தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு – 2

பிறந்ததில் இருந்தே தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தவள் சிந்து. ஓட்டன்சத்திரத்தில் உள்ள வலையபட்டியில் தற்போதும் தாய்மாமா நாராயணன் மற்றும் அத்தை அலமேலுவுடன் வசித்து வருகிறாள்.

அவர்களை அம்மா, அப்பா என்றே அழைத்தும் வருபவள். இவளின் மகன் விபாகரனின் கல்வியும் இங்குள்ள ஆங்கில துவக்கப்பள்ளியில் தொடர்ந்து வருகிறது.

பெற்றமகளாக இன்று வரையிலும் அவளைத் தாங்கிக் கொள்ளும் அவர்கள், மகளை ‘சிந்தாசினி… சிந்தா’ என்றே அழைத்து வருகின்றனர்.  

இந்த பெயரை சூட்டிய, இவளின் பாட்டி தேனரசி இரண்டு வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்திருந்தார். பேத்தியை நினைத்தே தனது கடைசி காலத்தில் உருகிப் போனவர்.

எத்தனையோ முறை எடுத்துச் சொன்னாலும் சிந்து தனது முடிவில் மாற்றம் கொள்ளாமல் தனித்தே வாழ்வேன் என வீம்பில் நிற்க, ஏமாற்றத்துடன் தேனரசி பாட்டி தனது இறுதி மூச்சினை விட்டிருந்தார்.

விவாசயம், பால் வியாபாரம் மட்டுமே நாராயணனின் தொழில். அதனைத் தொடர்ந்த காய்கறி வியாபாரம் மற்றும் காகிதஉறை வியாபாரம் எல்லாம் அவரது மகன் தமிழ்செல்வனின் பொறுப்பில் நடைபெற்று வருகின்றது

தாய்மாமாவின் வீட்டிலேயே வளர்ந்த காரணத்தால், முறைமாமன் தமிழ்செல்வனும், சிந்தாசினிக்கு மற்றுமொரு அண்ணனாகிப் போனான்.

தமிழ்செல்வன், மனைவி கயல்விழி மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறான். இவனது குணநலன்கள், தொழில், உழைப்பு என அனைத்து சிறப்புக்களையும் பார்த்தே அந்த ஊரின் பெரிய பண்ணைக்காரர், தனது ஒரே பெண்ணான கயல்விழியை திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

கயல்விழியும் ஆரம்ப காலத்தில் விகல்பமின்றி பழகி வந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல, சற்று விலகத் தொடங்கினாள். மருமகளாக, தான் மட்டுமே புகுந்த வீட்டில் ஆட்சி செய்யலாமென வந்தவளுக்கு, வளர்ப்பு மகளான சிந்துவின் நிரந்தரமான தங்கல், பெருத்த சங்கடங்களைக் கொடுத்தது.

தமிழ்செல்வனின் திருமணத்தின் போதுதான் சிந்துவும் பிள்ளை பெற்றிருந்தாள். பிரசவப் பத்தியங்கள் முடிந்து, ஓய்வெடுத்துக் கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்று விடுவாள் என்றே கயல்விழியின் பிறந்த வீட்டினர் நினைத்திருக்க, அது தலைகீழாய் மாறிப்போனதில் முதல் ஏமாற்றம் அவர்களுக்கு.

தனது வீட்டில் ஒற்றைப் பெண்ணாக வலம் வந்தவள், புகுந்த வீட்டிலும் அப்படியே இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்ததில் தவறொன்றுமில்லை. அவளது முதல் எதிர்பார்ப்பே அடிபட்டுப் போனதில் புகுந்த வீட்டினருடன் ஒட்டிக்கொண்டு நிற்க அத்தனை பிரியப்படவில்லை.

அதோடு கயல்விழியின் பிறந்த வீட்டிலிருந்தும் தனியாகச் சென்று சுதாரித்துக்கொள், வளர்ப்பு பெண்ணின் பொறுப்புகளை தலையில் ஏற்றிக் கொள்ளாதே என்கிற பகிரங்கமான அறிவுரைகளும் வந்து சேர்ந்திட, சுணங்காமல் அவளும் கேட்டுக் கொண்டாள்.

முதல்பிரசவத்திற்கு பிறகு, பல காரணங்களை சொல்லியே கயல்விழி பிறந்த வீட்டில் தங்கிவிட, முடிவினில் தமிழ்செல்வனின் வாழ்க்கை தனிக்குடித்தனம் என்னும் ஓடையில் பயணமாகத் தொடங்கியது.

வீட்டினில் பெண்களின் பேச்சு, பல வியூகங்களை வளர்த்திட, நாராயணன், மகனை தனிக்குடித்தனம் வைத்து விட்டார். தங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒருவீடு விலைக்கு வர, அதை வாங்கி தன்மகனை அங்கே குடியமர்த்தி விட்டார்.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் உள்ள தமிழ்செல்வனின் கடையில் அதிகாலையில் காய்கறி வியாபாரமும் அதற்கடுத்த நேரங்களில் காகிதஉறை, பாக்குமட்டை தட்டுகள், தொன்னைகள் போன்ற இதர பொருட்களின் வியாபாரமும் தடையின்று நடைபெறும்.

அதிகாலை நான்கு மணிக்கு தமிழ்செல்வன், காய்கறி மொத்த வியாபாரத்திற்கென கடைக்கு வந்து விடுவான். காலை ஒன்பது மணிக்கு சிந்து வந்த பிறகு, வியாபாரம் அவளது மேற்பார்வையில் நடக்கும்.

பின்னர், வீட்டிற்கு செல்லும் தமிழ்செல்வன், சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, விளைச்சல், சாகுபடி சம்மந்தமாக மேற்பார்வை பார்த்த பிறகு, மதிய உணவையும் முடித்துக் கொண்டே கடைக்கு வருவான்.

மதிய உணவிற்கென வீட்டிற்கு செல்லும் சிந்து ஒருமணிநேரத்தில் மீண்டும் கடைக்கு வர, தமிழ்செல்வன் வெளிவேலைகளை கவனிக்க கிளம்பி விடுவான். இரவு எட்டுமணிக்கு அவன் வந்த பின்னரே தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்படுவாள் சிந்து.

முன்பெல்லாம் தமிழ்செல்வனின் மனைவி கயல்விழியும் கடையில் மேற்பார்வைக்கு இருந்தபடியால் மதிய உணவை அவளே இருவருக்குமாக எடுத்து கொண்டு வந்து, இரவில் இருவரும் சேர்ந்தே வீட்டிற்கு செல்வர். அப்போது நாராயணனும் பெண்களுக்கு துணையாக இணைந்து கொள்வார்.  

குழந்தை பிறந்த பிறகு கயல்விழிக்கு தொழிலின் மீது நாட்டம் குறைய, குடும்பம் குழந்தை வளர்ப்பு என சாக்கிட்டே கடைக்கு வருவதை குறைத்துக் கொண்டாள்.

இடையில் தனிக்குடித்தனத்தை தானாகவே கேட்டுக்கொண்ட கதையும் சேர்ந்து, சிலபல அரசல் புரசல்களை உண்டு பண்ணியிருக்க, சிந்துவிற்குதான் முன்னிலும் விட அதிக வேலைப்பளுவும் பொறுப்புகளும் கூடிப் போனது.

காகிதஉறை தயாரித்து மொத்த விற்பனை செய்யும் தொழிலை, தமிழ்செல்வன் தன் மனைவிக்கெனவே  ஆரம்பித்தான். அவளுடன் சிந்துவையும் இணைத்துக் கொண்டு தொழிலை நடத்திச் செல்ல வேண்டுமென்று விரும்பி, அதன்படியே தொடங்கிய தொழில் இது. உடன்பிறவா தங்கைக்காக அவனது அக்கறையும் உதவியும் இன்றளவும் தொடர்ந்து கொண்டு வருகிறது.

வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை வெற்றிப் படிக்களாக்கிக் கொள்ள வேண்டுமென்கின்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு எந்த வேலையும், தொழிலும் கைவசப்பட்டு விடும். அதன்படியே சிந்துவிற்கு இந்தத் தொழில் மிகமிகப் பொருந்திப் போனது.

பொழுதுபோக்கிற்காக, ஊராரின் முன் தன்னை கௌரவமாக காட்டிக் கொள்ள நினைப்பவருக்கு, எந்த நல்ல தொழில் அமைத்துக் கொடுத்தாலும், அது மிகக் குறுகிய காலத்திலேயே சலித்துப் போய்விடும்.

அப்படி ஏற்பட்ட சலிப்பினில் கயல்விழி தொழிலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, முழுக்க முழுக்க வியாபாரம் சிந்துவின் மேற்பார்வையில் நடைபெறத் தொடங்கியது.

பனிரெண்டாம் வகுப்பு வரை கணக்குப் பதிவியலை படித்த சிந்துவும், ஆரம்பத்தில் வெகுவாக தடுமாறித்தான் போனாள். நாட்கள் செல்லச்செல்ல பல பேரிடம் வர்த்தக நடைமுறைகளை கேட்டறிந்து கொண்டு இப்பொழுது தெளிவாக நிமிர்வுடன் செயல்படத் தொடங்கி விட்டாள்.

இதன் காரணமே வாழ்வெனும் ஏணிப்படியில் வெற்றி என்ற உயரத்திற்கு ஏற ஆரம்பித்து விட்டதாக, அவளின் மனதில் இறுமாப்பும் இப்பொழுது சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆணவமும் பெண்களுக்கு ஒருவகை பாதுகாப்பு கவசம்தான். தன்னை சுற்றியிருப்பவர்கள் யாராக இருந்தாலும் தள்ளி நிறுத்திப் பார்க்கும் தற்காப்புகலை இது.

இளமையின் வேகத்தில், தான் புத்திபிசகிச் செய்த கோமாளித்தனத்தை, சிந்து நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கணவன் பாஸ்கர் விஸ்வரூபமாய் வந்து நிற்பான். காதலனாக அவனது நேசத்தையும், கணவனாக அவனது நிராகரிப்பையும் ஒரே நேரத்தில் அனுபவித்தவள்.

அதோடு மாமியார் எய்த சொல்லம்புகளும், அவரிடம், தன் பொருட்டு, தனது பிறந்த வீட்டினர் பட்ட அவமானங்களும் தலைகுனிவும், அவளின் ரணப்பட்ட மனதை மேலும் பதம் பார்க்கத் தொடங்கி விடும்.

முன்னர் நடந்தவைகளை நினைக்க நினைக்கவே, சாதித்தே ஆகவேண்டும், சலனமில்லாமல் வாழ்கையை வென்று காட்டிட வேண்டும் என்கிற உத்வேகம் மனதில் தன்னால் பிறந்துவிடும் சிந்துவிற்கு.

ஆகமொத்தம் இவளின் ஒவ்வொரு விடியலிலும், தனக்கு நேர்ந்ததை எண்ணிப் பார்த்தே தன்னை மெருகேற்றி திடப்படுத்தியும் கொண்டிருக்கிறாள்.

மிதமிஞ்சிய வெறுப்புடன்தான் என்றாலும், அவளது நாட்களின் தொடக்கமும் முடிவும் கணவனை நினைத்துப் பார்க்காமல் இருப்பதில்லை. அந்த வெறுப்பே அவளை மேலும் மேலும் இறுகவைத்து, நிமிர்ந்து நிற்க வைத்தது.

மகனுடன், கணவன் பாஸ்கர் பேசும் ஒருமணிநேர காணொளி அழைப்பிலும், அவனை ஏறிட்டும் பார்க்க மாட்டாள்.

“விபு டைம் ஆகுது! நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும், போதும்!” மகனை அதட்டியே அவர்களின் பேச்சினை முடித்து வைப்பாள்.

பதிலுக்கு அவனும் சளைக்காமல், “ஒகே வீர்! நாளைக்கு பேசுவோம். சீக்கிரமா ஹோம்வொர்க் முடிச்சு வைக்கணும் சாம்ப்!” சிரித்தபடி அழைப்பினை முடிப்பான்.

மனைவி தன்னை பார்த்தாளா இல்லையா என்கிற அலைபுறும் பார்வை அவனிடத்திலும் இருக்காது. ஒரு தந்தையாக, மகனின் ஒவ்வொரு அசைவிற்கும் அவனை வழிநடத்திக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

தனது வாழ்வின் பின்னடைவிற்கான தயக்கம், பயம், சோம்பேறித்தனம் ஆகியவை, எக்காரணம் கொண்டும் மகனை ஆட்கொண்டு விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறான்.

எந்த இடத்திலும் அவனது சுயத்தையும் விவேகத்தையும் கைவிட்டு விடக்கூடாதென மகனிடம் அன்றாடம் சொல்லிக் கொண்டே இருப்பான். அவனுக்கு தன்னம்பிக்கை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே மகனை ‘வீர்’ என அழைத்தே, ஊக்கப்படுத்தி வருகிறான்.

நல்லதொரு தந்தைக்கான அனைத்து தகுதிகளும் பாஸ்கருக்கு உண்டு. ஆனால், அதுவே ஒரு கணவனாக,, மனைவியை நேசிப்பவனாக அவன் இருக்கிறானா என்று கேட்டால், இல்லையென்றே சாதிப்பாள் சிந்து.

அப்படி இருந்திருந்தால் இத்தனை வருடத்தில் தன்னிடம் பேச முயற்சிகள் செய்திருப்பான். அப்படியில்லை என்றாலும் தன்னை பேசவைக்க மகனின் மூலம் தூண்டிலாவது போட்டிருப்பான்.

அதுவும் கைநழுவிப் போனாலும் வாரம் தவறாமல் நாராயணன் மற்றும் தமிழ்செல்வனை அலைபேசியில் விசாரிப்பவன், அவர்களின் மூலம் மனைவியிடம் பேச வைக்கும் முயற்சிகளை கையாண்டிருப்பான்.

தன்னை கணவன் நாடவில்லை என்று குறைபட்டுக் கொண்டாளே தவிர, விலகலின் முதல்படி தன்னிடமிருந்துதான் ஆரம்பமாகியது என்பதை வெகுசுலபமாக அவ்வப்போது மறந்தும் போய் விடுகிறாள்.

இவர்களை இணைக்கும் முயற்சிகளை இவர்களும் எண்ணிப் பார்த்ததில்லை, பெரியவர்களும் முயற்சி செய்ததுமில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னர், தன் அண்ணியின் வளைகாப்பு நாளில், விரக்தியாகவும் வீம்பாகவும் அனைவரின் முன்பும் பேசிக் கொண்டதே இவர்களின் முடிவுரையாக இன்றளவும் நிற்கிறது.

தானாகவே உண்டாக்கிக் கொண்ட பிரிவு என்னும் அழுத்தத்தின் பாரத்தை இறக்கி வைக்காமல் சுமந்து கொண்டிருக்கிறாள். தன் முடிவு சரியா தவறா என்றல்லாம் இதுவரையிலும் அலசி ஆராய்ந்ததில்லை. இருவருக்குமான தேடல்கள் இருவரிடத்திலும் இல்லை. இதிலும் இவர்களுக்குள் ஒற்றுமை.

இப்பொழுது, கணவனின் அக்கா பெண்ணின் சடங்கு… குடும்பமே கொண்டாட்டிக் கொள்ளும் விசேஷம் என மீண்டும் அதே போன்ற சூழ்நிலையில் சந்தித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை என்னவென்று சொல்ல?

தனது கடமையாக, நாத்தனார் பெண்ணின் சடங்கின் போது தாய்மாமாவின் முறைமைகள் அனைத்தையும், அவனின் மனைவியாக எந்தவொரு குறைவும் இல்லாமல் செய்து விட்டு வந்தவள்தான், இப்பொழுது விசேஷத்திற்கு செல்ல வேண்டுமா என தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

இதற்கு காரணம் கணவனை நேரில் பார்க்க வேண்டுமே என்கிற வெறுப்போ, மனப்பதட்டமோ ஏதோ ஒன்று எந்நேரமும் அவளை அலைகழித்துக் கொண்டே இருக்கிறது..

கடவுள் போட்டு வைத்த முடிச்சு என்று மனதை சமாதானம் செய்து கொள்வதா அல்லது விதியின் பின்னே செல்ல மறுத்து அங்கே செல்லாமல் இருப்பதா என நொடிக்கொருமுறை மனம் அவளிடம் முரண்பட்டுக் கொண்டிருகிறது.

சூழ்நிலை எப்படி மாறினாலும் இனியொருமுறை கணவனுடனான குடும்ப வாழ்க்கையை மனதளவிலும் நினைத்துப் பார்க்கப் போவதில்லை என்னும் உறுதியில், தன்நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள் சிந்து.

********************************************

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் அமைந்துள்ள வணிகவளாகம்… பதினாறுக்கு இருபது பரப்பளவு கொண்ட கட்டிடம், ‘தமிழ் காய்கறிமண்டி மற்றும் காகிதஉறைகள் (காக்கி பேப்பர் கவர்கள்)’ என்ற பெயரைத் தாங்கிய பலகை ஓங்கி நின்றது.

அந்தக் கடையின் பொறுப்புகளை தனதாக்கி கொண்டு கோப்புகள், கணினி இன்னபிற தொழிற்சாதனங்கள் சூழ்ந்திருக்க நடுநாயகமாய் அமர்ந்திருந்தாள் சிந்து.

சுடிதாரில் அடங்கிய ஒல்லியான தேகத்தை, துப்பட்டாவில் போர்த்தி முழுதாய் தன்னை சிறைபடுத்திக் கொண்டிருந்தாள். முகத்தில் அதே கிராமத்துக்களை அவளை இன்னும் மெருகூட்டிக் கொண்டிருந்தது. கழுத்தில் வருடம் தவறாமல் மாற்றிக் கொண்ட, புதுமஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலியும், மெல்லிய செயினும் அலங்கரித்தது.   

வியாபாரம் சார்ந்த அலுவல்களை, வரவு செலவுகளை இவளே முழுதாய் கையாண்டு வருகிறாள். கடந்து சென்ற வருடங்களில் அடிப்படை கணினி கல்வியையும், கணக்கு வழக்கிற்காக டாலி(Tally)யும் பகுதிநேர வகுப்புகளாக சென்று முடித்திருந்தாள்.

அதில் சிறப்பான பயிற்சி இருப்பதால், வருடாந்திர கணக்கு தாக்கலுக்கு ஆடிட்டரிடம் கடைசிநேர பார்வைக்கு மட்டுமே சென்றால் போதுமானது.

இவளே அனைத்து கணக்கினையும் கணினிக்குள் ஏற்றி சேமித்து விடுவாள். மொத்தத்தில் தமிழ்செல்வனின் வியாபாரத்தில் இவள் வலதுகையாகவே இருந்து வருகிறாள்.

கடையில் அமர்ந்து கொண்டிருந்த சிந்துவின் மனம், தன்வாழ்வில் நடந்ததை அசைபோட்டுக் கொண்டிருக்க, கைகள் தன்போக்கில் மடிக்கணினியில் கவிதைப் பக்கங்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது.

பத்மவியூகம்

உள்ளே செல்பவன் உற்று நோக்கி செல்ல வேண்டும்

உள்ளே செல்லும் வழியே திரும்பிட வேண்டும்!

வந்த வழி மறந்தால் திரும்பிட முடியாது

வந்த வழி நினைவில் நிறுத்திட வேண்டும்!

விதி என்று எதுவும் இல்லை உணர்ந்திடுக

விதி என்பது கட்டுக்கதை என்பதை புரிந்திடுக!

மதியால் வாழ்வதே சிறந்த வாழ்வு

மதிக்கு இணை வேறு உலகில் இல்லை!

எண்ணம் ஒன்றாக இருந்தால் வழி மறக்காது

எண்ணம் சிதைந்தால் சிந்தனை சிதறும்!

மனதில் வரும் வழியை பதிய வைத்திடு

மூச்சு உள்ளவரை நினைவில் நிற்கும்!

இணையத்தில் பகிரப்பட்டிருந்த கவிதையை நூறாவது முறையாக படித்து முடித்தாள் சிந்து. பத்மவியூகம் பற்றிய ஒரு கவிஞரின் அற்புதமான வரிகள் அவை.

ஒவ்வொருமுறை படித்து முடிக்கும் போதும் மனக்குழப்பங்கள் அகன்று, மனஉறுதி மெருகேறிப் போவதையும் அவளால் நன்கு உணர முடிந்தது.

காலையில் அண்ணன் தயானந்தனின் பேச்சில் தடுமாறத் தொடங்கிய மனது, இப்பொழுது சற்று சமன்பட்டதாய் தோன்றியது.

மனதில் எந்தவொரு சஞ்சலமும் இல்லாமல் சென்னைக்கு சென்று தனது கடமையை முடித்து விட்டு வரவேண்டும் என்கிற உறுதியையும் எடுத்துவிட்டிருந்தாள்.

மதியம், உணவு நேரத்தை தாண்டியிருக்க, இவளை வீட்டிற்கு அனுப்பி வைக்கவென தமிழ்செல்வன் அங்கே வந்து சேர்ந்தான். வரும்பொழுதே அத்தனை அலுப்பு தட்டியது அவனது பேச்சிலும் குரலிலும்…

“வழக்கம் போல இன்னைக்கும் லேட் ஆகிடுச்சு சிந்தா! ரெண்டு குட்டீசும் வெளியே கூட்டிட்டு போகச் சொல்லி ஏக கலாட்டா… ஒண்ணும் பண்ண முடியல!” என பாவம் போல சொல்பவனை புன்னகை மாறாமல் பார்த்தாள் சிந்து.

“உன் பிள்ளைக்கு செய்ய ஏன் மாமா சலிச்சுக்குற? ஒருவேளை சாப்பாட்டை, லேட்டா சாப்பிடுறதால எதுவும் வந்திடப் போறதில்ல…” என சமாதானம் கூறினாள் சிந்து.

“கையோடு உனக்கு சாப்பாடு கொண்டு வரலாம்னா என்வீட்டு அல்லிராணிக்கு பிடிக்க மாட்டேங்குது. என்னமோ இவ புருஷன் நாடாளும் ராசான்னு நினைப்பு அவளுக்கு… நான் சாப்பாடு கூடை தூக்கிடக்கூடாதுன்னு, கூப்பாடு போடாத குறையா என்னை கடிச்சு வைக்கிறா!” மனைவி கயல்விழியின் மீது ஏகத்திற்கும் குறைபட்டுக் கொண்டான் பாசக்கார அண்ணன்.

இது பெண்களின் பொதுவான சுபாவம். கணவனின் மீதான தங்களது ஆளுமையை இப்படியும் காட்டிக் கொண்டு அவர்களை அல்லாட வைப்பதில் சில பெண்களுக்கு அலாதிசுகம்.

கேட்டால் கணவனை விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக தங்களை மெச்சியும் கொள்வர். தொழில் நிமித்தங்கள், நிதர்சனங்கள் புரியாமல் சுற்றத்தாரை சங்கடப்படுத்தி மகிழ்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!

“அட மாமா! கொஞ்சம் அடக்கிவாசி! இங்கே உன் பொண்டாட்டி விசுவாசிகள் வேலைபார்க்கிறாங்க… உன் பேச்சுக்கு ரெக்கை மொளைச்சு உன் எஜமானியம்மா காதுக்கு போச்சுன்னா அவ்ளோதான்… காப்பத்த யாரும் வரமுடியாது” பொய்மிரட்டலுடன் கைகளை விரித்து பொறுப்பு துறப்பை அறிவித்தாள்.

“யம்மா தங்கச்சி! நல்லவேளை ஞாபகப்படுத்தின… நீயும் கொஞ்சம் அடக்கியே வாசி! உனக்கும் சைக்கிள் கேப்ல, ஜாடமாடையா குத்தல் அம்புகள் பறந்து வந்தாலும் வரும்” சிரித்துக் கொண்டே பதில் சொன்னவனின் வார்த்தைகளில் இயலாமை கொட்டிக் கிடந்தது.

மனைவியின் மீது மலையளவு பாசம் வைத்திருந்தாலும், எங்கும் எப்போதும் தனித்தே செயல்பட வேண்டுமென நினைக்கும் அவளின் சுபாவத்தை தமிழ்செல்வன் எப்போதும் ரசிப்பதில்லை. ஆரம்பகாலத்தில் பதிலுக்குபதில் பேசி, மனைவியுடன் தர்க்கம் புரிந்து, நிம்மதியை காற்றில் பறக்க விட்டவன்தான்.

நாட்கள் செல்லச்செல்ல குடும்பம், குழந்தை நலன் என பொறுப்புகள் கூடிக்கொண்டதில், மனநிம்மதி முக்கியமாகிப் போய்விட, பலவற்றை மனைவியின் போக்கிலேயே விட்டுவிட்டான்.

இதில் பெரிதும் இவன் இழந்து போனது தனது பெற்றவர்களுடன் கழிக்கும் பொழுதுகளைத்தான். ஒரு சிலருக்கு வாழ்க்கை துணை இப்படியும் அமைந்து விடுவதை விதியென்று சொல்லாமல் வேறென்ன சொல்ல…

“வீட்டுக்காரிக்கு சொல்லப்போற பதிலை இப்போ இருந்தே மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சிட்டியா? எப்படியோ போ! நான் கிளம்புறேன் மாமா…!” கேலியில் இறங்கியவள், தனது பொறுப்புகளை அவன் வசம் ஒப்படைக்கத் தொடங்கினாள்.

“மேலத்தெரு ராமசாமிக்கும், தேனீ முருகனுக்கும் சரக்கு எடுத்து பில்லும் போட்டு ரெடியாகிட்டு! இவங்க ரெண்டு பேரோட போனமாச பில்லே இன்னும் கிளியர் பண்ணாம பாதி அமௌண்ட் பாலன்ஸ்ல நிக்குது. அதை கொடுத்தா மட்டுமே சரக்கை கொடுத்தனுப்பு… திரும்பவும் பாக்கி வைச்சா கொஞ்சம் கறாரா பேசி கொடுத்துவிடு!” என பிரிண்ட் எடுக்கப்பட்ட ரசீதுகளை ஒருகோப்பில் வைத்து, அவன் பார்வைக்கு வைத்தாள்.

“16*20, 22*24, 24*28 அதோட, இன்னும் ரெண்டு சின்ன சைஜ் கவரும் சேர்த்து பண்டல் வரும். அதை உடைக்க வேணாம். நான் கணக்கு பார்த்து எடுத்து வைக்கிறேன்… நான் வர்ற வரைக்கும் மேனுவல் பில்(ரசீதில் எழுதித் தருவது) மட்டும் போடு மாமா! சிஸ்டம்ல நான் வந்து ஏத்திக்கிறேன்!

அப்புறம், தக்காளி ஐம்பது கூடையும், கத்திரி, வெண்டை இருபது கூடைக்கும் அட்வான்ஸ் குடுத்துட்டு போயிருக்காங்க. அட்ரஸ் ஃபோன் நம்பர் குறிச்சு வைச்சிருக்கேன்… பார்த்துக்கோ மாமா! நாளைக்கு காலையில டெலிவெரி பண்ணனும்…” என மொத்தமாக சொல்லி மூச்சு விட்டவளின் முகத்தில் பசியும், சோர்வும் நன்றாகவே வெளிப்பட்டது.

“இடையில ஒரு ஜூஸ் குடிச்சுக்க சொன்னாலும் கேக்க மாட்டேங்குற! அம்மாவும் காலையில சாப்பாடு கட்டித்தர சொன்னா, ஆறின சாப்பாடு ஜீரணம் ஆகாதுன்னு கொடுக்க மாட்டேன்றாங்க!” என மனம் வருந்தியவனுக்கு, இதற்கொரு தீர்வினை காண முடியவில்லையே என்ற ஆயாசம்தான் மேலிட்டது.

நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டு,

“சரி சிந்தா… சாப்பாட்டுக்கு போனவங்க இன்னுமா வரல? சீக்கிரமா வரணும்னு சொல்லி அனுப்பக் கூடாதா? உன்னை மட்டும் தனியா வேலை பார்க்ககூடாதுன்னு எத்தன தடவதான் சொல்றது. கொடுக்குற சம்பளத்துக்கு தகுந்தாப்ல வேலை வாங்கத் தெரியனும்” என முதலாளியாக சலித்துக் கொண்டான்.

அந்த கடையில் நான்கு நபர்கள் நேரம் மாற்றி இரண்டு ஷிஃப்டாக பணிக்கு வந்து கொண்டிருக்க, அவர்களின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினான். அவர்களிடத்தில் சக ஊழியராக அத்தனை கடிந்து கொண்டு பேசவும் மாட்டாள் சிந்து. உறவை வீட்டிற்குள் விட்டுவிட்டுத்தான் வேலையில் அமர்வாள்.

உழைப்பிற்கு அஞ்சுபவன் அல்ல தமிழ்செல்வன்… ஆனாலும் அதிகாலையில் இருந்தே ஆரம்பிக்கும் அவனது ஓட்டத்தில் தன்னை ஆசுவாசபடுத்திக் கொள்ள, இப்பொழுதெல்லாம் வேலை பார்ப்பவர்களிடம் கொஞ்சம் கடுமையை கடைபிடிக்கிறான். கொடுக்கும் ஊதியத்திற்கு கணக்கு பார்க்கவும் செய்கிறான்.

வீட்டில் மனைவி, மக்களை அதட்டியோ கடிந்து கொண்டோ, சட்டென பேசிவிட முடியாது. அப்படி பேசிய பிறகு தனக்கு கிடைக்கும் மண்டகபடிக்கு பயந்தே வீட்டில் எப்போதும் அவன் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போய் விடுவான்.

இந்த அமைதியை மனைவியின் பேச்சிற்கு மட்டுமல்ல, பெற்றவர்களின் பேச்சிற்கும் அதே பாவனைகளையே காண்பித்து பலநேரங்களில் தப்பித்துக் கொள்வான்.

சிந்து தனது ஹோண்டா டியோவில் வீட்டிற்கு வந்து சேரவும், அவளின் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. ஒருமணி நேர ஓய்விற்கும் வேட்டு வைக்க வந்துவிட்டேன் என்ற சேதியை சொல்லிக் கொண்டே வந்தது அந்த அழைப்பு.  

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!