தண்ணிலவு தேனிறைக்க… 10

தண்ணிலவு – 10

ஒரு மாதத்திற்கும் மேல் நாட்கள் கடந்து போயிருந்தது.  இந்த நாட்களில் இயல்பைத் தொலைத்தவளாய் உற்சாகமற்று காணப்பட்ட சிந்தாசினி, கடந்த இரண்டு நாட்களாக முகம் வெளிறிபோய், கண்களில் அலைப்புறுதலுடன் நடமாடிக் கொண்டிருந்தாள்.

மிகவும் சோர்வாக திரிபவளை பாஸ்கர் கவனித்தாலும் காரணத்தை கேட்டறிய முற்படவில்லை.  இப்பொழுதெல்லாம் இவள் இப்படிதானே இருக்கிறாள் என்ற விட்டேற்றியான உணர்வில் அப்படியே விட்டுவிட்டான்.

அதையும் மீறி கேட்டால் மீண்டும் நடந்தை நினைத்தே அழுகையில் கரைவாள். முடிந்து போனதை மறக்கவே மாட்டேன் என்று அடம்பிடிப்பவளை மடைமாற்றும் சக்தி சத்தியமாய் தனக்கில்லையென அவளிடத்தில் தோற்றுப் போகத் தொடங்கியிருந்தான்.

அன்றும் அதே சோர்வுடன் கீழே வந்தவள், அமைதியாக அவனின் தோளில் சாய்ந்துகொள்ள, ஆறுதலாய் இவனும் அணைத்துக் கொண்டான். வெகு நாட்களுக்கு பிறகான அணைப்பு அது.

சமீப நாட்களாக, அவளது சுண்டுவிரலை கூட தொட அனுமதிக்காதவள், தானாகவே வந்து இவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டதும் இவனுக்கும் உருகிப் போனது.

“இன்னும் அதையே நினைச்சிட்டு இருப்பியா சினிகுட்டி? மறந்து தொலையேன்…” என்றவன் அவள் நெற்றியில் தன் இதழை பதிக்க,

“மாமா..” என்று ஈனஸ்வரத்தில் இவளும் அழைக்க, இவனுமே நெக்குருகிப் போனான்.

“இப்போதான் ஞாபகம் வந்ததா நான், உன் மாமான்னு…” என சீண்ட ஆரம்பிக்க, வாய் வார்த்தை வராமல் அவன் மார்பில் ஒன்றிக்கொண்டே மீண்டும் அழுகையில் வெடிக்க,

“ஏண்டா அழற? வீட்டுல யாரும் திட்டுனாங்களா?” வாஞ்சையுடன் இவன் கேட்க, அவளின் கேவல்தான் கூடிப்போனது.

தோள் சாய்ந்திருந்தவள் அவன் மடிமீதே தலைசாய்த்து அழுகையை நிறுத்தாமல் அரங்கேற்றம் செய்ய, அப்போதுதான் ஏதோ சரியில்லையென பாஸ்கர் உணரத் தொடங்கினான்.

“என்னன்னு சொல்லிட்டு அழுது தொலைடி… இல்லன்னா அடிவாங்கியே செத்துப் போவ…” இவன் கோபத்தில் கடிந்துகொள்ள,

“இருபதுநாள் தள்ளிப் போயிருக்கு மாமா… மூணுநாளா வயித்துல எதுவும் தாங்காம வெளியே எடுத்துட்டு இருக்கேன்…” என இவள் படபடக்க, அதிர்ச்சியுடன் பார்த்தான் பாஸ்கர்.

“என்னடி சொல்ற? அன்னைக்கு பில்ஸ் போட்டியா இல்லையா? நீ முழுங்குற வரைக்கும் நான் அங்கேயே இருந்திருக்கனுமோ?” அவள் மருந்தை எடுத்துக் கொண்டிருக்க மாட்டாளென்றே இவன் வெடித்தான்.

அவளும், மருந்தை எடுத்துக் கொண்டதும் அன்று உமட்டிக் கொண்டு வாந்தி எடுத்தது, முன்னைவிட அதிகமாய் சோர்வு தாக்கியதையும் கூறிவிட, கோபத்தில் அவளை அறைந்தே விட்டான் பாஸ்கர்.

“அறிவுக்கெட்டவளே! அறிவுக்கெட்டவளே… கொஞ்சமும் மூளையே இல்லையாடி உனக்கு! வாந்தி எடுக்குறப்போ மாத்திரையும் வெளியே வந்திருக்கும். அதை கவனிச்சிருக்கமாட்ட… சரியான கூமுட்டை!

இந்த கருமத்த அன்னைக்கே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே! இன்னொரு மாத்திரைய கொண்டு வந்து கொடுத்திருப்பேனே… மகாராணிக்கு எப்பவும் நாங்கதான் எல்லாமே கேட்டுகேட்டு செய்யணுமோ?” கோபத்தோடு அவளைக் குதறியெடுக்க, மொத்தமாய் உடைந்து போனாள் சிந்தாசினி.

பெண்ணின் அரற்றலை சகிக்க முடியாதவன், “நீ மாத்தி கணக்கு போட்டுருப்படி! போன மாசம் என்ன தேதின்னு கரெக்டா ஞாபகம் இருக்கா?” அவளை ஆறுதல்படுத்திடும் விதமாய் கேட்க,

“ம்ம்… நல்லா இருக்கு… அந்த… அப்படியிருந்த அன்னைக்கு, ரெண்டுநாளுக்கு முன்னாடிதான், எனக்கு அஞ்சுநாள் கணக்கு முடிஞ்சிருந்தது. அம்மா ஞாபகம் வச்சு, ரெண்டு தடவ கசாயமும் வச்சுக் கொடுத்துட்டாங்க… இப்பவும் ஒரு வாரம் பார்த்துட்டு, டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடலாம்னு சொல்லவும்தான் எனக்கு பயமா போச்சு…” வெகுளியாய் விளக்கம் கூறி, இவனது கோபத்திற்கு நெய் வார்த்தாள்.

“ஆமாடி… இப்போ வந்து எல்லாத்துக்கும் நல்லா விளக்கம் சொல்லு… ஒருவாரம் தள்ளிப் போகும்போதே என்கிட்ட சொல்லத் தோணலையா? நாள் கூடக்கூட டேஞ்சர்ன்னு தெரியாதா உனக்கு? இப்டியுமா இருப்ப அரைவேக்காடு!” காறித் துப்பாத குறையாக இவளை வறுத்தெடுக்க,

“அம்மா குடுத்த மருந்துல சரியாகிடும்னு நினைச்சேன் மாமா!” என மேலும் கேவலை அதிகப்படுத்தினாள்.

பாஸ்கருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. ஏதோ தன்னை இக்கட்டில் நிறுத்தி வைப்பதற்கென்றே இவள் அமைதியாக இருந்துவிட்டாளோ என அவளின் மீது புதுப்புது குற்றங்களை கண்டுபிடித்து, அதை அவளிடத்தில் தயங்காமல் கொட்டவும் செய்தான். 

“இப்படியே அழுதுதழுது என்னை ஏமாத்த நினைக்குறியா சிந்தாசனி? எனக்குன்னு வந்து சேர்ந்தியே! நல்லா ப்ளான் பண்ணிதான், நீ ஒன்னொன்னும் பண்ணியிருக்க… உன்னை கைவிட மாட்டேன்னு சத்தியம் பண்ணாத குறையா சொல்லியும், உனக்கு என்மேல நம்பிக்கை வரவே இல்லையாடி…

இதப்பாரு! இதையே காரணம் காட்டி இப்பவே என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு மட்டும் கனவு காணாதே! அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்!” தணலை அள்ளிக் கொட்டியவனின் பேச்சிலேயே சிந்துவிற்கு, அவனின் மீதான நம்பிக்கை முதன்முறையாக ஆட்டம் காண ஆரம்பித்தது.

‘இவன் அவ்வளவுதான்… தன் தேவைக்கு மட்டுமே என்னை கொண்டாடிக் கொள்ளும் சுயநலக்காரன்’ என்பதை அவளின் அறிவும் திண்ணமாக எடுத்துரைத்தது. அதைச் சொல்லி சண்டை போடுவதற்கோ நியாயம் கேட்பதற்கோ இது நேரமல்ல என உணர்ந்தவள்,

“நீங்க சொல்ற மாதிரியே நான் ஏமாத்துக்காரியாவே இருந்துட்டுப் போறேன்! நீங்க ரொம்ப நியாயவாதிதானே… இப்ப என்ன பண்றதுன்னு நீங்களே சொல்லுங்க… பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரத்துல தொங்கித்தானே ஆகணும்… நீங்க போற வழிக்கே நானும் வந்து தொலையுறேன்! சொல்லுங்க என்ன செய்யலாம்?” துணிந்து நிமிர்வுடன் கேட்டாள் சிந்து.

நொடிநேரத்தில் இவளின் ரோஷமான பேச்சை எதிர்பார்த்திராதவன் அதிர்ந்து, பின்பு சகஜமாகி.

“மொத ப்ரெக்னென்சி கிட்ல(கர்ப்ப பரிசோதனை) செக் பண்ணிப்போம். அப்புறமா மாத்திரையா இல்ல ஹாஸ்பிடல் போயி அபார்ட் பண்றதான்னு யோசிக்கலாம்” என சொல்ல, சரியென்று வேண்டா வெறுப்பாக தலையசைத்தாள்.

“நான் சொல்றது, உன்னை மாதிரி செண்டிமெண்ட் பைத்தியங்களுக்கு பிடிக்காதுதான். ஆனா இத ஃபேஸ் பண்ணியே ஆகணும்” என்றுவிட்டு, தன் அறைக்குள் சென்றவன், வெறுப்புடன்தான் வெளியில் வந்தான்.

“என்கிட்ட சுத்தமா காசில்ல சிந்தாசினி… முப்பதுரூபாதான் இருக்கு. பீரோல இருந்து எடுக்கலாம்னா, சாவி அம்மாட்ட இருக்குற கொத்துசாவியில இருக்கும். எப்படியாவது நூறு ரூபாயாவது வேணும்” என இறங்கிய குரலில் சொல்ல,

“உங்களுக்குன்னு எதுவும் வீட்டுல தரமாட்டாங்களா?” வெறுமையான பாவனையில் கேட்டாள் சிந்து.

“ஏன் தராம? மாசாமாசம் முன்னூறுரூபா அக்கா குடுக்கும். உங்க அண்ணன் ஆயிரம்ரூபா வாடகைய ஏத்தினதுல இருந்து, நாலுமாசமா எனக்கு பாக்கெட் மணிய அக்கா கட் பண்ணிடுச்சு. செலவை சமாளிக்க முடியலடா… உன் தேவைய கொறைச்சுக்கோன்னு சொல்லும்போது, என்னால வற்புறுத்தி கேட்கவும் முடியல…” பரிதாபக் குரலில் கூறியவன்,

“இதுக்கெல்லாம் காரணம்… உங்க அண்ணன்தான். சரியான வில்லன்டி! என் அடிமடியில கைய வைச்சுட்டான்” பல்லைக் கடித்து கொண்டு, அவளிடமே கோபத்தில் வெடித்தான்.

“இப்ப எதுக்கு அதெல்லாம்… என்ன பண்றதுன்னு யோசிங்க?” சிந்துவும் கைகளை பிசைய,

“உங்க வீட்டுல இருந்தே எடுத்துட்டு வா… என்னோட நெலம இதுதான். இந்த அக்கப்போருக்குதான், கல்யாணம் வேணாம், கருமாதி வேணாம்னு ஒத்தகால்ல நிக்குறேன்… புரிஞ்சுக்கோ!” மீண்டும் அவன் நிலமையை மட்டுமே பெரிதாக எண்ணி அவளை வலியுறுத்தினான்.

கனத்த மனதுடன் சென்ற சிந்துவும், கீழே தெருவிளக்கிற்கு பணம் வசூல் செய்கிறார்கள் என உறக்கத்தில் இருந்த மரகதத்திடம் பொய் கூறிவிட்டு, நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து பாஸ்கரிடம் தந்தாள்.

கொடுமையிலும் கொடுமையான நேரம் அது… இதற்கே வழியற்று இருக்கிறோமே? நாளையே வேறு ஏதாவது முன்னேற்பாடு மேற்கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்வதென்ற அழுத்தமே இருவரையும் கொன்று போட்டது.

பத்தே நிமிடத்தில் ப்ரக்னென்சி கிட் வாங்கிக்கொண்டு பாஸ்கர் வந்துவிட, அதன் செய்முறைகளை சொல்லியே அவளை குளியலறைக்கு தள்ளினான்.

கர்ப்ப பரிசோதனையில் இரண்டாவது அடர்கோடு அழுத்தமாக வந்து பதிய, குழந்தை விபாகரின் வரவு அன்றே உறுதியானது.

சிந்தாசினி பயத்திலும் நடுக்கத்திலும் பேச்சு மூச்சின்றி அமர்ந்திருக்க, பாஸ்கருக்கோ பல யோசனைகள் ஒரே நேரத்தில் தோன்றி பெரும் குழப்பத்தில் தள்ளியது.  

“சிந்தாசினி… நாளைக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்… அவங்க சொன்ன பிறகுதான் என்ன எப்படின்னு, முடிவு பண்ண முடியும். ஹாஸ்பிடல் மெடிசன்னு நிறைய செலவாகும். நானும் வீட்டுல கேட்டுப் பாக்குறேன். நீயும் கேளு! ஹெல்புக்கு என் ஃப்ரண்ட்ச கூப்பிட்டுக்கறேன்” என சொல்லிக்கொண்டே போக,

“என்னால கேக்க முடியாது. நான் இதுவரைக்கும் செலவுக்குன்னு வீட்டுல காசே கேட்டதில்ல… அப்படி கேட்டாலும், லிஸ்ட் குடு! நானே வாங்கிட்டு வர்றேன்னு அண்ணன் சொல்லிடும். அம்மாட்டயும் அவ்வளவு காசு இருக்காது மாமா!” சிந்து அப்பாவியாக சொல்ல, பாஸ்கருக்கு எங்கேபோய் முட்டிக் கொள்வதென்றே தெரியவில்லை.

“சிந்தாசினி… கொஞ்சம் புரிஞ்சுக்கோடி! அக்காட்ட என்னாலயும் ஓரளவுக்கு மேல கேட்டு வாங்க முடியாதுடா. எப்படியும் ஐயாயிரமாவது தேவைப்படும். அதுல பாதி நீ கொண்டுவா! மீதிய நான் சமாளிக்கிறேன்” கோபமும் கனிவுமாக பாஸ்கர் எடுத்துச் சொன்னது, அவளின் காதிற்கு ஏறவேயில்லை.

“என்ன சொல்லி பணம் கேக்கன்னு எனக்கு தெரியல… இவ்வளவு பொய் சொல்லி வீட்டுல உள்ளவங்கள ஏமாத்துறதுக்கு பதிலா, உண்மைய சொல்லிடலாமே மாமா… இப்படி முழுக்க முழுக்க பொய்யா இருக்கிறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல…” சிந்து தவிப்பாய் சொல்ல,

“பொய் சொல்லப் பிடிக்கலன்னா கமுக்கமா செத்துப் போயிடு! மாமா சோமான்னு என்கிட்டேயும் வந்து நிக்காதே… நானாவது நிம்மதியா இருக்கேன்! உன்மேல ஆசை பட்டத்துக்கு என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் நல்லாவே வச்சு செய்றடி… பட்டிக்காடு… பட்டிக்காடு!” மிதமிஞ்சிய கோபத்தில் பொறுமையை கைவிட்டவனாய் பாஸ்கர் திட்டிக்கொண்டே இருக்க, இவளுக்கும் மனம் விட்டுப் போனது.

‘எத்தனை எளிதாக சொல்லிவிட்டான் செத்து போ என்று… அன்றைக்கு மடி தாங்கிக்கொண்டு உருகியதெல்லாம் பொய்யா? இன்று இவன் கடித்து குதறுவதுதான் உண்மையா? நான் நிஜமாகவே ஏமாந்துவிட்டேனா?’ அடுக்கடுக்கான ஆற்றாமைக் கேள்விகள் மனதில் ஏறிக்கொண்டே போக, இவளுக்கு விடையொன்றும் தெரியவில்லை.

“அம்மா வர்ற நேரம்… நீ மேலே போ! எப்படியாவது பணம் கேட்டு வை! இன்னொரு விஷயம், உன்னை என் ஃப்ரண்டோட ஃப்ரெண்டுன்னுதான் டாக்டர்கிட்ட சொல்லப்போறேன். அதையும் மைண்ட்ல வச்சுக்கோ! அப்புறம் அங்கே வந்து அதுக்கும் ஒருபாட்டம் அழுதுட்டு நிக்கக்கூடாது” என அழுத்தமாக கண்டிப்புடன் சொல்லிவிட, அதிர்ந்தே போனாள் சிந்தாசினி.

நகரத்தில் இந்தக்கால இளைஞனாக பாஸ்கருக்கு இதெல்லாம் சர்வசாதரணம்தான். ஆனால் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவளுக்கு அப்படி இல்லையே!

ஆண்களோடு பேசுவதையே அதிசயமாக நினைப்பவளுக்கு இப்படியொரு காரியம் செய்ய வேண்டுமென்பது சற்று அதிகப்படிதான்.

“குழந்தைக்கு நீங்கதான் காரணம்னு என்கூட நிக்க மாட்டீங்களா?” பாரமேறிய உணர்வுடன் கதறலாய் இவள் கேட்க,

“அட யாருடி நீ… நான்தான் தப்பு பண்ணேன்னு முந்திரிகொட்டையாட்டம் முன்னாடி நின்னா… வேற வினையே வேணாம், ஒண்ணு கல்யாணம் செஞ்சு வைப்பாங்க, இல்லன்னா புடிச்சு உள்ளே தள்ளிடுவாங்க! இதெல்லாம் தேவையா நமக்கு? கூடப் படிச்சவன் பழகி,  விட்டுட்டு ஓடிட்டான்னு சொல்லி, டாக்டரை சரிகட்டிதான் நமக்கு வேண்டியது பண்ணிக்கணும். இதையே சாக்கா வைச்சு பீஸ் அதிகமா வாங்கிப் தொலைப்பாங்க பாவிங்க!” என புலம்பிக் கொண்டவன் ஒரு வழியாக அனுப்பிவிட்டு பெருமூச்சு விட்டான்.

பாஸ்கர் அடுத்தடுத்து தனக்கு சாதகமானவைகளை மட்டுமே யோசித்துக் கொண்டு பேச, சிந்துவின் மனதிலிருந்து சறுக்கிக்கொண்டே வர ஆரம்பித்தான். அவனின் மீதான நம்பிக்கை நொடிக்குநொடி குறைந்து கொண்டே வந்து பெண்ணின் மனதில் பயஉணர்வு முழுதாய் ஆக்கிரமித்தது.

அதீத மனஉளைச்சலைக் கொடுத்த சூழ்நிலை, கர்ப்பகால அவஸ்தை, மொத்தமாய் ஏமாற்றப்பட்ட அழுத்தம் என எல்லாமும் சேர்ந்து சிந்துவிற்கு வாழ்க்கையே பூஜ்ஜியமாகி விட்டதாக எண்ண வைத்தது.

ஆணிற்கு, பெண்ணின் தேவையில்லாத கர்ப்பத்தின் பாரம், அதை கலைத்து இல்லாமல் ஆக்கும்வரை மட்டும்தான். ஆனால் பெண்ணிற்கு கருக்கலைப்பிற்கு பிறகான நாட்கள் மிகவும் அவஸ்தையாகதான் செல்லும்.

அதுவும் வீட்டினருக்கு தெரியாமல் அந்த கஷ்டத்துடன் நடமாடுவது என்பது புத்தி சாதுர்யம் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்.

தனக்கு அந்தளவிற்கு பக்குவம் இல்லையென்பது அவளுக்கே மிகத்தெளிவாக புரிந்தது. ஒரு உயிரை அழித்து, வாழ்நாள் முழுவதும் பொய்சொல்லி உயிர்வாழ்வது பெரும் பாவமான, கேவலமான செயலாகத் தோன்ற, துணிந்து ஒரு முடிவை எடுத்து விட்டாள்.

அதிலும் பாஸ்கரின், ‘பொய் சொல்லப் பிடிக்கலன்னா கமுக்கமா செத்துப் போயிடு!’ எனச் சொன்னதே மனதிற்குள் ஒலித்திக் கொண்டேயிருக்க, மாலையில் பலசரக்கு வாங்கப் போன நேரத்தில் பூச்சிமருந்தை வாங்கி கொண்டு வந்திருந்தாள் சிந்தாசினி.

கிராமத்து வாசத்தில் இவளுக்கு வீரியம் கொண்ட பூச்சி மருந்தின் பெயரும், தன்மையும் நன்கு தெரிந்திருக்க, மனதிற்குள் உழன்ற கோபத்தில் சற்றும் யோசிக்காமல் மிகப்பெரிய முடிவினைதான் எடுத்திருந்தாள்.

தற்கொலை என்பது கோழைத்தனம் என்றாலும் சம்பந்தப்பட்ட நபரின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, அவர்களுக்கு பொருந்தும் நியாயமாகவே தோன்றி விடுகிறது. அப்பேற்பட்ட சமயத்தில் யாரின் அறிவுரையும் அக்கறையும் புத்தியிலும் மனதிலும் பதிவதில்லை.

அண்ணன் தயானந்தனின் இரவுப் படுக்கை எப்போதும் மொட்டைமாடியில்தான். எஃப்எம்மில் பாட்டு கேட்டு தூங்குவது அவனின் அன்றாட வழக்கம்.

அன்றைய இரவும், இவன் மாடியில் உறங்கச் சென்ற பிறகே, இவள் மருந்தை எடுத்துக் கொண்டு ஒரு முடிவுடன் மாடிப்படியில் அமர்ந்திருந்தாள். கள்ளத்தனமாய் காதல் செய்வதில் இருந்த தைரியம், தற்கொலை செய்து கொள்வதில் எளிதாக வரவில்லை.

அந்த நேரத்தில் ரேடியோவை கொண்டு வரச் சொல்லி குரல் கொடுத்தபடியே தயா கீழே எட்டிப் பார்க்க, தங்கை மாடிப்படியில் அமர்ந்திருந்ப்பதை பார்த்துவிட்டான்.  

“இங்கே என்ன பண்ற சிந்து?” எனக் கேட்டவன், “பாக்கெட் ரேடியோவ எடுத்திட்டு வா!” என உத்தரவிட, பாட்டிலை சட்டென்று பின்னுக்கு மறைத்தவாறு, திருட்டுமுழி முழித்துக் கொண்டே, உள்ளே சென்று ரேடியோவை எடுத்துக் கொண்டு மேலே வந்தாள்.

“நேரத்துக்கு தூங்கமாட்டியா? படியில உக்காந்து என்ன பண்ணிட்டு இருந்த…” சகஜமாக அவன் கேட்டாலும் இவளுக்கு பதில் சொல்வதற்குள் வாய் உலர்ந்து போனது.

“அது… அது… புழுக்கமா இருந்ததுண்ணே… அதான்” என தடுமாறியவளின் பேச்சே, அண்ணனின் மனதில் சந்தேகத்தை விதைத்தது.  

“சரி, போய் படு!” என்றவன் இறங்கிச் செல்பவளை ஊடுருவிப் பார்த்துக் கொண்டே நின்றான்.

இத்தனை நேரத்திற்கு அம்மாவின் அருகில் கோழிக்குஞ்சாய் உறங்கிக் கொள்ளும் தங்கை, இந்த நேரம்வரை நடமாடிக் கொண்டிருந்ததில் இவனுக்கு ஏனோ உறுத்திக் கொண்டேயிருந்தது.

அதோடு மரகதமும், மகளின் உடல்நிலை அத்தனை சீராக இல்லை, கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னதும் நினைவிற்கு வர, தயாவின் கால்கள் தன்னால் கீழே இறங்கிவிட்டது.

இந்த சமயத்தில் மாடிப்படியை விட்டுவிட்டு வராண்டாவின் ஒதுக்குப்புறத்திற்கு வந்து நின்ற சிந்து, பூச்சி மருந்து பாட்டிலை திறப்பதற்கென பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது மாடியிலிருந்து வேகமாக இறங்கிய தயாவின் கையால், சப்பென்று அடி இடியாக அவளது கன்னத்தில் விழ, அடிவாங்கிய வேகத்தில் இவளும் கீழேவிழ, அவளை தூக்கிய நிறுத்தியவன்,  

“ஒத்த அடிக்கு விழுந்து தொலைக்கிற, உனக்கு இதெல்லாம் தேவையா? எதுக்கு இந்த கேவலமான காரியம் செய்ய நினைக்கிற?” என்றவாறே ஆங்காரமாய் அடுத்த அடியை கன்னத்தில் இறக்கியிருந்தான்.

இன்று காலையில் பாஸ்கரிடம் அடிவாங்கியதெல்லாம் ஒன்றுமில்லை எனுமளவிற்கு, தயாவின் அடியில் இவளுக்கு கண்களில் பூச்சி பறந்தது.

இன்னும் இரண்டு அடி அண்ணனின் கைகளால் கிடைத்தால் போதும் மருந்தில்லாமலேயே மேலுலகத்திற்கு பயணமாகிவிடலாம் என்கிற பொல்லாத எண்ணம் தலைதூக்க, அமைதியாக திடமுடன் நின்று விட்டாள் சிந்து. 

மகனின் கோபக்குரலும் மகளின் அழுகைச் சத்தமும் கேட்ட மரகதம் அங்கே வந்து என்னவென்று கேட்க, இவனும் பூச்சி மருந்தினைக் காண்பித்து,

“நீ இவளைப் பார்த்துக்கற லட்சணம் ரொம்ப அழகா இருக்கும்மா… நாள் முழுக்க உன் கூடதானே இருக்கா… இவளோட வித்தியாசம் கண்ணுக்கு படலையா?” என பெற்றவளையும் கடிந்து கொண்டான் தயா.

பத்துநிமிட கரைசலில் தனது கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டு வீட்டிற்குள் அமர்ந்திருந்த தயா,

“எதுக்கு இந்த முடிவெடுத்த?” குறையாத கோபத்துடன் மீண்டும் கேட்க, வயிற்றுவலி என்றே பிடிவாதமாக சாதித்தாள் சிந்து.

“அதுக்கு இந்த மருந்துதான் எடுத்துக்கணும்னு யார் சொன்னா?” அழுத்தமான கண்டிப்புடன் கேட்டவனை, ஏமாற்றுவது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை. 

“வா! இப்பவே ஆஸ்பத்திரிக்கு போவோம். அம்மா இவளை ரெடி பண்ணு… நான் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்!” என தங்கையை ஆழமாய் நோக்க, இவள் வேண்டாமென்று தலையசைத்தாளே தவிர வாயைத் திறந்து பேசவில்லை.

தங்கையின் பரிதாபமான நிலை அண்ணனையும் உருகவைக்க, அவளை தன்னருகில் அமரவைத்துக் கொண்டவன்,

“அண்ணன் இருக்கும்போது நீ எதுக்கும் கவலைப்படகூடாது. வசதியில்லாம இங்கே தங்க, உனக்கு கஷ்டமாபடுதா? இல்ல இந்த ஊரு உனக்கு பிடிக்கலையா? எதுனாலும் உடைச்சு சொன்னாதானே எனக்கும் தெரியும்” உஷ்ணத்தை அடக்கிக்கொண்டு அமைதியாகக் கேட்க,

“அப்படியெல்லாம் இல்லண்ணே… நம்ம குடும்ப நெலமை எனக்கு நல்லா புரியும். இங்கே சந்தோசமாத்தான் இருக்கேன்” அழுகையோடு பதில்வர, இவனுக்கு புதிராகப் போனது.

“பின்ன ஏண்டா இப்படி?” குரலை தழைத்துக் கொண்டு  கேட்டவன், “அண்ணன் உனக்காக எதையும் செய்வேன்… அக்காக்களை விட, இந்த குட்டி தங்கச்சிய, எனக்கு ரொம்ப பிடிக்கும்டா சிந்து. என்கிட்ட சொல்ல மாட்டியா?” அன்போடு வலியுறுத்தி கேட்க, என்னவென்று இவள் கூறுவாள்.

மௌனங்கள் மட்டுமே அங்கே ஆட்சி செய்து கொண்டிருக்க, தயாவிற்கும் பொறுமை விட்டுப் போனது.

“நீ உசுரோட இருக்குற வரைக்கும்தான், உன் பிரச்சனை உனக்குள்ள இருக்கும். அதுவே நீ இல்லாம போயிட்டா, ஊரே இல்லாத கதையை எல்லாம் கட்டி, நம்ம குடும்பத்தையே சந்தி சிரிக்க வைச்சுடும்.

அப்புறம் நீ போன வழிக்கே, நாங்களும் வர ஆரம்பிப்போம். எங்களுக்கும் வேற வழியில்ல… இதுதான் உன்னோட பாழாப்போன யோசனையோட பின்விளைவு. இதுக்கு மேல உன்னை வற்புறுத்த மாட்டேன்… அதேபோல இந்த நிமிசத்துல இருந்து உன்னைவிட்டு நான் நகர மாட்டேன்…” என்றவன் அங்கேயே படுக்கவென ஆயத்தமானான்.

அண்ணனின் பேச்சு தங்கைக்கு ஓரளவு நிதர்சனத்தை புரிய வைத்தது. தன்னால் ஒட்டு மொத்தக் குடும்பமும் பாதிக்கப்படுவதை எண்ணிப் பார்க்கக்கூட அவளுக்கு தைரியம் வரவில்லை.

நான் இருக்கிறேன் என்று அண்ணன் சொன்ன வார்த்தைகளே அவளுக்குள் துணிவையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்க, தானாகவே முன்வந்து, தனது தவற்றை எல்லாம் ஒப்பிக்க ஆரம்பித்தாள்.

“நான்… நான்… பெரிய தப்பு பண்ணிட்டேண்ணே!” என அண்ணனின் தோளில் சாய்ந்து கதறியவள், தயங்கியபடியே தனக்கும் பாஸ்கருக்கும் உள்ள பழக்கத்தை ஒளிவு மறைவின்றி கூறி விட்டாள்.

மகளின் பேச்சினைக் கேட்கக்கேட்க, எல்லாம் தனது அஜாக்கிரதையால் தான் என மரகதம் தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, யாருக்கும் யாரும் சமாதனம் கூறிக் கொள்ளவில்லை.

அதனுடன் தாயாகப் போகும் தன்நிலையைச் சொல்லி, பாஸ்கர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான் என்றும்கூற, தயானந்தனிடம் உறங்கிக் கிடந்த ஆக்ரோஷம் தலைதூக்கியது.