தண்ணிலவு தேனிறைக்க… 12

TTIfii-401e9b91

தண்ணிலவு – 12

திருமணம் முடிந்த வீட்டில் விருந்தோம்பல், மறுவீடு என்றெல்லாம் எதுவும் வேண்டாமென்று முன்பே தயானந்தன் முடிவெடுத்திருக்க, இருவீட்டிலும் மறுநாள் எப்போதும் போல் விடிந்திருந்தது.

ஒருவார காலமாக சிந்தாசினியின் மசக்கையை அறிந்து வைத்திருந்த மரகதத்திற்கு மனமெல்லாம் மகளின் நினைவே… விடிந்த பிறகு பலமுறை வெளியில் வந்து பார்த்தாலும் கீழ்வீட்டில் மகளின் நடமாட்டம் தெரியவில்லை.

சம்மந்தி அம்மாளின் சுபாவமும் சமீப நாட்களாக அவரது வெறுப்பு தாங்கிய முகமும் சேர்ந்து அவரை நிம்மதியிழக்க செய்திருக்க, மருமகள் மிதுனாவிடம், கீழே சென்று மகளை பார்த்து விட்டு வருமாறு கூறும் நேரத்தில், மஞ்சுளாவின் கூக்குரல் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது. 

அவரின் சத்தத்தில் வேகமாக மரகதமும் மிதுனாவும் கீழே வந்து நிற்கும்போது, பாஸ்கர் தண்ணீர் தெளித்து சிந்துவை உலுப்பிக் கொண்டிருந்தான்.

“என்னடா ஆச்சு பாஸ்கி?” மிதுனா பதைப்புடன் கேட்க, பாஸ்கருக்கு தாயை குற்றம் சொல்லி நடந்ததை கூற விருப்பமில்லை. 

அம்மாவை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே, “என்ன ஆச்சுன்னு என்னைக் கேட்டா? அவளைதான் கேக்கணும்… முடியலன்னா, முடியலன்னு சொல்லிட்டு உக்காராம இவளை யாரு குளிக்கப் போகச் சொல்றா?” எரிச்சலுடன் பாஸ்கர் பதிலளித்த நேரத்தில் பின்னோடு வந்து நின்ற தயானந்தன்.  

“தங்கச்சிய தூக்கி கட்டில்ல படுக்கவை மாப்ள… சொன்னாதான் செய்வியா?” அதட்டல் போட்டவன், சிந்துவின் கன்னத்தில் தட்டிக்கொண்டே,

“அவளுக்கு முடியலன்னு உனக்கு தெரிஞ்ச பிறகும், ஏன் அவள குளிக்க அனுப்பின?” குத்தீட்டியாய் கேட்டவனின் குரலில் கோபம் தாண்டவமாடிட, பாஸ்கர் வெலவெலத்து விட்டான்.

“அது… அது, சொன்னேன்தான்…” இழுவையாக தரையைப் பார்க்க,  

“என்னத்த சொல்லிக் கிழிச்சியோ?” தயாவும் கடுகடுக்க,

“பேச நேரமில்ல… ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோம்  தயா!” மிதுனா சுதாரிக்க, பாஸ்கரும் தயாவும் சேர்ந்தே சிந்துவை மருத்துவமனைக்கு அள்ளிக் கொண்டு வந்திருந்தனர்.

தயாவின் கோபம் முழுவதும் பாஸ்கரிடம் நிலையாய் குடிகொள்வதற்கான சாத்திய கூறுகளை அன்றையநாள் கனகச்சிதமாக செய்தது.

அந்த சிறிய மருத்துவமனையில், சிந்தாசினிக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, அதையும் உணராமல் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

“மனசளவுல ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க… ஹார்மோன் சேன்சஸ், மார்னிங் சிக்னஸ் கூட ஒரு காரணம். கொஞ்சம் கொஞ்சமா ஆகாரம் குடுங்க… அஞ்சுமாசம் முடியுறவரை கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை. அதோட நாங்க குடுக்குற மெடிசன்ஸ் ஃபாலோ பண்ணுங்க…” என்ற அறிவுறுத்தலோடு மருத்துவர் தன்கடமையை முடித்துக் கொள்ள, பாஸ்கரை வெகுவாக முறைத்த தயா,

“ஒருநாள் பொழுதுக்கே, இப்டி படுக்க வச்சுட்டானே பாவி… பாவி! அவளுக்கு மட்டும் வேற ஏதாவதுன்னு சொல்லட்டும், அன்னைக்கு இருக்கு கச்சேரி… அப்பப்ப தட்டிட்டே இருக்கனுமா இந்த திமிரெடுத்தவனுக்கு…” என புதுமனைவியிடம் காய்ந்தான். 

“ஏன் இப்படி பேசுறீங்க? பிடிக்கலன்னாலும் உறவுக்கு மதிப்பு கொடுக்க கூடாதா!” மிதுனா முதன்முதலாக கணவனிடம் கேள்வி கேட்க, ஏகத்திற்கும் கொதித்தான்,

“அந்த உறவை பார்த்துதான் இவன உசுரோட விட்டு வச்சுருக்கேன்…” தயா மீண்டும் மலையேற, இவளுக்குத்தான் அவதியாகிப் போனது.

‘ஷப்பா… புது பொண்டாட்டிகிட்ட பேசுற மாதிரியா பேசுறாரு… எல்லாம் இந்த பாஸ்கியால…’ மனதிற்குள் புலம்பிய மிதுனா, வீட்டிற்கு வந்ததும் பாஸ்கரை கடிந்து கொண்டாள்.

“ஒருநாள்ல என்னடா பிரச்சனை உங்களுக்குள்ள… அவ மயங்கி விழுற அளவுக்கு என்னதான் பேசித் தொலைச்சீங்களோ, அம்மாவும் புள்ளையும் சேர்ந்து… இவ இங்கே சிரிச்சாதான், நான் அங்கே நிம்மதியா இருக்க முடியும். நான் சந்தோஷமா இருக்குறது உன் கையிலதான் இருக்கு பாஸ்கி… அத மனசுல வச்சுக்கோ…” காட்டமாய் அறிவுறுத்த, பாஸ்கர் பெரிதும் அடிபட்டு போனான்.

“உனக்கும்தான்மா… இப்படியெல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்காதே! மசக்கை எப்படின்னு உனக்கு தெரியாதா? அக்காவுக்கு, நீதானே பக்கத்துல இருந்து கவனிச்ச… அதை மருமகளுக்கும் செய்யின்னு உனக்கு சொல்லனுமா? பிடிக்குதோ இல்லையோ அவதான் உன் மருமக… அவ குழந்தைதான் உன்னோட பேரன். அவளை கரிச்சு கொட்டினா, உங்க குடும்பத்து வாரிசுக்குதான் பாதிப்பு வரும்” தாயின் சுயநலபுத்தியில் உரைக்குமாறு மகள் பேச, மஞ்சுளாவிற்கு சுருக்கென்று தைத்தது. 

“ஏண்டி இப்படி பேசுற? அப்படியென்ன கொடுமை படுத்தினேன்னு இப்ப சண்டைக்கு நிக்கிற? ஒருநாள் குடித்தனத்துல அவ்வளவு தெரிஞ்சுபோச்சா உனக்கு… மொத்தமா மாறிட்ட நீ!” அங்கலாய்ப்பில் மஞ்சுளா முடிக்க,

“அதான், நீ காலையில கத்துனது தெருமுனை வரைக்கும் கேட்டதே! நீ ஒன்னு பேசினா, உன் மாப்பிள்ளை நூறா திருப்பி குடுக்க ரெடியா இருக்கார். இது எப்ப ஆரம்பிக்குமோ தெரியல…” தயாவை குறிப்பிட்டே பயம்காட்ட, அன்றைய பொழுது மிகவும் அமைதியாகவே கழிந்தது.

மருத்துவமனையில் இருந்து நேராக பாஸ்கரின் வீட்டிற்கே சிந்தாசினியை அழைத்து வந்திருந்தனர். மாடிப்படியும் ஏறக்கூடாது என்பதும் மருத்துவரின் அறிவுரையில் சேர்ந்திருக்க, மசக்கைகாரியின் ஓய்வு மாமியார் வீட்டில் என்றானது.

அப்படியில்லையென்றாலும் மரகதம், சிந்துவை அங்கேதான் தங்கச் சொல்லியிருப்பார். சமையலறையும் ஒற்றை படுக்கையறையும் உள்ள வீட்டில், இவளையும் வீட்டோடு தங்க வைத்துக் கொண்டால், புதிதாக மணம் முடித்த தயா-மிதுனா தம்பதியருக்கு தனிமை என்பது இல்லாமலேயே போய்விடும்.

இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர் சொன்னதை வேதவாக்காக கொண்டு, மகள் மாமியார் வீட்டிலேயே இருப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டார்.

“அண்ணனுக்கு கல்யாணம் முடிக்கலன்னா எப்படியாவது பேசி கூட்டிட்டு போயிருப்பேன் கண்ணு… இப்போ நீயும் அங்கே வந்துட்டின்னா அவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்… அவங்க ஒண்ணும் சொல்லமாட்டாங்கதான். ஆனாலும்…” மரகதம் கையை பிசைந்திட, மனதளவில் மிகவும் நொறுங்கிப் போனாள் சிந்து.

திருமணம் முடிந்த ஒருநாளிலேயே தாய்வீடும் தனக்கு அந்நியமாகி விட்டதா என்றதொரு சிறுமையுணர்வு வந்து தாக்க, எனக்கு விதித்தது இதுதான் என்கிற கழிவிரக்கத்துடன் புகுந்த வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ள தீர்மானித்தாள்.

மகளிடம் கூறிய காரணத்தை சம்மந்தியம்மாவிடமும் மரகதம் கூற, மஞ்சுளாவிற்கு கொம்பு சீவி விடாத குறைதான்… பின்பாட்டு பாடுவதை விட்டுவிட்டு, முன்னின்று கச்சேரி செய்யாத குறையாக கரித்துக்கொட்ட ஆரம்பித்தார்.

ஆனாலும் மகள் மிதுனாவின் மிரட்டலும் நினைவிலிருக்க, சற்று அடக்கியே வாசித்தார் மஞ்சுளா. மகள் சொன்ன மருமகள், பேரன், தன்வீட்டு வாரிசு என்னும் உரிமையுணர்வு அவரின் மனதில் வந்திருந்தது. அதன் பலனாக சிந்துவை அதட்டலுடன் கவனிக்கத் தொடங்கினார்.

திருமண விடுப்பு முடிந்து மிதுனா வேலைக்கு செல்லத் தொடங்கவும், உறங்கிக் கிடந்த மாமியார் தோரணையும் தலைதூக்க ஆரம்பிக்க, மருமகளை பார்வையால் கவனித்து வார்த்தைகளால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தார். 

மகளுக்கென பார்த்து பார்த்து உணவுகளை செய்து கொண்டு வந்து மரகதம் கொடுக்க, அதற்கும் குறை கண்டுபிடித்தார் மஞ்சுளா.

“எங்கேயாவது இந்த அநியாயம் நடக்குமா? இங்கே பட்டினி போட்டு கொடுமைபடுத்துற மாதிரி வேளாவேளைக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்குறது நல்லாவா இருக்கு?” மரகதத்தின் செயல்களை கடிந்து கொள்ளத் தொடங்கியவர்,  

“என் புள்ளைக்கு சம்பாதிக்க துப்பில்லன்னு தண்டோரா போடாத குறையா, வெளியாட்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி, நீங்க நல்லவங்க வேஷம் போடுறீங்களா? இந்த தெளிவு நிச்சயமா எனக்கு வராது…” தேள்கொடுக்காய் கொட்டவும், மரகதம் உணவுடன் கீழே வருவதும் நின்று போனது.

பாஸ்கரின் பேச்சு எல்லோரிடத்திலும் கேள்விக்கு பதில் என்றளவில் குறைந்துபோக, சிந்துவின் துணை மஞ்சுளா மட்டுமே என்றாகிப் போனார். இரவுப் படுக்கையும் அவருடன்தான். அத்தனை பத்திரம் பண்ணினார் தனது மருமகளை, தனது பேரக் குழந்தையை…

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடியது மஞ்சுளாவிற்கு…  அதோடு தயாவின் முறைக்கும் பார்வையும் மிதுனாவின் காட்டமான பேச்சும், அவரை மருமகளின் உடல்நலனில் முனைந்து அக்கறைகொள்ள வைத்தது.

பெண்ணைக் கொடுத்தவர்களின் பார்வையில், தனது மகனை ஆகச்சிறந்த நல்லவன் என்ற கௌரவத்தோடு  அடையாளபடுத்திவிட வேண்டுமென்பதே மஞ்சுளாவின் மெனக்கெடல்களாக இருந்தது.

அதன் பொருட்டே, பிடிக்காத மருமகளையும் சகித்துக் கொண்டு, அவளை பொறுப்புடன் பார்த்துக் கொண்டதோடுமல்லாமல், மகனின் பொறுப்பினை எடுத்துச் சொல்லி அவனை வேலைக்கு சென்றே ஆகவேண்டுமென்றும் கட்டாயபடுத்தினார்.

மரகதத்தின் வரவை நிறுத்தி வைத்தவர், மகனை விரட்ட ஆரம்பித்தார். எங்கே தயாவின் குடும்பம் தன் மகனை எள்ளலாய் பேசிவிடுமோ, கிராமத்தாரின் பார்வையில் மதிப்பற்றவனாய் போய்விடுவானோ என்றஞ்சியே, பகுதிநேர வேலைக்காவது செல் என மகனை நச்சரிக்க ஆரம்பித்தார்.

அரியர்ஸ் தேர்வுகளுக்கு தீவிரமாக தன்னை தயார்படுத்தியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் பாஸ்கருக்கு இருந்தாலும், எக்காரணத்தை முன்னிட்டாவது, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்ற எண்ணமும் அவனுக்கு தலைதூக்க ஆரம்பித்தது.

எந்தநேரமும் கரித்துக் கொட்டும் அம்மாவின் பேச்சினை தடைபோடவோ அதட்டவோ பாஸ்கரால் முடியவில்லை. எதையாவது சொன்னால் உன் அவசரபுத்தியால்தான் இத்தனை கஷ்டமென்று அவனுக்கே திருப்புவார் மஞ்சுளா.

அதோடு சிந்துவின் சதா சர்வகாலமும் குற்றம் சாட்டும் பார்வை வேறு கண்ணில் விழுந்த முள்ளாய், அவனை ரணமாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு வார்த்தைகள் மேற்கொண்டு இவன் பேச நினைத்தாலும், அவள் அமைதியாக வேறுபுறம் சென்று விடுவாள்.

இருவருக்குமான தனிமை என்பதும் நொடிநேரம் கூட கிடைக்காததுதான் பெரும் வேதனை. எப்பொழுதும்போல் மிதுனாவின் வருமானம் மஞ்சுளாவிற்கு வந்தாலும், மருமகளை தேற்றுவதற்கு அந்தப்பணம் பற்றாக்குறையாகிப் போக, மகனை கழுத்தை பிடித்துத் தள்ளாத குறையாக பகுதிநேர வேலைக்கு அனுப்பி வைத்தார் மஞ்சுளா.

கெட்டதிலும் நல்லதாக பாஸ்கரும் வேலைக்கு சென்றான். அவனுக்கு கிடைத்த சொற்ப வருமானம் மனைவிக்கு தேவையானதை கொடுக்க மட்டுமே போதுமானதாக இருந்தது.

மரகதத்தின் மூலம் தயானந்தன் பணம் கொடுத்து விட்டாலும் வேண்டாமென்று மறுத்து வாய்சாவுடால் விட்டார் மஞ்சுளா. 

“ஏன், என் புள்ள சம்பாதிக்கவே மாட்டான்னு முடிவே பண்ணீட்டீங்களா? அப்டியொன்னும் உங்க வீட்டு காசுல என் பேரப்பிள்ளைக்கு சத்து ஏறணும்னு அவசியமில்ல… நாங்க பார்த்துப்போம்… நீங்க உங்க முறைக்கு என்னவோ அத மட்டும் ஒழுங்கா செய்யப் பாருங்க!” என்றவரின் பேச்சில் மரகதம் மட்டுமல்ல அனைவருமே வாயடைத்துப் போயினர்.

வீட்டு வாசலில் இருந்தே தயா, சிந்துவை நலம் விசாரித்து செலவிற்கு பணம் கொடுத்தாலும் வேண்டாமென்று இவளும் மறுத்து விடுவாள். இல்லையென்றால் அன்று முழுவதும் மாமியாரின் உபயத்தில் அவளுக்கு மூன்றுகால அஷ்டோத்திரம் சிறப்பு ஆராதனைகளோடு நடக்கும்.

நாட்கள் இப்படியே கடக்க ஆரம்பித்தன. காலத்தின் கைகளில் தங்களை ஒப்படைத்தவர்களாய் சிந்து பாஸ்கரின் உறவுநிலை முற்றிலும் வேறுபட்டு நின்றது. மாமியாரின் குற்றப் பாமாலைகளை மட்டுமே கேட்டுக் கொண்டே இருந்தவளுக்கு உணர்வுகள் மறத்தே போய்விட்டது.

எதைச் சொன்னாலும் அமைதியாக கடந்துவிடுவாள். அதற்கும் மேல் பாஸ்கரின் நிராகரிப்பில் இவள் முழு ஜடமாகிப் போனாள்.

இவளின் மாற்றங்கள் அப்பட்டமாய் மற்றவர்களுக்கு  காட்சியாகிக் கொண்டிருக்க, பாஸ்கரின் உணர்வுகளோ உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தது

தான் ஆண்மகன் என்னும் ரோசத்தையும் தாண்டி, இவன் தாங்கிக் கொண்ட உதாசீனங்களின் வலிகளை பிடிவாதத்துடன் மறைத்துக் கொண்டான். வெளிப்பார்வைக்கு அம்மாவிற்கு மட்டுமே ஜால்ரா அடிப்பவனாய், பொறுப்பற்ற கணவனாகவே தொடர்ந்தான்.

மனைவியின் வலியை முன்னிறுத்தும் போது, இவனது அழுத்தங்கள் எல்லாம் ஒன்றுமில்லைதான். ஆனாலும் இவனுக்குள்ளும் வருத்தங்கள், வேதனைகள் எல்லாம் படர்ந்து விரியத் தொடங்கின.

தன்னையே சகலமுமாக நினைப்பாள் என்றெண்ணிய காதல் பெண்ணின் அன்பு முழுவதும் காணாமல் போனது, நம்பிக்கையில்லாதவன் என்றிவனை, எந்நேரமும் முறைக்கும் தயானந்தனின் கோபப்பார்வையில், அக்கா மிதுனாவின் அலட்சியப் பார்வையில் சுயமரியாதை இழந்து மனதளவில் கூனிக் குறுகிப் போனான்.  

வாழ்க்கையை வென்று காட்டிட வேண்டுமென்று காலம் தாழ்த்தியே வேகம்வர, அதையும் தனக்குள் அடக்கிக் கொண்டான் பாஸ்கர். இதுநாள்வரை விளையாட்டுதனமாய் படித்து வந்த படிப்பையும், நிலையான உத்தியோகத்தையும் இப்பொழுது லட்சியமாகவே கொண்டு செயல்பட ஆரம்பிக்க, கிடைத்த பகுதிநேர வேலையில் போய் முடங்கிக் கொள்ள இவனின் மனம் ஒப்பவில்லை.

மனதில் இருக்கும் உறுதியை வெளியில் சொன்னால், இந்த அறிவு இத்தனை நாட்கள் எங்கே போயிருந்தது என்ற  ஏளனபார்வை பரிசாகக் கிடைக்குமென தெரிந்திருக்க, எவ்வாறு தன்மனதில் உள்ளதை வெளியில் சொல்வான்? ஆக வேண்டாவெறுப்பாகவே வேலைக்கு சென்றான்.

எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான ஆகாரமும், பூரண ஓய்வும் கொடுத்து மருமகளை பார்த்துக் கொண்டாலும், அத்தனைக்கும் சேர்த்து எப்பொழுதும் மருமகளை இடித்துப் பேசி குற்றப்பார்வை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டார் மஞ்சுளா. அதோடு ஜாடைமாடையாக சம்மந்த குடும்பம் நகைநட்டு, சீர்வரிசை செய்யாததை பெருங்குறையாகவே குத்திக்காட்டுவதையும் வாடிக்கையாக்கிக் கொண்டார்.

மரகதம் காதுகளில் இந்த பேச்சுகள் விழுந்தாலும் கேட்டும் கேளாததுபோல் இருந்து விடுவார். மகவை சுமந்து கொண்டிருக்கும் பெண்ணை கவனித்துக் கொள்வதே பெரிய விஷயம் என்கிற நல்ல அபிப்ராயத்தை மனதில் பதிய வைத்து கொண்டு அமைதியாக கடந்து போக பழகிக் கொண்டார். தாயின் பேச்சை பாஸ்கர், கண்டும் காணாமல் இருந்தது, மஞ்சுளாவை மேலும் ஏற்றி வைத்தது.

இவை எதுவும் நாள்முழுவதும் உழைத்து, களைத்து வரும், மிதுனா தயாவின் காதுகளுக்கு செல்லாமல் மறைத்து வைத்தனர் சிந்துவும் மரகதமும். மகள் மிதுனா இல்லாத நேரங்களில் மட்டுமே மஞ்சுளாவின் ஏச்சுகளும் பேச்சுகளும் அரங்கேறும்.

நாட்கள் தன்னால் ஓடிக் கொண்டிருக்க சிந்துவிற்கு முழுதாக ஆறுமாதம் முடிந்திருந்தது. ஆனாலும் இளையவர்களுக்கு தனிமையை கொடுக்க விரும்பாமல் மருமகளை தனது அருகிலேயே வைத்துக் கொண்டார் மஞ்சுளா.

பாஸ்கரும் பாதிநேரம் வேலை, மீதிநேரம் படிப்பு என இருந்தான். புதிதாக வந்த ஒருவருட டிப்ளமோ பயிற்சிகள் இரண்டிலும் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்க, அவனுக்கும் நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மனைவியை சமூக இடைவெளியில் பார்த்துக் கொள்வதோடு சரி…

ஊரில் குலதெய்வ வழிபாடென்று மஞ்சுளா, அவர்களின் கிராமத்திற்கு இரண்டுநாள் பயணமாக சென்றுவிட, வீட்டில் இளம்ஜோடிகள் மட்டுமே…

ஆயிரம் எச்சரிக்கைகளையும் உத்தரவுகளையும் சாசனப்படுத்திவிட்டே மஞ்சுளா பயணப்பட்டிருந்தார். இரவு சரியாக பாஸ்கருக்கு சப்பாத்தி போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மருமகளை அழைத்து விட்டார் மாமியார்.

“தம்பி வந்துட்டானா? நீ மாத்திரை போட்டியா? சப்பாத்தி போட ஒழுங்கா வந்ததா உனக்கு?” அதட்டலோடு அனைத்தும் சேர்ந்த கலவையாக கேட்டுக்கொண்டே வந்தவர், மருமகளை பதில் சொல்லுவதற்கு கூட அனுமதிக்கவில்லை.

“அவன் பக்கத்துல இருந்தா குடு!” என்றதும் பாஸ்கரிடம் சிந்து அலைபேசியை நீட்ட, அவனோ அதை லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டான்.

“அவள தனியா படுக்க சொல்லாதடா… இதுவரைக்கும் அப்படி படுத்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன். உன்னோட கூப்புட்டுக்கோ!”

“சரிம்மா!”

“காலையில வாசலுக்கு தண்ணிய தெளிச்சு விடு! அவ கோலம் போடட்டும்… பாரம் தூக்க வைக்காதே!”

“சரிம்மா…”

“காய் எல்லாம் வாங்கி வைச்சாச்சு! பலசரக்கும் இருக்கு.. வேற எதுவும் வேணும்னா நீயே போயி வாங்கு. அவளை அனுப்பாதே… பேந்தபேந்த முழிச்சுட்டு நிப்பா!” என அடுக்கிக்கொண்டே போக,

“ரெண்டுநாளுக்கு உன் மருமகளை எறும்பு தூக்கிட்டு போயிடாம பத்திரமா பார்த்துக்கறேன் போதுமா! இப்ப வை!” எரிச்சலுடன் வைத்து விட்டான்.

நேற்று வந்தவளின் மேல் இருக்கும் கரிசனத்தை கூட தன்மீது வைக்கவில்லையே என்னும் ஆதங்கம் சமீப நாட்களாக மனதில் மண்டிக் கிடக்க, தாயிடம் சமயம் பார்த்து வெடித்துவிட்டான்.

அதன் எதிரொலியாக உணவை பாதியில் விட்டுட்டு எழ முயற்சிக்க,

“கோபத்த சாப்பாட்டுல காட்டாதீங்க மாமா… தெரிஞ்சா, என்னைத்தான் திட்டுவாங்க!” அமைதியாக சிந்து கூற, அதற்கும் சண்டைக்கு நின்றான் பாஸ்கர்.

“ஓ… நீ திட்டு வாங்காம இருக்கதான் என்னை சாப்பிட சொல்றே? அக்கறையில இல்ல அப்படிதானே?” நக்கலாய் கேட்க,

“ம்ப்ச்… சொல்றத சொல்லிட்டேன்! இனி உங்க இஷ்டம்” சிந்துவும் முகம் திருப்பிக்கொள்ள, அவனும் வீம்பிற்கு பாதி உணவில் எழுந்து கொண்டான்.

‘முழுசா அஞ்சு மணிநேரம் கூட முடியல? அதுக்குள்ள இப்டி முட்டுது… இன்னும் ரெண்டுநாள் எப்படி போகப் போகுதோ?’ மனதோடு முணுமுணுத்த சிந்து, களைப்போடு முன்னறையில் அமர்ந்துவிட, நேரம் சென்று கொண்டிருந்தது.

தனது அறைக்கு சென்ற பாஸ்கருக்கும், மனம் குறுகுறுக்க தொடங்கியது.

‘ரொம்ப ஓவராதான் போறோமோ’ தனக்குதானே கேள்வி கேட்டுக் கொள்ள,

‘இதுவரைக்கும் நீ அப்படிதானே, எல்லா காரியத்தையும் பண்ணிட்டு இருக்க…’ மனசாட்சியும் கொட்டு வைக்க,

‘போதும்… போதும் காறித்துப்பாதே! ஏற்கனவே ஏகப்பட்ட பேர் துப்பி, மூஞ்சி சகதியா கெடக்கு’ மனசாட்சிக்கு அணைபோட்டவாறு, முன்னறைக்கு வந்தவன் மனைவியை எழுப்ப கையை பிடித்துக் கொண்டே,

“உள்ளே வா சிந்தாசினி… தனியா படுத்துக்க வேணாம்” என்றழைக்க,

“பரவாயில்ல… நான் பயப்படமாட்டேன்… நீங்க போங்க!”

“படுத்தாதடி… உன்னை சமாதானம் பண்ற அளவுக்கு எனக்கு பொறுமையில்ல… வா சீக்கிரம்” கையை பிடித்து இழுக்காத குறையாக எழுப்பி விட,

“உங்க முரட்டுதனத்த காமிக்காதீங்க… வேலை முடிச்சிட்டு வர்றேன்!” என்றவள் சப்பாத்தியை அவன் கைகளில் வம்படியாக திணிக்க, வேறுவழியின்றி உள்ளே தள்ளினான் பாஸ்கர். 

தொடர்ச்சியாக சிந்து அடுப்படி மேடையை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, அங்கேயும் வந்து நின்றான்.

“இதெல்லாம் காலையில பார்த்துக்கலாம் சிந்தாசினி!”

“நைட்லதான் செய்யனும், நீங்க போங்க!” அப்போதும் விரட்டிவிட, இவனுக்கு ரோஷம் வந்து விட்டது.

“முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ? ஏன், நீ வேலை பாக்குற அழக பார்த்துட்டே நிக்ககூடாதா?” என்று வீம்புடன் நிற்க,

“உங்க சுபாவமே இப்படிதானா… இல்ல என்கிட்ட மட்டுமே இப்டி பேசுறீங்களா?” புரியாத பாவனையில் சிந்து கணவனைப் பார்த்தாள்.

“எல்லாம் நல்ல சுபாவம்தான் எனக்கு… கொஞ்சம் கோபம் உன்மேல… அதான் இப்டி பேசிட்டே போறேன்” பாஸ்கர் அலுத்துக்கொள்ள,

“எல்லாமே கைமீறிப் போனபிறகு எனக்கு வேற வழித் தெரியல… அதான் அன்னைக்கு அப்படியொரு முடிவு எடுத்தேன்!” தான் தற்கொலைக்கு முயன்ற காரணத்தை சிந்து விளக்க,

“ம்ம்… ஏதோ ஒண்ணு நடந்து, எப்படியோ முடிஞ்சு இப்ப நீயும் நானும் எதிராளியா நிக்கிறோம்…” சலித்துக் கொண்டவன் உணவை முடித்து தனது அறைக்குள் செல்ல முற்பட, கணவனின் பேச்சு அவளை நன்றாக பதம் பார்த்தது.

“நம்ம கல்யாணம் உங்களுக்கு அவ்வளவு கஷ்டத்த கொடுக்குதா? அப்ப என்மேல பிரியம், ஆசைன்னு சொன்னதெல்லாம் வெறும் பேச்சுக்குதானா?” சூடு குறையாமல் இவள் கேட்க, அவனும் வெடித்தான்.

“யாரு இல்லன்னு சொன்னா? ஆனா அதுவே நம்மை கூறுபோட்டு கொன்னுடுச்சு… ரொம்ப அழுத்தமா இருக்கு… நீ கௌரவமா என் பொண்டாட்டின்னு வீட்டுக்குள்ள இருந்திடுவ… ஆனா என்னால அப்படி இருக்க முடியுமா? படிப்பு முடிக்கல, ஒழுங்கான வேலையில்ல… இந்த அழகுல கல்யாணம் ஒருகேடான்னு ஒவ்வொருத்தனும் என்னை கேவலமா பார்க்கும்போதும் எவ்வளவு அவமானமா இருக்கு தெரியுமா? இதுக்கெல்லாம் யாரை காரணம் சொல்ல…” தனது ஆதங்கங்களுக்கு மீண்டும் மீண்டும் அவளையே மையமாக்கினான்.  

கணவனின் பேச்சை கேட்டு விக்கித்து நின்றவளுக்கும் அவன் சொல்வது உண்மைதானே என்று மனதிற்கு பட, தன்னை குற்றவாளியாகவே உருவகப்படுத்திக் கொண்டாள்.

தனது பெண்மைக்கும் மானத்திற்கும் ஏற்பட்ட களங்கம் களையப்பட்டாலும், அதன் தூசி துரும்புகள் கணவனைத்தான் இம்சிக்கின்றதோ என அவளின் இயல்பான இரக்க சுபாவம் வேதனை கொள்ள, 

“நல்ல வேலை கிடைக்குற வரைக்கும் நான் ஊருக்கு போயி இருந்துக்கவா மாமா? இல்லன்னா, எனக்கு ஒரு வேலை வாங்கி குடுங்க… நீங்க படிப்பு முடியுற வரைக்கும் நான் வேலைக்கு போறேன்…” ஆறுதலுடன் இவள் யோசனை சொல்ல,

“எதுக்கு? உன் அண்ணன் மட்டுமில்லாம, எங்கம்மாவும், அக்காவும் சேர்த்தே என்னை உத்திரத்துல தொங்க விடவா… எதையாவது தப்புதப்பா யோசிச்சு இருக்குறதையும் கெடுத்து வச்சுகிட்டா, நான் மனுசனா இருக்க மாட்டேன்” காறித்துப்பி விட்டான் பாஸ்கர்.

‘அட போய்யா… இப்பவும் நீ மனுஷன் இல்லதான்… ஐயோ பாவமேன்னு சொன்னா, ரொம்பதான் பிகு பண்ணிக்கிற…’ மனதோடு அவனை கடிந்து கொண்டாள் சிந்தாசினி.

பேச்சொடு பேச்சாக வேலையும் முடிந்து விட்டுருக்க, இறுதியாக ஒரு டம்ளர் பாலை கணவனின் கைகளில் திணித்தாள் சிந்தாசினி.

“எனக்கு வேணாம்…” பாஸ்கர் முறுக்கிக்கொள்ள,

அதைக் கண்டுகொள்ளாமல் குடித்தே ஆகவேண்டுமென்று மனைவி சட்டமாக நிற்க, 

“உனக்கு இருக்கா? குங்குமப்பூ வாங்கிட்டு வந்தேனே… அதை போட்டு குடிக்கிறியா?” கணவன் முதன்முதலாய் அக்கறையுடன் விசாரித்ததில் இவளுக்கு சிரிப்புதான் வந்தது.

“அப்பப்ப நல்லவர் வேஷம் கட்டதான் செய்றீங்க! ஆனா, உங்களுக்கு செட்டாகல மாமா!” என்றிவள் நக்கலில் இறங்க,

“உனக்கு ஏத்தம்தான்டி! ம்ஹும்… என் நிலைமை அப்டியிருக்கு” என பெருமூச்சு விட்டவன்,

‘உன்னைச் சொல்லி குற்றமில்லை…

என்னைச் சொல்லி குற்றமில்லை…

காலம் செய்த கோலமடி!

கடவுள் செய்த குற்றமடி!’ என்ற பழைய பாடலை எடுத்துவிட, அதைகேட்டு இவளும் மனம் விட்டே சிரிக்க, மனைவியின் புன்னகை கணவனுக்கும் தொற்றிக் கொண்டது.

நெடுநாட்களுக்கு பிறகு உண்டான சிரிப்பில் இருவரின் பார்வைகளும் ரசனையுடன் ஒருவரையொருவர் தழுவிக்கொள்ள, பத்திரம் மிகப்பத்திரம் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் இளமையின் தேவையை பூர்த்தி செய்ய தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.

“பாப்பாக்கு ஒன்னும் ஆகாதுதானே மாமா?” என்றவளின் சந்தேகத்திற்கு,

“டாக்டர் அஞ்சுமாசம்தான் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க… மறந்துட்டியா!” என்றவனின் விளக்கம் சமாதானத்தை கொடுக்க, இல்லறம் என்பது இப்படிதானோ என்ற அனுமானத்தில், கணவனின் அணைப்பில் அடங்கிப் போனாள்.  

மனதிற்குள் இருந்த வெறுப்புகள் மனஸ்தாபங்கள் எல்லாம் ஓரமாய் நிற்க, இருவர் மட்டுமே இருந்த நாட்களில் இவர்களின் சீண்டலும் தீண்டலும் மட்டுமே செங்கோலாட்சி புரிந்தது.

ருசி கண்ட பூனையான மனம் உரிமைபோர்வையை போர்த்திக்கொள்ள, ரோஷம்கெட்ட உடலும் தங்களின் தேவை ஒன்றையே ஸ்திரமாக்கிக் கொண்டு பயணப்பட, மனதின் அரற்றல்கள் அந்த நேரத்தில் புதைந்து போயின.

இரண்டுநாட்கள் கழித்து வந்த மஞ்சுளாவிற்கு இருவரின் ரகசிய சிரிப்புகள், பார்வை பரிமாறல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நடந்தவைகளை சொல்லாமலே சொல்லிவிட, ஆடித்தீர்த்து விட்டார்.

மருத்துவரின் அறிவுரையை காரணம் கூறி, விலக்கி வைத்தவருக்கு, மகன் மனைவியின் புறம் சாய்ந்து கொண்டதில் மனம் கசந்து போனார்.

இந்த இரண்டு நாட்களுக்கே இந்த கதியென்றால் பின்னாளில், தனது வாழ்நாள் எப்படி கழியுமென்ற சுயநலமே மீண்டும் தலைதூக்கிவிட, தனது கோபத்திற்கு மருமகளை வறுத்தெடுக்க ஆரம்பித்தார்.

“ஆம்பளைக்கு தெரியுமா பொண்ணோட அவஸ்த… நாளைக்கே ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகி, ரெண்டு உசுருல ஒண்ணுனு வந்து நின்னா, யார் பொறுப்பெடுப்பா? சுமந்துட்டு நிக்கிற நீயும், உன்னை பார்த்துக்குற நானும்தான்… என்னை இக்கட்டுல மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கனும்னு கங்கணம் கட்டிட்டு இருக்கியாடி! பொம்பள புள்ளைக்கு யதார்த்தம் புரிய வேண்டாமா…” சுடுசொற்களால் சற்று அதிகப்படியாகவே மருமகளை கண்டித்துவிட, கணவனிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டாள் சிந்தாசினி.

அதேபோன்ற தாளிப்புகள் பாஸ்கருக்கும் நடக்க, மருத்துவரின் ஆலோசனையை இவன் எடுத்துக் கூறினாலும் அடங்கிவிடுபவரா மஞ்சுளா…

சொல்வதை சொல்லிவிட்டேன் என்ற அசட்டையுடன் கடந்துவிட்டான் பாஸ்கர். இதில் வதைபட்டு நின்றது எப்போதும் போல் சிந்தாசினி மட்டுமே…

“புருசனோடு தப்பாம குடும்பம் நடத்தத் தெரியுது… பொறந்த வீட்டுல இருந்து சீர்வரிசை கொண்டு வந்து இறக்கச் சொல்லி, சட்டமா பேசத் தெரியல…” வழக்கமான குற்றசாட்டுகள்தான், வண்ணம் மட்டுமே மாறிவந்தன. 

முன்பைவிட அதிக ஒதுக்கங்களுடன், இவள் கணவனிடம் நடந்துக் கொள்ள, அதற்கும் காய்ந்தான் பாஸ்கர். இரண்டுநாள் குடும்பஸ்தன் வாழ்க்கை மனைவியின் தேடலை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்க, கோபக்காரன் முகமுடி போட்டு அலையத் தொடங்கினான்.

இரவுநேர வேலையை கேட்டுவாங்கி வீட்டில் தங்குவதை குறைத்துக் கொண்டவன், இரண்டொரு வார்த்தைகளை அன்பாக கூறி மனைவியை ஆறுதல்படுத்துவோம் என்பதை அறவே மறந்து போனான்.

கணவனின் பாராமுகத்தில், மனம் முழுவதும் வெற்றிடமாகிப் போனது சிந்தாசினிக்கு. இப்படியும் வாழத்தான் வேண்டுமா என்ற ஆயாசம் பூதாகாரமாகி நிற்க, தன்னை முயன்று சமன்படுத்திக் கொண்டாள். 

சோதனை மேல் சோதனையாக இவளின் வளைகாப்பன்று மஞ்சுளா ஆடிய ஆட்டத்தில், சிந்தாசினியின் மனபொருமல்கள் உடைபட்டு, குடும்ப வாழ்க்கையே வேண்டாமென்று முடிவினை எடுக்க வைத்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!