ஜீவநதியாக நீ – 10

JN_pic-698e42ba
Akila Kannan

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 10

ஜீவாவின் புது வீட்டில்.

    பம்ப் அடுப்பு வாங்கி இருந்தார்கள். அதை உயிரை கொடுத்து அடித்து கொண்டிருந்தாள் தாரிணி. அவளுக்கு சமையல் தெரியும். இருந்தாலும், இத்தனை வேலைகள் அவள் தனியாக செய்ததில்லை.

    தலைக்கு குளித்து துண்டை கொண்டை போல் கட்டிருந்தாள். மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். சுடித்தார் அத்தனை கச்சிதமாக தைக்கப்படவில்லை. சற்று தொளதொள என்று தான் இருந்தது.

வேலை விஷயமாக யாரையோ சந்தித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஜீவா.

அவன் கண்கள் அவளை பெருமையோடு காதலோடு பார்த்தது.

அவள் உடை அவள் அங்கவடிவை காட்டவில்லை என்றாலும், அவள் செயல்பாடுகள் அவள் மனதை படம்பிடித்து காட்டியது.

பின்னோடு சென்று அவளை கட்டிக்கொண்டு, “தாரிணி…தாரிணி…” என்றான் உணர்ச்சி பெருக்கோடு.

“ஜீவா…” அவள் அவன் கைவளைவுக்குள் முன்னே திரும்பி, “என்ன ஆச்சு?” என்றாள் கண்களை நிமிர்த்தி.

“தேங்க்ஸ்…” என்றான் அவள் நெற்றியில் மோதி.

“எதுக்கு?” என்றாள் அவள் மீண்டும் புரியாமல்.

“நீ எவ்வளவு பணக்கார இடத்தில வளர்ந்தவ. எனக்காக தானே இவ்வளவு கஷ்டப்படுற?” அவன் அவள் முகமெங்கும் இதழ்களால் பரிசளித்தான்.

“ஜீவா…” அவள் நாணம் கொண்டு முகம் கவிழ்ந்து கொண்டாள்.

“தாரிணி…” அவன் அவள் செவியோரமாக அழைக்க, “ம்…” அவள் நாணம் கொண்டு, வார்த்தைகள் வராமல் தவித்தாள்.

அவன் அவளை அணைத்துக் கொண்டான். அவன் பிடிமானத்தில் அவள் தேகம் நாணம் கொள்ள, நாணத்தை பரிசளித்தவனிடமே நாணம் தாங்காமல் சாய்ந்து கொண்டாள்.

“என்ன சோப்?” அவன் அவள் மணத்தை மணம் முழுதும் நிரப்பி உல்லாசமாக கேட்டான்.

தொளதொள சுடிதார் அவன் சுவாசக்காற்றை அவள் தேகத்தை தீண்ட, “ஜீவா…” அவள் மென்மையாக கிசுகிசுத்தாள்.

புது மனைவியின் ஸ்பரிசத்தில், அவன் வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.

“லவ் யூயூ ஜீவா” அவள் வார்த்தைகள் தெளிவாக வெளி வர, அவன் சுதாரித்துக் கொண்டான்.

அவள் செவியோரம், அவன் இதழ்கள்.

“நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா தாரிணி?” அவன் இதழ்களை முந்திக்கொண்டு, அவன் வார்த்தைகள் அவள் செவியை தீண்டியது.

‘என்னவா இருக்கும்?’ அவளுள் படபடப்பு, நாணம் ஒருபுறம், படபடப்பு ஒருபுறம், “ம்…” அவள் அவன் முகம் பார்த்து கூற,

“பசிக்குது தாரிணி. வேலை விஷயமா பயங்கரமா அலைஞ்சிட்டு வந்தேன்” என்றான் குறுஞ்சிரிப்போடு.

அவள் முகத்தில் மென்னகை.

“உப்புமா கிண்டிருக்கேன் ஜீவா…” அவள் விலகி கொண்டு அடுப்பு பக்கத்தில் சென்று கிளறினாள்.

தன் எண்ணப்போக்கை எண்ணி இருவரும் நகைத்துக் கொண்டனர்.

அவள் சமையலில் கவனத்தை திருப்பி, தன் எண்ணப்போக்கை திசை திருப்ப அவன் ஆழ மூச்செடுத்து தன்னை சரி செய்து கொண்டான்.

“தாரிணி, நாம இருக்கிற இடம் இப்ப எல்லாருக்கும் தெரியும். நம்மை தேடி யார் வேணுமினாலும் வரலாம்.” அவன் குரல் இப்பொழுது முற்றிலுமாக மாறி இருந்தது.

“ஓ…” அவள் பதிலும் ஒற்றை வார்த்தையாக வெளிவந்தது.

“பெரிய பிரச்சனை வரலாம்.” அவன் அவளை மேடை மீது தூக்கி அமர வைத்து முன்னே நின்று கொண்டு கூறினான்.

அவள் தலை அசைத்தாள்.

அவள் மடி மீது இருந்த அவள் கைகளை தன் கைகளுக்குள் கோர்த்துக் கொண்டு, “நான் இருக்கிறேன். பிரச்சனை வரும். ஆனால், நம்மளை யாராலும் பிரிக்க முடியாது.” அவன் கூற, “லவ் யூ ஜீவா” அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

“பயப்பட கூடாது தாரிணி” அவன் கூற, அவள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு சம்மதமாக தலை அசைத்தாள்.

அவள் ஒவ்வொவரு தடவையும் அசைக்கும் பொழுதும் அவன் தலை மீதி மோதி விலக அவள் குழந்தை தனத்தில் அவன் சிரித்துக்கொண்டான்.

அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்க, இருவரும் விலகி கொண்டனர்.

“ஜீவா… ஜீவா…” அவன் நண்பன் பதறியபடி ஓடி வர, “என்ன ஆச்சு?” ஜீவா நிதானமாக கேட்டான்.

“ரவி, ரவி…” அவன் தடுமாற, தன் சகோதரனின் பெயரில் தாரிணி தன் கவனத்தை அவர்கள் பக்கம் முழுதாக திருப்பினாள்.

“ரவிக்கும் கீதாவுக்கு கல்யாணம் நடந்திருக்கு. நாம, நம்ம விஷயத்தில் இருந்த ஹரிபரியில் இதை தெரிஞ்சிக்க முடியலை.” நண்பன் கூற, ஜீவா சிலையாக நின்றான்.

தாரிணியின் முகத்தில் சொல்லில் வடிக்க முடியாத உணர்வு.

“ஜீவா…” நண்பன் அழைக்க, “நீ கிளம்பு, நான் பார்த்திக்குறேன்” ஜீவா அழுத்தமாக கூற, நண்பனின் மனம் அறிந்தவன் போல் அவன் கிளம்பிவிட்டான்.

ஜீவா எதுவும் பேசவில்லை. அவன் முகபாவத்தில் அவனிடம் பேசவே அஞ்சினாள் தாரிணி.

ஜீவா சமையலறைக்கு சென்று மடமடவென்று தண்ணீரை குடித்தான்.

“பசிக்குதுன்னு சொன்னியே ஜீவா?” அவன் தண்ணீரை குடித்த வேகத்தில் தாரிணி கேட்க, “இப்ப இல்லை.” அவன் சோர்வாக தரையில் அமர்ந்துவிட்டான்.

“ஜீவா ஏன் இப்படி இருக்க? நல்லது தான் நடந்திருக்கு” தாரிணி கூற, “எது நல்லது?” ஜீவா கோபமாக கேட்டான்.

“நம்ம பிரச்சனை பாதி சரியாகிருச்சு. உங்க வீடும், என் வீடும் சமாதானமா போய்ட்டாங்க. நம்ம மேல மட்டும் தான் இப்ப கோபம் இருக்கும். இன்னும் கொஞ்சம் நாளில் அதுவும் சரியாகிரும்.” தாரிணி பொறுமையாக கூறினாள்.

“என் தங்கை வாழ்க்கை?” அவன் கேட்க, “கீதாவுக்கு என்ன பிரச்சனை? அவ எங்க வீட்டில் தானே வாழ போயிருக்கா.” தாரிணி நிதானமாக கேட்டாள்.

“அந்த வீடு வேண்டாமுன்னு தான் நீ வெளிய வந்திருக்க தாரிணி.” ஜீவா சற்று கோபமாகவே கூறினான்.

“இல்லை ஜீவா, அந்த வீடு வேண்டாமுன்னு வரலை. நீ வேணுமுன்னு வந்தேன்” அவள் குரலில் இப்பொழுது உறுதி இருந்தது.

அவன் எதுவும் பேசவில்லை.

“ஜீவா…” தாரிணி ஆரம்பிக்க, “பேசாத தாரிணி. என் தங்கைக்கு நான் நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணனும்னு நினச்சேன்.” அவன் குரலில் ஏமாற்றம்.

“எனக்கு புரியலை ஜீவா. நான் உனக்கு பொருத்தமா இருக்கும் பொழுது என் அண்ணன் உன் தங்கைக்கு பொருத்தமா இருக்க மாட்டானா?” தாரிணி இப்பொழுது கோபமாக கேட்டாள்.

“நான் அவசரப்பட்டுட்டேன்” அவன் புலம்ப, “என்ன ஜீவா, என்னை கல்யாணம் பண்ணதை அவசரமுன்னு சொல்லறீயா?” தாரிணி கூர்மையாக கேட்டாள்.

“தாரிணி, நீ தேவை இல்லாமல் பிரச்னையை திசை திருப்புற. நான் உன்னை ஒண்ணுமே சொல்லலை. என் தங்கையை பத்தி யோசிக்கிறேன். புலம்புறேன். எனக்கு அதுக்கு கூட உரிமை இல்லையா ?” ஜீவா உச்சந்தியில் கத்தினான்.

“நீ எங்க ஜீவா அவசரப்பட்ட? அவரசப்பட்டது நான். வீட்டை விட்டு வெளிய வந்தது நான், எனக்காக தான் நீ அவசரஅவசரமா வீட்டை விட்டு வெளிய வந்த? அப்ப நான் தானே காரணம் ஜீவா. நீ என்னை தானே சொல்ற?” அவள் கேட்க,

“தாரிணி, நான் உன்னை ஒண்ணுமே சொல்லலை. நான் என் குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திருக்கணும். அதை செய்யாதது என் தப்பு. நீ எப்படி எனக்கு முக்கியமோ, அப்படி எனக்கு அவங்களும் முக்கியம்.” அவன் பொறுமையாக விவரித்தான்.

“ஜீவா, நீ பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தனுமுனு சொல்ற அளவுக்கு ஒன்னும் நடக்கலையே, உன் தங்கைக்கு நல்ல இடத்தில் தானே கல்யாணம் நடந்திருக்கு” தாரிணி எகிற,

“யாரு உங்க அண்ணன் நல்லவனா? அவன் ஒரு அயோக்கியன்” ஜீவா கூற, “ஜீவா…” தாரிணி தன் காதுகளை இறுக மூடினாள்.

“நான் உன்னை நம்பி வந்தது நிஜம். உன்னை பிடிக்குமுன்னு வந்தேன். நீ வேணுமுன்னுனு வந்தேன். அதுக்காக நீ என் குடும்பத்தை என் அண்ணனை என்ன வேணும்ன்னாலும் பேசலாமுன்னு அர்த்தம் இல்லை.” அவள் அவன் முன் கோபமாக நின்று கத்தினாள்.

“ஏன் உங்க அண்ணன் கிட்ட குறையே இல்லையோ?” ஜீவா கோபமாக கேட்க, “யார் கிட்ட குறை இல்லை ஜீவா? உன்கிட்ட இல்லையா? உனக்கு கோபம் அதிகம். உன்கிட்ட இப்ப வரைக்கும் வேலை கிடையாது. போன இடத்தில் எல்லாம் சண்டை வளர்ப்ப. எல்லாம் தெரிந்து தான் நான் உன்னை காதலிச்சேன். எனக்கு உன்னை பிடிக்கும்.” அவள் நிறுத்த, அவன் ஸ்தம்பித்து நின்றான்.

“அதே மாதிரி எனக்கு என் அண்ணனையும் பிடிக்கும். என் குடும்பத்தையும் பிடிக்கும். அவங்களை குறை சொல்லாத.” கண்ணீரோடு தாரிணி சமையலறைக்குள் சென்றுவிட, ஜீவா செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்ப எத்தனித்தான்.

அப்பொழுது ரவி புகையை ஊதியபடி உள்ளே நுழைந்தான்.

“ஏய்! ஏன்டா என் தங்கையை கல்யாணம் பண்ணின?” ரவியின் சட்டையை பிடித்திருந்தான் ஜீவா.

“மச்சான்… பார்த்தியா நீ தான் தப்பு. இப்ப இல்லை எப்பவும் தப்பு. இந்த சீனில் நான் தான் உன் சட்டையை பிடிச்சிருக்கணும். என் தங்கையை இழுத்துக்கிட்டு ஓடினது நீ. அப்ப நான் தானே உன் சட்டையை பிடிச்சிருக்கணும்?” அவன் ஜீவாவின் கைகளை உருவி விட்டான்.

“நான் உன் தங்கையை முறைப்படி கல்யாணம் செய்தவன். உங்க அம்மா அப்பா கிட்ட பொண்ணு கேட்டு, ஊரறிய தாலி கட்டியவன். திருட்டு தாலி எல்லாம் இல்லை.” ரவி உதட்டை பிதுக்கினான்.

ரவியின் குரல் தாரிணிக்கு கேட்க, அவள் சமையலறையோடு பொதிந்து கொண்டாள்.

“உனக்கு தெரியுமா. எனக்கு இந்த சண்டை எல்லாம் பிடிக்காது. உன்னை பார்த்திட்டு போலாம்ன்னு தான் வந்தேன். உன்னை அடிச்சி கோபப்பட்டு என்னவாகப் போகுது? கல்யாணம் பண்ணிட்ட, ரிஜிஸ்டரும் பண்ணிட்ட… இனி ஆக்ஷன் ஸீன் எல்லாம் எதுக்கு மச்சான்? ரவி புருவம் உயர்த்தினான்.

“கீதா…” அவன் அழைக்க, அவள் காரிலிருந்து இறங்கி வந்தாள்.

“பார்த்தியா, உன் தங்கையை எப்படி வச்சிருக்கேன்னு. நான் சொன்னால் தான் அவ அசையனும்.” ரவி தன் மனைவியை பார்த்தபடி ஏளனமாக கூறினான்.

“டேய்…” ஜீவா பற்களை நறநறக்க, “கூல் மச்சான்… ஈஸி… ஈஸி..” ரவி கூற, கீதா கஷ்டப்பட்டு படியேறி வந்தாள்.

காலையில் அவள் மிதித்த சிகரெட் துண்டு கொப்பளத்தை வரவழைத்து வலியை கொடுக்க அவள் முகம் வலியில் சுருங்கியது.

“கீதா, காலில் என்ன ஆச்சு?” பதறிக்கொண்டு அவன் அவள் தங்கை அருகே சென்றான்.

தன் சகோதரனின் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தாள் கீதா. ஜீவா தன் கண்களை இறுக மூடிக் கொண்டு தன் மறு கன்னத்தை காட்டினான்.

இந்த காட்சியை பார்த்த ரவியின் கண்கள் சுருங்கியது.

சமையலறையிலிருந்து இந்த காட்சியை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிணி.

“கீதா…” ஜீவா பேச ஆரம்பிக்க, “மன்னிப்பு கேட்கும் தகுதியோ, விளக்கம் கொடுக்குற தகுதியோ உனக்கு இல்லை. உன்னை அண்ணனு கூப்பிட கூட எனக்கு பிடிக்கலை.” கீதா கூறிவிட்டு ரவியின் அருகே வர, ரவியின் உதட்டில் ஏளன சிரிப்பு.

“கீதா.” அவளை அவள் இடையோடு சுற்றி வளைத்து, “உங்க அண்ணனை பார்க்கனுமுனு சொன்னியே கீது.” அவன் உருக, ‘கீதுவா…’ அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

ரவியின் சிகரெட் வாடை கீதாவை கொல்லாமல் கொன்றது. அவன் சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டு தன் செருப்பு கால்களால் மிதித்தான் ஜீவா.

“என் தங்கைக்கு ஒண்ணுன்னுனா, உன்னை இப்படி நசுக்குவேன்.” ஜீவா ஒற்றை விரலை உயர்த்தி ரவியை மிரட்டினான்.

ஜீவாவின் செயல் அவர்கள் வீட்டில் கீதாவின் செயலை நினைவுபடுத்த ரவியின் முகத்தில் புன்னகை.

கீதா கண்களில் கண்ணீர் மல்க , தன் சகோதரனை பார்த்தாள். ‘அண்ணா…’ என்று அவள் இதழ்கள் அழைக்கவில்லை. ஆனால், அவள் விழிகள் கதறியது. ஜீவாவின் கண்கள் கலங்கியது. தன் தங்கை அருகே இருந்தாலும், தான் எங்கோ விலகி விட்டதை உணர்ந்தவன் துடித்தான்.

கீதாவின் மீதான தனது பிடிமானத்தை இறுக்கினான் ரவி. அவள் இடையை அவள் விரலை அழுத்தி பிடித்தது. இப்பொழுது அதில் கோபம் இல்லை. உரிமை மட்டுமே இருந்தது. வலி தராமல், தன் மனையாளை தன்னோடு நிறுத்திக் கொண்டான் ரவி.

கீதாவின் கண்கள் பாசம் பேசினாலும், அவள் விழிகள் தன் சகோதரனின் மீது உரிமையை காட்டினாலும், கோபத்தையும் விலகல் தன்மையும் அப்பட்டமாக காட்ட, ஜீவா மௌனமாக அவளை பார்த்தான்.

“கீதா, என் தங்கை வீட்டிலிருந்து எனக்கு தண்ணீர் கொண்டு வா” அவன் கீதாவை உரிமையோடு வீட்டிற்குள் அனுப்பினான்.

கீதா வேறு வழியின்றி உள்ளே சென்றாள். கீதாவும் தாரிணியும் பேசிக் கொள்ளவில்லை.

உண்மையில் இருவருக்கும் ஒருவரையொருவர் சுத்தமாக பிடிக்கவில்லை.

தன் அண்ணனை தன் குடுமபத்திலிருந்து பிரித்த தாரிணியை கீதா குரோதமாக பார்த்தாள்.

‘அப்படி என்ன என் அண்ணன் இவளுக்கு ஏற்ற ஜோடி இல்லை. இவளை வைத்து எனக்கும் ஜீவாவுக்கும் சண்டை’ என்று தாரிணி  கீதாவை கடுப்பாக பார்த்தாள்.

“என் தங்கைக்கு எங்கள் குடும்பம் வேண்டாத இடமா இருக்கலாம். ஆனால், எனக்கு என் தங்கை முக்கியம்.” வாசல் படியில் நின்றபடியே ரவி கூற, தாரிணி கண்களில் கண்ணீர் மல்கியது.

தன் தலையை சுவரோடு அடித்துக்கொண்டு முகத்தை மூடி விம்மினாள் தாரிணி.

ஆனால், தாரிணி சமையலறையை விட்டு வெளியே வரவில்லை.

குற்ற உணர்ச்சியில் தடுமாறியபடி சுவரோடு சாய்ந்து கொண்டாள்.

‘என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இவளுக்கு என்ன அழுகை. இவளால் நான் ரவியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் தான் அழணும்.’ கீதா கோபமாக தாரிணியை முறைத்தபடி தண்ணீரை குவளையில் எடுத்தாள்.

“நீ எங்களை விட்டுட்டு வந்தாலும், நான் உன்னை தேடி வந்துகிட்டே இருப்பேன்.” ரவி உறுதியாக கூற, கீதா தண்ணீரை தன் கணவனுக்கு கொடுத்தாள்.

அப்பொழுது காலில் இருந்த வலியில் அவள் தடுமாற, அவளை ஜீவாவின் கைகள் பற்றியது.

தன் சகோதரனின் பிடியில் அவள் கண்கள் கலங்கியது. ஜீவாவிடம் எந்த உணர்வுகளை வெளிப்படுத்தவும் அவள் தயாராக இல்லை. மடமடவென்று விலகி காரை நோக்கி சென்றுவிட்டாள் கீதா.

“உன் தங்கை காலில் என்ன காயம் தெரியுமா? நான் தான் உன்னை பழிவாங்க சூடு வச்சிட்டேன்” ரவி கிசுகிசுப்பாக ஜீவாவின் காதில் கூறினான்.

இப்பொழுது ஜீவா சத்தமாக சிரித்தான்.

ரவி இப்பொழுது ஜீவாவை கடுப்பாக பார்க்க, “நீ அடிக்கடி வீட்டுக்கு வா. ஏன்னா, உன் தங்கைக்கு உன் உதவி தேவைப்படலாம். ஆனால், என் தங்கச்சிக்கு யார் உதவியும் தேவைப்படாது. நாங்க அவளை அப்படி வளர்க்கலை. நீ அவ கிட்ட வம்பு பண்ணின, அவளே திரும்பி கொடுப்பா. அப்படி அவ கொடுக்கலை, நான் கொடுப்பேன். நீ தாங்க மாட்ட.” என்று ஜீவா அழுத்தமாக கூறினான்.

“ஏய்…” ரவி எகிற, “ச்சீ… போடா” ஜீவா அவனை வெறுப்போடு பார்த்தான்.

“என் தங்கையை அனுப்பிடு. உன் தங்கை வாழ்க்கை நல்லாருக்கும். உன் மேல நான் பல விஷயத்தில் கொலைவெறியில் இருக்கேன். அதை எல்லாம் ஒதுக்கி, உன் தங்கையை நல்லா பார்த்துகிறேன். வழக்கம் போல் என் கிட்ட ஆட்டம் காட்டின…” ரவி இப்பொழுது மிரட்ட,

“உன்னால் ஒரு மண்ணும் கிழிக்க முடியாது. வழக்கம் போல மண்ணை தான் கவ்வுவ. உன் தங்கச்சி உன்னை திரும்பியும் பார்க்கமாட்டா. அவளை எப்படி பார்த்துக்கனுமுனு எனக்கு தெரியும். என் தங்கையை கல்யாணம் பண்ணிகிட்டதால நீ ஜெயிச்சிட்டேன்னு நினைச்சா, அது உன் முட்டாள் தனம்.” ஜீவா இப்பொழுது ரவியை மிரட்டினான்.

“என்னையும் என் தங்கையும் பிரிக்க தான் நீயும் உன் அப்பனும் இந்த திட்டத்தை போட்டிருப்பீங்க. உங்க குடும்ப புத்தி எனக்கு தெரியாது” ஜீவா பேச, ரவி அவன் சட்டையை பிடித்திருந்தான்.

“மச்சான்… நிதானமா வந்த நீங்க நிதானம்மாவே இருக்க வேண்டாமா? என்னை பார்த்து பயப்பட கூடாது. புரியுதா?” ஜீவா தன் மீசையை முறுக்க,

“உன் வாழ்க்கையில் இருந்து என் தங்கையை பிரிச்சி, உன்னை தனிமரமா நிற்க வைக்கலை….” ரவி உறும, “நான் ரொம்ப நல்லவன். இந்த மாதிரி எல்லாம் பேசவே மாட்டேன். என் தங்கை விருப்பம் கேட்டு அவள் விருப்பத்தை நான் நிறைவேத்துவேன். என் மனைவியின் விருப்பம் தான் என் வாழ்க்கை. இதுல நீ எங்கும் அடிபடாமல் பத்திரமா இருந்துக்கோ. இப்ப கிளம்பு” ஜீவா ரவியை மிரட்டி அனுப்பி வைத்தான்.

‘உன்னை வேண்டாமுன்னு என் தங்கை வருவா. வர வைப்பேன். இப்ப தானே என் ஆட்டம் ஆரம்பிச்சிருக்கு. இனி பார் என் ஆட்டத்தை…’ ரவி ஜீவாவை நக்கலாக பார்த்தப்படி படியிறங்கி காரை நோக்கி நடந்தான்.

நதி பாயும்…