தண்ணிலவு தேனிறைக்க… 14

TTIfii-f99b4bc5

தண்ணிலவு – 14

“ஒருவரின் மீதான எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை தரும் பொழுது, அங்கே நம்பிக்கை கேள்விக்குறியாகி விடுகிறது. அந்த கேள்விகளுக்கு விடை காணப்படாத சூழ்நிலையில்தான் வாழ்க்கை தோற்றுப் போகிறது பாஸ்கர்…

தன்னையும் மீறி வெளிப்படும் கோபம், வெறுப்பு, பிரிவு, நிராகரிப்பு இதெல்லாம் அந்த தோல்வியின் எதிரொலிகள்தான்… இது மட்டுமில்ல இன்னும் எத்தனை எத்தனையோ… 

மேலோட்டமா பார்த்தா, இது அதிகப்படியான செயலாகூட தோணலாம். ஆனா அவங்களோட ஏமாற்றத்தை வெளியே காண்பிக்க வேற வழியில்லாத நிலையில மொத்தமா ஒதுங்கி, தங்களோட இணையையும் ஒதுக்கி வைக்கிறாங்க…” மிக நீளமான விளக்கத்தை பாஸ்கரின் முன்வைத்தார் மனநலமருத்துவர்.

சிந்தாசினி இனிமேல் மனஉள ஆலோசனைக்கு வரமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட, மருத்துவர், பாஸ்கரை வரவழைத்து மணவாழ்வின் பின்னடைவிற்கான காரண காரியங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.

“எனக்குமே எதிர்பார்ப்பு இருந்தது டாக்டர்! அப்போதைய அழுத்தம் என்னை தாண்டி, வேற எதையும் என்னால யோசிக்க முடியல… அது என்னோட தவறுதான்னு இத்தனைநாள் நானும் அமைதியா இருந்துட்டேன். சொல்லப்போனா என் வொய்ஃப் மேல எனக்கும் கோபம் இருக்கு. ஆனா, நான் இப்டி நடந்துக்கலையே?” பாஸ்கர் தனது நிலைபாட்டினை எடுத்துக் கூற,

“திருமண வாழ்க்கை, ஆணுக்கு எந்தவொரு மாற்றத்தையும் கொடுக்கிறதில்ல… அதுவே பெண்ணுக்கு டோட்டலா சேஞ்ச் ஆகுது. அதுலயும் கையில குழந்தை வந்துட்டா அவங்க மனசுல சந்தோசத்தோட, பயமும் அழையா விருந்தாளியா வந்து உட்கார்ந்திடுது.

நம்பிக்கை கொடுக்காத திருமணம், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்புகள், தன்னைதானே பாதுகாக்க தவறிடுவோமோன்னு நினைக்கிற தவிப்புகள் இதெல்லாம் எந்த காலத்துலயும் ஆண்களைத் தாக்குறதே இல்லை.

அப்படியே இதெல்லாம் சூழ்ந்தாலும், அவங்க சுபாவம் அதை பின்னுக்கு தள்ளி, நிகழ்காலத்தை புரிய வைச்சிடும். மனசுக்குள்ளயே வச்சுட்டு தடுமாறும் ஆண்கள் எல்லாம் ரொம்ப சிலபேர்தான்.

இதுக்கு நேர்மாறான அனுபவங்கள் பெண்களுக்கு ஏற்படுது. எந்தவொரு இடத்துலயும், தான் தலைகுனிஞ்சு நிக்ககூடாதுன்னு பெண்கள் எடுக்குற மெனக்கெடல்கள், வொர்க் டென்ஷன் எல்லாம் சேர்ந்து அவங்களை அழுத்தத்துக்கு தள்ளிடுது…” மருத்துவர் ஒவ்வொன்றாக விளக்க, பாஸ்கருக்கு மனைவி அனுபவித்த ரணங்கள் நன்றாகவே புரிந்துபோனது.

படித்த பதவிசான பெண்களுக்கே இப்படியென்றால் இவள் வெளியுலக அனுபவமே இல்லாத அப்பாவி, தனக்குள்ளேயே புதைந்துபோன அவலம் வேறு… இவையெல்லாம் சேர்த்தே அத்தனை அழுத்தங்களை கொடுத்திருக்கிறது. இதற்கு காரணம்… முழுக்க முழுக்க தான்மட்டுமே என எண்ணும்போதே தன்னைதானே வெறுத்துக் கொண்டான் பாஸ்கர்.

“இந்த மைன்ட்செட் இவங்களுக்கு இப்படியேதான் இருக்குமா? மாத்தமுடியாதா டாக்டர்?” கேட்டவனின் குரலில் இனம் தெரியாத பயமும் இப்போது வந்திருந்தது.

வாழ்க்கை முழுவதும் மனைவியின் வெறுப்பு பார்வையை சுமந்து வாழ்வெதென்றால் கொடுமையிலும் கொடுமையல்லவா அது… அப்படிப்பட்ட வாழ்வை வாழ்ந்துதான் ஆகவேண்டுமா என்றெல்லாம் நிராசை குடிகொண்டது அந்த குடும்பஸ்தன் மனதில்…

“எதையும் அவங்கமேல திணிக்க வேண்டாம். உங்கமேல நம்பிக்கையை வரவைங்க… குடும்ப வாழ்க்கையில அவங்களோட பங்களிப்பு என்னன்னு புரிய வைங்க…

அதிகப்படியான அக்கறைகள் கூட அவங்களுக்கு எரிச்சலை கொடுக்கும். நீதான், எனக்கு எல்லாமும்னு டயலாக் பேசாம, செயல்ல உணர்த்தப் பாருங்க… அதுவே உங்கமேல பிடித்தமும் பிடிமானமும் உண்டாக்கும்!” மேலும் பல ஆரோக்கியமான அறிவுரைகளை கூறி அனுப்பியிருந்தார்.

இத்தனைநாள் பாராமுகத்தின் பலன் இன்னும் என்னென்ன பாடங்களை கற்றுக்கொடுக்கப் போகின்றதோ என்ற கலக்கத்துடன் பெரிதாய் சிந்தனை வயப்பட்டு அனைத்தையும் தனக்குள் புதைத்துக் கொண்டான் பாஸ்கர். பாரமில்லா மனதுடன் மனைவியின் அருகாமையை மட்டுமே விரும்பியவனின் மனதிலும் இப்போது அழுத்தங்கள் அமர்ந்து கொண்டது.

**********************************

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் முடிந்திருந்தது. நெபுலைசர், ஊசி என மேற்கொண்டு வந்த சிகிச்சைகளும் சிந்தாசினிக்கு நேற்றோடு முடிவடைந்திருந்தன.

இன்னும் இரண்டு நாட்களில் பாஸ்கரும் விடுப்பு முடிந்து ஊருக்கு புறப்பட்டே ஆகவேண்டுமென்ற அவசரத்தில் அலைந்து கொண்டிருக்க, சிந்துவோ தீராத குழப்பத்துடன் உணவை அளந்து கொண்டிருந்தாள்.

“எந்த வழிக்கும் வராம அடம்பிடிச்சுதான், இன்னைக்கு இந்த நெலையில நீ இருக்க…” மரகதம் சட்டென்று சொல்லிவிட, சிந்துவின் மனம் பெரிதாய் புண்பட்டுப் போனது.

இன்னமும் கணவனின் முகம் பார்த்து பேசமாட்டேன் என இணக்கமற்று மகள் நடமாடுவதை பார்த்து பெற்றவருக்கும் கோபம் வரத் தொடங்கியிருக்க, நாள்முழுவதும் அதட்டிக் கொண்டிருந்தார்.

“சாப்பிடும்போது என்ன பேச்சு அத்தை? உடம்பு இன்னும் சரியாகாத நிலையில ஏன் இப்படி அதட்டுறீங்க?” பதிலுக்கு மாமியாரை கடிந்து கொண்டாள் மிதுனா.

தவறு செய்தவனை விடுத்து, தண்டனை அனுபவித்தவளை ஏசும் பொல்லா உலகத்தை என்னவென்றுதான் சொல்வது? மரகதத்தை தவிர வேறுயாரும் சிந்துவை நிந்திக்கவோ அதட்டல் போடுவதோ இல்லை.

அவள் மனதிற்கு விருப்பமானதை செய்து கொள்ளட்டும், முதலில் உடலும் மனமும் தேறிவரட்டும் என்றே விட்டுவிட்டனர்.

மருத்துவமனையில் இருந்ததைவிட, அதிக மனக்கலக்கத்தோடுதான் சிந்துவின் ஒவ்வொரு நாளும் விடியத் தொடங்கியிருக்கிறது.

அதற்கான காரணம் இதுதான்… கடந்து இரண்டு தினங்களுக்கு முன்னர், சிந்துவை பார்க்கவென கிராமத்தில் இருந்து, தமிழ்செல்வன் தனது பெற்றோருடன் வந்திருந்தான்.

அப்படின் வந்தவன், சிந்து, தன்பொறுப்பில் பார்த்துக் கொள்ளும் கடை நிர்வாகத்தை, தனது மச்சான் உறவுமுறையில் இருப்பவனுக்கு கைமாற்றி விட்டதாக கூறி அனைவரையும் அதிர வைத்தான்.

தொழிலை வாங்கிக் கொண்டவனே, இனி வியாபாரம், கணக்கு வழக்கு பொறுப்புக்களையும் மேற்பார்வை பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டதாகவும் தெரிவித்துவிட, அப்போதிருந்தே சிந்துவின் குழப்பக்காட்டில் அடைமழை பெய்யத் தொடங்கியிருந்தது.

தமிழ்செல்வனின் பேச்சினை கேட்ட தயானந்தன் வெகுவாய் அவனை கடிந்து கொண்டான்.

“நீ கை மாத்திவிடப் போறேன்னு தெரிஞ்சுருந்தா, நானே எடுத்திருப்பேனே மாப்ள… கடைசியில வேலைகாரங்களுக்கு சொல்ற மாதிரிதானே இங்கே வந்து சொல்ற… அந்த   கண்ணோட்டத்துலதான் சிந்துவையும் பார்த்திருக்க… நீ ரொம்ப மாறிட்ட மாப்ளே!” கோபம் கொண்டு மனதாங்கலோடு பேச,

“பெரிய பேச்செல்லாம் பேசாதே மச்சான்… எப்பவும் அவளை என் தங்கச்சியாத்தான் பாக்குறேன்! என் பொண்டாட்டியும் அவ பொறந்த வீட்டாளுங்களும் எப்படிபட்டவங்கன்னு உனக்கு தெரியாததா? ஏற்கனவே ஆகாத மனுஷியாதானே சிந்தாவ அவங்க பார்த்துட்டு வர்றாங்க!

கொடுத்தே ஆகணும்னு என் வீட்டுக்காரியே சண்டைக்கு நிக்கிறப்போ, தர்க்கம் பண்ணி பிரச்சனைய பெரிசாக்க வேண்டாம்னுதான் சம்மதம் சொல்லி முடிச்சிட்டேன். அவ நினைச்சது நடக்கிற வரைக்கும் குடும்பத்துல நிம்மதி இருக்காது மச்சான்… குழந்தைகளையும் பார்க்க வேண்டியிருக்கு…” வேதனையுடன் சொன்ன தமிழ்செல்வனை, தட்டிக்கொடுத்தே ஆறுதல்படுத்திய தயா.

“விடு மாப்ளே! உன் கையில விவசாயம் இருக்கு… காய்கறி வியாபாரத்தை பெரிசா செய்ய ஆரம்பி! அதுவே உனக்கு வாரிக்கொடுக்கும்” என ஊக்கப்படுத்தினான்.

“பக்கத்து ஊருல இதே வியாபாரத்தை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்யா… நீ என்ன சொல்ற?” சிந்துவை வளர்த்தவராக நாராயணன் கேட்க, வேண்டாமென்று ஒரே பேச்சில் மறுத்து விட்டான் தயா.

“பக்கத்துல நீங்க இருந்ததாலதான், சிந்துவ கிராமத்துல தங்க வைச்சேன். இப்போ என்ன? எங்க தொழில வந்து பார்த்துக்கட்டும். இல்லன்னா வேறென்ன பிடிக்குதோ, அதை இங்கேயிருந்து செய்யட்டும். இவளை தனியா இருக்க நான் விடமாட்டேன் மாமா!” பிடிவாதமாக தயா கூறிவிட, அங்கே மறுபேச்சில்லை. மரகதமும் மகள் தனது மேற்பார்வையிலேயே இருக்கட்டும் என்று ஆணித்தரமாக கூறிவிட்டார்.

வளர்த்தவர்கள் பாகுபாடு காண்பித்து விட்டார்களே என்ற பழிச்சொல் சேர்ந்துவிடப் போகிறதோ என்றஞ்சியே வந்த, சிந்துவின் வளர்ப்பு பெற்றோருக்கு தயாவின் பேச்சு நிம்மதியை கொடுத்தாலும், மனமெல்லாம் வேதனை கவ்விக் கொண்டு நின்றது.

“நான் கடைக்கு முதல் போடுறேன்! என் பொண்ணுக்கு தெரிஞ்ச வியாபாரத்தையே பாக்கட்டும்யா! எங்கேயும் போயி கைய கட்டிட்டு நிக்க வேணாம்” தவிப்புடன் நாராயணன் எவ்வளவோ வலியுறுத்தியும், தயாவும் சிந்துவும் சேர்ந்து மறுத்து விட்டனர்.

“நான் கடை கணக்குதான்ப்பா எழுதிட்டு வந்தேன். அந்த வேலை எங்கே போனாலும் கிடைக்கும். இதுக்குன்னு தனியா பணத்தை போட்டு முடக்க வேணாம்” விளக்கமாக சிந்துவும் சொல்லிவிட, அரைமனதாக புறப்பட்டு சென்றனர்.

அவர்களாடு தயாவும் தனது குட்டியானையில் பாஸ்கருடன் கிராமத்திற்கு சென்று சிந்து, விபாகரின் பொருட்கள், துணிமணிகள், பீரோ, சிந்துவின் ஹோண்டாடியோ, விபுவின் சைக்கிள் என எல்லாவற்றையும் கொண்டு வந்து, இறக்கியும் அடுக்கியும் முடித்தாகி விட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தயானந்தன் தங்கியிருந்த மாடிபோர்ஷனுக்கு அருகிலுள்ள வெற்றிடத்தை அடைத்து பெரிய அறையாக கட்டியதில், இப்போது சிந்துவின் பொருட்கள் எல்லாம் அங்கேயே தஞ்சமடைந்து விட்டன.

தற்சமயம் பாஸ்கருக்கு இரவுத் தங்கல் அங்கேதான். உடல்நிலை காரணம் காட்டியே இவள் அறைக்குள் அடைந்துவிட, இவன் ஹாலில் மகனுடன் படுத்துக் கொள்வான்.

தனிமையில் மனம் விட்டுப் பேசினால் போதுமே… அனைத்திற்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு அதுவே கேள்விக்குறியாகி போய்விட, இதனைப் பார்த்த மரகதம்தான் அத்தனை பேச்சும் பேசிக் கொண்டிருந்தார்.

தனது வாழ்வாதாரத்தை நம்பியிருந்த வேலையும் இல்லையென்றான நிலையில், இனி என்ன செய்வது, எப்படி வாழ்வதென்ற யோசனையில் சிந்தாசினியின் தலையே வெடித்து விடும் போலிருந்தது.

எதையும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் ஓய்வெடுத்துக்கொள் என்று மிதுனா அறிவுறுத்தியும்கூட, இவளால் அத்தனை எளிதில் குழப்பத்தில் இருந்து வெளியில் வரமுடியவில்லை.

எந்தவொரு வேலைக்கும் குறைந்தபட்ச தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பாவது இருக்க வேண்டுமென்பது கட்டாயமாகியிருக்க, இவளோ பள்ளி உயர்நிலை படிப்பினை தாண்டாதவள்.

கணினி மையத்தில் டிப்ளமோ படிப்பும், டேலியும் கற்றுக் கொண்டதை வைத்து யாரும் அத்தனை சுலபத்தில் வேலை கொடுக்க முன்வரமாட்டார்கள் என்பதையும் இவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.

இளம் வயதில் படிக்காமல் விட்ட தனது மடத்தனத்தை இப்போது எண்ணி பெரிதும் கவலைபட்டுக் கொண்டிருந்த சிந்தாசினியை மரகதத்தின் வசைப்பாட்டுதான் உலுக்கிப் போட்டது. அதனை தொடர்ந்த மிதுனாவும்,

“சகஜமா இருக்கபாரு சிந்து? வேலையப் பத்தின கவலைய விடுன்னு சொன்னாலும் கேக்கமாட்டேங்குற…” என கண்டிக்க,

“உன்கிட்ட வேலை பார்க்கணுமான்னு சிந்தாமேடம் யோசிக்கிறாங்க போல…” மனைவியை வம்பிற்கு இழுத்தபடியே வந்தமர்ந்தான் பாஸ்கர்.

மனதை வருத்தும் எந்த ஒன்றினைப் பற்றியும், அதிகமாக சிந்திக்கவிட வேண்டாமென்று மருத்துவர் அறிவுருத்தியிருக்க, தனது சீண்டலின் மூலம் அவ்வப்போது மனைவியை திசைதிருப்பிக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

“எங்க அண்ணன் இடத்துல போயி வேலை செய்றதுக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்ல…” கணவனின் கேள்வியில் கோபம் கொண்டவளாக, ரோசமுடன் சிந்து சொல்ல,

“இப்போதைக்கு வேலை, அதுஇதுன்னு எதையும் இழுத்து போட்டுக்காதேடா! கொஞ்சநாள் வீட்டுல இருந்து ரெஸ்ட் எடு… போர் அடிச்சா, இந்த குட்டீசையும் அம்மாவை பார்த்துட்டு, வீட்டுல அமைதியா இரு!” தயாவின் அறிவுரையில் மனம் அமைதியடைந்தாலும், சிந்து அதற்கும் சம்மதிக்கவில்லை.

“இவ ரொம்பவே யோசிக்கிறாங்க… இங்கே இருக்க இவ விரும்பல போல…” மிதுனா வேண்டுமென்று கணவனிடம், குறைபட்டுக் கொள்ளவும்தான் மனதிற்குள் உள்ளதை வெளியே கொட்டினாள் சிந்து.

“அப்படியெல்லாம் இல்லண்ணி… நான் ஏதாவது கைவேலை இல்லன்னா சுயதொழில் கத்துக்குறேன். இத்தனைநாள் கணக்கு வழக்கு எழுதின அனுபவம் இருக்கு. ஆனா அத வெளியே சொல்லிக்க படிப்பு இல்லை… அதனால எதையும் படிப்போட சேர்த்து செய்யலாம்ன்னு யோசிக்கிறேன்.

சிம்பிளா தையல், கேட்டரிங், இல்லன்னா பிரைடல் மேக்கப், பியூட்டிசியன் இப்டி ஏதாவது ஒண்ணு, கத்துக்கும்போதே வருமானமும் வர்ற மாதிரியும் இருக்கும்” இவள் சொல்லிக்கொண்டே போக, முகத்தை ஏகத்திற்கும் சுருக்கி, பிடித்தமின்மையைக் காட்டினான் பாஸ்கர்.

“என்ன மாப்ளே? அவ சரியாதானே யோசிக்கிறா… எனக்கொன்னும் அதுல தப்பு இருக்குறதா படலையே…” தயா சொல்ல,

“அனுபவத்துக்கான படிப்பு இல்லைன்னா, அந்த படிப்பையே படிச்சிட்டு போறது… அத விட்டுட்டு கைத்தொழில்ன்னு புதுசா தெரியாத விசயத்துல எதுக்கு இறங்கணும்?” கேட்டவனின் பார்வை மனைவியிடம் பதிலை கேட்டு நின்றது.

“இனிமேட்டு படிக்கன்னு காலேஜூக்கு எல்லாம் என்னால போக முடியாது” கணவனைப் பார்த்து முறைப்புடன் சொன்னாள் சிந்து.

“போக முடியாதா? இல்ல படிக்க முடியாதா… அப்படியும் இல்லன்னா உனக்கு படிப்பு ஏறாதா?” வேண்டுமென்றே நக்கலடித்தான் பாஸ்கர்.

“எந்த கேள்விய, யார் கேக்குறதுன்னு வெவஸ்த இல்லாம போச்சு… சொத்து சேர்க்குற மாதிரி அரியர்ஸ் சேர்த்து வைச்சு கொண்டாட்டிட்டு, அப்படியே எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்கிறது ரொம்பத் தப்பு…” படபட பேச்சில் சிந்து, கணவனை கடித்து வைக்க,

பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ‘ஆரம்பிச்சுட்டாங்க… இனி அவ்வளவுதான்’ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டனர்.

அனைவரின் எதிரிலும் வெட்டவா குத்தவா என பேசிக் கொள்பவர்கள், தனியாக இருக்கும்போது ஊமையாகவே இருந்து விடுவர்.

பாஸ்கரும் மனைவியை பேச வைப்பதற்கென்றே சரிக்கு சரியாக பேச்சில் நின்று விடுவான். இன்றும் அதே போலவே ஆரம்பித்திருக்க, சுற்றியுள்ளவர்களின் நிலைமைதான் பரிதாபமாகிப் போனது.

“பேச்சு உன்னைப்பத்தி தானே? எதுக்கு என் லட்சணத்த இழுக்குற?” பாஸ்கர் எகிற,

“எனக்கு படிப்பு ஏறாதான்னு மட்டம் தட்டி பேசினா, நானும் பேசுவேன்”

“அப்டியே நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த ஸ்டூடண்ட்தான்! நம்பிட்டேன் போ…”

“நம்பாட்டி போய் கேட்டு பாருங்க… நான் படிச்ச ஸ்கூல்ல அக்கவுண்ட்சுலயும் காமர்ஸ்லயும் சென்டம் வாங்கின ஆளாக்கும்…” தன்னை பெருமையாய் சொல்லிக் கொண்டவள்,

“உன் மாப்பிளைக்கு எடுத்து சொல்லும்மா… இப்படியாவது என்னை பத்தி தெரிஞ்சுக்கட்டும்” உதட்டை சுழித்து பழிப்பு காட்டியபடி மரகதத்திடம் சொல்லிவிட, இவளின் சிறுபிள்ளைதனத்தில் அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“அப்படின்னா, அழகா படிக்க வேண்டியதுதானே! அன்னைக்கு இருந்த சூழ்நிலைக்கு ஒத்து வரலன்னா இப்போ செய் சிந்தாசினி!” அக்கறையுடன் சொன்ன பாஸ்கரின் பேச்சினை அனைவருமே ஆமோதித்தனர்.

“இதெல்லாம் உடனே முடிவெடுக்குற விஷயமில்ல… இப்பவே ஆஸ்பத்திரின்னு செலவ இழுத்து வச்சுட்டேன்… இந்த வருஷம் விபுவ ஸ்கூல்ல சேர்க்கணும், அதோட என் படிப்புன்னு அகலக்கால் வைச்சா, என்னால சமாளிக்க முடியாது” யோசித்தபடியே தனது நிலையை தெளிவுபடுத்தினாள் சிந்து.

“நான் இருக்கும்போது எதுக்கு இவ்வளவு தூரத்துக்கு யோசிக்கிற சிந்து? உன்னால முடியும்னா தாராளமா படி! நான் பார்த்துக்கறேன்…” தயா இடையில் வர, பாஸ்கர் நொந்து போனான்.

‘இவர் ஒருத்தர்… கிடைக்குற கேப்ல எல்லாம் என்ட்ரி குடுத்து என்னை ஆஃப் பண்றாரு… என் பொண்டாட்டிக்கு செய்ய எனக்கு சான்ஸ் குடுக்க மாட்டாரா? இல்ல நான் செய்வேன்னு இவருக்கும் நம்பிக்கை இல்லையா? இந்த பாசமலர் சீரியல பார்த்து முடியலடா சாமி!’ மனதோடு புலம்பிக் கொண்டவன், நடக்கும் பேச்சினில் கவனத்தை பதித்தான்.

“இதுவரைக்கும் செஞ்சதே போதும்ண்ணே! உனக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்க விரும்பல… ஆஸ்பத்திரி பில் எவ்வளவு ஆச்சுண்ணே? கேக்க நினைச்சு, மறந்து போறேன்” என்று ஞாபகம் வந்தவளாய் கேட்க,

“எல்லாத்தையும் மாப்ளேதான் பார்த்துகிட்டாரு! அவர்கிட்டயே கேட்டுக்கோ!” தயா, பாஸ்கரின் பக்கம் பேச்சை திருப்பிவிட, சட்டென்று அவனை முறைத்துப் பார்த்தாள் சிந்து.

“இத்தனை வருசத்துல இல்லாதது, இப்போ மட்டும் புதுசா ஏன் செய்யணும்? எவ்வளவு ஆச்சுன்னு கேட்டு சொல்லுங்கண்ணி… செட்டில் பண்ணிடுறேன்” வெறுப்பாய் பேச, பாஸ்கருக்கும் கோபம் வந்து விட்டது.

“இந்த பேச்சுதான்… ஒரு நாளைக்கு நூறு தடவையாவது சொல்லி காமிச்சே, எனக்கு கொட்டு வைக்கிறா… இந்த இருபதுநாள்ல கேட்டுகேட்டு எனக்கும் அலுத்துப் போச்சு… இதுக்கே காவி கட்டிட்டு எங்கேயாவது ஓடிடலாம்னு இருக்குக்கா…” மிதுனாவிடம் சலிப்பாக பேசியவன்,

“என் கம்பெனி ஹெல்த் கார்டுல என் புள்ளைக்கு அம்மாவா உன்பேர் போட்டு, உன் போட்டோவதான் அட்டாச் பண்ணியிருக்கேன்… அதனால ஈஸியா க்ளைம் பண்ணிக்கலாம். அதுக்கும் மேலே, பணத்தை கொடுத்து உன் ரோசத்தை காமிக்கனும்னு வீம்பு புடிச்சேன்னா… என் புனே ஆபீசுக்கு போயி, நம்ம வாழ்க்கை வரலாற விலாவாரியா டெலிகாஸ்ட் பண்ணி, பணத்தை செட்டில் பண்ணிட்டு வா! நான் தடுக்கல…” என்று வெடித்தவன் வெளியே கிளம்பி விட்டான்.

மருத்துவமனையிலும் வீட்டிலும் மனைவி தனிமையில் இருக்க வேண்டுமென்பதை உணர்ந்துகொண்டு, இவன் மட்டுமே அவளை, தன் பொறுப்பில் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறான்.

இத்தனை நாட்களில் அந்த கரிசனம் கூடவா இவளை நெகிழ வைக்கவில்லை என்ற ஆதங்கமே, மனதில் மலையளவு உயர்ந்து நிற்க, பொறுமையிழந்து இன்று வெடித்து விட்டான்.

“என்ன பொண்ணுடி நீ? ஒரு மனுஷன் இறங்கி வந்தா, நீயும் தணிஞ்சு போக மாட்டியா? இப்படியா கொத்தி கொத்தி ரணப்படுத்துவ… பாவம்… இப்போதான் வெளியே இருந்து வந்தாரு! அதுக்குள்ள கோபமா பேசி அனுப்பிட்ட…” அனைத்தையும் சிந்துவின் தப்பாகவே மரகதம் குற்றம்சொல்ல,

“செலவு எவ்வளவுன்னு கேட்டது தப்பா? இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் செஞ்சதில்லையேன்னு கேட்டதும் குத்தமா போச்சா? ஆகாத மருமகளா இருந்தேன், இப்போபிடிக்காத  மகளாவும் ஆகிட்டேன். எல்லாம் இவரால…” சிந்துவும் தன்பங்கிற்கு இயலாமையுடன் பேசிவிட்டு, மேலே சென்றுவிட அனைத்தும் அடங்கிப் போனது.

இவர்கள் இருவரின் சண்டையில் மொத்த குடும்பமுமே களையிழந்தது போலவே தோன்ற ஆரம்பித்தது மிதுனாவிற்கு… இவர்களை எப்படி சரி செய்யப் போகிறோம் என்ற ஆயாசத்துடன் கணவனை நோக்க, அவனும் அதே பார்வையைதான் பதிலாக அளித்தான்.

“உடனே எல்லாம் சரியாகாது மிது! அவங்க போக்குலயே போய் புரிஞ்சுக்கட்டும்” ஆறுதலாக கூறிபடியே வேலையை பார்க்க சென்றான் தயா.

ஏதாவது ஒரு பேச்சில் இவர்களை இணைத்து பார்க்க முன்வந்தாலும், கண்ணுக்கு தெரியாத சிக்கலான முடிச்சு ஒன்று, முட்டுக்கட்டையாக நின்று மீண்டும் உச்சாணிக் கொம்பில் ஏறிவிடுகிறது.

இருவரையும் ஆட்டி வைக்கும் இந்த மாயத் தோற்றத்தை களைவதற்கு என்ன செய்வதென்ற யோசனையில் மிதுனாவும் அன்றைய பொழுதினை கழிக்கத் தொடங்கினாள்.

மறுநாள் தன்னுடன் வந்தே ஆகவேண்டுமென்று தயானந்தன் தங்கையிடம் கூறியிருக்க, காலையில் இருவருமே கிளம்பி விட்டனர்.

“நம்ம கம்பெனிக்கு வழக்கமா இன்கம் ரிடர்ன் ஃபைல் பண்ணி கொடுக்கிறவர் ஆபிஸ்லதான், உனக்காக வேலைக்கு பேசி வைச்சுருக்கேன் சிந்து. உன்னோட பயோடேட்டா, ஐடி ஃப்ரூப் எல்லாத்தையும் எடுத்துட்டு வா!” என்று கூறியே அழைத்து சென்றான்.

அது கோச்சிங் சென்டருடன் கூடிய ஆடிட்டிங் ஆபீஸ் என்பது அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது. தயா சொன்ன ஆடிட்டர் திவாகர் ஐம்பது வயதில், பார்வையாலேயே அடுத்தவரை எடைபோடும் மதிப்பு மிக்கவராக தெரிந்தார். இதுநாள் வரை பார்த்து வந்த வேலையைப் பற்றி சிந்தாசினியிடம் கேள்விகள் கேட்க ஆரம்பிக்க, அவளும் தயங்காமல் பதில்களை சொல்லிக்கொண்டே வந்தாள்.

“இவங்களால படிக்க முடியும் தயானந்தன். இப்பவேகூட அட்மிசன் போட்டுடுடலாம்” என்று அவர் கூறவும் அதிர்ந்து விளித்தாள் சிந்து. 

“எனக்கு வேண்டாம்ணே! நான் படிச்சது தமிழ் மீடியம்தான். சிஏ வரைக்கும் போகணும்னா, கொஞ்சமாவது இங்கிலீஷ் தெரிஞ்சுருக்கனும்!” என்று தயாவின் காதில் கிசுகிசுக்க,

“ஃபர்ஸ்ட் பவுண்டேஷன் எக்ஸாம் எழுதி முடிங்கமா… அதுக்கு பிறகு வர்ற குரூப் எக்ஸ்சாம்ல நீங்க சொல்ற எல்லா சாப்ட்வேர் ஸ்கில் சப்ஜெக்டும் வந்திடும். தனியாவும் நீங்க கிளாஸ் அரேன்ஜ் பண்ணிக்கலாம்… ட்ரைனிங் என்கிட்டயே எடுத்துக்கலாம்” திவாகர் தெளிவாக விளக்க, இவளோ மறுப்பதில் குறியாக இருந்தாள்.

“இல்லண்ணே… நான் யோசிச்சு சொல்றேனே! வேலைன்னா மட்டுமே ஒத்துக்கறேன். படிப்போட வேலையும்னா என்னால சமாளிக்க முடியாது” தயங்கித் தயங்கியே அண்ணனிடம் பலமுறை கூறி இவள் பிடிவாதமாக நிற்க,

“சரி… வந்ததுக்கு அப்ளிகேசன் ஃபாரம் மட்டும் வாங்கிட்டு போவோம்! அப்புறம் உன் யோசனை என்னவோ அப்படியே செய்யலாம்” கோபத்தை அடக்கிக் கொண்டு தயா கூறிவிட, இறுதியில் படிவத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்து வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!