தண்ணிலவு தேனிறைக்க… 17

TTIfii-4fb8c3bc

தண்ணிலவு – 17

பாஸ்கர் ஊருக்கு கிளம்பிச் சென்று இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. சிந்தாசினியும் முயன்று தனது கவனத்தை படிப்பில் திருப்பத் தொடங்கியிருந்தாள். எந்த ஒன்றையும் எளிதாக கிரகித்துக் கொள்ளும் இயல்பு அவளுடையது. 

சற்று சிரமமாக இருந்தாலும் ஆர்வமும், தன்மேல் குடும்பத்தினர் வைத்த நம்பிக்கையும் சேர்ந்து அவளை ஈடுபாட்டுடன் படிக்க வைத்தது. அத்துடன் சென்னை வாகன நெரிசலில் தனது ஹோண்டா-டியோவை கையாளவும் பழகிக்கொண்டாள்.

தினமும் காலையில் பயிற்சி வகுப்பிற்கு செல்பவள், மாலையில் அண்ணனது வியாபாரத்தின் அன்றாட கணக்கு வழக்கினை பார்ப்பதையும் தன்வசமாக்கிக் கொண்டாள்.

வீட்டில் குழந்தைகள் மற்றும் மரகதத்தின் தேவைகளையும் பார்த்து பார்த்து செய்ய, நைல்குட்டிக்கு அத்தைமடி மெத்தையானது. அம்மாவை மறந்து அத்தையின் ஹோண்டாவின் சுற்றத் தொடங்கிய சின்னக்குட்டி, தயாப்பாவுடன் தினமும் இரவில் போகும் புல்லட் உலாவை மட்டும் மறக்கவில்லை. 

பாஸ்கருக்கும் சிந்தாசினிக்குமான பேச்சு வார்த்தை அதிகமாக இல்லையென்றாலும், பேசிக்கொண்டார்கள் அவ்வளவே! இருவரும் பேச ஆரம்பித்து ஐந்து நிமிடம் முடிவதற்குள் மகன் வந்து இடையிட்டு விடுவான். இல்லையென்றால் நந்தா, நைனிகா என யாரேனும் வந்து பாஸ்மாமாவை கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

இங்கிருந்து சென்ற பாஸ்கருக்கும் வேலை நெட்டித் தள்ளியதில் மனைவியுடனான பேச்சில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை.

உணவு மற்றும் அன்றாட பொழுதுகளைப் பற்றியே பெரும்பாலான பேச்சுகள் செல்லும். அதற்குமேல் எதையாவது விசாரித்தால், ரத்தின சுருக்கமாய் பதிலளித்து, பேச்சினை முடித்து விடுவாள் சிந்தாசினி.

“மன்ந்த்லி ஒன்ஸ் டாக்டர் செக்கப்புக்கு வரச் சொன்னாரே, இந்த மாசம் போனியா சிந்தா? அசால்டா விடாதே… மூணு ரிவ்யுதானே வரச் சொல்லியிருக்காரு!” அக்கறையுடன் பாஸ்கர் கூறினால்,

“எல்லாம் ஞாபகமிருக்கு, போயிட்டு வர்றேன்!” அசிரத்தையாக பதில் சொல்வாள் சிந்து.

“அன்னைக்கு ஊருல இருக்கும்போது ஜிபே-ல உனக்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணேன். அடுத்த மாசத்துக்கு நீயும் கேக்கல… நானும் மறந்துட்டேன். இப்போ போட்டு விடவா? கைச்செலவுக்கு என்ன பண்ற?”

“இதுக்கு முன்னாடி பொறுப்பா, அக்கறையா பொண்டாட்டிய கவனிச்சிருந்தா, மறந்திருக்காது. நானா கேட்டு வாங்குற அளவுக்கு இன்னும் எதுவும் சரியாகல… இங்கே வரும்போது என்ன தேவையோ அதப் பாருங்க போதும்!” குற்றமும் சொல்லிவிட்டு, வேண்டாமென்று மறுத்தும் பேசியதில், இவனுக்குதான் கோபம் உடைப்பெடுத்தது.

“பார்த்தியா! வொர்க் டென்சன்ல மறந்து போனத குத்திக் காமிக்கிற… கொஞ்சநேரம் ரிலாக்ஸா உன்கூட பேசணும்னு நினைச்சாலும் எந்தநேரமும் சிடுசிடுன்னு விழுற… நாள்முழுக்க இதைதான் உக்காந்து யோசிப்பியாடி!” அலுப்புடன் கேட்கவும் செய்தான்.

“ஆமாமா… ஃபோன்ல குடும்பம் நடத்துற லட்சணத்துக்கு  உக்காந்து யோசிக்க வேண்டியதுதான்…” அதற்கும் கொட்டு வைத்தாள் மனைவி.

“நமக்குள்ள இருக்குற கெமிஸ்ட்ரி, பக்கத்துல இருந்தா மட்டுமே வொர்க்அவுட் ஆகுமா சிந்தா?” சீண்டலுடன் இவன் கேட்டாலும்.

“வந்து பாருங்களேன்… கூடவே பிசிக்ஸும் வேலை பார்க்குதான்னு, கரண்டியும் கர்லா கட்டையும் வச்சே டெஸ்ட் பண்ணி பார்ப்போம்” அலுங்காமல் பதிலடி கொடுப்பாள் சிந்தாசினி.

ஆகமொத்தம் மனைவியின் கோபம் இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே புகைந்து கொண்டிருக்கிறது. அதை முழுதாய் நீரூற்றி அணைப்பதற்கு சற்றேனும் காலதாமதம் ஏற்படும் என்பதை அறிந்து கொண்டவன், பொறுமையுடன் பல்லை கடித்துக் கொள்வான். 

முன்பு எதற்கெல்லாம் கோபபட்டானோ, இன்று அதற்கெல்லாம் அடக்கிகொள்ள பழக்கிக்கொண்டான். வாழ்க்கை இப்படித்தானென்று பக்குவமடையத் தொடங்கியிருந்தான். அந்த மாற்றம் மனைவியிடத்தில் வரும் வரையில் காத்திருப்பதுதான் பெரும் அவஸ்தையாக இருந்தது.

பிறந்தவீடென்ற உரிமையில் சிந்தாசினி, தயானந்தன் வீட்டில் தன்னை பொருத்திக் கொண்டு நடமாடிட, சிறுவன் விபாகரனால் அப்படி முடியவில்லை.

ஏழுவயதே ஆனாலும், பிறந்தது முதல் கிராமத்து பாட்டி வீட்டில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தவனுக்கு, அங்கே போட்டிக்கு ஆள் கிடையாது. அவனது உத்தரவையே சாசனமாக ஏற்றுகொண்டு தாத்தா, பாட்டி நிறைவேற்றி வைப்பர்.

அப்பேற்பட்டவனுக்கு, மாமாவீடு ஆரம்ப நாட்கள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், போகப்போக சிரமத்தை அளித்தது. பயமின்றி வெளியே சென்று விளையாடும் பழக்கம் பறிபோனது.

எந்த ஒன்றையும் பகிர்ந்தும், மற்ற இரு குழந்தைகளுக்கு கிடைக்கும் போதுதான் உனக்கும் என்ற கட்டாயத்திலும் தள்ளப்பட, விபாகர் மனதளவில் சலித்துப் போனான்.

தாத்தா பாட்டியின் செல்லக் கொஞ்சல்கள் கிடைக்காமல்போக, முழுக்க முழுக்க தன்அம்மாவை மட்டுமே நாடத் தொடங்கினான்.

மாமாவின் குழந்தைகளுடன் விளையாடுவான், பேசிச் சிரிப்பான்தான். ஆனாலும் அவன் வயதிற்கு எதையோ இழந்ததைப் போல உணரத் தொடங்கினான்.

தனக்கென விருப்பமாக கேட்பதையும், அலசி ஆராய்ந்த பின்னரே வாங்கி கொடுக்கும் வழக்கத்தை வேறு சிந்தாசினி மேற்கொள்ள ஆரம்பிக்க, வெளிப்படையாகவே கிராமத்திற்கு சென்று விடுவோமென ஓயாமல் சொல்ல ஆரம்பித்தான் விபாகர்.

அன்று நந்தாவுடன் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட சிறிய சண்டையில், கோபத்துடன் இவன் கிரிக்கெட் பாலை(ball) தூக்கி எறிந்துவிட,

“என் பால ஏண்டா தூக்கி எறிஞ்ச? எங்கப்பாட்ட சொல்லவா?” நந்தா சண்டையை ஆரம்பிக்க,

“அது எங்கப்பா வாங்கிக் கொடுத்தது. நானும் அவர்ட்ட சொல்றேன்!” விபாகரும் மல்லுக்கு நிற்க,

“சொல்லேன்! ஆனா, உங்கப்பாவால வரமுடியாதே… இதே எங்கப்பாட்ட சொன்னா, உடனே வந்து வேற வாங்கிக் கொடுப்பாரே!” மெத்தனமாய் கூறி சிரித்தான் நந்தா.

“அதெல்லாம் வருவாருடா! ஏன் வரமாட்டாரு?” மூக்குவிடைத்த கோபத்துடன் விபு கேட்க,

“உங்கப்பா ஊருல இருக்காரு, நீ எங்க வீட்டுல இருக்க… அப்புறம் எப்படிடா உடனே வரமுடியும்?” நந்தா தெளிவாக கேட்கவும் இவனின் மனமும் துணுக்குற்றது.

விபாகரின் மனதில் நந்தா சொன்ன ‘எங்கவீடு’ என்பது அழியாத வார்த்தையாக பதிந்துபோக, அன்றிரவே சிந்துவை கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தான்.

“அம்மா, நாம எப்போ கிராமத்துக்கு போகபோறோம்?”

“ஏன் கேக்குற விபு? இனி இங்கேதான்… மேமாசத்துல நந்தா ஸ்கூல்லயே உனக்கு அட்மிஷன் போட்டுடலாம். இங்கேயிருந்தே படிக்கலாம் தம்பி!” சிந்து மெதுவாக எடுத்துக்கூற மகனின் முகம் சுருங்கிப் போனது.

“அதெல்லாம் வேணாம், நாம நம்ம வீட்டுக்கு போவோம்” தன்கூற்றில் அடம்பிடிக்க ஆரம்பிக்க,

“நமக்கான வீடு செட் பண்ணிக்க கொஞ்சநாள் போகணும் விபுமா!”

“அப்ப… கிராமத்துல நாம இருந்தோமே, அது யார்வீடு?”

“அது பாட்டிவீடு கண்ணா!”

“ம்ம்… அது பாட்டிவீடு, இது மாமாவீடு, நந்தாவீடு… அப்ப நம்மவீடு எதும்மா?” தாயிடம் கேள்வி கேட்டவன், தனக்குள் யோசித்தவனாக,

“அப்பா இருக்குற வீடுதான் நம்ம வீடா?” என்று கேட்க, சற்றே திகைத்தவள் நொடியில் சுதாரித்துக் கொண்டு, ஆமென்று தலையசைக்க,

“அப்படின்னா உடனே அப்பா வீட்டுக்கு போவோம்… இப்பவே டிக்கெட் போட்டு வந்து கூட்டிட்டு போகச் சொல்லு! இல்ல… நீ பேசவே மாட்ட! நானே அப்பாட்ட ஃபோன் பண்ணிச் சொல்றேன்…” விரைவாகச் சொன்னவன், அதே வேகத்தில் பாஸ்கரையும் அழைத்து விட்டான்.

வீடியோகாலில் தந்தையை மகன் அழைக்க, இரவுநேர சப்பாத்தியை உண்டு கொண்டிருந்தவனும் அப்படியே எடுத்து பேச ஆரம்பித்தான்.

“என்ன வீர்பாய்? இந்த நேரத்துக்கு கால் பண்ணியிருக்க… ஈவினிங்தானே பேசுனோம்!” புரியாமல் மகனை கேட்க,

“உடனே வந்து எங்களை கூட்டிட்டு போப்பா!” தடாலடியாகச் சொல்லவும் சப்பாத்தியை சாஸுடன் முழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு திகைப்பில் புரையேறிப் போனது.

“அடேய்… கொஞ்சம் நிதனாமா சொல்லுடா! அப்பாவுக்கு புரையேறுது பாரு! இப்படியா பேசுவாங்க? மண்டு… மண்டு!” மகனை கடிந்து கொண்ட சிந்து,

“இப்டி வெறும் சப்பாத்திய ஏன் முழுங்குறீங்க? கொஞ்சம் குருமா இல்லன்னா, சாம்பார் தொட்டுக்கலாமே?” பேச்சினை மாற்றியவாறே கேள்வி கேட்க ஆரம்பித்தாள். 

“அதெல்லாம் இந்த நேரத்துக்கு கிடைக்காது சிந்தா!”

“முன்கூட்டியே வாங்கி வைச்சுக்கலாமே?”

“வேலையில உக்காந்தா மறந்து போயிடுவேன்டி!”  

“ஆமா, எப்ப பாரு, வேலை வேலைன்னு தினமும் இந்த காஞ்ச ரொட்டிய முழுங்கி கஷ்டபடுங்க…” அக்கறையோடு முணுமுணுத்திட, அதை கேட்டுக் கொண்டிருந்த சிறுவனுக்கு கோபம் பொங்கிவிட்டது

“ஐயோ… ரெண்டுபேரும் ஸ்டாப் பண்றீங்களா? அப்பா, உடனே நம்ம வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போவியா, மாட்டியா?”

“என்னடா ஆச்சு உனக்கு? யார் என்ன சொன்னா?” அமைதியாக மகனை விசாரித்தவன்,

“எதுக்குமா இப்டி வீம்பு பிடிக்கிறான்?” என்று மனைவியிடமும் கேட்க

“எனக்கென்ன தெரியும்? நம்மவீடு எங்கே இருக்குனு கேட்டான். நான் இல்லடான்னு சொன்னதும், அவனா, நீங்க இருக்குறதுதான் நம்மவீடுன்னு கெஸ் பண்ணி, உடனே வந்து கூட்டிட்டு போகச் சொல்றான்” சிந்து விளக்கம்கூற,

“அவன் சொல்லும்போதே என்ன எதுன்னு மெதுவா கேட்டு வைக்கமாட்டியா சிந்தா? இப்ப பாரு… அவனை சமாளிக்க முடியல?” என்றவன் மகனைப் பார்த்து,

“இன்னும் கொஞ்சநாள்ல அப்பா சென்னை வந்திடுவேன் கண்ணா! அப்ப மூணுபேரும் சேர்ந்து நம்ம வீட்டுல இருப்போம்” என்றிட 

“நோ, நோ… எனக்கு இப்பவே நம்ம வீட்டுக்கு போகணும்” அடமாய் கத்திய மகனுக்கு, அம்மாவின் கையால் முதுகில்அடி பரிசாக கிடைத்தது.  

“ம்ப்ச்… என்னடி இது? பேசிட்டு இருக்கும்போதே அடிக்கிற?” மனைவியை கடிந்து கொண்ட பாஸ்கர்,

“வீர்கண்ணா! இங்க பாருங்க… அப்பா, சீக்கிரம் சென்னைக்கு வந்திருவேன். அடுத்து ஃபுல்லா நம்ம வீட்டுலயே இருப்போம் அழாதடா…” மகனை சமாதனப்படுத்தினாலும், அருகில் இருந்து ஆறுதலளிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமைதான் மேலிட்டது.

இத்தனை வருடங்களில் மகன் இப்படி கேட்டதே இல்லை. ஊருக்கு எப்போது வருவாய்? எனக்காக என்ன கொண்டு வருவாய் என்றளவில் மட்டுமே சிறுவனின் கேள்விகள் இருக்கும்.

இன்று யார் எதைச் சொன்னார்களோ அல்லது இவன் எதை பார்த்தானோ தெரியவில்லையே என பெற்றோரின் மனம் பல யோசனைகளை ஒன்றேபோல் யோசித்தது

“இப்பவே வீடு பாருப்பா… நான் அங்கேயே போயி இருக்குறேன்”

“நாம மட்டும் தனியா இருக்கக்கூடாது விபுகுட்டி” என்று சிந்து சொல்ல,

“எல்லாரையும் அங்கே கூட்டிட்டு போயிடலாம்மா. நம்மவீடு எனக்கு வேணும்ப்பா…” மகன் அடமாய் நின்று சாதிக்க, பெற்றோர்தான் இவனது முடிவிற்கு சரியென்று தலையாட்ட வேண்டியிருந்தது. அப்படி சம்மதித்த பின்னரே தனது அழுகையை விட்டு அடுத்த யோசனைக்கு தாவினான் விபாகர்.

“நமக்கு தனிவீடு வேணும்பா!”

“சரிடா…”

“வீட்டு மொட்டைமாடியில பாஸ்கெட்பால் விளையாட, அட்ஜெஸ்ட் ஹூப் அண்ட் ரிம் வைக்கணும். நம்மவீட்டுல, எனக்கு பிடிச்சதுதான் வாங்கணும்!” எனத் தொடர்ந்து அடுத்தடுத்த தேவைகளை தந்தையிடம் உத்தரவாக போட்ட மகன், இறுதியில்,

“நீயும் எங்ககூடவே இருக்கணும்ப்பா! ஃபர்ஸ்ட் டைம் வந்தும் என்னை எங்கேயும் நீ கூட்டிட்டு போகல…” முகம் சுருக்கிச் சொல்ல,

“அம்மாக்கு அந்த நேரத்துல உடம்பு முடியல வீர்! உனக்கு தெரியும்தானே! இல்லன்னா… எல்லா இடத்துக்கும் போயிருக்கலாம். இங்கேயும் வீட்டுலதான்டா உக்காந்து வேலை பாக்குறேன்! வாரத்துல ஒருநாள் ஆபீசுக்கு போய் ரிப்போர்ட் குடுக்கணும். அதுக்குதான் இங்கே இருக்கேன்!  டோன்ட் ஃபீல் மைடியர்… சீக்கிரமா நம்ம வீட்டுல, நாம இருப்போம். இப்ப போயி தூங்கு!” மகனிடம் ஆறுதலாய் கூறி முடித்தவனின் மனமெல்லாம், இனி வீடு பார்க்க வேண்டும் தனிக்குடித்தனத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

இங்கே மகன் அடுக்கிய கேள்விகளுக்கெல்லாம் முடிந்தவரை இன்முகத்துடன் பதில் சொன்ன சிந்தாசினியும், சிறுவர்களுக்குள் நடந்த சண்டையை ஒருவழியாக கேட்டு முடித்தாள்.

“விளையாட்டுல இதெல்லாம் சகஜம் விபுமா… நீ எல்லாரையும் விட பிக்பாய்டா! அவங்ககிட்ட இப்படியெல்லாம் பிஹேவ் பண்ணக்கூடாதுன்னு நீதான் சொல்லிக் கொடுக்கணும்” ஒருவழியாக மகனை தேற்றி உறங்க வைத்தாள்.

அடுத்தநாளே விபாகர் அனைவரிடமும், தாங்கள் தனிவீடு பார்த்துக்கொண்டு செல்லப் போவதாக முந்திக்கொண்டு கூறிவிட, ‘வந்து சேர்ந்திருக்கு பாரு, அப்பன மாதிரியே அவசரகுடுக்கை’ மகனை உள்ளுக்குள் கடிந்து கொண்டாள் சிந்தாசினி. பின் தன்னை கேள்வியாக நோக்கிய அன்னையைப் பார்த்து,

“நேத்துதான் பேசி முடிவு பண்ணினோம்மா… இப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சாதானே எல்லாம் சரியாவரும்…” காரணம் கூறியே அனைவரையும் சரிகட்டிட,

“நல்ல யோசனைதான்டாமா! வீட்டு புரோக்கர்கிட்ட சொல்லி வைக்கிறேன்!” தயாவும் இவர்களின் யோசனைக்கு சரியென்று சம்மதித்தான்.

ஆனாலும் நம்மவீடு என்ற வார்த்தை அந்த சிறிய குடும்பத்திற்கு மந்திரச் சொல்லாகவே மாறிவிட, அதைபற்றியே சிந்திக்க ஆரம்பித்தனர். கணவன் மனைவியுமாக சேர்ந்து எங்கே எப்படியான வீட்டினை பார்ப்பது என ஒருமனதாக முடிவெடுத்துக் கொண்டனர்.

எலிவளையானாலும் தனிவளையாக இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும்… அதோடு இப்போதிருந்தே பார்க்க ஆரம்பித்து வீட்டினை சீர்படுத்திக் கொண்டால்தான் பாஸ்கர் வந்த பிறகு குடித்தனம் செல்வதற்கும் சரியாக இருக்குமென்பது அனைவரின் எண்ணமாக இருந்தது.

அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தனிவீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பினை பார்க்கும்போது வாடகை கணிசமான தொகையைவிட எகிறிப் போனது.

பிறந்ததில் இருந்தே சொந்த வீட்டிலேயே வாழ்ந்து வந்த தயாவிற்கு, இதில் சற்றும் விருப்பம் இல்லாமல்போக, சிந்துவிற்கும் வாடகையாக மாதந்தோறும் பெருவாரியான பணம் விரயமாவதில் அத்தனை விருப்பமில்லை.

தயாவின் வீட்டருகில் மட்டுமே வீடுதேடும் படலத்தை மேற்கொண்டவர்களுக்கு, அத்தனை எளிதில் வீடும் அமையவில்லை. இப்படியே இரண்டு மாதங்கள் கடக்க, விபுவின் நம்மவீடு தாகம் ஒய்ந்த பாடில்லை.

“அம்மாக்கு வீடு பார்க்கவே தெரியலப்பா! எல்லாமே சரியில்ல, பிடிக்கலன்னே சொல்றாங்க… நீ வந்துபாரு! உடனே ஃபிக்ஸ் பண்ணிடலாம்” பலவாறாக வீம்பு பிடித்து, அழுகையில் கரைந்தான்.

அதோடு புதிய பள்ளியில் சேர்ப்பதற்கான மாதமும் வர, தந்தை வந்துதான் பள்ளியில் சேர்க்க வேண்டுமென மகன் பிடிவாதம் பிடித்ததில், ஒருவார விடுப்பில் பாஸ்கர் சென்னைக்கு வந்தான்.

முதல் வேலையாக மகனை பள்ளியில் சேர்த்தவன், அடுத்ததாக வீடுதேடும் வேட்டையில் இறங்கினான். சிந்தாசினியோடு சேர்ந்தே வீடு பார்க்கவென சுற்ற, வாடகையை கேட்டு மிரண்டே பின்னடைந்தான்.

“இதுக்கே மிரண்டு போனா எப்படி? வீடுன்னு ஆரம்பிச்சா செலவு வரிசை கட்டிட்டு நிக்குமே… அதுக்கெல்லாம் என்ன பண்ணுவீங்க? இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா சேர்ந்து இருப்போம்னு முடிவெடுத்திருக்க மாட்டீங்கல்ல…” வேண்டுமென்றே நக்கலடித்த மனைவியை, அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது.

தயானந்தன் வீடு இருக்கும் ஏரியாவில் மட்டுமே வீட்டினை தேடி அலைந்ததில் இரண்டு நாட்கள் வீணாய் கழிந்து, வீடும் தகையாமல் போக, மனதளவில் சோர்ந்து போனான் பாஸ்கர்.

“வந்துட்டு போறதுக்கே இரண்டுநாள் லீவு போயிடுது. வீடும் கிடைக்கிற மாதிரி தெரியல… ஏதாவது ஐடியா சொல்லேன் சிந்தா!” தங்களின் அறையில் முடிவொன்றை தேடியே, சோபாவில் அமர்ந்தவாறே மனைவியிடம் கேட்க,

“என்கிட்ட எதுக்கு ஐடியா கேக்குறீங்க… உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும்தானே நிறைய தேவைபடுது. இடையில நமக்கு எந்தமாதிரி வேணும்னு கேக்குறீங்களா என்ன?” புதிதாக குற்றசாட்டு ஒன்றை வைத்தாள் சிந்தாசினி.

“போச்சுடா… இன்னும் எதுவும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன். எப்படி வேணும்னு சொல்லுடி… மனசுலயும் மூளையிலயும் ஏத்தி வைச்சுக்குறேன்”

“நீங்க சொன்ன ஆறுமாசம் முடியபோகுது. இங்கே வர்ற ஐடியா இருக்கா, இல்லையா மொத அதை சொல்லுங்க!”

“அது, கொஞ்சம் தள்ளிப்போகும்போல… ரெண்டு ப்ராஜெக்ட் முடிச்சு குடுத்துட்டுபோன்னு சொல்றாங்க, அவாய்ட் பண்ண முடியலடா!” மெதுவாக இவன் உண்மையை கூற, மனைவிக்குள் கோபம் பற்றிக் கொண்டது.

“அதானே… என்னடா, எங்ககூட வந்து தங்குறேன்னு சொன்னீங்களேன்னு நானும் ஆச்சரியப்பட்டேன்! இன்னும் எவ்வளவுதான் எங்களை ஏமாத்துவீங்க? உண்மைய சொல்லியிருந்தா, வீடு பார்க்குற அலைச்சலாவது மிச்சமாகி இருக்கும். இதை மொதல்லயே சொல்றதுக்கு என்ன?” படபடப்புடன் பேசியவளின் குரலில் மீண்டும் ஏமாற்றமடைந்ததின் வலி நிரம்பியிருந்தது.

“நீ இப்படி பேசுவேன்னுதான் சொல்லாம இருந்தேன்! நான் வரலன்னா என் குடும்பத்துக்குன்னு ஒருவீடு இருக்க வேணாமா? அதுக்காகவும்தான் சொல்லல… இப்ப வந்த மாதிரி அப்பப்ப வந்துட்டு போகமாட்டேனா? ஏண்டி என்னை நம்பவே மாட்டியா நீ?” பதிலுக்கு இவனும் பேசிவிட, இருவருக்குமிடையே வெகுகாட்டமான தர்க்கங்கள்…

“உங்க முடிவு, உங்க இஷ்டம்தான் எப்பவும்… ஏன்னு கேட்டா நம்பிக்கை இல்லையான்னு எங்களையே எதிர்கேள்வி கேக்குறது… சரியா யோசிக்கிறவரா இருந்தா அங்கேயே வீடு பார்த்து எங்களை கூட்டிட்டு போயிருப்பீங்க… வாய்க்கு வந்தத சொல்லி என்னை ஏமாத்துறதே உங்களுக்கு பொழுதுபோக்கா போச்சு…” என்றவள் வெடித்து அழ ஆரம்பிக்க, பாஸ்கர் தலையில் கையை வந்தது உட்கார்ந்து கொண்டான்.

“இப்படி நினைச்சு அழுத்திப்பேன்னுதான் எதையும் சொல்லல… எல்லாமே தலைகீழா போகுது சிந்தா! முன்னாடி மாதிரி உடனே வேலைய மாத்திக்க முடியல… கொஞ்சநாள்தான்… அடுத்து வந்திடுவேன் அழுகாதே!” கெஞ்சாத குறையாக மனைவியை ஆறுதல்படுத்தியவனின் மனமும் வேதனையடையத்தான் செய்தது.

ஒவ்வொன்றிற்கும் தன்னைத்தானே நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நிற்பவனுக்கு, குடும்ப வாழ்க்கை அத்தனை எளிதில் வசந்தத்தை அளிக்க முன்வரவில்லை. 

“குடும்பம் இங்கே இருக்குன்னு சொல்லித்தான் மாற்றல் கேட்டுட்டு இருக்கேன். கொஞ்சநாள் வெயிட் பண்ணுவேன், இல்லன்னா வேற கம்பெனிக்கு மாத்திக்கிற யோசனையும் இருக்கு சிந்தா! என் ஒருத்தனுக்காக உங்களையும் அங்கே இழுத்து, எல்லாரையும் கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு பாக்குறேன்!” தன்நிலை விளக்கம் கொடுக்க முற்பட்டவன், மனைவியையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

“அந்த ஊருக்கு குடிபோறது பெரிசில்லடா… எல்லா விஷயத்துக்கும் நீயும் விபுவும் என்னை எதிர்பார்க்கணும். அது, சமயத்துல உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காது, உனக்குமே கஷ்டம். என்னாலயும் எந்தநேரமும் உங்களையே பார்க்க முடியாது… இப்படி கோபப்பட்ட மாதிரி தினமும் கோபப்பட்டு பேசினா அங்கே குடும்பம் நடக்காது, சத்திரம் சாவடியில நடக்கிற சாப்பாட்டு சண்டைதான் நடக்கும்….” அமைதியாக பேசிக்கொண்டே சென்றவன், சட்டென கேலியிலும் இறங்கிவிட, தன்னையும்மீறி சிரித்து விட்டாள் சிந்தாசினி. 

“ஆகமொத்தம் வெட்டி வீராப்பெல்லாம் பேச்சுலதான்… பொண்டாட்டி, பிள்ளைக்காக கூஜா தூக்கமாட்டேன்னு சொல்றீங்க… அப்படிதானே!” முறைப்புடன் கேட்க,

“அந்த அளவுக்கு திறமையிருந்தா, உன்னை பக்கத்துலயே வச்சுகிட்டு, நான் ஏண்டி இத்தனை நேரம் சும்மா இருக்கப் போறேன்… இந்நேரம் உன்னை மடியில போட்டு, ஏழுவருஷம் விட்டுப்போன கணக்கை எல்லாம் சரி பண்ணியிருக்க மாட்டேனா?” சீண்டலுடன் பதிலளித்தவன், மனைவியை பார்வையால் மேய ஆரம்பிக்க, வெகுண்டு அருகிலிருந்த செய்தித்தாளை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள் சிந்தாசினி.

“நினைப்பு போகுது பாரு! உடம்பெல்லாம் கொழுப்பு ஏகத்துக்கும் ஏறிப் போயிருக்கு பாச்சு… உனக்கெல்லாம் பாவம் பார்க்கவே கூடாதுடா” என்றவள் தொடர்ந்து தாக்கத் தொடங்க,

“பேப்பர்ல அடிவாங்கி உன் பாச்சு டேமேஜ் ஆகவேணாம்டி… கையால அடி சினிகுட்டி! சுகமா வாங்கிக்கிறேன்” என்றவன், மனைவியை தன்மேல் போட்டுக்கொண்டு சோபாவில் முழுதாய் சரிந்து, தன்னுடன் இறுக்கிக்கொண்டான்.

“விடுடா படவா… கிடைச்சது சாக்குன்னு உன் சேட்டைய ஆரம்பிக்கிற…”.

“ஷப்பா… எனக்கு கொழுப்பு மட்டும்தான் கூடியிருக்கு… உனக்கு கை, வாய் இன்னும் என்னென்னவோ ஏறியிருக்கு. சான்ஸ் கிடைச்சா, ஃபுல்லா செக்பண்ணி சொல்றேன்” என்றவனின் கைகள், மனைவியை தாபத்துடன் ஆராயத் தொடங்க, விருட்டென்று விலகிக் கொண்டாள்.

நொடியில் கணவன் மீது கவிழ்ந்து, தன்னை சாய்த்துக் கொண்ட மடத்தனத்தை நினைத்து இவளுக்கே வெட்கிப் போனது. விலகியவளை மீண்டும் தன்னருகில் இழுத்து,

“அன்னைக்கு சொன்ன டைட்ஹக், ஸ்வீட்கிஸ் டாஸ்க் கம்ப்ளீட் பண்ணுவோமாடா?” மனத்தின் ஆசையை மறைக்காமல் வெளிப்படுத்தியவனை பார்வையாலேயே எரித்தாள் மனைவி.

“இதெல்லாம் உன்கிட்ட மட்டும்தான்டி கேக்க முடியும். இவ்ளோ க்ளோசா இருந்துட்டு முடியாதுன்னு சொல்லிடாதே!” என முன்னேறியவனை, பலம்கொண்டு தள்ளிவிட்டு கீழே சென்றுவிட, இவனுக்கு அத்தனை கோபம் வந்தது.

வயதிற்கே உரிய தாபம்… மனைவியிடம் மட்டுமே மீட்டுக் கொள்ளும் ஆசையை, அவளிடம் வெளியிட்டதில் தவறென்ன இருக்கின்றது என பாஸ்கரின் மனம் தன்சார்பாக வாதாடிக் கொள்ள,

‘நடந்ததை அத்தனை எளிதில் மறந்து மன்னித்து, உன்னை ஏற்றுக்கொண்டு விட வேண்டுமா? அத்தனை நல்லவனா நீ?’ அவனின் மனசாட்சி, அவனையே குற்றம் சாட்டியது. 

இவனுக்கே தெரிந்தது… சற்று அதிகமாகத்தான் அவளை கையாள்கிறோமோ என்று… ஆனால் என்ன செய்ய? ஆரம்பம் முதற்கொண்டே இருவரின் பரிபாஷைகளும் அப்படித்தானே!

இப்பொழுது இவளது விலகலை கண்டு மனம் கசந்தால், சறுக்கல் சறுக்கலாகவே நின்று, சரிசெய்யும் வழியே இல்லாமல் போய்விடும் அபாயமிருக்க, முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். 

முதலில் தன்னை முழுதாக நம்பி இவள் வரட்டுமென்றே முடிவெடுத்துக் கொண்டு, வீடு பார்க்கும் விசயத்தில் முழுகவனத்தை திருப்பினான்.

அடுத்தநாள் காலையில், தயாவின் வீட்டிற்கு அருகே, இரண்டு தெருவினை தாண்டி, இடிபாடுகளுடன் கூடிய பழையவீடு ஒன்று விலைக்கு வந்திருப்பதாக கூற, இருவரும் சென்று பார்த்து வந்தனர்.

அவசரதேவை இருப்பதால் உடனே கிரயம் படிந்தால் கணிசமான அளவில் விலையும் குறைத்துக் கொள்வதாக இடத்தின் உரிமைக்காரர் முன்வரவும், முதலில் அட்வான்ஸ் டோக்கன் போட்டு வைத்தான் தயானந்தன்.

“உனக்கு லோன் கிடைக்குமான்னு பாரு மாப்ளே… நானும் இங்கே ட்ரை பண்றேன். மொத கிரயத்தை முடிச்சிட்டா, அடுத்து ஹவுசிங் லோன் போட்டு கட்டிட வேலைய ஆரம்பிச்சுடலாம்… வீடு யாருக்குன்னு அப்புறமா முடிவு பண்ணுவோம்” என்று யோசனைகூற, பாஸ்கரும் சரியென்று ஒத்துக் கொண்டான்.

முன்பணமாக குறிப்பிட்ட தொகையை உடனே கொடுத்தால் மட்டுமே இடத்தை பதிவு செய்ய முடியும் என்றிருக்க, அந்த பணத்தை சிந்தாசினி தனது சேமிப்பிலிருந்து கொடுக்க முன்வந்தாள்.

“பாங்க்ல சும்மாதான் இருக்கு. இப்போதைக்கு என்னோட சேவிங்ஸ்ல இருக்குறத அட்வான்சா குடுத்து, புக் பண்ணிடுவோம். அப்புறமா லோன் புராசஸ் ஆரம்பிக்கலாம்” என்றவளின் வங்கிக்கணக்கு கிராமத்தில் இருந்தது.

உடனடியாக கிராமத்திற்கு சென்று நிலைமையை விளக்கி, உடன் சிந்துவின் வீடுதேடும் படலத்தை சொல்லவும், அங்கிருப்பவர்களின் மனதிற்கும் நிம்மதியைத் தந்தது.

மகளின் வாழ்வு நல்லதொரு திருப்பத்தை எதிர்நோக்கிச் செல்வதில் வளர்ப்பு பெற்றோருக்கும் சந்தோசமே… அடுத்து வந்த ஒருமணிநேரப் பேச்சில் தங்கள் வீட்டுப் பெண்ணிற்கான பொறுப்பில் பங்கெடுத்துக் கொள்ள அந்த குடும்பமே முன்வந்தது.

நாராயணன், தனது மகன் தமிழ்செல்வனுக்கு சொத்துக்களை கொடுக்கும்போதே, சிந்துவிற்கும் மகளென்ற முறையில் சிறிய அளவிலான விவசாய நிலத்தை அவளின் பெயரில் மாற்றிக் கொடுத்திருதார்.

தமிழ்செல்வனும், தந்தை கொடுத்த நிலத்தில் இருந்து தனது பங்காக வந்ததில், மூன்றில் ஒருபங்கை இரண்டாகப் பிரித்து, அதில் ஒருபகுதியை தனது மகள்களுக்கும், மற்றொரு பங்கை வீட்டுப் பெண்ணான சிந்துவிற்கும் கொடுப்பதென, பாகப்பிரிவினையின் போதே ஒதுக்கியிருந்தான்.

வீட்டுப் பெண்களுக்கென தனியாக சொத்து இருக்க வேண்டுமென்றே இந்த ஏற்பாட்டினை செய்திருப்பதாக எடுத்துக் கூறினான் தமிழ்செல்வன்.

“இது எப்போ நடந்தது மாப்ளே? என்கிட்ட சொல்லவே இல்ல” தயா கேட்க,

“கடை கைமாத்துறதுக்கு முன்னாடியே இந்த வேலைய முடிச்சிட்டேன் மச்சான். என் சம்பாத்தியம் முழுக்க முழுக்க என் குடும்பத்துக்கு மட்டும்தான். இதை புரிஞ்சுக்காம நான் எது செஞ்சாலும் அங்கே போகுதா, இங்கே வருதான்னு திருதிருத்து நிம்மதிய தொலைச்சுட்டு நிக்கிறா என் வீட்டுக்காரி!

இதுக்கு ஒருமுடிவு கட்டதான் இப்டி ஒரு ஏற்பாடு பண்ணேன். தங்கச்சி முறைக்கு, சிந்தாவுக்கு செய்யணும்னு எனக்கும் ஆசையுமிருக்கு, கடமையுமிருக்கு. அதை என் சம்பாத்தியத்துல செய்ய, என் பொண்டாட்டி விடமாட்டா… அவ சுபாவம் அப்படி… அதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்” தெளிவாக விளக்கம் கொடுத்தான் தமிழ்செல்வன்.

“அதெல்லாம் சரி மாப்ளே… இப்பவும் உன் வீட்டம்மா குடுக்க ஒத்துக்கணுமே? அது அவ்வளவு ஈசியா முடியுற காரியமா?” நண்பனின் குடும்பச் சூழலை அறிந்தவனாய் தயா கேட்க,

“அவளோட சம்மதத்தோடதான் அந்த பாதிபங்கை சிந்தா பேருக்கு மாத்தி வைச்சேன் மச்சான். இப்போ அந்த நிலத்தையும் நானே எடுத்துகிட்டு, பணமா செய்யப்போறேன். அதோட அப்பா, அவபேர்ல எழுதி வச்ச நிலத்துக்கும் சேர்த்தே பணமா மாத்தி கொடுப்போம். அவளோட வீடாவே வாங்கட்டும் மச்சான். அடுத்து லோன் போட்டு நீயும் மாப்பிள்ளையும் சேர்ந்து கட்டிட வேலை ஆரம்பிங்க…” என்று முடித்தான்.

கடமை முடிந்துவிட்டதென்று விட்டு விடாமல், இன்றளவும் சிந்துவை தாங்கிக் கொள்ளும் உறவுகளைப் பார்த்து, தனக்குள் சிலிர்த்துப் போனான் பாஸ்கர். இவர்களின் பாசத்தையும் மிஞ்சும், அன்பையும் அக்கறையையும் தன்னால் மனைவிக்கு அளிக்க முடியுமா என்றெல்லாம் சந்தேகம் வந்தது அவனுக்கு.

வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போதுதான், இத்தனை வருடங்களாக இழந்த இழப்பிடுகளின் அளவும் கூடிக்கொண்டே போனதை உணர்ந்தவனின் மனம், வெகுவாய் துக்கப்பட்டுப் போனது.

தமிழ்செல்வனின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், உறவுமுறைக்கு செய்வதை தடுக்ககூடாதென்று நாராயணனும் வற்புறுத்திவிட, பாஸ்கர், தயா, சிந்துவிற்கு சரியென்று தலைசைப்பதை தவிர வேறுவழி தெரியவில்லை. பெரியவர்களின் கண்டிப்பான பாசத்தில் சிறியவர்களின் மறுப்பு அடங்கிப் போனது. 

மிகவிரைவில் இடம் கிரயம் செய்வதற்கான முக்கால்வாசி தொகை சேர்ந்து விட்டிருந்தது. மீதித் தொகைக்கு பாஸ்கர் தனது கையிருப்பை கொடுக்க முன்வர, தயா தடுத்துவிட்டான்.

“நான் குடுக்கிறேன் மாப்ளே! கட்டிடத்துக்கு நீதான் பொறுப்பெடுத்துக்க போற… அப்ப அதை வெளியே எடுக்கலாம்” என்றிட,

“உங்களுக்கே பிசினெஸ்ல, லோன் அதுஇதுன்னு கைய கடிக்குமே மாமா… அதோட இதுவும் தேவையா?” பாஸ்கர் அப்போதும் மறுக்க,

“இதுல என்ன இருக்கு? நானும் என் தங்கச்சிக்கு இதுவரைக்கும் நகை சீர்செனத்தின்னு எதுவுமே செய்யல… அதுக்கு இது ஒரு வாய்ப்பா இருந்திட்டு போகட்டுமே! கணக்கா செய்ய நினைக்கிறப்போ, சூழ்நிலையும் சரியில்ல, கையில காசும் தங்கமாட்டேங்குதே மாப்ளே” தயா சாதரணமாக சொல்லவும் பாஸ்கருக்கு சுருக்கென்றது.

“இப்படி ஒரு நெனைப்புல நீங்க செஞ்சா, பதிலுக்கு நானும் செய்வேன் மாமா! மிதுனா அக்காவுக்கும் எங்க வீட்டுல இருந்து எதுவும் செய்யல… அதெல்லாம் இப்போ செய்றேன் நீங்க ஏத்துப்பீங்களா?” சற்று கோபமாகவே கேட்டான். 

இவர்கள் வீட்டுப் பெண்ணென்று அவளைத் தாங்குபவர்கள், கணவனாக, அவளை அனைத்து விதத்திலும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்பதில் நம்பிக்கை கொள்ள ஏன் மறுக்கிறார்கள் என்ற ஆதங்கமே அவனுக்கு உஷ்ணம் கொள்ள வைத்தது.

இதற்காகவே இந்த வீட்டினை தன்பொறுப்பில் கட்டி முடிக்க வேண்டுமென்ற ஆவேசம் மனதோடு எழ, அதற்கான முயற்சியில் முழுமூச்சாக இறங்கினான் பாஸ்கர்.

தன்னிடம் உதவியை பெற்றுக்கொள்ள மறுத்ததில் தயா கோபமடைந்தாலும், ஒரு ஆண்மகனாக பாஸ்கரை நினைத்து பெருமைகொண்டான்.

தன்வீட்டு மாப்பிள்ளை, தான் நினைத்ததிற்கும் மேலாகவே நிமிர்ந்து நிற்க, தங்கை வாழ்வினைப் பற்றிய கவலை ஒருவழியாக விடைபெற்றது.

ஒரு வாரம் விடுப்பிற்கு வந்தவன், மேற்கொண்டு ஒருவாரம்  விடுப்பினை நீட்டித்துக் கொண்டு, லோன் மற்றும் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்து வைத்துவிட்டே ஊருக்கு திரும்பினான். 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!