைவி யாமினியிடமிருந்து அழைப்பு வரவில்லை என்றால்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!